பெரியார் இயக்கம் வாழ்க நரியார் கூட்டம் ஒழிக
பாரதிதாசன்
அறுசீர் விருத்தம்
தமிழகம் மீள வேண்டும்
தமிழர்கள் வாழ வேண்டும்
அமிழ்தான இக்கொள் கைக்கே
அருந்தொண்டு செய்ப வர்போல்
தமைக்காட்டிக் கொண்டே சில்லோர்
தமதுடல் வளர்க்கின் றார்கள்;
இமைப்பினில் இவர்கள் எல்லாம்
ஒழிந்தால்தான் இயக்கம் வாழும்! 1
மக்களை மீட்க நல்ல
மனம்மொழி மெய்கள் வேண்டும்.
இக்கொள்கைக் கான தொண்டே
எந்நாளும் செய்ப வர்போல்
பொய்க்கோலம் காட்டிச் சில்லோர்
பொதுப்பணம் கருது கின்றார்
கைக்கூலி கள்தொ டர்பு
கழன்றால்தான் இயக்கம் வாழும்! 2
ஆண்டாண்டு தோறும் மக்கள்
ஆரியம் தனில்ஆழ் கின்றார்
மீண்டாலே தமிழர் மீள்வார்
எனுமிந்த மேன்மைக் கொள்கை
பூண்டார்போல் காட்டித் தாங்கள்
புதுக்கட்சி வளர்க்கும் புல்லர்
வேண்டாத பெரியார் காலை
விட்டால்தான் இயக்கம் வாழும். 3
தன்னலம் நீக்கி இன்பத்
தமிழக நலமே காக்க
என்னுமிக் கொள்கைக் காக
என்றுதொண் டாற்று வார்போல்,மின்னிடு வெண்பொற் காசு,
நடிகர்பால் மின்னக் கண்டால்
அன்னானின் அடிவீழ் வார்கள்
அகன்றால்தான் இயக்கம் வாழும்! 4
அழியாத பார்ப்புக் கோட்டை
அழித்திட வேண்டு மென்ற
பழியாத கொள்கைக் காக
உழைப்பதாய்ப் பசப்பிச் சில்லோர்
செழியாதார் செழிப்பார் என்று
சிபாரிசால் சுரண்டு வார்கள்.
அழையாதார் வீட்டில் உண்போன்
அகன்றால்தான் இயக்கம் வாழும்! 5
பகலென்றும் இரவே என்றும்
பாராது மக்கள் தம்மை
அகலாது செய்வ தாமோர்
அன்புத்தொண் டியற்று வார்போல்
மிகக்காட்டிப் பெரியார் தம்மை
வெருட்டவும் கனவு காண்பார்
வகைகெட்டார் நாண மில்லார்
ஒழிந்தால்தான் இயக்கம் வாழும்! 6
அவன்போனான் இவனும் போனான்
அடுத்தொரு குள்ளன் போனான்
எவன்போனான் எனினும் நாட்டில்
இருக்கின்றார் பெரியார் என்றால்
குவிந்தது தமிழர் கூட்டம்
குலைந்தது பார்ப்பான் ஓட்டம்;
நவிலும்இந் நிலையில் தீய
நரிக்கூட்டம் ஒழிதல் நன்றே! 7
தானின்றேல் தலையே இல்லை
என்றுபேன் சாற்றி னாற்போல்
நானில்லை எனில்இ யக்கம்
நடக்காதென் றானாம் ஓர்ஆள்!
ஏன்என்று கேட்ட தற்கு
யான்உழைப் பவன்என் றானாம்,
பூனை கண் மூடிக் கொண்டால்
உலகமா இருண்டு போகும்? 8
உழைப்புக்குக் கூலி யாகப்
பெரியாரை ஒழிப்ப துண்டோ?
பிழைப்புக்கு வழிசெய் தாரே
திருமணம் பெறச்செய் தாரே
தழைப்பித்த நிலத்தைப் பைங்கூழ்
தாக்கவா முடியும்? அன்னோன்
கொழுப்பினை அடக்கு தற்குப்
பெரியார்க்குக் கோலா வேண்டும்? 9
பெரியாரின் பேர்ஒ ழிக்க
முதல்முழக் கம்செய் தோன்யார்?
தெரியாதா? அந்த ஆளே
திருத்தொண்டு செய்தோன் என்றும்
பிரியாமல் இருந்தேன் என்றும்
பேசிஆள் சேர்க்கின் றானாம்
புரியாத இருளில் உள்ளான்
விடிந்தபின் புரிந்து கொள்வான்! 10
பொன்கையில் இருந்த துண்டா?
புகழ்தானும் இருந்த துண்டா?
தன்கையை ஊன்றித் தானே
எழுந்திடும் தகுதி உண்டா?
முன்கைதந் தருளி னாரின்
முழுதுடல் வெட்ட எண்ணும்
புன்தொழில் உடையான் ஓடிப்
போனால்தான் இயக்கம் வாழும்! 11
மிகுதியாய்த் தீமை செய்தோர்
தில்லியார்! பெரியார்க் குள்ள
தகுதியால் தமிழ கத்தைச்
சாகுமுன் மீட்க வேண்டும்
புகுந்தது தமிழ்ப்பட் டாளம்
போர்ப்படைத் தலைவர் தம்மை
இகழ்தலும் கவிழ்க்கும் வஞ்சம்
இழைத்தலும் செய்வோன் யாவன்? 12
- தமிழுக்கு அமுதென்று பேர், ப. 29-32, 1978;
குயில், 7.7.1959
No comments:
Post a Comment