Tuesday, October 11, 2022

எம்.ஜி.ஆர். தி.மு.க.விலிருந்து நீக்கப்பட்ட போது என்ன நடந்தது

 புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் . திமுகவிலிருந்து நீக்கப்பட்ட போது, என்ன நடந்தது? 

.....விளக்குகிறார் கவிஞர் கண்ணதாசன்

"இந்த நேரத்தில் எம்.ஜி.ஆர். விலகியதைப் பற்றி நான் சில விஷயங்களைச் சொல்வேண்டும்.

கருணாநிதியும் நானும் இந்தக் கட்டத்தில் நன்றாகப் பழகிக் கொண்டிருந்தோம். உள்ளுக்குள்ளே அவர்கள் இருவருக்கும் தகராறு நடந்து கொண்டிருந்தது.

திடீரென்று ஒருநாள் கருணாநிதி எனக்கு டெலிபோன் செய்து, “என்னய்யா செய்யலாம்” என்று கேட்டார்.

“சரி, அவர் கணக்குத்தானே கேட்கிறார். எல்லா ஊர்களிலேயிருந்தும் 'கணக்கு அனுப்ப வேண்டும்' என்று செயற்குழுவிலே தீர்மானம் போட்டு, செயற்குழுவை ஒத்தி வைத்துவிடுங்கள். கணக்கு வருவதற்கு ஒரு தலைமுறையாகும். அதுவரை என்ன செய்வார் என்று பார்க்கலாம்,” என்று நான் சொன்னேன்.

செயற்குழுவுக்கு முதல் நாள் நண்பர் கருணாநிதி அவர்கள், எனக்கு டெலிபோன் செய்து, 

“இல்லை இல்லை. அது ஒன்றும் நடக்காது. இன்று ஒரேடியாக ஒழித்துவிட வேண்டியதுதான்” என்று சொன்னார்.

நான் சொன்னேன், “சில மக்கள் பின்னணி இருக்குமே” என்று.

“என்ன, பத்துப்பேர் கத்துவான். பார்த்துக் கொள்ளலாம்” என்றார்.

மறுநாள் நன்றாகத் தூங்கிக் கொண்டிருக்கும் போது, நண்பர் ‘சோ’ அவர்கள் எனக்கு டெலிபோன் செய்தார்.

“தெரியுமா விஷயம்?” என்று கேட்டார்.

“என்ன?” என்றேன்.

“எம்.ஜி.ஆரை டிஸ்மிஸ் செய்து விட்டார்கள்” என்றார்.

“இருக்காதே” என்றேன்.

“இப்பொழுது தான் எனக்குச் செய்தி வந்தது” என்றார்.

இது இரண்டு மணிக்கு நடந்திருக்கும் என்றால், எனக்கு இரண்டு ஐந்துக்கெல்லாம் இந்தச் செய்தி வந்தது.

அவர் டெலிபோனை வைத்த உடனேயே, டெலிபோன் மணி அடித்தது.

கருணாநிதி பேசினார்: “முதல் முதலாக உனக்குத் தானய்யா சொல்லுகிறேன். கேள்விப்பட்டாயா?” என்றார்.

“உங்களுக்கு முன்னாலே சோ போன் பண்ணினார்” என்றேன்.

“என்ன நினைக்கிறாய்?” என்றார்.

“கொஞ்சம் கலகம் இருக்குமே” என்றேன்.

“பார்த்துக் கொள்ளலாம். என்ன, பத்து ஊரிலே கலகம் செய்வார்கள். பார்ப்போம்” என்றார்.

ஆனால் அவர் போட்ட கணக்குத் தவறு. மக்கள் பின்னணி என்பது எழுச்சியாக எழுமானால் காரண காரியங்கள் இன்றியே அது பெருங்கூட்டமாகத் திரளும் என்பதை நான் பல கட்டங்களில் பார்த்திருக்கிறேன்.

1971 பொதுத் தேர்தலே சான்று.

அதைத் தொடர்ந்து எம்.ஜி.ஆருக்கு மிகப் பெரிய பின்னணி இருக்கிறது என்பதை கருணாநிதி கண்டு கொள்ள முடிந்தது.

இந்தச் சூழ்நிலையில், எம்.ஜி.ஆர். பிரிந்த பிறகும் கூட மாநில சுயாட்சி கோஷமாக ஆக்கி, வாயில் வந்தவாறு இந்திரா காந்தியைத் திட்டவும், காங்கிரஸைத் திட்டவும் திராவிட முன்னேற்றக் கழகத்தினர் தயாரானார்கள்.

திராவிட முன்னேற்றக் கழக்த்தின் கோயமுத்தூர் மாநில மாநாடு நடைபெற்றது. அந்த மாநாட்டில் கருணாநிதியினுடைய மகனே பேசும்போது, 


"என்னுடைய அப்பா எல்லா விதவைகளுக்கும் ‘பென்ஷன்’ கொடுக்கிறார். இந்திராகாந்தி தேவையானால் வந்து வாங்கிக் கொள்ளட்டுமே” என்று பேசியதாகச் செய்தி வந்தது.


ஆசைதம்பி பேசும்போது இந்திராகாந்தியை, “என்ன இவள், எலெக்‌ஷன் நடத்தினால் நடத்தட்டும், இல்லா விட்டால் நாம் நடத்துவோம்” என்று பேசினார். அதே மாதிரி மற்றவர்களும் பேசினார்கள்.


இவையெல்லாம் சி.பி.ஐ. ரிப்போர்ட்டாக இந்திரா காந்திக்குப் போய்ச் சேரும் என்று அவர்கள் யாரும் அப்போது கருதவில்லை.


1970 – 1974 க்கு இடைப்பட்ட காலத்தில் எம்.ஜி.ஆர். அரசியல் தலைவரானதை நான் இங்கு குறிப்பிட்டாக வேண்டும்.

அரசியலில் ஒரு கட்சியைத் துவக்க வேண்டும், தலைவராக வேண்டும் என்கின்ற விருப்பம் எப்போதுமே எம்.ஜி.ஆருக்கு இருந்ததில்லை என்பது எனக்குத் தெரியும்.

சினிமா உலகத்தில் தன்னுடைய ஆதிக்கத்தை விட்டு விடக்கூடாது, அரசியலில் தன்னுடைய பிடியை விட்டு விடக் கூடாது என்றுதான் அவர் நினைப்பாரே தவிர, முழு அரசியல்வாதியாக முழு நேரத்தையும் ஒதுக்கிக் கொள்ள அவர் எப்போதும் விரும்புவதில்லை.

ஆனால் அவரை வலுக்கட்டாயமாக அரசியலில் ஒரு தலைவராக்கிய பெருமை நண்பர் கருணாநிதிக்கு உண்டு. கட்சியிலிருந்து அவரை விலக்கியதன் மூலமாக ஏராளமான கூட்டத்தை அவர் பக்கத்தில் ஓடவிட்ட பெருமையும் கருணாநிதிக்கு உண்டு.

எம்.ஜி.ஆரைப் பின் தொடர்ந்து தொண்டர்கள் அனைவரும் போய் விட்டார்கள்.

முதன் முதலில் திராவிட முன்னேற்றக் கழகத்தில் 1961 ஏப்ரலில் பிளவு ஏற்பட்டது.

அந்தப் பிளவுக்கு நானும் சம்பத்தும் காரணமாக இருந்தோம். எங்களைப் பின்பற்றி வந்தவர்கள் மாவட்டங்களில் நல்ல தலைவர்களாக இருந்தார்களே தவிர, தொண்டர்களாக இல்லை. 

ஏராளமான தொண்டர்கள் தி.மு.கழகத்திலிருந்து எங்களுக்குக் கிடைக்கவில்லை. எங்களுக்குக் கிடைத்ததெல்லாம் காங்கிரஸ் தொண்டர்களும், திராவிடக் கழகத் தொண்டர்களும்தான்.

ஆனால் எம்.ஜி.ஆர். விலக்கப்பட்ட பிற்பாடு, அவருக்குப் பின்னணியாக நின்றவர்கள் அனைவரும் மிக அற்புதமான தி.மு.கழகத் தொண்டர்களாக இருந்தார்கள்.

கட்டுப்பாடற்ற, முறையாக செயல் திட்டமற்ற தொண்டர்கள் தான் என்றாலும், ஒரே தலைவரின் கீழே திரண்டவர்கள். எம்.ஜி.ஆரிடம் அவர்கள் உயிரையே வைத்திருந்தார்கள்.

அந்த முறையில் எம்.ஜி.ஆரைப் பின்பற்றியே அனைவரும் போனார்கள் என்பது மட்டுமல்லாமல், அரசியல் கட்சியில் ஒரு தலைவர் நீக்கப்பட்டார் என்பதற்காக நாடு முழுவதிலும் கொந்தளிப்பு ஏற்பட்ட சம்பவம் இது இரண்டாவது முறையாகும்.

இந்திராகாந்தி நீக்கப்பட்ட போது முதன் முதலில் எப்படி நாடு முழுவதிலும் ஒரு எதிரொலி ஏற்பட்டதோ, அப்படியேதான் எம்.ஜி.ஆர். நீக்கப்பட்டவுடனே தமிழ்நாடு முழுவதிலும் எதிரொலி ஏற்பட்டது.

இந்தி எதிர்ப்புக் கிளர்ச்சியைப் போலவே ஒரு மாபெரும் கிளர்ச்சி ஏற்பட்டது. ஆங்காங்கே கார்களையும், பஸ்களையும், லாரிகளையும், நிறுத்தி அதில் எழுதத் தொடங்கினார்கள்.

சின்னச் சின்னப் பள்ளி மாணவர்களிலேயிருந்து கல்லூரி மாணவர்கள் வரை, அதில் ஈடுபட்டார்கள். தொழிலாளர்கள் வேலை நிறுத்தம் செய்தார்கள். கை வண்டி இழுப்பவர்களில் இருந்து, கடலை விற்போர்கள் வரையில் ஆத்திரப்பட்டுக் கொண்டிருந்தார்கள்.

ஆகவே, ‘அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்’ என்ற ஒரு பெரிய இயக்கத்தைத் துவக்க வேண்டிய நிர்பந்தம் எம்.ஜி.ஆருக்கு ஏற்பட்டது.

அப்படித் துவங்கியவுடனே அது தமிழக அளவில் பெரிதாக வளர்ந்ததும் மிகச் சுலபமாக நடந்தது. வளர்ந்தது என்று சொல்வதைவிட வளர்ந்த நிலையிலேயே அது உருவாயிற்று என்று சொல்வது பொருந்தும்.

அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் ஒரு மாபெரும் கட்சியாகத் தமிழகத்தில் விளங்கும் என்று நான் எதிர் பார்த்ததுண்டு. அது நியாயமாக நடந்துவிட்டது.

அதைச் சரிக்கட்டவும், ‘அப்படியொன்றும் இல்லை’ என்று காட்டவும் நண்பர் கருணாநிதி பல்வேறு திசையில் பிராயணம் செய்து பார்த்தார். பல ஊர்களில் அவர் பேசவே முடியாமல் போயிற்று.

எம்.ஜி.ஆர். மீது ஜனங்களுக்கும் கட்சித் தொண்டர்களுக்கும் இருந்த பிரியம் என்பது சாதாரணமானதாக இல்லை.

அதற்குக் காரணம் நியாயமா இல்லையா என்று ஆராய்வதைவிட, ஏதோ சில காரியங்களை அவர் செய்திருக்கிறார், செய்யக்கூடியவர், நியாயமானவர், நேர்மையானவர், ஒழுக்கமானவர் என்றெல்லாம் மக்கள் எண்ணினார்கள். அப்படி எண்ணிய மக்களின் நம்பிக்கை வீண் போகவில்லை.

கருணாநிதியின் மீது மக்களுக்கிருந்த நல்ல பெயரை அதுதான் போக்கடித்தது.

எம்.ஜி.ஆரை அவர் விலக்காமல் இருந்திருந்தால் நிலைமைகள் வேறுபட்டிருக்கக் கூடும்.

திராவிட முன்னேற்றக் கழகத்தைக் தவிர வேறு யாரும் ஆட்சிக்கு வருவதென்பது இன்னும் ஒரு 25 ஆண்டுக் காலத்துக்கு நடக்காமலேயே போயிருக்கும்..

எம்.ஜி.ஆர் விலக்கப்பட்டதன் காரணமாக, திராவிட முன்னேற்றக் கழகம் மெலியும், அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் என்கின்ற கட்சி ஓங்கி வளரும் என்று நம்பினேன்.

மற்ற நடிகர்களைப் போல் அவரும் ஒரு நடிகர்தான் என்றாலும், அரசியல் ஈடுபாட்டில் அவருக்கு இருந்த பிடிப்பின் காரணமாக, சில அரசியல் தத்துவங்களையும் அவர் உணர்ந்து கொண்டிருந்தார்.

விஷயங்களுக்குப் பதில் சொல்வதில் கெட்டிக்காரராக விளங்கினார். பிரச்சனைகளுக்குப் பரிகாரம் தேடுவதிலும் கெட்டிக்காரராக விளங்கினார். ஒரு கட்சியை நடத்தக் கூடிய சாமர்த்தியம் தனக்கு இருக்கிறது என்பதையும் காட்டினார்.

“பிரித்தலும் பேணிக் கொளலும் பிரித்தார்ப் பொருத்தலும் வல்லது அமைச்சு”

– என்றும் அவர் காட்டினார்.

அவர் கட்சிக்குள் மிக முக்கியமான ஆட்களும் உள்ளே நுழைய ஆரம்பித்தார்கள்.

அண்ணா திராவிட முன்னேற்றக் கழக்த்தில் அங்கம் வகித்தவர்களில் பட்டதாரிகள் அதிகமாக இருந்தார்கள். அதே அளவுக்கு பட்டமோ, படிப்போ இல்லாத கிராம வாசிகளும் அதிகமாக இருந்தார்கள். திராவிட முன்னேற்றக் கழகம் எவ்வளவு எரிச்சல் அடைந்தும் கூட இந்த வளர்ச்சியைத் தடுத்து நிறுத்த முடியவில்லை.

எம்.ஜி.ஆருக்கு எதிராகக் கருணாநிதி அதிகார பூர்வமான நடவடிக்கைகளை மேற்கொண்டும் கூட அவரால் அவருடைய வளர்ச்சியை நிறுத்த முடியவில்லை.

யாரோட உறவு கொண்டால் எந்த எதிரியைத் தீர்த்துக் கட்டலாம் என்பதில் கருணாநிதியைவிட எம்.ஜி.ஆர் கெட்டிக்காரராக விளங்கினார். 

கருணாநிதிக்கு இல்லாத சில புதிய திறமைகளும், எம்.ஜி.ஆருக்கு இருந்ததாக அந்தக் காலங்களில் கருதப்பட்டது. உண்மையாகவே ஒரு கட்டத்தில் ஆகிவிட்டது.

எனக்கும் எம்.ஜி.ஆருக்கும் இடையில் நீண்டகாலமாகத் தொழில் தொடர்பு உண்டு. அந்தத் தொடர்புகளில் கசப்பு இருந்தாலும், இனிப்பும் இருந்தது.

ஆனால் அரசியலில் அவர் நடந்து கொண்ட முறையும், சாமர்த்தியமும் எனக்கே திகைப்பாக இருந்தன. நமக்குக்கூட அந்த அளவுக்கு உழைக்கின்ற சக்தி இல்லை என்பது புரிந்தது.

திண்டுக்கல் தேர்தலில் அவர் ஈடுபட்ட போது, அந்தத் தேர்தலுக்கு அவர் பட்டபாடு, அதிகாலையிலிருந்து இரவு வரையில் அவர் செய்துவந்த சுற்றுப்பயணங்கள், இவை வரலாற்றில் பொறிக்கப்பட வேண்டிய ஒன்றாகும்.

சோம்பல் என்பது துளியும் இல்லாமல், அவர் எந்தச் சூழ்நிலையிலேயும் யாரையும் சந்திப்பதற்குத் தயாராக இருந்து மாபெரும் வெற்றி ஒன்றை, எல்லாக் கட்சிகளையும் எதிர்த்துப் பெற்றார் என்பது, தமிழக வரலாற்றில் மறக்க முடியாத ஒன்றாகும்.

இந்த நேரத்தில் நண்பர் கருணாநிதி அவர்களைப் பற்றியும் தெளிவாகச் சில விஷயங்களைச் சொல்லி விடுவது நல்லது என்று நான் கருதுகிறேன்.

ஏற்கனவே ‘வனவாச’த்திலும் மற்ற இடங்களிலும் நான் அவரைப்பற்றிக் குறிப்பிட்டிருக்கிறேன் என்றாலும், அரசியல் ரீதியாக இரண்டொரு விஷயங்களை நான் கூறியாக வேண்டும்.

கருணாநிதி அரசியல் நிர்வாகத்தில் மிகுந்த திறமைசாலி. ‘எங்கே எந்தத் தொண்டன் இருக்கிறான், எந்த மாவட்டத்தில் எவ்வளவு பேர் இருக்கிறார்கள், எந்த ஊரில் கிளை இருக்கிறது இல்லை’ என்கிற அனைத்தும் அவர் விரல் நுனியில் அடங்கி இருந்தன. அவ்வளவு திறமைசாலி.

பேச்சில் ஒருவரை வளைக்க வேண்டும் என்றால் அவரால் வளைக்க முடியும். முன்னாலே உட்கார்ந்திருப்பவர்களை அழ வைக்க வேண்டும் என்றால் அழ வைக்க முடியும். யாரைப் பக்கத்திலே இழுக்க வேண்டும் என்று விரும்புகிறாரோ, அவர்களை சாகசம் பண்ணியாயவது வரவழைத்து விடுவார், உள்ளே இழுத்து விடுவார்.

கம்யூனிஸ்டு கட்சியில் இருந்துகூட ஆட்களை இழுத்துக் கொள்ளக் கூடிய சாமர்த்தியம் அவருக்கு மட்டுமே உண்டு. எந்தக் கட்டுப்பாட்டையும் உடைத்து ஆட்களை இழுக்கக் கூடியவர்.

எம்.ஜி.ஆர். விஷயத்தில், யானை தடம் தப்பியதைப் போலத் தப்பினாரே தவிர, மற்றபடி அவருக்கு அரசியல் சாமர்த்தியம் என்பது மிக அதிகம்.

நிர்வாகத்தில் ஏற்கனவே இருந்த எல்லாரையும் விட அவர் திறமைசாலி என்று செக்ரட்டேரியட்டில் இன்றைக்கும் எல்லாரும் ஒப்புக் கொள்கிறார்கள்.

ஆனால் அவரைப் பொறுத்தவரைக்கும் இருந்த மிகப் பெரிய பலவீனம், ‘பணம், பதவி’ இந்த இரண்டும் தன்னுடைய குடும்பத்திற்குப் போகத்தான் மற்றவர்களுக்கு என்று, ஒன்றை வைத்திருந்தார்.

இந்த எண்ணம் எம்.ஜி.ஆரிடம் எப்போதும் இருந்ததில்லை. இந்தப் பணமும், பதவியும், தனக்கும் தன் வீட்டுக்கும் என்று அவர் கருதியதில்லை.

ஆனால் கருணாநிதியைப் பொறுத்தவரை ஒரு பதவி காலியானால் அதில் மாறனைப் போடலாமா, மற்ற நெருங்கிய நண்பர்களைப் போடலாமா, உறவினர்களைப் போடலாமா என்று தான் கருதுவார். பணம் ஏதாவது கிடைக்குமானால் குடும்பத்திற்கு ஒதுக்கிக் கொண்டு மீதியில்தான் மற்றவர்களுக்கு செலவழிக்கலாம் என்று கருதுவார்.

அதே நேரத்தில் நானும் அவரோடு 25 வருடங்களாகப் பழகியிருந்தேன். காரில் ஏறி உட்கார்ந்தாலோ, கடை வீதியில் இறங்கினாலோ, யாராவது பிச்சைக்காரர்கள் வந்து காசு கேட்டாலோ நாலணா போடலாம் என்கின்ற எண்ணம் ஒருபோதும் இவருக்கு வந்ததில்லை. அப்படிப் போடுவது பயனற்றது என்றும் அவர் கருதுவார்.

ஆனால் எம்.ஜி.ஆர். அவர்களைப் பொறுத்துவரைக்கும் 10,000 கொடுக்க வேண்டிய இடத்தில் 20,000-மாவது கொடுத்து நல்ல பேர் வாங்க வேண்டும் என்று அவர் கருதுவார்.

இரண்டு பேருக்கு இடையிலே பேதம் இது என்றால் கருணாநிதியினுடைய சுபாவம் இது.

பணத்தையும் பதவியையும் பெரிதாக நினைத்த காரணத்தினால்தான், அந்த பலஹீனத்தினால்தான், மிகப் பெரிய அவருடைய பலங்களெல்லாம் அடிப்பட்டுப்போய் கடையில் அவருக்குப் பல சிரமங்கள் தோன்றின என்று நான் கருதுகிறேன்."

- 'நான் பார்த்த அரசியல்' எனும்  கவிஞர் கண்ணதாசன்

பொய்யும் புனைவும் ஆராய்ச்சி ஆகுமா? - பொ.வேல்சாமி

 பொய்யும் புனைவும் ஆராய்ச்சி ஆகுமா..? 

( இதோ பூலான்குறிச்சி கல்வெட்டு )

- பொ.வேல்சாமி 11.10.2021 முகநூல் பதிவு

நண்பர்களே..

தமிழ்நாட்டு வரலாறு, தமிழ் இலக்கிய வரலாறு பற்றிய கருத்துக்களில் தெளிந்த ஆராய்ச்சியாளர்களைப் போன்று, தோழர் மணியரசனைச் சேர்ந்த சிலர் பொய்மையையும் புளுகு மூட்டைகளையும்  துணிச்சலுடன்  பேசி வருகின்றனர். அத்துடன் நில்லாது என்னால் சரியான ஆதாரங்களுடன் எழுதப்பட்டிருக்கின்ற  பல வரலாற்றுச் செய்திகளின் ஆதாரங்களை மறுக்க முடியாததனால் இவர் எந்த சாதி என்று கேட்டு, கேட்பவர்களையும் படிப்பவர்களையும் திசை திருப்பி விடுவதற்கு முயற்சி செய்து வருகின்றனர். மேலும் இத்தகையவர்கள் என்னை நோக்கி நீங்கள் என்ன சாதி என்று  கேட்பதைப் போன்று அவர்களை நோக்கி அதே கேள்வியை நான் கேட்டால்  அவர்கள் பதறிப் போய் “சாதியைக் கேட்கிறார்“ “சாதியைக் கேட்கிறார்“ என்று கூக்குரலிட்டு இது என்ன நியாயம், இது என்ன நாகரிகம் என்று பதறுகிறார்கள். அவர்களுக்கு நியாயமாக இருப்பது எனக்கு நியாயமாக இருக்காதா..?

