Monday, September 6, 2021

சுதேசி கப்பல் நிறுவனத்தை வ.உ.சி. உருவாக்கியது எப்படி?

 

சுதேசி கப்பல் நிறுவனத்தை வ.உ.சி உருவாக்கியது எப்படி?

தற்சார்பு பொருளாதாரத்தை உருவாக்குவதன் ஒரு மாதிரியாக சுதேசி கப்பல் நிறுவனத்தை வ.உ.சி உருவாக்கியதன் பின்னணி வரலாறு.
வ.உ.சிதம்பரனார் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு எழுதப்பட்ட சிறப்பு பதிவு – Madras Radicals

கப்பலோட்டிய தமிழன் என்று பெருமையுடன் நினைவுகூறப்படக் கூடிய வ.உ.சிதம்பரனார், அவரது காலத்தில் கப்பல் என்பது வணிகத்தின் அச்சாணியாக இருந்தது என்பதைக் கண்டடைந்தார். பிரிட்டிஷ் ஆதிக்கவாதிகளின் பெரும் வணிகம் இந்த கப்பலின் என்பதை அறிந்த வ.உ.சி சுதேசி கப்பல் என்பதை தற்சார்பு பொருளாதாரத்தின் வடிவமாகவே முன்னெடுத்தார்.

வ.உ.சி-க்கு முந்தைய இந்திய கப்பல் கம்பெனிகள்

அன்றைய தூத்துக்குடியிலிருந்து கொழும்புவிற்கு தினமும் பிரிட்டிஷ் இந்தியா ஸ்டீம் நேவிகேசன் கம்பெனியின் கப்பல்கள் சென்று கொண்டிருந்தது. சில இந்தியர்களும் கப்பல் நடத்திக் கொண்டிருந்தனர். 1884-ம் ஆண்டு கொல்கத்தாவில் ஜானகி நாத் உள்நாட்டு நதிப் போக்குவரத்து நாவாய் சங்கத்தைத் தொடங்கினார். அவருக்கு சொந்தமாக சரோஜினி, பாக்யலட்சுமி, ஸ்வதேசி, பாரத், லார்டரிப்பன் எனும் ஐந்து கப்பல்கள் இயங்கியது.

பிரிட்டிஷ் கப்பல் கம்பெனியின் பல்வேறு சதிகளுக்கு, அரசின் ஆதரவு இருந்தாதல் சுதேசிக் கப்பல் கம்பெனியின் முதல் முயற்சி முறியடிக்கப்பட்டது. அடுத்து 1897-ல் கிழக்கு வங்க நதிப் போக்குவரத்து கப்பல் கம்பெனி தோன்றியது. 1906 முதல் 1908 வரையிலான ஆண்டுகளில் இது வீறுபெற்று நடந்தாலும், பிரிட்டிஷ் கப்பல் கம்பெனியின் சதியினால் வீழ்த்தப்பட்டது.

தனுஷ்கோடி ராசு என்ற இந்திய கிறித்துவப் பணக்காரர் பொதுமக்கள் நலனுக்காக 1890-ம் ஆண்டு பிரிட்டிஷ் கப்பலுக்கு எதிராக தமிழ்நாட்டில் கப்பல் விட்டார்.

பிரிட்டிஷ் கடல் ஏகாதிபத்தியத்தை எதிர்த்து ஆதங்குடி செட்டியார் குடும்பத்தினர் தமிழ்நாட்டுக்கும் ஆந்திராவிற்கும் இடையில் ந.மு கம்பெனி என்ற பெயரில் சரக்கு கப்பல் கம்பெனி நடத்தினர்.

அதேபோல நாகப்பட்டினத்திற்கும் காக்கிநாடாவிற்கும் இடையில் சி.வ கப்பல் கம்பெனி என்ற பெயரில் சி.வ.நல்லபெருமாள் பிள்ளையின் கப்பல் ஒன்று பிரிட்டிஷ் இந்தியா கம்பெனிக்கு எதிராக ஓடியது. இந்த கப்பல் கம்பெனியின் படகுகள் மீது தொடர்ச்சியாக தங்கள் கம்பெனியின் படகுகளை மோதவிட்டு நஷ்டம் ஏற்படுத்தும் வேலையை பிரிட்டிஷ் கப்பல் கம்பெனி செய்தது. இன்னும் பல இடைஞ்சல்கள் செய்து அந்த கம்பெனியை மூடினர்.

இந்த கம்பெனிகள் அனைத்தையும் பிரிட்டிஷ் அரசு ஒடுக்கிய விதங்களைப் பார்க்கும்போது, உள்நாட்டில் உள்ள அனைத்து தொழில் முயற்சிகளையும் பிரிட்டிஷ் ஏகாதிபத்தியம் ஒடுக்க நினைத்து செயல்பட்டது தெரியவருகிறது.

பிரிட்டிஷாரின் சதியை உடைத்து சுதேசி கப்பல் நிறுவனத்தை உருவாக்க முயன்ற வ.உ.சி

இவையனைத்தும் நாட்டு மக்களிடம் வெள்ளையர் மீதான வெறுப்பையும், கோபத்தையும் ஏற்படுத்தியது. தங்களுக்கென்று ஒரு தனி கப்பல் நிறுவனம் வேண்டும் என்று தமிழக வியாபாரிகள் நினைக்கத் துவங்கினர்.

