தந்தை பெரியார் வாழ்க்கை வரலாறு - கவிஞர் கருணானந்தம் - முதற் பதிப்பு 1979 - மூன்றாம் பதிப்பு 2022 - தமிழ்க் குடிஅரசு பதிப்பகம் - பக்கங்கள் 776 - விலை ₹ 600/
● தந்தை பெரியார் ஒரு சுய சிந்தனையாளர்; சுய மரியாதைக்காரர்; சுய படைப்பாளர்; சுய ஒழுக்க சீலர்; சுய வழிகாட்டி ! தனது வாழ்நாள் முழுவதும் பேசியதும் எழுதியதும் - குடிஅரசு, விடுதலை, உண்மை இதழ்களில் வெளியாகி இன்றும் ஆவணங்களாக பாதுகாக்கப் படுகின்றன. இருப்பினும் அவரின் சுயசரிதையை பெரியார் எழுதாமல் போய்விட்டார் !
● பெரியாரின் ஆரம்ப கால அறுபது ஆண்டுகள் (1879 - 1939) வரலாற்றை, ' தமிழர் தலைவர் ' என்ற நூலை சாமி.சிதம்பரனார் மிகவும் சிறப்பாக எழுதி, பெரியாரிடமே காட்டி ஒப்புதல் பெற்று வெளியிட்டார். பின்பு அவரது இறுதிகாலம் வரையிலான வரலாற்றை பல தொகுதிகளாக ஆசிரியர் கி. வீரமணி எழுதி வெளியிட்டார் !
● தந்தை பெரியாரின் வாழ்க்கை முழுவதையும், அவரது பிறப்பு முதல் இறப்பு வரை, ஒரு தகவல்கூட விட்டு விடாமல், பெரியாரே தனது சொந்த டைரியையும் தனது படைப்புகளையும் ஆதாரமாக கொண்டு எழுதியது போல, பெரியாரின் நெருக்கமான தொண்டர், கவிஞர் கருணானந்தம் குடிஅரசு, விடுதலை, உண்மை இதழ்களின் அடிப்படையில், ஏறத்தாழ ஓராண்டு சென்னையிலுள்ள ' பெரியார் பகுத்தறிவு நூலக ஆய்வகத்தில் ' தினமும் வந்து குறிப்புகள் எடுத்து, இந்த வரலாற்று நூலை சிறப்பாக படைத்துள்ளார். நூலை பெரியாரின் நூற்றாண்டையொட்டி 1979ல் முதற் பதிப்பாக வெளியிட்டிருந்தார் !
● தந்தை பெரியாரின் இந்த வாழ்க்கை வரலாற்று நூல், முழுமையான தகவல் களஞ்சியமாக, ஒரே தொகுதியாக உள்ளதால் பகுத்தறிவாளர்களும், திராவிட இயக்கத்தவரும், பெரியாரியவாதிகளும் வாங்கி படித்து பயன் பெற்ற காரணத்தால், இதன் மூன்றாவது பதிப்பை பெரியாரிய சிந்தனையாளரும், எழுத்தாளருமான தோழர் வாலாசா வல்லவன் தனது முயற்சியால், இந்த நூலை சீரிய முறையில் வெளியிட்டுள்ளார். அவருக்கு பெரியாரியவாதிகள் மிகவும் கடமைப் பட்டுள்ளார்கள் !
● தந்தை பெரியாரின் வாழ்க்கை வரலாற்றை கூறும் இந்த நூலை களஞ்சியம் என்பதா ? பொக்கிஷம் என்பதா ? இது ஆவணமா இல்லை ஆவணங்களின் ஆவணமா ? பெரியாரின் சாதனைகள்; எழுத்துக்கள்; பேச்சுகள்; நிகழ்வுகள்; போராட்டங்கள்; அறிவிப்புகள்; மறியல்கள்; மடல்கள்; சந்திப்புகள்; பேட்டிகள்; விளக்கங்கள்; தீர்மானங்கள்; இரங்கல் செய்திகள் என எல்லாம் உண்டு இந்த நூலில் ! இவைகளை எல்லாம் உண்டு செறித்த நூல் இது !