இத்தகைய செயல்களை நியாயப்படுத்தவதற்காக அவர்கள் எந்தவிதமான பொய்யையும் துணிந்து சொல்கின்றனர். தன் எதிரில் நிற்கும் மனிதனுக்கு ஆராயும் ஆறாம் அறிவே இருக்காது ( இந்த கருத்து ஆழமாகப் பதிந்ததனால் பகுத்தறிவு என்ற ஒன்று மனிதனுக்கு இருக்காது, இருக்கவும் கூடாது என்று கதைப் பேசுகின்றனர். ) என்ற நம்பிக்கையுடன் இத்தகையவர்கள் தங்களுக்குத் தோன்றியதை எல்லாம் பேசியும் எழுதியும் வருகின்றனர். அப்படிப்பட்ட சிலரில்  ஒருவர் விட்ட “கப்சா”வின் தரம் என்னவென்று காட்டுவதற்கான ஆதாரங்களை உங்கள் முன் வைக்கிறேன். குறிப்பாக சோழர்காலத்தைப் பற்றி ( இத்தகைய செய்திகள் பாண்டியர்கள் காலத்திலும் நாயக்கர்கள் காலத்திலும் மராட்டியர்கள் காலத்திலும் பிரி்ட்டிஷ்காரர்கள் காலத்திலும் ஏன் சுதந்திரத்திற்கு பின்பும் பல ஊர்களில் இதேபோன்று நடந்து வருவதை நீங்கள் அறிவீர்கள் ) அவர்கள் சொல்லுகின்ற சில விசயங்கள் அப்பட்டமான பொய் என்பதை ஜப்பானிய வரலாற்று அறிஞர் எழுதிய “வரலாற்றுப் போக்கில் தென்னகச் சமூகம்” நூலின் பக்கங்களை உங்கள் முன் வைத்துள்ளேன். கூடுதலாக அந்நூலின் இணையதள இணைப்பைக் கொடுத்துள்ளேன்.                                                                                                  

1. . சோழர் காலத்து சமூக அமைப்பைப் பற்றிய இத்தகையவர்களின் பொய்மூட்டைகளை அவிழ்ப்பதற்கு ஜப்பானைச் சேர்ந்த  வரலாற்று அறிஞர் நொபுரு கரஷிமா அவர்கள் சோழர்காலத்தில் வெட்டப்பட்ட நூற்றுக்கணக்கான கல்வெட்டுகளை ஆராய்ந்து ஆராய்ச்சி செய்து இந்நூல் வெளியிடப்பட்டது. இத்தகைய அரிய நூலின் பெயர்   “வரலாற்றுப் போக்கில் தென்னகச் சமூகம்” என்பதாகும். இந்த நூலின் தமிழ் மொழிபெயர்ப்பின் இணையதள இணைப்பை உங்களுக்குக் கொடுக்கின்றேன்.


2. களப்பிரர்களைப் பார்ப்பனர்களுக்கு எதிரானவர்கள் என்று வரலாற்று அறிஞர் நீலகண்ட சாஸ்திரியார் போன்ற பலரும் கொடுத்துள்ள சான்றுகளின் அடிப்படையில் தான் என்னுடைய எழுத்துக்கள் அமைந்துள்ளன. முதலில் அத்தகைய  வரலாற்று அறிஞர்களின் கூற்றுக்களின் வன்மை மென்மையை ஆராய்ந்து விட்டு என் எழுத்துக்களுக்கு வருவதுதான் முறையாக இருக்கும். 

3. வேள்விக்குடி செப்பேடு போன்ற வரலாற்றுப் பதிவுகளின் அடிப்படையில் மேற்கண்ட வரலாற்று அறிஞர்கள் குறிப்பிடும் கருத்துக்களை இவர்கள் மனம் போனபடி அவதூறு செய்கின்றனர். அப்படியான நேரத்தில் தங்கள் பேச்சைக் கேட்டுக் கொண்டிருப்பவர்களுக்கு சிறிதளவாவது அறிவு இருக்கும் என்று இவர்கள் கருதுவதில்லை போன்று தெரிகிறது.  எப்படியென்றால் “யாப்பருங்கலம்” என்ற நூலில் உள்ள செய்தியை “யாப்பருங்கல காரிகை”யில் உள்ளதாகக் கதைவிடுவார்கள். ( ஏனென்றால் எதிரில் இருந்து கேட்டு கொண்டிருக்கும் மனிதன் ஒரு மோடுமுட்டி என்ற ஒரு வலுவான நம்பிக்கை அவர்களுக்கு உண்டு )  அப்படி ஒரு பொய்யை சொல்லும்போது கூட ஒரு முழுமையான பாடலில் அங்கமாக அமைந்த ஒரு நான்கு வரிகளை  மட்டும் உருவியெடுத்து இதுதான் முழுமையான பாடல்  என்று கதைப்பார்கள்.                  

4. சைவ சித்தாந்தத்தைப் போதிக்கும் சிவஞான போதம் நூலை தமிழர் தத்துவம் என்று உங்களிடம் அவர் கூறுவார். அதே நேரத்தில் அந்த நூலை எழுதிய ஆசிரியர் மெய்க்கண்டார். மெய்க்கண்டாரின் தந்தையின் பெயர்  “அச்சுத களப்பாளர்“ என்ற செய்தியை உங்களுக்குச் சொல்லமாட்டார். ( யாராவது ஒரு வாசகர் மெய்க்கண்டாரின் தந்தையார் அச்சுத களப்பாளர் களப்பிரரா? என்று கேட்டால் இவர்கள் என்ன கூறுவார்கள்.?)                   

5. பதினென்கீழ்க்கணக்கு நூல்களில் ஒன்றான “ஆசாரக்கோவை” என்ற நூல்  ஆரியர்களின் தர்ம சூத்திரங்களைப் பின்பற்றி கி.பி. 8 ம்  நூற்றாண்டிற்கு பின்பு  எழுதப்பட்டது என்பதையும் அந்தக் காலக்கட்டத்தில் களப்பிரர்கள் ஒழிக்கப்பட்டு 300 ஆண்டுகளுக்கு மேலாகிவிட்டது என்பதை மறைத்துவிட்டு அந்த நூல் களப்பிரர் காலத்தைச் சேர்ந்தது என்று உங்கள் காதுகளில் பூ சுற்றுவார். 

6. இதற்கு மேலும் கேட்டுக் கொண்ருப்பவர்கள் தவறுதலாகச் சிந்தித்து ஏதாவது கேள்வி கேட்டுவிட்டால் என்ன செய்வது என்பதற்காக  “பூலான்குறிச்சி” கல்வெட்டைப் பார்  என்று பயப்படுத்துவார்.  கேட்பவர்களைக் கலக்கிவிடுவார். பயப்படாதீர்கள் அந்தக் கல்வெட்டின் வாசகங்கள் முழுமையும் உங்கள் பார்வைக்கு வைக்கின்றேன். இன்றைய நிலை வரையிலும் மிகத் தெளிவாக இந்தக் கல்வெட்டை யாராலும் விளக்கமுடியாமல் இருக்கின்றது. ஏனென்றால் அந்தக் கல்வெட்டு முழுமையாகக் கிடைக்கவில்லை. சிதைந்துள்ளது.  எனவே இக்கல்வெட்டைப் பற்றி பலரும் பலவிதமான கருத்துக்களைக் கூறுவதற்கு இடம் ஏற்பட்டுள்ளது.  நீங்கள் உங்களுக்கு சரியென்று தோன்றுகின்ற கருத்தைப் பெறுவதற்காக அந்தக் கல்வெட்டையே ஒரு தொல்லியல் அறிஞருடைய கருத்துக்களுடன் வெளியிடப்பட்ட கல்வெட்டை உங்களுக்கு முன் வைக்கிறேன்.  

குறிப்பு

 கூடிய சீக்கிரம் தரவிறக்கம் செய்து கொள்ளுங்கள். ஏனென்றால் என்னுடைய பதிவு வந்த ஒருசில நாட்களிலேயே இது போன்ற பல நூல்கள் தரவிறக்கம் செய்ய முடியாமல் தடை செய்யப்பட்டுள்ளதைக் கவனிக்க வேண்டுகிறேன். )  


வரலாற்றுப் போக்கில் தென்னகச் சமூகம் ( அறிஞர் நொபொரு கராஷிமா பல நூற்றுகணக்கான சோழர்கால  கல்வெட்டுகளை கணினி மூலம் ஆராய்ந்து எழுதிய நவீன வரலாற்று நூல் இது ) 

https://www.tamildigitallibrary.in/book-detail?id=jZY9lup2kZl6TuXGlZQdjZU6jZhy&tag=%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D+%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%A4%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%95%E0%AE%9A%E0%AF%8D+%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%82%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D#book1/


அமிதசாகரனார் இயற்றிய யாப்பருங்கலம்  : (பழைய விருத்தியுரையுடன்)

https://archive.org/details/dli.jZY9lup2kZl6TuXGlZQdjZM8luQy.TVA_BOK_0006096


ஆசாரக் கோவை

https://s://www.tamildigitallibrary.in/book-detail?id=jZY9lup2kZl6TuXGlZQdjZU6jZhy&tag=%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D+%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%www.tamildigitallibrary.in/book-detail?id=jZY9lup2kZl6TuXGlZQdjZt8kxyy&tag=%E0%AE%86%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%95%E0%AF%8D%20%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B5%E0%AF%88#book1/

Monday, September 19, 2022

சீமான் உண்மை முகம்

#சீமான்_உண்மை_முகம்

நான் சீமானின் முன்னாள் ஆதரவாளன். அவரது உணர்சிகளை தூண்டும் பேச்சாலும் விடுதலைபுலிகளின் ஆதரவு நிலைப் பாட்டாலும் அவரால் கவரப்பட்டேன். 

பிறகு அவ‌ரை நெருக்கமாக கவனித்தபோது பல அதிர்ச்சியான உண்மைகள் தெரியவந்தன. எனது அனுபவத்தின் அடிப்படையில் அவரை பற்றி தெரிந்து கொண்ட விசயங்களை இங்கே தகுந்த ஆதாரங்களுடன் பகிர்ந்து கொண்டு உள்ளேன். இது தமிழ்நாட்டில் உள்ள பெரிய ஊடகங்களில் வெவ்வேறு காலகட்டங்களில் வந்த செய்திகளை ஆதாரமாக கொண்டு, வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகள். இதை மறுப்பவர்களிடம் நேர்மை இருந்தால் பதிலுக்கு வேறு ஆதரங்களை கொடுக்க வேண்டும்.

சீமான் புலிகளுக்கு செய்த துரோகங்கள்:

ஈழப்படுகொலைக்கு பின்னர் ஐநாவின் டப்லின் தீர்பாயத்தில் நடந்த விசாரணை மிக முக்கியமானது. அதில் நாம் தமிழர் கட்சியின் சார்பாக 41 பக்க அறிக்கையை சமர்பித்துள்ளனர். அதில் LTTE யினர் போர்குற்றம் புரிந்தனர் என்று கூறியுள்ளார் சீமான். அந்த அறிக்கையில் 40 ஆவது பக்கத்தில்,

"விடுதலைப் புலிகள் ஆண், பெண், குழந்தைகள் என்ற பேதமின்றி அனைவரையும் புலிகள் போரில் ஈடுபடுத்தினர், குழந்தைகளை LTTE யினர் பெற்றோரிடம் இருந்து பிடிங்கி, தங்களின் படைகளில் இணைத்துக் கொண்டனர். திருமணமான பெண்களுக்கு கட்டாய கருக்கலைப்பை LTTE யினர் செய்ததனர், மேலும் போரின் இறுதிக் கட்டத்தில் LTTE யினர் அப்பாவி மக்களை கேடயமாக பயன்படுத்தியதாகவும், தப்பிக்க பார்த்த தமிழர்களை சுட்டு கொன்றனர்" என்று சிங்கள அரசாங்கம் பிரபாகரன் மீது கூறும் அத்தனை குற்றச்சாட்டுகளையும் கூறியுள்ளார் சீமான். நேரடியாக LTTE யினர் தான் போர் குற்றவாளிகள் என்று ஐ.நா விசாரணை குழுவில் வாக்குமூலம் அளித்துவிட்டு, இங்கு வந்து பிரபாகரனின் புகழ் பாடி கொண்டு இருக்கிறார் சீமான். 

சீமானின் இந்த துரோகத்தை கண்டித்துதான் சீமான் கலந்துகொண்ட"முள்ளிவாய்க்கால் முடிவல்ல" என்ற புத்தக வெளியீட்டு விழாாவில் கலந்து கொள்ளாமல் கவிஞர் காசிஆனந்தன், த.வெள்ளையன், இயக்குனர் வ.கெளதமன் ஆகியோர் புறக்கணித்தனர். இவர்கள் தீவிரமான தமிழ் உணவாளர்கள் மற்றும் ஈழ ஆதரவாளர்கள் என்பது அனைவரும் அறிந்ததே.

சீமானின் துரோகத்துக்கு இரண்டு ஆதாரங்கள்:

1. விகடன் என்பது விடுதலைப்புலிகளுக்கு ஆதரவான பத்திரிக்கை. ஈழ இறுதிபோர் உச்சத்தில் இருந்த போது விகடன் தான் புலிகளுக்கு ஆதரவாகவும், இந்திய அரசுக்கு எதிராகவும் உண்மை செய்திகளை தைரியமாக வெளியிட்டது அனைவரும் அறிந்தது.

இப்போது கூட சீமானின் பேட்டிகளை அதிகமாக வெளியிட கூடிய வெகுஜென பத்திரிக்கை விகடன் தான். அப்படிப்பட்ட பத்திரிக்கையிலேயே விடுதலை புலிகளுக்கு எதிராக ஐநாவில் சீமான் சமர்பித்த அறிக்கை பற்றி மிக கடுமையான குற்றச்சாட்டு வைக்கப்பட்டுள்ளது. ஒருவேளை இது பொய் என்றால் சீமான் இதற்கு மறுப்பு தெரிவித்து இருப்பார். ஏனெனில் விகடன் தமிழ்நாட்டில் மிக அதிக அளவில் விற்பனையாகும் வார இதழ். ஆனால் சீமான் இதை பற்றி வாயே திறக்காமல் கள்ள மௌனம் சாதிக்கிறார். இதுவே அவரின் மீதான குற்றச்சாட்டை உறுதிபடுத்துகிறது. விகடன் வெளியிட்ட செய்திக்கான லிங்கை கீழே கொடுத்து உள்ளேன்

http://www.vikatan.com/news/tamilnadu/64271-students-forum-turn-against-seeman.art

2.தேவர் சமூகத்து மக்களால் நடதப்படும் பேஸ்புக் பக்கத்திலும் சீமான் ஐநாவில் சமர்பித்த அறிக்கைக்கு எதிராக சீமானுக்கு கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது. தேவர் ஜாதி மக்கள் என்ன வேற்று மொழிகாரர் களா? அவர்கள் சீமான் மேல் ஏன் அவதூறு பரப்ப வேண்டும்? அதற்கான இணைப்பு கீழே

https://m.facebook.com/thevarvamsamfilmsindia/posts/1614333865554009:0

சீமான் இப்படி பொய் சொல்ல காரணம் தாம் தான் விடுதலை புலிகளின் பிரதிநிதி என்று கூறி வெளிநாடுவாழ் தமிழர்களிடம் பணம் பறிக்க தான். சிங்கப்பூரில் விடுதலை புலிகளின் பெயரை பயன்படுத்தி முறைகேடாக பணம் வசூல் செய்த குற்றத்துக்காக நாம் தமிழர் கட்சியை சேர்ந்த 5 பேர் சிங்கப்பூர் போலீசால் கைது ச‌ெ‌ய்யப்பட்டு நாடு கடத்தப்பட்டனர். அதற்கு ஆதாரமாக பத்திரிக்கைகளில் வந்த செய்தி 

https://i0.wp.com/www.pathivu.com/app/uploads/2016/08/se.jpg

சீமானின் இலங்கை பயண பொய்கள்:

சீமான் இலங்கைக்கு சென்றது திரைப்படம் எடுப்பது தொடர்பான பயிற்சி கொடுக்க தான். இதை நடிகர் ராஜ்கிரன் ஒரு பேட்டியில் பேச்சுவாக்கில் கூறிவிட்டார். சீமான் தலைவர் பிரபாகரனை சந்தித்தது 5 நிமிடங்களுக்குள் தான். பாரதிராஜா, மகேந்திரன் போன்றோர் எற்கனவே இதேபோல் சென்று தலைவருடன் புகைப்படம் எடுத்துள்ளனர். அதேமாதிரி தான் ஒரு இயக்குனர் என்ற அடிப்படையில் சீமானோடு ஒரே ஒரு புகைப்படம் எடுத்துள்ளார் தலைவர். அதன் பிறகு பிரபாகரன் எந்த இடத்திலும், எந்த நேரத்திலும் சீமான் என்ற பெயரை உச்சரிக்கவே இல்லை. ஆனால் சீமானோ அவரோடு எடுத்த ஒரே ஒரு புகைப்படத்தை வைத்துக்கொண்டு, என்னமோ இவர் தான் பிரபாகரனின் வலது கையாக செயல்பட்டது போலவும், பிரபாகரன் என்னிடம் "அதை கூறினார், இதை கூறினார்" என்று பொய் சொல்லி கொண்டு இருக்கிறார். அதுகூட‌ பரவாயில்லை, "பிரபாகரன் எனக்கு இலையில் கடல் நண்டு பரிமாறினார்" என்று எல்லாம் பேட்டி கொடுத்துள்ளார். அப்படி உண்மையிலேயே பிரபாகரனுக்கு நெருக்கமானவராக இருந்திருந்தால், "இவர் இப்போது சொல்லும் விசயங்களில் ஒன்றை கூட ஏன் தலைவர் உயிரோடு இருக்கும் போது மேடைகளில் கூறவில்லை?" ஏனெனில் உண்மையை பிரபாகரன் வெளியிட்டு விடுவார் என்ற பயம் தான் காரணம்.

ராஜ்கிரனுக்கு சீமானுடன் எந்தவித கசப்பும் கிடையாது. அவர் திரைதுரையில் ஒழுக்கமானவர் என்று பெயர் எடுத்தவர். தமிழ் சினிமாவில் உள்ள ஒருவர் கூட ராஜ்கிரனை பற்றி சிறிய குறைகூட சொல்ல மாட்டர்கள். ராஜ்கிரன் எந்த கட்சியிலும் உறுப்பினரும் கிடையாது. நந்தா படத்தில் பிரச்சனை வரும் என்று சிவாஜிகணேசன் நடிக்க மறுத்த கதாபாத்திரத்தில் இலங்கை தமிழர்கள் மீது உள்ள பாசத்தால் தைரியமாக நடித்தவர் ராஜ்கிரண். எனவே அவர் பொய்யோ, அவதூறோ செய்ய வேண்டிய அவசியம் இல்லை. அவர் சீமானின் இலங்கை பயணம் பற்றி கொடுத்த பேட்டி கீழே உள்ளது

https://www.youtube.com/watch?v=YKAp_QIDK2o

இதுமட்டும் அல்லாது புலிகளின் தளபதி மரியாதைகுறிய அண்ணன் சூசை அவர்கள் சீமானை பற்றி பேசுவது போல போலியான ஆடியோவை யுடிப்பில் வெளியிட்டு உள்ளார் சீமான் . அப்படி அவர் உண்மையாக சீமானை பற்றி பேசி இருந்தால், அதை புலிகள் அவர்களின் அதிகாரபுர்வ வானொலியிலேயே வெளியிடுவார்கள். இதுதான் விடுதலை புலிகளின் மரபு. 

அனைவரும் இறந்தபின், தான் சொல்லும் பொய்யை மறுக்க யாரும் உயிரோடு இல்லை என்ற தைரியத்தில் இப்படி ஒரு கீழ்த்தரமான செயலில் ஈடுபடுவது நியாயமா சீமானே? 

அரசியல் விமர்சகர்கள் உங்களை "பிணம் திண்ணி" என்று அழைப்பதில் என்ன தவறு இருக்கிறது சீமான்?

சீமானும் சிங்களர்களும்:

சீமானுக்கு சிங்களர்களோடு பல காலமாகவே நெருங்கிய தொடர்பு உள்ளது. அதன் காரணமாக தான் தனது தம்பி படத்தில் ஒரு சிங்கள பெண்ணை(பூஜா) ஹீரோயினாக நடிக்க செய்தார் சீமான். ராஜபக்சேவின் சொந்தங்கள் தயாரித்த 'கத்தி' படத்தை தமிழகத்தில் திரையிட தமிழ் உணர்வாளர்கள் எதிர்த்தபோது "கத்தி படத்தை எதிர்க்க முடியாது" என்று வெளிப்படையாக கூறியவர் சீமான். 

கடைசியாக ஐ.நாவின் டப்லின் தீர்ப்பாயத்தில் "விடுதலைபுலிகள் தான் தமிழர்களை கொன்றனர்" என்று ஒப்புதல் வாக்குமூலம்கொடுத்துள்ளார் சீமான். 

ஈழ போர் தோல்வியில் முடிந்ததும் நாடு கடந்த தமிழ் ஈழ அரசை அமைக்க முயன்றார்கள் வெளிநாடு வாழ் தமிழர்கள். ஒரு காலத்தில் நாடு இல்லாத யூதர்கள் இது போன்ற அரசை அமைத்து பிறகு இஸ்ரேல் என்ற நாட்டை பெற்றனர். இதனால் அதிர்ச்சியடைந்த சிங்கள அரசு தமிழர்களின் ஒற்றுமையை சிதைக்க முடிவு செய்தது. சீமானுக்கு எங்கிருந்தோ பணம் வந்து குவிந்தது.

அதனால் தான் பல வருடம் அரசியலில் இருந்த பாமாகவுக்கு இணையாக புதிதாக கட்சி தொடங்கிய சீமானும் சென்ற தேர்தலில் டிவிகளில் "போட்டு பார் ஓட்டை, அப்புறம் பார் நாட்டை" என்று பிரமாண்டமாக விளம்பரம் செய்தார்.

உலகம் முழுக்க தமிழர்கள் வாழ்ந்த இடத்தில் இருந்த தமிழ் அமைப்புகளில் பிளவுகள் ஏற்பட்டது. நாம் தமிழர் கட்சியின் கிளை அமைப்புகள் அங்கு தொடங்கப்பட்டன. அதன் பிறகு இன்று வரை உண்மையான நாடு கடந்த தமிழ் ஈழ அரசு அமையவில்லை.

சீமானும் தமிழ்நாடும்:

சரி இப்போது தமிழ்நாட்டு அரசியலுக்கு வருவோம். சீமான் தமிழ்நாட்டில் இயற்கை வளங்கள் சுரண்டப்படுவதாக கொந்தளிக்கிறார். ஆனால் அதை செய்யக்கூடிய மணற்கொள்ளையன் வைகுண்டராஜனும், கிராணைட் கொள்ளையன் பி.ஆர்.பியும் சீமானுக்கு நெருக்கமானவர்கள் என்று அவரின் தம்பிகள் எத்தனை பேருக்கு தெரியும்?

