அண்ணா இறுதிப் பேருரை 30.12.1968
பேரறிஞர் அண்ணா பேசுகிறார்
அரசியல் சட்டத்தைத் திருத்தி மாநிலங்களுக்கு அதிக அதிகாரம் தர வேண்டும்;
மத்திய மாநில அரசுகளிடையே சம பலம் :
இப்போதைய பத்தாண்டு காலத்தின் முக்கியப்பணி ஒன்று உண்டென்றால், அது மத்திய - மாநில அரசுகளுக்கிடையே உள்ள அதிகாரங்களை சமபலம் உடையதாக ஆக்குவதேயாகும்.
அண்ணா மறைந்து 46 ஆண்டு காலம் ஆகிவிட்டது. அவர் இறுதி விருப்பம் நிறைவேறவில்லை.
கட்சியினுடைய தலைவர் அவர்களே! இந்த மாநிலத்தின் முதலமைச்சராகப் பணியாற்றி நற்பெயர் பெற்ற பொப்பிலி அரசர் அவர்களே! சர். பி.டி.ராஜன் அவர்களே! மற்றும் நண்பர்களே! தாய்மார்களே!
ஐஸ்டிஸ் கட்சியினுடைய பொன்விழா கொண்டாட்டத்தில், சீரிய முறையில், நல்ல முறையிலே அவர்கள் நடத்திக் கொண்டிருக்கும் இந்த நல் விழாவில் நான் கலந்து கொள்வதற்கான வாய்ப்பும், அதே நேரத்தில் ஜஸ்டிஸ் கட்சி பற்றி உள்ள முக்கியமான தகவல்களை எல்லாம் ஒன்று திரட்டி ஒரு மலராக வெளியிட்டு, அந்த மலர் வெளியிடுகின்ற பணியினை எனக்கு அளித்ததற்காகவும் முதலிலே நான் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
வரலாற்றில் நிலைத்த பெருமை
ஐஸ்டிஸ் கட்சியினுடைய வரலாறு தமிழக மக்களுக்கு எந்தக் காலேத்திலேயும் நினைவிலே இருக்க வேண்டிய ஒரு வரலாறு ஆகும். ஜஸ்டிஸ் கட்சி அமைச்சரவை செய்திருக்கின்ற சீரிய காரியம், ஐஸ்டிஸ் கட்சி நடத்திய தொண்டினால், ஆட்சி யினால், மக்கள் அறிவு பெற்றார்கள். ஜஸ்டிஸ் கட்சிக் காலத்திலே ஏற்பட்ட சமுதாய மாறுதல் இவைகளெல்லாம் தென்னாட்டு வரலாற்றில் மிக முக்கியமான ஒரு கட்டத்தைக் குறிப்பிட்டுக் காட்டுவதாகும்.
வரலாற்று மலர்
நமக்கு இருக்கின்ற ஒரு பெரிய குறை, இவைகளையயல்லாம் வரலாற்று ஏடாக நல்ல முறையிலே தொகுத்துத் தருவதில் நாம் தவறு இழைத்திருக்கின்றோம். அதை நீக்குகின்ற வகையில் இன்றைய தினம் இந்த மலர் வெளியிடப்படுவது மிகவும் பொருத்தமானதாகும் என்பதில் நான் மிகவும் மகிழ்ச்சி அடைகின்றேன்.
இவைகளில் சர்.பி.டி.ராஜன் அவர்கள் மேற்கொண்டு அவருக்குத் துணையாகச் சில நண்பர்களின் முழு ஒத்துழைப்பில் மிகச் சிறந்த முறையில் இந்த மலரைக் கொண்டு வந்திருக்கிறார்கள்.
இதிலே 50 வருடங்கள் பணியாற்றிக் கொண்டிருக்கின்ற ஐஸ்டிஸ் கட்சியின் வரலாறு மட்டுமில்லாமல் அதை ஒட்டி இந்த மாநிலத்தினுடைய அரசியல் வரலாறுகள் நல்ல முறையில் தொகுக்கப் பெற்றுள்ளன.
