தோழர் பொதியவெற்பன் அவர்களின் பதிவு
"பெரியார் சொற்களில் ஈரம் இல்லை. . எழுத்துகளில் ஓர் அழகுணர்ச்சி இல்லை"
- பெரியாரைப் பற்றி சுந்தர ராமசாமி
சு.ரா. ஒரு இலக்கிய வீதியில் நடந்த விபத்து. அவ்வளவுதான். அவர் ஒரு அரை வேக்காட்டு சிந்தனையாளர் என்று கடந்த ஓராண்டு காலத்தில் நான்கைந்து பதிவுகளாவது பதிந்திருப்பேன். அது ஏதோ தெய்வகுத்தம் போல நிறைய பேர் விலகிச் சென்றார்கள்.
பெரியாரைப் பற்றிய சு.ரா வின் இந்தப் பதிவும் அதை உறுதிப்படுத்துகிறது.
சு.ரா எழுத ஆரம்பித்து பதினைந்து இருபது ஆண்டுகள் வரை யாராலும் அறியப்படாமலும் சீண்டப்படாமலும்தான் இருந்தார்.
ஆனால் சுஜாதாவை கடுமையாக கிண்டல் செய்த ஜெயகாந்தனை நேரடியாக விமர்சிக்க முடியாமல் 1970 களின் பிற்பகுதியில் சுஜாதா "தமிழின் தலை சிறந்த இலக்கியவாதி சுந்தர ராமசாமி" என்று பேட்டியளித்து தன்னுடைய காழ்ப்புணர்ச்சியை தீர்த்துக் கொண்டார்.
உடனே சுஜாதா ரசிகர்கள் சுந்தர ராமசாமியை தேடத்தொடங்கினார்கள். ஜெயகாந்தனை பிடிக்காத ஒரு சிலர் சு.ரா தான் பிதாமகர் என்று தீர்மானித்து அவரிடம் எல்லாவற்றை பற்றியும் கருத்துகளைக் கேட்க ஆரம்பித்தார்கள்.
எப்படி இலக்கிய உலகில் தான் பாசாங்குகள் அற்றவன் என்று காண்பிக்க சாரு நிவேதிதா ஆடைகளை அவிழ்த்து விட்டு நிர்வாணமாக நின்று பரபரப்பை உண்டாக்கினாரோ அது போல சு.ரா. தலைகீழாக கைகளை ஊன்றிக் கொண்டு நடந்து தன்னுடைய வித்தியாசமான நடையால் கவனத்தை ஈர்த்தார். அவ்வளவுதான்.
பெரியார் ஓர் இலக்கியவாதியே அல்ல! அவர் வியர்வையும் இரத்தமும் சொட்ட சொட்ட களத்தில் நின்ற போராளி!
ஒரு போராளியின் ஆடைகள் சலவை செய்யப்படாமல் கசங்கி இருக்கின்றன என்றோ தலை கலைந்திருக்கிறது என்றோ மாதக்கணக்காக ஷேவ் செய்யாமல் மீசை தாடி மண்டிக் கிடக்கிறது என்றோ செய்யப்படும் விமர்சனங்களை விட கேனத்தனமாக இருக்கிறது "அவர் சொற்களில் ஈரம் இல்லை.. எழுத்துகளில் அழகுணர்ச்சி இல்லை" என்னும் பெரியாரைப் பற்றிய சு.ரா வின் விமர்சனங்கள்.
No comments:
Post a Comment