பகைவனை இனிய துணைவன் ஆக்கிக் கொள்ள வேண்டும்!
திறனாய்வுக் கூட்டத்தில் பொதுச் செயலாளர் முழக்கம்
தம்பி வா தலைமை தாங்க வா! உன் ஆணைக்கு அடங்கி நடப்போம் என காவிரியாற்றங்கரையில் 41 வருடங்களுக்கு முன்னால் அறிஞர் பெருந்தகை அண்ணா அவர்களாலே மாநில மாநாட்டில் முன்மொழியப்பட்ட திராவிடர் இயக்கத்தின் தகைசால் தலைவரும் நேர்மை, ஒழுக்கம் இவற்றுக்கெல்லாம் பொது வாழ்விலே இலக்கணம் வகுத்திருக்கின்றவரும் எனது பேரன்பிற்கும் மரியாதைக்கும் என்றைக்கும் உரியவரான இவ்விழாவில் திருக்குறளும் திராவிடர் இயக்கமும் நூலை திறனாய்வு செய்ய வருகை தந்திருக்கின்ற போற்றுதலுக்குரிய அண்ணன் டாக்டர் நாவலர் அவர்களை மனமகிழ்ச்சி யோடு வரவேற்கிறேன்.
தழைத்திடும் பாச உணர்வோடு, இந்த இலக்கிய நிகழ்ச்சியில் அரசியல் எல்லைகளைக் கடந்து நாவலரின் உரைதனைக் கேட்க வருகை தந்திருக்கின்ற அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத் தோழர்களையும் வரவேற்கிறேன்.(கைதட்டல்). சரியாக இருபது ஆண்டுகளுக்கு பின்னர் ஒரே மேடையில் உரையாற்றுகின்ற வாய்ப்பு என்பதை விட அண்ணன் நாவலர் அவர்கள் நல்லுரை பகர்ந்திடக் கூடிய பெறற்கரிய பேரு எனக்கக் கிடைத்திருக்கின்றது.
1977 ஆம் வருடம் பிப்ரவரி 24 ஆம் நாள் நாடாளுமன்றத் தேர்தல் நெருக்கடி நிலை பிரகடனத்திற்குப் பின்னர் அறிவிக்கப்பட்ட பரபரப்பான சூழ்நிலையில் 12 திங்கள் சிறைக் கொட்டடியிலிருந்து நான் வெளிவந்த நேரத்தில் தென் மாவட்டங்களில் கழகத்தின் பிரச்சாரத்திற்கு வந்த அண்ணன் நாவலர் அவர்களை நான் உடன் அழைத்துச் சென்று கோவில்பட்டியிலும், ஒட்டப்பிடாரத்திலும், விளாத்திக்குளத்திலும், திருவைக்குண்டத்திலும், திருச்செந்தூரிலும், நாகர்கோவிலிலும், நெல்லையிலும், திருக்குற்றாலத்தி லும், சங்கரன்கோவில் இங்கெல்லாம் பிரச்சார நிகழ்ச்சிகளிலே அவரோடு சென்று அண்ணன் நாவலர் அவர்கள் உரையாற்றிய அந்த நிகழ்ச்சிகளை முடித்துக் கொண்டு நெல்லையிலே அவருடன் தங்கியதும், காலை 6 மணியளவிலே அவர் தன் மனதிலே இருந்த பல எண்ணங்களை என்னிடத்திலே வெளியிட்டதும் பசுமையாக என் நினைவிலே நிற்கின்றது.
20 ஆண்டுகளுக்குப் பின்னாலே அண்ணன் அவர்கள் பேசுகின்ற ஒரு நிகழ்ச்சிக்கத் தலைமை தாங்கக் கூடிய வாய்ப்புக் கிடைத்திருக்கின்றது.26 ஆண்டுகளுக்குப் பின்னாலே என் வாழ்க்கையில் நடைபெற்ற வாழ் நாளெல்லாம் மகிழ்ச்சியூட்டக்கூடிய ஒரு நல்ல திருநாளையும் நினைவூட்டு கின்றது. ஆம். 26 வருடங்களுக்கு முன்னர் 1971 ஆம் வருடம் ஜூன் மாதம் 14 ஆம் நாள் அருவி கொட்டுகின்ற குற்றலாத் திருநகரில் அண்ணன் நாவலர் அவர்கள் எனது திருமணத்திற்குத் தலைமையேற்று நடத்திக் கொடுத்தார்கள்.
தமிழருவி கொட்டிடும் முழக்கம் ‡ தமிழர்கள் போற்றிடும் கருத்துச் சங்கீதம் என்று கவிஞர்களால் பாராட்டப்படுகின்ற நாவலர் திருக்குறளின் கருத்துக்களைத் தமிழகத்திலே மூலை முடுக்கெல்லாம் எடுத்துச் சொன்ன நடமாடும் பல்கலைக் கழகம் இங்கே உரையாற்ற இருக்கின்றார்.
