Tuesday, December 31, 2019

அறிஞர் அண்ணாவின் இறுதி அரசியல் பேருரை

அறிஞர் அண்ணாவின் இறுதி அரசியல் பேருரை

அறிஞர் அண்ணா ஆட்சி அமைத்ததும் அண்ணா அவர்களுக்கு நீதிக்கட்சி சார்பில் சர்.பி.டி.இராசன் தலைமையில் 19.4.1967 அன்று சென்னை மயிலை உட்லன்ட்ஸ் ஹோட்டலில் தேனீர் விருந்து அளிக்கப்பட்டது. இவ்விருந்தில் அண்ணா மகிழ்ச்சியுடன் பங்கேற்றார்.

பின்னர் 30.12.68 இல் நீதிக்கட்சியின் பொன்விழா மலர் வெளியீட்டு விழா நடை பெற்றது. இந்நிகழ்ச்சிக்கு அண்ணா மனநிறைவுடன் வருகை தந்து மன மகிழ்ச்சி யுடன் சொற்பொழிவு நிகழ்த்தினார்.

அண்ணா தன் வாழ்நாளில் பங்கேற்ற கடைசி அரசியல் நிகழ்ச்சி அது.
(இதற்குப் பிறகு கலைவாணர் சிலை திறப்பு நிகழ்ச்சியில் பங்கேற்றார்). இவ்விரு நீதிக்கட்சி நிகழ்ச்சிகளுக்கும் அண்ணா செல்வதை பெரியார் விரும்பவில்லை. கண்டனம் செய்தார்.

நீதிக்கட்சி எங்கே இருக்கிறது! அதுதான் திராவிடர் கழகமாக மாறிவிட்டதே! சேலம் மாநாட்டில் அவர் பெயரில்தானே அண்ணாதுரைத் தீர்மானம் என்று போடப்பட்டதே! இது தெரியாதா அண்ணாவுக்கு என்று வழக்கறிஞர் மாதிரி கேள்வி கேட்டார்.

இருந்தும் 30.12.68 அன்று மாலையில் பாலர் அரங்கில் நடைபெற்ற இவ்விழாவுக்கு அண்ணா வந்துவிட்டார்.

முற்றிலும் நோய்வாய்ப்பட்டிருந்த அண்ணா, எந்த நீதிக்கட்சியின் மூலம் பொது வாழ்க்கைக்கு வந்தாரோ, அந்த நீதிக்கட்சி மேடையில் பேசுவதில் அவர் பெரு மகிழ்ச்சி அடைந்தார்.

அன்று சுமார் 40 நிமிடம் பேசி இருப்பார் என்றே கருதுகிறேன். தம் வரலாற்றுச் சிறப்புமிக்க தம் இறுதி ஆசையைத் தம் வாழ்க்கையின் கடைசி உரையில் அண்ணா வெளியிட்டார்.

ழுமுப் பேச்சு பத்திரிகைகளில் வெளிவரவில்லை. சுருக்கம் தான் வந்தது. அந்தச் சொற்பொழிவு முழுவதும் பதிவு ((Tape) செய்யப்பட்டது. பெரிய தோசை மாதிரி இருந்த பழங்கால டேப்பில் பதிவு செய்தார்கள். நல்வாய்ப்புக் குறைவின் காரணமாக அண்ணாவின் பேச்சு சரியாகப் பதிவாகவில்லை. மங்கிவிட்டது. சிலநிமிடத் தொடக்கப் பேச்சுதான் பதிவாகியது.

அந்தப் பேச்சை நீதிக்கட்சி பொதுச் செயலாளர் திரு. கே. பரமசிவத்தின் புதல்வர் திரு. கே.பி.செந்தாமரை, 36 ஆண்டுகள் கழித்து 4.9.2005 அன்று சென்னையில் நடைபெற்ற நீதிக்கட்சி விழாவில் (கிடைத்த முன் பகுதியை) வெளியிட்டார்.

அந்தச் சொற்பொழிவு அந்த அளவுக்குத் தான் கிடைத்தது. அச் சொற்பொழிவின் பிற்பகுதி மிக மிக முக்கியமானது.

அதில் அவர் தம் இறுதி ஆசையை வெளிப்படுத்தினார். இறுதிப் பகுதியை அனைத்துப் பத்திரிகைகளும் சற்று விரிவாக வெளியிட்டிருந்தன.
அண்ணா சொற்பொழிவின் இறுதிப் பகுதியைத் தாம் பதிவு செய்து பாதுகாத்து வைத்திருப்பதாகக் கூறி, நீதிக் கட்சி வரலாற்று ஆய்வாளர் திரு. கருணாகரன் அவர்கள் நமக்களித்தார். மேலும் அன்றைய பேச்சு வெளியான இதழ்களும் பயன்பட்டன.

முழுமையான இச்சொற்பொழிவு முதல் முறையாக மார்ச்சு, ஏப்ரல் 2008 இளந்தமிழன் இதழில் வெளிவந்தது.

இந்த இறுதிப் பேருரை அண்ணா நூற்றாண்டையயாட்டி மீண்டும் இளந்தமிழன் இதழில் வெளிவந்தது. இப்போது மீண்டும் வெளியிடப்படுகிறது.
தி.வ.மெய்கண்டார்(இளந்தமிழன், பிப்ரவரி 2015)

No comments:

Post a Comment