சென்னை தன்டையார்பேட்டையில் காலஞ்சென்ற கம்யூனிஸ்ட் தலைவர் தோழர் ப.ஜீவானந்தம் அவர்களின் சிலைத்திறப்பு விழாவை ஒட்டி மறுநாள் 31-1-.66 அன்று " ஜீவா வாழ்க்கை வரலாறு ’’ நூல் வெளியீட்டு விழாவில், தோழர் பாலதண்டாயுதம் அவர்களால் எழுதப்பட்ட காலஞ்சென்ற கம்யூனிஸ்ட் தலைவர் தோழர் ப.ஜீவானந்தம் அவர்களின் வரலாற்றை வெளியிட்டு ஜீவாவின் தன்னலமற்ற தொண்டினைப் பாராட்டி தந்தை பெரியார் பேசுகையில் ,
பேரன்புமிக்க தலைவர் அவர்களே! பெருமைமிக்க தாய்மார் களே! தோழர்களே! உயர்திரு. பி.சி. ஜோஷி அவர்களே! வணக்கம்.
இன்றைய தினம் மறைந்த நண்பர் ஜீவா அவர்களின் வாழ்க்கை வரலாற்றினை வெளியிடும் பணியை எனக்கு அளித்துப் பெருமைப் படுத்தியமைக்கு எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
நேற்றைய தினம் நடைபெற்ற ஜீவா சிலைத்திறப்பு விழாவில் கலந்து கொள்ளவேண்டும் என்று என்னை நண்பர் பாலதண்டாயுதம் அவர்கள் அழைத்து இருந்தார். நான் அதில் கலந்து கொள்பவர்களைக் கேட்டதும், என்னமோ அய்யா மன்னிக்கனும், எனக்கு வர விருப்ப மில்லை என்றுகூறினேன்.
நண்பர் பாலதண்டாயுதம் விட்டபாடில்லை! அப்படியானால் மறுநாள் இப்படி ஒரு நிகழ்ச்சி ஏற்பாடு செய்கிறோம். அதில் தாங்கள் நான் எழுதிய " ஜீவா வாழ்க்கை வரலாறு” நூலை வெளியிட வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். நானும் ஒத்துக் கொண்டேன். நேற்றைக்கு சேலத்தில் கூட்டத்தை முடித்துக்கொண்டு இரவே புறப்பட்டு காலையில்தான் இங்கு வந்தேன்.
நண்பர் ஜீவா வாழ்க்கை வரலாறு புத்தகத்தை எழுதியவர் நண்பர் பாலதண்டாயுதம் ஆவார். அதனை ஏதோ ஒரு அளவுக்குப் படித்துப் பார்த்தேன்; நல்ல வண்ணமே எழுதியுள்ளார். என்றாலும் ஜீவாவைப் பற்றிய வரலாறு எழுத வேண்டிய அளவுக்கு இல்லாமல் ஏதோ கால்பாகம் தான் இது என்று கூறுவேன்.
தோழர்களே! ஜீவாவை எனக்கு நன்றாகத் தெரியும். நான் காங்கிரஸ் இருந்து வெளியேறி சுயமரியாதை இயக்கத்தைத் தோற்றுவித்து பகுத்தறிவுப் பிரசாரம் செய்து வந்த காலத்தில் இராமநாதபுரம் மாவட்டம் திருப்பத்தூர் தெம்மமப்பட்டு என்ற ஊரில் ஒரு கூட்டத்திற்குச் சென்று இருந்தேன்.
அதற்குப் பக்கத்து ஊருக்கருகில் ஒரு தனிப்பட்ட பள்ளிக்கூடத் தில் ஆசிரியராக ஜீவா இருந்தார்; அவரும் அந்த கூட்டத்திற்கு வந்தி ருந்தார். அவரும் கூட்டத்தில் நமது கொள்கையினை ஆதரித்து.ப் பேசினார். எனக்கு மிகவும் அவரது பேச்சு பிடித்து இருந்தது. பிறகு நான் அவரை என்ன பண்ணிகொண்டு இருக்கின்றீர்கள் என்று கேட்டேன். பள்ளிக்கூடத்தில் பாடம் சொல்லிக் கொடுத்துக்கொண்டு வருகின்றேன் என்றார்.
