பத்திரிகையாளர் பாரதியார்
பாரதியார் சங்கத்தின் சார்பில் சென்னை அண்ணா சாலை யிலுள்ள ராணி சீதை மன்றத்தில்
11.9.89 அன்று நடைபெற்ற பாரதியார் விழாவில் திரு.பெ.சு.மணி அவர்கள் பாரதி பற்றி எழுதிய இரு நூல்களை வெளியிட்டு தி.வ. மெய்கண்டார் நிகழ்த்திய உரையின் தொடர்ச்சி....
பெ.சு. மணி அவர்கள் பாரதி அறிஞர் ரா.அ. பத்மநாபன் அவர் களைப் போலவே பாரதி அறிஞராக விளங்குகிறார்.
பெ.மணி இதுவரை, பாரதியாரும் இராமகிருஷ்ணர் இயக்கமும், பாரதியாரும் சமூக சீர்திருத்தமும், பாரதியாரும் தமிழ்ப் புலவர்களும், பாரதியாரின் வேத ரிஷிகள் கவிதை, அறிஞர்கள் பார்வையில் பாரதியார், பாரதி புகழ் பரப்பிய முன்னோடிகள், பாரதி புகழ் பரப்பும் ம.பொ.சி. ஆகிய ஏழு நூல் களைப் பாரதியார் தொடர்பாக எழுதியுள்ளார். இப்போது வரும் இரண்டு நூல்களும் சேர்ந்து ஒன்பது நூல்களாகிறது.
அவர் 1973 முதல் இதுவரை 20 நூல்கள் எழுதியுள்ளார். இருபது நூல்களில் 9
நூல்கள் பாரதியாரைப் பற்றி அமைந்துள்ளன. பெ.சு. மணிக்கு பாரதியாரிடம் உள்ள இயற்கையான ஈடுபாட்டினை இதன் மூலம் உணரலாம்.
பெ.சு. மணி அவர்கள்
1973 முதல் இது வரை மொத்தம்
20 நூல்கள் எழுதியுள்ளார்கள்.
கடுமையாக உழைத்து ‘இந்திய தேசீயத்தின் தோற்றமும் வளர்ச்சியும்’ என்னும் நூலை
494 பக்கங்களில் 1973 இல் எழுதினார். இந்நூல் மணியின் ஆய்வுத் திறனை அறிஞர் உலகுக்கு உணர்த்திற்று.
‘சங்க கால அவ்வை யாரும் உலகப் பெண் பாற் புலவர்களும்’ என்னும் விரிவான நூலை 1977 இல் எழுதினார். இதுவும் அறிஞர்களின் பாரட்டுதலைப் பெற்றது.
அவையோர்களே! பாரதியார் ‘நமக்குத் தொழில் கவிதை’ என்கிறார். அது உண்மைதான். ஆனாலும் அவரிடம் அதற்கு இணையாகவே அமைந்திருந்த ஆற்றல் அவர் ஒரு பத்திரிகையாளர் என்பதுதான். ஓரிடத்தில் ‘பத்திரிகைத் தொழில் நடத்தும் நமக்கு’ என்று மகாகவி பாரதியார் குறிப்பிட்டதை பெ.மணி தம் முன்னுரை யில் எடுத்துக் காட்டுகிறார். பத்திரிகைத் தொழிலில் பாரதியார் பெற்றிருந்த ஏற்றத்தைக் கொண்டே பரலி சு.நெல்லையப்பர் 1915 இல் தமக்குத் தேவைப்பட்ட நற்சான்றை அவரிடமிருந்து பெற்றார் என்கிறார்.
பாரதியினுடைய முதல் படைப்பு நமக்குக் கிடைப்பினவற்றுள் 1897 இல் தம்முடைய 15 வது வயது கூட நிறைவு பெறாத நாளில் எட்டையபுரம் மன்னனுக்கு எழுதிய சீட்டிக்கவி என்று அறிகிறோம். அதற்குப் பிறகுதான் அவருடைய ‘தனிமை இரக்கம்’ என்னும் கவிதை 1902 இல் ‘ஞானபாநு’ இதழில் வெளிவந்தது.
பாரதியாரின் தம்பி விசுவநாதன் அவர்கள் கூற்றுப்படி,
எட்டயபுரம் சமஸ்தானத்தில் உத்தியோகம் பார்த்துக் கொண்டிருந்த பாரதியார், திருநெல்வேலி ‘ஸர்வ ஜனமித்திரன்’ இதழில் ‘பணக்காரர்கள் அட்டூழியங்கள்’ குறித்துப் பொதுவாக எழுதிய கட்டுரையின் காரணமாகவே மனமார்ச்சரியம் ஏற்பட்டு ஜமீன்தார் ஆதரவை இழந்தார் என அறிகிறோம். பாரதி ஜமீன் தாரை மனத்தில் வைத்துக் கொண்டுதான் அப்படி எழுதியதாக சிலர் ஜமீன்தாரிடம் ‘வத்தி’ வைத்துவிட்டார்கள்.