 சீமானுக்கு திருமணம் முடிந்த உடன் வைகுண்டராஜன் தான் தடபுடலாக கறி விருந்து கொடுத்தார். பதிலுக்கு வைகுண்டராஜன் மகன் திருமணத்தை சீமான் தான் முன்னின்று நடத்தி வைத்தார்.

நோட்டாவை விட குறைவான வாக்குகள் வாங்கிய "நாம் தமிழர்" கட்சிக்கு வைகுண்டராஜனின் நியூஸ் 7 தொலைக்காட்சியில் அளவுக்கு அதிகமாக முக்கியதுவம் கொடுக்கப்படுகிறது.

சீமான் வைகுண்டராஜனின் பினாமி என்று கூறப்படும் குற்றச்சாட்டை இது உறுதிபடுத்துவது போல் உள்ளது.

பி.ஆர்.பியில் தொழிலாளர் பிரச்சனை வந்த போது பி.ஆர்.பிக்கு ஆதரவாக "பி.ஆர்.பியிடம் வாங்கித் தின்றுவிட்டு அவரையே குற்றவாளியாக்குவது நியாயமா?" என்று பேசியதும் சீமான் தான். 

இவர்தான் ஆட்சிக்கு வந்து இயற்கை வளங்களை காக்க வைகுண்டராஜனையும், பி.ஆர்.பியையும் கைது செய்ய போவதாக கூறுகிறார். 

அடுத்து கல்வியை அரசுடைமை ஆக்கப்போவதாக சீமான் கூறுகிறார். ஆனால் தமிழ்நாட்டிலேயே மிகப் பெரிய கல்வி கொள்ளையனான சிறை சென்ற பாரிவேந்தர் பச்சமுத்து தான் 2016 தேர்தலுக்கு நாம் தமிழர் கட்சிக்கு 50 லட்சம் ருபாய் நன்கொடை கொடுத்துள்ளார். 

பச்சமுத்துவிடம் பணம் வாங்கி கொண்டே அவருக்கு எதிராக எப்படி நடவடிக்கை எடுப்பார்? இன்று அதிமுகவுக்கு எதிராக பொங்கும் சீமான் "சசிகலாவின் கணவர் நடராஜனின் காலில் விழுந்தவர்" என்பது தான் உண்மை.

வைகுண்டராஜன் சீமானுக்கு விருந்து வைத்ததை கம்யுனிஸ்டுகளின் இணையதளமாகிய வினவில் கடுமையாக விமர்சித்தார்கள். அதற்கான இணைப்பு கீழே

http://www.vinavu.com/2013/10/25/seeman-natarajan-vaikudarajan-tamil-desia

சரி எந்த பதவியிலுமே இல்லாத சீமானுக்கு தொழில் அதிபர்கள் ஏன் பணம் தருகிறார்கள்? 

தொழில் அதிபர்கள் பதவியில் இருப்பவர் களுக்கு மட்டும் தான் பணம் கொடுப்பார்கள் என்று நினைக்க வேண்டாம். அவர்களுக்கு பினாமியாக இருந்தால் பணத்தை வாரி வழங்குவார்கள். சுப்பிரமணியசாமி, உத்தரபிரதேசத்தின் அமர்சிங் மாதிரி. 

மேலும் சீமானின் வெளிநாட்டு தொடர்புகள் கருப்புபணத்தை வெள்ளையாக மாற்ற அவர்களுக்கு மிகவும் உதவும். தாது மணல் திருடன் வைகுண்டராஜன ஏன் சீமானுக்கு கறி விருந்து கொடுக்க வேண்டும். அவரின் நியூஸ் 7 தொலைக்காட்சியில் ஒரு வார்டு மெம்பராக கூட இல்லாத உங்க கட்சிக்கு ஏன் அளவுக்கு அதிகமான முக்கியதுவம் தரப்படுகிறது. கிரானைட் கொள்ளையன் பிஆர்பி ஆலையில் தொழிலாளர் போராட்டம் நடத்தினால் சீமானுக்கு ஏன் அவர்களை திட்டுகிறார்? 

இந்த கேள்விகளுக்கு பதில் தேடினாலே சீமானுக்கும் கொள்ளையர்களுக்கும் உள்ள தொடர்பு புரிந்துவிடும்.

சீமானும் விவசாயமும்:

விவசாயத்தை காப்பாற்ற போவதாக சீமான் மேடைகளில் உணர்ச்சி வசப்பட்டு முழங்குகிறார்.

ஆனால் விவசாய நிலங்களை பிளாட்களாக மாற்ற நீதிமன்றம் தடை விதித்தது. இந்த தடைக்கு எதிராக 19.10.2016 அன்று சென்னை எலும்பூரில் ரியல் எஸ்டேட் தரகர்களுடன் இணைந்து போராட்டம் நடத்தினார் சீமான். இந்த போராட்டத்தை தலைமேயேற்று நடத்தியர் "இந்தியதேசிய ரியல் எஸ்டேட் பில்டர்ஸ், லேண்ட் டெவலப்பர்ஸ்" சங்க தலைவரான விருகை வி.என்.கண்ணன். 

சீமான் ஏன் இந்த போராட்டத்தில் கலந்து கொண்டுள்ளார் என்றால்,"ரியல் எஸ்டேட் தரகர்கள்தான் கட்சிக்கு நிதி கொடுப்பார்கள், விவசாயிகள் பெரிதாக நிதி கொடுக்க மாட்டார்கள்". 

இப்போது இயற்கை விவசாயம் பற்றி பேசும் சீமான் ஒருவேளை ஆட்சிக்கு வந்தால் வெளிநாட்டு உர கம்பெனிகளிடம் காசு வாங்கி கொண்டு அவர்களுக்கு சாதகமாக நடக்க மாட்டாரா? ஏனெனில் அவர்கள் ரியல் எஸ்டேட் அதிபர்களை விட பல நூறு மடங்கு அதிகமாக உர கம்பெனிகள் பணம் தருவார்கள். 

சீமான் ரியல் எஸ்டேட் தரகர்களுடன் இணைந்து போரட்டம் நடத்தியதற்கான ஆதாரம்(இது சீமானின் பேஸ்புக் பக்கத்திலிருந்து எடுக்கப்பட்டது)

https://m.facebook.com/ArasiyalNaiyaandi/photos/a.618198474956133.1073741828.592382070871107/1019537271488916/?type=3&comment_id=1019598791482764&_rdr#1019598791482764

சீமானும் ஜல்லிகட்டும்:

கட்சி சார்பில்லாமல் மாணவர்கள் மதுரையில் ஜல்லிகட்டுக்காக நடத்திய பிரமாண்ட போராட்டத்தில் சீமானின் ஆதரவாளர்கள் சீமானின் படத்தை வைக்க முயன்றுள்ளனர். ஆனால் மாணவர்கள் இதை அனுமதிக்கவில்லை. ஏனெனில் இதை அனுமதித்திருந்தால் என்னமோ அந்த பிரமாண்ட போராட்டமே சீமானால் தான் நடத்தப்பட்டது போன்ற பொய்யான தோற்றத்தை சீமானின் ஆதரவாளர்கள் உருவாக்கியிருப்பார்கள். இதனால் சீமான் போராட்ட களத்திற்குள் வந்த போது அவருக்கு மாணவர்கள் கடும் எதிர்ப்பை தெரிவித்தனர். தண்ணீர் பாட்டிலை சீமான் மீது வீசி அவரை விரட்டி அடித்தனர். 

இதனால் கோபம் அடைந்த சீமான் எப்படியாவது இந்த போராட்டத்தை பிசுபிசுக்க செய்ய வேண்டும் என்ற வெறியில் மதுரையில் தனியாக ‌பாேட்டி போராட்டம் நடத்தினார்.

 தமிழர்கள் அனைவரும் கட்சி சார்பின்றி ஜாதி, மத பேதங்களை கடந்து ஒரு நல்ல நோக்கத்திற்காக போராடுவதே அபூர்வம். அதிலும் அரசியல் லாபம் அடைய பார்ப்பது நியாயமா சீமான்? இதுபற்றி வந்துள்ள பத்திரிக்கை செய்தி

www.dailythanthi.com/News/Districts/2017/01/19044613/The-students-refused-to-allowIn-Madurai--Seeman-who.vpf

சீமான் ஒரு தமிழனா?:

சேக்ஸ்பியரின் பன்னிரண்டாம் இரவு (Twelfth Night) என்ற நாடகத்தில் செபஸ்டியன் என்ற ஒரு பாத்திரம் வரும். செபஸ்டியன், வயோலா என்ற இருவரும்ர இட்டையர்கள் என்று சேக்ஸ்பியர் சித்தரித்து இருப்பார். செபஸ்டியன் என்ற பெயர் லத்தீன் மொழிப்பெயர் ஆகும். மலையாள கிறிஸ்துவர்களிடம் மிகப் பெருமளவில் புலங்கும் பெயர் செபஸ்டியன் ஆகும். 

சேஷாத்ரி, தோத்தாத்ரி என்ற பெயர்களைக் கேட்டவுடனே பிராமணர்கள் என்று நாம் அடையாளம் காண முடிவது போல, செபஸ்டியன் என்ற பெயரைக் கேட்டவுடன், இது மலையாள கிருத்துவக் குடும்ப பெயர் என்று விவரம் அறிந்தவர்களால் எளிதில் உணர முடியும். இதுதான் சீமானின் அப்பாவின் பெயர். 

தன்னை யாரும் செபாஸ்டின் சீமான் என்று சொல்லிவிடக்கூடாது என்பதற்காக தான் 2014ல் அரசாங்க பதிவேட்டில் தனது பெயரை செந்தமிழன் சீமான் என்று மாற்றி விட்டார்.

சீமான் அவர்கள் ஒரு மலையாள கிறிஸ்துவரே. தமிழ் சமூகத்தை சார்ந்தவர் என்ற சாதி சான்றிதழை அவர் வாங்கி வைத்திருக்க கூடும். அதை மறுப்பதற்கில்லை. காசு வாங்கி கொண்டு குடியரசு தலைவருக்கே கைது வாரண்ட் கொடுக்கும் ஒரு நாட்டில் இது ஒன்றும் பெரிய விசயம் இல்லை. 

ஒருவேளை சீமான் உண்மையிலேயே தமிழன் என்றால் "இந்த குற்றச்சாட்டு எழுந்த உடனேயே பொங்கி இருப்பார். இல்லை யெனில் தகுந்த ஆதரத்தோடு அதை மறுத்து இருப்பார்". ஏனெனில் இது அவரின் மண்ணின் மைந்தர் கொள்கையையே கேள்விகுறி ஆக்ககூடிய மிகக் கடுமையான குற்றாச்சாட்டு. 

எங்கே சீமானின் பத்தாம் வகுப்பு மார்க் சீட்டை வெளியிட சொல்லுங்கள் பார்ப்போம்/ நிச்சயமாக வெளியிட மாட்டார். ஏனென்றால் அதில் அவருடைய அப்பாவின் உண்மையான பெயர் தான் இருக்கும். இந்த விசயத்தில் சீமானின் கள்ள மௌனம் இதை மேலும் உறுதிப்படுத்துகிறது

சீமானின் கொள்கைகள்:

*சீமானின் தேர்தல் அறிக்கையில் இருப்பவை அனைத்தும் ஏற்கனவேமுகநூல் பகிர்வுகளாக வந்தவைதான். இதுவரை வந்த முகநூல் போஸ்ட்கள், வாட்ஸ்ஆப் பார்வேர்டு செய்திகள் எல்லாம் ஒன்று விடாமல் படிப்பவர் என்றால் இந்த அறிக்கையைப் படிக்க வேண்டியதில்லை. 

இந்து*விவசாயத்தை அரசு வேலை ஆக்குவேன். ஆடு, மாடு மேய்தலும் அரசு வேலையாக ஆக்கப்படும்" என்கிறார். இது எல்லாம் ஏற்கனவே கம்யூனிஸ ரஷ்யாவில் முயற்சி செய்து அந்த நாடே திவால் ஆகி ரஷ்யாவே உடைந்து சிதறிவிட்டது. இது நடைமுறை சாத்தியமற்றதது. அதனால் தான் பாமக ஜாதி கட்சி என்றகெட்ட பெயர் இருந்தாலும் அதன் தேர்தல் அறிக்கையை பத்ரி சேஸாத்ரி போன்ற பொருளாதார அறிஞர்கள் பாராட்டினர். திமுக,அதிமுக போன்ற பெரிய கட்சிகள் கூட பாமகவின் தேர்தல் அறிக்கையை காப்பி அடித்தனர். ஏனெனில் பாமகவின் தேர்தல் அறிக்கை நடைமுறை சாத்தியமுடையது

சீமானின் இன்னொரு வாக்குறுதி என்னவென்றால் ”தமிழ்நாட்டுக்கு தனியாக ராணுவத்தை கட்டமைப்பேன்” என்று கூறுகிறார். இந்தியாவில் இது சாத்தியம் இல்லையென்று கலவி அறிவு இல்லாதவர்கள் கூட கூறிவிடுவார்கள். இவரின் அனைத்து தேர்தல் வாக்குறிதிகளும் கிட்டதட்ட இதே மாதிரி தான்.

சீமானின் ஆதரவாளர்கள்:

சீமானை ஆதரிப்பவர்கள் உணர்ச்சிவசப்படக்கூடிய தமிழ் மீது பற்று உடைய ஈழப் போரால் விரக்தி அடைந்த, திராவிட கட்சிகளின் ஊழலால்வெறுப்படைந்த அப்பாவி இளைஞர்கள் தான். அவர்களிடம் பொறுமையாக சீமானை பற்றிய உண்மைகளை விளக்கி கூறினால் முதலில் அதிர்ச்சி அடைகிறார்கள். பிறகு சுதாரித்து அவர்கள் கேட்கும் முதல் கேள்வி "சரி தமிழர்களுக்காக போரடக்கூடிய வேறு நல்ல தலைவர்கள் யார்?" என்று கேட்கிறார்கள். அதாவது வேறு வழியில்லாமல் தான் அவர்கள் இவரை ஆதரிக்கிறார்கள். 

அவர்களிடம் ஒன்று கூற விரும்புகிறேன் "வேறு நல்ல தலைவர்கள் இல்லை என்பதற்காக, வெறும் பேச்சை மட்டும் பார்த்து ஊழல் வாதிகளுக்கு பதிலாக துரோகிகளை தேர்ந்தெடுக்க கூடாது" கருணாநிதி ஆவேசமாக பேசி பேசி தான் நம்மை எமாற்றினார். புலிகளின் ரகசியத்தை ராஜபக்சேவிடம் கூறிய பிரபாகரனின் முன்னாள் தளபதி கருணாவிற்கும், புலிகளுக்கு எதிராக ஐ.நாவில் வாக்குமூலம் கொடுத்த சீமானுக்கும் பெரிய வித்தியாசம் இல்லை. கையில் அதிகாரம் வரும் முன்பே சீமான் மீது கற்பழிப்பு, நிதி மோசடி, நம்பிக்கை துரோகம் என்று பல்வேறு குற்றச்சாட்டுகள் உள்ளது. ஒருவேளை பதவிக்கு வந்தால்?

தொண்டர்கள் எவ்வளவு நல்லவர்களாக இருந்தாலும், கட்சியின் கொள்கை எவ்வளவு உயர்ந்தது என்றாலும் தலைவர்கள் நல்லவர்கள் இல்லை என்றால் எல்லாம் வீண்தான். திமுக தொண்டர்கள் பலர் தமிழுக்காக மொழிப்போராட்டத்தில் உயிரையே கொடுத்தனர். ஆனால் கருணாநிதி அதன் தலைவர் ஆனதால் தான் திமுக இந்த நிலையை அடைந்துள்ளது.எல்லாவற்றுக்கும் மேலாக தமிழ் இனத்துக்காக தனது உயிரை மட்டுமின்றி தனது குடும்பத்தையே இழந்த தலைவர் பிரபாகரனுக்கு து‌ரோகம் செய்தவரை எப்படி தலைவராக ஏற்க முடியும்.

கடைசியாக சீமானுக்கு சில கேள்விகள்:

1.சீமான் அவர்களே "ஒரு விதவை இலங்கை அகதி பெண்ணை நான் திருமணம் செய்யவில்லை என்றால் என்னை செருப்பால் அடியுங்கள்" என்று முழங்கிவந்தீர்கள். ஆனால் திடீரென்று நீங்களே எதிர்பாராத விதமாக முன்னாள் அமைச்சரின் வீட்டிலிருந்து நல்ல வசதியான வரன் வந்ததும்(அந்த பெண் உங்களை விட 23 வருடம் வயதில் சிறியவராக இருந்தும்) அவரை திருமணம் செய்து கொண்டீர்கள். அந்த அமைச்சர் யார் தாெியுமா? "பிரபாகரனை கைது செய்து இந்தியா கொண்டு வர வேண்டும்" என்று தமிழக சட்டசபையில் தீர்மானம் கொண்டு வந்த காளிமுத்து தான் சீமானின் மாமா.இதுதான் ஈழ தமிழர்கள் மீது உங்களுக்கு உள்ளபாசமா?

2.தலைவர் பிரபாகரனை சிறையல் அடைக்க வேண்டும் என்று சொன்ன ஜெயலலிதாவுக்காக நீங்கள் பிரச்சாரம் செய்தது ஈழ தமிழர்களின் நலனுக்காகவா? இல்லை நடிகை விஜயலட்சுமி (ப்ரண்ட்ஸ் படத்தில் சூரியாவுக்கு ஜோடி, விஜய்யின் தங்கை) உங்கள் மீது கொடுத்த கற்பழிப்பு புகாரில் இருந்து தப்பிக்கவா? (தைரியமாக புகார் கொடுத்தது ஒரு பெண் தான். புகார் கொடுக்காமல் மனதுக்குள் புழுங்கி கொண்டு இருப்பது எத்தனை விஜயலட்சுமிகள் என்று சீமானுக்கு நெருக்கமானவர்களுக்கு மட்டுமே தெரியும்)

3. சீமானே ஈழ தமிழர்களை பற்றி பேசுவது அவர்களின் நலனுக்கா? இல்லை உங்களின் நலனுக்கா? இதை ஏன் கேட்கிறேன் என்றால் 'நீங்கள் அரணையூரில் கட்டி காெண்டு இருக்கும் பங்களா வீடு, உங்களின் ஆடம்பர திருமணம், வெளிநாட்டு சுற்று பயணங்கள் ' எல்லாம் எப்படி சாத்தியமானது? நீங்கள் எடுத்த இரண்டு, மூன்று மொக்கை படங்களில் சம்பாரித்ததா? 'இதெல்லாம் ஈழ தமிழர்களிடம் இருந்து அவர்களுக்காக

போராடுவதாக கூறி ஏமாற்றி வசூல் செய்யப்பட்ட பணம் இல்லையென்று' தலைவர் மீது ஆணையிட்டு கூற முடியுமா உங்களால்?

4.நாம் தமி‌ழர் நண்பர்களுக்கு கற்பழிப்பு புகாரில் சிக்கியரை, ஈழ விதவை பெண்ணை திருமணம் செய்வேன் என்று வாக்கு கொடுத்து ஏமாற்றிவிட்டு பணத்துக்காக வேறு திருமணம் செய்தவரை, ஐ.நா விசாரணை குழுவில் “விடுதலைப் புலிகள்தான் தமிழர்களை

சுட்டு கொன்றனர்” என்று வாக்குமூலம் கொடுத்தவரை’ போய் கர்ம வீரர் காமராஜர் மற்றும் தலைவர் பிரபாகரனின் வாரிசாக நீங்கள் முன் வைத்தால், அதை அவர்களின் ஆன்மாவே மன்னிக்காது. சிறிது யோசியுங்கள்.

நாம் தமிழர் கட்சி நண்பர்களே சதுரங்கவேட்டை படத்தில் ஒரு வசனம் வரும் "பாதி உண்மையோடு பாதி பொய்யையும் கலந்து சொன்னால் யாராலும் கண்டுபிடிக்கமுடியாது"என்று. இந்த உத்தியை பயன்படுத்தி மேடையில் உணர்ச்சி பொங்க பேசிதான் சீமான் உங்களை மூளைசலவை செய்துள்ளார்.

 நான் உங்களுக்கு சவால்விடுகிறேன். இந்த கட்டுரையை உங்களுக்கு தெரிந்த "நாம் தமிழர்" கட்சி நண்பர்களிடம் பகிர்ந்து கொள்ளுங்கள். அதில் ஒருவராவது அறிவிப்பூர்வமாக ஆதாரத்துடன் பதில் சொல்லி விட்டால் நான் இந்த பிளாக்கையே அழித்துவிடுகிறேன். இந்த கட்டுரையை நான் பகிர்வதற்கு காரணம் இதனால் என்னை போன்ற அப்பாவி இளைஞன் ஒருவனாவது சீமானிடமிருந்து தப்பித்தால் எனக்கு மகிழ்ச்சி தான்.

Wednesday, August 31, 2022

வ.உ.சி. அரசியல் பெருஞ்சொல் - 2

 வ.உ.சிதம்பரனாரின் அரசியல் பெருஞ்சொல் - 2

சுய அரசாட்சி

நல்லாண்மை யயன்ப தொருவற்குத்          தான்பிறந்த

இல்லாண்மை யாக்கிக் கொளல்

என்று நமது முன்னோர் கூறியுள்ளார். 

அதாவது, ஒருவனுக்கு நல்ல ஆண்மை என்பது, தான் பிறந்த தேசத்தின் ஆள்கையைத் தன்னது ஆக்கிக் கொள்ளுதல். சுய அரசாட்சி அடைதலே நமது நோக்கம் என்று நமது காங்கிரஸ் தலைவர்களும் கூறியுள்ளார்கள்.

ஆனால் ‘சுய அரசாட்சி’ என்றால் என்ன? சுய அரசாட்சி எது போலிருக்கும்? என்று அறிவாளிகளும் அடிக்கடி வினவக் கேட்டிருக்கிறேன். அவர் அதனை அறியாமல் வினவுகின்றனரா? அல்லது அறிந்திருந்தும் ஏனையோர் அறிந்திருக்கின்றனரா என்று தெரிந்து கொள்வதற்காக வினவுகின்றனரா? என்பது தெரியவில்லை. 

அது யாதாயினும் ஆகுக. சுய அரசாட்சியைப் பற்றி யான் அறிந்துள்ள வற்றைச் சொல்லுகின்றேன். 

சுய அரசாட்சி நான்கு வகைப்படும்.