வந்திருப்பவர் யார் தெரியுமா? இரா. நெடுஞ்செழியன் -இலக்கணப் பிழை வரா இரா. நெடுஞ்செழியன் -தமிழகத்திற்கு ஒரேயயாரு நெடுஞ் செழியன் -கவிஞர் கண்ணதாசன் அவர்கள் நாவலரைப் பற்றி இப்படிக் குறிப்பிட்டார்கள். 1956 ஆம் ஆண்டு திராவிட முன்னேற்றக் கழகத்தின் மாநில மாநாட்டில் கழகத்தினுடைய பொதுச் செயலாளராகப் பொறுப்பேற்ற நாவலரைத் தலைமை தாங்க அண்ணா அவர்கள் விளித்துப் பேசியதை தான் எனது உரையின் தொடக்கமாகக் குறிப்பிட்டேன்.
திராவிட முன்னேற்றக் கழகம் தேர்தலில் பங்கேற்பதா? வேண்டாமா? என்ற சர்ச்சை எழுந்த வேளையில், பொதுக்குழுவிலே அதுபற்றி ஜனநாயக முறையிலே முடிவெடுத்த அந்த மாநாட்டில், அண்ணா அவர்கள் நாவலரைத் தலைமை தாங்க அழைத்தார். அவர் தன்னுடைய உரையிலே குறிப் பிடுகின்ற போது, ‘நாட்டுக்குக் கிடைத்த நாவலரே, கழகத்தைக் கட்டிக் காக்கும் காவலரே, கட்டிக் காக்கும் பொறுப்பினை ஏற்பதற்காக பொதுச் செயலாளர் ஆனவரே’ என்றெல்லாம் சொல்லிவிட்டு அண்ணா அவர்கள், ‘தலைவர் அவர்களே நீங்கள் இடுகின்ற ஆணைக்கு நாங்கள் கட்டுப்படுகிறோம்’ எனக் குறிப்பிட்டார். இத்தகைய ஜனநாயகப் பண்பு அறிஞர் அண்ணா அவர் களுக்கே உரித்தானது.
சுதந்திரன் ஏட்டினுடைய ஆசிரியர் இலங்கைத் தீவிலேயிருந்து தமிழகத் திற்கு வந்த போது, பொதுச்செயலாளர் பொறுப்பினை நாவலர் அவர்கள் ஏற்பதற்கு ஓராண்டிற்கு முன்னரே நான் நாவலரைக் கழகத்தின் பொதுச் செயலாளர் ஆக்க எண்ணுகிறேன் என்று அண்ணா அவர்கள் அவரிடத் திலே குறிப்பிட்டதையும் இந்த நூலிலே காணலாம்.
நான் ஒருமுறை நாவலர் அவர்களோடு உரையாடிக் கொண்டிருந்த போது கடந்தகாலச் சம்பவங்கள் நினைவு கூர்ந்து குறிப்பிட்டார்கள். ‘திருச்சி மாநாடு நடப்பதற்கு ஒரு வருட காலத்திற்கு முன்னால் நான் அண்ணாவோடு விழுப்புரத்தை நோக்கிப் போய்க் கொண்டிருக்கின்ற போது, மதுராந்தகம் ஏரிக்கரையிலே கார் பழுதாகி விட்டது. சற்று நேரம் அமர்ந்து உரையாடிக் கொண்டிருக்கலாம் என்று என்னை அழைத்து அந்த ஏரிக்கரை அருகிலே அழைத்துக் கொண்டுச் சென்றார் -மனம் விட்டுப் பேசினார். நான் கட்சிக்குப் பொதுச் செயலாளராக உன்ன ஆக்கலாம் என நினைக்கிறேன் என்று சொன்னார். அதற்கு நான் பதில் சொன்னேன், ‘உங்கள் ஆற்றலாலும் அறிவத் திறனாலும் இலட்சோப இலட்சம் இளைஞர்கள் உங்களை நாடி வருகின்றார்கள் -இந்தத் தமிழர் சமுதாயம் உங்கள் தலைமையை ஏற்றுப் பின் தொடர்ந்து வருகிறது. உங்கள் ஆற்றலால்தான் இந்த இயக்கத்தை வளர்க்க முடியும். நீங்கள்தான் பொதுச் செயலாளராக இருந்து எங்களை வழிநடத்த முடியும். உங்களுடைய ஆற்றல் எனக்கு இல்லை. நான் அந்தப் பொறுப்பை ஏற்றால் இந்த இயக்கத்தை அந்த அளவிற்கு வளர்க்க முடியாது. எனவே, நீங்கள்தான் அந்தப் பொறுப்பிலே நீடிக்க வேண்டும்’ என்று நான் கூறிய போது, அதற்கு அண்ணா அவர்கள் ‘நான் வலுவோடு இருக்கின்ற போதே, உன்னைப் போன்றவர்களையயல்லாம் வளர்க்க விரும்புகின்றேன். இந்த இயக்கத்திலே தலைமைப் பொறுப்பை ஏற்கக் கூடிய அளவிற்கு வளர்க்க விரும்புகின்றேன். நான் பலவீனமாகிவிட்டால், எனக்கு இந்த வலிமை குறைந்துவிட்டால் அதற்குப் பிறகு உன்னைப் போன்றவர்களை யயல்லாம் நான் பெரிய தலைவர்களாக வலுவுள்ளவர்களாக ஆக்கிவிட முடியாது. எது வரினும் அதைத் தாங்கிக் கொண்டு இயக்கத்தை மேலும் வலுப்படுத்த நான் உறுதுணையாக இருக்கிறேன். ஆகவே, இந்தக் காலக் கட்டத்திலேயே கட்சியின் பொதுச் செயலாளராக உன்னை ஆக்க விரும்பு கிறேன்’ என்றும், இன்னும் வேறு பல செய்திகளையயல்லாம் சொன்னார் கள். அரசியல் நாகரிகம் கருதி நான் அந்த உரையாடலை இங்கே குறிப்பிட விரும்பவில்லை.