● எவ்வளவு தகவல்கள் ! எவ்வளவு செய்திகள் ! எவ்வளவு ஆச்சர்யங்கள் ! அடுக்கி கொண்டே போகலாம் !
பானைச் சோறுக்கு பதம் பார்க்க ஒரு சோறு போதும் ! இதுவோ களஞ்சியம் ! அதனால் தான் கையளவு எடுத்து தருகிறேன் !
படித்து பார்க்கவும் - அதை நினைவில் நிறுத்திப் பார்க்கவும் !
இதோ தகவல்கள் :
● தந்தை பெரியார் - ஈ.வெ.ராமசாமி பிறந்தது - 17.09.1879. மறைந்தது - 24.12.1973. வாழ்ந்த காலங்கள் - 94 ஆண்டுகள், 98 நாட்கள். ஏறத்தாழ 55 ஆண்டுகள் பொது வாழ்க்கை. சாதி வேரோடு அழிவதற்காக ஈரோட்டில் பிறந்தார் !
● 1920 முதல் 1925 வரை காங்கிரசில் இருந்தார். 1925 காங்கிரசிலிருந்து வெளியேறி சுயமரியாதை இயக்கத்தை தோற்றுவித்தார். ஈரோட்டில் குடிஅரசு வார இதழை 02.05.1925ல் துவக்கினார் !
● கேரளாவின் வைக்கத்தில் நடந்த போராட்டத்தில் பங்கு பெற்று, சிறை சென்று வெற்றியடைந்து பின்பு வைக்கத்தில் நடைபெற்ற வெற்றி விழா நிகழ்ச்சியில் 29.11.1925 அன்று பெரியார் கலந்து கொண்டார். அவருக்கு ' வைக்கம் வீரர் ' பட்டம் சூட்டப்பட்டது !
● செங்கல்பட்டில் முதல் சுயமரியாதை மாகாண மாநாடு பிப்ரவரி 17, 18 தேதிகளில் 1929ம் ஆண்டு நடைபெற்றது. அதில் வரலாற்று சிறப்பு மிக்க தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
1) சாதிப் பட்டங்களை விட்டொழித்தல் 2) மதக் குறிகளை உடலில் அணியாதிருத்தல் 3) தீண்டாமையை ஒழித்தல் 4) பெண்களுக்கு சொத்துரிமை இப்படி பல முற்போக்கான தீர்மானங்கள் !
● ஈரோட்டில் இரண்டாவது சுயமரியாதை மாகாண மாநாடு மே 10, 11 தேதிகளில் 1931ம் ஆண்டு நடைபெற்றது. இந்தியாவிலேயே ஒரு அரசியல் - சமுதாய மாநாட்டில், அனைத்து சாதி, மத மக்களையும் ஒன்றாக அமர வைத்து - சமத்துவ பந்தி பறிமாறப்பட்டது. உணவு, சமைத்து பறிமாறுகின்றவர்கள் யாவரும் தாழ்த்தப்பட்டோர் என்பதும் - பெரியாரின் சாதனைகளில் மிக முக்கியமான ஒன்றாகும் !
● பெரியார் ரஷ்யாவுக்கு 1932ம் ஆண்டு நீண்ட பயணம் மேற் கொண்டார். அங்கு பல தொழிற்சாலைகளிலும் பொதுக் கூட்டங்களிலும் உரையாற்றினார்.
மே 1ம் தேதி மாஸ்கோ செஞ் சதுக்கத்தில் நடைபெற்ற மேதின அணிவகுப்பை பார்வையிட்டார். அன்று ரஷ்ய தலைவராக இருந்த ஸ்டாலினுக்கு, ' இந்தியாவிலிருந்து வந்துள்ள நாத்திகத் தலைவர் ' என பெரியாரை அறிமுகம் செய்து வைத்தார்கள் !
