முனைவர் க.தமிழமல்லன்
சிறப்பாசிரியர், வெல்லும் தூய தமிழ்
பகுத்தறிவும் இனவுணர்வும் தமிழ் உணர்வும் தன்மான உணர்வும் நிரம்பிய இளைஞர் நண்பர் க. விநாயகம்,
‘பெரியார் பார்வை’ எனும் தாளிகையை மிகுந்த அக்கறையுடனும் ஆர்வத்துடனும் வெளியிட்டு வருகிறார். அத்தாளிகைகளையெல்லாம் தொகுத்து நூலாக வெளியிடு கிறார். அவருடைய முயற்சி வெற்றிபெற அன்புடன் வாழ்த்துகிறேன்.
இத்தொகுப்பில் தந்தை பெரியாரின் மொழிபற்றிய கருத்துகள் கவனத்தை ஈர்க்கின்றன. அவரின் உணர்ச்சிவயப்பட்ட கருத்தை வைத்துக் கொண்டு தமிழுக்குச் சார்பாகப் பேசுவதுபோலப் பெரியாரைப் பழிக்கும் இனப்பகைவர்களுக்குச் சரியான அடிகொடுக் கும் வகையில் அக்கட்டுரை அமைந்துள்ளது. ‘விடுதலை’, ‘குடிஅரசு’,‘உண்மை’ என்று அவர் தொடங்கிய இதழ்களுக்குத் தனித்தமிழில் பெயர் வைத்த பெருமைக்குரிய பெரியாரைப் போற்றும் பண்பு நமக்கு வேண்டும். அவர் வழிவந்தவர்களே மாறாக நடக்கும் காலம் இது. அதை மாற்றும் முயற்சியில் இத்தொகுப்பு ஓரளவு பயன்படும்.
தனித்தமிழ் தந்தை மறைமலையடிகள் மொழி ஞhயிறு தேவநேயப் பாவாணர் ஆகிய அறிஞர்கள் பற்றிய கட்டுரைகள் மிகவும் பயனு டையவை. மறைமலையடிகள் தனித்தமிழ் இயக்கம் தொடங்கிய சூழலும் பெரியார் அடிகளாரைப் போற்றியதும் இதில் கூறப்பட்டுள்ளன. தந்தை பெரியார் தன்மதிப்பு இயக்கம் தொடங்குவதற்கு மறைமலையடிகளின் ஆராய்ச்சியே அடிப்படையாய் இருந்தது. ‘பண்டைக் காலத் தமிழரும் ஆரியரும்’ எனும் மறைமலையடிகளாரின் நூலை வைத்துக் கொண்டே ஒவ்வொரு கூட்டத்திலும் பெரியார் பேசுவதை வழக்கமாகக் கொண்டிருந்தார். மறைமலையடிகளார் மகளான நீலாம்பிகையம்மையார் தலைமையில் நடந்த மகளிர் மாநாட்டில்தான் ‘பெரியார்’ எனும் பட்டமே தரப்பட்டது என்பது வரலாறு. பெரியார் இயக்கமும் மறைமலை யடிகளின் இயக்கமும் வடஆரிய அடிமைத்தளையிலிருந்து தமிழனத் தைக் காப்பாற்றின. அவர்களின் கருத்துக்களின் அடிப்படைகளைக் கொண்ட மரபு தொடர்ந்து தழைத்து வருகிறது. அது வெல்லும்.
இனமொழி எழுச்சியின் தொடர்ச்சியாக இக்காலத்தில் பாவாணர் நூற்றாண்டு விழா வந்து நிறைந்துள்ளது. தேவநேயப் பாவாணர் மறைமலையடிகளின் பாதையில் ஆய்வு செய்தவர் மொழிஞhயிறு. அவருடைய ஆய்வுகள் மறைமலையடிகளின் கொள்கைகளை வலிமைப்படுத்தின. பெரியாரின் இயக்கத்துக்கு அரணாயிருந்தன. வட மொழி பற்றியும் வடவாரியப் பார்ப்பனர்களைப் பற்றியும் பாவாணர் போல் வலிமையான கருத்துகளைச் சொன்னவர் யாருமிலர் எனலாம். ‘வடமொழியே தமிழுக்கு மூலம்’ எனும் தலை கீழ்க் கருத்தை வளர்த் திருந்தனர் பகைவர். பகையை உடைத்தெறிந்தன பாவாணர் கருத்துகள். ‘வடமொழிக்கு மூலம் தமிழே’ என உரைத்தவர் அவர். வடமொழிக்குப் பெருமைதரும் அடிப்படையான ‘தத்துவ மசி’ முதலிய கருத்துக்களைத் தமிழாய் அடியாளங்காட்டிய பாவாணரால் தமிழ் மீட்கப்பட்டது. அவர் நூற்றாண்டில் அவரின் வாழ்க்கைக்குறிப்பை வெளியிட்டிருப்பது சிறப்பு. பாவாணரைப் பற்றித் தெரியாத புதியவர்களுக்கு அறிமுகம் செய்வதாக இக்கட்டுரை அமைந்துள்ளது.
பாரதியாரைப் பற்றி மிகச் சிலரே உண்மைகளைக் கூறியிருக் கின்றனர். அவரைப் பற்றிய தவறான கருத்துகளே பெருமைப்படும் அளவுக்கு மிகையாகப் பரப்பப் பட்டுள்ளன. வடமொழியைப் பற்றிய அவருடைய ‘பெருமிதக்’ கருத்து பரவலாக அறியப்படாதது போலவே அவரின் வறுமை, காந்தியைப் பார்த்தது போன்ற செய்திகளும் பரப்பப் பட்டுள்ளன.
பெரியார் பார்வை வெளியிட்டுள்ள ‘உண்மைப் பாரதி யார்’ எனும் பாவேந்தர் உரையும் ‘பாரதி காந்தியைச் சந்தித்தாரா?’ எனும் கட்டுரையும் அன்பர்களுக்கு மாறுபட்டக்கருத்துகளைச் சிந்தனையைத் தூண்டும் வகையில் வழங்குகின்றன.
நண்பர் க. விநாயகம் கொள்கைப் பற்றுடன் செய்து வரும் பணிகள் பொருள் ஆசையுடையவையல்ல. பொருளை எதிர்பாராமல் இலவயமா கவே ‘பெரியார் பார்வை’ யை வழங்கி வந்துள்ளார்.
அவர் தன் சொந்த முயற்சியில் எழுந்த படைப்புகளையும் வருங் காலங்களில் நூலாக்க வேண்டும். இதனை நூலாக்குங்கால் உரிய சான்றுகள் தரப்பட்டு இடம் பெற்றுள்ள பிற மொழிச் சொற்கள் நீங்கப் பெற்று பிழைகள் சில களையப் பெற்று வருமானால் அறிவுலகத்துக்கு நன்மையாய் அமையும்.
க. விநாயகத்தின் துணிவான பணிகள் தொடர்ந்து பெருக வேண்டும். அவரின் ஆற்றலால் பல புதிய பணிகளைச் செய்ய இயலும். அவற்றில் ஈடுபட்டு வெல்க என அன்புடன் வாழ்த்துகிறேன்.
மேழம், 5, 2033
18.4.2002
No comments:
Post a Comment