Monday, December 23, 2019

சங்க கால தமிழக வரலாற்றில் சில பக்கங்கள் (மயிலை சீனி.வேங்கடசாமி)-2

சங்க கால தமிழக வரலாற்றில் சில பக்கங்கள் (மயிலை சீனி.வேங்கடசாமி)

கி.பி.470 இல் வச்சிரநந்தி என்னும் ஜைன முனிவர் மதுரையில் ஒரு ‘திரமிள சங்கத்தை’ அமைத்தததைச் சுட்டிக்காட்டி அந்தச் சங்கத்தில் தொல்காப்பிய நூல் இயற்றப்பட்டிருக்கலாம் என்று கூறுகின்றனர். இது பற்றி இங்கு ஆராய்வோம்.

‘திகம்பர தரிசனம்’ என்னும் ஜைன சமய நூலிலே அதை எழுதிய தேவசேனர் என்பவர், பூஜ்யபாதரின் சீடராகிய வச்சிரநந்தி விக்கிரம ஆண்டு 525 இல் (கி.பி.470 இல்) தென் மதுரையிலே திராவிட சங்கத்தை நிறுவினார் என்று கூறுகிறார்
(Journal of Bombay Branch of Royal Asiatic Society, Vol.XVII, Page 74).

‘ஸ்ரீ பூஜ்ய பாதஸீஸோ தாவிட ஸங்கஸ்ஸ காரகோ விஷ்டோ
நாமேன வஜ்ஜநந்தீ பாஹுணவேதீ மஹாஸத்தோ’

‘பம்சஸயே சவீஸே விகரமார்யஸ்ஸ மரண பத்தஸ்ஸ
தக்கிண மஹுராஜாதோ தாவிட ஸங்கோ மஹாமஹோ’

இந்தச் செய்தியைக் கொண்டு திரு. எஸ்.வையாபுரி பிள்ளையவர்கள், ‘வச்சிரநந்தியின் பேர்போன சங்கம் கி.பி. 470 இல்அமைக்கப்பட்டது.

தொல்காப்பியம் அந்தச் சங்கத்தில் வெளிவந்த நூலாக இருக்கலாம்’ என்றும்,
‘தமிழ் மொழி தமிழ் இலக்கிய வரலாற்றில் முதல் தரமான முக்கிய நிகழ்ச்சி கி.பி.470 இல் நிகழ்ந்தது. வச்சிரநந்தியின் மேற்பார்வையில் மதுரையில் ஒரு திரமிள சங்கம் அமைக்கப்பட்டதுதான் அந்த நிகழ்ச்சி... முற்காலப் பாண்டியரைப் பற்றிய சாசனங்களில் சின்னமனூர் சிறிய செப்பேட்டுச் சாசனத்தில் மட்டும் (கி.பி. 10 ஆம் நூற்றாண்டு), தலையாலங்கானத்துப் போர்வென்ற நெடுஞ்செழியனுக்குப் பிறகு வந்த ஒரு பாண்டியன் நிறுவிய மதுரைத்தமிழ்ச் சங்கம் குறிப்பிடப்படுகிறது.

இது வச்சிரநந்தியின் சங்கத்தைக் குறிப்பிடுவதாக இருக்கலாம்’ என்றும், தாம் ஆங்கிலத்தில் எழுதிய ‘தமிழ் மொழி தமிழ் இலக்கிய வரலாறு’ என்னும் நூலில் 14 ஆம் பக்கத்திலும், 58,59 ஆம் பக்கங்களிலும் எழுதுகிறார். மேலும் அந் நூல் 61 ஆம் பக்கத்தில்,

‘வச்சிரநந்தி சங்கத்தைப் பற்றிச் சரியான சாதனங்கள் நமக்குக் கிடைக்கவில்லை. ஆனால், அச்சங்கத்தை நிறுவியவுடனே ஒழுக்க நூல்களும் இலக்கண நூல்களும் வெளிவந்திருப்பது அச்சங்கத்தின் பெரிய செயலைக் காட்டுகிறது’ என்று எழுதுகிறார்.