● விடுதலை இதழ் 1935ல் சென்னையில் துவங்கப்பட்டது. தமிழ் எழுத்து சீர்திருத்தத்தை பெரியார் தமது பத்திரிக்கைகளிலும் புத்தகங்களிலும் 13.01.1935 முதல் நடைமுறை படுத்தினார் !
● சென்னை மாகாணத்தின் முதலமைச்சராக ராஜாஜி இருந்த போது - 25.04.1938 முதல் இந்தி கட்டாய பாடமாக பள்ளியில் திணிக்கப்பட்டது. மேலும் கிராம புறங்களில் ஏழை மக்களுக்காக நீதிக் கட்சி ஆட்சியின் போது துவக்கப் பட்டிருந்த 2200 ஆரம்ப பள்ளிகளை மூடி விடுவதாகவும் ராஜாஜி அறிவித்தார் !
● பெரியார் தலைமையில் இந்தியை எதிர்த்து பெரிய போராட்டம் நடந்தது. பெரியார் தலைமையில் சென்னை மெரினா கடற்கரையில் 26.06.1938 அன்று இலட்சக்கணக்கான மக்கள் கூடி " தமிழ் வாழ்க .. இந்தி ஒழிக " என்ற கோஷம் விண்னைப் பிளக்க முழங்கினார்கள் !
தாய் மொழிக்கு ஆதரவாகவும், அந்நிய மொழித் திணிப்பை எதிர்த்தும் கூடிய பெரும் கூட்டம் - இதுவரை வரலாறு காணாத செய்தியானது !
● சென்னையில் தமிழ் நாட்டுப் பெண்கள் மாநாடு 13.11.1938 அன்று நடைபெற்றது. மாநாட்டிற்கு மறைமலையடிகளாரின் மகளான நீலாம்பிகை அம்மையார் தலைமை வகித்து, தோழர் ஈ.வெ.ராமசாமிக்கு, ' பெரியார் ' என்ற பட்டத்தை வழங்கினார்கள் !
● சேலத்தில் 27.08.1944 அன்று நடைபெற்ற நீதிக்கட்சியின் மாநாட்டில், அண்ணா கொண்டு வந்த தீர்மானத்தின்படி, கட்சியின் பெயரை - திராவிடர் கழகம் என மாற்றுவதாக முடிவு செய்யப் பட்டது !
திராவிடர் கழகம் உதயமானது !
● சென்னையில் 11.10.1945 அன்று நடைபெற்ற மாபெரும் கூட்டத்தில் பெரியார் உரையாற்றும் போது, " நமது இழிநிலையை விளக்கிட, எப்போதும் கருஞ்சட்டையை அணியலாம் " ..என்ற கருத்தினை தெரிவித்தார் !
● மதுரையில் முதலாவது கருஞ்சட்டை மாநாடு மே திங்கள் 11, 12 தேதிகளில் 1946ல் நடைபெற்றது. மாநாட்டு பந்தலுக்கு சனாதன கும்பல் தீ வைத்து தடுக்க நினைத்தும் - மாநாடு திட்டமிட்டபடி நடந்தேறியது !
● பிராமணாள் கஃபே - பிராமணாள் என்று எழுதப்பட்ட எழுத்தை அழிக்க நடத்திய போராட்டம் தமிழகமெங்கும் நடந்தது. சென்னை முரளி கஃபே முன்பு நடந்த போராட்டம் 210 நாட்கள் தொடர்ந்து நடைபெற்றது. 837 பேர் கைதாகி தண்டனையும் பெற்றார்கள். இறுதியில் கழகத்தினரின் உறுதி கண்டு, ஓட்டல் உரிமையாளர்கள் பெரியாரை நேரில் சந்தித்து, மன்னிப்பு கோரி, பெயர் பலகையை மாற்றியமைத்தார்கள் !
