உ.வே.சா.வும் இரண்டு சந்திப்புகளும்
- கவி
கும்பகோணத்தில் கல்லூரி முதல்வராக இருந்த ஜெ.எம்.யஹன்ஸ்மான் தலைமையில் தமது குருவான மகாவித்துவான் மீனாட்சிசுந்திரம் பிள்ளை அவர்களைப் பற்றி இரண்டு சொற்பொழிவுகளை ஆற்றுகிறார் உ.வே.சா. அதனை தொடர்ந்து மகா வித்துவான் மீனாட்சிசுந்தரம்பிள்ளை சரித்திரம் என்ற நூலை 1933-34 இல் வெளியிட்டார்.
1935 இல் உ.வே.சா. அவர்களின் 80 ஆம் ஆண்டு நிறைவு விழா நடைபெற்றது. அதில் கே.வி. கிருஷ்ணசாமி அய்யர் உ.வே.சா அவர்களின் சரித்திரம் எழுதப்பட வேண்டும். அதற்காக ரூ 501 ஐ பதிப்புச் செலவுக்காக தருகிறேன் என்று கூறி பணத்தையும் வழங்குககிறார்.
அதன் பிறகு ஆனந்த விகடன் ஆசிரியராக இருந்த இரா. கிருஷ்ணமூர்த்தி அவர்களும் உரிமையாளர் எஸ். எஸ். வாசன் அவர்களும் உ.வே.சா அவர்களை சந்தித்து வேண்டிக் கேட்டுக் கொண்டதன் பேரில் 6.1.1940 ஆனந்த விகடன் இதழில் முதல் கட்டுரை வெளிவந்தது. அது தொடங்கி 1942 மே மாதம் வரை சுயசரிதம் ஆனந்த விகடனில் தொடர்ந்து வெளிவந்தது. உ.வே.சா அவர்களின் வரலாற்றை அவர் சொல்ல எழுதியவர் கி.வா.ஜகநாதன் அவர்கள். மணிமேகலை பதிப்பு வெளியானதோடு உ.வே.சா சரிதம் முடிவடைகிறது என்று தனது தந்தையை பற்றி எழுதுகிறார் சா. கலியாணசுந்தர அய்யர்.
1855 பிப்ரவரி மாதம் 19 ஆம் நாள் பிறந்த உ.வே.சா. அவர்களுக்கு அரியலூர் சடகோப அய்யங்கார் அவர்களும் செங்கணம் விருத்தாசல ரெட்டியார் அவர்களும் ஆசிரியர்களாக இருந்து பாடம் கற்பித்தனர்.
1870 ஆம் ஆண்டு ஏப்பிரல் மாதத்தில் மயிலாடுதுறையில் மகாவித்துவான் மீனாட்சி சுந்தரம் பிள்ளை அவர்களை, உ.வே.சா. அவர்கள் தனது தந்தையோடு சந்தித்த போது உ.வே.சா வாழ்கையின் இரண்டாம் பகுதி தொடங்குகிறது.
மயிலாடுதுறையில் முதல் முதலாக தான் மகாவித்துவான் மீனாட்சி சுந்தரம்பிள்ளையை சந்தித்து நிகழ்ச்சியை உ.வே.சா. பின்வருமாறு காட்சிப்படுத்துகிறார்...