1. ஒரு தேசம், தனது மகாஜனங்களால் (தங்கள் குடியுரிமைகளைக் காக்கத் தக்கவர்களென்று) தேர்தெடுக்கப்பெற்ற பிரதிநிதிகளின் ஆலோசனை முடிவுப்படி அம் மகாஜனங்களால் அல்லது, அப்பிரதிநிதிகளால், (தேச அரசாட்சியை நடாத்துவதற்குத் தகுதி வாய்ந்தவன் என்று) தேர்ந்தெடுக்கப் பெற்ற தலைவன் ஒருவனால் ஆளப்படுதல். (‘மகா ஜனங்களால்’ என்பது அவர்களிற் ‘பெரும்பாலார்களால்’ எனவும், ‘பிரதிநிதிகளின்’ என்பது அவர்களிற் ‘பெரும்பாலார்களின்’ எனவும் பொருள்படும். ஆண்பால் பெண்பாலையும் குறிக்கும்). 

இவ்வரசு தன் தேசத்து அகக் காப்பு, புறக்காப்பு, முதலிய காரியங்களிலும் பிற தேசங்களை நட்பு, பகை, நொதுமல் என்னும் மூன்றில் ஒன்றாகக் கொள்ளுதல், முதலிய காரியங்களிலும் பூரண சுதந்திரமும் சவாதீனமுமுடையது. இவ்வரசாட்சி பிரான்ஸ் தேசத்திலும், அமெரிக்கா தேசத்திலும், தற்காலம் நடைபெறுகின்ற அரசாட்சி போன்றது. இதனைக் ‘குடியாட்சி’ (Republic Government) என்று கூறுவர் அறிஞர்.

2. ஒரு தேசம், தனது மகாஜனங்களால் (தங்கள் குடியுரிமைகளைக் காக்கத்தக்கவர்களென்று) தேர்ந்தெடுக்கப்பட்டவர்களின் ஆலோசனை முடிவுப்படி தன்னை நெடுங்காலம் ஆண்டுவந்த, அல்லது ஆளவந்த அரசன் ஒருவனால் ஆளப்படுதல். 

இவ்வரசும் தன் தேசத்து அகக்காப்பு, புறக்காப்பு, முதலிய காரியங்களிலும், பிற தேசங்களை நட்பு, பகை, நொதுமல் (நொதும்பல் -விருப்பு வெறுப்பின்மை) என்னும் மூன்றில் ஒன்றாகக் கொள்ளுதல் முதலிய காரியங்களிலும் பூரண சுதந்திரமும், சுவாதீன முடையது. இவ்வரசாட்சி இங்கிலாந்து தேசத்திலும், ஜப்பான் தேசத்திலும் தற்காலம் நடைபெறும் அரசாட்சி போன்றது. இதனை ‘கோனாட்சி’ (Monarchical Government)  என்பர் அறிஞர்.

3. ஒரு தேசம், தனது மகாஜனங்களால் (தங்கள் குடியுரிமைகளைக் காக்கத் தக்கவர்களென்று) தேர்ந்தெடுக்கப்பெற்ற பிரதிநிதிகள் ஆலோசனை முடிவுப்படி அம்மகாஜன மக்களால், அல்லது பிரதிநிதிகளால் (தேச அரசாட்சி நடத்துவதற்குத் தகுதி வாய்ந்தவனென்று) தேர்ந்தெடுக்கப்பெற்ற தலைவன் ஒருவனால் ஆளப்படுதல். 

ஆனால் இவ்வரசு தன் தேசத்து அகக்காப்பு, புறக்காப்பு முதலிய காரியங்களில் மாத்திரம் பூரண சுதந்திரமும் சுவாதீனமும் உடையது. 

பிறதேசங்களை நட்பாகவோ, பகையாகவோ, நொதுமலாகவோ கொள்ளுதல், முதலிய காரியங்களில் மேற்கூறிய அரசுகளில் முதலாவது வகை அரசைச் சார்ந்தது. அதன் ஆணைப்படி நடக்கக் கட்டுப்பட்டது. 

இவ்வகையான அரசாட்சி தற்காலம் எந்த தேசத்திலாவது நடைபெறுவதாகத் தெரியவில்லை. 

இதனைச் ‘சார்ந்த குடியாட்சி (Dependent Republican Government) என்பர் அறிஞர்.  

4. ஒரு தேசம், தனது மகாஜனங்களால் (தங்கள் குடியுரிமைகளைக் காக்க தக்கவர்களென்று) தேர்ந்தெடுக்கப்பெற்ற பிரதிநிதிகளின் ஆலோசனை முடிவுப்படி அத்தேசத்தை நெடுங்காலம் ஆண்டு வந்த, ஆள வந்த, அரசன் ஒருவனால் ஆளப்படுதல்.

ஆனால் இவ்வரசு தன் தேசத்து அகக்காப்பு, புறக்காப்பு முதலிய காரியங்களில் மாத்திரம் பூரண சுதந்திரமும், சுவாதீனமுடையது. பிற தேசங்களை நட்பாகவோ, பகையாகவோ, நொது மலாகவோ கொள்ளுதல், முதலிய காரியங்களில் மேற்கூறிய மூவகை அரசு களில் இரண்டாவது வகை அரசைச் சார்ந்து அதன் ஆணைப்படி நடக்கக் கட்டுப்பட்டது. 

இவ்வரசாட்சி ஆஸ்திரேலியா தேசத்திலும், கானடா தேசத்திலும், தென் ஆப்பிரிக்காத் தேசத்திலும் தற்காலம் நடைபெறும் அரசாட்சி போன்றது. 

இதனைச் ‘சார்ந்த கோனாட்சி’(Dependent Monarchical Government) என்பர் அறிஞர். முந்திய அரசு இரண்டும் ‘பேரரசு‘’ எனவும், பிந்திய அரசு இரண்டும் சிற்றரசு எனவும் வழங்கப்படும்.

மகாஜனங்களால் தேர்ந்தெடுக்கப் பெற்ற பிரதிநிதிகளின் ஆலோசனை முடிவுப்படி நடைபெறா ஆட்சிகள் ‘அரசாட்சி’ என்று சொல்லப்படும் தகுதியுடையன அல்ல. ஆதலால் அவற்றின் கூறுபாடுகள் முதலியவற்றைப் பற்றி இங்குப் பேச வேண்டிய அவசியம் இல்லை.

நாம் விரும்பும் சுய அரசாட்சி

மேற்கூறிய நான்கு வகையான சுய அரசாட்சிகளுள் முன்னைய மூன்றில் ஒன்றை நாம் அடைய வேண்டுமென்று நம் தேசத்தாரில் ஒருவன் சொல்வானானால், அதுவே இந்தியன் பினல்கோடு 124பி பிரிவுப்படி குற்றமாகுமோ என்று யான் அஞ்சுகின்றேன். ஆதலால், அவற்றைப் பற்றி யான் ஒன்றும் பேசாது அம்மூவகை சுய அரசாட்சிகளும் நமக்கு ஆகாதவை என்று தள்ளிவிடுகின்றேன். 

ஆகவே நாம் அடைய விரும்பும் சுய அரசாட்சி மேலே நான்காவது வகையாகக் கூறப்பட்ட சுயஅரசாட்சியே. 

அவ்வரசாட்சி தான் நம் தேசத்தின் தற்கால நிலைமைக்கும் பொருத்தமானதென்று கொள்ளத் தக்கது. 

நம் தேச பக்தர்களிற் சிலர் மேற்கூறிய நான்கு வகை சுய அரசாட்சிகளில் முதலாவது வகை சுய அரசாட்சி ஒன்றே நாம் வேண்டுவது எனக் கூறக் கேட்டிருக்கிறேன். 

அக்கூற்றுத் தற்கொல்லியும் பயனிற் சொல்லும் ஆமென்று யான் கருதுகின்றேன். 

ஆகவே, நாம் அடைய விரும்பும் சுய அரசாட்சி நமது தேசத்து அகப்புறக் காப்புகள் முதலிய காரியங்களில் நாம் பூரண சுதந்திரமும் சுவாதீனமும் உடையவராயும் பிற தேசங்களை நட்பு, பகை, நொதுமல் என்ற மூன்றில் ஒன்றாகக் கொள்ளுதல் முதலிய காரியங்களில் பெரிய பிரிட்டன்  (Great Britain) தேசத்து அரசைச் சார்ந்து அதன் ஆணைப்படி ஒழுகும் கடப்பாடு உடையவராயும் இருக்கும் சுய அரசாட்சியே. 

இத்தகைய அரசாட்சியைச் ‘சுய அரசாட்சி’ எனச் சொல்லலாமோ? எனின், சொல்லலாம். என்னை? 

நமது தேசத்து அகப்புறக்காப்பு முதலிய காரியங்களிலெல்லாம் நாம் பூரண சுதந்திரமும் சுவாதீனமும் உடையவராகலான்.

இச்சுய அரசாட்சிக்கே நாம் தகுதியுடையவரல்லர் என்று நம்மை ஆள்வோரும் நம் கிழவர் சிலரும் கூறுகின்றனர்.

அதற்கு அவர்கள் கூறும் காரணங்களிற் சில வருமாறு:

1. இச்சுய அரசாட்சிக்கு நாம் உண்மையில் தகுதியுடையோராயிருப்பின், அவரவர் தகுதிக்குத் தக்க ஸ்தாபனங்களை அவரவர்க்கு அளிக்கும் சர்வ நியாயாதிபதியான எல்லாம் வல்ல இறைவன் நம்மை நமது தற்கால சுதந்திர மற்ற நிலைமையில் வைத்திருப்பாரா?

2. நம்மிற் பெரும்பாலார் (Majority) பிறர் பொருள்களையும் உரிமை களையும் அபகரிக்க விரும்பாத நடுநிலைமையிலுள்ளரா யிருக்கினறரா? எளியோரை வலியோர் வருத்துங்கால், எளியோருக்கு உதவியாய் வலியோரை எதிர்க்க நம்மிற் பெரும்பாலார் சித்தமாயிருக்கின்றனரா? மதங்களை அழிப்பதிலும், அறங்களை வளர்ப்பதிலும், நம்மிற் பெரும்பாலார் விருப்ப முடையோரா யிருக்கின்றனரா? 

பெருந்தொகையினராயுள்ள ஜாதியார்கள் சிறுதொகையினராயுள்ள ஜாதியார்களைத் தாழ்த்தி, அவமதித்து, வருத்தும் சுபாவத்தை நம்மிற் பெரும்பாலார் விட்டுவிட்டனரா?

3. நாம் சுய அரசாட்சியை அடைவோமாயின், நம் தேசத்தில் சிறு தொகையினராயுள்ள ஜாதியார்களுடையவும் நம்மால் அநியாயமாகத் தாழ்த்தப்பட்டிருக்கிற ஜாதியார்களுடையவும் உரிமைகளையும் சுதந்திரங்களையும் நாம் கவர முற்படோம் என்று அந்த ஜாதியார்கள் நம்புவதற்கு நாம் என்ன செய்திருக்கிறோம்? 

அந்த நம்பிக்கை அவர்களுக்குப் பூரணமாக உண்டாலன்றி, அவர்கள் நம்முடன் சேர்ந்து சுய அரசாட்சி அடைவதற்கு ஒத்துழைப்பார்களா? அவ்விரு வகையான ஜாதியார்கள் என்னென்ன உரிமைகளையும் சுதந்திரங்களையும் அடைய விரும்புகின்றவர்கள் என்றாவது நாம் தெரிந்துள்ளோமா?

4. நம் தேசத்திலுள்ள பல மதஸ்தர்களும் தத்தம் மதச் செயல்கள் பிற மதஸ்தர்களைப் பாதிக்காதவாறு தத்தம் மதக் கோட்பாடுகளைத் திருத்திக் கொண்டனரா? 

இம்மதக் கோட்பாடுகள் மேற்சொல்லியபடி திருத்தப்படாத வரையில் நம்மவர்களுள் நெடுங்காலமாக நடந்து வருகின்ற மதச் சச்சரவு களும் சண்டைகளும் கொலைகளும் நீங்குமா? அவை நீங்காத வரையில் நமக்குள் ஒற்றுமை ஏற்படுமா? அவ்வொற்றுமை ஏற்படாத வரையில் நமக்குச் சுய அரசாட்சி வேண்டுமென்று நம்மை ஆள்வோரிடம் இரக்கவாவது நாம் அருகரா?

 இவர்கள் இவ்வாறு சொல்வதையும் நமது தற்கால நிலைமை யையும் கவனிக்குங்கால், நாம் விரும்பத்தக்கது மேற்கூறிய நான்காவது வகைச் சுய அரசாட்சியேயாம்.

Tuesday, August 30, 2022

வ.உ.சி.தலைமையில் 3வது அரசியல் மாநாடு

 வ.உ.சிதம்பரனார் 151 ஆம் பிறந்த நாள் (5.9.1972).....

1927நவம்பர் மாதம் 5,6 தேதிகளில் 

திருவாளர் வ.உ.சிதம்பரம் பிள்ளை அவர்கள் தலைமையில் நடைபெற்ற சேலம் 3 வது அரசியல் மாநாடு

சேலம் ஜில்லா 3-வது அரசியல் மாநாட்டின் தலைவர் அவர்களையும் மற்றைய அரசியல் தலைவர்களையும் பிரதிநிதிகளையும் சிறப்புடன் வரவேற்பதற்காக வேண்டிய ஏற்பாடுகள் 2 நாள் முன்னரிருந்தே நடை பெற்றது. நகர் முழுவதும் வளைவுகளாலும் தோரணங்களாலும் அலங்கார மாய் சிங்காரிக்கப்பட்டிருந்தது. மகாநாட்டுத் தலைவர் திரு.வி.ஓ. சிதம்பரம் பிள்ளை அவர்கள் காலை 9 மணிக்கு சேலம் டவுன் செவ்வாய்ப் பேட்டை தேர் நிலையிலிருந்து முதல் அக்கிரகாரம் நடை வீதி வழியாய் பாண்டு வாத்தியங் களுடன் ஊர்வலமாய் அழைத்து வரப்பட்டது. 

தலைவர் திரு. சிதம்பரம் பிள்ளை அவர்களும் வரவேற்புக் கமிட்டித் தலைவர் திரு. தம்மண்ண செட்டியார் அவர்களும் முன்னணியிலும் ஈரோடு குடிஅரசு ஆசிரியர் திரு. ஈ.வெ.ராமசாமி நாயக்கர் அவர்கள் திரு. ஆர்.கே. ­ண்முகம் செட்டியார் அவர்கள் டாக்டர் வரதராஜலு நாயுடு அவர்கள் பின்னணியிலும் இரண்டு மோட்டார்களில் வரவும், முன்னால் மாணவர்கள் உள்பட பல வாலிப தொண்டர்கள் அணிவகுத்து வழி விலக்கவும், பிரபலஸ்தர் கள் புடைசூழவும், ஊர்வலம் சுமார் 3000 ஜனங்களடங்கிய பெருங் கோஷ்டி யாய் ‘ஜே’ கோ­ங்களுடன் புறப்பட்டு வந்தது. ஊர்வலம் 11 மணி வரையில் நடைபெற்றது. பின்னர் தலைவர்கள் ஜாகைக்கு அழைத்துச் செல்லப் பட்டார்கள்.

எலெக்டிரி தியேட்டரில் மகாநாடு ஆரம்பம்

மகாநாடு பகல் 2 மணிக்கு ஆரம்பம் என்றிருந்தாலும் மகாநாடு ஆரம்பமாக மாலை 3 மணி ஆகிவிட்டது. 

தலைவர் வருவதற்கு முன்னர் கொட்டகையில் பிரதிநிதிகளும் விசிட்டர்களும் நிறைந்து விட்டார்கள்.

 தலைவர் கரகோ­த்துடன் வரவேற்கப்பட்டு ஆசனத்தி லமர்ந்தார். மேடையில் பல இடங்களிலிருந்தும் வந்த வரவேற்புக் கமிட்டி அங்கத்தினர்களும் தலைவர் களும் நிறைந்திருந்தார்கள். அவர்களில் கீழ்க்கண்டவர்கள் முக்கியஸ்தர்கள்: திரு. பிஞ்சல சுப்பிரமணிய செட்டியார், ராவ் சாகிப் எல்லப்ப செட்டியார், எம்.எல்.சி., திரு.ஆர்.கே.­ண்முகம் செட்டியார், எம்.எல்.ஏ., திரு. ஈ.வெ. ராமசாமி நாயக்கர், டாக்டர் வரதராஜூலு நாயுடு, திரு. தெண்டபாணி பிள்ளை, திருவாளர்கள் டி.எஸ். ஜெகராஜ் பி.எ.பி.எல்., எம்.சாமிநாதய்யர் பி.ஏ., பி.எல்., கே. சிவசங்கர முதலியார், டாக்டர் ரங்கய்ய நாயுடு, பி.இராஜமாணிக்கம் பண்டாரம், டி.வி. பங்காரு செட்டியார், எ.கே. சுந்தரய்ய செட்டியார், கே.எஸ். அருணாஜலம் செட்டியார், எஸ். பெரியசாமி முதலியார், என்.கே. சடகோப முதலியார், நாமக்கல் உஸ்மான் சாயுபு, புரொபசர் ராமமூர்த்தி, ஆத்தூர் அமீத் சாயபு, ஏ. வையாபுரி பண்டாராம், பூபதி கந்தசாமி பிள்ளை, எஸ்.பி. பொன்னுசாமி முதலியார், கே. மாரிமுத்து முதலியார், பாப்பாபட்டி சின்னமுத்து முதலியார், ராமசந்திர நாயுடு, பி. ஸ்ரீராமலு செட்டியார், பி.எ.பி.எல்., சித்தி ராஜு, கோவிந்தசாமி நாயுடு. சிவப் பெருமாள் பிள்ளை, ஒபிளி செட்டியார், கதிர் செட்டியார், ஜெகநாத செட்டியார், அங்கமுத்து முதலியார், ஏத்தாபூர் நாராயண செட்டியார், பி. சிவராவ் எம்.எஸ்.சி. முதலிய முக்கியஸ்தர்கள் வந்தார்கள்.

முனிசிபல் சேர்மனும் வரவேற்பு கமிட்டித் தலைவருமான எஸ். தம்மண்ண செட்டியார் பிரதிநிதிகளைவரவேற்று தம் பிரசங்கத்தை வாசித்தார். மகா நாட்டுக்கு வரமுடியாதவர்கள் அனுப்பிய தந்திகளை வாசித்தார்.

பின்னர் டாக்டர் நாயுடு அவர்கள்மகாநாட்டுக்குத் தலைமை வகிக்க திரு. வி.ஓ. சிதம்பரம் பிள்ளை அவர்களை பிரேரேபிக்க ராவ்சாகிப் எல்லப்ப செட்டியார் ஆமோதிக்க திருவாளர்கள் வெங்கடாஜல ரெட்டியார் நாமக்கல் உஸ்மான் சாயுபு, எம். சாமிநாத அய்யர், ஆர்.கே. சண்முக செட்டியார், ஈ.வெ. ராமசாமி நாயக்கர் இவர்கள் ஆதரிக்க தலைவர் அவர்கள் கரகோ­த்தினி டையே பதவியையேற்று தமது அக்கிராசனப் பிரசங்கத்தை வாசித்தார்.

குறிப்பு : மற்றைய நடவடிக்கைகளும் அக்கிராசனப் பிரசங்கமும் அடுத்த வாரம் வெளிவரும்.

நிறைவேறிய தீர்மானங்கள்

1. இந்திய சமூக வளர்ச்சிக்கும் சுயராஜ்யம் விரைவில் பெறுவதற்கும், ஜாதி வித்தியாசம் முதலிய சமூக ஊழல்களை ஒழிப்பதில் காங்கிரஸ் தலையிட வேண்டியது அவசியமாயிருப்பதால், அதற்கு அநுகூலமாக காங்கிரஸ் விதிகளை அமைத்து சமூகச் சீர்த்திருத்தம் செய்ய முயலுவதாக காங்கிரஸ் மெம்பர்கள் வாக்குறுதியளிக்குமாறு செய்ய வேண்டுமென்று இந்த மகாநாடு அபிப்பிராயப்படுகிறது.

2. வரப்போகும் ராயல் கமி­ன் பார்லிமெண்டு மெம்பர்களடங்கிய ஒரு கமி­னாக இருக்குமென்று கேட்டு இந்த மகாநாடு வருந்துவதுடன் போது மானஅளவுக்கு இந்தியப் பிரதிநிதிகள் கமி­னில் இல்லாவிட்டால் தேசத் தாருக்கு கமி­ன் திருப்திகரமாயிருக்காதென்றும் இம்மகாநாடு தீர்மானிக் கிறது.

3. அ) கெளகத்தி காங்கிரஸ் கட்டளைக்கு விரோதமாக சட்டசபை மெம்பர் களுக்கு அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியார் உத்தரவுகள் அனுப்பியதை இந்த மகாநாடு வன்மையாகக் கண்டிக்கிறது.

ஆ) சென்னை காங்கிரஸ் கட்சி மெம்பர்களில் சிலர் மந்திரி பதவி ஒப்புக் கொள்வதற்கு அனுகூலமுடையவராகக் காணப்படுவதால், காங்கிரஸ் கட்சியார் உத்தியோகம் ஒப்புக்கொள்வது தேர்தல் வாக்குறுதிக்கு விரோதமான தென்றும், அடுத்த காங்கிரஸ் உத்தியேகம் ஒப்புக்கொள்ளும்படி தீர்மானம் செய்தால் உத்தியோகம் ஒப்புக் கொள்ள விரும்பும் சட்டசபை மெம்பர்களை ராஜிநாமா செய்யச் சொல்லி மீண்டும் தேர்தலுக்கு நிற்குமாறு தூண்ட வேண்டுமென்றும் இம்மகாநாடு தீர்மானிக்கிறது.

4. ‘காமன் வெல்த்து ஆப் இந்தியா’ மசோதாவைப் பரிசீலனை செய்து அது சர்வஜன சம்மதம் பெற ஏதேனும் திருத்தங்களோ மாற்றங்களோ தேவை யிருந்தால் அவைகளைக் குறிப்பிடுமாறு காங்கிரஸ் ஒரு கமிட்டியை நியமிக்கும் படி இம்மகாநாடு தீர்மானம் செய்கிறது. இந்த மசோதா வி­யத்தில் டாக்டர் பெசண்டு எடுத்துக் கொண்ட அரிய முயற்சிகளை இம்மகாநாடு மிகவும் பாராட்டுகிறது.

5.அ) இந்த நாட்டிலுள்ள ஜனங்களை சமூக வி­யங்களில் அடிமையாக வைப்பதற்குக் காரணமாயிருக்கும் வருணாசிரம தர்மத்தைப் பற்றி மகாத்மா தென்னாட்டுப் பிரயாண காலத்தில் பிரசாரம் செய்ததற்காக இம்மகாநாடு வருந்துகிறது.