ஜஸ்டிஸ் கட்சியினுடைய துவக்கம், அதனுடைய உட்பொருள், இவை சமுதாயத் திற்கு அளித்திருக்கின்ற நற்பயன், இவைகளைப் பற்றியயல்லாம் ஆழ்ந்தறிந்து நிபுணர்கள் பல அரிய கட்டுரைகள் இதிலே அளித்திருக்கின்றார்கள். ஜஸ்டிஸ் கட்சிக்கு மாவட்டங்களிலே பணியாற்றிய காலங்களில் இருந்த பெரியோர்களின் புகைப் படங்களும், அவைப் பற்றிய குறிப்புகளும் இந்த மலரிலே இடம் பெற்றிருக்கின்றன. சுருக்கமாகச் சொல்லுவதானால் ஜஸ்டிஸ் கட்சி பற்றி அறிந்து கொள்வதற்கு இந்த மலர் நல்ல தூண்டுகோலாக இருக்கும் என்பதில் நாம் பெருமைப்படலாம். மகிழ்ச்சி அடையலாம்.
நினைவூட்டும் மலர்
இதிலே சர்.பி.டி.ராஜன் அவர்கள் ஈடுபட்டுத் தம்முடைய உரையை எழுதியவுடன் அன்போடு அதை என்னிடத்தில் காட்டினார்கள். நான் அதைப் படித்துப் பார்த்து என்னுடைய மகிழ்ச்சியையும், பாராட்டுதலையும் தெரிவித்து அவர்கள் மேற்கொண்டி ருக்கின்ற சீரிய பணிக்கு அவருக்கு நான் என்னுடைய நன்றியைப் பல மாதங் களுக்கு முன்னாலேயே தெரிவித்துக் கொண்டேன்.
ஆனால், அப்போதும் கூட இந்த மலர் இவ்வளவு நல்ல முறையில் வரும் என்று நிச்சயமாகக் கருதவில்லை. ஏனென்றால், இதிலே காணப்படுகின்ற பல தகவல்கள் மறைந்து போய்விட்ட தகவல்கள், பலருடைய நினைவுக்கு அப்பால் இருக்கின்ற தகவல்கள். இவைகளையயல்லாம் ஒன்று திரட்டி, இந்த மலரிலே வெளியிட்டிருப்பது உள்ளபடி பாராட்டத்தக்க ஒரு முயற்சியாகும். இதிலே பெரும் முயற்சி எடுத்துக் கொண்ட நம்முடைய நண்பர் பரமசிவம் மற்றும் பல நண்பர்களுக்கு நான் இந்த நேரத்தில் நன்றி தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.
ஜஸ்டிஸ் கட்சி ஒரு அரசியல் கட்சியாகும். அது தேர்தலில் ஈடுபடுகின்ற அரசியல் கட்சியாகும். இன்றைய தினம் இயங்காமல் போனாலும், அதனுடைய கொள்கைகள், அவை சமுதாயத்திற்கு அளித்திருக்கின்ற நற்பயன், அதிலே பயிற்சி பெற்ற தலைவர்கள் மிகுந்த மதிப்போடு இருக்கின்றார்கள் என்பதை ராஜா சர் முத்தையா செட்டியார் அவர்கள் எடுத்துக் சொன்னதைக் கேட்டு நான் மிக்க மகிழ்ச்சி அடை கின்றேன்.
ஜஸ்டிஸ் கட்சிக்காரன் தானே!
நான் அரசியலிலே ஈடுபட்ட நாளிலே இருந்து திராவிட முன்னேற்றக் கழகத்தை வழி நடத்திச் செல்ல ஆரம்பித்த நாள்வரையில் பொது வாழ்க்கையில் எந்தக் கட்சியாகிலும், பொது வாழ்க்கையில் குறை சொல்லப்படுவதென்றால், ‘இவன் ஜஸ்டிஸ் கட்சிக்காரன்’ என்று என்னிடத்திலே சொல்லுவார்கள். அதை ஒரு தடவை நான் சென்னை சட்டமன்றத்தில் எதிர்க்கட்சி வரிசையிலே இருந்தபோதுகூட சுப்பிரமணியம் அவர்கள் சுட்டிக்காட்டினார்கள். ‘என்ன இருந்தாலும் நீ ஜஸ்டிஸ் கட்சிதானே’ என்று சொன்னார்கள்.
