Monday, December 23, 2019

அம்பத்காரும், இந்து மதமும்

அம்பத்காரும், இந்து மதமும்
(குடிஅரசு ஆசிரியவுரை, 1935 அக்டோர் 27)

இந்து மதத்தில் இருந்து அம்பத்காரும், தாழ்த்தப்பட்டவர்களும் மாத்திரமே அல்லாமல் இந்துக்கள் என்று சொல்லிக் கொள்ளுபவர்களில் தீண்டாதவர்கள் என்பவர்கள் நீங்கிய சுமார் 17 கோடி பேர்களும் கூட இந்து மதத்தை விட்டு விலக வேண்டியவர்களே யாவார்கள்.

இந்து மதம் என்று ஒன்று குறிப்பாக இல்லை என்று காந்தியாரே ஒப்புக்கொள்ளுகிறார்.

இந்தியாவுக்கு மகமதியர்கள் முதலிய அயல் நாட்டார்கள் வந்த காலத்தில் இந்தியாவில் உள்ள பல்வேறு தேச வகுப்பு மக்கள் நடந்துகொண்டுவந்த நடவடிக்கைகளுக்கும் பழக்க வழக்கங்களுக்கும் பல்வேறு சமூகத்தாருடைய சடங்கு, பிரார்த்தனை, வழிபடு கடவுள்கள் முதலாகியவைகளுக்கும் சேர்த்து எல்லாவற்றிற்கும் ஒரே பெயராக இந்துமதம் அதாவது இந்தியர்களின் மதம் என்பதாக பெயரிட்டு விட்டார்கள்.

அக்காலத்தில் இருந்த திராவிடர்கள் பழக்க வழக்கங்களுக்கும் இந்து மதம் என்றும், ஆரியர்கள் பழக்க வழக்கங்களுக்கும் இந்து மதம் என்றும், மலைநாட்டு மக்கள் பழக்கவழக்கங்களுக்கும் இந்து மதம் என்றும், ஆரிய சமாஜமும் இந்து மதம் என்றும், பிரம்ம சமாஜமும் இந்து மதம் என்றும் வேதாந்தமும் இந்து மதம் என்றும் கடவுளையும் மதத்தையும் சரீரத்தையும் உயிரையும் துறந்த துறவறமும் இந்து மதம் என்றும் பவுத்தர்கள் பழக்க வழக்கங்களுக்கும் இந்து மதம் என்றும், நாஸ்திகர்கள் கொள்கைகளுக்கும் இந்து மதம் என்றும் இப்படிப் பலவிதமாய் அவர்கள் அதாவது கிறிஸ்தவர்கள் மகமதியர்கள் தவிர மற்ற எவர்களது நடவடிக்கைக்கும் இந்து மதம் என்றே பேர் வைத்து விட்டார்கள். அதாவது இந்தியர்களின் மதம் எனச் சொல்லிவிட்டார்கள்.

ஆகவே இந்து மதம் என்றால் இந்தியர்கள் மதம் என்றுதான் அர்த்தமே ஒழிய ஒரு தனிப்பட்ட குறிப்பான கொள்கைகளுக்கு இந்து மதம் என்று பெயரில்லை. என்றாலும் அக்காலத்தில் ஆரியர்கள் சிறிது செல்வாக்குப் பெற்று இருந்ததால் அவர்கள் தங்கள் பழக்க வழக்கம், சடங்கு, தங்களின் வழிபடு கடவுள்கள் ஆகியவை களையே பிற இந்தியர்கள் மீதும் சுமத்தி அதற்கு அதிகமான செல்வாக்கை உண்டாக்கி வைத்துக் கொண்டிருந்த படியால் ஆரியர்கள் பழக்க வழக்கம், சடங்கு, வழிபடு கடவுள், அவர்களது இலக்கிய ஆதாரங்கள் என்பன முதலியவைகளே இந்துக்களின் மதமாகவும் மத ஆதாராங்களாகவும் ஆக்கப்பட்டுவிட்டன.