அப்படி அண்ணா அவர்களாலே இயக்கத்தினுடைய பொதுச்செயலாள ராக வரவேண்டுமென்று எடுக்கப்பட்ட முடிவு செயல்படுத்தப்பட்டது. மேலும் அண்ணா சொல்லுகின்றார் -நாவலருக்கு கூச்ச சுபாவம் அதிகம். அதனால் அவரது இல்லத்தை எனது இருப்பிடமாக ஆக்கிக் கொண்டால்தான் என் எண்ணங்கள் துணைக் கழகங்கள் -துளைக்கும் கழகங்கள் -தூது விடும் கழகங்ள் -வம்புக்கழைக்கும் கழகங்கள் இவைகளைப் பற்றி நான் என்ன கருதுகிறேன் என்பதைப் பற்றியும், உரையாடி, உரையாடி ஒரு நிலையை ஏற்படுத்த முடியும் என்ற எண்ணத்தின் உந்துதலால் நாவலர் வீட்டுச் சைவத்தையும் நான் தாங்கிக் கொண்டிருக்கிறேன் என்று அண்ணா அவர்கள் குறிப்பிட்டதையும் இங்கே நினைவூட்ட விரும்புகின்றேன்.
அண்ணா அவர்கள் நாவலரைப் பற்றி பெரியார் எத்தகைய எண்ணம் கொண்டிருந்தார் எனச் சொல்லுகின்றார் - குறைகளைச் சுட்டிக்காட்டுவது பெரியாரின் இயல்பு. எவரிடத்தில் பிழை இருந்தாலும் அதைச் சொல்வார். ஆனால் அவர் பிழை காண முடியாத தோழர் நெடுஞ்செழியன் என்று அண்ணா எழுதுகிறார். இன்னும் ஒரு படி மேலே சென்று என்னைவிட அடக்க சுபாவம் அதிகமாகக் கொண்டவர். எனக்குக் கூட கோபம் வந்துவிடும். நாவலருக்குக் கோபம் வராது என்று சொன்னதோடு மட்டுமல்லாமல் அண்ணா சொல்லுகின்றார்- என்னிடமுள்ள சில குறைகளும் நீக்கப்பட்ட புடம் போட்ட தங்கமாக கட்சிக்குப் பொதுச்செயலாளராக நெடுஞ்செழியன் இருக்கின்றார் என்று அண்ணா அவர்களால் பாராட்டப்பட்ட எங்கள் அண்ணனே, அதைவிடவா உங்களுக்கு வேறு பாராட்டு வேண்டும்?
நீங்கள் திருக்குறள் திறனாய்வுக்குத் திறனாய்வு உரையாற்ற வந்திருக் கின்றீர்கள். அண்ணா சொல்லுகிறார் -கரூர் ஆற்று மணலில் நாவலர் இலக்கிய விருந்தளித்தார். நான் மெய்சிலிர்த்து போனேன் என்று சொல்லி, தமிழ்நாட்டிலே நாவலர் அவர்கள் செல்லாத ஊரில்லை - பேசாத மேடை யில்லை. திராவிட முன்னேற்றக் கழகத்தில் என்று சொன்னார். அந்தக் காலத்திலே கருத்து சகிப்புத் தன்மையில்லாதவர்கள் திராவிட முன்னேற்றக் கழகத்தை அழிக்க நினைத்த போது ‡ அண்ணா சொல்லுகின்றார் ; பல வழிகளிலே நமக்குத் தொல்லை தருகின்றார்கள். பல இக்கட்டுக் களை ஏற்படுத்துகின்றார்கள். அவர்களுக்கிருக்கின்ற கஷ்டமெல்லாம் நம்முடைய மேடைப் பேச்சு அவர்களை மிரட்டுகின்றது. எனவே, நம்முடைய மேடைப் பேச்சுக்குக் கூட வரி போடுவதற்கு அவர்கள் திட்டமிடுவார்கள். அப்படி வரி போடுவார்களானால் அதிக வரி செலுத்துபவராக நம் முடைய நாவலர் நெடுஞ்செழியன்தான் இருக்க நேரிடும் (சிரிப்பு).
எனவே, திராவிட முன்னேற்றக் கழகத்தினுடைய கருத்துகளை நாடெங் கும் எடுத்துச் சொன்னவர் ‡ தீந்தமிழ் இலக்கியங்களை வடித்துக் காட்டியவர் ‡ திருக்குறளுக்குத் தெளிவுரை தீட்டியவர் ‡ அதில் திருநாவுக்கரசு அவர்கள் அவருஐடய கருத்தோட்டத்தினை சங்கொலியிலே தெரிவிக்கின்ற போது, திராவிட இயக்கச் சிந்தனை எப்படி திருக்குறளை வட ஆரியக் கருத்து களுக்கு முற்றிலும் மாறுபட்டதாகக் கொள்கிறது என்பதை என்பதை வலியுறுத்திச் சொன்னாரோ அதைத்தான் இந்த கருத்தரங்திலே அண்ணன் நாவலர் அவர்கள் எடுத்து வைக்கக் கூடிய பேச்சினுடைய மையமாக இருக்கும் என நான் கருதுகிறேன். நான் எவரையும் பழிப்பதற்காக இந்தக் கருத்து விமர்சனத்தை இங்கே வைக்கவில்லை. பிறருடைய கருத்துகளைக் குறைத்துச் சொல்வதற்காக இதைக் குறிப்பிடவில்லை.