வாழ்க்கையில் பாரதியாருக்கு ஏற்பட்ட முதல் தாக்குதல் அவருடைய பத்திரிகையில் வெளிவந்தத எழுத்துக்களால் என அறியலாம். இதுவே பின்னாளில் பத்திரிகையால் ஏற்பட்ட பல தாக்குதல்களுக்கு முன்னோடியாகத் திகழ்ந்தது. ‘ஸர்வஜன மித்திரனி’ல் கட்டுரை எழுதியதன் விளைவாக பாரதியார் ஊரை விட்டுப் புறப்பட்டார். மதுரை சேதுபதி பள்ளியில் 3
மாத காலம் தமிழாசிரியராகப் பணியாற்றினார்.
பின்னர் 1904 இல் மதுரை வந்து சுதேசமித்திரன் அதிபர் சுப்பிரமணிய அய்யர், அவரை சென்னைக்கு அழைத்துச் சென்று சுதேசமித்திரனில் துணை ஆசிரியராகச் சேர்த்துக் கொண்டார். சிலர் அவராகவே போய் மித்திரனில் சேர்ந்து கொண்டார் என்றும் சொல்கிறார்கள். பாரதியார் 1904 இல் சுதேசமித்திரனிலே சேருகிறார். 1905 இல் அதில் பணியாற்றிக் கொண்டே ‘மாதர் குல அபிவிருத்திக்காக’- பெண்கள் முன்னேற்றத்துக்காக- ‘சக்கரவர்த்தினி’ என்னும் இதழை நடத்துகிறார். 1906 இல் மித்திரனை விட்டு விலகும் முன்பே ‘இந்தியா’ பத்திரிகையின் ஆசிரியராக விளங்குகிறார்.
1907 இல் ‘பால பாரதா’ ஆங்கில இதழின் ஆசிரியராகிறார்.
பிறகு பிரிட்டிஷ் இந்தியாவிலே இருந்து பிரெஞ்சு இந்தியாவைச் சேர்ந்த பாண்டிச்சேரிக்குச் செல்ல வேண்டிய கட்டாயம் அவருக்கு ஏற்படுகிறது. புதுவையிலே
1908 முதல் 1918 வரை பாரதி வாழ்ந்தார். புதுவைக்குப் பாரதியார் சென்றதும் இந்தியா, விஜயா நாளிதழ், சூரியோதயம், கர்ம யோகி, தர்மம், சித்திரபாநு என்னும் படங்களுடன் கூடிய பத்திரிகை ஆகிய இதழ்களில் ஆசிரியராகப் பணியாற்றுகிறார். எண்ணற்ற படைப்புகளை எழுதிக் குவிக்கிறார். 1913-1915 இல் சுப்பிரமணிய சிவாவின் ‘ஞானபாநு’ இதழில் எழுதுகிறார்.
1918-இக்குப் பிறகு பிரெஞ்சு இந்தியாவிலிருந்து மீண்டும் பிரிட்டிஷ் இந்தியாவுக்கு வருகிறார். தம் சொந்த ஊருக்குச் செல்கிறார்.
இத்தனை பத்திரிகைகளையும் நடத்தி திருப்தியின்றி எண்ணற்ற துன்பங்களை அடைந்த நிலையில் மேலும் அவர் பத்திரிகை நடத்த வேண்டும் என்ற துடிப்புடன் விளங்குகிறார். நாட்டு மக்களை விடுதலைப் போருக்குத் தயாரிக்க வேண்டும் என்ற எண்ணம் தான் இதற்குக் காரணம்.
‘அமிர்தம்’ என்னும் பெயரில் புதியதொரு பத்திரிகையை அவர் தொடங்க விரும்பினார். அவர் மறைவதற்கு ஓராண்டுக்கு முன்பு 1920 ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 6
ஆம் நாள் அவருடைய நண்பர் ஸ்ரீநிவாச வரதனுக்குக் கடிதம் எழுதுகிறார்.
அதிலே ‘இங்கு நான் ‘அமிர்தம்’ என்ற பத்திரிகையைத் தொடங்க இருக்கிறேன். செப்டம்பர் மாதம் முதல் தேதி முதல் ஆரம்பம். (சுதேசமித்திரன் 1920 ஆகஸ்ட் 2 திங்கட்கிழமை
10 பக்கத்தில் விளம்பரத்தைக் காண்க)’.