நான் கூறினேன். பெரியவர்களுக்கே சொல்லிக் கொடுக்க வேண்டிய விஷயங்கள் ஏராளம் இருக்கின்றன. சிறு பையன்களுக்கு அவசரம் இல்லை. எனவே வேலையைவிட்டுப் போட்டுவிட்டு வாருங்கள் என்றேன்; அவரும் அப்படியே வேலையைத் துறுந்து சுயமரியத்தைப் பிராசாரத்தில் ஈடுபட்டார்.
எனக்கு இவரை மிகவும் பிடித்தது; அவர் நல்ல பேச்சாளி. பேச்சாளிகளில் பலவிதம் உண்டு தம்மை விளம்பரப்படுத்திக் கொள்ள பேசுபவர்கள்; தாம் எவ்வளவு படித்துள்ளோம் என்பதைக் காட்டிக்கொள்ள பேசுகின்றவர்கள்; பிறரை சிரிக்க வைக்க வேண்டும்; கை கொட்டல் வாங்க வேண்டும் என்று பேசுகின்றார்கள். இப்படிப் பலவிதம் உண்டு. இப்படிப் பேசுகின்றவர்கள் எப்படி விஷயத்தை மக்களுக்கு எடுத்து சொல்லி விளங்க வைப்பது என்பதை எண்ணி பார்த்து பேசுவார்கள்.
தோழர்களே! கேட்கிறவர்களுக்கு நல்ல புத்தி இருந்தால் நல்ல பேச்சாளிகள் தோன்றுவார்கள். ஜீவாவிடம் எந்த விஷயத்தை எடுத்துக் கொண்டாலும் தக்க ஆதாரத்தோடு புள்ளிவிவரங்களோடு பேசுவார். மக்கள் மனதில்படும்படி பேசுவார் எவ்வளவு பிடிவாதக் காரர்களையும் மனம் மாற்றிவிடுவார்.
எங்கள் சுயமரியாதை இயக்கக் கொள்கை, கடவுள், மதம், சாஸ்திரம் இல்லை; ஜாதி இல்லை; ஏழை பணக்காரன் இல்லை; இதுகள் ஒழிய வேண்டும் என்பது இதுகளை விளக்கிய பிரசாரம் செய்வதில் ஜீவா தலைசிறந்து விளக்கினார்.
நான் ரஷ்யாவுக்குப் போய்வந்த காலத்தில் எங்கள் பத்திரிகை பேரிலும், எனது பேரிலும், எனது மனைவி, தங்கை, எனது அண்ணன், ஜீவா ஆகியவர்கள் பேரிலும் அரசாங்கம் பழிவாங்கும் முறையில் நடவடிக்கை எடுத்தது. ஆட்சியின் அடக்குமுறை காரணமாக நானும் சிறைக்கு சென்றேன். பத்திரிகையில் ஏதோ ஒரு கட்டுரையை எழுதிய காரணத்திற்காக ஜீவா அவர்களையும் அரசாங்கம் கைது செய்தது. இதன் கருத்து பொதுஉடைமை இயக்கத்தையும் அழித்து விடவேண்டும் என்பதேயாகும். இந்த நிலையில் திரு. ஆர்.கே. சண்முகம் செட்டியார் அவர்கள் அரசாங்கத்திற்கும் எனக்கும் ராஜி செய்ய முன்வந்தார். நீங்கள் கம்யூனிஸ்ட் பிரசாரம் பண்ணவில்லை என்று எழுதிக் கொடுக்கும்படியும் அப்படிச் செய்தால் விட்டு விடுவதாகவும் அரசாங்கத்தார் சொல்கின்றார்கள் என்று கேட்டார். அதற்கு நான் அப்படி எல்லாம் கூறமாட்டேன். எனது கொள்கை இதுதான். அதாவது எனக்கு பலாத்காரத்தில் நம்பிக்கை இல்லை. பலாத்காரமில்லாமல் சமுதாயத்திலும், பொருளாதாரத்திலும் மக்களிடம் பேதமில்லாமல் செய்வதுதான் என்கொள்கை. இதற்கு ஆக அரசாங் கத்துடன் கூடியவரை ஒத்துழைத்தே அரசாங்கத்திற்கு விரோதமில்லாமல் தொண்டாற்றுவதுதான் எனது கொள்கை என்று ஒரு ஸ்டேட்மெண்ட் விடுவது என்று ராஜி பேசிக்கொண்டேன். ஏன் என்றால் அப்போது ஜஸ்டிஸ்கட்சி ஆட்சி இருந்தது. நான் அந்தக் கட்சிக்கு ஆதரவாய் இருந்தவன் ஆதலால் அந்தப்படி எழுதிக் கொடுத்தேன். அப்போது ஜீவா சிறையில் இருந்தார். அந்த அறிக்கை யில் அவரிடமும் கையெழுத்து வாங்கினேன். உடனே அவரும் என் அண்ணனும் விடுதலை ஆனார்கள். ஜீவாவுக்கு நான் அந்த அறிக்கை வெளியிட்டது பிடிக்கவில்லை. அதனால் கருத்து வேற்றுமை என்று கூறிக்கொண்டு கொஞ்சநாள் பொறுத்து விலக்கிக்கொண்டார். முக்கிய காரணம் நான் ஜஸ்டிஸ் கட்சியினர்களை ஆதரித்தது அவருக்கு பிடிக்கவில்லை. அதன் காரணமாக விலகி விட்டார்.
