Thursday, July 7, 2022

மணிப்புரி மொழியில் திருக்குறள்

 உலகப் பொதுமறையாம் திருக்குறளை மணிப்பூர் மொழியில் மொழி பெயர்த்து வெளியிட்ட மணிப்பூர் மங்கை ரேபிகா தேவி அவருக்கு தமிழகத் தமிழர்களின் சார்பாக நம் வாழ்த்துகளை பகிர்வோம் !

மணிப்புரி மொழியில் மொழி பெயர்க்கப்பட்ட திருக்குறள் நூல் வெளியீட்டு விழா, வியாழக்கிழமை மணிப்பூர் மாநில தலைநகரமான இம்பாலில் நடைபெற்றது.

மணிப்பூரை சேர்ந்த திருமதி.சொய்பம் ரேபிகா தேவி அவர்கள் திருக்குறளை மொழிபெயர்ப்பு செய்துள்ளார். இந்நூல் வெளியீட்டு விழா, இம்பாலில் நடைபெற்றது. நூலை மணிப்பூர் மாநில கவர்னர் திரு.வீ.கே. துக்கள் அவர்கள் வெளியிட்டார்.

திருக்குறளை தமிழகத் தமிழர்களே தங்கள் பிள்ளைகளுக்கு சொல்லிக் கொடுக்க தயங்கும் இக்காலத்தில் திருக்குறளின் பெருமையை உணர்ந்து ஒரு மணிப்பூர் மங்கை திருக்குறளை தனது தாய் மொழியில் மொழி பெயர்த்திருப்பது தமிழர்களுக்கு பெருமை சேர்த்துள்ளது. மேலும் திருக்குறளை தேசிய நூலாக அறிவிக்க இந்திய அரசு இன்று வரை ஒப்புதல் வழங்கவில்லை . அதனால் திருக்குறள் இந்திய பாடத்திட்டங்களில் சேர்க்கப்படவில்லை.

தமிழ்நாட்டு பிள்ளைகள் வடநாட்டு நூல்களை படிக்கும் நிலையில் தமிழகத்தின் ஒப்பற்ற திருக்குறள் , தொல்காப்பியம் போன்ற நூல்களை வடநாட்டிற்கு நாம் கொண்டு சென்று சேர்க்க முடியவில்லை. ரேபிகா தேவி போன்றவர்களின் உதவியால் இப்போது தேசங்கள் கடந்து திருக்குறள் சென்றுள்ளது நமக்கு மகிழ்ச்சியை தருகிறது. தமிழகத்தில் உள்ள தமிழ் அமைப்புகள் ரேபிகா தேவி போன்ற தமிழ் ஆர்வலர்களை பாராட்டத் தயங்கக் கூடாது . அவருக்கு தமிழக அரசியல் கட்சிகள் மற்றும் தமிழக அரசும் வாழ்த்துகளை தெரிவிக்க வேண்டும்.

நிகழ்ச்சியில் கவர்னரின் செயலாளர் டாக்டர். ஆர்.கே.நிமாய் சிங், முதலமைச்சரின் செயலாளர் திரு. என்.அசோக் குமார் (இ.ஆ. ப). சி.ஐ.சீ.டி இயக்குனர் திருமதி. வீ.ஜி.பூமா, சுரச்சந்பூர் துணை கமிசனர் திருமதி.ஜெசிந்தா லாசரஸ் (இ.ஆ.ப), உக்ருல் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் திரு. செல்வன் நாகரத்தினம் (இ.கா.ப), திருமதி.சொய்பம் ரேபிகா தேவி, மோரே தமிழ்ச் சங்க நிர்வாகிகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

மோரே தமிழ்ச் சங்கத்திற்கும் , மணிப்பூர் வாழ் தமிழர்களுக்கும் நம் பாராட்டுகள் !(15.3.2014 முகநூலில் வந்த பதிவு)

No comments:

Post a Comment