முற்காலத்தில் பாண்டிய மன்னர் அமைத்துத் தமிழராய்ச்சி செய்த தமிழ்ச் சங்கத்தையும் பிற்காலத்தில் வச்சிர நந்தி அமைத்த ஜைனமதப் பிரச்சாரச் சங்கத்தையும் ஒன்றாகப் பொருத்திக் காட்டுகிறர் வையாபுரிப்பிள்ளை. பொருத்திக் காட்டுவதுடன் அல்லாமல் தொல்காப்பியர், வச்சிரநந்தி காலத்தில் (கி.பி.470 க்குப் பிறகு) தொல்காப்பிய இலக்கணத்தை எழுதினார் என்றும் கூறுகிறார். இது மொட்டைத் தலைக்கும் முழங்காலுக்கும் முடி போடுகிற கதையாக இருக்கிறது.

பாண்டியர் அமைத்த தமிழ்ச்சங்கம் வேறு; வச்சிரநந்தி அமைத்த தமிழ்ச்சங்கம் (திராவிட சங்கம்) வேறு. பாண்டியர் அமைத்தது தமிழ் இலக்கிய இலக்கண ஆராய்ச்சிச் சங்கம். வச்சிரநந்தி அமைத்தது ஜைன சமய பிரசாரச் சங்கம். இதையறியாமல், வையாபுரிப் பிள்ளை இரண்டு வெவ்வேறு சங்கங்களையும் ஒன்றாக இணைத்துப் பிணைத்துக் குழப்பியிருக்கிறார். சாதாரண அறிவுள்ளவரும் இதனை எளிதில் அறிந்து கொள்ள முடியும். ஆனால், வையாபுரிப் பிள்ளையவர்கள் ஏனோ இவ்வாறு குழப்புகிறார்.

‘தமிழர் வரலாறு’ என்னும் நூலை ஆங்கிலத்தில் எழுதிய திரு. பி.தி.சீனிவாச அய்யங்கார் அவர்கள் வச்சிர நந்தியின் திராவிட சங்கம் வேறு, பாண்டியரின் தமிழ்ச்சங்கம் வேறு என்று தெளிவாகக் கூறுகிறார். ‘தமிழ்ச் சங்கம் என்று நாம் அறிந்திருக்கிற சங்கம் அன்று இது என்பதைக் குறித்துக் கொள்ள வேண்டும்.
இது (வச்சிரநந்தியின் சங்கம்) தமிழ்நாட்டு ஜைனர்கள் தம்முடைய மத தர்மத்தைத் தமது மாணாக்கர்களுக்குக் கற்பிப்பதற்காக அமைக்கப்பட்ட ஒரு அமைப்பாகும்’ (P.247, History of the Tamils, P.T.Srinivas Iyengar, Madras, 1927)  என்று அவர் எழுதுகிறார்.

இந்த நான்கு பிரிவுகளில் நந்திகணம் பேர்பெற்றது. நந்தி கணத்தில் நாளடைவில் ஜைன முனிவர்கள் தொகை அதிகமாகிவிட்டது. ஆகவே, வச்சிரநந்தி முனிவர், கி.பி.470 இல் நந்திகணத்தை (நந்தி சங்கத்தை) இரண்டாகப் பிரித்து இரண்டாவது பிரிவுக்குத் திரமிள சங்கம் (தமிழ் நாட்டுச் சங்கம், தமிழ் ஜைனர் சங்கம்) என்று பெயர் கொடுத்தார். நந்தி சங்கத்திலிருந்து திரமிள (திராவிட) சங்கம் ஏற்பட்டது என்பதை மைசூர் நாட்டுச் சாசனம் ஒன்று கூறுகிறது.

‘ஸ்ரீமத் திரமிள ஸங்கேஸ்மிம் நந்தி ஸங்கேஸதி அருங்களா
அன்வயோ பாதி நிஸ்ஸே­ ஸாஸ்த்ர வாராஸி பாரகைஹி’
‘நந்தி சங்கத்ததோடு கூடிய திரமிள சங்கத்து அருங்கலான்வய பிரிவு’ என்பது இதன் பொருள்.

இந்தத் திராவிட ஜைன முனிவர் சங்கத்தின் கொண்டகுண்டான் வயம் என்னும் பிரிவில் புஸ்தககச்சை என்னும் உட்பிரிவைச் சேர்ந்த முனிபட்டாரகர் என்னும் ஜைன முனிவரைக் கர்நாடக நாட்டுச் சாசனம் ஒன்று கூறுகிறது.

திரமிள சங்கத்து அருங்கலான்வயப் பிரிவைச் சேர்ந்த சாந்தி முனி என்பவரை இன்னொரு சாசனம் கூறுகிறது.