அப்படி விலகிவிட்டாலும் அவர் சாகிறவரையிலும் நாங்கள் இருவரும் அன்பும் மரியாதையும் கொண்டு இருந்தோம்.
முதல் பொதுத்தேர்தலில் நான் கம்யூனிஸ்ட்களை பலமாக ஆதரித்தேன். இவர்கள் வெற்றிக்காகப் பாடுபட்டேன். நல்ல அளவுக்கு கம்யூனிஸ்ட்டுகள் தேர்தலில் வெற்றி பெற்றார்கள். காங்கிரசை விட எதிர்க்கட்சிக்காரர்களே அதிகமான பேர்கள் வந்தும் கூட நமது ஜன நாயகத்தின் யோக்கியதை, தோற்றுப்போன காங்கிரசுதான் பதவிக்கு வந்தது.
அந்த தோற்றுப்போன காங்கிரசின் பேரால் முதல் மந்திரியாக வந்த ஆச்சாரியார், எனது முதல் நம்பர் எதிரி இந்த கம்யூனிஸ்ட்டுகள் தான். இரண்டாவது எதிரி இந்த ராமசாமி தான் என்று என்னையும் சொன்னார்.
ஜீவானந்தம் அவர்கள் எனது வீட்டுக்கு வந்தார். இராஜாஜி இப்படி கூறுகின்றாரே என்றார். அதற்கு நான், நீங்கள் உங்களைக் காப்பாற்றிக் கொள்ளுங்கள். நானே என்னைக் காப்பாற்றிக் கொள்ளு கின்றேன் என்றேன்.
ஜீவா அவர்கள் கட்சிக்காக அதன் கொள்கைக்காக கடைசி வரையில் உண்மையாகவே உழைத்தவர். அவருக்கு கட்சியைப் பற்றி சில மனக்குறை உண்டு என்றாலும் அதுபற்றி என்னிடம்தான் கூறுவார். மற்றவரிடம் கூறவே மாட்டார்.
நேற்று சிலைத்திறப்பு விழாவின்போது இராஜாஜி ஏதேதோ பேசியதாகவும், காமராஜர் அவர்கள் மறுத்துக் கூறியதாகவும் பத்திரி கையிலும் பார்த்தேன்; நண்பர்களும் கூறினார்கள்.
கம்யூனிஸ்ட் கட்சியினைப் பற்றி சில வார்த்தைகள் கூற வேண்டும் என்ற ஆசை எனக்கு உள்ளது. எனக்கு சொல்லவும் உரிமையுண்டு.
நமது நாட்டில் கம்யூனிஸ்ட் கட்சி எவ்வளவு வருஷங்களாக இருக்கின்றது. அது எந்த உருப்படியான காரியத்தையும் செய்து வெற்றி பெறவில்லையே!
தோழர்களே! கம்யூனிஸ்ட்கட்சி நமது நாட்டில் வளரவேண்டிய அளவுக்கு வளரவில்லை. நாட்டில் எந்த எந்த சொத்தைக் கொள்கை யினைக் கொண்ட கட்சிகள் எல்லாம் தலை தூக்கி ஆடுகின்றன. உன்னத கொள்கையுள்ள கட்சி வெற்றி காணாதது ஏன்? மிகவும் உன்னதமான கொள்கையினைக் கொண்ட கட்சி, உலகில் எல்லா விதமான பிரச்சனைகளுக்கும் முடிந்த முடிவான பொது உடைமைத் தத்துவத்தைக் கொண்ட கட்சி வளர்ச்சி அடையவில்லை என்றால் என்ன ஜாதகம்?