ஆனால் நமக்கென்றிருக்கக்கூடிய கருவூலத்தை, நமது முன்னோர் களுடைய கருத்துச் செல்வத்தை, அதனுடைய தனித்தன்மையை, உலகத்துக்கே வழிகாட்டக்கூடிய ஆற்றல் பெற்ற சிந்தனைச் செழிப்பை, வேறொருவர் அபகரித்துக் கொண்டு செல்வதற்கு நாங்கள் அனுமதிக்க முடியாது என்பதற்காகத்தான் இந்த ஏற்பாட்டைத் திருநாவுக்கரசு அவர்களும் நாங்களும் செய்திருக்கின்றோம். உலகத்திலே பல உயர்ந்த நூல்கள் தோன்றியிருக்கின்றன. அந்த நூல்களின் வரிசையில் திருக்குறளும் சொல்லப்படுமானால் திருக்குறளுக்கு நிகரான இன்னொரு படைப்பு இல்லை என்பதே என்னுடைய கருத்தாகும். ஏன்? திருக்குறளின் முப்பாலையும் ஆங்கிலத்திலே அழகுறத் தந்த ஜி.யு. போப் இதனுடைய சிறப்பைப் பற்றி சொல்லுகின்ற பேது, தமிழர் நாகரிகம் பண்பாட்டினுடைய கொடுமுடியாகத் திகழ்வதுதான் திருக்குறள் என்று சொன்னார். இயேசு பிரானின் மலைப் பிரசங்கத்தின் எதிரொலியைத் திருக்குறளிலே கேட்கிறேன் என்று குறிப்பிட்டார்.
ஆல்பர்ட் ஸ்விட்சர் ஆப்பிரிக்கக் கண்டத்திற்குச் சென்று, ஒளி நுழைய முடியாத இருண்ட காடுகளுக்குள்ளே விலங்குகளை விடக் கேவலமாக வாழ்ந்து கொண்டிருந்த கருப்பர்களின் உரிமைக்காகப் போராடிக் கொண்டி ருந்த காலத்தில், அவர்களுக்கு மருத்துவச் சேவை செய்த அந்த மேலை நாட்டு அறிஞர் ஆல்பர்ட் ஸ்விட்சர் ஒரு மிகச் சிறந்த சிந்தனையாளர். ஆசியக் கண்டத்தினுடைய சிந்தனை ஓட்டத்தை சீனத்திலே இந்தியாவிலே ஆசியாக் கண்ட நாடுகளிலே எழுதப்பட்ட நூல்கள் அனைத்தையும் பற்றியும் ஆய்வு செய்தவர் நோபல் பரிசு பெற்ற பேரறிஞர். அந்த ஆல்பர்ட் ஸ்விட்சர் அவர்கள் திருக்குறளைப் பற்றிக் குறிப்பிடுவதற்கு முன்னர் இந்தியா வினுடைய தத்துவச் சிந்தனையைப் பற்றிச் சொல்லுகின்றார்.
இந்தியாவிலேயே தோன்றிய நூல்களெல்லாம் இந்த உலகத்தைப் பற்றிச் சொல்லுவதைவிட, மறு உலகத்தைப் பற்றியே அதிகமாகச் சொல்லிக் கொண்டிருக்கின்றன. அதற்கு ஒரேயயாரு விதிவிலக்கு ‡ இந்தியாவின் தெற்குப் பகுதியிலே தோன்றிய திருக்குறள் ஒன்றுதான் ‡ அது மனித வாழ்க்கையின் மகத்துவத்தைப் பற்றிச் சொல்லுகின்ற நூல் என்று ஆல்பர்ட் ஸ்விட்சர் அவர்கள் குறிப்பிட்டார்கள்.
அயோத்திதாசப் பண்டிதர், அவர் பெளத்த மதத்தினுடையவர் என்கின்ற காரணத்தால் பெளத்தத்தின் திரிரத்னங்களும் இதிலே காணப்படுகின்றது. ஆகவே இது திரிக்குறள் என்றெல்லாம் குறிப்பிட்டு பெளத்த சமயத்தைச் சார்ந்த கருத்துக்கள் திருக்குறளிலே இருப்பதாக எடுத்துச் சொன்னார்.
சக்ரவர்த்தி நாயனார் சமண முனிவர் என்கின்ற அடிப்படையில் இது சமண சார்புடைய நூல் என்பதற்குப் பல ஆதாரங்களைத் திரட்டித் தந்தார். ஒவ்வொரு வரும் தங்களுடைய கோணத்தில் பார்த்தார்கள். காஞ்சிபுரம் கதிர்வேல் முதலியார் அவர்கள் சைவ சித்தாந்தமே என்ற ஒரு நூல் எழுதி, சைவ சித்தாந்தக் கருத்துகள்தான் திருக்குறளிலே முதன்மை பெற்றிருக் கின்றது என்ற ஆராய்ச்சியைத்தந்தார். வை.மு. கோபால கிருஷ்ணமாச்சாரி யார் பரிமேலழகர் உரையைத் தந்து, திருவள்ளுவரை வைணவராக்கிக் காட்டுவதற்கு முயன்றார். எனவே ஒவ்வொரு சமயத்தவரும் தங்களுடைய கருத்துக்களைத் தந்தாலும் கூட, திருவள்ளுவ மாலையிலே ஒரு புலவன் சொன்னான் - இது சமய சார்புடைய கருத்துக்களைக் கடந்து நிற்கக் கூடிய நூல் என்று குறிப்பிட்டார். அதுதானே உண்மை.
