Saturday, November 20, 2021

நீதிக்கட்சி நூற்றாண்டு நினைவுக் கட்டுரை

நீதிக் கட்சி நூற்றாண்டு நிறைவு

சிறப்புக் கட்டுரை....

அய்யா வாலாசா வல்லவன் பதிவு....

நீதிக் கட்சி ஆட்சியில் அரிஜனங்கள் எவரும் அமைச்சராக்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டை ம.பொ.சி.யின் 'தமிழ்நாட்டில் பிற மொழியினர் 'என்ற நூலிலிருந்து மேற்கொள் கொடுத்துள்ளார் வழக்குரைஞர் பா. குப்பன் (பக்கம் -81) இது வழக்கமான குற்றச்சாட்டுதான். 

இதே மேற்கோளைப்  பழ. நெடுமாறன் தனது 'உருவாகாத இந்திய தேசியமும் உருவான இந்துப் பாசிசமும்'  என்ற நூலிலும் கொடுத்துள்ளார். 

இவர்கள் ஒன்றைப் புரிந்து கொள்ள வேண்டும்.

1919 இல் இயற்றப்பட்ட மாண்டேகு செம்போர்டு சீர்திருத்தச் சட்டப் படி நடைபெற்றது நீதிகட்சி ஆட்சி இரட்டை ஆட்சி முறையாகும் நீதிக் கட்சி ஆட்சிக் காலம் முழுவதும் ஒரு முதலமைச்சர் 2 அமைச்சர்கள் என மொத்தம் 3 பேர் மட்டுமே அமைச்சர்களாக இருந்தனர்.

1935 ஆம் ஆண்டு இயற்றபட்ட சட்டப்படி இரட்டை ஆட்சி முறை நீங்கி விட்டது. முழுப் பொறுப்பும் தேர்ந்தெடுக்கப்பட்ட அமைச்சர்களுக்கே இருந்தது.

1937 இல் அமைந்த இராஜாஜி ஆட்சியில் முதலமைச்சர் உட்பட 10 பேர் அமைச்சர்களாக இருந்தனர். 10 அமைச்சர்களில் தாழ்த்தப்பட்டவர் ஒருவருக்கு அமைச்சர் பதவி கொடுப்பது ஒன்றும் பெரிய செயல் அல்ல. 

10 அமைச்சர்களில் முதலமைச்சர் இராஜாஜி, டி. பிரகாசம், டாக்டர் டி. எ. எ. இராஜன், வி. வி. கிரி ஆகிய 4 பேர் பார்ப்பனர்கள் அமைச்சர்களாக இருந்தார்கள். 

சபாநாயகரும் புலுசு சாம்பமூர்த்தி என்ற ஆந்திரப் பார்ப்பனரே. 

இது நியாயமா என்பதை ம. பொ. சி அன்பர்கள்தான் கூற வேண்டும். 

இராஜாஜி ஆட்சியில் தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சார்ந்த வி.ஐ.முனிசாமிப் பிள்ளை என்பவரை  பொம்மையாக ஆட்சியில் அமரவைத்துக் கொண்டு ஆதிதிராவிடர்களுக்கு எதிராகப் பல காரியங்களை இராஜாஜி செய்தாரே அது நியாயமா?

15.8.1938 அன்று எம்.சி.ராஜா ஆதிதிராவிடர்கள் கோயில் நுழைவு மசோதா ஒன்றைச் சட்டப் பேரவையில் தாக்கல் செய்தார். உடனே பிரதம மந்திரியார் எழுந்து தடுமாற்றத்துடன், தர்க்கதியற்ற விதமாய், ஒருவரும் நம்ப முடியாத வகையில் அம் மசோதாவை எதிர்த்துப் பேசியது மிக்க ஆச்சரியத்தை விளைவித்தது.... 

பிறகு முதலமைச்சர் உருக்கமாகப் பேசி இந்த மசோதவை நிறுத்தி வைக்கும் படி எம்.சி.ராஜாவிடம் சொன்னார்.....  அதற்கு எம்.சி.ராஜா பதில் அளிக்கும் போது நான் அவரை (முதலமைச்சரை) நம்பினேன். ஆனால் இப்பொழுது அவர் கூறுவதைச் செவியுற்றுக் கேளுங்கள்! 