அப்போது நான் அவரிடத்திலே சொன்னேன், ஜஸ்டிஸ் கட்சி என்று நீங்கள் என்னைப் பார்த்து சொல்கின்றீர்களே தவிர, உங்களோடு இப்போது இருக்கின்றார் ராஜா சர். முத்தையா செட்டியார் அவர்கள் என்று குறிப்பிட்டுச் சொன்னேன், ‘அவர்களை அப்புறப்படுத்தவில்லையே’ என்று சொன்னேன். ராஜா சர் முத்தையா செட்டியார் அவர்களுக்கு நினைவுபடுத்த விரும்புகின்றேன். ஆகவே ஜஸ்டிஸ் கட்சித் தலைவர்கள் இன்றைய தினம், அவர்கள் பல்வேறு அரசியல் கட்சிகளில் ஈடுபட்டிருக்கிறார்கள்.
ராஜாஜியின் உப்புக்கதை
ஒருமுறை ராஜாஜி அவர்கள் வேறு ஒரு சம்பவத்தில் சொன்ன உதாரணத்தை நான் இந்த இடத்தில் நினைவுபடுத்திக் கொள்ள விரும்புகின்றேன். ‘ஏதாவது பண்டத்திலே போடப்படுகின்ற உப்பு கடைசியில் உப்பாகத் தெரிவதில்லை. அது பண்டத்திலே கலந்துவிடுகிறது’. அதைப் போல ஜஸ்டிஸ் கட்சியினுடைய பண்பாடு எல்லா கட்சியிலும் கலந்துவிடுகின்றது.
அதுபோல் உப்புக்கரசன் பணம் கொடுப்பதைப் போலவே பல கட்சிகளுக்குப் பணம் கொடுப்பதை நான் இன்று அல்ல பல காலமாகச் சொல்லிக் கொண்டு வருகிறேன்.
கட்சி வளர்க்கும் சூழல்
இன்றையத் தினம் இங்கே வந்திருக்கின்ற இளைஞர்கள் எதைப் பற்றி எண்ணிப் பார்க்க வேண்டும் என்று கேட்டுக் கொள்ள விரும்புகின்றேன் என்றால் 1917 லே துவக்கப்பட்ட ஜஸ்டிஸ் கட்சி எப்படிப்பட்ட கடினமான சூழ்நிலைக்கு மத்தியில் அது பணியாற்றி இருக்கிறது என்பதை நான் நினைவுபடுத்த விரும்புகிறேன்.
அப்போதுதான் யார் யார் எந்தக் கட்சியில் இருந்தாலும், அவர்களுக்குக் கஷ்டங்கள் ஏற்படுகின்றபொழுது, இடையூறுகள் வருகின்ற பொழுது எதிரிலே இருக்கின்ற பொழுது இதைவிடக் கடினமான இடையூறுகளில் முன்னாலே இருந்தார்கள். எதிர்நோக்கி இருந்தார்கள். அவைகளைத் தாங்கிக் கொண்டார்கள். அவைகளைத் தாங்கி வெற்றிப் பெற்றார்கள் என்பது நமக்கு உணர்ச்சியளிக்கும்.
மூன்றுவகை எதிர்ப்புகள்
ஜஸ்டிஸ் கட்சி துவக்கிய காலத்திலேயே அதற்கு இருந்துவந்த எதிர்ப்பு மூன்று வகையான எதிர்ப்பு. மிக பயங்கரமான எதிர்ப்பாகும்.
1. பிராமண எதிர்ப்பில்லை
நம்முடைய நாட்டிலேயே புத்திக் கூர்மையிலே முதலிடம் பெற்றவர்கள். பதவிகள் பெறும் இடத்தைப் பெற்றிருந்தவர்களும், விருது பெற்றவர்களும், பத்திரிகை உலகத்தில் மிகச் சிறந்த இடத்தைப்பெற்றிருந்தவர்களும், சமுதாயத்தில் முதல் இடத்தைப் பெற்றவர்களுமான பிராமணர்களுக்கு, எதிராக இந்தக் கட்சி பணி யாற்றுகிறது.