ஆ) தீண்டாமை யயாழித்தல், பிறப்பினால் உயர்வு தாழ்வுண்டென்னும் உணர்ச்சியை நீக்கல், முதலியவைகளுக்காக எல்லா இந்துக்களும் பிரசாரம் செய்து சுயமரியாதை உணர்ச்சியை விருத்தி செய்ய வேண்டுமென்று இந்த மகாநாடு கேட்டுக் கொள்கிறது. தேவையானால் எங்கும் சத்தியாக்கிரக ஆசிர மங்கள் ஸ்தாபனம் செய்ய வேண்டுமென்றும் இந்த மகாநாடு அபிப்பிராயப் படுகிறது.

6. ஆலயங்களில் பூசை செய்யும் உரிமையை சிலர் கைப்பற்றி எல்லா ஜனங்களுக்கும் அவ்வி­யத்திலுள்ள பிறப்புரிமையைப பிடுங்கிக் கொண்ட தினால் இந்த அக்கிரமத்தை நிறுத்தவும் ஆலயத்தில் பூஜை செய்யவும் அதற்காகக் கோயிலுக்குள் போகவும் ஒவ்வொரு இந்துவும் உரிமை பெறச் செய்யவும் இந்துத் தலைவர்கள் முயற்சி செய்ய வேண்டுமென்று இந்த மகாநாடு தீர்மானிக்கிறது.

7. தமிழ்நடு மாகாண காங்கிரஸ் கமிட்டியார் கங்காணி சபைகள் ஸ்தாபித்து காங்கிரஸ் ஆட்கள் சேர முடியாமல தடை செய்திருப்பதையும் ஒரு கட்சியார் தம் கட்சியாருக்கு மட்டும் ஜில்லா தாலுகா கமிட்டிகளில் ஆதிக்க முண்டாகுமாறு சூழ்ச்சி செய்து வருவதையும் இம்மகாநாடு கண்டிக்கிறது.

8. வகுப்பு வேற்றுமைகளும் ஜாதி வித்தியாசங்களும் இருக்கும்வரை எல்லா சமூகத்தாருக்கும் உத்தியோகமும் மற்றும் பதவிகளும் சமமாகக் கிடைக்கும்படி தகுந்த ஏற்பாடு செய்ய வேண்டுமென்று இந்த மகாநாடு தீர்மானிக்கிறது.

9. சேலம் ஜில்லாவில் ஒரு பகுதிக்கு மேட்டூர் தேக்கத்திலிருந்து நீர்ப்பாசனத் துக்காக தண்ணீர் விட்டுக் கொடுக்க வேண்டுமென்று இந்த மகாநாடு தீர்மானிக்கிறது.

10. கிராமங்களில் அதிகப்படியான பாடசாலைகளும் சித்த வைத்திய சாலைகளும் ஸ்தாபிக்க வேண்டியதும் எல்லா ஆரம்பப் பள்ளிக்கூடங்களிலும் ஆதிதிராவிடக் குழந்தைகளுக்கு இலவசமாக கல்வி கற்பிக்க வேண்டியதும் மிகவும் அவசியமென்று இந்த மகாநாடு சர்க்காருக்கு வற்புறுத்துகின்றது. (குடிஅரசு, 18.11.1927)

அரசியல் பெருஞ்சொல் - வ.உ.சி.உரை-1

சேலம் அரசியல் மகாநாட்டில் வ.உ.சிதம்பரனார், 'அரசியல் பெருஞ்சொல்' என்ற தலைப்பில் ஆற்றிய தலைமை உரை...

எனது பெருஞ்சொல்

மூன்றாவது அரசியல் மகாநாடு...

கடவுள் வணக்கம்

குடிசெய்வல் என்னும் ஒருவற்குத் தெய்வம்

மடிதெற்றுத் தான்முந் துறும்.

என்றபடி எளிமை யுற்றிருக்கா நின்ற எனது நாட்டினை வலிமைப் படுத்துவேன் என்று ஊக்கும் எனக்கு எல்லாம் வல்ல இறைவன் தனது  உடையை இறுக உடுத்துக்கொண்டு எனது வழிகாட்டியாக என் முன் செல்வானாக.

செய்ந்நன்றியறிதல்

எழுமை ஏழுபிறப்பும் உள்ளுவர் தங்கண்

விழுமம் துடைத்தவர் நட்பு

என்றபடி என் நாட்டினை மேம்படுத்தக் கருதி யான் ‘சுதேசிய நீராவிக் கப்பல் சங்க’த்தை நிறுவிய காலத்தில் பல்லாயிரக்கணக்காகப் பொருள் அளித்துத் துணைபுரிந்தும் அவ்வூக்கத்தின் ஊக்கி இடைக்கண் முரிந்து வாடிய காலத்தில் வேண்டியவற்றை ஈந்து என் வாட்டத்தைக் களைந்தும், தேசாபிமானமும் என்பால் உளதோ என்று சிலர் ஐயமுறும் இக்காலத்தில் தேசாபிமானத்திற்கே உறைவிடம் என்று சொல்லும்படியான சிறப்பு வாய்ந்த சேலம் ஜில்லாவாசிகள் கூடிய இம்மகாநாட்டின் தலைமைப் பதவியை நல்கி மேன்மையளித்தும், நீங்கள் எனக்குச் செய்த நன்றியை எழுமை எழுபிறப்பும் உள்ளுவேனாக.

என்னைப் பற்றிச் சில சொற்கள்

கல்கத்தா நகரத்தில் நடந்த விசே­ச காங்கிரஸ் மகாநாட்டில் என் தேசீயக் கோட்பாடுகளுக்கு முற்றிலும் மாறான கோட்பாடுகள் அடங்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. உடனே யான் சென்னைக்கு வந்து, திலகர் சுயாட்சி சங்கத்தின் விசே­ கூட்டம், ஒன்றைக் கூட்டி மேற்கண்ட விசே­க் காங்கிரஸ் மகாநாட்டின் தீர்மானங்களை எல்லாம் கண்டித்து தீர்மானங்களை நிறைவேற்றிப் பத்திரிகைகளிற் பிரசுரித்துவிட்டு யான் காங்கிரஸினின்று விலகி இதுகாறும் ஒடுங்கியிருந்தேன். 

என் கோட்பாடுகளுக்கு மாறான நீதி ஸ்தல பஹிஸ்காரம், கலாசாலை பஹிஸ்காரம், சட்டசபை பஹிஸ்காரம் முதலிய பஹிஸ்காரங்களெல்லாம் ஒன்றன்பின் ஒன்றாக நீங்கிக் காங்கிரஸ் மகாசபை, தனது கல்கத்தா விசே­ மகாநாட்டிற்கு முன்னிருந்த நிலைமைக்கு வந்துவிட்டபடியால் யான் திரும்பிக் காங்கிரஸில் புகலாம் என்று நினைத்தேன்.  

என்னைப் போல காங்கிரஸை விட்டு விலகி நின்ற எனது பிராமணரல்லாத சகோதரர்களில் உண்மையான தேசாபிமானிகள் சிலர் கோவை நகரில் ஒரு விசே­ மகாநாடு கூட்டிப் பிராமணரல்லாதார்களுடைய தேச சேவைக்குக் காங்கிரஸ் மகாசபையைக் கைப்பற்றி ஒரு கருவியாக உபயோகித்தல் இன்றியமையாததென்று தீர்மானித்தார்கள். 

எனக்கும் என் தேசத்திற்கும் நல்லகாலம் பிறந்துவிட்டதென்று கருதினேன். சென்ற பல ஆண்டுகளாக ஒடுங்கியிருந்த யான் எவ்வாறு வெளிவருவதென்று சிந்தித்துக் கவன்று கொண்டிருந்தேன்.

உடுக்கை யிழந்தவன் கைபோல ஆங்கே

இடுக்கண் களைவதாம் நட்பு

என்றபடி எனது நண்பர்களாகிய நீங்கள் உங்களுடைய இம் மகா நாட்டிற்குத் தலைமை வகிக்க வேண்டுமென்று எனக்குக் கட்டளை இட்டீர்கள். அக்கட்டளை எனக்கு ‘காலத்தினாற் செய்த நன்றி’யும் ‘பழம் நழுவிப் பாலில் விழுந்தது’ போலும், ஆயிற்று.

‘தேச அரசாட்சியை மீட்பதற்காக தேச ஜனங்கள் சாத்வீக எதிர்ப்பைக் கைக்கொண்டு போராடும் காலத்தில் தேசாபிமானம் இல்லாது புறங்காட்டி ஓடுகின்றீரே’ என்று என்னிடம் கேட்ட ஒரு பாரிஸ்டர் புன்மொழியும் ‘இராஜாங்கத்தாரிடம் கைக்கூலி பெற்றுத் தேசத் துரோகம் செய்து கொண்டிருக்கிறான் சிதம்பரம்பிள்ளை’ என்று பொருள்படும்படி எழுதிய ஒரு பத்திரிகையாசிரியர் புன்மொழியும் இன்றும் என்னால் மறக்க முடியவில்லை. தேசாபிமான ஒளி நாளுக்கு நாள் வளர்வதேயன்றிக் குறைவதும் அவிவதும் இல்லை.

 ‘விளக்குப் புகவிருள் சென்றாங்கொருவன் தவத்தின் முன் நில்லாதாம் பாவம்’ என்றபடி தேசாபிமான ஒளிமுன் தேசத்துரோகம் இருள் நில்லாது. இவ்வுண்மையினை அவர் அறிவாராக.

ஊக்க முடையான் ஒடுக்கம் பொருதகர்

தாக்கற்குப் பேருந் தகைத்து

என்று சிலர் என் சென்ற கால ஒடுக்கத்தைப் பற்றிக் கூறும் உயர்மொழியும், ‘பிராமண அபிமானி’ என்று பிராமணரல்லாத சிறுவர் சிலராலும், ‘வஞ்சக சொரூபி’ என்று பிராமணர் ஒருவராலும் அநியாயமாகப் பழிக்கப்பெற்ற ஸ்ரீதிலகருடைய சீடன் வெளிவந்துவிட்டான் என்று பலர் பேசும் உயர் மொழியும் என்னைச் சேரும்படியான நற்காலம் வந்ததற்காக யான் பெரிதும் அக மகிழ்கின்றேன். அந்நற்கால வரவிற்குக் காரணஸ்தர்களாயுள்ள உங்கள் எல்லோரையும் வணங்குகின்றேன்.

அவையடக்கம்

இது போன்ற மகாநாடுகளில் தலைமை வகிக்கும் பெரியார் ஒவ்வொரு வரும் ‘பெருமை பெருமிதமின்மை’, ‘பணியுமாம் என்றும் பெருமை’ என்ற படி தாம் அம்மகாநாட்டின் தலைமை வகித்தற்கு வேண்டிய அறிவும் ஆற்றலும் இல்லாதவரென்று தமது ‘பெருமிதமின்மை’யைக் கூறி யார் யார்க்கும் தாழ்ச்சி சொல்லிப் ‘பெருமையும்’ ‘பெருஞ்சுட்டும்’ பெறுவர். பெரியார்க்கு இலக்கணம் பெருமிதமின்மை கூறலும், யார்யார்க்கும் தாழ்ச்சி சொல்லலும் என்றால், சிறியார்க்கு இலக்கணம் பெருமிதம் கூறலும், யார் யார்க்கும் உயர்ச்சி சொல்லலும் என்பது சொல்லாமலே விளங்கும். 

அது பற்றியன்றோ  ‘சிறுமை பெருமிதம் ஊர்ந்துவிடும்’ எனவும், ‘சிறுமை அணியுமாம் தன்னை வியந்து’ எனவும் கூறியுள்ளார் நம் பெரியார். அவர் வாக்கைப் பின்பற்றிச் சில காரணங்கள் கூறி இம்மகாநாட்டின் தலைமை வகித்ததற்கு யான் தகுதி யுடையோன் என்பதை நிருபிக்கின்றேன்.

 இம்மகாநாடு இந்தியன் நே­னல் காங்கிரசின் ஒரு கிளை. யான் ஒரு இந்தியன். இது சிறந்த தேசாபிமானிகள் கூடியுள்ள மகாநாடு. யானும் தேசாபிமானி என்று சொல்லிப் பெருமை பாராட்டுகின்றவன். 

இம்மகாநாட்டிற் குழுமியள்ளோரிற் பெரும்பாலார் பிராமணரல்லாதார். யானும் ஒரு பிராமணரல்லாதான்.  இந்த ஜில்லா சிறந்த ஒரு தமிழ்நாடு. யானும் சிறந்த ஓர் தமிழன்.

 இம்மகாநாட்டில் முதன்மையாக நிற்போர் வருடக்கணக்கில் சிறைத் தீர்ப்புப் பெற்று வருடக்கணக்கில் சிறையில் வசித்தவர். யானும் ஏககாலத்தில் நடைபெறும் இரண்டு இருபது வருடங்கள் சிறைத் தீர்ப்புப் பெற்று ஒரு நாலரை வருடம் சிறையில் வசித்தவன்.

இம்மகாநாடு உங்கள் எல்லோராலும் மிக நேசிக்கப்பெற்றது. யானும் உங்களால் மிக நேசிக்கப்பெற்றவன். உங்களிற் பலர் உழவும், உபகாரமும் செய்கின்ற உண்மை வேளாளர். யானும் ஜாதி மாத்திரையில் ஒரு வேளாளன். 

உங்களிற் பலர் பலமில்லாத பிற ஜாதியாரைத் தாழ்த்துதலை இயற்கையாக கொண்டுள்ள ஜாதியாரென்று உண்மை தேசாபிமானிகளால் பழிக்கப் படுகின்றவர். யானும் அத்தன்மையான ஜாதியானென்று உண்மைத் தேசாபிமானிகளால் பழிக்கப்படுகின்றவன். 

இப்பல ஒற்றுமைகளால் யான் இம்மகா நாட்டில் தலைமை வகித்ததற்குத் தகுதியுடையோன்.

 ஆயினும், பல வி­யங்களில் என் அபிப்பிராயமும் உங்கள் அபிப்பிராயங்களும் மாறுபடலாம். என் அபிப்பிராயத்தை நீங்கள் கேட்டு, உங்கள் அபிப்பிராயங்களைத் தெரிவித்த பின்னர் யான் எனது அபிப்பிராயத்தை மாற்றிக் கொள்ளுதல் கூடும். ஆதலால் யான் சொல்பவற்றைப் பொறுமையோடு கேட்கும்படியாக உங்களை மிக  வணக்கத்தோடு உங்களைப் பிரார்த்திக்கிறேன்...1

Thursday, July 28, 2022

உண்ணாவிரதத்தை எதிர்த்த பெரியார்

பட்டினியில் எனக்கு நம்பிக்கையில்லை

தந்தை பெரியார்

மற்றும் தோழர் ஜெகதீசனின் பட்டினியைப் பற்றி சிலர் பேசினார்கள். இம்மாதிரி பட்டினியைப் பற்றி எனது அபிப்பிராயம் உங்களுக்கு ஏற்கனவே தெரிந்திருக்கும். பட்டினியில் எந்த விதமான ஆத்மார்த்தம் என்பதோ தெய்வீகம் என்பதோ ஆன தத்துவம் இருக்கிறது என்பதை நான் என்றும் நம்பினதில்லை.

அதனால் எதிரியை மனம் இளகச்செய்து விடலாம் என்பதிலும் எனக்கு நம்பிக்கை இல்லை. எவ்வித பட்டினியையும் நான் ஆதரித்து அதனால் எந்தக் காரியத்தையும் சாதித்துக் கொள்ளலாம் என்பதாக நான் ஆசைப்பட்டதில்லை. 

தோழர் ஸ்டாலின் தான் தப்பு என்று காரியத்தை ஒழிக்க சரி என்ற பட்ட காரியத்தைச் செய்ய வேண்டுமென்று கருதி அதற்காக ஜீவன்களுக்கு மிக்க அருமையான உயிரைக் கொடுக்க முன் வந்த வீரத்தை மதிக்க வேண்டியது என்பதை மறுக்க முடியாது.

 அன்றியும் தோழர் ஸ்டாலினின் பட்டினியானது காந்தியாரின் பட்டினித் தத்துவத்தை வெளியாக்கவும் தோழர் காந்தியாரின் இனி இம்மாதிரி பட்டினி காரணங்களால் மக்கள் ஏமாந்து போய்விட மாட்டார்கள் என்பதையும் விளக்கவும் அதாவது தோழர் ஸ்டாலின் பட்டினியை காந்தியாரும் காந்தி பக்தர்களும் எப்படி கருதுகிறார்களோ அதுபோலவே இனிமேல் ஏதாவது ஒரு காரியத்துக்கு காந்தியாரும் மற்றவர்களும் பட்டினி இருந்தால் அப்படியே கருதும்படி செய்யவும் இப்பட்டினி பயன்படுவதால் இது ஒரு நல்ல சம்பவம் என்று சொல்ல பின்வாங்கவில்லை.

காந்தியார் விஷமத்தனம்

ஆனால் காந்தியார் தான் பட்டினி இருந்த காலத்தில் அதற்கு அவர் சொல்லிக்கொண்ட காரணங்களும் அதற்காக மற்ற மக்கள் கீழ்ப்படிய வேண்டுமென்று கட்டாயப்படுத்திய செய்கைகளும் உலகம் அறிந்திருந்தும் தோழர் ஸ்டாலின் பட்டினியைப்பற்றி மிக்க விஷமத்தனமாக கொடுத்த அபிப்பிராயத்தை கண்டிக்காமல் இருக்க முடியவில்லை. 

இதிலிருந்தாவது பொது ஜனங்களுக்கு காந்தியாரின் உண்மையான நிலை தெரிய சந்தர்ப்பம் ஏற்பட்டதே என்பதற்காகவும் இந்த பட்டினி வரவேற்கத்தக்கதாகின்றது என்கின்றேன்.

மக்கள் உலகில் இறப்பது இயற்கையானாலும் ஒவ்வொரு மனிதனும் கட்டாயம் இறந்தே தீர வேண்டியது முடிவே ஆனாலும் தானாகவே பட்டினி கிடப்பதன் மூலம் சாகத் துணிவது என்பது பொது மக்கள் கவனத்தை இழுக்க மிக்க பயன்படத்தக்கதாய் இருக்கிறது என்பதை எவரும் மறுக்க முடியாது.

இப்படிப்பட்ட நிலையில் இக்காரியத்துக்காக மனிதத் தன்மைப்படி பரிதாபப்படா விட்டாலும் இதை குறை கூறுவதும் குற்றம் சொல்வதும் சிறிதும் யோக்கியமான காரியம் ஆகாது என்பதை நான் எடுத்துச் சொல்ல வேண்டிய தில்லை.

கடற்கரை சொற்பொழிவு 10.7.1938 குடி அரசு.

Tuesday, July 26, 2022

ரிவோல்ட்

 "ரிவோல்ட்"

திராவிடம் ஊடகங்கள்

  “ரிவோல்ட்” என்னும் ஆங்கில வாரப் பத்திரிகை ஒன்றை சென்ற ஆறாம் தேதி செவ்வாய்க் கிழமை பட்டிவீரன்பட்டி திரு. சௌந்திரபாண்டிய நாடார் அவர்களைக் கொண்டு திறப்பு விழா நடத்தி 7 ஆம் தேதி புதன் கிழமை முதல் இதழ் வெளிப்படுத்தி விட்டோம். இனி அதை ஆதரித்து அதன் கொள்கைகளை வெற்றி பெறச் செய்து வைக்க வேண்டியது பொது மக்களின் கடமையாகும்.

“ரிவோல்ட்” பத்திரிகையின் ஆரம்பத்தின் உத்தேசமெல்லாம் நமது நிலைமையையும் கொள்கையையும் தமிழ் மக்கள் தவிர மற்ற மக்களுக்கும் தெரிவிக்க வேண்டும் என்கிற ஆவலேயாகும். நமது நிலைமை சென்னை மாகாணத்திலேயே தெலுங்கு, கன்னடம், மலையாளம் முதலிய பாஷைகளை நாட்டு பாஷையாகக் கொண்ட பல ஜில்லாக்களுக்கே தெரியவில்லை என்றால் வெளி மாகாணங்களுக்கும் வெளி தேசங்களுக்கும் எப்படித் தெரிந்திருக்க முடியும்?

உதாரணமாக ஒரு சமயத்தில் இந்தியா மந்திரியுடன் திரு. டாக்டர் டி.எம். நாயர் அவர்கள் பேசிக் கொண்டிருந்தபொழுது, “சென்னை பார்ப்பனரல்லாதார்களுக்காக பெரிய உத்தியோகங்கள் அளிக்கப்படவில்லை” என்று சொன்னபோது “திரு. க்ஷ.சூ. சர்மா என்பவர் இந்திய அரசாங்கத்தில் நிர்வாக சபை மெம்பராயிருந்து 6500 ரூபாய் சம்பளம் வாங்குகிறாரே, அது போதாதா” என்று இந்தியா மந்திரி சொன்னாராம். அதற்கு திரு. டாக்டர் நாயர் அவர்கள் "நான் இந்தியாவை விட்டு புறப்படும் வரை திரு. க்ஷ.சூ. சர்மா அவர்கள் பார்ப்பனராயிருந்தார், நான் புறப்பட்ட பிறகு அவர் ஏதாவது பார்ப்பனரல்லாதாராய் விட்டாரோ என்னமோ எனக்குத் தெரியவில்லை. ஆதலால் தயவு செய்து அவர் பார்ப்பனரல்லாதாராக ஆயிருப்பதாய் தங்களுக்கு வந்த செய்தியை காட்டுகிறீர்களா” என்று கேட்டாராம். அதன் பிறகு அந்த இந்தியா மந்திரி திடுக்கிட்டு, “நான் இத்தனை நாளாக அவரை பார்ப்பனரல்லாதார் என்றுதான் நினைத்துக் கொண்டிருக்கிறேன்; இப்போது தாங்கள் சொல்வது எனக்கு ஆச்சரியமாய் இருக்கின்றது” என்று சொன்னாராம்.

அதுபோலவே சென்னையில் சென்ற வருடம் நடந்த காங்கிரசுக்கு கல்கத்தாவிலிருந்து வந்த முக்கியஸ்தர்களில் ஒருவரான திரு. கோஸ்வாமி என்கின்றவரோடு நாம் பேசிக் கொண்டிருந்தபோது, “சென்னை மாகாணத்தில் தெருவில் நடக்கக் கூடாதவர்களும், கோவிலுக்குள் போகக் கூடாதவர்களும், தொடக்கூடாதவர்களும், நிழல் மேல் படக்கூடாதவர்களும் இருக்கின்றார்களே, அவர்களைப் பற்றி தங்கள் அரசியல் திட்டத்தில் என்ன கவலை எடுத்துக் கொண்டிருக்கின்றீர்கள்” என்று கேட்டபோது, அவர் ஆச்சரியப்பட்டு, “அப்படி ஒன்று இருப்பதாக எனக்கு இதுவரை தெரியவே தெரியாது. இது உண்மையா” என்று பக்கத்தில் இருந்த திரு.ஆர். கே. ஷண்முகம் செட்டியாரைக் கேட்டார். அதற்கு திரு.ஷண்முகம் செட்டியார் அவர்கள் சிரித்துக் கொண்டே, “இதற்கு சாக்ஷிக்காக அதிக தூரம் போகாதீர்கள். நானே சில கோவிலுக்குள் போகக் கூடாத ஜாதி என்பதைச் சேர்ந்தவன். ஹைக்கோர்ட்டு வரையில் விவகாரம் செய்து பார்த்தும் எங்களை அந்த கோவிலுக்குள் போகக்கூடாத ஜாதியிலேயே சேர்த்து தீர்ப்பு பெற்று விட்டார்கள். எனவே இனி உங்களுக்கு ஏதாவது சந்தேகம் உண்டா” என்று கேட்டார். பிறகு திரு. கோஸ்வாமி பட்ட ஆச்சரியத்திற்கு அளவே இல்லை.