கம்யூனிஸ்ட் என்றால் நாத்திகர்கள் ஆவர். கம்யூனிஸ்டுகளுக்கு கடவுள்பற்றோ, மதப்பற்றோ, சாஸ்திரப்பற்றோ, ஜாதிப்பற்றோ, நாட்டுப்பற்றோ, மொழிப்பற்றோ கூட இருக்கக்கூடாது. லட்சியப் பற்று, வளர்ச்சிப்பற்று மட்டும்தான் இருக்கவேண்டும்.
நல்ல கொள்கைகளைக் கொண்ட கம்யூனிஸ்ட் கட்சி இந்த நாட்டில் இன்ன மாறுதல் பண்ணியது என்று சொல்ல முடியவில் லையே! இராமாயணத்திலும், பாரதத்திலும் பழைய இலக்கியங் களிலும் நம்பிக்கை வைப்பவர்கள் எப்படி கம்யூனிட்டாக முடியும்?
விபூதியும், நாமமும் போட்டுக்கொண்டு கம்யூனிசம் பேசுபவர் கள் எப்படி உண்மை கம்யூனிஸ்டாக முடியும்? கம்யூனிஸ்டுகளுக்கு ஜோசியப் பைத்தியம் எதற்கு? கம்யூனிஸ்டுக்கு நாட்டுப்பற்றுதான் எதற்கு? அவனுக்கு நாடே கிடையாதே, அவனுக்கு உலகம்தானே நாடு! கம்யூனிஸ்ட்டுக்கு கடவுள் எதற்கு? அவனுக்கு அவனது கொள்கைதானே கடவுளாக இருக்கவேண்டும்?
நமது நாட்டு பத்திரிகைகாரர்கள் பெரிதும் அயோக்கியர்கள் ஆனபடி யால் 100க்கு 5 பேர்கள் கூட யோக்கியர்களாக இல்லை.
இவர்கள் கம்யூனிச எதிர்பிரசாரத்தில் ஈடுபட்டு இருக்கின்றார்களே ஒழிய கம்யூனிச தத்துவத்தினை பிரசாரம் செய்வதில்லையே?
நண்பர் பாலதண்டாயுதம் ஜீவாவின் வாழ்க்கை வரலாறு எழுதியுள்ளார். எப்படி நேற்று இராஜாஜியைக் கூப்பிட்டுவிட்டு வம்பிலே மாட்டிக் கொண்டார்களோ அதுபோல அவர் எழுதியுள்ள புத்தகத்தில் என்னையும் எதிர்த்துத் தாக்கி வம்பிலே மாட்டிக் கொண்டார். இந்த புத்தகத்தில் 50ம் பக்கத்தில் "பகுத்தறிவின் பெயரால் நமது பண்டைய தமிழ் இலக்கியங்களை வெறுக்கும் போக்கு ஒன்று தமிழகத்தில் நிலவி வருகின்றது” என்று குறிப்பிட்டு உள்ளார். இப்படி இவர் குறிப்பிட்டுத் தாக்கியதானது என்னைத்தானே ஆகும்?
மேலும் கூறுகின்றார் "வாழ்வும் சமயமும் பிரிக்க ஒண்ணாத வரையில் பின்னிக் கிடக்கும் இந்த நாட்டில் சமயநூல்களை ஒதுக்கித் தள்ளமுடியாது” என்று! இவர் இப்படி என்னைத் தாக்கியது பற்றி எனக்குக் கவலை இல்லை. இப்படிப்பட்டவர்களுக்கு இந்த புத்தி வரலாமா? இலக்கியமும் மதமும் இவர்களுக்கு என்ன அழுகின்றது? இதுகள் பற்றிய எண்ணம் உங்களுக்கு இருக்கலாமா?
