Monday, December 23, 2019

சங்க கால தமிழக வரலாற்றில் சில பக்கங்கள் - மயிலை சீனி வேங்கடசாமி-4

சுப்பிரமணிய சாஸ்திரி, பரதநாட்டிய சாஸ்திரம் கி.மு.மூன்றாம் நூற்றாண்டுக்கு முற்பட்ட நூலென்றும், ஆகவே தொல்காப்பியம் கி.மு.இரண்டாம் நூற்றாண்டுக்கு முற்பட்ட நூலொன்றும் எழுதியுள்ளார். கீத் முதலிய சமஸ்கிருத ஆராய்ச்சியாளர்கள். பரத நாட்டிய சாஸ்திரம் கி.பி.மூன்றாம் நூற்றாண்டிற்கு முற்பட்டது அன்று என்று எழுதினார்கள்.

அதாவது பரத நாட்டிய சாஸ்திரம் கி.பி. 3 ஆம் நூற்றாண்டுக்குப் பிற்பட்ட நூல் என்று கூறினார்கள். வடமொழியறிந்த ஆராய்ச்சியாளர்களில் பெரும்பாலோர், பரத நாட்டிய சாஸ்திரம் கி.பி.4 ஆம் நூற்றாண்டில் எழுதப்பட்ட நூல் என்று ஒப்புக்கொண்டிருக்கிறார்கள். வையாபுரிப் பிள்ளையும் பரத நாட்டிய சாஸ்திரம் கி.பி.4 ஆம் நூற்றாண்டு நூல் என்பதை ஒப்புக் கொண்டிருக்கிறார். ஆனால், சமஸ்கிருத பக்தியும், சமஸ்கிருதத்திலிருந்துதான் மற்ற மொழிகளில் கருத்துகள் எடுக்கப்பட வேண்டும் என்னும் ‘பண்டித’ மனப்பான்மையும் கொண்டவரான படியினால், தொல்காப்பியம் கி.பி.5 ஆம் நூற்றாண்டிற்குப் பிறகு எழுதப்பட்டிருக்க வேண்டும் என்று கூறுகிறார்

‘(History of Tamil Language and Literature by S.Vaiyapuri Pillai, Madrass 1956)’.

இவர்களின் கூற்றை ஆராய்வோம்.

முதலில் சுப்பிரமணிய சாஸ்திரி கூறுவதை ஆராய்வோம். கீத் ஆசிரியர் பரத நாட்டிய சாஸ்திரம் கி.பி.3 ஆம் நூற்றாண்டுக்குப் பிற்பட்ட நூல் என்று கூறினார். வடமொழி அறிஞர்கள் பெரும்பாலோரும் பரத நாட்டிய சாஸ்திரம் கி.பி. 4 ஆம் நூற்றாண்டில் எழுதப்பட்டிருக்க வேண்டும் என்று கருதுகிறார்கள். வையாபுரிப் பிள்ளையும், அந்நூல் கி.பி.4 ஆம் நூற்றாண்டில் எழுதப்பட்டதென்பதைத்தான் ஒப்புக் கொண்டிருக்கிறார். ஆனால், சாஸ்திரி, கி.மு. 3 ஆம் நூற்றாண்டுக்கு முன்பு பரத சாஸ்திரம் எழுதப்பட்டது என்று தகுந்த சான்று காட்டாமல் கூறுகிறார்.

மேலும், தொல்காப்பிய மெய்ப்பாட்டியல் சூத்திரக் கருத்துகள் பரத நாட்டிய சாஸ்திரத்தில் காணப்படுவதால், கி.மு.2 ஆம் நூற்றாண்டுக்கு முற்பட்ட தொல்காப்பியத்துக்கு முன்பு பரத சாஸ்திரம் எழுதப்பட்டிருக்க வேண்டும் என்று கூறுகிறார். இது ஒரு சான்றாகுமா? தொல்காப்பிய மெய்ப்பாட்டியல் சூத்திரங்கள் பரத சாஸ்திரத்தில் காணப்படுவதனாலே, பரத சாஸ்திரம் தொல்காப்பியத்திற்குப் பிற்பட்ட நூல் என்று கூறுவது பொருந்தும் அல்லவா?