இதுபோலவே பல உதாரணங்கள் எடுத்துக் காட்டலாம். எனவே நம் நிலையையும் தேவையையும் வெளி நாட்டார்களுக்கு உள்ளங்கை நெல்லிக்கனி போல் தெரியப்படுத்த வேண்டுமானால் தாக்ஷண்யமும் பயமும் சுயநலமும் அற்ற தன்மையில் தைரியமாய் வெளிப்படுத்தக் கூடிய ஒரு சாதனம் இருந்தாக வேண்டும் என்ற கருத்தைக் கொண்டே “ரிவோல்ட்” ஆரம்பித்து விட்டோம். அதன் கொள்கையைப் பற்றி நாம் அதிகமாக சொல்லிக் கொள்ள வேண்டியதில்லை என்றே நினைக்கின்றோம்.

முக்கியமாக அரசியல் துறையில் உழைக்க வேண்டும் என்பது அதன் கவலையல்ல. ஆனால் அரசியல் அயோக்கியத்தனங்களை தைரியமாயும் தாராளமாயும் வெளியாக்கி விடவேண்டும் என்பதே “ரிவோல்ட்”டின் பெருங்கவலைகளில் ஒன்றாகும். அதுபோலவே சாமியைப் பற்றியும் சமயத்தைப் பற்றியும் அதற்கு சிறிதும் கவலையில்லை. ஆனால் அவற்றின் பேரால் நடைபெறும் அயோக்கியத்தனங்களையும் கொடுமைகளையும் அடிமைத்தன்மைகளையும் அறியாமையையும் வெளியாக்குவது எல்லாவற்றையும் விட முக்கியமானது ஆகும்.

சுருக்கமாகவும் மொத்தமாகவும் கூறுமிடத்து இதற்கு முன் ஒரு தடவை அதாவது, “ரிவோல்ட்” பத்திரிகையை அரசாங்கத்தாரிடம் பதிவு செய்து கொண்ட சமயத்தில், அதன் கொள்கை என்ன என்பதாக அரசாங்கத்தார் அறிய விரும்பிய போது தெரிவிக்கப் பட்டதையே மறுமுறையும் தெரிவித்து இதை முடித்து விடுகின்றோம். அதாவது :-

“ரிவோல்ட்” என்ற ஆங்கில வாரப் பத்திரிகை நடத்துவதின் கருத்து, இப்போது நாம் பதிப்பாசிரியராயிருந்து நடத்தும் “குடி அரசு” என்னும் தமிழ் வாரப் பத்திரிகையின் கொள்கைகளையே முக்கியமாய்க் கொண்டு நடத்துவதற்காக ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. ‘ரிவோல்ட்’ என்கின்ற வார்த்தைக்கு எடுத்துக் கொண்ட அர்த்தம் கட்டுப்பாட்டை உடைத்தல் என்பது. அதாவது மனித தர்மத்துக்கும், மனித இயற்கைக்கும் விரோதமாக அரசியலிலானாலும் சரி, மத இயலிலானாலும் சரி, அதிகார இயலிலானாலும் சரி, முதலாளி இயலிலானாலும் சரி, ஆண் இயலிலானாலும் சரி, மற்றும் எவைகளிலானாலும் சரி அவைகளினால் ஏற்படும் இயற்கைக்கும் அறிவுக்கும் மாறுபட்ட கட்டுப்பாடுகளை உடைத்து, உலகமும் அதன் இன்பமும் எல்லோருக்கும் பொது என்பதும் மக்கள் யாவரும் சமம் என்பதுமான கொள்கையை மனசாக்ஷிப்படி சாத்தியமான வழிகளில் பிரசாரம் செய்வதே அதன் நோக்கம் என்பதாகும்.

இதற்கு முக்கிய பத்திராதிபராக திரு. எஸ்.ராமநாதன் எம்.ஏ.பி.எல் அவர்கள் இருந்து வருவார். நாமும் அதில் பங்கு எடுத்து வருவோம். எனவே இதை வாலிப உலகம் ஆதரிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்ளுகின்றோம். எம் வாலிப நண்பர்கள் ஆங்காங்குள்ளவர்கள் ஒவ்வொருவரும் தாங்கள் சந்தாதாரராய்ச் சேருவதுடன் ஒவ்வொருவரும் இது சமயம் மூன்று சந்தாதாரர்களுக்கு குறையாமல் சேர்த்து விட்டு மறு காரியம் பார்ப்பது என்கின்ற உறுதியைக் கொள்ள வேண்டுகின்றோம்.

சந்தா விபரம்

வருட சந்தா ரூ 4 - 0 - 0

மாணாக்கர்களுக்கு ரூ 3 - 0 - 0

வெளிநாட்டிற்கு ரூ 5 - 0 - 0

(விடுதலை 26.07.2022)

Monday, July 18, 2022

காலத்தை வீணடிக்கும் மூட நம்பிக்கை

 காலத்தை வீணடிக்கும் மூடநம்பிக்கை...

................................................................

நல்ல செயல் செய்யக் கூடாத நாட்கள்....

.....................................................................

இராகுகாலம் 1 மாதத்திற்கு.. 1.30 X 30 = 45

ஒரு ஆண்டிற்கு........................ 540 மணி

எமகண்டம் 1 மாதத்திற்கு.... 1.30 x 30 = 45

ஒரு ஆண்டிற்கு....................... 540 மணி

அஷ்டமி (மாதத்திற்கு 2 நாள்)

ஒரு ஆண்டிற்கு...                     48x12 = 576 மணி

நவமி (மாதத்திற்கு 2 நாள்)

ஒரு ஆண்டிற்கு .......................48x12 = 576 மணி

மரணயோகம் 1 மாதத்திற்கு.. 1.30 x 30 = 45

ஒரு ஆண்டிற்கு 540 மணி

கரிநாள் (மாதத்தில் 3 நாட்கள்)

ஒரு ஆண்டிற்கு....                       864 மணி

பிரதமை (பாட்டிமை மாதம் 2 நாட்கள்)

ஒரு ஆண்டிற்கு.....                                   48x12=576 மணி

சூரிய கிரகணம் ஒரு ஆண்டிற்கு

ஒரு நாள்..                                           .. 24 மணி

சந்திரகிரகணம் ஒரு ஆண்டிற்கு

ஒரு நாள்................................                   :24 மணி

மதம் சார்ந்த பண்டிகை ஆண்டிற்கு

33 நாட்கள் ஒரு ஆண்டிற்கு......               33 x 24 =792 மணி

ஆக, மொத்தம்......                                    : 5052 மணி

(5052/24 மணி = 210 நாட்கள்)

ஆக ஆண்டிற்கு 365 நாட்களில் 210 நாட்கள் வீண்.

மத நம்பிக்கை என்ற பேரால் விலை மதிக்கமுடியாத 

நம் நேரம் வீணடிக்கப்படுகிறது.

நம் மூளையில் இடப்பட்ட இந்த விலங்கை முதலில் 

உடையுங்கள்...

வாட்ஸ் அப் பதிவிலிருந்து...

Tuesday, July 12, 2022

டாக்டர் நாவலர் இரா. நெடுஞ்செழியன்

டாக்டர் நாவலர் இரா.நெடுஞ்செழியன்

...சு. குமாரதேவன் ...

* தனது ஒன்பதாவது வயதில் (1929) செங்கல்பட்டில் நடந்த முதல் சுயமரியாதை மாநாட்டில் தன் தந்தையாருடன் கலந்து கொண்டு நாவலர் பார்வையாளராகப் பங்கேற்றார். பின்பு அவர் பேசாத ஊர், பங்கேற்காத இயக்கக் கூட்டங்கள் இல்லை என்ற நிலையை உருவாக்கினார்.

* நாவலர் என்ற அடைமொழி அண்ணா அளித்ததாகும். சமயச் சொற்பொழிவில் சிறந்த ஆறுமுகநாவலர், சபாபதி நாவலர் மற்றும் இலக்கியச் சொற்பொழிவில் நாவலர் சோமசுந்தர பாரதியார் என்று சிலருக்கு மட்டுமே இருந்த பட்டம் நாவலர் நெடுஞ்செழியனுக்குப் பொருந்தியது. இலக்கியம், வரலாறு, சமயம், சட்டம், சமுதாயம் என்று எந்தத் தலைப்பிலும் ஆழமான, பொருட்செறிவான நகைச்சுவையுடன் கூடிய உரை என்பது நாவலரின் தனித்தன்மை. இதனால் அவர் பேச்சைக் கேட்க மக்கள் திரண்டு வந்தனர். கைகளை நீட்டி,குறுக்காக வளைத்து, உயரே தூக்கி ஏற்ற இறக்கத்தோடு பேசுவதை இன்றும் அவர் பேச்சை நேரில் பார்த்துக் கேட்டு ரசித்தவர்கள் அதே ரசனையோடு சொல்வார்கள்.

* ஆறடி உயரம், ஆஜானுபாகுவான தோற்றம், மூக்கின் கீழே நடுவில் அடர்த்தியாகவும் பக்கவாட்டில் கோடாகவும் செல்லும் ஒரு மாதிரியான மீசை, நீளமான காலர் இல்லாத ஜிப்பா, நீளமான இரு பக்கமும் தவழும் துண்டு என பார்க்க கம்பீரமாக இருப்பார். குறிப்புகள் இல்லாமல் எந்தக் கூட்டத்திலும் பேச மாட்டார். அவர் பேச்சைக் கேட்டவர்கள் அந்தப் பேச்சின் ரீங்காரம் அவர் பெயரைக் கேட்கும் போதும், வாசிக்கும் போதும் உணர்வர்.

* 11-07-1920 இல் பட்டுக்கோட்டை அருகே திருக்கண்ணபுரம் என்ற ஊரில் ராஜகோபாலன் என்ற நீதிக்கட்சி பிரமுகருக்கு நாராயண சாமி என்ற இயற்பெயருடன்  மகனாகப் பிறந்தார். ஒரு தமக்கை, இரு தம்பிகள், ஒரு தங்கை என உடன் பிறந்தோர் அனைவரும் திராவிடர் இயக்கக் கொள்கைளில் பற்றுள்ளோர்.இவர் தம்பி சீனிவாசனும் திராவிடர் இயக்கப்பற்றால் நெடுஞ்செழியன், செழியன் என்று பெயர் மாற்றிக் கொண்டனர். நாவலரின் அண்ணாமலைப் பல்கலைக்கழக மாணவத் தோழர்கள் பேராசிரியர் அன்பழகன் மற்றும் புலவர் நன்னன் ஆகியோர்.அண்ணாமலைப் பல்கலையில் திராவிடர் இயக்கம் காலூன்றக் காரணமானவர்களில் நாவலர் பங்கு அதிகம்.

* இவர் சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் படிக்கும் போதே முதல் மாணவர். இலக்கியம், வரலாறு, அரசியல் விஞ்ஞானம் போன்றவற்றில் எந்தக் கேள்வியைக் -கேட்டாலும் மடை திறந்த வெள்ளம் போல் சொற்பொழி வாற்றுவதில் வல்லவர். நன்றியுரை ஆற்ற நாவலரைத் தான் அழைப்பார்கள். அந்த நன்றியுரை இரண்டரை மணி நேரம் வரை நீளும்.மதுவுண்ட வண்டு போல் மாணவர்கள் மயங்கிக் கேட்பர்.

* நாவலரின் பேச்சைக் கேட்டதிருவாரூர்க் கட்சிக்காரர் ஒருவர், மாணவர்களான நாவலரையும், பேராசிரியர் அன்பழகனையும் அழைத்து பொதுக் கூட்டத்தில் பேச வைத்தார். அவர் வேறு யாருமல்ல., கலைஞர் தான்.

* தன்னம்பிக்கையும், விடாமுயற்சியும் இருந்தால் சிறந்த பேச்சாளராகலாம் என்பதற்கு நாவலர் வாழ்வு சிறந்த உதாரணம்.ஆரம்பத்தில் திக்குவாய்ப் பிரச்சினையால் சரியாகப் பேசமுடியாமல் தவித்த இவருக்கு முறையாகப் பேச்சுப் பயிற்சி தந்தவர் சக மாணவரான க.இராமையா (பின்னாளில் பேராசிரியர் அன்பழகன்).வேகமாகப் பேசும்போது திக்கித் திணறி வார்த்தைகள் வராதபோது 'ங்' என்று ஒரு விதமாக சத்தம் வந்தது. அதையே அவரது பேச்சுப் பாணியாகக்  கொண்டு வெற்றி பெற்றார். பலர் அவர் போல் பேச வேண்டும் என்று பயிற்சி எடுத்தனர்.

* சிதம்பரம் அண்ணாமலைப் பல் கலைக் கழகத்தில் சுயமரியாதை இயக்கக் கருத்துக்களைப் பரப்பிய மாணவர்கள் நன்னன், செழியன், அன்பழகன் வரிசை யில் முதன்மைப் பங்கு வகித்தவர் நாவலர்தான். தந்தை பெரியார், அண்ணா, பட்டுக்கோட்டை அழகிரி, சி.பி. சிற்றரசு என்று பல திராவிட இயக்கத்தலைவர்களை அழைத்து சொற்பொழிவாற்ற வைத்தார்.

* பெரியாரைத் தன் கொள்கைத் தலைவராக ஏற்றுக் கொண்டு அவரோடு எம்.ஏ.பட்டம் பெற்றவுடன்  நான்கு ஆண்டுகள் உடனிருந்து பணிபுரிந்தார். சிக்கனத்தில் பெரியாரையும் மிஞ்சும் வாழ்வு வாழ்ந்தார்.

* 1937ல் அண்ணா பற்றி கேள்விப்பட்டு அவரது பேச்சைக் கேட்டு அவரிடம் பழகியது 1943ல் தான். அப்போது தொடங்கிய பழக்கம், 1969 வரை தொய்வின்றித் தொடர்ந்தது. இலக்கியம் பற்றி நாவலரைப் பேசச் சொல்லி அண்ணா கேட்டு இன்புறுவார். ஆரம்பத்தில் படித்தவர்கள் மட்டுமே கேட்டு இன்புற்ற பேச்சு பெரியாரால் பாமரரும் கேட்டு இன்புற மாற்றப்பட்டது.

* கல்லூரிக் காலங்களில் நீண்ட இளம் தாடி, கருப்புநிற புஷ்கோட், ஆறடிக்கும் மேலான உயரம் என்று நாவலரின் தோற்றம் மிக வித்தியாசமாக இருக்கும்.  பேச ஆரம்பித்தால் பல இடங்களில் கலவரமும் வரும். ஆனால் எதைப்பற்றியும் கவலைப்படாமல் வெட்டு ஒன்று; துண்டு இரண்டு என்று, தான் சொல்ல வந்த கருத்தைச் சொல்லி விட்டுத்தான் அமர்வார், மாணவரான இளந்தாடி நெடுஞ்செழியன்.

* சங்க இலக்கியங்கள், ராமாயணம், பெரியபுராணம் மற்றும் இலக்கண நூல்களைப் படித்து அதை மனப்பாடமாக உரிய இடத்தில் சொல்லி தன் கொள்கைக்கு மிகப்பெரிய ஆதரவைத் திரட்டுவார் நாவலர். மனப்பாடம் எப்படி செய்வது என்பது பற்றி கேட்டால் முயற்சியும் ஈடுபாடும் இருந்தால் எல்லாம் வரும் என்று சொல்லி அதற்குத் துணையாக சங்க இலக்கியப் பாடலொன்றைக் கூறுவார்.

* பாரதிதாசன் பாடல்களை நாவலர் போல் பட்டி தொட்டி எங்கும் பரப்பியவர் யாரும் இல்லை எனலாம். பேச்சு ஆரம் பிக்கும் போதும், இடையிலும், முடிக்கும் போதும் பாரதிதாசன் பாடல்களை எழுச்சியோடு பாடி, தான் சொல்லவரும் கருத்துக்கு வலுசேர்ப்பார் நாவலர். உணர்ச்சி வயப்பட்டு பாரதிதாசன் பாடல்களை பேசிடும் அழகே தனி. ஆரம்பிக்கும் போதும் இடையிலும் முடிவுறும் போதும் பாரதிதாசன் கவிதைகள் இன்றி முற்றுப்பெறாது அவர் பேச்சு.வீழ்ச்சியுறு தமிழகத்தில் எழுச்சி வேண்டும் என்று முடிக்கும் போது கேட்கும் கூட்டம் உணர்வு பொங்க முழுக்கமிடும் அதிசயம் அவர் பேச்சுக்கும்  உண்டு.

* இடி மழைபோல், அருவி போல் காட்டாற்று வெள்ளம் போல் நாவலர் பேசினாலும் நகைச்சுவை அங்கே இழையோடும். அந்த நகைச்சுவை மாற்றுக் கட்சியினராலும் ரசிக்கப்படும். அப்போதைய அரசியலை இணைத்து அதில் சேர்த்து விட்டு கூட்டம் ரசித்து சிரிக்கும் போது அமைதியாகப் பார்த்து ரசித்து அடுத்த செய்திக்குப் போவார்.

* நாவலரின் தனித்தன்மையான பேச்சைக் கண்டு கேட்டு வியந்த பெரியார், நாவலரை தன்னுடன் சுற்றுப்பயணத்திற்கு அழைத்துச் சென்றார். அண்ணா அவரது பேச்சை வியந்து நாவலரை நடமாடும் பல்கலைக்கழகம் என்று அழைத்துப் பெருமைப்படுத்தினார். அவர் பேசாத ஊர் இல்லை. அந்தந்த ஊருக்கேற்ப, மக்களின் மனநிலையறிந்து பேசி அடுத்த ஊர் சென்றவுடன் அவர் பேசியதுநகர் முழுவதும் பிரபலமாகி இருக்கும்.

* "சும்மா"என்ற ஒரு வார்த்தையை மட்டும் வைத்துக்கொண்டு ஒரு மணி நேரம் நம் வயிறு வலிக்கும் அளவிற்கு சிரிக்க வைத்துப் பேசுவார். இது சும்மா பேசியது அல்ல நீங்கள் சிந்திக்கப் பேசியது என்று இறுதியில் ஒரு "பஞ்ச்"வைப்பார்.

*  அண்ணா, நாவலரைப் பொதுச் செயலாளராக்கி 'தம்பி வா' தலைமையேற்க வா. உன் ஆணைக்குக் கட்டுப்பட்டு நடக்கிறேன் என்று அழைத்தார். தம்பிக்கு எழுதிய பல கடிதங்களில் நாவலரின் பெருமைகளைப் பல படப் புகழ்ந்திருப்பார்.

* 1957ல் நடந்த சட்டமன்றத் தேர்தலில் சேலத்தில் 207 வாக்கு வித்தியாசத்தில் தோல்வியடைந்தார் நாவலர். நன்றி அறிவிப்புக் கூட்டத்தில் அண்ணா "ஒரு தங்கத்தை உங்களுக்கு அளித்தேன் அதைப் பயன்படுத்தாமல் என்னைப்பங்கப்படுத்தி விட்டீர்கள்" என்று வருத்தப்பட்டுப் பேசினார்.

* இலக்கிய உலகிற்கு நாவலர் அளித்த அற்புதமான கொடை அவரது திருக்குறள் உரை, பாவேந்தர் கவிதைகள் திறனாய்வு, திராவிட இயக்க வரலாறு போன்ற நூல்களாகும், திருக்குறளில், நன்கு ஆழங்கால்பட்ட நாவலர், திருக்குறள் மனு தர்மத்திற்கு எதிரான நூல் என்று ஒரு சிறந்த ஆய்வுரையினை அளித்திருப்பார். மதக்கருத்து குறளில் இல்லை என்பதை தனது நெடிய ஆய்வின் மூலம் நிரூபித்துள்ளார். இறை, ஊழ், தாமரைக்கண்ணான், இந்திரன் போன்ற இந்துமதம் சம்மந்தமான கருத்துக்கள் உள்ளன என்பதை மறுத்து அவர் சொன்னதற்கு இன்றுவரை யாரா லும் மாற்றுக் கருத்து சொல்ல முடிய வில்லை.

* அரசியல் வாழ்வில் பல மாறுபாடு களை எடுத்திருந்தாலும் அடிப்படை திராவிடர் இயக்கக் கொள்கைளில் இறுதி வரை மாறாமல் இருந்தார் நாவலர்.

* திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி. வீரமணியின்  "கீதை யின் மறுபக்கம்"என்ற நூல் அறிமுக விழாவில் அவர் ஆற்றிய ஆய்வுரை போற்றத்தக்க ஒன்று. அந்தப் பேச்சின் ஒலிவடிவம் கேட்போர் கீதை பற்றிய தங்கள் எண்ணத்தை மாற்றிக் கொள்வர். ஆணித்தரமாக, தக்க சான்றுகளோடு, சரளமாக அவர் கூறிய கருத்துக்கள் தர்க்கத்தின் இலக்கணம் என்று கூறலாம்.

* தன் அமைச்சர் பதவிக்காலத்தில் சிதம்பரம் நடராஜர் கோயிலில் அளிக்கப் பட்ட வரவேற்பை  ஏற்க மறுத்த நாவலர், தனக்கிட்ட பணியான ஆய்வுப் பணியை சிறப்புடன் செய்து முடித்தார். இது அப் போது பலத்த சர்ச்சையை உருவாக்கியது.

அப்பொழுது "சபாஷ் சபாஷ் நெடுஞ்செழியன்" என்று பாராட்டினார் பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார். கோப்புகளைக் கையாள்வதிலும், முடிவெடுப்பதிலும் நாவலர் விரைந்து சட்டத்திற்குட்பட்டு முடிவெடுப்பார்.

* பெரியாரின் அணுக்கத் தொண்டராக இருந்ததால், தன் திருமணத்தைக்கூட திருமணம் முடிந்தவுடன் தான் அறிவித்தார். ஏன் உங்கள் திருமணத்திற்கு என்னை அழைக்கவில்லை என்று கேட்ட தன் நண்பரிடம், எனக்குத் தானே திருமணம் அதில் உங்களுக்கு என்ன வேலை என்று கேட்டு வாயடைத்தார். சிக்கனம் என்பது திருமணத்திலும் இருக்க வேண்டும் என்பது நாவலரின் திடமான கருத்து. 