இதனை வ.உ.சி,

”நமது சுதேசம் ஷேமத்தையடைந்து முன்னாளின் மேலான நிலைமைக்கு வருவதற்கு சகல தொழில்களிலும் வியாபரங்களிலும் மிக்க லாபத்தைக் கொடுப்பதான கப்பல் நடத்தும் தொழிலை நாம் கைக்கொள்வதே முக்கிய சாதனமாகும்”

என்று எழுதினார்.

கப்பல் நிறுவனம் மட்டுமல்ல பின்னாளில் சுதேசி நூல் ஆலைகள் உருவாக்கும் எண்ணமும் அவருக்கு இருந்தது. இவை அனைத்தும் பிரிட்டிஷாரை வெளியேற்றுவதற்கான வழிகள் என்றும் வ.உ.சி திட்டமிட்டிருந்தார்.

சுதேசிக் கப்பல் நிறுவனத்தின் பங்குகள் மற்றும் நிதி திரட்டல்

வீரபாண்டிய கட்டபொம்மன் நினைவு நாளான அக்டோபர் பத்தாம் நாள் 1906-ம் ஆண்டு சுதேசி கப்பல் நிறுவனம் பதிவு செய்யப்பட்டது. 25 ரூபாய் விலை வைத்து 40,000 பங்குகள் வழியாக பத்து லட்சம் ரூபாய் நிதி திரட்ட திட்டமிட்டனர். சென்னையில் அலுவலகம் எடுத்து கப்பல் நிறுவனம் இயங்கியது.

பாலவநத்தம் ஜமீன்தார் பாண்டித்துரை தேவர் 2000 பங்குகளை வாங்கினார். கே.வி.ராகவாச்சாரி, கந்தசாமி கவிராயர் என்று பலரும் தீவிரமாக பங்குகளைத் திரட்டினர். பம்பாயிலும் கல்கத்தாவிலும் பங்குகள் திரட்டப்பட்டன.

பம்பாய் பெரும் வணிகர் கே.ஜெ.முகம்மது பக்கீர் சேட், கப்பல் நிறுவனத்தின் 8000 பங்குகளை வாங்கினார். சுதேசி கப்பல் நிறுவனத்தின் முதலீட்டில் மூன்றில் ஒரு பங்கு இசுலாமியர்கள் கொடுத்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.

வ.உ.சி விடுத்த அறைகூவல்

பாண்டித்துரை தேவரை தலைவராகக் கொண்டு கப்பல் நிறுவனம் இயங்கத் தொடங்கியது. பிரிட்டிஷ் ஏகாதிபத்திய எதிர்ப்பை முதல் நோக்கமாகக் கொண்டு கூட்டுறவு முறையில் உருவாக்கப்பட்ட முதல் கப்பல் நிறுவனமான இது வ.உ.சி-யின் அரும்பெரும் முயற்சியில் விளைந்துதான்.

ஏனென்றால்
“நமது சுதேசத்தை அந்நிய நாட்டார் கைப்பற்றிக் கொள்வதற்கு ஏதுவாக இருந்ததும், நம் தேசத்து பொருட்களையெல்லாம் அந்நிய நாட்டான் கொண்டு போவதற்கு ஏதுவாய் இருந்ததும், நமக்கு மிக்க லாபத்தை தரக்கூடிய கைத்தொழில் வியாபாரம் எல்லாம் அந்நிய நாடுகளுக்குக் கொண்டுபோவதற்கு ஏதுவாக இருந்ததும், அன்னிய நாட்டார் நம் தேசத்தின் மீது பிரவேசித்து நாம் நீடித்த நாளாகக் கைக்கொண்டிருந்த கப்பல் தொழிலை நம்மிடமிருந்து கைப்பற்றிக் கொண்ட தொன்றே. ஆதலால் நாம் அதி சீக்கிரமாகவும், அதிகமாகவும் கைக்கொள்ளத் தக்கதும் கைக்கொள்ள வேண்டியதுமான தொழில் கப்பல்கள் நடத்துவதே”

என்று அறைகூவல் விடுத்து இந்த காரியத்தை செய்து முடித்தவர் அவரே.

துவக்கத்தில் வாடகைக்கு எடுக்கப்பட்ட கப்பல்

துவக்கத்தில் கப்பல் நிறுவனத்திற்கு சொந்தமாக கப்பல் இல்லை. ’ஷாலேன் ஸ்டீமர்ஸ் கம்பெனி’-யிடமிருந்து கப்பல்களை வாடகைக்கு எடுக்க வேண்டியதாக இருந்தது. சுதேசி கப்பல் நிறுவனத்தை ஆரம்பத்திலேயே ஒடுக்க நினைத்த ’பிரிட்டிஷ் இந்திய ஸ்டீம் நேவிகேஷன் கம்பெனி’யானது ’ஷாலேன் ஸ்டீமர்ஸ் கம்பெனி’யை வாடகைக்கு கப்பல் தரவிடாமல் தடுத்தது. அந்த நிறுவனம் கப்பல்களை வாடகைக்குக் கொடுக்கும் ஒப்பந்தத்தையும் ரத்து செய்தது.

