கோரல் மில் – வ.உ.சி நடத்திய ஆசியாவின் முதல் தொழிற்சங்கப் போராட்டம்
கப்பலோட்டிய தமிழர் வ.உ.சிதம்பரனார் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு எழுதப்பட்ட சிறப்பு பதிவு – Madras Radicals
இந்திய விடுதலைப் போராட்ட வரலாற்றில் மிக முக்கியமானது வ.உ.சி முன்னெடுத்த கோரல் மில் போராட்டம். ஆசியாவின் முதல் தொழிற்சங்கப் போராட்டம் என்று இதனைக் கூறலாம்.
இந்தியாவில் முதன்முதலாக பருத்தி நூல் ஆலைகளை பிரிட்டிஷ் அரசு 1851-ம் ஆண்டு துவங்கியது. 1879-ம் ஆண்டு 56 ஆலைகளாக இருந்த எண்ணிக்கை, 1894-ம் ஆண்டு 144 ஆகவும், 1903-ம் ஆண்டு 201 ஆகவும் வளர்ச்சி அடைந்திருந்தது.
ஃப்ராங்க்ளின் ஹார்வி என்பவர் 1885-ம் ஆண்டு திருநெல்வேலி மில்ஸ் பிரைவேட் லிமிடெட் எனும் நிறுவனத்தை துவங்கினார். பாபநாசத்தில் தாமிரபரணி ஆற்றில் கிடைக்கும் நீரைப் பயன்படுத்தி மின்சாரம் தயாரித்து, அதனைக் கொண்டு ஆலையை இயக்கும் திட்டத்துடன் பாபநாசம் அருகில் விக்ரமசிங்கபுரத்தில் ஆலையைத் துவங்கினார். பாபநாசத்தைத் தொடர்ந்து தூத்துக்குடியில் இதே நிர்வாகத்தால் 15 லட்சம் முதலீட்டில் கோரல் மில் என்ற இரண்டாவது ஆலை துவங்கப்பட்டது.
அடிமைகளாய் நடத்தப்பட்ட கோரல் மில் தொழிலாளர்கள்
கோரல் மில்லில் தொழிலாளர்கள் பெரும் கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டார்கள். வார விடுமுறை கிடையாது. உணவு இடைவேளை கிடையாது. வேலை உறுதி கிடையாது. உடல்நிலை காரணமாகவோ, வேறு காரணங்களாலோ விடுமுறை எடுத்தால் திரும்பி வேலைக்கு வருகிறபோது வேலை கொடுக்கப்பட மாட்டாது. வேலை நேரம் என்பது அதிகாலையில் கைரேகை தெரியும் அளவு வெளிச்சம் வரும்முன் வேலைக்குவந்து உள்ளங்கை ரேகை தெரியாத அளவிற்கு வெளிச்சம் மங்கிய பின்தான் செல்ல வேண்டும். தொழிலாளர்களின் சிறு தவறுகளுக்கும் பிரம்படி கொடுக்கப்படும். பிரிட்டிஷ் அதிகாரிகள் பார்வையிட வரும்போது அவர்களுக்கு முன் நடந்து சென்றால் கூட அடி விழும். கிட்டத்தட்ட கொத்தடிமைகளைப் போல தொழிலாளர்கள் நடத்தப்பட்டனர்.
தொழிலாளர்களை ஒருங்கிணைத்த வ.உ.சி, சுப்ரமணிய சிவா
கோரல் மில் தொழிலாளர்களுக்கு நடக்கும் கொடுமைகளுக்குத் தீர்வுகாண வ.உ.சி சிந்தித்துக் கொண்டிருந்தபோதே அவருக்கு சுப்ரமணிய சிவாவின் அறிமுகம் கிடைத்தது. தமிழ்நாடு முழுவதும் பயணித்து தேசபக்தி கருத்துக்களை பரப்பி வந்த சிவா 1908-ம் ஆண்டு பிப்ரவரியில் தூத்துக்குடி வந்து சேர்ந்தார். தேசபக்த இளைஞர் சங்கத்தின் சார்பில் தொடர் சொற்பொழிவுகளை நிகழ்த்தினார். அப்போது தூத்துக்குடியில் சுதேசி இயக்கத்தில் தீவிரமாக செயல்பட்டுக் கொண்டிருந்த வ.உ.சி அவர்கள், சிவாவை தன் வீட்டிலேயே தங்கவைத்து ஆங்கிலேய அரசுக்கு எதிரான கூட்டங்களை நடத்தினார்.
1908-ல் துவங்கிய கோரல் மில் தொழிலாளர் போராட்டம்
இருவரது தொடர் பரப்புரை தூத்துக்குடியில் உரிமைப் போருக்கான கனலை மூட்டியது. 1908-ம் ஆண்டு பிப்ரவரி 27-ம் தேதி வ.உ.சி தலைமையில் கோரல் மில் தோழிலாளர்கள் வேலை நிறுத்தத்தை தொடங்கினார்கள். இதில் 500-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் கலந்து கொண்டனர். இந்த போராட்டம் துவங்கியதுமே நெல்லையில் இருந்தும் சிவாகாசியில் இருந்தும் காவல்துறை தூத்துக்குடியில் குவிக்கப்பட்டது.
“இந்தப் பவளத் தொழிற்சாலையினர் இந்தியக் கூலியாட்களை கொடுமைப்படுத்தி வேலை வாங்கியது மட்டுமல்லாமல், மிகவும் கொடுமையாய் நடத்தி போதிய சம்பளம் தராமலும் செய்ததே இந்த போராட்டத்திற்குக் காரணம் என்று சுதேசமித்திரன் பத்திரிக்கை பதிவு செய்தது”
வேலை நிறுத்தத்தால் குடும்பங்கள் பல பட்டினியாகக் கிடந்தன. வ.உ.சிதம்பரனார் வழக்குரைஞர்கள், நண்பர்கள், வணிகர்கள் ஆகியோரின் உதவியால் பணம் திரட்டி, பட்டினி கிடக்கும் தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு பேருதவி புரிந்தார்.
வேலைநிறுத்தத்தில் ஈடுபட்ட இரண்டாயிரம் தொழிலாளர்களில் ஓராயிரம் பேருக்கு, துத்துக்குடி மக்களிடம் வேண்டிக் கேட்டு வேலைகளைப் பெற்றுத் தந்தார். வேலைநிறுத்தம் நடந்த எல்லா நாட்களிலும், தூத்துக்குடி நகரில் வெள்ளையர்களின் தொழிலாளர் விரோதப் போக்கினைக் கண்டித்து பொதுக்கூட்டங்கள் நடைபெறும். அக்கூட்டங்களில் வ.உ.சி புயல்போல சுழன்று சுழன்று வெள்ளையர்களது மனிதநேயமற்ற தன்மைகளைச் சாடுவார். தொழிலாளர்களது கோரிக்கைகளைப் பெறும் வரை முதலாளிகளுக்குப் பணியக் கூடாது என்பார். வ.உ.சியின் பேச்சுகள் தொழிலாளர்களின் ஊக்கத்தையும், உறுதியையும் அதிகப்படுத்துவனவாக அமைந்தன.
கோரல் மில் வேலைநிறுத்தம் தொடர்ந்து நடைபெற்றது. அதனால் மில் முதலாளிகள் வ.உ.சி மீது தீராக் கோபமடைந்தார்கள். வேலைநிறுத்தம் செய்வதற்குத் தூண்டிவிட்டவர் வ.உ.சி-தான் என்று அவர்மீது வழக்கு தொடுத்தார்கள். பொதுக்கூட்டங்களில் வ.உ.சி பேசினால் ஊரில் கலகம் ஏற்படும், அமைதி நாசமாகும் என்று சொல்லி அவர் பொதுக்கூட்டத்தில் பேசக் கூடாது என்று மாஜிஸ்திரேட் வ.உ.சியை நேரிடையாகவே அழைத்து எச்சரித்தார். மாஜிஸ்திரேட்டின் எச்சரிக்கையை வ.உ.சி மதிக்கவில்லை. அவர் தொடர்ந்து தொழிலாளர்களது கூட்டங்களில் பேசியே வந்தார்.
ஆங்கிலேயர்களுக்கு ஒத்துழைக்க மறுத்த மக்கள்
கோரல் மில் தொழிலாளர்களது வேலைநிறுத்தம் மதுரையில் உள்ள பஞ்சாலை தொழிலாளர்களுக்கும் சொல்லப்பட்டது. மதுரை தொழிலாளர்களும் தூத்துக்குடி தொழிலாளர்களுக்கு ஆதரவாக வேலைக்குப் போக மறுத்துவிட்டார்கள்.
தொடர் போராட்டங்களில் தூத்துக்குடியில் எல்லா தரப்பு மக்களும் பங்கெடுத்தனர். தூத்துக்குடி வியாபாரிகள் ஆங்கிலேயர்களுக்கு உணவுப் பொருட்களை விற்க மறுத்தார்கள். இலங்கையிலிருந்து உணவுப் பொருட்களை வரவழைக்க வேண்டிய நிலை அவர்களுக்கு ஏற்பட்டது. இந்திய வேலையாட்கள் வேலை செய்ய மறுத்தனர். தெருக்களில் அவர்களைக் கண்டால் சூழ்ந்து கொண்டு வந்தே மாதரம் என்று கூறும்படி மக்கள் கூட்டம் கட்டாயப்படுத்தியது. கிட்டத்தட்ட தூத்துக்குடியில் இருந்த பிரிட்டிஷ்காரர்கள் இரவு நேரங்களில் தங்கள் வீடுகளில் தங்க அச்சப்பட்டு, பிரிட்டிஷ் இந்திய கப்பல் கம்பெனியில் தங்கினர்.
முகச்சவரம் செய்ய மறுத்த சவரத் தொழிலாளர்கள்
வழக்குரைஞர் அரங்கசாமி என்பவர் மட்டும் போலீஸ் குவிப்பை ஆதரித்தார். அவரது மனோபாவத்தை ஊரார் வெறுத்தார்கள். ஒருநாள் அரங்கசாமி என்ற அந்த வழக்கறிஞர் முகசவரம் செய்து கொள்வதற்காக முடிதிருத்தும் தொழிலாளி ஒருவரை அழைத்தார்.
சவரம் செய்யவந்த தொழிலாளி வழக்கறிஞரைப் பார்த்து,
“நீங்கள் மட்டும் அதிக போலீஸ் படை வேண்டும் என்றீர்களாமே?” என்று கேட்டார்.
“அதுபற்றி உனக்கென்ன? அது உன் வேலையல்ல.” என்றார் வழக்கறிஞர்.
”அப்படியானால் உமக்கு சவரம் செய்வதும் என் வேலையல்ல” என்று கூறி, அரைகுறையாக செய்த முகசவரத்தோடு அப்படியே நிறுத்திவிட்டு அந்த தொழிலாளி விர்ரென்று சென்றுவிட்டார்.
அதுபோலவே வேறு தொழிலாளிகளும் அவருக்கு சவரம் செய்ய மறுத்து விட்டார்கள். அதற்குப் பிறகு வழக்கறிஞர் ரயில் ஏறி திருநெல்வேலி சென்று மீதியுள்ள அரைகுறை முகசவரத்தை செய்துகொண்டு வந்தார். பொதுமக்கள் வ.உ.சி மீதும், அவரது லட்சிய முடிவுகள் மீதும் அவ்வளவு ஆழமான பற்று வைத்திருந்தனர்.
தூத்துக்குடி வேலைநிறுத்தம் ஏழு நாட்கள் நீடித்தது. மில் முதலாளிகளான வெள்ளையர்கள் தொழிலாளர்களுக்குப் பணிந்தார்கள். கூலியை அரைப்பங்கு உயர்த்தித் தர முதலாளிகள் ஒப்புக் கொண்டார்கள். பிறகுதான் தொழிலாளர்கள் வேலைக்குச் சென்றார்கள்
ஏகாதிபத்திய எதிர்ப்பு போராட்டமாக வலுவடைந்த தொழிலாளர் போராட்டம்
போராட்டத்தில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்களின் குழந்தைகளை ஆங்கிலேய காவல்துறை கடத்திச் சென்று இந்திய கப்பல் கம்பெனியில் அடைத்து வைக்கும் கொடுமைகளையெல்லாம் செய்தார்கள்.
பொதுமக்களின் ஆதரவு பெருகப் பெருக இது ஆங்கிலேய ஏகாதிபத்தியத்திற்கு எதிரான போராட்டமாக வலுப்பெற்றது. தூத்துக்குடியில் வெள்ளையர்களின் வாகனங்கள் மக்களால் அடிக்கப்பட்டது.
இந்த தொழிலாளர் போராட்டம் என்பது பிரிட்டிஷ் அரசு, இந்திய தொழில்கள் மீதும் தொழிலாளர்கள் மீதும் கொண்டிருந்த சர்வாதிகாரப் போக்கிற்கு எதிரான போராட்டமாக வளர்ந்தது. ஆங்கிலேய ஆட்சியை அழிக்கும் நோக்கம் கொண்டதாக அதிகாரவர்க்கத்தினர் அஞ்சுவதாக சுதேசமித்திரன் பதிவு செய்தது.
தொழிலாளர் போராட்டமாக மட்டும் கருதாமல், இந்திய விடுதலை இயக்கத்தின் அங்கமாக சுதேசி இயக்கத்தில் தொழிலாளர் வர்க்கத்தை இணைக்கும் போராட்டமாக இதனை வளர்த்தெடுத்தவர் வ.உ.சி ஆவார்.
கலக்டர் ஆஷும், கோரல் மில் போராட்டமும்
அயர்லாந்தில் இருந்து 17-2-1908 அன்று திருநெல்வேலிக்கு வந்த ஆஷ் (துரை) சேரன்மகாதேவி தலைமை உதவி கலெக்டராகப் பதவி ஏற்றார். அவரிடம் தூத்துக்குடிக்கான கூடுதல் பொறுப்பு கொடுக்கப்பட்டது. தூத்துக்குடியில் சப் கலெக்டராக இருந்த டிரேகன் என்பவருக்குப் பதிலாக இவர் நியமிக்கப்பட்டார். இவர் நியமிக்கப்பட்டதில் இருந்து கோரல் மில் வேலைநிறுத்தத்தை முறியடிப்பதற்கு பல்வேறு முயற்சிகளை எடுத்தார்.
தன்னை வந்து சந்திக்கும்படி வ.உ.சி-க்கு செய்தி அனுப்பினார். தனியாக ஆஷை சென்று சந்திப்பது வ.உ.சி உயிருக்கு ஆபத்தானது என்று அவரது சக நண்பர்களும், போராட்டக்காரர்களும் கூறினார்கள். ஆனாலும் வ.உ.சி, டி.ஆர்.மகாதேவ ஐயர் எனும் வழக்கறிஞரை அழைத்துக் கொண்டு 1908 மார்ச் 3-ம் தேதி ஆஷைக் காணச் சென்றார்.
“ஆசுவைக் கண்டதும் அழகிய மில்லியனை மோசம் செய்ததென் மொழிகுவா என்றான்.
கொடிய பல செய்து கூலியாட்களை மடியும் விதத்தில் வருத்தி வந்ததனால் வேலையை நிறுத்தினர்.
வேண்டுவேகேட்டுளேன் நாலு தினத்தில் நன்மையாம் என்றேன்.
படையில் செருக்கைப் பகர்ந்தான் எழுந்தேன் படையிலாரிடத்தைப் பகர்தல் நன்றேன் ரென்றே.”
என்று ஆஷ் போலீஸ் படைப்பலத்தால் மிரட்டியதையும், அதன் பின்னும் போராட்டம் நடைபெற்றதையும் வ.உ.சி தனது சுயசரிதையில் எழுதியுள்ளார்.
இறுதியில் தொழிலாளர் போராட்டம் வெற்றி பெற்றது. 1908 பிப்ரவரி 28-ல் ஊதிய உயர்வு, வேலைநேரக் குறைப்பு உள்ளிட்ட கோரிக்கைகளை ஏற்றுக்கொண்டதால் போராட்டம் வெற்றியடைந்தது. ஆசியக் கண்டத்தில் அதற்கு முன்னர் தொழிற்சங்க போராட்டங்கள் நடைபெற்றதற்கான குறிப்புகள் இல்லை என்றே சொல்லலாம்.
கைது செய்யப்பட்ட வ.உ.சி
தொழிலாளர்களின் போராட்டத்தை விடுதலைப் போராட்டத்தின் அங்கமாக ஆக்கி, தொழிலாளர்களை விடுதலை இயக்கத்திலும் பங்கெடுக்கச் செய்ததும் வ.உ.சிதான் என்பதால் போராட்டம் முடிந்த சில தினங்களில், அதாவது 11.3.1908 அன்று பிரிவு 107-ன் கீழ் வ.உ.சி மற்றும் சிவாவின் மீது வழக்கு பதிய திட்டமிட்டனர்.
அன்று கலெக்டர் அலுவலகத்தின் முன்னால் வ.உ.சி மற்றும் சிவா ஆகியோர் மக்களிடம் நீண்ட உரை நிகழ்த்தினர். அடுத்த நாளே கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படாமலே சிறைப்படுத்தபட்டனர்.
வ.உ.சி-க்காக கிளர்ந்தெழுந்த மக்கள்
வ.உ.சி கைது செய்யப்பட்ட அன்றிரவே, மக்கள் தூங்காமல் வீதிகளில் வந்தே மாதரம் என்ற முழக்கம் இட்டதாக சுதேசமித்திரன் பதிவு செய்திருக்கிறது. வ.உ.சி கைது செய்யப்பட்ட மறுநாளிலிருந்து கோரல் மில் தொழிலாளர்கள், பெஸ்ட் அண்ட் கம்பெனியின் தொழிலாளர்கள் வேலை நிறுத்தம் செய்தார்கள். தூத்துக்குடியில் கடைகள் மூடப்பட்டது.
குதிரை வண்டிக்காரர்கள், கசாப்புக் கடைக்காரர்கள், நகர்மன்ற துப்புரவுத் தொழிலாளர்கள் வேலைநிறுத்தம் செய்தனர். பொதுக் கூட்டங்கள் தடை செய்யப்பட்ட நிலையிலும், தூத்துக்குடி வண்டிப்பேட்டையில் கூட்டம் கூடி அடையாளம் தெரியாத ஒருவர் பேசினார். அங்கு குவிக்கப்பட்ட போலீசாருக்கு எதிராக மக்கள் கற்களை குவித்து வைத்து எறிந்து தாக்குதல் நடத்தினார்கள். காவல்துறை துப்பாக்கிச் சூடு நடத்தியது.
தூத்துக்குடியிலிருந்து போராட்டம் திருநெல்வேலிக்கும் பரவியது. ரயில் நிலையத்தை சுற்றி இருந்த கடைகள் மூடப்பட்டன. அதுமட்டுமல்லாமல் ஆயிரக்கணக்கானவர்கள் இந்துக் கல்லூரிக்குள்ளும் நுழைந்தார்கள். இந்துக் கல்லூரி மாணவர்களும் போராட்டத்தில் இணைந்தனர். போராட்டத்தைக் கட்டுப்படுத்த முடியாமல் பாளையங்கோட்டையில் இருந்து ரிசர்வ் போலீஸ் படையை வரச் செய்தார்கள். நகர மன்ற அலுவலகத்தை போராட்டக்காரர்கள் இடித்தார்கள். அங்கிருந்த ஆவணங்களைக் கொளுத்தினார்கள். அஞ்சலகங்களில் மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்தார்கள். நகரமெங்கும் இருந்த மண்ணெண்ணெய் தெருவிளக்குகள் உடைக்கப்பட்டது.
காவல்துறை கையில் கிடைத்தவர்களையெல்லாம் அடித்தது. நெல்லையில் ஒரு சுதேசி கடை ஊழியர் தாக்கப்பட்டார். அதனால் மேலும் எழுச்சி விரிவடைந்தது. மீண்டும் திருநெல்வேலியிலும் துப்பாக்கிச்சூடு நடைபெற்றது. அதில் நான்கு பேர் கொல்லப்பட்டார்கள். இறந்தவர்களில் ஒருவர் இஸ்லாமியர்.
ஏற்கனவே வ.உ.சியுடன் கைது செய்யப்பட்ட பத்மநாப ஐயர் திருவாங்கூரில் சுதேசி பிரச்சார இயக்கத்தை ஏற்படுத்தி வைத்திருந்ததால், திருவாங்கூர் சமஸ்தானத்திற்கு உட்பட்ட நாஞ்சில் நாட்டிலும் இந்த போராட்டம் தீவிரமடைந்தது.
இந்தியாவில் ஒரு சுதேசி இயக்கத் தலைவர் கைது செய்யப்பட்டதற்கு இதற்கு முன் வேறு எங்கும் மக்கள் போராட்டங்கள் நடைபெற்றதாக வரலாற்று குறிப்புகள் இல்லை.
மகாத்மா காந்திக்கு முன்பே ஒத்துழையாமை போராட்ட வடிவத்தினை முன்னெடுத்ததும், ஆசியாவின் முதல் தொழிற்சங்கப் போராட்டத்தையும் நிகழ்த்தியதும் வ.உ.சி என்னும் தமிழரே
No comments:
Post a Comment