ஆயிரக்கணக்கான சுய மரியாதைத் திருமணங்களை நடத்திய நாவலர், மதிமுக தலைவர் வைகோ, தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் ஆகியோர் திருமணங்கள் நாவலர் நடத்திய திருமணங்களே.ஆடம்பரமாக நடக்கும் திருமணங்களில் கலந்து கொண்டு ஆடம்பரம் தேவையில்லை என்பதை தன் பாணியில் இடித்தும் காட்டுவார்.

* நாவலர் எழுதிய நூல்களில் "மதமும் மூடநம்பிக்கையும் "

என்ற நூல் மிகச் சிறப்புடையது. தன் வாழ்க்கை வரலாற்றை "என் வாழ்வில் கண்டதும் கேட்டதும் " என்று எழுதினார். ஒரே தலைப்பைப் பலமுறை பேசினாலும், ஒவ்வொருமுறையும் அந்தப் பொருள் பற்றி வித்தியாசமாகக் குறிப்பில்லாமல் பேசமாட்டார்.

 *பகுத்தறிவாளர்கள்

பன்னெடுங்காலம் வாழ்பவர்கள் என்பதற்கு அவர் கூறும் எடுத்துக்காட்டுக்கள், கேட்க மலைப்பாக இருக்கும் இறுதியாக பெரியார் வாழ்ந்தது மிக அதிகம் என்று முடிப்பார். நாவலரும் 80 வயதை தாண்டி 2000ஜனவரி 12ஆம் நாள் மறைந்தார். அதற்கு முன் சென்னை பெரியார் திடலில் 31.12.1999 அன்று திராவிடர் கழகம் நடத்திய புத்தாயிரம் நிகழ்ச்சியில் இறுதியாகக் கலந்து கொண்டு பேசினார். நாவலர் என்னும் பெரியார் தொண்டரின் இறுதிப் பேச்சு பெரியார் திடலில் தான் கடைசியாக முடிவுற்றது.திராவிடர் கழக மேடையில் ஆரம்பமான அவர் பேச்சு அதே மேடையில் இறுதியாக முடிவுற்றது.

* "நாவெல்லாம் தமிழ் மணக்க, செவியெல்லாம் தமிழ் மணக்க, சிந்தையெல்லாம் தமிழ் மணக்க அன்று மேடையேறிய நாவலர் என் நண்பர், தன்மான இயக்கத்தின் தூண் சாய்ந்துவிட்டதே என தமிழகம் புலம்பிட மறைந்து விட்டார். அவர் புகழ் வாழ்க. அவர் பரப்பிய பகுத்தறிவு வெல்க " என்று கலைஞர் தன் இரங்கலுரையில் குறிப்பிட்டார்.

* நீண்டதொரு இரங்கல் அறிக்கை அளித்த ஆசிரியர் கி.வீரமணி பல தகவல்களை அதில் அளித்தார்.

* நாவலர் கொள்கைப்படி எவ்வித மூடச் சடங்கும் இல்லாமல் அவர் இறுதி நிகழ்வு நடந்தது. தன் நீண்ட நாள் நண்பருக்கு ஓடோடி வந்து இறுதி மரியாதை செலுத்தினார் முதல்வர் கலைஞர்.தி.க., தி.மு.க., மதிமுக., கொடிகள் அரைக்கம்பத்தில் பறந்தன. நாவலர் நிறைவான கொள்கை வாழ்வு வாழ்ந்து நிறைந்தார்.

* மனிதன் சிந்திக்க வேண்டும், ஆராய்ச்சி செய்ய வேண்டும் பகுத்தறிந்து பார்க்க வேண்டும். சிந்திக்க மறுப்பவன் 

அவனுக்குத் தானே துரோகியாகிறான். சிந்திக்க அஞ்சுபவன் மூடநம்பிக்கையின் அடிமையாகிறான் என்று நாவலர் பேசிய பேச்சு இன்றும் நம் காதுகளில் ஒலிக்கிறது.

வாழ்க டாக்டர் நாவலர்!


Saturday, July 9, 2022

சார்லஸ் பிராட்லா

 கே. ராஜூ புதிய ஆசிரியன்

ஜுன் 13 பதிவு…

வரலாற்றில் இடம் பிடித்த சார்லஸ் பிராட்லா

நாத்திகம் பேசியதால்.. பதவியேற்பு நிறுத்தப்பட்டு, 

நான்கு முறை நடந்த மறு தேர்தல்களிலும் வென்று..சாதனை படைத்தவர் சரித்திர நாயகர் சார்லஸ் பிராட்லா (1833 – 1891).

இவரின் பிடிவாதத்தால் 

பிரிட்டனின் அரசியல் சட்டம் திருத்தப்பட்டது.

சார்லஸ் பிராட்லா,  நாத்திகர். 

பிரிட்டன் நாடாளுமன்றத்திற்குத் தேர்வு செய்யப்பட்டார். 

" கடவுளின் சாட்சியாக"பதவி ஏற்குமாறு கூறினார்கள்.  

ஆனால் அவரோ, 

"இல்லாத கடவுளை நான் சாட்சிக்கு அழைத்துவர முடியாது"  என்று கூறி, 

கடவுளின் பெயரால் பதவி ஏற்க உறுதியாக மறுத்துவிட்டார்.

"உங்களுக்கு நம்பிக்கை இருக்கின்றதா? இல்லையா? என்பதைப்பற்றி எங்களுக்குக் கவலை இல்லை; 

இந்தப் பேரவை நம்புகின்றது, 

இந்த நாட்டின் அரசு அமைப்புச் சட்டம் நம்புகின்றது, அதற்குக் கட்டுப்பட்டவர் நீங்கள்; எனவே, 'கடவுள் சாட்சியாக' என்று கூறித்தான் நீங்கள் பதவி ஏற்க வேண்டும்; 

அதற்கு நீங்கள் மறுப்பீர்களேயானால் உங்கள் தேர்வு நீக்கப்படும்" என்றார்கள்.

அதற்கு சார்லஸ் பிராட்லா, 

"இந்தப் பதவி  ஐந்து ஆண்டுகள்தான்; 

இதற்காக, என் வாழ்நாள் முழுமையும் நான் கட்டிக்காத்துவரும் என்கொள்கைகளை விட்டுவிடமுடியாது; 

நீங்கள், உங்கள் விருப்பப்படி செய்து கொள்ளலாம் என்று கூறி விட்டார்.

அவர்களும் அவர் உறுப்பினர் ஆக முடியாது என்று அறிவித்தனர்.

அவருடைய தொகுதிக்கு மீண்டும் தேர்தல் நடந்தது; 

மீண்டும் பிராட்லா போட்டியிட்டார்; 

மீண்டும் வெற்றிபெற்றார்; 

மீண்டும் அதே பிரச்சனை!

"எனக்கு ஒரு கொள்கை - ஒரு நம்பிக்கை இருக்கின்றது... அதை எந்தக் காரணத்திற்காகவும் என்னால் விட்டுத்தர இயலாது"

என்று திட்டவட்டமாக மறுத்துவிட்டார் பிராட்லா.

மீண்டும் அவர் தொகுதிக்குத் தேர்தல் நடந்தது.

 மூன்றாவது முறையும் பிராட்லா போட்டியிட்டார்; இந்த முறை முந்தைய இரண்டுமுறை வாங்கிய வாக்குகளைவிடக் கூடுதல்  வாக்குகள் வாங வெற்றி பெற்றார் பிராட்லா!

இம்முறை கெஞ்சினார்கள்

"தயவுசெய்து பிடிவாதம் பிடிக்காமல் இந்த அவையின் வேண்டுகோளை ஏற்றுக்கொள்ளுங்கள்" என்றார்கள்; 

பிராட்லா மிகவும் உறுதியாகச் சொன்னார், 

"நான் யார், என் கொள்கைகள் என்ன என்பதைத் தெரிந்துகொண்டுதான் என் தொகுதி மக்கள் என்னை மீண்டும் மீண்டும் தேர்ந்து எடுக்கிறார்கள்; 

என் தேர்வை நீக்குவதன் மூலமாக என்னைத் தேர்ந்து எடுத்த மக்களை நீங்கள் அவமதிக்கின்றீர்கள்; அவர்களுடைய உரிமைகளை இழிவு செய்கின்றீர்கள்; அவர்களுடைய தன்மானத்தைச் சோதிக்கின்றீர்கள்"

என்று கடுமை காட்டிய பிராட்லா,

 "இதற்குமேல் பேச என்னிடம் எதுவும் இல்லை"  என்று கூறி விட்டார். 

இந்த முறை பிரிட்டன் நாடாளுமன்றம் பணிந்தது. 

"தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள், கடவுளின் பெயரால் மட்டும் அன்றி மனச்சாட்சியின் பெயராலும் பதவி ஏற்கலாம்" என பிரிட்டனின் அரசியல் சட்டம் திருத்தப்பட்டது.

இன்று பகுத்தறிவுவாதிகள் உட்பட பலருமே மனசாட்சியின் பெயரால் பதவி ஏற்பதற்கு சார்லஸ் பிராட்லாதான் காரணம்.

Thursday, July 7, 2022

மணிப்புரி மொழியில் திருக்குறள்

 உலகப் பொதுமறையாம் திருக்குறளை மணிப்பூர் மொழியில் மொழி பெயர்த்து வெளியிட்ட மணிப்பூர் மங்கை ரேபிகா தேவி அவருக்கு தமிழகத் தமிழர்களின் சார்பாக நம் வாழ்த்துகளை பகிர்வோம் !

மணிப்புரி மொழியில் மொழி பெயர்க்கப்பட்ட திருக்குறள் நூல் வெளியீட்டு விழா, வியாழக்கிழமை மணிப்பூர் மாநில தலைநகரமான இம்பாலில் நடைபெற்றது.

மணிப்பூரை சேர்ந்த திருமதி.சொய்பம் ரேபிகா தேவி அவர்கள் திருக்குறளை மொழிபெயர்ப்பு செய்துள்ளார். இந்நூல் வெளியீட்டு விழா, இம்பாலில் நடைபெற்றது. நூலை மணிப்பூர் மாநில கவர்னர் திரு.வீ.கே. துக்கள் அவர்கள் வெளியிட்டார்.

திருக்குறளை தமிழகத் தமிழர்களே தங்கள் பிள்ளைகளுக்கு சொல்லிக் கொடுக்க தயங்கும் இக்காலத்தில் திருக்குறளின் பெருமையை உணர்ந்து ஒரு மணிப்பூர் மங்கை திருக்குறளை தனது தாய் மொழியில் மொழி பெயர்த்திருப்பது தமிழர்களுக்கு பெருமை சேர்த்துள்ளது. மேலும் திருக்குறளை தேசிய நூலாக அறிவிக்க இந்திய அரசு இன்று வரை ஒப்புதல் வழங்கவில்லை . அதனால் திருக்குறள் இந்திய பாடத்திட்டங்களில் சேர்க்கப்படவில்லை.

தமிழ்நாட்டு பிள்ளைகள் வடநாட்டு நூல்களை படிக்கும் நிலையில் தமிழகத்தின் ஒப்பற்ற திருக்குறள் , தொல்காப்பியம் போன்ற நூல்களை வடநாட்டிற்கு நாம் கொண்டு சென்று சேர்க்க முடியவில்லை. ரேபிகா தேவி போன்றவர்களின் உதவியால் இப்போது தேசங்கள் கடந்து திருக்குறள் சென்றுள்ளது நமக்கு மகிழ்ச்சியை தருகிறது. தமிழகத்தில் உள்ள தமிழ் அமைப்புகள் ரேபிகா தேவி போன்ற தமிழ் ஆர்வலர்களை பாராட்டத் தயங்கக் கூடாது . அவருக்கு தமிழக அரசியல் கட்சிகள் மற்றும் தமிழக அரசும் வாழ்த்துகளை தெரிவிக்க வேண்டும்.

நிகழ்ச்சியில் கவர்னரின் செயலாளர் டாக்டர். ஆர்.கே.நிமாய் சிங், முதலமைச்சரின் செயலாளர் திரு. என்.அசோக் குமார் (இ.ஆ. ப). சி.ஐ.சீ.டி இயக்குனர் திருமதி. வீ.ஜி.பூமா, சுரச்சந்பூர் துணை கமிசனர் திருமதி.ஜெசிந்தா லாசரஸ் (இ.ஆ.ப), உக்ருல் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் திரு. செல்வன் நாகரத்தினம் (இ.கா.ப), திருமதி.சொய்பம் ரேபிகா தேவி, மோரே தமிழ்ச் சங்க நிர்வாகிகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

மோரே தமிழ்ச் சங்கத்திற்கும் , மணிப்பூர் வாழ் தமிழர்களுக்கும் நம் பாராட்டுகள் !(15.3.2014 முகநூலில் வந்த பதிவு)

Wednesday, July 6, 2022

பொப்பிலி அரசரின் உரை

மேனாள் சென்னை மாகாண பிரதமராக (முதல்வராக) இருந்த பொப்பிலி அரசர் நீதிக்கட்சி அரசின் சாதனைகளை விளக்குகிறார்....

காங்கிரஸ் தப்புப் பிரசாரத்திற்கு மறுப்பு

பொப்பிலி ராஜா அவர்கள் பிரசங்கம்

நாட்டிற்கு ஜஸ்டிஸ் கட்சியார் செய்திருக்கும் அரிய சேவை

அக்டோபர் மாதம் 22  விசாகப்பட்டணம் ஜில்லாவில் மாரடம் என்னும் நகரத்தில் நடந்த பொதுக் கூட்டத்தில் சென்னை அரசாங்க முதல் மந்திரி கனம் பொப்பிலி ராஜா அவர்கள் செய்த பிரசங்கமாவது :-

தோழர்களே! ஜஸ்டிஸ் கட்சியானது, தான் ஏற்பட்ட 18 வரு­ காலத்திற்குள் பொது ஜனங்களுக்கு எவ்வளவோ நன்மைகள் செய்துகொண்டு வந்திருக்கிறது. இது இனிமேலும் மக்களுக்கு எவ்வளவோ நன்மைகள் செய்யவும் ஏற்பாடுகள் செய்துகொண்டு இருக்கிறது. நான் அவற்றை யயல்லாம் உங்களுக்கு விவரித்துச் சொல்வதற்கு முன்பாக எங்கள் கட்சியானது இன்ன கொள்கைகளைக் கையாளுகிறதென்று உங்களுக்கு எடுத்துக் கூற ஆசைப்படுகிறேன். எங்கள் கொள்கைகளாவன :-

1. சமாதானமுடையதும் சட்ட சம்மதமுடையதும் ஒழுங்கு முறைக்கு ஒத்ததும் ஆன எல்லா வழிகளாலும் எவ்வளவு சீக்கிரம் பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்தில் ஒரு அங்கமாக இந்தியாவுக்கு சுயராஜ்யம் சம்பாதிக்க முடியுமோ அவ்வளவு சீக்கிரம் சுயராஜ்யம் சம்பாதிக்க வேண்டியது.

2. பல திறப்பட்டனவாக இருக்கப்பட்ட மதத்தினர்களுக்குள்ளும் சமூகங் களுக்குள்ளும் ஒன்றுக்கொன்று ஒற்றுமையுடனும் நல்லணத்துடனும் இருக்கும்படி செய்ய வேண்டியது ; அதற்காக வேண்டிய, சகல பொது ஸ்தாபனங்களிலும் உத்தியோகங்களிலும் சகல மதத்தினர்களுக்கும் சகல சமூகங்களுக்கும் போதிய பிரதிநிதித்துவம் இருக்கும்படி செய்து அவரவர்களுக்குரிய நலன்களையும் உரிமைகளையும் காப்பாற்ற வேண்டியது. அத்துடன், மக்களுக்குள் ஆங்காங்கு இருக்கின்ற தாழ்மை, ஏழ்மை ஆகியவற்றைப் போக்கி-நிலைமைகளை உயர்த்தி- மக்களை முன்னுக்குக் கொண்டுவந்து-முடிவான பயனாய் சாதி வேற்றுமைகளை யயல்லாம் ஒழியும்படி செய்து மக்களையயல்லாம் ஒன்றாய் இருக்கும்படி வைப்பது.

3. சகல வகுப்பார்களின் கல்வியபிவிர்த்திக்காகவும், சமூக சமத்துவதற்திற்காக வும், பொருளாதார மேம்பாட்டிற்காவும், கைத்தொழில் வளர்ச்சிக்காகவும், விவசாயப் பெருக்கத்திற்காகவும், அரசியல் முன்னேற்றத்திற்காகவும் மேன்மேலும் பாடு படுவது.

4. தென்னிந்தியாவில் உள்ள ஜனங்களுக்கு எந்த ஒரு பொது வி­யத்தைப் பற்றியும் சரியான - செம்மையான அறிவு ஏற்படும்படி செய்து, நாட்டின் ஒவ்வொரு முக்கிய பொது விவகாரத்திலும், அவர்கள் தங்கள் அபிப்பிராயத்தை விளக்கமாய்த் தெரிவிக்கும்படி செய்தல் ; அதன் மேல் அவற்றைப் பின்பற்றி நடப்பது. 

5. மேற் சொல்லியபடி நம் கட்சியின் கொள்கைகளை அனுபவத்தில் சாதித்துக் கொள்வதற்கு என்ன காரியங்கள் - என்ன முறைகளை அனுசரித்தால், தகுமானதா யும் வெற்றியளிக்கக் கூடிய தாயும் இருக்குமோ அவற்றையயல்லாம் அனுசரிப்பது.

தாழ்த்தப்பட்டார்க்கு சேவை

இந்தியாவிலேயே முதன் முதலாக ஜஸ்டிஸ் கட்சிதான், தாழ்த்தப்பட்டும், கொடுமைப்படுத்தப்பட்டும் இருக்கிற சாதியார்களையயல்லாம் அவர்களது தாழ்மை, கஷ்டம் என்பவற்றிலிருந்து விடுவித்து அவர்களை க்ஷேம அபிவிருத்தி அடையும்படி செய்விக்கப் பாடுபடத் தொடங்கிற்று. நாங்கள் அவ்விதம் பாடுபட்டுக் கொண்டு வருகை யில்,  காங்கிரஸ் கட்சியார் சும்மா நின்று கொண்டு, சுயராஜ்யம் வந்தால்தான் அவர்களுக்குத் தாங்கள் ஏதும் செய்ய முடியுமென்று மேடைப் பிரசங்கங்கள் செய்து விட்டுப் போகிறார்கள். நாம் என்ன சொல்லுகிறோமென்றால், அரசியல் முன் னேற்றம் ஏற்படுகிறபடி ஏற்பட்டும். ஆனால் அது பூராவும் கிடைத்து முடியும் வரைக்கும் ஏழை மக்களை தாழ்மையையும் வறுமையையும் அனுபவிக்கும்படி விட்டுவிட்டுப் பார்த்துக் கொண்டு சும்மா இராமல், அவர்கள் முன்னுக்கு வரக்கூடிய ஒவ்வொரு வழியையும் பின்பற்ற வேண்டும் என்பதே. இப்படி இவர்களை முன்னுக்குக்குக் கொண்டு வருவதில் நாம் மேலே இருக்கிறவர்ளை கீழே பிடித்துத் தள்ள வேண்டும் என்று சொல்ல வரவில்லை. ஆனால், கீழே இருக்கிறவர்களை மேலே தூக்கிக்கொண்டு வரவேண்டும் என்று சொல்லுகிறோம்.

குடியரசு என்றால் என்ன பொருள் எனில், ஜனங்களின் நன்மைக்காக - ஜனங்களுடைய அரசாங்கம் என்பதாகும். ஆதலால், நாம் இத்தகைய அரசியலைப் பெற வேண்டுமாகில், எந்த சாதியில்- எந்த சமூகத்தில் பிறந்த யாராயிருநதாலும் அவரையயல்லாம் நாம் நாட்டின் அரசாங்கத்திலுள்ள எப்படிப்பட்ட பதவியையும் அடைவதற்குண்டான சம சந்தர்ப்பத்தையும் செளகரியத்தை உடைத்தாயிருக்கும்படி செய்ய வேண்டும். சுருங்கச் சொல்லவோமாகில், நம் நாட்டிலுள்ள எந்த ஒரு ஆசாமியும் முன்னுக்கு வருகிற வி­யத்தில், தன் பிறவி காரணமாக எந்த ஒரு இடைஞ்சலையும் தடங்கலை யும் அடையக் கூடாது. இன்றைக்குப் பொது மக்களின் பிரதிநிதித்துவம் விளங்குகிற ஸ்தானங்களிலெல்லாம் மக்களின் சமூகத்தில் பிற்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர்களும் தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர்களும் காணப்படுகிறார்களென்றால் அது ஜஸ்டிஸ் கட்சியார் அரசியல் அதிகாரத்தை ஒப்புக்கொண்டு ஆட்சி செலுத்தி வருகிற தன்மையினாலும் அவர்களது பத்திரிகைகளாலும் அவர்களது பிரசார வேலையினாலும் விளைந்திருக்கிற பயனே.

ஜஸ்டிஸ் கட்சியின் சேவை

ஜஸ்டிஸ் கட்சியினால் நாட்டுக்கு விளைந்த நலன்கள் பல உண்டு என்று நான் வேறு சில இடத்தில் கூறியிருக்கிறேனானாலும், அவற்றை இந்த இடத்திலும் எடுத்துக் கூறும்படியாக நேர்கிறது. அதற்கு என்ன காரணமெனில், காங்கிரஸ்காரர்கள் சதா காலமும்-அதிலும் தற்சமயம்‡மிக மும்முரமாக எங்களைத் திட்டுவதிலும், எங்கள் மேல் பழி சொல்லி எங்களுக்கு விரோதமாகத் தப்பான அபிப்பிராயத்தைப் பரவ வைப்பதிலும் பிரமாதமாக ஈடுபட்டிருக்கிறார்கள் என்பதே, நாங்கள் ஒரு சமூகத்தாரின் (பார்ப்பனர்களின்) கட்டுப்பாடான எதிர்ப்புக் கிடையிலும் மக்களுக்கு நம்மாலான நன்மையைச் செய்வோம் என்று பதவி ஏற்கையில் நமக்கு முன்னொரு போதும் ஏற்பட்டில்லாத பெரும் பணத் தட்டு ஏற்பட்டுவிட்டது. ஆனால் கையிலுள்ள வருவாயைக் கொண்டு நம் கட்சியானது கிராம ஜனங்களின் க்ஷேமாயி விர்த்தியை கட்சித் திட்டத்தின் முதல்அம்சமாக வைத்துக் கொண்டிருக்கிறது.

 நாங்கள் ஒவ்வொரு கிராமத்திற்கும் போக வர உள்ள சாதனத்தையும் வைத்திய வசதியையும் இலகுவில் கிடைக்கும்படி செய்திருக்கிறோம்.

