Friday, April 29, 2022

கால்டுவெல் உருவாக்கிய திராவிடக் கருத்தியல்

 இன்றைக்கு நாம் பேசுவதற்கான திராவிடம் குறித்த தெளிவையும், திடத்தையும் நமக்கு அடையாளம் காட்டியவர் தான் ஆய்வாளர் கார்டுவெல்! திராவிட சித்தாந்தம் தோன்ற காரணமான பேரறிஞர் கார்டுவெல் எழுதிய திராவிட மொழி ஆராய்ச்சி நூல் (1875) தற்போது தான் தமிழ் வடிவம் கண்டுள்ளது.

திராவிடம் என்றால் என்ன? அந்த மொழிக் குடும்பத்தில் என்னென்ன மொழிகள்? குறிப்பாக தமிழ் எப்படி சமஸ்கிருததிற்கு ஈடானது மட்டுமின்றி, அதைக் காட்டிலும் நுட்பமானது என்றெல்லாம் மொழி குறித்த ஆராய்ச்சியை முதன்முதல் மேற்கொண்டு அதை மிக விரிவாக ஆங்கிலத்தில் எழுதி அகிலத்திற்கே அறிவித்தவர் கார்டுவெல்!

இந்த நூல் குறித்த அருமையான உரையாடலை இன்றைய தினம்( ஏப்ரல் 28) சென்னை தரமணியில் இயங்கும் ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் ஏற்பாடு செய்திருந்தது! தமிழகத்தின் முன்னணி பத்திரிகையாளர்கள், எழுத்தாளர்கள், கல்விப்புலம் சார்ந்த பேராசிரியர்கள், மாணவர்கள் என அரங்கு நிறைந்து வழிந்தது.

பேராசிரியர் சத்தீஸ் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தார். பேராசிரியர்கள் வீ.அரசு, கி.அரங்கன், ஆய்வாளர் வி.எம்.எஸ்.சுபகுணராஜன் ஆகியோர் நூலின் சிறப்புகள் குறித்து பேசினார்கள்!

”இந்தியாவில் உள்ள அனைத்து மொழிகளுக்கும் தாய் மொழி சமஸ்கிருதமே என ஜெர்மனியில் இருந்து கொண்டு இந்தியாவிற்கே வராமல் எழுதியவர் மாக்ஸ்முல்லர்! அதை பொய்பித்துக் காண்பித்தவர் தான் கார்டுவெல்! அவர் செய்த ஆராய்ச்சியின் நீட்சியாய் தற்போது திராவிட மொழிக் குடும்பத்தில் 37 மொழிகள் கண்டெடுக்கப்பட்டு உள்ளது. அனைத்து திராவிட மொழிகளுக்கும் தமிழே தாய்மொழி என்பதும் நிருபணமாகியுள்ளது. சமஸ்கிருதத்தின் தொடர்புகள் இன்றி தன்னை தகவமைத்துக் கொண்ட ஆதி மொழியே தமிழ் என்பது உணரப்பட்டது.” என்றார் பேராசிரியர் வீ.அரசு.

அயர்லாந்து தேசத்தவரான கார்டுவெல் தமிழ்நாட்டிற்கு வந்து 42 ஆண்டுகள் திருநெல்வேலியில் உள்ள இடையான்குடியில் தங்கி பல்லாண்டுகள் ஆய்வில் உருவாக்கியதே இந்த ஆய்வு நூல்! பாதிரியாரான கார்டுவெல் இந்த ஆராய்ச்சி நூலான் இதை எழுதி வைத்து 147 ஆண்டுகள் கடந்தே  தமிழ் வடிவம் கண்டுள்ளது. இது ஒரு வகையில் மிகவும் அவலமானது” என்றார் பேராசிரியர் சுபகுணராஜன்.