தோழர்களே! நான் சவால்விட்டே கேட்கின்றேன் நமக்கு என்ன அய்யா யோக்கியமான இலக்கியம் உள்ளது? இராமாயணமும், பாரதமும், சிலப்பதிகாரமும் வெங்காயமும் எந்த முறையில் மக்களுக்குத் தேவையான இலக்கியமாகும்? அதில் கம்யூனிசத்துக்கு ஆன படிப்பினை என்ன இருக்கிறது?
கம்யூனிஸ்ட்டுகள் இதுகளை கையில் தொடலாமா? "வாழ்வில் பின்னிக் கிடக்கும் சமய நூல்களை விலக்க முடியாது” என்கின்றார். விலக்கமுடியாது என்றால் கம்யூனிஸ்டுகளாகிய நீங்கள் என்னத் திற்கு இருக்கின்றீர்கள்?
தமிழ்நாட்டில் இன்ன புலவன் பகுத்தறிவுவாதி, மனித சமுதாய வாழ்வுக்கு ஏற்றாற்போல் இலக்கியம் பண்ணினான் என்று கூற முடியுமா? சும்மா வீதிக்குவீதி பாரதிவிழா, பாரதியைப் பற்றிய பேச்சு என்று கொண்டாடுகின்றார்களே அந்த பாரதி என்ன அதிசயமான கருத்தைப் பாடினான்? பார்ப்பான் என்கின்றதினால் அவனுக்கு பெருமை அளிப்பதைத் தவிர வேறு என்னவாக இருக்க முடியும்?
கம்யூனிஸ்ட்களாகிய உங்களிடம் பெரிய திட்டம் உள்ளது. சமுதாயத்துறையில் உயர்வு தாழ்வு நீக்குவது; பொருளாதாரத் துறையில் ஏழைப் பணக்காரனை ஒழிப்பது என்பது; உயர்சாதிக் காரன் கடவுள்தான் என்னை உயர்சாதிக்காரனாகப் படைத்தார் என்கின்றான். பணக்காரன் எனக்குப் பணம் கடவுள் கொடுத்தார், நீ என்னடா கேட்பது என்கின்றான். இந்த கடவுளை கம்யூனிஸ்ட் வெளுக்க வேண்டாமா? கடவுளாவது வெங்காயமாவது எல்லாம் பித்தலாட்டம் என்று மக்களுக்கு உணர்ச்சியூட்ட வேண்டாமா? தெலுங்கிலே ஒரு பழமொழி சொல்லுவார்கள். " நேசேவாடுக்கு கோந்திப்பில்ல. எந்துக்கு” என்று நெசவாளி நூலை பிணைந்துக் கொண்டே போகின்றதும் குரங்குக்குட்டி அறுக்கின்றதுமாகத்தானே இருக்கும்.
அதுபோல உங்கள் கொள்கைக்கும் இராஜாஜிக்கும் என்ன சம்பந்தம்? என்னத்திற்காக அவரை வம்பிலே அழைத்தீர்கள்? அப்படி வந்தவர் உங்கள் இலட்சியங்களைப் பற்றி உங்களைப் பற்றி நாலு நல்ல வார்த்தைதான் மனதார கூறுவாரா? இதுகளைப் பார்க்க வேண்டாமா?
நான் கம்யூனிஸ்ட் தலைவர்களை ரொம்பக் கேட்டுக் கொள்ளு கின்றேன். கம்யூனிஸ்ட்டுக்களாகிய நீங்கள் பெரிய தியாகிகள் பல லாப நஷ்டங்கள் எல்லாம்பட்டு உள்ளீர்கள். இதுகளுக்குப் பலன் வேண்டாமா?
தோழர்களே! செத்துப் போகும் நிலையில் இருந்த காங்கிரஸ் இன்று தலை எடுத்து நிமிர்த்து நிற்கின்றதே! காமராஜர் வந்தார் நிலைத்துப் போய்விட்டது. உங்கள் இயக்கம் வளர்ச்சி அடையாத தற்குக் காரணம் சரியான பிரசாரம் இல்லாததேயாகும். நீங்கள் இனியேனும் நாத்திகப் பிரசாரம் பண்ணனும். ரஷ்யாவில் கம்யூ னிஸ்ட்டுக்கள் பாதிரிகளையெல்லாம் வெட்டவில்லையா? நாம் நமது நாட்டுப் பாதிரிகளான பார்ப்பனர்களை வெட்டாவிட்டாலும் அவர்களை மக்களை மக்களாக மதித்து நடக்கச் செய்ய உணர்த்த வேண்டாமா இவர்களின் புரட்டுப் பித்தலாட்டங்களை எல்லாம் மக்களுக்கு அம்பலப்படுத்த வேண்டாமா?