திரமிள சங்கத்து அருங்கலான்வயத்து ஸ்ரீபால திரைவித்யர் என்னும் முனிவரை மற்றொரு இன்னொரு சாசனம் கூறுகிறது.

இதிலிருந்து, பாண்டியர் தமிழை வளர்ப்பதற்கு மதுரையில் ஏற்படுத்திய தமிழ்ச்சங்கம் வேறு என்பதும், வச்சிர நந்தி ஜைனசமயத்தை வளர்ப்பதற்காக மதுரையில் நிறுவிய நந்தி சங்கத்தின் பிரிவாகிய திரமிள சங்கம் வேறு என்பதும் உள்ளங்கை நெல்லிக் கனிபோல் விளங்குகிறதல்லவா? இது சாதாரண அறிவுடையவருக்கும் நன்கு விளங்குகிறது.

மொழி வளர்ச்சிக்காக ஏற்பட்ட பாண்டியரின் தமிழ்ச் சங்கத்தையும் சமய வளர்ச்சிக்காக வச்சிர நந்தி அமைத்த திரமிள ஜைன சங்கத்தையும் ஒன்றாக இணைத்துக் கூறுவது மொட்டைத் தலைக்கும் முழங்காலுக்கும் முடி போடுகிறது போன்ற செயலாகும்.

பாண்டியர் அமைத்த தமிழ்ச் சங்கத்து நூல்களிலே காதல் வாழ்க்கைச் செய்திகளும் போர்ச் செய்திகளும் உலகியல் செய்திகளும் கூறப்படுவது யாவரும் அறிந்ததே.வச்சிரநந்தி யமைத்த திராவிட சங்கமாகிய ஜைன மத சங்கத்தில், ஜைன முனிவர்கள் காதலைப் பற்றியும் ஆராய்ந்தார்கள் என்று கூறுவது எவ்வளவு பேதைமை!

அன்றியும் சீத்தலைச்சாத்தனார், கபிலர், பரணர், மாமூல னார், அரசில் கிழார், நத்தத்தனார், வெள்ளி வீதியார், இடைக் காடனார், ஓரம் போகியார், மாங்குடி மருதனார் முதலிய ஜைரனரல்லாத புலவர்கள் ஜைன முனிவர்களின் மத சங்கத்தில் இருந்தார்கள் என்று கூறுவது பேதைமை.

வச்சிரநந்தி அமைத்த திராவிட ஜைன சங்கத்தில் தொல்காப்பியர் தொல்காப்பிய இலக்கணத்தை இயற்றினார் என்று கூறுவது ஆராயாமல் கூறும் வெற்றுரையாகும்? என்னை? சகர எழுத்தை முதலாகவுடைய சொற்கள் தமிழில் வழங்குவது இல்லை என்று தொல்காப்பிய இலக்கணச் சூத்திரம் கூறுகிறது.

‘கத நபம வெனுமா வைந்தெழுத்தும்
எல்லா வுயிரொடுஞ் செல்லுமார் முதலே’ (28 எழுத்ததிகாரம்)
‘சகரக் கிளவியு மவற்றோ ரற்றே
அ ஐ ஒளவெனு மூன்றலங்கடையே’ (29 எழுத்ததிகாரம்)
சங்கம், சங்கு, சமம், சகடம், சந்து, சலம், சண்பு முதலிய சகர எழுத்தை முதலாகவுடைய சொற்கள் தமிழில் வழங்குவதில்லை என்று இந்தச் சூத்திரம் கூறுகிறது. ஆகவே, இச்சொற்கள் வழங்காத காலத்தில் தொல்காப்பியம் இயற்றப்பட்டது என்பது விளங்குகின்றது.

இவ்வாறிருக்க, திரமிள சங்கம் என்னும் பெயரையுடைய ஒரு சங்கத்தில் தொல்காப்பியர் இருந்தார், அவர் அச்சங்கத்தில் நூல் இயற்றினார் என்பது எவ்வளவு அறியாமை?

‘திரமிள சங்கம்’ என்னும் சகர எழுத்தை முதலாகவுடைய ஒரு சங்கத்தில் தொல்காப்பியர் அங்கத்தினராக இருந்திருந்தால், அவர் சகரத்தை முதலாகவுடைய சொற்கள் தமிழில் வழங்கா என்று இலக்கணம் எழுதியிருப்பாரா?

