ஒப்பற்ற சுயசிந்தனையாளர் பெரியார் - டாக்டர் மா. நன்னன் - பெரியார் சுயமரியாதை பிரச்சார நிறுவன வெளியீடு - பக்கங்கள் 128 - நன்கொடை ரூ 80/
◆ பகுத்தறிவுப் பேராசிரியர், டாக்டர் மா. நன்னன் அவர்களின், அருப்புக்கோட்டை கைலாசம் அறக்கட்டளையின் ' பெரியார் பேருரையாளர் ' ஆய்வு சொற்பொழிவில் 1979ம் ஆண்டு நடைபெற்ற நிகழ்ச்சியில் - மூன்று நாட்களின் தொடர் சொற்பொழிவின் உரைத் தொகுப்பே இந்த நூல். நன்னன் நமக்கு தந்த நல்ல கருத்துகளின் வெளிப்பாடாய் இந்த நூல் அமைந்துள்ளது.
◆ தந்தை பெரியாரவர்கள் அடிப்படை கல்வி மட்டுமே பள்ளியில் கற்றவர் ! இயற்கையாகவே எதையும் உடனேயே நம்பாத, சிந்திக்கும் இயல்புடையவராக இருந்த காரணத்தால், உலகத்தை உற்றுக் கவனித்தவர். கவனித்ததோடல்லாமல் - சிந்தித்து, சீர்தூக்கி, சிறப்பை அறிந்தவர்.
◆ சாதி தோன்றியது ஏன் ? மதம் தோன்றியது ஏன் ? கடவுள் தோன்றியது ஏன் ? அந்த கடவுளர்களுக்கு ஏஜெண்டுகளாக பார்ப்பனர்கள் தோன்றியது ஏன் ?..ஏன் ? என தனக்கு தானே வினவி, விடை கண்டார். அப்படி தன்னை தானே செதுக்கியதால்தான் - பெரியார் ஒரு சுயசிந்தனையாளர் !
◆ பெரியார் சுயசிந்தனையாளரோடு மனித இனப் பற்றாளராகவும் இருந்தார். மனிதனை நினைக்க வேண்டுமானால் கடவுளை மறக்க வேண்டும் என்பார் ! கடவுளை மறக்க வேண்டுமானால் மனிதனை நினைக்க வேண்டுமென்பார் ! அவரது மனிதாபிமானமே அவரது மிகச்சிறந்த கொள்கையாக - ' கடவுளை மற ! மனிதனை நினை ! ' என்று உருவாகி, இன்று உலகோரால் பாராட்டப்படுகின்றது !
◆ பேராசிரியர் நன்னன், பெரியாரின் கடவுள் கொள்கைகளை விளக்கும் போது , " கடவுள் கருத்து செயற்கையானது ! கற்பனையானது ! தாமாக உணர்ந்து அனுபவிக்க இயலாதது ! கடவுளைப்பற்றி யாரும் எடுத்து சொல்லாவிட்டால், நம்பும்படி பிரச்சாரம் செய்து திணிக்காவிட்டால், அந்த எண்ணம் மக்களுக்கு ஏற்படவே ஏற்படாது ! " ...என ஆணித்தரமாக பேசியுள்ளதை, பதிவு செய்துள்ளார்.