ராஜா சர்.முத்தையா செட்டியார் அவர்கள் பொருத்தமாகச் சுட்டிக்காட்டியபடி சர்.பி.டி.ராஜன் அவர்களுக்கும், பனகல் அரசர் அவர்களுக்கும், பொப்பிலி அரசருக்கோ அல்லது ராஜா சர் முத்தையாக செட்டியாருக்கோ பார்ப்பனர்களிடத்தில் சமூக முறையில் எந்தவிதமான விரோதமும் எந்தக் காலத்திலும் இருந்ததில்லை.
அவர்கள் சமூக நீதி வேண்டுமென்றால், சமூக நீதிக்காக வாதாடுகின்ற நேரத்தில், மேல்நிலையில் உள்ளவர்கள் கொஞ்சம் இடத்தைவிட்டுக் கொடுக்க வேண்டும் என்கிற பொழுது கொஞ்சம் ஆத்திரம் பிறக்கத்தான் செய்யும். அந்த ஆத்திரத் தினுடைய அளவு அதிகமாக அதிகமாக ஜஸ்டிஸ் கட்சியை இவர்கள் பார்ப்பனர்கள் விரோதிகள் என்று பயங்கரமான குற்றச்சாட்டினைச் சிறுகத் தோன்றி ஆதி நாட்களில் அழித்திடுவதற்கான முயற்சிகள் தமிழகத்தில் இருந்தது.
2. வெள்ளையரின் அடிவருடிகள் மற்றொரு பயங்கரமான குற்றச் சாட்டு:
இவர்கள் வெள்ளைக்காரர்களுக்கு அடிவருடிகள், வெள்ளைக்கார ஆட்சி நீடிப்பதற்காக அவர்கள் அரசியல் நடத்துகிறார்கள் என்ற பயங்கரமான குற்றச்சாட்டு ஜஸ்டிஸ் கட்சியின் பேரிலே வீசப்பட்டது. அதைத் தாங்கிக் கொள்வது என்பது மிகவும் சாதாரண காரியமல்ல. அப்போது ஜஸ்டிஸ் கட்சியினுடைய பெரிய தலைவர்கள், நாங்கள் சுயராஜ்யத்திற்கு விரோதிகள் அல்ல. ஆனால், அந்த சுயராஜ்யம் படிப்படி யாக வரவேண்டும், சமுக நீதியோடு அது இணைந்து வரவேண்டும் என்று சொன்னார்கள்.
ஒரு குறிப்பிட்ட வகுப்பாரிடத்தில் அரசியல் அதிகாரம் தங்கிவிடக் கூடாது. எல்லா வகுப்பாருக்கும், குறிப்பாக பொப்பிலி அரசர் எடுத்துச் சொன்னபடி பிற்படுத்தப்பட்ட வர்களுக்கும் கீழ் வகுப்பார் உட்பட எல்லா வகுப்பாருக்கும் நீதி கிடைக்கின்ற வகையில் நன்கு இந்த ஆட்சியை நடத்திச் செல்ல வேண்டும் என்று அவர்கள் விளக்கம் அளித்தார்கள். அந்த விளக்கம் எந்த அளவுக்கு ஏற்றுக் கொள்ளப்பட்டது என்பதற்கு ஒரே அடையாளம்தான் நமக்குக் கிடைக்கிறது.
அது எந்த அடையாளம் என்றால், தொடர்ந்து மூன்று முறை ஜஸ்டிஸ் கட்சி மந்திரிசபை 17 வருடங்கள் தொடர்ந்து நடத்த முடிந்தது என்றால், இந்த இரண்டு பயங்கரக் குற்றச்சாட்டுகளையும் பொதுமக்கள் ஏற்றுக் கொள்ளாமல், ஜஸ்டிஸ் கட்சி பார்ப்பனர்களின் கட்சி அல்ல ; ஜஸ்டிஸ் கட்சி வெள்ளைக்காரனுக்காக ஏற்பட்டிருக் கின்ற கட்சி அது. ஆனால், மெல்ல மெல்ல உறுதியாக முன்னேற வேண்டும் என்ற எண்ணத்தைக் கொண்ட கட்சி என்பதை மூன்று முறை ஜஸ்டிஸ் கட்சி அமைச்சரவை ஏற்படுவதற்கு மக்கள் அளித்த வாக்கு மெய்ப்பித்துக் காட்டுகிறது.