அதனால்தான் மனோன்மணீயம் சுந்தரம் பிள்ளை ‘வள்ளுவர் செய் திருக்குறளை மறுவற நன்குணர்ந்தோர்கள் உள்ளுவரோ மனு ஆதி ஒரு குலத்துக்கு ஒரு நீதி’ என்று சொன்னார். கா.சு. பிள்ளை, பாவேந்தர் பாரதிதாசன், தேவநேயப் பாவாணர் ஆகியோரின் அடியயாற்றி வட ஆரியக் கருத்துகளிலேயிருந்து நாம் விலகி நிற்கின்றோம். மனுதர்மக் கருத்துகளிலே யிருந்து நாம் முற்றிலும் வேறுபட்டிருக்கின்றோம் என்பதை அழுத்தந்திருத்த மாகச் சொன்னார்கள். பரிமேலழகர் மனுதர்ம சாத்திரத்தினுடைய தாக்கமும், அதைப் போலவே அர்த்த சாத்திரம், காம சூத்திரம் போன்ற நூல்களின் தாக்கமும் திருக்குறளில் இருப்பதாக இல்லாத ஒன்றைச் சொன்னார்.
பரிமேலழகரின் பாண்டித்யத்தை நான் மதிக்கிறேன். அவருடைய ஞானத்தை அறிவின் ஆற்றலை நான் மதிக்கிறேன். ஆனால், மனுதர்ம சாத்திரக் கருத்துக்களைத் திருக்குறளில் எங்குமே காண முடியாது. அணுவளவும் அதை நாம் ஏற்றுக் கொள்ள முடியாது. பிறப்பொக்கும் எல்லா வுயிர்க்கும் என்ற கருத்தைக் கொண்டவர்கள் நாம். வருணாசிரமக் கருத்துக் களை நாம் ஏற்றுக் கொள்ளவில்லை. அதைத் திருக்குறளிலே எந்த இடத்திலேயும் நாம் காண முடியாது.
அதைத்தான் திருக்குறள் தெளிவுரை எழுதிய அண்ணன் டாக்டர் நாவலர் அவர்கள் தன்னுடைய முன்னுரையில் இதைப் பற்றித் தெளிவாக, பரிமேலழகருடைய கருத்து என்ன? திருவள்ளுவருடைய கருத்து என்ன? பரிமேலழகர் கொடுக்கின்ற விளக்கம் மிக மிகத் தவறானது என்பதை எடுத்துச் சொல்கின்றார் நமது க. திருநாவுக்கரசு போலவே நாவலர் ஒரு தமிழ்ப் பூங்கா. அதனுள் நுழைந்து மனம் பெற இருக்கின்றோம் நாம்! இலக்கிய உலகத்திலே நான் ஒரு மாணக்கன்தான். எனவே அதுபற்றி அதிகமாக விளக்கச் செல்லவில்லை. இரண்டு அதிகாரங்களை இங்கே எடுத்து வைத்து ஆய்வு நடத்தியிருக்கிறார் க. திருநாவுக்கரசு அவர்கள்.
ஒன்று கடவுள் வாழ்த்து என்று தலைப்பிடப்பட்ட அதிகாரம். இன்னொன்று அறத்துப்பாலின் இறுதி அதிகாரமாகிய ஊழ். இந்த இரண்டும்தான் இங்கே ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்பட்டிருக்கின்றது. கடவுள் வாழ்த்து என்பதற்குக் கலைஞர் அவர்கள் வழிபாடு என்று தலைப்பிட்டதைப்பற்ற பாஸ்கரன் அவர்கள்இங்கே பேசினார்கள். ஊழ் என்கின்ற அதிகாரத்தைப் பற்றிப் பெரிய சர்ச்சை இருக்கின்றது. ஊழ் என்றால் அது முற்பிறவியிலே செய்த வினை என்றும் பரமன் வகுத்த விதியயன்றும் நம்புகின்றவர்கள் உண்டு. புலவன் பாரதி சொன்னான், இனியயாரு விதி செய்வோம் அதை எந்நாளும் காப்போம் என்று. அவர் ஒரு புரட்சிகரமான சிந்தனையாளன். விதி என்பது எது? ஊழ் என்றால் என்ன?
இந்த ஊழ் என்பது முற்பிறவியிலே செய்த வினையினுடைய பலன் என்பதையும் ஆண்டவன் வகுத்த விதி என்பதையும் வள்ளுவர் ஏற்றுக் கொண்டதாக நாவலரும் கருதவில்லை. உயர் தமிழ்ச் சிந்தனையாளர்களும் அந்தக் கருத்தை ஏற்றுக் கொள்ள இயலாது.
