Monday, December 23, 2019

மானமிகு சந்திரசேகரன்- வனிதா திருமணத்தை நடத்தி வைத்து மானமிகு த.பரமசிவம் ஆற்றிய உரை

திருவாளர்கள் தனசேகரன் - உஷா இணையரின் மகன் சந்திரசேகரன் மற்றும் 
திருவாளர்கள் முனியாண்டி-பரமேஸ்வரி (எ) ஆச்சி இணையரின்
மகள் வனிதா ஆகியோரின் திருமணத்தை நடத்தி வைத்து
 மானமிகு த.பரமசிவம் ஆற்றிய உரை:

இன்று மணவிழா காணும் மக்களுக்கும் அவர் தம் பெற்றோர்களுக்கும் நண்பர்களுக்கும் உறவினர் களுக்கும் வணக்கம்.

இந்த திருமணம் ஒரு சுயமரியாதை திருமணம்.  அர்த்தமற்ற, பொருளற்ற சடங்களும், அநாவசிய செலவுகளும் இல்லாத ஒரு திருமண முறை. புரோகிதர் இல்லாத, புரியாத இல்லாத மந்திரங்கள், சடங்குகள் இல்லாத ஒரு திருமணம். இந்த திருமணத்தில் மணமக்கள் வாழ்க்கைத் துணைவர்களாக இருக்கிறார்கள். இந்த திருமணத்தில் மணமகனும் மணமகளும் தங்களை ஒருவருக்கு ஒருவர் அறிந்துகொண்டு, புரிந்து கொண்டு தேர்ந்தெடுத்துள்ளார்கள்.

சாதாரணமாக நடைபெறும் திருமணங்களில் ஆடம்பரத்துக்காக வீண் செலவு செய்வதும் இரண்டு மூன்று நாட்களுக்கு மற்றவர்கள் புகழ வேண்டும், பெருமை பேச வேண்டும் என்பதற் காகவும் தாறுமாறக ஆடம்மபரச் செலவுகளை செய்து கடன்களால் துன்பப்படுகின்ற நிலையை நாம் கண்கூடாகப் பார்க்கிறோம்.

சுயமரியாதைத் திருமணம் என்பது ஆணும் பெண்ணும் இணைந்து வாழ்வதற்கான ஒரு ஒப்பந்தமாகும். இது மணப் பெண்ணுக்கும் மண மகனுக்கும் இடையிலேயான ஒப்பந்தமாகும்.

ஹார்ட்கிரேவ் ஜுனியர் என்ற அமெரிக்கர், திராவிடர் கழகத்தினரால் தோற்றுவிக்கப்பட்ட சுயமரியாதை திருமணம் என்னும் சீர்திருத்தத் திருமணங்கள் தமிழ் நாடெங்குமுள்ள பார்ப்பன ரல்லாத சமூகத்தினரிடையே மிகவும் பிரபல மடைந்து நடத்தி வரப்படுகிறது. இத்திருமணங் களில் புரோகிதரோ இந்து மதச் சடங்குகளோ சேர்க்கப்படுவதில்லை. திருமணத்திற்கு வந்துள்ள பிரமுகர்களில் ஜாதி வேறுபாடு ஏதுமின்றி யாராவது ஒருவர் தலைமை வகித்து அனைவர் முன்னிலும் உள்ள புதிய தம்பதிகளின் வாழ்க்கை ஒப்பந்தத்தை முடித்து வைப்பார். அவர் புது வாழ்க்கையில் ஈடுபடும் தம்பதிகளை மாலை மாற்றிக் கொள்ளச் செய்வார் என்று தனது தி திராவிடியன் மூவ்மெண்ட் என்ற நூலில் குறிப்பிடுகிறார்.

1927 இலேயே மலேசியாவில், இத்தகைய சுயமரியாதைத் திருமணம் நடைபெற்று இருக் கிறது. பேரா இந்து மகா ஜன சங்கத் தலைவராகிய மா. இரத்தினசாமி அவர்களின் மகன் திருமணம் 22.4.1927 இல் ரெ.ரா. அய்யாறு அவர்கள் தலைமையில் சுவாமி அற்புதானந்தா முன்னிலையில், புரோகிதர் இன்றி, சடங்குகள் இன்றி நடைபெற்று இருக்கிறது.

