பழ.நெடுமாறன், தலைவர், தமிழர் தேசிய இயக்கம்
அணிந்துரை
புதுவையைச் சேர்ந்த இளைஞர்கள் `பெரியார் பட்டறை’ என்ற பெயரில் அமைப்பு ஒன்றினை உருவாக்கிப் பெரியாரின் தத்துவங்களைப் பரப்பும் தொண்டினைச் செய்து வருவதை அறிய மகிழ்ச்சி அடைகிறேன்.
இந்த அமைப்பின் சார்பில் `பெரியார் பார்வை’ என்னும் பெயரில் இதழ் ஒன்றும் வெளியிடப்பட்டு வருகிறது. மேலும் தமிழ் வழிக்கல்வி, தில்லை நடராசர் கோயில் நிர்வாகத்தில் உள்ள கோளாறு போன்ற தமிழகப் பிரச்சனைகள் குறித்துத் துண்டு அறிக்கைகளை வெளியிட் டுள்ள சிறப்புக்குரியவர்கள்.
திருக்குறளுக்குப் பாவேந்தர் எழுதிய உரையின் சுருக்கத்தினையும், திருக்குறள் அறத்துப்பாலுக்கான வ.உ.சிதம்பரனாரின் உரையின் சுருக்கத் தினையும் இவர்கள் வெளியிட்டிருப்பது பாராட்டுதற்குரியதாகும்.
பெரியார் பார்வை இதழை இலவசமாக மக்களுக்கு வழங்கிப் பெரியார் கருத்துக்களைப் பரப்பும் தொண்டினை இந்த அமைப்பு செய்து வருவது சிறந்த தொண்டாகும்.
இந்திய அரசியல் அமைப்புச் சட்டம் மறு ஆய்வு செய்யப்பட வேண்டும் என்னும் கருத்தினை வலியுறுத்தி வெளியிடப்பட்டுள்ள பெரியார் பார்வை இதழ் ஏராளமான ஆதாரங்களை அள்ளித் தருகின்றது. அதைப் போல் மொழிப் பிரச்சனையில் பெரியார் அவர்களின் அணுகு முறை என்ன என்பதை இன்னொரு இதழ் தொகுத்துத் தந்துள்ளது. தீட்சிதர்கள் பிடியிலுள்ள தில்லை நடராசர் ஆலய நிர்வாகத்தில் உள்ள பிரச்சனைகளைப் பற்றியும் பிரச்சனைக் குறித்து நீதிமன்றங்கள் அளித்தத் தீர்ப்பு ஆகியவற்றையும் தொகுத்து வெளிந்துள்ள இதழ் பல புதிய செய்திகளைத் தருகிறது.
தமிழ் தமிழர்கள் தமிழ்நாடு குறித்த பல்வேறு பிரச்சனைகளில் பெரியார் அவர்களின் கருத்துக்களைத் தெரிவிக்கின்றன. மற்றும் பல தலைவர்களின் கருத்துக்களையும் திரட்டித் தொகுத்து `பெரியார் பார்வை இதழில் தருவது பாராட்டுக்குரியதாகும். இளைஞர்கள் அரிய சாதனைகளைச் செய்து காட்ட வல்லவர்கள் என்பதைப் பெரியார் பட்டறை நிறுவி உள்ளது. தமிழக இளைஞர்களுக்கு முன்மாதிரியாகத் திகழும் இந்த அமைப்பையும் அதனுடைய அமைப்பாளர் கவி மற்றும் தோழர்களுக்கு எனது பாராட்டுதல்கள்.
No comments:
Post a Comment