அப்புலவர் பெருமான் வரும்போதே அவருடைய தோற்றம் என் கண்ணைக் கவர்ந்தது. ஒரு யானை மெல்ல அசைந்து நடந்து வருவதைப் போல வந்தார். நல்ல வளர்ச்சி அடைந்த தோற்றமும் இளந் தொந்தியும் முழங்கால் வரையில் நீண்ட கைகளும், பரந்த நெற்றியும், பின் புறத்திலுள்ள சிறிய குடுமியும் இடையில் உடுத்தியிருந்த தூய வெள்ளை ஆடையும் அவரை ஒரு பரம்பரை செல்வரென்று தோற்றச் செய்தன. ஆயினும் அவர் முகத்திலே செல்வர்களுக்குள்ள பூரிப்பு இல்லை. ஆழ்ந்து பரந்த சமுத்திரம் அலை யடங்கி நிற்பது போன்று அமைதியே தோன்றியது. கண்களில் எதையும் ஊடுருவி பார்க்கும் பார்வை இல்லை. அலட்சியமான பார்வை இல்லை. தம் முன்னே உள்ள பொருட்களை குளிர்ச்சியோடு செல்லும் பார்வைதான் இருந்தது
பல காலமாகத் தவம் புரிந்து ஒரு தெய்வ தரிசனத்திற்குக் காத்திருக்கும் உபாஸகனைப் போல் நான் இருந்தேன் என்று எழுதுகிறார் உ.வே.சா.
மகாவித்துவான் மீனாட்சிசுந்தரம் பிள்ளை அவர்கள், அவர்களை அமரச் செய்து நீங்கள் யார்? வந்த காரியம் என்ன? என்று அன்புடன் கலந்த வார்தைகள் வெளிவந்தன என்கிறார் உ.வே.சா.
உ.வே.சா.வின் தந்தை அவர்கள், என் பெயர் வேங்கட ஸுப்பன். இவன் வேங்கட ராமன் என்கிறார். உடனே மீனாட்சிசுந்தரம் பிள்ளை அவர்கள், வேங்கடசுப்பிரமணியன் என்பதன் மருஉ தான் வேங்கடஸூப்பன் என்பது. வேங்கட மலையில் முருகக் கடவுள் கோயில் கொண்டிருந்தான் என்பதற்கு இது ஒரு ஆதாரம் என்று கூறுகிறார்.
1.2.1876 இல் மகாவித்துவான் மீனாட்சி சுந்தரம் பிள்ளை மறைகிறார். அதுவரை உ.வே.சா. பல நூல்களை கற்றார். திருவாடுதுறை ஆதீன கர்த்தராக இருந்த ஸ்ரீ சுப்பிரமணிய தேசிகர் அவருடனும், மடத்துக்கு வரும் பல புலவர்களுடனும், பல மக்களின் தொடர்பும் உ.வே.சா அவர்களுக்கு ஏற்பட்டது. பல நூல்களின் அறிவும் ஏற்பட்டது.
மகாவித்துவான் மீனாட்சிசுந்தரம் பிள்ளை அவர்களின் மாணாக்கரான தியாகராச செட்டியார் அவர்கள் கும்பகோணம் அரசு கல்லூரில் தமிழ் ஆசிரியராக இருந்தார். அவர்தனக்கு பிறகு உ.வே.சா. அவர்களை அந்த தமிழ் ஆசிரியர் பொறுப்புக்கு பரிந்துரை செய்கிறார். 1880 ஆம் ஆண்டு கும்பகோணம் அரசு கல்லூரியில் தமிழ் ஆசிரியராக உ.வே.சா வேலை பார்க்கத் தொடங்குகிறார்.
அதே கால கட்டத்தில் கும்பகோணம் ஜில்லா முன்சீப்பாக இருந்த இராமசாமி முதலியார் அவர்களின் நட்பும் கிடைக்கிறது. சேலம் இராமசாமி முதலியார் குறித்து உ.வே.சா. அவர்கள்,
அரியிலூரிலிருந்து சேலம் இராமசாமி முதலியார் அவர்கள் கும்பகோணத்திற்கு முன்சீபாக மாற்றப் பெற்று வந்தார். அவரிடம் என் நல்லூழ் என்னைக் கொண்டுபோய் விட்டது... தமிழ் இலக்கியத்தின் விரிவை அறிய முடிந்தது என்கிறார் உ.வே.சா.