இம் மசோதாவை வாபஸ் பெற்றுக் கொள்ளவும். சபையிலே இவ்விஷயம் விவாதிக்கப்படாமலிருக்கவும் வேண்டிய முயற்சிகளை இப்பொழுது செய்கிறார் இப்பிரதம மந்திரியார். இது அவருக்கே நியாயமாகத் தோன்றுகிறதா? நான் இவ்விஷயத்தில் பெரிதும் ஏமாற்றமடைந்தேன் என்று சட்டசபையிலேயே பேசினார்.

முதலமைச்சர் இராஜாஜி 45 நிமிடங்கள் இம் மசோதாவை எதிர்த்துப் பேசிக் காங்கிரஸ் கட்சியினர் யாரும் இதற்கு வாக்களிக்கக் கூடாது என்று கூறினார். 

வாக்கெடுப்பில் எம்.சி.ராஜாவின் ஆதி திராவிடர் கோயில் நுழைவு மசோதாவுக்கு ஆதரவாக 24 வாக்குகளும் எதிராக 130 வாக்குகளும் கிடைத்தன.  (ஆதாரம்: ஆரிய ஆட்சி பதிப்பாசிரியர் வாலாசா வல்லவன் பக் - 50 முதல் 56 வரை.)  

நீதிக் கட்சி ஆட்சியில் ஆதிதிராவிடருக்கு அமைச்சர் பதவி கொடுக்கவில்லை  என்றாலும் அவர்களுக்கான  அடிப்படை உரிமைகளை மறுக்க வில்லை.

ஆனால் இராஜாஜி ஆட்சியில் பொம்மையாக ஒரு அமைச்சரை உட்காரவைத்துக் கொண்டு அவரை அந்தச் சமூகத்துக்கு எதிராக வாக்களிக்க வைத்தார் இராஜாஜி.

நீதிக்கட்சி ஆட்சியில் மாபெரும் சமூகப் புரட்சிக்கு வித்திடப்பட்டது. இதை வெறும் தெலுங்கர்கள் ஆதிக்கம் செலுத்திய ஆட்சி என்று புறந்தள்ளி விட முடியாது. 

நீதிக்கட்சி ஆட்சியைத் தெலுங்கர்கள் ஆதிக்கம் மிகுந்த ஆட்சி என்று குறை சொல்லும் தமிழ்த் தேசியர்கள் காங்கிரஸ் கட்சி ஆட்சியில் இராஜாஜி முதல்வராக இருந்தபோது 1937, 1952 ஆண்டுகளில் என்ன நிலைமை என்பதை மூடி மறைக்கின்றனர்.

1937 இல் இராஜாஜி  முதல்வராக இருந்த போது அவர் உள்பட 10 பேர் அமைச்சர்களாக இருந்தார்கள். 

அதில் டி.பிரகாசம், வி.வி.கிரி, பெசவாட கோபால ரெட்டி, மூவர் ஆந்திராவைச் சேர்ந்த அமைச்சர்கள்.

தமிழ் நாட்டைச் சேர்ந்த ப.சுப்பராயன், வி.ஐ.முனிசாமிப் பிள்ளை, எஸ். இராமநாதன், டி.எஸ்.எஸ்.இராஜன் என்கிற பார்ப்பனர் ஆக நால்வர் தமிழ்நாட்டைச் சேர்ந்த அமைச்சர்களாக இருந்தார்கள். 

மற்ற அமைச்சர்கள் கேரளாவையும், கன்னடப் பகுதியையும் சேர்ந்தவர்கள். சபாநாயகர் புலுசு சாம்பமூர்த்தி ஒரு ஆந்திரப் பார்ப்பனரே.

1952இல்  இராஜாஜி அமைச்சரவையில் 15 பேர் அமைச்சர்களாக இருந்தார்கள். 