 ஆரியர்களுக்கு எதிர்ப்பானவைகளும் ஆரியர்கள் அல்லாதவர்களும்கூட விவகாரத்திற்கு இடமில்லாமல் போகட்டும் என்கின்ற காரியத்துக்காகவே எல்லாம் இந்து மதம்தான் எல்லோரும் இந்துக்கள்தான் என்றும், அதுவும் இந்து மதம் இதுவும் இந்து மதம் என்றும், இந்து மதத்தில் எல்லாக் கொள்கையும் உண்டு என்றும், ஒரு இந்து எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம் என்றும் பல சமயங்கள் சேர்ந்தது இந்து மதம் என்றும் அவ்வப்போது தோன்றி பல பெரியார்களின் அபிப்பிராயங்கள் எல்லாமுமே இந்து மதமாக இருக்கிறது என்றும், எந்த மதக் கருத்தும் இந்து மதத்தில் உண்டு என்றும், எப்படிப்பட்டவனும் இந்துவாய் இருக்கலாம் என்றும், புத்தர்கள், சமணர்கள் ஜெயினர்கள் எல்லாருடைய அபிப்பிராயமும் இந்து மதத்தில் இருந்து வந்ததுதான் என்றும், இந்து மதத்துக்கு பொருத்தமானதே என்றும் சொல்லி பொதுவாக இன்று முகமதியர்கள் கிறித்துவர்கள் அல்லாத எவரும் இந்துக்கள் என்றே சொல்லக் கூடிய நிலையை ஏற்படுத்திக் கொண்டார்கள்.

இந்து மதம் என்பதாக இந்துக்களுடைய பழைய ஆதாரங்கள் என்று சொல்லும்படியான எதிலும் ஒரு வார்த்தை கூட கிடையாது.
இந்தியாவின் பெயரைக் குறிப்பதற்கு இந்துஸ்தான் என்று ஒரு வார்த்தை காணப்படலாமோ என்னமோ? அது கூட தைரியமாய் சொல்வதற்கு இல்லை.  இந்தியா என்கின்ற பெயர்கூட இந்துமத ஆதாரங்கள் என்பவைகளில் இருப்பதாகத் தெரியவில்லை.

இந்து மதம் என்பதற்கு என்னதான் அருத்தம் என்று பழைய அதாவது சுமார் 100, வரு­ம் 200 வரு­ம் முந்திய ஐரோப்பிய அகராதிகளையும் ஐரோப்பிய கலைகளையும் பார்ப்போமானால் மகமதியர்கள் அல்லாதவர்கள் அனுஷ்டிக்கும் மதம் என்றும், ஆரியர்களின் பழக்க வழக்கங்களைப் பின்பற்றுகிறவர்களுக்குச் சொல்லும் மதப் பெயர் என்றும், ஆரியர்கள் அனுஷ்டிக்கும் ஆச்சார அனுஷ்டானங்கள் என்றும்தான் காணப்படுகின்றனவே அன்றி வேறு ஒன்றும் சொல்லப்படுவதாகக் காணமுடியவில்லை.

இந்து மதம் பிரத்தியக்ஷத்தில் என்னமாய் இருக்கிறது என்று பார்ப்போமானால் விக்கிரகங்களை வணங்குவது ஜாதி வித்தியாசங்களை உயர்வு தாழ்வுகளை பாராட்டுவது ஆகிய இந்த இரண்டு காரியம்தான் இந்த உலகத்தில் வேறு எந்த தேச மக்களிடத்திலும் வேறு எந்த மதஸ்தரிடத்திலும் இல்லாத குணங்கள் கொண்டு இருந்து வருகிறது.

