தமிழைக் கட்டாயப் பாட (பயிற்சி) மொழியாக ஆக்க முடியுமானால் நான் மன நிறைவோடும் மகிழ்ச்சியோடும் சாவேன்!
புதிய மூன்றாவது மொழித்திட்டம்
முத்தமிழ்க் காவலர் கி.ஆ.பெ. விசுவநாதம்
இறுதி சாசனம் (1994)
இப்போது நடப்பது என்ன என்றால், இரு மொழித் திட்டத்தில் ஒரு மொழியாக ஆங்கிலம் கட்டாயமாகவும், இன்னொரு மொழியாக தமிழைத் தவிர வேறு ஏதோ ஒரு மொழியையும் கெட்டியாகப் பிடித்துக்கொண்டுவிட்டார்கள் என்றாலும், இப்போதுள்ள அந்த இரு மொழித் திட்டத்திலேயே தமிழ் மொழியைக் கட்டாயப் பாட மொழியாக ஆக்கமுடியுமானால் நான் மகிழ்ச்சியோடு சாவேன். எனவே இதில் இருந்து நான் இப்போதும் இருமொழித் திட்டத்தை எதிர்க்கவில்லை என்பது நன்கு விளங்கும்.
இப்போதுள்ள இரு மொழித் திட்டத்தைத் தொடர்ந்து ஆதரிக்க வேண்டும் என்று எண்ணுபவர்கள் இன்றுவரைத் தமிழைக் கட்டாயமாக ஆக்க முடியவில்லையே, அது ஏன்? காரணம் என்ன? என்று சிந்தியுங்கள்.
இதை இப்போதாவது நாம் சிந்தித்து முடிவு செய்ய வேண்டாமா?
இப்போதுள்ள இருமொழித் திட்ட அரசு ஆணையில் இருப்பது, மாநில மொழியோ அல்லது அவரவர் தாய்மொழியோ, படிக்க வேண்டும் என்பதுதான்.
தமிழைக் கட்டாயமாகப் படிக்க வேண்டும் என்றே இல்லை.
இதனால்தான் அண்ணாவுக்குப் பின்வந்த அரசுகள் அனைத்தும் தமிழைக் கட்டாய மொழியாக்க முடியாமல் தடுமாறிக் கொண்டிருக்கின்றன.
ஆட்சி மொழித் திட்டம் என்பது வேறு. கல்வி மொழித் திட்டம் என்பது வேறு.
கல்விக்குத் தமிழும் ஆங்கிலமும் கட்டாயம் வேண்டும்.
இப்படித் தமிழைக் கட்டாயமாக்க வேண்டுமானால் தமிழைத் தாய்மொழியாகக் கொள்ளாதவர்கள் தங்களது தாய்மொழியை அவர்கள் விருப்பப்படி விருப்பப் பாடமாகப் படிக்க அனுமதிப்பதுதான் புதிய மூன்றாவது மொழித் திட்டம்.
இதில் எங்கே இரு மொழித் திட்டத்துக்குப் பாதகம் இருக்கிறது.
தமிழைக் கட்டாயமாக்குவதற்கு செய்யும் ஏற்பாடுதான் இந்த மூன்றாவது மொழியைக் கல்வியில் மட்டும் விருப்பப் பாடமாக ஆக்குவது.
மேற்சொன்னபடி இல்லாமல், இப்போதுள்ள இருமொழித் திட்டத்திலேயே தமிழைக் கட்டாயப் பாடமொழியாக ஆக்க முடியுமானால் நான் மனநிறைவோடும் மகிழ்ச்சியோடும் சாவேன்.(இளந்தமிழன், பிப்ரவரி 2015)
No comments:
Post a Comment