பாண்டியரின் தமிழ்ச் சங்கத்துக்கும் சங்கம் என்ற பெயர் இருக்கிறதே என்று சிலர் கேட்கக் கூடும். பாண்டியரின் தமிழ்ச் சங்கத்துக்கு ஆதியில் ஏற்பட்ட பெயர் தமிழ்க் கழகம் என்பது. தமிழ்ச்சங்கம் என்னும் வழக்கு பிற்காலத்தில் ஏற்பட்டது என அறிக.

சின்னமனூர்ச் சிறிய செப்பேட்டுச் சாசனம் பாண்டியன் நிறுவிய மதுரைத் தமிழ்ச் சங்கத்தைப் பற்றிக் கூறுகிறதென்றும், அத் தமிழ் சங்கம் வச்சிர நந்தி மதுரையில் நிறுவிய தமிழ்ச் சங்கமாக இருக்கக்கூடும் என்றும் வையாபுரி பிள்ளை எழுதுகிறார். இதுவும் வாசகரை மயக்குகிற ஒரு செய்தியாகும்.
சின்னமனூர்ச் சிறிய செப்பேட்டுச் சாசனத்தின் வாசகம் இது. ‘மஹாபாரதந் தமிழ்ப்படுத்தும் மதுராபுரிச் சங்கம் வைத்தும்’ என்பது.

இந்தச் சாசனத்தில் மதுரையில் சங்கம் வைத்ததும் பாரதத்தை தமிழில் எழுதுவித்ததும் பாண்டிய மன்னர் செய்ததாகக் கூறுகிறதே யல்லாமல் வச்சிர நந்தி செய்ததாகக் கூறவில்லை. இவ்வாறு ஒன்றை வேறொன்றாகத் திரித்துக் கூறுவதும் மயங்கக் கூறுவதும் உண்மையாகது ; ஆராய்ச்சியும் ஆகாது.

...... திரு. எம்.எஸ்.இராமசாமி அய்யங்கார் அவர்கள் தாம் ஆங்கிலத்தில் எழுதிய ‘தென் இந்திய ஜைன சமய ஆய்வுரைகள்’ என்னும் நூலிலேயும் வச்சிரநந்தியின் சங்கத்தைப் பற்றிக் கூறுகிறார்.

தென்னாட்டில் குடியேறிய திகம்பர ஜைன முனிவர்கள் தங்களுடைய ஜைன சமயத்தைப் பரப்பும் நோக்கத்தோடு இந்தச் சங்கத்தை ஏற்படுத்தினார்கள் என்பதை அறிகிறோம் என்று அவர் எழுதுகிறார்.

(P.52, Studies in South Indian Jainism, M.S.Ramasamy Aiyengar, Madras 1922).

மதுரை, சங்கம் என்னும் இரண்டு சொற்களின் ஒற்றுமையை மட்டும் வைத்துக்கொண்டு, பாண்டியரின் தமிழ்ச் சங்கத்தையும் வச்சிர நந்தியின் திராவிட சங்கத்தையும் ஒன்றாக இணைத்துப் பொருத்திக் கூறுவதும், வச்சிர நந்தியின் சங்கத்தில் தொல்காப்பியனார் தமது தொல்காப்பிய இலக்கண நூலை இயற்றி வெளிப்படுத்தினார் என்றும், ஆகவே, அவர் கி.பி. 5 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்திருந்தவர் என்றும் கற்பித்துக் கூறுவதும் ஆகிய எல்லாம் மாறுபடக் கூறல் மயங்கக் கூறல் திரித்துக் கூறல் ஆகும் என்று அறிதல் வேண்டும். இதில் முக்கியமாகக் கவனிக்க வேண்டியது ஒன்று உண்டு. அது என்னவென்றால், வச்சிரநந்தி திராவிட சங்கத்தை ஏற்படுத்தியது கி.பி. 470 இல் ஆகும். அந்த காலத்தில் பாண்டி நாட்டைக் களப்பிர அரசர் ஆண்டனர். பாண்டியர் ஏற்படுத்திய தமிழ்ச் சங்கம் கி.பி.300 க்கு முன்பு மறைந்து போயிற்று என்பதை ஆராய்ச்சிக்காரர் முக்கியமாகக் கவனிக்க வேண்டும்...... (பக். 30-36).

No comments:

Post a Comment