3.பணக்காரர்களின் கட்சி
மற்றொரு பயங்கரமான குற்றச்சாட்டு. இது பணக்காரர்களின் கட்சி என்பதாகும். அதற்கு அவர்கள் மிகச் சுலபத்தில் ராஜா சர் முத்தையா செட்டியார் அவர்களையும், பொப்பிலி அரசர் அவர்களையும், உத்தம பாளையத்தைச் சார்ந்த ஜமீன் குடும்பத்தைச் சார்ந்த பி.டி.ராஜன் அவர்களையும் சுட்டிக்காட்டி, இது பணக்காரக் கட்சி என்று எளிதாக வாதாடினார்கள். அதை இப்போதும் ஆராய்வதாக இருந்தால் இளைஞர்களுக்கு நான் சொல்லிக் கொள்வேன்.
1917 இலே இருந்து அதை ஒட்டி இருக்கின்ற 20 வருடங்கள் வரையில், எந்தக் கட்சியை எடுத்துக் கொண்டாலும் நிலப் பிரபுக்கள் அந்தக் கட்சியிலே முன் இடத்தில் இடம் பெற்று இருந்திருக்கிறார்கள். அவர்கள் தாம் அப்போது அரசியலிலே மட்டு மல்லாமல் சமுதாயத்தில் பொது இடத்திலே இருந்தார்கள்.
ஆனால், அந்த நாட்களிலேயே ஐஸ்டிஸ் கட்சியில் ஜமீன் குடும்பத்தைச் சேராத பலர், டாக்டர் நடேசனைப் போன்றவர்கள், கஸ்தூரிப் பிள்ளையைப் போன்றவர்கள், கோதண்டராம முதலியாரைப் போன்றவர்கள் இன்னும் பல நண்பர்கள் அதிலே இடம் பெற்று இருந்திருக்கின்றார்கள்.
அதனுடைய தீவிரமான பிரச்சாரத்தை நடத்திப் பொது மக்களுடைய நல்லா தரவைத் திரட்டிக் கொடுத்தவர்கள் எளிய குடும்பத்திலே பிறந்தவர்கள்.
சுப்பிரமணியம், டி.ஏ.வி.நாதன், பி.பாலசுப்பிரமணியம் (‘சண்டே அப்சர்வர்’ அசிரியர்) அவர்களெல்லாம் அடுத்த நாளைக்குப் பணம் எங்கு இருந்து வரும் என்று தெரியாமல் ஒவ்வொரு நாளையும் கழித்தவர்கள்.
ஆகையினால், அவர்கள்தாம் ஜஸ்டிஸ் கட்சி மீது தூற்றப்பட்ட மூன்று பயங்கரக் குற்றச்சாட்டுகளைத் தங்களுடைய மெய்யான வாதங்களின் மூலம் தமிழகத்திலே தவிடு பொடியாக்கி, ஆந்திரத்திலேயும் தவிடு பொடியாக்கி 17 வருடங்கள் அது ஆட்சி பீடத்திலே இருப்பதற்குத் துணை இருந்தவர்கள். அவர்களை இந்த நேரத்திலே நினைவுக்குக் கொண்டுவருவது சாலப் பொருத்தமானது ஆகும் என்று நான் கருதுகிறேன்.
1917 ஆம் ஆண்டில் பெரிய நிலப்பிரபுக்கள் எல்லா கட்சிகளிலும் முதல் இடத்தில் இருந்தார்கள் என்பதை மறுக்கக் கூடியவர்கள் யாராகிலும் இருப்பார்களேயானால் இன்றைய தினம் வீட்டிற்குச் சென்று டாக்டர் பட்டாபி சீத்தாராமையா எழுதி இருக்கிற காங்கிரஸ் வரலாற்றைக் கொஞ்சம் படிக்க வேண்டும். அதைப் படிப்பார்களே யானால், பல பெரிய பெரிய பணக்காரர்கள்தாம் காங்கிரஸ் கட்சியைத் துவக்கி வைத்தார்கள், பணக்காரர்கள் மட்டுமல்ல, ஒரு ஆங்கிலேயனேதான் அதற்கு அடிப்படைக் கல்லையே நாட்டினான்- ஹூயூம் என்பவன் - என்பதை அறிந்து கொள்ளலாம்.