1928 ஆம் ஆண்டு தமிழ்நாட்டில் அருப்புக்கோட்டைக்கு அருகில் உள்ள சுக்கில நத்தம் என்ற ஊரில் முதன் முதலாக சுயமரியாதை திருமணம் நடைபெற்றது. மிகப் பெரிய செல்வந்த ரான சுப்பாரெட்டியார் அவர்கள் பெரியாரின் மீது மிகவும் பற்றுக் கொண்டவர். பெரியார் நடத்தி வந்த குடிஅரசு இதழை படித்து அதன் மூலம் தன்னுடைய மகனு ரெங்கசாமி அவர்களுக்கு சுயமரியாதை திருமணம் செய்து வைக்க முடிவு செய்கிறார். பெண் வீட்டாரை அணுகுகிறார்கள். மணமகள் நகம்மாளும் அவருடைய தோழி ரத்தினத்தாயம்மாளும் மிகவும் நெருங்கிய தோழிகள். இருவரும் ரங்கசாமியைத் திருமணம் செய்துகொள்ள விரும்புகிறார். இந்த திருமணம் சடங்குகள் இன்றி, ஓமம் இன்றி பெரியார் தலைமையில் காலை 10 மணிக்கு நடைபெறுகிறது. மணமக்கள் கதர் ஆடை அணிந்து மண மேடை யில் இருந்தனர்.

பிறகு அதே மேடையில் 11 மணிக்கு இன்னொரு சுயமரியாதை திருமணம் நடைபெற்றது. கோபால் சாமி அவர்களுக்கும் கமலத்தம்மாள் மற்றும் சிரோமணியம்மாளுக்கும் நடைபெற்றது. இங்கும் ஒரு மண மகன், இரண்டு மணமகள்கள். இதையும் பெரியார் நடத்தி வைத்தார்.

இதையயல்லாம் பார்த்துக் கொண்டிருந்த திரு. மாரி செட்டியார் அவர்கள், அதே நாளில் ஏற்கனவே ஏற்பாடு செய்யப்பட்டிருந்த சமய அடிப்படியிலான தனது திருமணத்தை ரத்து செய்துவிட்டு, முகூர்த்த நேரம் போனாலும் பரவாயில்லை என்று கூறி, பெரியார் தலைமையில் திருமணம் செய்து கொண்டார். இத்திருமணம் 12 மணிக்கு நடைபெற்றது.

இப்படி ஒரே நாளில் மே மாதம் 28 ஆம் நாள், 1928 இல்  நடைபெற்றது.
1968 ஆம் ஆண்டு அறிஞர் அண்ணா அவர்கள் சுயமரியாதை திருமணம் சட்டத்தைக் கொண்டு வந்தார்.  இதை அறிந்த நம் மலேசியத் திராவிடர் கழகத் தலைவர்கள் நம் நாட்டிலும் இதை கொண்டு வர வேண்டும் என்று பாடுபட்டார்கள்.

கோலாலம்பூர் அப்பர் தமிழ்ப்பள்ளியில் 25.3.1973 இல் நடைபெற்றக் கூட்டத்தில் சுயமரியாதை திருமணம் மலேசிய நாட்டிலும் கொண்டுவரப் படவேண்டும் என்று தேசியத் தலைவர் திருச்சுடர் இராமசாமி அவர்கள் வலியுறுத்துகிறார். இதன் விளைவாக 1982 ஆம் ஆண்டு மார்ச்சு மாதம் முதல் தேதி சுயமரியாதை திருமணம் சட்டம் அமுலுக்கு வந்தது.

இச்சட்டத்தின் படி, திருமணப் பதிவதிகாரிகளாகச் செயலாற்ற தேவாலயங்ளின் பாதியார் களுக்கும், கோயில்களின் அர்ச்சகர்களுக்கும் லைசென்சு வழங்கவும் விதிகள் அனுமதிக்கின்றன. அத்துடன் அவசியம் ஏற்பட்டால் எந்த ஒரு சங்கம் அல்லது வகுப்பின் தலைவராக உள்ள புகழ் பெற்ற நபர்களையும திருமணப் பதிவதிகாரியாக நியமிக்க வும் அவை வழி வகுக்கின்றன.

இவ்விதியின் படி தேசிய அளவில், அப்போது நமது இயக்கத் தோழர்கள் நாற்பது பேர் திருமண உதவிப் பதிவு அதிகாரிகளாகப் பொறுப்பேற்றனர்.
மலேசியத் திராவிடர் கழகத்தின் இந்த சாதனை என்றென்றும் தமிழர்கள மனதில் நிலைத்து நிற்கும்.

மணமக்களே,
நீங்கள் ஒருவருக்கொருவர் உள்ளம் கவர்ந்து  நண்பர்களாகவும்,
ஒருவருக்கொருவர் மானம் பாராது தாங்களே முன்வந்து குடும்ப வேலைகளையும் செய்பவர் களாகவும்
கருத்து வேறு பாடு என்ற ஒன்று இருப்பதாகவே அறியாத வாழ்வாகவும் வாழ வேண்டும் என்று வாழ்த்துகிறேன்.

No comments: