கிராமக்கோயில் பூசாரி நல வாரியம்
இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் இல்லாத திருக்கோயில்களில் பணியாற்றும் கிராமக் கோயில் பூசாரிகளின் பாதுகாப்புக்காகவும், நலனுக்காகவும் கிராமக்கோயில் பூசாரிகள் நல வாரியம் அமைத்து அரசாணை(நிலை) 72, தமிழ் வளர்ச்சி-பண்பாடு மற்றும் அறநிலையத்துறை, நாள்.15.3.2001-ல் ஆணையிடப்பட்டது.
வாரியத்திற்கு அரசு கடிதம்(நிலை) எண்.191, தமிழ் வளர்ச்சி-பண்பாடு மற்றும் அறநிலையத்துறை, நாள்.25.9.2001-ல் விதிமுறைகள் அரசால் வகுக்கப்பட்டுள்ளன. மாண்புமிகு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் இவ்வாரியத்தின் தலைவர் ஆவார்.
இவ்வாரியத்தில், அறநிலையத்துறை, நிதித்துறை, வருவாய்த்துறை மற்றும் சமூக நலத்துறை, அரசு செயலாளர்கள், தொழிலாளர் துறை ஆணையர், இந்து சமய அறநிலையத்துறை ஆணையர், நில நிர்வாகத் துறை இணை ஆணையர், இந்து சமய அறநிலையத்துறை கூடுதல் ஆணையர் (பொது) மற்றும் இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் (தலைமையிடம்) ஆகிய 9 அலுவலர்கள் அலுவல்சார்ந்த உறுப்பினர்கள் ஆவர்.
இவ்வாரியத்தின் விதிமுறைகளின்படி 9 அலுவல்சாரா உறுப்பினர்கள் மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை அரசால் நியமனம் செய்யப்படுவார்கள்.
இவ்வாரியத்தில் உறுப்பினராக ஆவதற்கு 25 வயது நிரம்பியிருக்கவேண்டும் எனவும், 60 வயதிற்குள் இருக்கவேண்டும் எனவும், உறுப்பினர் பணிபுரியும் திருக்கோயில் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் இல்லாத கிராமப்புற திருக்கோயிலாக இருக்கவேண்டும் எனவும், வழிபாடு ஆரம்பித்து 5 ஆண்டுகள் நிறைவு பெற்றிருக்கவேண்டும் எனவும், உறுப்பினர் பணிபுரியும் திருக்கோயில் அனைவரும் வழிபடும் திருக்கோயிலாக இருத்தல் வேண்டும் எனவும் வழிமுறைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
No comments:
Post a Comment