சேலம் இராமசாமி முதலியார் தமிழ் இலக்கியத்திலும் சங்கீகதத்திலும் வடமொழியிலும் பழக்கமுள்ளவர். அவருடைய கல்வி அறிவையும் பெருந்தன்மையையும் கேள்வியுற்ற ஸ்ரீ சுப்பிரமணிய தேசிகர் அவரைப் பார்த்து வரும்படி என்னை அனுப்பினார். 21.10.1880 இல் சேலம் இராமசாமி முதலியாரை முதன் முதலில் சந்தித்தேன் என்கிறார் உ.வே.சா.
முதல் சந்திப்பில் நடந்தவற்றை உ.வே.சா விவரிக்கிறார்.
அவர் யாரோ அயலாரிடம் பராமுகமாகப் பேசுவதுபோலவே பேசினார். மிக்க மவிருப்பத்துடன் பேசுவதாகப் புலப்பட வில்லை. அதிகாரப் பதவியினால் இப்படி இருக்கிறார் என்று நினைத்தேன்.
நீங்கள் யாரிடம் பாடம் கேட்டீர்கள் என்று கேட்டார்,,, மகாவித்துவான் மீனாட்சிசுந்தரம் பிள்ளை அவர்களிடம் என்றேன்.
பிள்ளை அவர்களின் பெயரைக் கேட்டவுடன் அவரிடம் ஏதாவது கிளர்ச்சி உண்டாகுமென்று எதிர்பார்த்தேன். அவர் அப்படி பேச முன்வரவில்லை.
பிள்ளை அவர்கள் பெயரைக்கேட்டுப் புடை பெயர்ச்சியே இல்லாத இவராவது தமிழில் அபிமானம் உடையவராக இருப்பதாவது! பொய்யாக இருக்கும் என்று தீர்மானம் செய்து கொண்டேன் என்கிறார் உ.வே.சா.
இதன்பின் என்ன பாடம் கேட்டீர்கள் என்று வினா எழுப்பினார்,
குடந்தை அந்தாதி,
மறை இசை அந்தாதி,
புகலூர் அந்தாதி,
திருவரங்கத்து அந்தாதி,
அழகர் அந்தாதி
கம்பர் அந்தாதி,
முல்லை அந்தாதி,
மீனாட்சி அம்மை பிள்ளைத் தமிழ்
முத்துக்குமாரசாமி பிள்ளைத் தமிழ்
அகிலாண்ட நாயகி பிள்ளைத் தமிழ்
சேக்கிழார் பிள்ளைத் தமிழ்
திருக்கோவையார், தஞ்சை வாணன் கோவை என்று அடுக்கினேன்.
உடனே அவர் சொன்னார், இதெல்லாம் படித்து என்ன பிரயோசனம் என்று கேட்டார்.
இவர் இங்கிலீசு படித்து அதிலே மோகங் கொண்டவராக இருக்கலாம் அதனால் இப்படி சொல்லுகிறார் என்ற எண்ணம் னக்கு உண்டாயிற்று. நானும் விடவில்லை. புராண வரிசையை தொடர்ந்தேன்,
திருவிளையாடற் புராணம்
திரு நாகைக் காரோணப் புராணம்
மாயூரப் புராணம்
கந்த புராணம்
பெரிய புராணம்
குற்றாலப் புராணம்
அவர் பழைய படி கற்சிலையாகவே இருந்தார்.
நைடதம்
பிரபுலிங்க லீலை
சிவஞான போதம்
சிவஞான சித்தியார் உரை
என்று இலக்கண நூல்களையும் சொன்னேன்.
கடைசியாக கம்பராமாயணம் முழுமையும் இரண்டு மூன்று முறை படித்திருக்கிறேன் என்றேன்.
சேலம் இராமசாமி முதலியார் , சரி அவ்வளவுதானா? என்று கேட்டார்.