ஊழ் என்பது திருக்குறளில் அந்த அதிகாரத்தில் இருக்கின்ற பத்துப் பாடல்களைத் தவிர்த்து இரண்டு இடங்களில் வருகின்றது. திருக்குறளில் 1330 பாடல்களில் மொத்தம் 12 பாடல்களில்தான் ஊழ் என்ற சொல் வருகின்றது. அதிலே பத்துப் பாடல்கள் ஊழ் என்ற அதிகாரத்திலே வருகின்றது. இன்னொன்று ‘ஆள்வினையுடைமை’ என்கின்ற அதிகாரத் திலே வருகின்ற,
ஊழையும் உப்பக்கம் காண்பர் உலைவின்றித்
தாழாது உஞற்று பவர்.
இன்னொன்று,
இணரூழ்த்து நாறா மலரனையர் கற்றது
உணர விரித்துரை யாதார்
இந்த இரண்டு பாடலில்தான் ஊழ் என்ற சொல் வருகின்றது.
நாவன்மை, சொல்வன்மை, அதற்கு இலக்கணமாக நாவலரல்லவா இங்கே விரிவுரையாற்ற வந்திருக்கின்றார்! இந்தப் பாடலில் ஊழ் என்ற சொல் எதைக் குறிக்கின்றது? மலர்கள் மலருகின்ற பூங்காவிலே ; நந்தவனத்திலே பூக்கள் மலருகின்றறன. வாசமில்லையேல் மலர்ந்த பூக்களால் பயனில்லை.
அதைப் போலத்தான் நன்கு படித்திருந்தாலும் அதை எடுத்துச் சொல் கின்ற ஆற்றல் இல்லாமல் போகுமானால் மலர்கள் மலர்ந்தும் பூக்கள் .... கூட மணமில்லாமல் போனதைப் போன்றதாகும். ஆகவே! இங்கு ஊழ் என்பது ஊழ்த்தும் என்பது மலர்கள் மலர்ந்து மணம் பரப்புவது -பக்குவப் படுத்துவது என்ற பொருளிலே வருகின்றன. அடுத்தபடியாக அண்ணன் நாவலர் அவர்கள் சொல்கிறார்கள் -ஊழ் என்பது முறைமைப் படுத்தப்படுவது, அதற்கு பல காரணங்களை சொல்லுகின்றார். கருத்துச் செறி... விளக்கம் தருகிறார்.
ஊழையும் உப்பக்கம் காண்பர் உலைவின்றித்
தாழாது உஞற்று பவர்.
ஆக, விதி என்பது முறைப்படுத்தப்படுவது. அதையும் வெற்றி பெற முடியும். முயற்சி இருக்குமானால் நெஞ்சிலே... இருக்குமானால்!
எட்டுத்தொகை, பத்துப்பாட்டு நூல்களில் 63 இடங்களில் ஊழ் என்ற சொல் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. அதிலே 6 இடங்களைத் திருநாவுக்கரசு அவர்கள் தன்னுடைய நூலிலே தொகுத்துத் தருகின்றார். நாலடியாரும் நான்மணிக்கடிகையும் பழமொழியும் முழுமை பெறவில்லை. ஆனால், பதினெண் கீழ்க்கணக்கு நூல்களில் நிகரற்ற நூல் திருக்குறள்தான். சிலப்பதி காரமும், மணிமேகலையும் கதை சொல்லும் காவியங்கள். காப்பியங்கள். ஆனால் திருக்குறள் குறிப்பட்ட ஒரு நாட்டுக்காக சொல்லப்பட்ட கருத்தாக இல்லை. உலகு என்ற சொல் பயன்படுத்தப்பட்டிருக்கின்றது. சேரனும், சோழனும் பாண்டியனும் முடியுடை மூவேந்தர்கள் இந்த மண்டலத்தை ஆண்டதாக சரித்திரம் பறைசாற்றுகின்றது. சேர நாடிருந்தது, சோழ நாடிருந்தது, பாண்டிய நாடிருந்தது. ஆனால் திருக்குறளில் எந்த இடத்திலாவது இந்த நாடு களைப்பற்றிக் குறிப்பிடவில்லை. இளஞ்சிவப்பாக இருப்பவன், கருப்பாக இருப்பவன் என்று எந்த மனிதனைப் பற்றியும் திருக்குறள் குறிப்பிடவில்லை.
இந்தச் சிந்தனை உலகில் வேறு எங்கு இருந்தது? அரிஸ்டாடிலுக்கு இந்தச் சிந்தனை கிடையாது. கிரேக்கத்துப் பெருஞானிக்கு இந்தச் சிந்தனை கிடையாது. இன்னும் சொல்லப் போனால், போப் அவர்கள் குறிப்பிட்டார்கள். அரிஸ்டாட்டிலால் சாதிக்க முடியாத கருத்துகளை சிந்தித்தார் திருவள்ளுவர் என்பார். ஆக, உலகளாவிய சிந்தனை இருந்தது. மனித நேயத்தை வாழ வைக்கக்கூடிய சிந்தனை இருந்தது. அப்படிப்பட்ட சிந்தனைக் கருவூலமாக திருக்குறளைப் பற்றிய திறனாய்வுக்கு திறனாய்வு தர வந்திருக்கின்றார்கள் அண்ணன் நாவலர் அவர்கள். இந்த நிகழ்ச்சியிலே அவர் உரையாற்ற இருக்கின்றார் என்றவுடன் அது செந்தேனாக பாய்ந்தது பலருடைய செவிகளிலே - மகிழ்ச்சி தந்தது. (கைதட்டல்). (சங்கொலி 9.5.1997).