ஆகையால், எந்த நாட்களில் நிலச்சுவான்தார்கள் அரசியலை நடத்திக் கொண்டிருந்தார்களோ அந்தக் காலத்தில் ஜஸ்டிஸ் கட்சியில் பொப்பிலி அரசரும், ராஜா சர். முத்தையா செட்டியாரும், சர்.பி.டி.ராஜனும் இருந்தார்கள் என்பது குற்றச்சாட்டிலே ஒன்றல்ல, நிலைமை விளக்கும்.
இன்றுள்ள நிலை என்ன?
அப்போது இருந்த அரசியல் அப்படிப்பட்டது. அதைக் குறைச் சொல்லக் கூடிய வர்கள் இன்றைய காங்கிரஸ் கட்சியில் அகில இந்தியப் பேரரசில், டில்லியில் டாக்டர் கரன்சிங் ஒரு அமைச்சராக இருக்கிறார். அவர் காஷ்மீர் மகாராஜா குடும்பம். மற்றொருவர் தினேசிங், வியாபாரத் துறை அமைச்சராக இருக்கிறார். அவர் ஒரு சிற்றரசர். இந்த இரண்டு சிற்றரசர்களை மட்டும் நான் குறிப்பிட்டு, வேறு யார் யார் இருக்கிறார்கள் என்பதை நீங்கள் ஆராய்ந்து பார்ப்பதில் சுவையாக இருக்கும் என்று மற்றதை நான் சொல்லியாக வேண்டும்.
இப்படி ஜமீன்தார்களை சிற்றரசர்களை வைத்துக் கொண்டு 1917 இல் 20 வயது உள்ள வாலிபன் தடி ஊன்றி நடந்து கொண்டு, 70 வயதான ஒரு பெரியவர் தடி ஊன்றியதைப் பார்த்து, தடி இல்லாமல் இந்த ஆளாலே நடக்க முடியாதா? என்று கேலி செய்வது போல் இருக்கிறது. ஆகையினால் அந்த மூன்று வகையான பயங்கரக் குற்றச்சாட்டுகளில் இருந்து தங்களை விடுவித்துக் கொண்டு 17 வருடங்கள் இந்த அரசியலை நடத்தியிருக்கிறார்கள்.
பொப்பிலி அரசர் ஆண்ட பெரிய நிலப்பரப்பு!
ராஜா பொப்பிலி அவர்கள் முதலமைச்சராக இருந்தார் என்று சொல்கின்ற நேரத்தில் நாம் ஒன்றை மறந்துவிடக் கூடாது. தனியாக, தமிழ்நாட்டுக்கு மட்டுமல்ல, தமிழகம், ஆந்திரம், கேரளம் இன்னும் சொல்லப்போனால் ஒரிசாவிலே ஒரு பகுதி இவைகளெல்லாம் சேர்ந்த பிரம்மாண்டமான மாநிலத்திற்கு அவர்கள் முதலமைச்ச ராக இருந்திருக்கிறார்கள்.
ஒருவரையயாருவர் மொழிக் காரணமாகச் சுலபத்திலே அறிந்துக்கொள்ளக் கூடிய தமிழ்நாட்டு அரசியலை நடத்துவதிலேயே நாம் எவ்வளவு சிக்கலை பார்க்கிறோம்.
அறநிலையப் பாதுகாப்புச் சட்டம்
கோயில் சொத்துக்களுக்கு கணக்கு வைக்க வேண்டும்
ஜஸ்டிஸ் கட்சியினர் 1 7 ஆண்டுகாலம் ஆட்சி நடத்தினர். அவர்கள் காலத்தில்தான் கோயில் சொத்துக்களுக்குக் கணக்கு வைக்க வேண்டும் என்று கூறும் அறநிலையப் பாதுகாப்புச் சட்டம் போன்ற சிறந்த சட்டங்கள் நிறைவேற்றப்பட்டன.
பெரிய மாநிலம்
பொப்பிலி அரசர் ஜஸ்டிஸ் கட்சிக்காகவே தம் சொத்துக்களை செலவு செய்தார் என்று சொல்லுகின்ற நேரத்தில் நாம் ஒன்றை மறந்துவிடக் கூடாது.
மொழி காரணமாக நாம் ஒருவரை ஒருவர் சுலபத்திலே அறிந்து கெள்ளக் கூடிய தமிழ்நாடு அரசியலை நடத்துவதிலேயே எவ்வளவோ சிக்கலைப் பார்க்கிறோம்.
ஆனால், தனியாக தமிழ்நாடு மட்டும் அல்லாமல் ஆந்திரம், கேரளம், தமிழகம் இன்னும் சொல்லப் போனால் ஒரிசாவிலே சில பகுதிகள் இவைகளை எல்லாம் சேர்ந்த பிரம்மாண்டமான மாநிலத்திற்கு முதலமைச்சராக இருந்து பணியாற்றிய பொப்பிலி அரசர் இந்த மாநிலத்தை பொறுப்பு உணர்ச்சியோடும், பொறுமையோடும் சிறப்பாக ஆண்டார்.
அவரிடம் பயின்ற நான் இன்று, முதல் அமைச்சராக இருக்கிறேன்.
ஜஸ்டிஸ் கட்சியிலிருந்து திராவிடர் கழகம் பிரிந்த சமயம் பெரியார் தலைவராக இருந்தார். நான் பொதுச் செயலாளராக இருந்தேன். (ஜஸ்டிஸ் கட்சி திராவிடர் கழகமாக 1944 இல் திராவிடர் கழகம் என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது. அப்போது தலைவர் பெரியார். பொதுச்செயலாளர் அண்ணா. எனவே ஜஸ்டிஸ் கட்சி திராவிடர் கழகமான நேரத்தில் என்று இருக்க வேண்டும் - கவி)
திராவிடர் கழகத்திலிருந்துதான் திராவிட முன்னேற்றக் கழகம் பிரிந்தது என்றால் இன்றும் நான் ஜஸ்டிஸ் கட்சி செயலாளர் என்று கூறிக்கொள்ள முடியும்.
இந்தியாவில் இரட்டை ஆட்சிமுறை
ஜஸ்டிஸ் கட்சியின் ஆட்சி நடைபெற்ற அந்த நாட்களில் இந்தியாவில் இரட்டை ஆட்சி முறை செயலில் இருந்ததாக முத்தையா செட்டியார் இங்கு குறிப்பிட்டார். இப்போதும் இரட்டை ஆட்சிதான் நடக்கிறது.
முக்கியமான அதிகாரங்களையயல்லாம் ஆங்கிலேயர்கள் தங்கள் கையில் வைத்துக் கொண்டு சில்லறை அதிகாரங்களை மட்டுமே மாநில ஆட்சியாளர்களிடம் தந்தனர். அந்த சில்லறை அதிகாரங்களை வைத்துக்கொண்டுதான் சிறந்த முறையில் ஆட்சிப் பொறுப்பை ஜஸ்டிஸ் கட்சியினர் நடத்தினர்.
அந்த இரட்டை ஆட்சி முறை, ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்துடன் முடிந்துவிட வில்லை.இன்றும் அதே நிலைதான் இருந்துவருகிறது.
மத்திய அரசு பலமான அதிகாரங்கள் அனைத்தையும் தன்னிடம் வைத்துக் கொண்டு, மக்களின் எதிர்ப்புகளைச் சமாளிக்கும் அதிகாரத்தை மட்டுமே மாநில அரசுகளிடம் விட்டுவைத்திருக்கிறது.
விலைவாசி உயர்வுக்கு யார் காரணம்?
உணவுப் பொருள் தட்டுப்பாடு என்றால் - விலைவாசி உயர்வு என்றால் -மக்கள் என்னைத்தான் குறை சொல்வார்கள் ;
ஆனால் அதற்குக் காரணமாக உள்ள வரவுக்கு அதிகமாகச் செலவிடும் பொருளாதாரத்தை அடிப்படையாகக் கொண்ட வரவு செலவுத் திட்டத்தைத் தயாரிப்பது மத்திய அரசாக இருக்கிறது.