● பெரியார் அன்று சொன்னது இன்றும் பொருந்துகிறது என்பதற்கு ஆயிரம் உதாரணம் தர முடியும். அதில் ஒன்று:
" வெள்ளைக்காரனுக்கு பயந்து சுதந்திரம் கேட்டதானது - சாணிக்குப் பயந்து, மலத்தின் மீது கால் வைத்தது போல் ஆகிவிட்டது ! " ..(06.03.1962)
● பெரியார் சொன்ன மூன்று பேய்களும்; ஐந்து நோய்களும் !
மூன்று பேய்கள் - கடவுள் | சாதி, மதம் | ஜனநாயகம் |
ஐந்து நோய்கள் - பார்ப்பான் | பத்திரிகை | அரசியல் கட்சி | தேர்தல் | சினிமா |... (19.05.1962)
● காமராஜர் தலைமையிலான காங்கிரசை தோற்கடித்து, அண்ணா தலைமையிலான திமுக - 06.03.1967 அன்று தமிழகத்தில் அரியணை ஏறியது !
● தமிழக சட்டமன்றத்தில் முதல்வர் அண்ணாவிடம் 20.06.1967 அன்று, " பெரியாருக்கு தியாகிகள் பென்சனும் மானியமும் வழங்கப்படுமா ? " ...என்ற கேள்விக்கு பதிலளித்த அண்ணா, " இந்த அமைச்சரவையையே அவருக்கு காணிக்கையாக கொடுத்திருக்கிறோம் ! " என்றார் பெருமையாக. அந்த பேரறிஞர் அண்ணா 03.02.1969 அன்று மறைந்தார் !
● உண்மை இதழ் 14.01.1970 அன்று திருச்சியிலிருந்து வெளியானது. பகுத்தறிவாளர் கழகம் 06.09.1970 அன்று சென்னையில் துவங்கப்பட்டது.
● மதுரையில் இரண்டாவது கருஞ்சட்டை மாநாடு 30.09.1973 அன்று நடைபெற்றது. ( அதில் நான் கலந்து கொண்டு தந்தை பெரியாரை சந்தித்து அவரிடம், அவர் எழுதிய ' உயர் எண்ணங்கள் ' நூலில் அவரது கையொப்பம் பெற்ற தருணத்தை மறக்க இயலாது )
● தமிழர் சமுதாய இழிவு ஒழிப்பு மாநாடு சென்னையில் டிசம்பர் 08, 09 தேதிகளில் 1973ம் ஆண்டு சிறப்பாக நடை பெற்றது.
● தந்தை பெரியாரின் இறுதிப் பேருரை - சென்னை தியாகராயர் நகரில் 19.12.1973 அன்று மக்களால் இறுதியாக கேட்கப்பட்டது !
● வேலூர் சி.எம். சி. மருத்துவமனையில் 24.12.1973 அன்று காலை 7.22 க்கு பகுத்தறிவு பகலவன் மறைந்தார் !
வரலாற்று நாயகனின் வரலாறு நிறைவு பெற்றது !
● இந்த களஞ்சியத்திலிருந்து நான் அறிமுகப்படுத்தியதோ ஒரு சதவீதம் கூட இருக்காது !
நூலை முழுவதும் படித்தால் - அதில் தமிழகம் இருக்கும்; தமிழக அரசியல் இருக்கும்; சுயமரியாதை இயக்கம் இருக்கும்; திராவிட உணர்வு இருக்கும்; எல்லாவற்றையும் இணைக்கும் தந்தை பெரியாரின் வாழ்க்கை வரலாறு இருக்கும் !
● இந்தப் பெரும் பணியை செய்து விட்டு நம்மை விட்டு பிரிந்த கவிஞர் கருணானந்தம் அவர்களும் நம் நினைவில் நிற்கிறார் !
பொ. நாகராஜன்,
பெரியாரிய ஆய்வாளர்.
சென்னை. 10.05.2022.
********************************************
No comments:
Post a Comment