இன்றைக்கு நாம் காங்கிரசை ஆதரிக்க வேண்டும். எதற்காக, அது கொண்டுள்ள கொள்கையில் இருந்து தப்பாகப் போகாமலி ருப்பதற்கு ஆகும். இன்றைக்கு காங்கிரசில் உள்ளவர்களில் கால்வாசிப்பேர்களுக்குத்தான் சமதர்ம உணர்ச்சி இருக்கின்றது. 3/4 பாகம்பேருக்கு அது வெறுப்பாகவே இருக்கும். இந்த 3/4 பாகப் பேர்களையும் வெளியாக்கி காங்கிரசைச் சுத்தப்படுத்த நாமும் ஒத்து ழைத்தால்தான் முடியும். கம்யூனிசம் சமதர்ம அஸ்திவாரத்தில் தானே எழுப்பப்படவேண்டும்?
நீங்கள் ஒரு தடவைதான் சட்டசபையை விட்டுவிடுங்களேன்: கட்சிப் பிரசாரத்தில் தீவிரமாக இறங்குங்களேன். சட்டசபைக்கு நின்று இரண்டொருவர் போய் என்னதான் சாதித்து விடமுடியும்?
எனக்கு என்னமோ சட்டசபைக்குப் போகின்றது பிடிக்கவில்லை. கொள்கையினை எடுத்துச் சொல்லவாவது போகவேண்டும் என்பீர் கள். எந்தக் கொள்கையினை எந்த மந்திரி முன்பு எடுத்துச் சொல்லி வெற்றிபெற்றீர்கள்?
நான் சட்டசபைக்குப் போகவில்லை. எனக்கு நாட்டில் மரியாதை இல்லையா செல்வாக்கு இல்லையா? எங்கள் கட்சிதான் சட்ட சபைக்கு போகாததினால் அழிந்து போய் விட்டதா?
நான் இராமாயணத்தைக் கொளுத்தியவன், கீதையை கொளுத்தி யவன், இராமன் படத்தை எரித்தவன், பிள்ளையார் சிலையை வீதிக்கு வீதி போட்டு உடைத்தவன்தானே அய்யா? எனக்கு நாட்டில் என்ன மரியாதை கெட்டுவிட்டது. நீங்கள் என்னை எவ்வளவோ பயன் படுத்திக்கொள்ளலாம். மக்கள் மனதில் மூடநம்பிக்கைகள், முட்டாள் தனமான பற்றுக்கள் குடிகொண்டு இருப்பது நீங்கப் பாடுபட வேண்டும். மக்களை எல்லாம் இந்த உன்னதக் கொள்கைக்குப் பக்குவம் உடையவர்களாக ஆக்கவேண்டும். நீங்கள் தொண்டர்களாக கருதவேண்டும் என்று எடுத்துரைத்தார்கள்
தந்தை பெரியார் அவர்கள் வெளியிட்ட "ஜீவாவின் வாழ்க்கை வரலாறு” புத்தகத்தை முதலாவதாக கம்யூனிஸ்ட் கட்சியின் பிரபல தலைவர் திரு.பி.சி. ஜோஷி அவர்கள் பணம் செலுத்தி தந்தைபெரியாரிடம் பெற்றுக்கொண்டார். அடுத்து விழாத்தலைவர் திரு.காட்டே அவர்களும் அடுத்து தமிழ்நாடு கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுக் காரியதரிசி மணலி திரு. கந்தசாமி அவர்களும் பெற்றுக் கொண்டார்கள்.
தந்தைப் பெரியார் அவர்களும் ரூ.10 செலுத்தி 10 புத்தகங்களை வாங்கிக் கொண்டார்கள். முடிவில், இது முதலாகவாவது இந்த நாட்டில் கம்யூனிஸ்ட் கட்சி தலைசிறந்த பிரபலகட்சியாக விளங்க வேண்டுமென்று வாழ்த்துக் கூறிவிட்டு விடைபெற்றுக்கொண்டார்.
விடுதலை 02.02.1966
No comments:
Post a Comment