அதில் என். ரங்கா ரெட்டி, எம். வி. கிருஷ்ணாராவ், என். சங்கர ரெட்டி, பட்டாபி ராமராவ், டி. சஞ்சீவய்யா ஆகியோர் ஆந்திராவைச் சேர்ந்தவர்கள் .

ஆர். நங்கன்னகவுடா, ஏ.பி.ஏ.ஷட்டி  கர்நாடகப் பகுதியைச் சேர்ந்தவர்கள்.

வெங்கடசாமி நாயுடு தமிழ்த் தேசியவாதிகள் பார்வையில் தெலுங்கர்.

குட்டி கிருஷ்ணன் நாயர், கேரளாவை சேர்ந்தவர். தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் ப. சுப்பராயன், வி.சி.பழனிச்சாமி, எம்.ஏ.மாணிக்கவேலர் (உழைப்பாளர் கட்சியைக் கலைத்துவிட்டு வந்ததால் அமைச்சர் பதவி)  சண்முக ராஜேவர சேதுபதி என 15 பேர் கொண்ட இராஜாஜி அமைச்சரவையில் 4 பேர் மட்டுமே தமிழர்கள்.

இதையெல்லாம் ம.பொ.சி எழுதமாட்டார். ஏனெனில் ராஜாஜி அவருடைய குருநாதர், நீதிக்கட்சியைப்பற்றி குறைக் கூறும் தமிழ்த் தேசியவாதிகள் இனியேனும் உண்மையை உணர்வார்களா?

நீதிக்கட்சி ஆட்சியில் ஆதிதிராவிடர்கள் பெற்ற நன்மைகள்:

'பள்ளர்', 'பறையர்' என்று இழிவாக உள்ள பெயரை மாற்றி 'ஆதி திராவிடர்' என்ற பெயரை எங்கள் சமூகத்திற்கு இட்டு அழைக்க வேண்டும் என்று எம்.சி.இராசா 20.02.1922 சட்டமன்றத்தில் தீர்மானம் கொண்டு வந்தார். 

அத்தீர்மானம் ஒரு மனதாக நிறைவேறியது. அதன் அடிப்படையில் இனி இச்சமூகத்தினரை 'ஆதித்திராவிடர்கள்' என்றே அனைத்து ஆவணங்களிலும் பதியவேண்டும் என்று அரசாணை எண் 217 சட்டம் (பொது) நாள் 25.03.1902இல் பிறக்கப்பட்டு நடைமுறைப் படுத்தப்பட்டது.

• ஆதிதிராவிடர் பிள்ளைகளைப் பொது பள்ளிகளில் கட்டாயமாகச் சேர்க்க அரசு ஆணை பிறப்பிக்கப்பட்டது.  GO.No87 கல்வி நாள் 6.1.1923.

• அரசு மானியம் பெறும் பள்ளிகளில் ஆதி திராவிடர் பிள்ளைகளைச் சேர்க்க மறுத்தால் அரசு மானியம் இரத்துச் செய்யப்படும் என அரசு ஆணை பிறப்பிக்கப்பட்டது.  G.O.No. 88. கல்வி நாள் 16.1.1923.

• திருச்சி மாவட்ட நிர்வாகம் (District Board) ஆதிதிராவிடர் பிள்ளைகளை தனி இடத்தில் தங்கி படிக்க அனுமதி கோரியதை அரசு ஏற்க மறுத்து, ஆதி திராவிடப் பிள்ளைகளையும், மற்ற சாதிப் பிள்ளைகளையும் ஒன்றாகத்தான் படிக்க வைக்க  வேண்டும் என்று ஆணைப்பிறப்பித்தது. G.O.No. 2015 கல்வி நாள் 11.2.1924.