இந்த பிற்காலத்து புத்தகங்களையயல்லாம் படித்தது சரிதான். பழைய நூல்களில் ஏதாவது படித்ததுண்டா? என்று கேட்டார்.
அவைகளுக்கெல்லாம் மூலமான நூல்களை படித்திருக்கிறீர்களா என்று அவர் கேட்ட போது அவரிடம் ஏதோ சரக்கு இருக்கிறதென்ற எண்ணம் எனக்கு உண்டாயிற்று.
தாங்கள் எந்த நூல்களை சொல்லுகின்றீர்கள் என்று தெரியவில்லை என்றேன்.
சீவக சிந்தாமணி படித்திருக்கிறீர்களா? மணிமேகலை படித்திருக்கிறீர்களா? சிலப்பதிகாரம் படித்திருக்கிறீர்களா?
என்னுடைய ஆசிரியரே படித்ததில்லை. நான் கண்ணால் பார்த்ததில்லை.
சரி நான் புத்தகம் தருகிறேன் படித்து பாடம் சொல்லுவீர்களா என்று கேட்டார்.
நிச்சயமாக சொல்லுகிறேன் என்றேன்.
சிந்தாமணி பெற்ற வரலாற்றை இராமசாமி முதலியார் பின்வருமாறு சொல்கிறார்,
எனக்குச் சிந்தாமணி முதலிய பழைய புத்தகங்களை படிக்க வேண்டுமென்ற ஆவல் மிகுதியாக இருந்தது. நான் சந்தித்த வித்துவான்களில் ஒருவராவது அவற்றை படித்ததாகவே தெரியவில்லை. ஏட்டுச்சுவடிகளும் கிடைக்க வில்லை. ஸ்ரீ வைகுண்டத்தில் முன்சிப்பாக இருந்த என் நண்பர் ஏ. இராமசந்திர அய்யர் அவர்களிடம் சொல்லி வைத்திருந்தேன்.
ஒரு சமயம் ஸ்ரீ வைகுண்டத்துக்கு அருகில் உள்ள ஒரு ஊரில் பரம்பரை வித்துவான்களாக இருந்த கவிராயர் குடும்பமொன்றில் உதித்த ஒருவர் வழக்கில் சாட்சியாக வந்தார். அவரை விசாரிக்கும் போது அவர் கவிராயர் பரம்பரையைச் சேர்ந்தவர் என்றும், அவருடைய முன்னோர்கள் பல நூல்களை இயற்றியிருக்கிறார்கள் என்றும் என் நண்பருக்கு தெரியவந்தது.
விசாரணை முடிந்த பிறகு முன்சீப் அந்த சாட்சியை தனியாக அழைத்து அவர் வீட்டில் ஏட்டுச் சுவடிகள் இருக்கிறதா என்று விசாரித்தார். அவர் இருக்கின்றன என்று சொல்லவே, சிந்தாமணி பிரதி இருந்தால் தேடி எடுத்துத் தர வேண்டுமென்று கூறினார்.
அதிகாரப் பதிவியிலிருந்தமையால் அவர் முயற்சி பலித்தது. அந்தக் கவிராயர் சீவக சிந்தாமணிப் பிரதியை கொண்டு வந்து கொடுத்தார். அதற்கு முப்பத்தைந்து ரூபாய கொடுத்து வாங்கி எனக்கு அனுப்பினார் என்றார் இராமசாமி முதலியார்.
அதிகாரம்பதவியில் இருந்ததால் பலித்தது என்கிறார், இருந்தாலும் அந்தக் காலத்திலேயே நண்பருக்காக முப்பத்தைந்து ருபாய் கொடுத்து அந்த ஏட்டை வாங்கி அனுப்புகிறார் என்பதையயல்லாம் நாம் கவனத்தில் கொள்ள வேண்டிய செய்தியாகும்.
1887 இல் சிந்தமணியின் பதிப்பை வெளியிடுகிறார் உ.வே.சா.
No comments:
Post a Comment