Monday, December 23, 2019

ஹிந்து சமூகத்தினால் நமக்கு நன்மையில்லை-அம்பேத்கார் பிரசங்கம்

ஹிந்து சமூகத்தினால் நமக்கு நன்மையில்லை
சமத்துவம் கொடுக்கும் எந்த மதத்திலாகிலும் சேருங்கள்
அம்பேத்கார் பிரசங்கம்

தாழ்த்தப்பட்ட மக்கள் ஹிந்து சமுகத்தினின்றும் அடியுடன் விலகிவிட வேணடுமென்றும், சம அந்தஸ்தும் சம உரிமைகளையும் கொடுக்கும் வேறு எம்மதத்திலாவது சேர்ந்து கொள்ள வேண்டும் என்றும் 13.10.35 நேதி நாசிக் ஜில்லாவில் இயோலா என்ற விடத்தில் நடைபெற்ற, பம்பாய் மாகாண தாழ்த்தப்பட்டார்கள் மகாநாட்டில் ஏகமனதாக ஓர் தீர்மானம் நிறைவேறியது.
மகாநாட்டுக்குத் தலைமை வகித்த டாக்டர் அம்பேத்காரின் யோசனையின் பேரிலேயே அத்தீர்மானம் நிறைவேறியது.

சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேல் மிகவும் மனக் கசப்புடன் பேசிய அம்பேத்கார் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு ஜாதி இந்துக்கள் இழைத்துவரும் கொடுமைகளை எடுத்துரைத்து அதைக் கண்டித்தார்.

மனம் மாறவில்லை

ஜாதி இந்துக்களின் மனதை மாற்றுவதற்காக நாம் இதுவரையிலும் செய்துவந்த முயற்சிகள் யாவும் பலனளிக்கவில்லை. இனியும் நமது சக்தியையும், பணத்தையும், நமது குறையைத் தீர்த்துக் கொள்ளவும், அவர்களுடன் ஒற்றுமையாக வாழவும் செலவழிக்க முயற்சி செய்வது வீணேயாகும். எனது தீர்க்க ஆலோசனைக்குப் பின் இந்து சமூகத்தினின்றும் அடியுடன் விலகிவிடுவதே சிறந்த வழி என்ற முடிவுக்கு வந்திருக்கிறேன். நமக்கு சமத்துவம் கொடுக்க மறுக்குமிடத்தில் நம்முடைய போராட்டத்தை நிறுத்திவிடுவோம். நம்மை நாம் இந்துக்களென்று கூறிக்கொள்ளும் துர்ப்பாக்கியத்தினால்தான் இவ்வாறு நாம் கொடுமையாக நடத்தப்படுகிறோம். நாம் வேறு ஓர் மதத்தைச் சார்ந்தவர்களாயிருந்தால் எவருக்கும் நம்மை இவ்விதம் நடத்த துணிவு வராது. ஆனால் எம் மதத்தில் உங்களுக்கு சம அந்தஸ்து கொடுத்து சமத்துவமாய் நடத்துகிறார்களோ அம்மதத்தில் நீங்கள் சேர்ந்துகொள்ளுங்கள்.

‘நம்முடைய தவறை நாம் இப்பொழுது திருத்திக்கொள்வோம். பிறக்கும் பொழுதே தீண்டத்தகாதவன் என்ற களங்கம் என் மீது சுமத்தப்பட்டுவிட்டது என் துரதிர்ஷ்டமேயாகும். ஆனால் எனது குற்றத்தால் அது ஏற்படவில்லை. இறக்கும்பொழுது நான் ஓர் இந்துவாய் இறக்கமாட்டேன். ஏனெனில் அவ்வாறு செய்து கொள்ளும் சக்தி என்வசமிருக்கிறது’.

டாக்டர் அம்பேத்காரின் பிரசங்கத்தைக் கேட்ட சபையோர் மனமிளகினர். அவர் யோசனையை சபையோர் வரவேற்றனர். தீர்மானம் ஏகமனதாக நிறைவேறியது. சுமார் 10,000 ஜனங்கள் மகாநாட்டிற்கு விஜயம் செய்திருந்தனர். (குடிஅரசு, 1935, அக்டோபர் 27).

No comments:

Post a Comment