அதற்காக ரூபாய் நோட்டுகளை அச்சடித்துத் தள்ளும் அதிகாரத்தையும் மத்திய அரசே பெற்றிருக்கிறது. அதனால் விலைவாசி ஏற்றத்தை ஏற்படுத்துபவர்கள் மத்திய அரசினர்.
இதனால் வேதனையுறுகின்ற மக்களுக்கு ஆறுதல் அளிக்கும் பொறுப்போ மாநில அரசினுடையதாக இருக்கிறது.அதனால் பாதிக்கப்படுவது மாநில அரசுகள்.
பத்தாண்டு காலத்தில் மிக முக்கியமான பணி
இப்போதைய பத்தாண்டு காலத்தில் மிக முக்கியப் பணி ஒன்று உண்டென்றால், அது மத்திய - மாநில அரசுக்களிடையே உள்ள அதிகாரங்களைச் சம அளவில் உள்ள வைகளாக உருவாக்குவதேயாகும். அதற்கேற்ப அதிகாரங்கள் பகிர்ந்தளிக்கப்பட வேண்டியது அவசியமாகும்.
இதை எந்த வகையில் செய்யலாம். இதற்கு அரசியல் சட்டம் எந்த வகையில் திருத்தப்பட வேண்டும் என்பதை ஜஸ்டிஸ் கட்சி தனிக்குழு ஏற்படுத்தி ஆராய்ந்து ‡ இக்கட்சியின் அடுத்த மாநாட்டில் அறிக்கைக் கொடுத்தால், அவர்கள் அரசியல் ரீதியாக நாட்டுக்கு சிறந்த பணயியாற்றியவர்களாவார்கள்.
அரசியல் சட்டம் திருத்தப்பட்டு, அதிகாரங்கள் பகிர்ந்தளிக்கப்பட வேண்டும் என்பதை திராவிட முன்னேற்றக் கழகம் மட்டும் கூறவில்லை.
ஆந்திர முதலமைச்சரின் கேள்வி:
மத்திய அரசிலே எதற்காக ஒரு சுகாதார இலாகா? மத்திய அரசிலே எதற்காக ஒரு கல்வி அமைச்சர்?
மத்திய அரசிலே எதற்கு ஒரு சுகாதார இலாகா ‡ எதற்கு ஒரு சுகாதார அமைச்சர் என்றும், டெல்லியிலே எதற்கு ஒரு கல்வி இலாகா ‡ அங்கே எதற்கு ஒரு கல்வி அமைச்சர் என்றும் ஆந்திர முதலமைச்சர் வெளிப்படையாகவே கேட்டிருக்கிறார்.
மாநிலத்தில் மத்தியப் பள்ளிகள் தேவைதானா?
டெல்லி அரசினர், தாங்கள் கண்காணிக்கப் பள்ளிகளே இல்லை என்பதால்தான் ‘மத்தியப் பள்ளிகள்’ என்று ஆங்காங்கு திறக்கிறார்கள் போலிருக்கிறது.
இவை தேவைதானா என்றும் ஆந்திர முதலமைச்சர் கேட்டிருக்கிறார்.
ஆகவே இதுபற்றியயல்லாம் ஆராய்ந்து, அடுத்த ஆண்டே அறிக்கை ஒன்றைக் கொடுக்கும்படி ஜஸ்டிஸ் கட்சியினரை கேட்டுக் கொள்கிறேன்.
‘ஜஸ்டிஸ் கட்சி இறந்துவிட்டதா ‡ இருக்கிறதா’ என்று ஆராய்வோர் ‘அது இருந்து செய்தது இது’ என்று அறியத் துணை செய்வதாக அது அமையட்டும்.
ஜஸ்டிஸ் கட்சியின் பொன் விழாவில் கலந்து கொண்டு பொன்விழா மலரை வெளியிடுகின்ற வாய்ப்பினை எனக்கு அளித்தவர்களுக்கு நான் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். (இளந்தமிழன், பிப்ரவரி 2015)
No comments:
Post a Comment