ஆனால், இப்படி எல்லாம் மனம் போனபடிக் கூறுவது ஆராய்ச்சியாகுமா? பரத நாட்டிய சாஸ்திரம் கி.பி. 4 ஆம் நூற்றாண்டு நூல் என்று பலரும் கருதுவதனால், சாஸ்திரி வெறும் யூகமாகக் கூறுவதை உண்மை என்று ஏற்றுக் கொள்ள முடியாது. கி.பி. 4 ஆம் நூற்றாண்டு நூலாகிய பரத சாஸ்திரத்திலிருந்து, அதற்குப் பல நூற்றாண்டுகளுக்கு முற்பட்ட நூலாகிய தொல்காப்பியம் கருத்துக்களை எடுத்திருக்க முடியாது. அதற்கு மாறாக, பல நூற்றாண்டுகளுக்கு முன்பு எழுதப்பட்ட தொல்காப்பியத்திலிருந்து பிற்காலத்து (கி.பி. 4 ஆம் நூற்றாண்டு) நூலாகிய பரத நாட்டிய சாஸ்திரம் சில கருத்துக்களை (மெய்ப்பாட்டுச் சூத்திரங்களை) எடுத்திருக்கக்கூடும் என்பது பொருத்தமானது.

இனி வையாபுரியார் கூற்றை ஆராய்வோம். இவர், பரத நாட்டிய சாஸ்திரம் கி.பி. 4 ஆம் நூற்றாண்டில் எழுதப்பட்டது என்பதை ஒபபுக் கொண்டு, தொல்காப்பியத்தில் மெய்ப்பாட்டியல் சூத்திரங்கள் பரத நாட்டிய சாஸ்திரச் சூத்திரங்களுடன் பொருந்தியிருப்பதனால், தொல்காப்பிய மெய்ப்பாட்டியல் சூத்திரங்கள் பரத நாட்டிய சாஸ்திரத்திலிருந்து எடுக்கப்பட்டிருக்க வேண்டும். ஆகவே, தொல்காப்பியம் கி.பி. 5 ஆம் நூற்றாண்டில் எழுதப்பட்டிருக்க வேணடும் என்று கூறுகிறார். ஏன், அப்படித்தான் இருக்க வேண்டும் என்பதற்குக் காரணமோ சான்றோ காட்டவில்லை.

கடைச் சங்க காலம் கி.பி. 2 ஆம் நூற்றாண்டுக்கு முற்பட்ட காலம் என்பதும், எட்டுத் தொகையில் தொகுக்கப்பட்டுள்ள செய்யுட்கள் எல்லாம் அப்புலவர்களால் அக்காலத்தில் பாடப்பட்டவை என்பதும் எல்லோரும் அறிந்ததே. கடைச் சங்க காலப் புலவர்களுக்கு இலக்கணமாக இருந்தது தொல்காப்பியம் என்பதும் எல்லோருக்கும் உடன்பாடே.

வையாபுரியார் கூறுவதுபோல, தொல்காப்பியம கி.பி.5 ஆம் நூற்றாண்டில் எழுதப்பட்டிருந்தால் அது எப்படி கடைச் சங்கப் புலவருக்கு இலக்கணமாக இருந்திருக்கக் கூடும்? ஆகவே,  வையாபுரியார் கூற்று ஏற்கத்தக்கதன்று. தொல்காப்பியம் கடைச் சங்க காலத்துக்கு முன்பு எழுதப்பட்டிருக்க வேண்டுமென்பது தெளிவாகிறது. கடைச் சங்க காலத்திற்கு முன்பு இரண்டாம் சங்கத்தில் தொல்காப்பியம் எழுதப்பட்டது என்றுதான் பழைய வரலாறு கூறுகின்றது.