‘மேற்படி பத்திரிகையையே உபயோகப்படுத்தி- இயன்றவரை, சந்தாக்கள், நன்கொடை, கடன், பணம்- தங்கள் கையிலுள்ள பொருள் -
எல்லாவற்றையும் சேர்த்துக் கொண்டு இங்கு தயவு செய்து இக்கடிதங்கண்ட இரண்டு, மூன்று தினங்களில் புறப்பட்டு வந்து சேர வேண்டும். உங்களுக்கு எனது பத்திரிகை ஆபிசில் ஒரு உத்தியோகம் கொடுக்கலாம் என்ற எண்ணம் வைத்திருக்கிறேன். ஆதலால் சீக்கிரம் வந்து சேருங்கள். இயன்றவரை பணத்துடன் வாருங்கள்’.
ஸ்ரீனிவாச வரதனும், அவருடய துணைவியார் பத்மாசினி அம்மாளும் நாட்டுக்காக ஏற்கனவே தம்முடைய சொத்துக்களை யெல்லாம் இழந்தவர்கள். ஸ்ரீனிவாச வரதன் பாரதியாரை இதற்கு முன் அவருடைய ஊரிலே வந்து பார்த்த போது பாரதியார் தாம் எழுதிய படைப்புகளை வைப்பதற்கு டிரங்குப் பெட்டி- தகரப் பெட்டி கூட இல்லாத நிலையில் சாக்கு மூட்டையில் கட்டி வைத்திருந்ததாகக் குறிப்பிடுகிறார். இத்தகைய கடினமான சூழ்நிலையில்தான் பாரதியார் பத்திரிகை நடத்த விரும்புகிறார்.
மீண்டும் 20 நாள் கழித்து ஆகஸ்ட்
26 இல் அந்த நண்பருக்கு ‘சொத்தை விற்றேனும் கொண்டுவரக்கூடிய தொகையைக் கொண்டு இவ்விடத்திற்கு உடனே வந்து சேரும்படி பிரார்திக் கிறேன்’ என்று எழுதுகிறார்.
இப்படி பத்திரிகையில் எழுதிய கட்டுரைக்காக நாடு கடத்தப் பட்டவரைப் போல் சொந்த ஊரை விட்டுப் புறப்பட்டு சென்னை யில் பல பத்திரிகைகளில் பணியாற்றி அதில் வெளிவந்த கருத்துக் களின் காரணமாக சென்னையிலிருந்து தம்மைத் தாமே நாடு கடத்திக் கொண்டு புதுவையில் சொல்லொணாத துன்பங்கள் பலவற்றை ஏற்று, வாழ்ந்து மீண்டும் தாயகம் திரும்பி, இறக்கும் தருவாயிலும் அடுத்துவரும் சுதேசமித்திரன் இதழுக்கான கட்டுரையைச் சிந்தித்துக் கொண்டிருந்த ஒருவரை, பத்திரிகை யாளர் என்று சொல்லாமல் வேறு என்ன சொல்லி அழைப்பது?
‘கவிஞர்’ என்று அவர் நாட்டிலே பெற்றிருந்த பெயர்தான் அவர் பத்திரிகையாளர் என்ற புகழை மறைத்துவிட்டது. இந்த மேடை யிலே அய்யா சிலம்புச் செல்வரவர்கள் வீற்றிருக்கிறார்கள். அவர்கள் ‘செங்கோல்’ என்னும் வார இதழை ‘இரகசியமாக’ நடத்தி வருகிறார்கள். அந்த இதழ் கடந்த 40 ஆண்டுகளாக நடந்து வருகிறது.
அந்த இதழைப் பற்றிச் சொல்லும் போது அய்யா அவர்கள் அப்படித்தான் சொல்வார்கள். அதையும்கூட கல்கி அப்படி சொன்னதாகச் சொல்வார்கள். அந்த இதழ் வருவது பல பேருக்குத் தெரியாது, அய்யா அவர்கள் அதனை இரகசியமாக நடத்தினாலும் அது இரகசியமாகப் படிக்கப்பட வேண்டிய பத்திரிகையல்ல என்பதைத் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.
சிலம்புச்செல்வர் என்று அய்யா நாட்டிலே பெற்றிருக்கிற புகழ் அவர் செங்கோல் ஆசிரியர் என்பதை மறைத்துவிட்டது. அது போன்று கவிஞர் என்று பாரதியார் நாட்டிலே பெற்று இருந்த புகழ்தான் அவர் பத்திரிகையாளர் என்ற உண்மையை மறைத்து விட்டது. மகாகவி பாரதியார் 18 ஆண்டுகாலம் பத்திரிகை யாளராகவே வாழ்ந்தார்.
No comments:
Post a Comment