அதாவது, எங்கோ பிறந்த ஒரு அயல் நாட்டு மனிதன் தன் ஆயுள் கால அர்ப்பணிப்பாய் தமிழ் மொழி குறித்த அரும்பெரும் ஆராய்ச்சி செய்து எழுதி வைத்தாலும், அதை தமிழுக்கு மொழி பெயர்பதில் எவ்வளவு சுணக்கம் காட்டியுள்ளது இந்த தமிழ்ச் சமூகம் என நினைத்தால் வேதனை தான் மிஞ்சுகிறது. அதுவும் திராவிட இயக்கங்களின் ஆட்சி ஐம்பது ஆண்டுகளை கடந்த நிலையில் தான் இது சாத்தியமாகி உள்ளது.

திராவிட மொழியியல் அறிஞர் கார்டுவெல்

உண்மையில் இதற்கு மிக ஆழ்ந்த மொழிப் புலமையும், அதி தீவிர தேடல் குணமும் எல்லாவற்றுக்கும் மேலாக நினைத்து பார்க்க முடியாத கடும் உழைப்பும் தேவை! இவை அனைத்தும் ஒருங்கே அமைய பெற்றவரான பேராசிரியர். பா.ரா.சுப்பிரமணியன் இந்த ஆராய்ச்சி நூலை மொழி பெயர்க்க முன் வந்தது தமிழ்ச் சமூகம் செய்த தவப் பயனாகும்!

இன்றைக்கு கார்டுவெல் கண்டெடுத்த திராவிடம் ஒரு அரசியல் ஆயுதமாகி, அது தமிழ் நாட்டை ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாக ஆதிக்கம் செய்கிறது! ஆயினும், இந்த அரசியல்வாதிகளில் பெரும்பாலோர்க்கு கார்டுவெல் கட்டமைத்த அடித்தளத்தில் கட்டி எழுப்பப்பட்டதே தாங்கள் அனுபவிக்கும் திராவிட ஆட்சி அதிகாரம் என்பது தெரியாது. வெகு சில திராவிட அரசியல்வாதிகளே அவரை அறிவர். அவர்களிலும் ஆழமாக தெரிந்திருப்பவர்களை விரல்விட்டு எண்ணிவிடலாம்!

உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் பொறுப்பு ஏற்க, பேராசிரியர் பா.ரா.சு மூன்றாண்டுகள் ஒரு தவவேள்வி போல ‘திராவிட அல்லது தென்னிந்தியக் குடும்ப மொழிகளின் ஒப்பிலக்கணம்’ என்ற இந்த நூலை கண்ணும் கருத்துமாக எழுதியுள்ளார். வெளியுலத் தொடர்புகளே முற்றிலும் தவிர்த்தவராய் சதா சர்வ காலம் ஒரு நாள் கூட ஓய்வின்றி அவர் மொழி பெயர்த்து தந்துள்ளார்! அந்த அரும் பெரும் உழைப்பிற்கான உரிய சன்மானம் அவருக்கு தரப்படவில்லை என அறிய வந்தோம். ஆனால், அது பற்றி அவர் கடுகளவும் வெளிக்காட்டிக் கொள்ளாமல் தன் பணியை முடித்துக் கொடுத்துள்ளதாகத் தெரிகிறது.

இறுதியில் பேராசிரியர் பா.ரா.சுப்பிரமணியன் நிறைவுரையாற்றினார். கார்டுவெல் என்பவர் யார்? அவரது இயல்புகள் என்ன? அவர் வாழ்ந்த வாழ்க்கை எத்தகையது என அற்புதமான, சுவையான தகவல்களையும், இந்த நூல் எழுதிய போது தனக்கு ஏற்ப்பட்ட அனுபவங்களையும் பா.ரா.சு சொன்னார். அவரது பேச்சானது, ‘நிறைகுடம் தழும்பாது’ என்பதற்கொப்ப அமைந்திருந்தது.

சாவித்திரி கண்ணன்

No comments:

Post a Comment