இந்த இரண்டு காரியங்களைப் பற்றி அறிஞர்கள் என்பவர்கள் என்பவர்கள் வெகுகாலத்துக்கு முன்பே தவறுதலானது என்றும் அவசியமற்றது என்றும் முடிவுகட்டிவிட்டார்கள். அதற்கும் பல ஆயிரக்கணக்கான வரு­ங்களுக்கு முன் உள்ள பெரியார்கள் என்பவர்களுடைய வாக்கு உபதேசமும் இருந்து வருகிறது. இவைகளையும் இந்துமத ஆதாரமாகவும், அப்பெரியார்களையும் இந்து மதத்தில் தெய்வீகாம்சம் பெற்றவர்கள் என்றும் சொல்லப்படுவதோடு விக்கிர ஆராதனையில் நம்பிக்கை இல்லாதவனும் ஜாதி வித்தியாசம் உயர்வு தாழ்வு ஆகியவற்றை வெறுப்பவனும் இகழ்பவனும் கூட இந்துதான் என்றும், அதற்கும் ஆதாரம் இந்து மதத்தில் இருக்கிறது என்றும் சொல்லப்படுகிறது.
ஆகவே இப்போது எது இந்துமதம் எது இந்துமதம் அல்லாதது என்று சொல்ல முடியாத நிலையில் இருக்கிறோம்.

ஆனால் தேசீயத் தலைவர்கள் மதத் தலைவர்கள் என்று சொல்லப்பட்டவர்களான தோழர்கள் காந்தியார், மாளவியார் முதலாகியவர்கள் இந்து மதம் என்று எதைச் சொல்லுகிறார்கள் என்று பார்த்தால் வருணாச்சிரமத்தை பரிசுத்தமாக்கி நிலைநிறுத்துவது தான் இந்து மதம் என்கிறார் காந்தியார், களி மண்ணும் கங்கை ஜலமும் கூடவே இருக்க வேண்டியதுதான் இந்து மதம் என்று செய்து காட்டுகிறார் மாளவியார்.
மகமதிய ஆதிக்கம் தலையயடுக்காமல் செய்வது தான் இந்து மதம் என்கிறார் மூஞ்சேயாரும் பரமானந்தனாரும். மற்றபடி சங்கராச்சாரிகளுடைய இந்து மதம் எப்படிப்பட்டது? இராமானுஜாச்சாரியாருடைய இந்து மதம் எப்படிப்பட்டது? பண்டார சன்னதிகளுடைய இந்துமதம் எப்படிப்பட்டது? மனுதர்ம சாஸ்திர இந்துமதம் எப்படிப்பட்டது? இதிகாசமாகிய கீதையுடைய இந்துமதம் எப்படிப்பட்டது? சைவர்களுடைய இந்துமதம் எப்படிப் பட்டது? பார்ப்பனரல்லாத சைவர்கள் இந்து மதம் எப்படிப்பட்டது? வைணவர்களுடைய இந்து மதம் எப்படிப்பட்டது? என்பவைகளைப் பற்றி நாம் விவரிக்க இதில் இடம் வைத்துக் கொள்ளவில்லை.

எப்படி இருந்தாலும் இஸ்லாமியர்களைப் போலவும் கிறிஸ்துவர்களைப் போலவும் மதம் என்பதற்கு இருந்து வரும் ஆதாரம், கொள்கை, குறிப்பிட்டவர்களுடைய உபதேசம் என்பதாக எதுவும் இல்லாமல் வார்த்தை அளவில் குருட்டு அபிமான அளவில் இந்துமதம் இருந்து வருகிறது என்பதை யாரும் மறுக்க முடியாது.

இந்த லட்சணத்தில் உள்ள இந்து மதம் ஒரு மனிதனைத் தீண்டக் கூடாதவன் என்றும், ஒரு மனிதனை தாசி மகன், வைப்பாட்டி மகன், அடிமை மகன் என்றும் சொல்லிக் கொண்டு உரிமையும் பாராட்டி 100 க்கு 97 மக்களை சுயமரியாதையற்றவர்களாக்கி 100 க்கு 25 மக்களை தீண்டாதவர்கள் சண்டாளர்கள் என்று இழிவு படுத்தி வருவதென்றால் இப்படிப்பட்ட இந்த மதம் உலகத்தில் எதற்காக இருக்க வேண்டும்? இது அடியோடு ஒழிக்கப்படுவதில் என்ன தப்பு? என்று தான் கேட்கின்றோம்.

