கலைஞர் அவர்களை நினைவுகூரும் வகையில் நடைபெறுகின்ற இந்த நிகழ்வில் இரண்டு நூல்கள் வெளியிடப்பட்டுள்ளன. இரண்டும் கலைஞர் எழுதியவை. கலைஞர் தமிழ்க்கூறும் நல்லுலகுக்கு ஆற்றிய பணிகளை பறைசாற்றும் நூல்கள் இவை.
1956 இலேயே குறளுக்கு குறளோவியம் தந்த கலைஞர், தன்னுடைய ஆட்சி காலத்தில் வள்ளுவனுக்காக முதலில் 1976 இல் வள்ளுவர் கோட்டமும் 2000 ஆம் ஆண்டில் கன்னியாகுமரியில் 133 அடியில் திருவள்ளுவர் சிலையையும் அமைத்தார். அதே போன்று தான் மிகவும் விரும்பிய சிலப்பதிகாரத்தை, பூம்புகார் என்ற பெயரில் திரைக்காவியமாக உருவாக்கினார். பின்பு ஆட்சிக்கு வந்த போது, பூம்புகாரிலே சிலப்பதிகாரக் கூடம் அமைத்தார். அவை என்றென்றும் கலைஞரின் புகழ் பாடிக்கொண்டிருக்கும்.
தொடக்கக் காலத்தில் கலைஞர் எழுதிய 36 குறள்பாக்களுக்கான உரை ஓவியத்தை திராவிடன் பதிப்பகத்தார் அவற்றை தொகுத்து குறளோவியம் என்ற பெயரில் வெளியிட்டனர். அந்த நூல்தான் இது.
மழித்தலும் நீட்டலும் வேண்டா உலகம்
பழித்தது ஒழித்து விடின்
என்ற குறளுக்கு உரை ஓவியம் தீட்டியிருக்கிறார் கலைஞர். தூய்மையான துறவிகளுக்கே சடை வளர்ப்பது போன்ற வேடங்கள் தேவையில்லை என்று கூறும்போது நல்லறமெனும் இல்லறத்திலே ஒழுக்கம் தவறாது ஈடுபட்ட உயர்தனிச் செம்மலாம் வள்ளுவர், சடைமுடிகள் வளர்த்துக் கொண்டிருந்தார் என்று சித்திரம் வரைந்து காட்டுவது எங்ஙனம் பொருந்தும்? இதற்கோர் நல்ல திருத்தங் காண நல்லறிவாளர் - தமிழ்ப்பாவாணர் உடனே முன் வருவார்களா? என்று 1956 இலேயே குறளோவியம் தீட்டினார்.
இதன் பின்னர் 300 குறள்களுக்கு மேல் உரை ஓவியமும் பின்னர் திருக்குறள் உரை நூலும் எழுதினார்.
1964 இல் பூம்புகார் திரைப்படம் வந்த பிறகு, சிலப்பதிகாரம் நாடகக் காப்பியம் என்ற பெயரில் நூலாக்கினார் கலைஞர். அது ஆங்கிலத்திலும் மொழிப் பெயர்த்து வெளியிடப்பட்டது. அந்நூல் எனக்குக் கிடைக்கவில்லை. இந்த நூல் 20 ஆண்டுகளுக்கு முன் திருவல்லிக்கேணியில் ஒரு பழைய புத்தகக் கடையில் கிடைக்கப்பெற்றேன். பேரறிஞர் அண்ணாவின் அணிந்துரையும் இதில் இருக்கிறது. கலைஞரின் தமிழ்ச்சுவையை இரண்டு நூல்களிலும் பருகலாம்.
1976 இல் வள்ளுவர் கோட்டம் கட்டி முடிக்கப்பட்டு திறப்புவிழாவுக்கான ஏற்பாடுகள் எல்லாம் நடைபெற்றுக் கொண்டிருந்த போது கலைஞர் ஆட்சி கலைக்கப்பட்டது. பின்னர் ஆளுநர் ஆட்சியில் வள்ளுவர் கோட்டம் திறக்கப்பட்டது. அவ்விழாவிற்கு கலைஞர் அழைக்கப்படவில்லை. பின்பு 1989 இல் மீண்டும் ஆட்சிக்கு வந்த போது அங்குதான் முதல்வர் பதவி ஏற்பு நிகழ்வை நடத்தினார்.