◆ ஒரு சுயசிந்தனையாளர் எந்த அளவிற்கு நியாயமானவராக இருப்பார் என்பதற்கு பெரியாரின் இந்த கருத்தை, நன்னன் எடுத்துரைக்கிறார் - " ஒருவனுடைய எவ்வித அபிப்பிராயத்தையும் மறுப்பதற்கும் யாருக்கும் உரிமையுண்டு ! ஆனால் அதை வெளியிடக்கூடாது என்று சொல்வதற்கு எவருக்கும் உரிமை கிடையாது ! " ..( குடிஅரசு - 13.04.1930 )
◆ பெரியார் பார்ப்பனீயத்தின் எதிரிதானே தவிர, பார்ப்பனர்களின் எதிரி இல்லை என்பதற்கு, அவரது பேச்சிலிருந்து ஒரு சான்று - " எனக்கு, எனது சுயமரியாதை, திராவிடர் கழக பிரச்சாரத்தின் கருத்து, ஒரு பார்ப்பான் கூட மேல் ஜாதியான் என்பதாக இருக்கக்கூடாது என்பதற்காகத்தானே தவிர, பார்ப்பான் பணக்காரன் ஆகக்கூடாது, அவன் நல்வாழ்வு வாழக்கூடாது, அவன் ஏழையாகவே இருக்க வேண்டும் என்பதல்ல ! "... ( குடிஅரசு - 09.11.1946 )
◆ பெரியாரின் கடவுள் மறுப்பு கொள்கை எவ்வளவு எளிதானதென்பதை, நன்னன் தனது உரையில் உதாரணமாக காட்டியது - " நாங்கள் கடவுள் இல்லையென்று கூற உங்களிடையே வரவில்லை ! கடவுள் இல்லை என்று கூற அறிவுள்ளவரால் தான் முடியும் ! அந்த அறிவு உங்களுக்கு வருகிறவரையில் ஏதோ ஒரு கடவுளை வைத்துக் கொள்ளுங்கள் ! ஆனால் அந்த கடவுள் தமிழ்க் கடவுளாக இருக்கட்டும் ! ".. இப்படியொரு நாத்திகர் தான் பெரியார். ( விடுதலை - 19.071961 )
◆ பெரியாரின் முதல் வேலை - ஜாதி ஓழிப்பு பிரச்சாரமாகத் தான் இருந்தது. அதற்கு தடையாக இருந்த - மதம், கடவுள், சாத்திரம், மநுநீதி, பார்ப்பான் இவைகள் அத்தனையும் எதிர்த்தார் ! " இந்து மதத்தை ஒத்துக்கொண்டு, கிருஷ்ணனை கடவுள் என்று ஏற்றுக்கொண்டு, அவன் கூறியதாக சொல்லப்படும் பகவத்கீதையையும் ஒத்துக் கொண்டிருக்கின்ற எவனாலும், தீண்டாமையையோ ஜாதியையோ ஒழிக்கவே முடியாது ! " ..( குடிஅரசு - 23.06.1935 )
◆ சுயசிந்தனையாளர் ஒருவர் தன்னைப்பற்றியோ, தன் கொள்கைகளைப் பற்றியோ, தன் யோக்கியதைப் பற்றியோ, தன் இலக்கைப் பற்றியோ, தந்தை பெரியாரைப் போன்று வேறு எவராவது, இதுவரை வெளியிட்டதுண்டா, என அவரது இந்த - சுய அறிவிப்பை நன்றாக படித்து விட்டு உணர்ந்து அறியவும் :
◆ " ஈ.வெ.ராமசாமி என்கிற நான், திராவிட சமுதாயத்தை திருத்தி, உலகில் உள்ள மற்ற சமுதாயத்தினரைப் போல, மானமும் அறிவும் உள்ள சமுதாயமாக ஆக்கும் தொண்டை மேற் போட்டுக்கொண்டு, அதே பணியில் இருப்பவன் !
அத்தொண்டு செய்ய எனக்கு யோக்கியதை இருக்கிறதோ இல்லையோ, இந்த நாட்டில் அந்த பணி செய்ய யாரும் வராததினால் , நான் அதை மேற் போட்டுக்கொண்டு, தொண்டாற்றி வருகிறேன் !
இதைத்தவிர வேறு பற்று ஒன்றும் எனக்கு இல்லாததாலும், பகுத்தறிவையே அடிப்படையாக கொண்டு கொள்கைகளையும், திட்டங்களையும் வகுப்பதாலும், நான் அத்தொண்டுக்கு தகுதி உடையவன் என்றே கருதுகிறேன் ! சமுதாய தொண்டு செய்பவனுக்கு இது போதும் என்றே கருதுகிறேன் ! "....
◆ பேராசிரியர் டாக்டர் மா. நன்னனின் பேருரை, பல அரிய தகவல்களை கொண்டதாக உள்ளது. படித்து பயன் பெற வேண்டிய நூல் இது.
● சுய முயற்சி - அவரை எழுத்தாளராக்கியது
● சுய ஒழுக்கம் - அவரை
தலைவராக்கியது !
● சுய அனுபவம் - அவரை
சீர்திருத்தவாதியாக்கியது !
● சுய சிந்தனை - அவரை
நாத்திவாதியாக்கியது !
● சுய மரியாதை - அவரை
பெரியாராக்கியது !
●அவர் தாம் பெரியார் ! !
பொ. நாகராஜன். சென்னை. 23.02.2022.
********************************************
No comments:
Post a Comment