தொல்காப்பியமும் நாட்டிய சாஸ்திரமும்
..... தமிழ் முதலிய திராவிட மொழியிலிருந்து சமஸ்கிருத பாஷை பல நூற்றுக்கணக்கான சொற்களைக்கடன் பெற்றிருக்கிற உண்மையைச் சமஸ்கிருத பக்தர்கள் சொல்லுவதில்லை. ஆனால் நடுவு நிலையுள்ள நல்லவர்கள் சிலர் இந்த உண்மையை ஒப்புக் கொண்டு எழுதியிருக்கிறார்கள். சமஸ்கிருதத்திலுள்ள பூர்வமீமாம்ஸை சூத்திரங்களுக்கு உரை எழுதிய சபரசுவாமியும் குமரில பட்டரும் தம்முடைய உரைகளில் நீர், மீன், குயில், தாமரை முதலான தமிழ்ச் சொற்களைச் சமஸ்கிருத பாஷை கடன் வாங்கியிருப்பதைத் தெளிவாகக் கூறியுள்ளனர்.
... கன்னட மொழி அகராதி எழுதிய டாக்டர் கெட்டில் என்னும் ஐரோப்பியர், திராவிட மொழிகளிலிருந்து சமஸ்கிருதத்தில் சென்று வழங்கின்ற நூற்றைம்பதுக்கு மேற்பட்ட சொற்களை அந்நூலின் முகவுரையில் எடுத்துக் காட்டியுள்ளார்.
‘சமஸ்கிருத பாஷை’ என்னும் நூலை ஆங்கிலத்தில் எழுதிய பர்ரோ அவர்கள் (The Sanskrit Language by T.Burrow. PP 373-388)
‘சமஸ்கிருத பாஷையில் வேறு மொழிச் சொற்கள்’ என்னும் அதிகாரத்தில் சமஸ்கிருத மொழியில் கலந்துள்ள திராவிட மொழிச் சொற்களின் பெரிய பட்டியலைக் கொடுத்திருக்கிறார். பர்ரோவும் எமுனோவும் சேர்ந்து அண்மையில் வெளியிட்ட திராவிட மொழி அகராதியிலே, பல நூற்றுக்கணக்கான திராவிட பாஷைச் சொற்கள் சமஸ்கிருத மொழியிலே கலந்திருப்பதை எடுத்துக் காட்டியுள்ளார்கள்
(A Dravidian Etymological Dictionary, by T.Burrow and M.B.Emeneau. 1961).
........
திரு.பி.எஸ். சுப்பிரமணிய சாஸ்திரி தாம் எழுதிய வடமொழி வரலாறு என்னும் நூலில் 536 ஆம் பக்கத்தில் இவ்வாறு எழுதுகிறார்:
த்ருச்ய காவ்யத்திற்கு ரூபகம் எனவும் பெயர் உண்டு. அதனைப் பற்றி விரிவாய் கூறும் பழைய நூல் நாட்டிய சாஸ்திரம் ஆகும். அந்நூல் நாட்டிய சாஸ்திரம் ஆகும். அந்நூல் கி.பி மூன்றாம் நூற்றாண்டிற்கு முன்னர் உள்ளது எனக் கொள்ளத்தக்க சான்று இல்லை எனக் கீத் கூறினர்.
ஆனால், கி.மு.இரண்டாம் நூற்றாண்டுக்கு முன்னதான தமிழ்த் தொல்காப்பியத்திலுள்ள மெய்ப்பாட்டியற் சூத்திரங்கள் பல, நாட்டிய சாஸ்திரத்திலிருந்து மொழி பெயர்க்கப்பட்டனவாகத் தோன்றுகின்றது (History of Tamil Language and Literature by S.Vaiyapuri Pillai, Madrass 1956)’.
ஆகலின் நாட்டிய சாஸ்திரம் கி.மு. மூன்றாம் நூற்றாண்டிற்கு முன்னதாய் இருத்தல் வேண்டும் (வடமொழி நூல் வரலாறு - பக் 536, வித்தியாரத்தினம் பி.எஸ்.சுப்பிரமணிய சாஸ்திரி, அண்ணாமலை பல்கலைக் கழகப் பதிப்பு 1946).
மேலும், இதே செய்தியை மேற்படி நூலின் இன்னொரு இடத்திலும் எழுதுகிறார் :
தமிழிலக்கணமாகிய தொல்காப்பியத்தின் மெய்ப்பாட்டியலில் ஏழு சூத்திரங்கள் நாட்டிய சாஸ்திரப் பகுதியின் மொழி பெயர்ப்பாக இருத்தலாலும், தொல்காப்பியம் கி.மு இரண்டாம் நூற்றாண்டிற்குப் பிற்பட்ட நூலன்றாகலானும், நாட்டிய சாஸ்திரம் கி.மு. இரண்டாம் நூற்றாண்டிற்கு முன்னது எனக் கொள்ளத்தகும்( பக்கம் 662-663. வடமொழி நூல் வரலாறு, வித்தியா ரத்தினம் பி.எஸ்.சுப்பிரமணிய சாஸ்திரி, அண்ணாமலை பல்கலைக் கழகப் பதிப்பு 1946).
No comments:
Post a Comment