ஆளுநர் ஆட்சியின் போது கலைஞரின் எண்ணவோட்டம் என்னவாக இருந்திருக்கும் என்று எண்ணிய போது கவிக்கொண்டல் செங்குட்டுவன் அவர்கள் எழுதிய ஒரு நூல் கிடைத்தது. அதில் வள்ளுவர் கோட்டம் திறப்புவிழா நடைபெற்ற 15.4.1976 இல் கலைஞர் உடன் பிறப்புகளுக்கு கோட்டம் திறக்கப்படுகிறது. குறளோவியம் தீட்டப்படுகிறது என்று தலைப்பிட்டு கடிதம் எழுதியிருக்கிறார். அதில்,
இன்று 1976 ஆம் ஆண்டு ஏப்பிரல் திங்கள் 15 ஆம் நாள் வியாழக் கிழமை! இந்த நாளில் சென்னை மாநகரில் வள்ளுவர்கோட்டம் திறக்கப் படுகிறது. இது செய்தியா? வரலாறா? என்று கேட்டால் அதற்குத் தெளிவாகக் கிடைக்கக் கூடிய பதில் ‘வரலாற்றுச் செய்தி’ என்பதுதான்!
இந்தக் கோட்டம் அமைக்க வேண்டுமென்று திட்டமிட்டு அதற்கான தொடக்க விழா எப்போது நடைபெற்றது என்பது உனக்கு நினைவி ருக்கிறதா? அதுவும் வெறும் செய்தியல்ல; வரலாற்றுச் செய்திதான் என்பதால் உன் குறிப்புக்காகவும், எதிர்கால வரலாற்றுக் குறிப்புக்காக வும் இப்போது அதை நினைவுபடுத்துகிறேன்.
அறிஞர் அண்ணா பிறந்த செப்டம்பர் திங்கள் 15 ஆம் நாளையயாட்டிய அண்ணா பிறந்தநாள் வாரத்தில், அதாவது 1974 ஆம் ஆண்டு செப்டம்பர் 18 ஆம் நாள், சென்னை நுங்கம்பாக்க்தில் மொழி நூலறிஞர் தேவநேயப் பாவாணரும், முத்தமிழ்க் காவலர் விசுவநாதமும், வீற்றிருந்த விழா மேடையில் பொதுப்பணி அமைச்சர் ப.உ.சண்முகம் வரவேற்புரை யாற்றிட, கல்வி யமைச்சர் டாக்டர் நாவலர் அவர்கள் தலைமையில், மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் பேராசிரியர் அன்பழகன் அவர்கள் முன்னிலையில், அன்று தமிழக முதலமைச்சர் பொறுப்பில் இருந்த நான், வள்ளுவர் கோட்டத்துக்கான பணிகளைத் தொடங்கி அடிக்கல் நாட்டுவிழாவை நிறைவேற்றி வைத்தேன்.
நயமான தமிழ் எடுத்து நாவலரும், பேரருவியின் பெருக்கெனத் தமிழ் முழக்கிப் பேராசிரியரும், தமிழ் நிலத்தில் ஆழ உழுது அரும்பொருட் கருவூலங்களை வழங்குகின்ற பாவாணரும், சிந்துபாடும் சிற்றாறு என முத்தமிழ்க் காவலரும், அவர்களோடு இணைந்த காரணத்தால் நானும் அன்று ஆற்றிய உரைகள்! நடைபெற்ற தொடக்கவிழா நிகழ்ச்சி! கல்லில் உளி கொண்டு செதுக்கிய சிற்ப வேலையைத் தொடங்கிய காட்சி! அதே சமயம் நூற்றுக்கணக்கான சிற்றுளிகள் கற்களில் பரதமாடி எழுப்பிய சதங்கை நிகர்த்த சங்கீத ஒலி!
அடடா! கரும்புத்தூண் நட்டு, கற்கண்டு கூரை வேய்ந்து கனிச்சாறு கொண்டு தரைமெழுகி, சர்க்கரையால் கோலமிட்டாற் போன்றிருந்தது அந்த விழா!
உடன்பிறப்பே! அன்று தொடங்கிய முயற்சிக்குத் தொய்வு நேராமல் பணிகள் நடைபெற்றன!
என்று எழுதியுள்ளார்.
இந்த நினைவேந்தலை முன்னெடுத்த அய்யா பெரியசாமி அவர்களுக்கு என்னுடைய நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன. வணக்கம்.
No comments:
Post a Comment