மேலும், கடைச் சங்க நூல்களில் தொல்காப்பிய இலக்கணத்துக்கு மாறுபட்ட சொற்களும் காணப்படுகின்றன. (சங்கு, சட்டி, யூபம், யவனர் முதலியன). வழக்கத்தில் உள்ளதும் பழைய இலக்கணத்துக்கு மாறுபட்டதுமான சொற்களை அப்புலவர்கள் தங்கள் செய்யுட்களில் வழங்கியிருக்கிறார்கள். அப்படி வழங்க வேண்டுமானால், தொல்காப்பிய விலக்கணம் எழுதப்பட்ட நெடுங்காலத்துக்குப் பிறகுதான் அப்புதிய சொற்கள் வழக்கத்தில் வந்திருக்க வேண்டும். அதிலும் பழங்காலத்தில் இலக்கண வரம்புக்கு மாறுபட்ட சொற்கள் புதிதாக வந்து வழங்குவதற்கு நெடுங்காலம் சென்றிருக்க வேண்டும்.

 எனவே, தொல்காப்பியம் எழுதப்பட்ட பல நூற்றாண்டுகளுக்குப் பிறகுதான் அவ்விலக்கணத்துக்கு முரண்பட்ட புதிய சொற்கள் வழங்கப்பட்டிருக்க வேண்டும். ஆகையால் கி.பி.2 ஆம் நூற்றாண்டுக்குப் பல நூற்றாண்டுகளுக்கு முன்பு தொல்காப்பியம் எழுதப்பட்டிருக்க வேண்டும் என்பது தெரிகின்றது. எனவே, இதனாலும் வையாபுரியார் கூறும் கூற்று ஏற்கத்தக்கதன்று என்பது நன்கு விளங்குகின்றது.
......
நாடக மேடையில் அமைக்கப்படுகிற திரைக்கு எழினி என்பது பெயர். இந்த எழினி ஒருமுக எழினி, பொருமுக எழினி, கரந்துவரல் எழினி என்று மூன்று வகைப்படும். இந்தத் தமிழ் எழினியைச் சமஸ்கிருத நாடக நூலோர் ஏற்றுக் கொண்டார்கள். ஆனால், எழினியைச் சரியாக உச்சரிக்கத் தெரியாமல், எவினி, எவனி என்று கூறிக் கடைசியில் யவனிகா என்று அமைத்துக் கொண்டனர். இவ்வாறு, எழினி என்னும் தமிழ்ச் சொல் யவனிகா என்றாயிற்று என்பதை அறியாமல், அது யவன என்னும் சொல்லிலிருந்து தோன்றிற்று என்று கூறுகிறார்கள். (பக்.44)
......
கோவலனும் மாதவியும் கடல் நீராடக் கடற்கரைக்குச் சென்றவர் மணற்பரப்பிலே புன்னைமர நிழலிலே ஓவியம் எழுதப்பட்ட திரைகளினால் அமைக்கப்பட்ட விடுதியிலே தங்கியிருந்தனர் என்று சிலப்பதிகாரம் கூறுகிறது.

கடற்புலவு கடிந்த மற்பூந் தாழைச்
சிறைசெய் வேலி அகவையின் ஆங்கோர்
புன்னை நிழல் புதுமணற் பரப்பில்
ஓவிய எழினி சூழவுடன் போக்கி
விதானித்துப் படுத்த எண்கால் அமளிமிசை
கோவலனும் மாதவியும் இருந்தனர் என்று சிலம்பு (கடலோடு காதை 166-170) கூறுவது காண்க. (ஓவிய எழுனி -சித்திரப் பணி எழுதின திரை. அரும்பதவுரை)

No comments:

Post a Comment