• தொடக்கப்பள்ளிகளுக்குக் கட்டிடங்கள் கட்டத் தொடங்கும் போதே ஆதி திராவிடப் பிள்ளைகள் அணுக முடியுமா? ஏனெனில் கோவில், அக்கிரகாரம், போன்ற இடங்களில் ஆதி திராவிடர் பிள்ளைகளை மற்ற சாதியினர் அனுமதிக்க மறுப்பார்கள் என்பதால் அதை ஆய்ந்து பார்த்து ஆதி திராவிடர் பிள்ளைகள் வருவதற்குத் தடையில்லாத இடத்தில் பள்ளிக் கட்டிடங்களைக் கட்ட அரசு ஆணைப் பிறப்பிக்கப்பட்டது. G.O.No..2333 நாள் 27-11-1922

• இந்தியாவிலேயே முதன் முதலாக ஆதி திராவிட மாணவர்கள் இலவசமாகத் தங்கி படிக்க.  ஆதி திராவிடர் மாணவர் விடுதி திறக்கப்பட்டது. G.O.No.2563 நாள் 24.10.1923.

• இதைக் கட்டுவதற்கான பணம் முழுவதையும் ஆதி திராவிடர் தலைவர் எம்.சி.ராஜா அவர்களிடமே கொடுத்து கட்டுவித்தார்கள்.

• 1931க்குள் ஆதி திராவிட மாணவர்களுக்கு மூன்று விடுதிகள் ஏற்படுத்தப்பட்டன.(T.G.Boag  ICS.  Madras presidency 1881 - 1931  g¡f« 132)

• ஆதி திராவிடர்களுக்கு இலவச வீட்டுமனைப் பட்டா வழங்க அரசாணைப் பிறப்பிக்கப்பட்டது. (அரசாணை எண் 1243. நாள் 5.7.1922)

• ஆதி திராவிட மாணவர்கள் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு எழுதத் தேர்வுக்கட்டணம் செலுத்தத் தேவையில்லை என்று அரசாணை பிறப்பிக்கப்பட்டது. (அரசாணை எண் 1241 சட்டம் (கல்வி) நாள் 17.10.1922)

• ஆதி திராவிட மாணவர்களின் கல்வி நிலையைப் பற்றிய விவரத்தை அரசுக்கு அளிக்கவேண்டும் என்று அரசாணைப் பிறப்பிக்கப்பட்டது. (அரசாணை எண் 859 நாள் 22.06.1923)

• ஆதி திராவிட வகுப்பு மாணவர்களுக்கு நான்காம் வகுப்பு முதல் கல்வி உதவித்தொகை வழங்கத அரசாணைப் பிறப்பிக்கப்பட்டது. (அரசாணை எண் 1568 சட்டம் (கல்வி) நாள் 06.11.1923)

• ஆதி திராவிட மாணவர்களுக்கு சில பள்ளிகளில் தனி வகுப்பறைகள் இருந்ததை அரசு கண்டித்தது. ஆதி திராவிட மாணவர்களை அதிக எண்ணிக்கையில் சேர்த்துக் கொள்ளும் கல்வி நிறுவனங்களுக்கு அதிக அளவில் அரசின் பண உதவி அளிக்கப்படும் என்று அரசாணைப் பிறக்கப்பட்டது. (அரசாணை எண் 205 கல்வி நாள் 11.02.1924)

• மருத்துவக் கல்லூரியில் பயிலும் ஆதி திராவிடர் மற்றும் பின் தங்கிய சமூகத்தைச் சேர்ந்தவர்களுக்குக்  கல்வி உதவித்தொகை வழங்க அரசாணைப் பிறப்பிக்கப்பட்டது. (அரசாணை எண் 866 (பொது) சுகாதாரம் நாள் 17.06.1922)

• சிதம்பரத்தில், சாமி சகஜானந்தம் ஆதித் திராவிடப் பிள்ளைகளுக்கென 1916இல் ஒரு பள்ளியைத் தொடங்கினார். ஆங்கில அரசிடம் நிலம் கேட்டார். அவர்கள் கொடுக்கவில்லை. அவர் திண்ணைப் பள்ளி மாதிரி நடத்தினார். பனகல் அரசர் தான் 50 ஏக்கர் நிலம் கொடுத்து அதை நடுநிலைப் பள்ளியாகத் தரம் உயர்த்தி அங்கீகாரம் கொடுத்து, ஆண்டு தோறும் அரசின் நிதியுதவி கிடைக்கவும் வழி செய்தார்.....

No comments:

Post a Comment