வைகோ தலைமை தாங்குகிறார் - நாவலர் பேசுகிறார் -இவன் அறத்துப்பாலுக்குள்ளும், பொருள்பாலுக்குள்ளும் போய்க்கொண்டே யிருக்கின்றானே தவிர, நாம் எதிர்பார்க்கும் செய்தி எதையும் காணோமே? பரபரப்பான செய்தி ஏதாவது கிடைக்குமா என்று பலரும் எதிர்பார்க்கின்றார் கள்.(சிரிப்பு). நிச்சயமாக இருக்கின்றது.(கைதட்டல்). நிச்சயமாக இருக்கின்றது பரபரப்பான செய்தி.
ஆத்திகரா? நாத்திகரா? இப்படியயாரு சர்ச்சை எழுந்திருக்கின்றது. நானாதிக்கன் என்று விளக்கம்‡ பரவாயில்லை வெஜிட்டேரியனா நான் வெஜிட்டேரியனா என்பது போல வார்த்தை சிலம்பம். உள்ளத்திலே உண்மை இருக்குமானால் சொற்களிலே உண்மையும் தூய்மையும் இருக்கும்.
அண்ணன் நாவலர் அவர்களைப் பற்றி ஒரு பெரிய மனிதர் அண்மையில் ஓர் இடத்தில் பேசினார். அண்ணாமலைப் பல்கலைக் கழகத்திலேயிருந்து இரண்டு சிங்கங்கள் வந்ததாக அண்ணா சொன்னார். அதிலே ஒரு சிங்கம் இங்கே இருக்கின்றது. இன்னொன்று அசிங்கமாகிவிட்டது என்று சொன்னார். சரியாகத்தான் சொல்லியிருக்கின்றார். அய்யா என்ற சிங்கத்திடம் பயிற்சி பெற்று அண்ணா என்கின்ற சிங்கத்திற்கு உடனிருந்த தால் அது அசிங்கமாகத் தெரிகின்றது.
அண்ணன் நாவலர் அவர்கள் இதைப்பற்றி என்ன விளக்கம் தருகின்றார்? தமக்கேயுரிய பாணியில் சொல்லியிருக்கின்றார். அண்ணாவின் பார்வைக்கு நான் சிங்கமாகத் தெரிந்தேன் உண்மைதான். ஒரு கூட்டத்துக்குப் போயிருந்தேன். அந்த கூட்டத்தில் பலர் உட்கார்ந்து இருந்தார்கள். திடீரென்று ஒருவர் எழுந்து வந்து ஐயா உங்களுக்குப் பக்கத்திலேயிருக்கின்ற ஒருவர் சொல்கின்றார் ‡ எனக்குப் பக்கத்திலே யிருக்கின்றவர் மஞ்சளாகத் தெரிகின்றார் என்று. உடனே நாவலர் சொல்லுகின்றார், சிலர் மஞ்சளாக இல்லை சரியாகத்தான் இருக்கின்றார். ஆனால், அப்படிச் சொன்னவருக்குத்தான் மஞ்சள் காமாலை. காட்சியில் கோளாறில்லை. கண்ணிலேதான் கோளாறு. அதனால்தான் மஞ்சளாகத் தெரிகின்றார். மஞ்சள் என்றவுடன் நீங்கள் வேறு எங்கும் போய்விடாதீர்கள் (பலத்த சிரிப்பு).
எடுப்பது அழுக்கறுப்பான் சுற்றம் உடுப்பதூஉம்
உண்பதூம் இன்றிக் கெடும்.
என்று சொன்னார்.
திராவிடர் இயக்கத்திற்கு தந்தை பெரியார் உருவாக்கிய மூலபலச் சேனையாக இருக்கக் கூடிய திராவிடர் இயக்கத்திற்கு வழங்கப்பட்டிருக்கின்ற இடத்தை பறிமுதல் செய்கின்ற மனப்பான்மை எவ்வளவு சக்தி வாய்ந்த மனிதரிடத்தில் இருக்குமானாலும் நெஞ்சம் கொதித்துக் குமுறல் எழுவது இயற்கை. திராவிடர் இயக்க ஆதரவாளர்களுக்கு -பகுத்தறிவாளர்களுக்கு தன்மான உணர்வு கொண்டவர்களுக்கு அந்த உணர்வு ஏற்படுவது இயற்கை. அதைத்தான் நாவலர் பேசினார்கள்.
பகுத்தறிவாளர் என்று சொல்லுகின்றவர்கள், தீக்குண்டத்திலே இறங்குபவர்களைப் பற்றி காட்டுமிராண்டித்தனமென்று சொன்னால் அதிலேயே நிற்க வேண்டும். அதற்குப் பிறகு என்ன சொல்லுகிறார்கள். நான் இந்தப் பதவியில் நீடிக்க வேண்டுமென்று தீக்குண்டத்தில் இறங்கியது காட்டுமிராண்டித்தனம். தான் முதலில் சொன்னதற்குப் பின்னர் புதிதாக ஒரு அர்த்தம் கற்பித்து மழுப்புகிறார். சொல்லுகின்ற கருத்தில் உறுதியாக நின்று பேச வேண்டும். பேச முடியாது. இப்பொழுதுதான் சொல்லுகின்றார். எங்கள் வீட்டிலும் கடவுள் நம்பிக்கை இருக்கின்றது. பூஜை புனஸ்காரம் இருக்கின்றது. நாள், நட்சத்திரம் மீன மேம் பார்க்கின்ற நிலைமை இருக்கின்றது. சாமி படங்கள் பூஜா மடம் இருக்கின்றது. அதிலே திருவள்ளுவரல்ல பிள்ளை யாரும் இருக்கின்றார் என்று சொல்லுகின்ற நிலைமை இருக்கின்ற காரணத்தினாலே சொல்ல முடியாது.
