Tuesday, December 31, 2019

வைகோ வருக, வாழ்க! - கலைஞர் கவிதை

வைகோ வருக, வாழ்க!
கலைஞர் கவிதை

‘பூட்டிய இருப்புக் கூட்டின் கதவு திறந்தது
சிறுத்தையே வெளியில் வா!’ என்று
புரட்சிக் கவிஞர் இருந்தால் இந்நேரம் உன்னை
அழைத்திருப்பார், அணைத்து மகிழ்ந்திருப்பார்.
அய்யாவும் அண்ணாவும் இருந்தால் ஆரத் தழுவியிருப்பர்,
அவர்களையயல்லாம் அந்தோ ; இழந்துவிட்டோம்!
நாடி நரம்புகளில் ஓடுகின்ற குருதிப் புனலாக
நாசியில் இழைகின்ற சுவாசமாக
நான் வளர்த்த தங்கம் மாறன் இருந்திருந்தால் ;
நாளும் மாநிலங்களவை ஆசான் என்று தன்னை விளித்துத்
தோளுயர்த்தித் துணிவுமிகு நெஞ்சுயர்த்திப் பேசுகிற போர்
வாள் நிகர்த்த வைகோ வருக என வாழ்த்தியிருப்பார்.
ஒருநாளா இருநாளா ; ஒன்றரை ஆண்டு என்
உயிரனைய உன்னைச் சிறையில் அடைத்து வைத்தால்தான்
திருநாள் கொண்டாட முடியும் எனத் தீர்மானித்தத்
தீய சிந்தனைக்குச் சொந்தக்காரர் அதைச் செய்து காட்டினர்.

ஈழத் தமிழருக்காக இந்தியாவில்
எவர்தான் குரல் கொடுக்கவில்லை?
இந்திரா காந்தி முதல் எல்லாத் தலைவர்களுமே
அரவணைத்து ஆதரவுக் கரம் நீட்டவில்லையா?
வாஜ்பாயே வந்திருந்து வாழ்த்திடவில்லையா ;
விடுதலைப் போராளிகளை ஆதரித்த மதுரை மாநாட்டில்?
பத்மநாபா மற்றும் பதின்மர் கொலைக்குப் பின்னும்
விடுதலைப் புலிகளுக்கு நற்சான்று அளித்து ஜெயலலிதா
படைகொண்டு சென்று பாரதநாடு ; தனி ஈழநாட்டைப்
படைத்திட வேண்டுமெனப் பரிந்துரை செய்து,
பத்திரிகைகளில் பேட்டி அளித்ததெல்லாம் பொய்யா?
தேதி வாரியாக திரட்டியுள்ள ஆதாரங்கள் தேவையா?
இளந்தலைவர் ராஜீவை இழந்த துயர் ;
இணையற்ற துயர்! ஈடற்ற துயர்!
இதயமற்றோர்தான் இதனை மறுப்பர் என்பதை
இதயமுள்ள நாம் ; எங்கும் எப்போதும் சொல்லத் தயார்!
பழி ஏதாவது போட வேண்டுமென்று
பல நாட்கள் பசியோடு காத்திருந்தது போல்
உன்னையும் நம் உடன்பிறப்புகள் எண்மறையும்
பொடா எனும் கொடிய சட்டத்தில் போட்டன்றோ வாட்டினர்!

எதையும் தாங்கும் இதயம் நமக்கு உண்டு
இதையும் தாங்கும் பக்குவம் மிகவும் உண்டு என
வையத்தில் நிலைநாட்டிய வற்றாப்புகழ்
வைகோ ; நீ வருக! வாழ்க!

தீரன் நீ! வீரன் நீ !
திக்கெட்டும் பரவிடும்
தீக்காட்டுக்குள்ளேயும்
தென்றலாய் உலவிடும் தியாகி நீ!
தெளிவுற்றோர் இதனை உணராத காரணத்தால்
ஒளியற்றுப் போன கருத்துக் குருடரானார்.
‘இம்’ என்றால் சிறைவாசம்
‘ஏன்’ என்றால் வனவாசம் என்ற
உயிர்க்கொல்லி சர்வாதிகாரத்தை
உருசி கண்ட பூனைகள் எல்லாம் உலகில்
உருண்டுவிட்ட வரலாற்றை மறந்து விட்டு
இருண்டுவிட்ட நெஞ்சத்தின் உடைமையாளர்கள் ;
இரும்புக் கோட்டைக்குள் உனைப்போட்டு வதைத்தார்! பாவம் ;
ஏறுநடை சிங்கத்தை எத்தனைதான் கொடுமை செய்தாலும்
எலியாக முயலாக அது மாறுவதுண்டோ?!
புலியாக புயலாக நீ வருவாய் என்றே நானறிவேன்!
அப்படித்தான் அன்புத் தம்பி ; நீ வந்துள்ளாய்
செப்படி வித்தைகள் இனிச் செல்லுபடியாகாதென்று

செங்கோலேந்திகட்கு வெறும் சேதிகளாக அல்ல ;
சங்கொலி முழக்கமாகவே செய்திடுவாய்! உன்

பெற்ற தாயின் முகம், உற்ற துணைவி முகம்,
மற்றுமுள்ள நண்பர்கள் மழலையர் சுற்றத்தின் முகம்

பூத்திருக்கும் இந்நாளில் உனைக் காணக்
காத்திருக்கும் என் கண்கள் என

எனையறிந்த நீ அறிவாய் ; வேறு
உனைத் தவிர யார் அறிவார் இந்த உண்மை!
(முரசொலி, 8.2.2004)

No comments:

Post a Comment