ஜாதி அகம்பாவம் பிடித்த சோம்பேறிப் பார்ப்பனீயக் கூட்டம் தங்களது சுயநலங்களை உத்தேசித்து இந்து மதம் ஒழிய சம்மதப்படமாட்டார்கள் என்பதோடு ‘இந்து மதத்தை ஒழிக்க உன்னாலும் முடியாது உங்கள் பாட்டனாலும் முடியாது’ என்று சொல்லுவார்கள். ஆனால் அது வேறு வி­யம். தீண்டப்படாத வகுப்பைச் சேர்ந்த ஒரு ஆள் இந்து மதத்தை விட்டுவிடுகிறேன் என்றும் ‘சண்டாளர்கள்’ ‘இழிமக்கள்’ என்று சொல்லக்கூடிய ஒரு கூட்ட மக்களின் மகாநாட்டில் இந்து மதத்தை விட்டுவிட வேண்டும் என்று ஒரு தீர்மானம் செய்தவுடன் இமயமலை முதல் கன்னியாகுமரி வரையில் உள்ள தேசீயத் தலைவர்கள் தேசீய பத்திராதிபர்கள், மகாத்மாக்கள், மாளவியாக்கள் இந்து மதத் தலைவர்கள் ‘ வீரர்கள்’ ‘தியாகிகள்’‘சத்தியாக்கிரகிகள்’ எல்லோருக்குமே தலையில் இடி விழுந்தது போல் ஆகிவிட்டதுடன் இதற்காக எத்தனை பொய் புரட்டு, ஏமாற்று, தந்திரம் ஆகிய இழி காரியங்கள் எல்லாம் செய்து ‘அம்பேத்கார் அவ்வளவு பெரிய மனு­ன் அல்ல’ என்றும் ‘பம்பாய் மாகாண தீண்டப்படாதார் மகாநாடு தக்க பிரதிநிதித்துவம் பொருந்தியது அல்ல’ என்றும் தாங்கள் கூப்பாடு போடுவது போதாமல் அவ்வகுப்பிலேயே பல வயிற்றுச் சோற்றுக் கருப்பன்களைப் பிடித்து ஒரு திராம் இரண்டு திராம் சாராயம் வாங்கிக் கொடுத்து எழுதச் சொல்லியும், எழுதினதாக ஒப்புக் கொள்ளச் சொல்லியும் இவ்வளவு பாடுபடுவதைப் பார்க்கும் போதே முடியாது என்ற சொல்லுபவர்கள் உண்மையாக நம்புகிறார்களா அல்லது பயந்து நடுங்கி அப்படி உளருகிறார்களா என்பது விளங்கும்.

இந்து மதம் நாளுககு நாள் ஒழிகிறதா இல்லையா என்பதும் பிறமதம் நாளுக்கு நாள் ஓங்குகிறதா இல்லையா என்பதும் ஒரு 50 வரு­ம் ஜன கணிதத்தைப் பார்த்தால் தானாகவே விளங்கும்.

ஆகையால் இந்து மதத்தை ஒழிக்க வேண்டுமென்று முயறசி செய்தவர்கள் இப்பார்ப்பனர்களுடைய மிரட்டலுக்கு பயப்படாமல் சித்திரத்தில் படம் எழுதக்கூட ஒரு இந்துவின் பழைய சின்னம் இல்லாத அளவுக்கு இந்து மதம் என்னும் புரட்டான ஒரு கட்டும் சூழ்ச்சியும் அழிய வேண்டியது அவசியம் என்றும் அது அழிந்து போகப் போவது உறுதிதான் என்றும் தைரியமாயக் கூறுவோம்.(குடிஅரசு 1935, அக்டோபர் 27).


No comments:

Post a Comment