நான் இதைக் குறிப்பிடக் காரணம் - உண்மையிலேயே நான் பகுத்தறிவாளன் என்று சொன்னால், இந்த மஞ்சள் வண்ணத்தை விட்டு ஏன் வெளியே வர முடியவில்லை? என்பதற்கு அவர் விளக்கம் சொல்ல வேண்டும். (சிரிப்பு). அம்மன் கோவிலுக்கு அக்கினிச் சட்டி தூக்கிக் கொண்டு செல்வதைப் போல மஞ்சளைப் போட்டுக் கொண்டு அலைய வேண்டிய அவசியமென்ன என்பதை விளக்க வேண்டும் (சிரிப்பு). இந்தக் கூட்டத்தைப் பற்றி பரப்பபான செய்திகள் பேசப்படுகின்றன. அதற்கு என்ன பதில் என்று என்னை கேட்பார்களேயானால் ஒன்றை நான் தெரிவித்துக் கொள்ள விரும்பு கின்றேன். திருக்குறளிலே வலியறிதல் என்று ஒரு அதிகாரம் இருக்கிறது. அதில் முதலாவத பாடல் ஒன்று.
வினைவலியும் தன்வலியும் மாற்றான்வலியும்
துணைவலியும் தூக்கிச் செயல்
என்கின்ற குறள் செய்கின்ற செயலின் வலிமையையும் தன்னுடைய வலிமையையும் எதிரியின் பலத்தையும் இருவருக்கும் துணையாக இருக்கின்றவர்களுடைய பலத்தையும் வைத்துதான் ஒரு செயலில் ஈடுபட வேண்டும். இடமறிதல் காலமறிதல் என்று சொன்ன வள்ளுவன், வலி யறிதலைப் பற்றியம் சொல்லுகின்றான்.
இன்னமும் எங்களுக்க முழுமையான விடை கிடைக்கவில்லையே என்று கேட்கின்றீர்களா? பகைத்திறம் அறிதல் என்கின்ற 88 ஆவது அதிகாரத்திற் குள் செல்ல விரும்புகின்றேன்.
இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு பின்னாலும் தமிழுக்குத் தொண்டு செய்கின்ற, தமிழுக்காக உயிரையும் தரத் தயாராக இருக்கக்கூடிய மக்களுக்கெல்லாம் வழிகாட்ட கூடியவனாக வள்ளுவன் இருக்கின்றான்.
தன்துணை யின்றால் பகையிரண்டால் தானொருவன்
இன்துணையாகக்கொள் கவற்றில் ஒன்று
தனக்குத் துணையில்லை - நான் அரசியல் பேசவில்லை வள்ளுவன் சொன்னதைச் சொல்லுகிறேன். தனியாக இருக்கிறான் ஒருவன் -பகைவரோ இருவர். அந்த ஒருவனாக இருக்கிறவன், எதிரிகள் இருவரில் ஒருவரை, இன்துணையாக்கிக் கொள்க (கைத்தட்டல்) திருக்குறளுக்கு பரிமேலழகர் உரையயழுதியிருக்கிறார் - மணக்குடவர் உரையயழுதி யிருக்கிறார் - நச்சினார்க்கினயர் உரை யயழுதியிருக்கிறார் - இன்னும் எத்தçயோ பேர் உரையயழுதியிருக்கின்றார்கள். அதுபோல என்னுடைய இந்தப் பேச்சுக்கும் அவரவர் ஒரு உரை எழுதிக் கொள்ளலாம்‡ அதற்கு நான் பொறுப்பாளியல்ல!
இதில் கவனிக்க வேண்டிய ஒன்று. தனியாக இருக்கின்ற ஒருவன் பகைவர் இருவரில் ஒருவரைத் துணையாக ஆக்கிக் கொள்ள வேண்டு மென்கின்ற போது இன்துணையாக்கிக் கொள்ளல் ‡ பகைவனை இனிய துணையாக்கிக் கொள்ள வேண்டும். அந்தத் திருக்குறள் கருத்துக்களை விரிவுரையாகத் தந்திட எங்கள் அண்ணனே டாக்டர் நாவலரே வருக! வருக! நீங்கள் பல்லாண்டு பல்லாண்டு நலமெல்லாம் பெற்று வாழ்க! தமிழகத்தில் தன்மானம் தழைக்க வாழ்க! தமிழர் குலம் ஓங்கிட வாழ்க! தமிழினம் உலகத்திலே நிமிர்ந்து நிற்கின்ற பெருமை பெற்றிட வாழ்க! வாழ்க என வாழ்த்தி வரவேற்கின்றேன். (சங்கொலி, 16.5.1997)
No comments:
Post a Comment