சொந்த கப்பல்

உடனடியாக வ.உ.சி கொழும்பு சென்று வேறு ஒரு கப்பலை வாடகைக்கு எடுத்து வந்தார். ஆனாலும் சொந்தமாக கப்பல் வேண்டும் என்பதால் வ.உ.சி வட இந்தியாவிற்குப் பயணம் மேற்கொண்டார்.

“திரும்பினால் கப்பலுடன்தான் திரும்புவேன், இல்லையெனில் கடலில் விழுந்து மாண்டு போவேன்”, என்று சூளுரைத்துச் சென்றார் வ.உ.சி. அதன்பிறகு ’எஸ்.எஸ். காலியோ’ என்ற கப்பலுடன் திரும்பினார்.

மக்களிடையே வளர்ந்த சுதேசி கப்பல் நிறுவனத்தை தாக்கத் தொடங்கிய பிரிட்டிஷ் அரசு

சுதேசி கப்பல் நிறுவனம் மெதுமெதுவாக வளர்ந்தது. மக்கள் சுதேசிக் கப்பலிலேயே பயணம் செய்தனர். வணிகர்கள் தங்கள் சரக்குகளை சுதேசிக் கப்பலிலேயே அனுப்பினர். பிரிட்டிஷ் இந்திய கப்பல் நிறுவனம், சுதேசிக் கப்பலுடனான போட்டியை சமாளிக்க முடியாமல் கட்டணத்தைக் குறைக்க முடிவு செய்தது. கடைசியில் இலவசமாக அழைத்துச் செல்வதாகக் கூறியது.

அன்றைய பிரிட்டிஷ் அரசானது ’பிரிட்டிஷ் இந்தியா’ கப்பல் நிறுவனத்திற்கு ஆதரவாக மட்டுமல்ல, சுதேசி கப்பலுக்கு எதிராகவும் பல சதிகளில் ஈடுபட்டது. பிரிட்டிஷ் கப்பலில் மட்டுமே பயணம் செய்ய வேண்டும் என்று அரசு அதிகாரிகளுக்கு கடிதம் அனுப்பியது.

கடற்சுங்க அதிகாரிகள், சுகாதார முறைகளை மேற்கொள்ளும் டாக்டர்கள், துறைமுக அதிகாரிகள் அனைவரும் ஒட்டு மொத்தமாகவும், தனித்தனியாகவும் சுதேசிக் கப்பலில் பயணம் செய்யும் பயணிகளுக்கு பல வழிகளில் தொல்லைகளைக் கொடுத்து, அவர்களது பயணத்தில் தொடர்ந்து வெறுப்புணர்வை உருவாக்கி வந்தார்கள்.

கோரல் மில் தொழிலாளர்களின் போராட்டத்தின் போது, சுதேசிக் கப்பல் நிறுவனத்தில் புகுந்து கலெக்டர் ஆஷ் தாக்குதல் நடத்தினார். வ.உ.சி-யும் சிறையில் அடைக்கப்பட்டதால் கப்பல் நிறுவனம் மூடப்பட்டது. வ.உ.சி தனது சுயசரிதையில் தான் சிறைப்பட்டதற்கும், சுதேசி கப்பல் நலிவடைந்ததற்கும் கலெக்டர் ஆஷ் தான் காரணம் என்று பதிவு செய்துள்ளார்.

தற்சார்பு பொருளாதாரத்தின் மாதிரியாக சுதேசிக் கப்பல்

அந்நியத் துணி எதிர்ப்பு, அந்நியக் கப்பல் எதிர்ப்பு, தொழிலாளர் போராட்டம் என அனைத்து போராட்டங்களையும் தேச விடுதலை எனும் ஒரு இலக்கை நோக்கிய பயணமாக வ.உ.சி ஒருங்கிணைத்தார். எல்லா தொழில்களையும் தற்சார்பாக இந்தியர்கள் நடத்த வேண்டும் என்ற இலக்கின் துவக்கமாகத்தான் கப்பல் என்பதை வ.உ.சி பார்த்தார்.

”நமது தேசம் மற்ற தேசங்களைப் பார்க்கிலும் மேலான நிலைமைக்கு வருவதற்கு, நாம் இவ்வுலகில் காணும் துறைமுகங்களுக்கு எல்லாம் நமது சுதேசிக் கப்பல்கள் போகி வரும்படி இருக்கச் செய்ய வேண்டியது அவசியமாயிருக்கிறது. நாம் பல வருஷங்களாக இழந்துவிட்ட தொழில்களை எல்லாம் ஒவ்வொன்றாக மெல்ல மெல்ல கைக்கொள்ள வேண்டும்”

என்று சுதேசி கப்பலுக்கான அழைப்பிலேயே வ.உ.சி குறிப்பிட்டார்.

No comments:

Post a Comment