கிராம வைத்திய சாலைகளையும் ஆங்காங்கு ஏற்படுத்திக் கொண்டிருக்கிறோம். முனிசிபாலிட்டி (நகர பரிபாலன சபை)களுக்கு தண்ணீர் கிடைப்பதற்கு நிலையான வசதிகள் உண்டுபண்ணிக் கொடுத்து வருகிறோம். பஞ்சாயத்து சபைகளுக்கும், இப்படிப்பட்ட வசதிகள் கிட்டும்படி செய்திருக்கிறோம். நாங்கள் சுகாதார இலாக்காவின் வேலையைப் பெருக்கி, விழா நாட்கள்- சந்தை நாட்கள் ஆகிய இப்படிப்பட்ட காலங்களில் தொத்து வியாதி பரவாமல் தடுக்க எல்லா வித ஏற்பாடுகளையும் நடத்துகிறோம்.

நில அடமான பேங்குகள் ஏற்படுத்தல், பயிர்ச் செலவில் அதிகப்படியான பயன் அடைவிக்கிறதற்கான மார்க்கங்களை ஜனங்களுக்கு கற்றுக் கொடுத்தல் ஆகிய நன்மைகளும் செய்கிறோம். விளைச்சலான பொருளைச் சேமித்து வைக்கக் களஞ்சியங்களும் கட்டிக் கொடுத்திருக்கிறோம். அதைக் காலம் பார்த்து நல்ல விலைக்கு விற்பதற்காகவும், வேண்டுங்கால் அவற்றின் மேல் அரசாங்கத்தார் கடன் கொடுப்பதற்காகவும், வசதிகளும், ஏற்பாடுகளும் நடத்திக் கொடுக்கிறோம். கூட்டுறவுச் சங்கங்களையும் அமைத்து அவற்றால் மக்கள் நன்மை அடையச் செய்திருக்கி றோம். கிராமத்தில் பலர் கடனாளிகளாய் - தமது சொத்துக்களைக் கடன்காரர்கள் வசம்விட்டுவிட்டு அவஸ்தைப்படுகிற நிலைமைகளைத் தடுத்து, அவர்களது கடன் பளுவைக் குறைக்க மார்க்கங்கள் செய்திருக்கிறோம்.

 விவசாயிகள் கடன் சட்டம் என்ற ஒரு சட்டத்தை விரிவாக்கி அதிலும் கிராமத்தாரது கடன்கள் இலகுவில் ஒழிவதற் குண்டான மார்க்கங்களை அமைத்திருக்கிறோம். நில அடமான பேங்குகள் இல்லாத இடங்களில் கொடுக்கல் வாங்கல் சம்பந்தமாக வழக்கு விவகாரம் ஏற்படக் கூடிய சந்தர்ப்பங்களில், அவ்விவகாரத்தைக் கோர்ட்டுகளுக்குக் கொண்டு போகாமல் ராசியாக்க-மத்தியஸ்த ராசி சபைகள் அமைத்திருக்கிறோம். 

இத்தகைய மத்தியஸ்த ராசி சபைகளில், தற்சமயம் சில மட்டுமே அமைக்க முடிந்தவரையில் முடித்து விடலாம் என்று எண்ணியிருக்கிறோம்.

நாங்கள் சட்டசபையில் அரங்கேற்றி அமுலில் நடத்திக் கொண்டிருக்கிற ஹிந்து மத தர்ம பரிபாலன சட்டத்தினால், ஹிந்து மதக் கோவில்களும்  மத ஸ்தாபனங்களும் ஒழுங்காகப் பராமரிக்கப்பட்டு வருகின்றன. நாம் மாட்டு வண்டித் தீர்வையை எடுத்துவிட்டிருக்கிறோம். அதனால் விவசாயிகளுக்கு சங்கடம் தவிர்த்திருக்கிறோம். கிராமத்தைத் தொழில் வளர்வதற்கு உதவி செய்கிறோம். அதற்காக சட்டமும் செய்திருக்கிறோம்.

இந்நாட்டு சுதேச வைத்தியம் அபிவிருத்தியடைய வேண்டுமென்று இந்திய வைத்தியக் கல்விக் கழகம் நிறுவியுள்ளோம். நாட்டில் அகவிலை குறைந்துவிட்டதால் நிலவரியை எவ்வளவு குறைக்கலாமோ அவ்வளவு குறைக்க வேண்டுமென்று அரசாங்கத்துடன் நாங்கள் மன்றாடிக் கொண்டு இயன்றதைக் குறைத்துக் கொண்டு வருகிறோம். 

சமீபத்தில் அரசாங்கத்தார் நடத்திய ரீசெட்டில்மெண்டின் பயனாய், புதுவரி விதிப்பதை நிறுத்தி வைக்கும்படி செய்துவிட்டோம். 

ஜமீன்தார்களின் ஆளுகைக்குட்பட்ட இடங்களில் குடியானவர்கள் இலகுவாகத் தங்கள் பயிர்ச்செலவு வேலைகளை நடத்தவும் வீண் நிலங்கள் என்ற பகுப்பை மாற்றவும் நிலங்களை விற்று விடுதல் என்ற காரியத்தை இலேசாய் முடித்துவிடாமல் செய்யவும் நாங்கள் வழிகள் கோலியிருக்கிறோம். தானிய விலை குறைந்திருந்தால் அதற்குத் தகுந்தாற் போல் குத்தகை வீதத்தையும் குறைக்க வேண்டுமென்று கூட சட்டம் செய்திருக்கிறோம்.

இனாம் மசோதா

கடைசியாக நாம் இனாம் குடியானவர்களின் உரிமைகளைப் பாதுகாக்க வேண்டுமென்று ஒரு சட்டம் கொண்டுவந்து அதைச் சட்டசபையில் நிறைவேற்றி வைத்திருக்கிற செய்தி உங்களுக்குத் தெரியும். இதனால் 50 இலட்சம் ஜனங்கள் சமாதானமாகவும் கவலையில்லாமலும் வாழ முடியும். இதில் கிட்டதட்ட 10 லட்சம் குடியானவர்களுக்கு வோட் அளிக்கும் உரிமையும் ஏற்படும். இதனால் வோட்டர்கள் தொகையும் விரிவடைந்திருக்கிறது. இந்தச் சட்டமானது கூடிய சீக்கிரம் வைஸ்ராயின் அங்கீகாரம் பெற்று அமுலுக்கு வரும் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம். (இது, வைஸ்ராயின் அங்கீகாரம் பெற்றுவிட்டது. ப-ர்).

நாங்கள் மாகாண பொருளாதார கெளன்சிலையும் ஜில்லா கெளன்சில் களையும் தொடக்கம் செய்திருக்கிறோம். இவைகள் நாட்டில், கல்வியையும் பொருளாதாரத்தையும் விவசாயத்தையும் கைத் தொழிலையும் மேன்மேலும் சிறப்படையச் செய்யும். 

நான் குறிப்பிட்ட இந்த கெளன்சில்கள் பொது ஜன அபிவிர்த்திக்குண்டான எல்லா இலாக்காக்களுடனும் அரசாங்க உத்தியோகஸ்தரல் லாதவர்களுடனும் கலந்து மக்களுக்கு பல வழியிலும் நல்ல நிலைமையை எய்து விக்கும்.

தாழ்த்தப்பட்டவர்கள் அனுபவிக்கும் நன்மைகள்நன்மைகள்

இந்தியாவிலேயே ஜஸ்டிஸ் கட்சியார்தான் தாழ்த்தப்பட்டவர்களையும் ஒடுக்கப்பட்டவர்களையும் முன்னுக்குக் கொண்டுவர வேண்டுமென்கிற நோக்கத்தை தம்முடைய திட்டத்தில் முதலாவது அம்சமாகக் கொண்டவர்கள். இது உங்களுக்கு ஐயமறத் தெரிந்த செய்தி.

இன்றைக்கு நாட்டிலுள்ள பொது ஜனப்பிரதிநிதித்துவ சபைகளிலெல்லாம் தாழ்த்தப்பட்ட-ஒடுக்கப்பட்ட சமூகத்தார் வீற்றிருக்கும்படி ஏற்பட்டதே ஐஸ்டிஸ் கட்சியாரின் தீவிர வேலையினால் தான். அவர்களை நாங்கள் இன்னமும் எவ்வளவோ முன்னுக்குக் கொண்டு வரப்போகிறோம். கடந்த சில வரு­ங்களில் அரசாங்கத்துக்குச் சொந்தமான புறம்போக்கு நிலங்களிலிருந்து 9908 மனைகள் வீடுகட்டிக் கொள்வதற்காக இவர்களுக்கு அளிக்கப்பட்டிருக் கின்றன. 11128 வீட்டு மனைகள் கவர்ண்மெண்டாரால் இவர்களுக்காக தயார் செய்யப்பட்டும் இருக்கின்றன.

 லேபர் டிபார்ட்டுமெண்டார் இவர்களுக்காக ஒவ்வொரு வரு­மும் ஆங்காங்கு கிணறுகள் வெட்டிக் கொடுத்துக் கொண்டு வருகிறார்கள் இவர்களுக்கு நிலங்கள் வாங்கப் பொது ஜனப் பண்டுகளிலிருந்து பாதியளவுக்கு பணம் தர உத்தேசித்திருக்கிறோம். அவர்களைக் கல்வியில் தேர்ச்சி பெறுவிக்க, அவர்களது மாணவர்களுக்கு உபசாரச் சம்பளங்களும் மற்ற வசதிகளும் வர வர அதிகமாக ஏற்படுத்திக் கொடுக்கிறோம்.

 கவர்ண்மெண்டாரின் வகுப்புவாரிப் பிரதிநிதித்துவ உத்தரவுப்படி அவர்களுக்கு சகல பதவிகளிலும் வீதாசாரம் கிடைத்தே தீரும். 

அவர்களுக்காக நாம் அரங்கேற்றி அமுல் நடத்தி வருகிற சட்டங்களின்படி எல்லா பொதுஸ்தலங்களிலும் அதாவது குளங்கள், கிணறுகள், பாட சாலைகள், கச்சேரிகள் ரஸ்தாக்கள் ஆகியவற்றிலெல்லாம் அவர்கள் புழங்குவதற்கு எவ்வித தடங்கலும் ஏற்படாதபடி தடுத்திருக்கிறோம்.

 இன்னும் நாம் அனேக சட்டங்களை நிறைவேற்றி அவர்களுக்கு ஜனசமூகத்திடை பிறவி காரணமாக ஏற்படுகிற எவ்வித தங்குதடைகளும் இல்லாதபடி செய்யவும் போகிறோம்.

தாழ்த்தப்பட்டோரைக் காங்கிரஸ்காரர் ஏமாற்றியது

நாம் இவர்களுக்காக எவ்வளவோ காலமாக உழைத்துவருகிறதைக் கண்டுதான், சமீப காலத்திற்குமுன் காங்கிரஸ்காரர்கள் நாமும் அவ்விதம் செய்து ஐனங்களின் ஆதரவை அடையவேண்டுமென்று கருதித் தாழ்த்தப்பட்டவர்களுக்கு ஹரிஜனம் என்ற பெயரைக் கொடுத்தழைத்துத் தாமும் நன்மை செய்யப் பாடுபடுவதாகச் சொல்லுகிறார்கள்.

காங்கிரஸ்காரர்கள் எங்களைப் போல் சமாதானமாகவும் அனுபவ சாத்திய மாகவும் ஆகக்கூடிய எந்த ஒரு அலுவலையும் செய்து தாழ்த்தப்பட்டவர் களுடைய நிலைமையை மேன்மைப்படுத்தி வந்தவர்களல்ல. அவர்கள் எடுத்த உடனேயே தாழ்த்தப்பட் ஒடுக்கப்பட்ட சமூகத்தார்களை ஏமாற்றி விட எண்ணினார்கள். 

கோவில் நுழைவையே கிடைப்பிப்பதாக காங்கிரஸ்காரர்கள் அவர்களுக்குச் சொன்னார்கள். அதற்காகச் சட்டம் செய்யப் போவதாகவும் பொய் சொன்னார்கள். இந்த வார்த்தையில் தாழ்த்தப்பட்ட சமூகத்துத் தலைவர்கள் நம்பிக்கை வைத்து விட்டார்கள். அப்படி நம்பிக்கை வைத்து விட்டார்கள். அப்படி நம்பிக்கை வைத்துப் பூனா பேக்ட்-ல் காந்தி முன்னிலையில் கையயழுத்துப் போட்டார்கள். 

இவ்வண்ணம் இவர்களிடம் கையயழுத்து வாங்கித் தங்கள் நோக்கத்தைப் பூர்த்தி செய்த கொண்ட பிற்பாடு தாங்கள் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை. அதன் பயனாக தாழ்த்தப்பட்டவர்களுக்கு இரண்டுவித சங்கடங்கள் ஏற்பட்டுவிட்டன! அவர்கள் இரண்டு தடவை தேர்தலுக்கு நிற்க வேண்டி இருக்கிறது!

 கவர்ண்மெண்டார் இந்த பூனா பேக்டை யயாட்டி வகுப்புவாரி உரிமைத் திட்டத்தில் சில மாறுதல்களைச் செய்துவிட்டனர். இந்த மாறுதல் ஆனவுடன் காங்கிரஸ்காரர்கள் கோவில் நுழைவு மசோதாவை தற்சமயம் வேண்டாம் என்று வாபீஸ் வாங்கிக் கொண்டனர். என்ன மோசம் பார்த்தீர்களா! 

தாழ்த்தப்பட்டோர்களுக்கு காங்கிரஸ்காரர்கள் மேலும் இழைத்த தீங்கைக் கேளுங்கள். அவர்கள் ஹரிஜன நிதி என்று பெயர் கொடுத்துத் தாழ்த்தப்பட்ட வர்களுக்காக ஒரு நிதி பொது ஜனங்களிடமிருந்து வசூலித்தார்கள். 

வசூலித்தபின் அந்தப் பணத்தை தங்கள் கட்சியின் ஆதிக்கத்தையே பெருக்குவதற் காக ஏற்படுத்தப்பட்ட ஒரு சூழ்ச்சிக் கூட்டத்தின் நிர்வாக செலவுக்கு உபயோகப்படுத்திக் கொள்கிறார்கள்.

ரஸ்தாக்கள் அபிவிருத்தி

இது நிற்க, நாங்கள் பத்து ஆண்டுத்திட்டமொன்று அமைத்திருக்கிறோம். அதன்படி இந்த மாகாணத்திலுள்ள எல்லா கிராமங்களுக்கும் போக்குவரத்து வசதிக்கான ரஸ்தாக்கள் போட்டு ஆகிவிடும். பாலங்கள் கூட வேண்டிய இடங் களுக்குப் பாலங்களும் கட்டி ஆகிவிடும். இத்திட்டத்திற்கு ‘ரஸ்தா அபிவிர்த்திக்குரிய வைப்பன் திட்டம்’ என்று பெயர்.

வரப்போகிற சீர்திருத்தங்களின் பயன்

கூடிய சீக்கிரத்தில் நம் அரசியல் அமைப்பில் பெரிய மாறுதல்கள் ஏற்படப் போகின்றன. பூரணமான சுய ஆட்சி கிடைக்கப்போகிறது.

 மாகாணத்தின் ஒவ்வொரு இலாக்காவையும் - ஒவ்வொரு காரியத்தையும் ஜனப் பிரதிநிதியாக இருக்கக் கூடிய ஒவ்வொருவரே அமுல் நடத்திக் கொண்டிருக்கப் போகின்றார். அவ்விதம் நடத்துபவர் எவரும் சட்ட சபைக்கு உள்ளடங்கித்தான் இருக்க நேரும். ஆகவே நம்மை நாமேதான் ஆளப் போகிறோம். மத்திய கவர்ண்மெண்டில் அகில இந்திய ஐக்கிய அரசாங்கம் ஏற்படப் போகிறது. அதில் இந்திய சுதேச சமஸ்தானங்களும், தம் பங்கு வீதப்படி பிரதிநிதித்துவ உரிமையை அடையும். இடைக்காலம் என்று சொல்லப்படுகிற கொஞ்ச காலம், இந்தியப் பாதுகாப்பும் அந்நிய நாட்டு விவகாரங்களும் வைஸ்ராயின் கையில் இருக்கும். அவை மாற்றப்படாத இலாகாக்கள் ஆகும். மற்ற இலாகாக்களை பொது ஜனப் பிரதிநிதிகளே நிர்வகிப்பார்கள். இதனால் மத்திய கவர்ண்மெண்டில் பூரணமான பொறுப்பாட்சி கொடுக்கப்பட்டதாக இல்லை. இதை நாம் உணர்ந்திருக்கிறோம். ஆயினும், இதுவரைக்கும் இருந்த இரட்டை ஆட்சியை விட இப்போது கிடைத்திருக்கிற  ஆட்சி எவ்வளவோ பங்கு மேலானாது. இதை என் அனுபவத்தினால் சொல்லுகிறதாக நினையுங்கள். கொடுக்கப்படுகிற சீர்திருத்தம் மத்திய கவர்ண்மெண்டில் சில வி­யங்களை வைஸ்ராயின் நேர் அதிகாரத்தில் இருக்கும்படி செய்கிறதானாலும், ஒழுங்கு முறைப்படி அரசியல் உரிமைகளுக்குப் போராடி வருகிற நாம் இப்போழுது கிடைக்கிற ஆட்சியை ஏற்று நடத்தினால் நாட்டுக்கு எவ்வளவோ நன்மைகள் செய்ய இயலும்.  

காங்கிரஸ் நிர்வாக ஊழல்கள்

ஆகவே இப்பொழுது வாக்காளர்கள், சட்ட வரம்புக்கு உட்பட்டு அனுபவ சாத்தியமான கொள்கைகளைச் சொல்லி டீக்களுக்குப் பாடுபடுகிற ஜஸ்டிஸ் கட்சியாராகிய எங்களுக்கே வோட் செய்து ஆதரவு செய்வார்கள் என்று எதிர்பார்க்கிறோம். பொது ஜனங்களுக்குக் காங்கிரஸ் கட்சியாரின் அழிவு வேலைத் திட்டங்கள் தெரியாததல்ல. கலகம் பண்ணிக் கொண்டு -எதைக் கொடுத்தாலும் மறுத்துத் தள்ளிக் கொண்டு - மக்களுக்கு ஒரு நன்மையும் செய்யாமல் இருக்கிற அவர்களுக்கு ஸ்தல ஸ்தாபன இலாகாக்களைக் கூட சரிவர நிர்வகிக்கத் தெரியாமல்  போனதோடு அவர்கள் நடத்தும் நிர்வாகம் மிக்க ஊழல் நிரம்பியதாயும், லஞ்சம் வழங்குதல் சர்வசாதாரணமானதாயும் தன் இனத்தையே ஆதரித்துக் கொண்டு மற்றோரைக் கைவிடும் பட்சபாதம், நிரம்பியதாயும் , ஏற்கனவே ஜஸ்டிஸ் கட்சியாரின்  கீழ் ஊழியஞ் செய்தவர்களின் பிழைப்பில் மண்ணள்ளிப் போடுவதாயும் அற்பச் செய்கைகளெல்லாம் நிறைந்ததாயும் இருக்கிறது. அவர்கள் இந்த ஸ்தலஸ்தாபனங்களைக் கைப்பற்றச் செய்த சூழ்ச்சிகளோ மகாகேவலமானவை.

காங்கிரஸ் தேர்தல் அறிக்கை

அவர்களின் தேர்தல் அறிக்கை ஒன்றுக்கொன்று பொருத்தமில்லாததாயும் அனுபவ சாத்தியமில்லாததாயும் இருக்கிறது. அவர்கள், இந்திய சட்டசபைத் தேர்தலில் வெற்றி கிடைத்தால் அரசியல் அமைக்கப் போவதாயும் வாக்களர்களிடம் சொல்லி, வோட் வாங்கியனதையெல்லாம் நினைக்கவே இல்லை.

அந்த வெற்றியினால் அவர்கள் நாட்டுக்குச் செய்த நன்மையும் ஒன்றுமே இல்லை. அவர்கள் இனி வெற்றி பெற்றாலும் நாட்டுக்கு ஏதும் நன்மை செய்யப் போவதாகக் காணோம். அவர்கள் வருகிற சீர்திருத்த அரசியலமைப்பை உடைக்கப் போவதாகத் தான் சொல்லுகிறார்கள். இப்படி உடைத்துத் தகர்க்கப் போகிறவர்கள் கராச்சி திட்டத்தை எவ்விதம் நடத்தப் போகிறார்களோ தெரியவில்லை. ஒரு திட்டபடி வேலை செய்ய வேண்டுமென்றால் பதவிகளை ஏற்று ஒழுங்காக ஊழியம் செய்தால் தானே முடியும். இந்திய நே­னல் காங்கிரஸ் தலைவரான ஜவஹர்லால் அவர்கள் காங்கிரஸ்கட்சியானது வர போகிற சீர்திருத்தத்தை உடைத்துதத்தான் எறியும் எனறு சொல்லிவிட்டார். 

காங்கிரஸ்காரர்கள் தங்களுக்குள்ளேயே ஒற்றுமையில்லாதவர்கள், ஒருவரை ஒருவர் அழுத்தப்பார்க்கிறவர்கள், இந்த நிலைமை காரணமாகத் தான் அவர்கள் பதவியேற்றல் என்ற வி­யத்தைப் பின்னால் வைத்துக் கொள்ளலாம் என்று தீர்மானித்துவிட்டார்கள். அவர்கள் இன்னது உங்களுக்குச் செய்யப் போகிறார்கள் என்று நீங்கள் ஒன்றும் தெரிந்துகொள்ளாமல் வோட்டுக் கொடுத்தல் வேண்டுமென்றும், ஆனால் அவர்கள் உங்களுக்கு ஏதும் கட்டுப்பட்டு நடக்க ஜவாப்தாரித்தனம் கொண்டில்லாமல், எங்கேயோ அவர்களுக்கு வேண்டியவர்களாக இருக்கிற யாரோ சிலருடைய கட்டளைகளின்படி நடக்க உத்தேசித்திருக்கிறார் என்றும் சொல்லுகிறார்கள். 

இது உலகத்தில் குடிஅரசு தத்துவம் உள்ள எங்காவது யாராவது சொல்லுவார்களா? என்ன விபரீதப் போக்கு! இதனால் காங்கிரஸ்காரர்கள் ஜனங்களை முட்டாள்கள் என்று கருதிவிட்டதாக ஏற்படவில்லையா? காங்கிரஸ் கட்சிக்கு எப்பொழுது ஒழுங்காக நடந்துகொள்ள வேண்டுமென்ற நோக்க மில்லையோ அப்பொழுது அவர்கள் சட்டசபைகளுக்கும் பிரவேசிக்கக்கூடாது. அவர்கள் ஒழுங்கு மீறி நடந்து இந்த கவர்ண்மெண்டை எந்த வழியில் அசைத்துவிட முடியும் என்று கேட்கிறேன்.

இவர்களுடைய ஒழுங்கு தப்பான பேச்சுவார்த்தை- கோட்பாடு-நடவடிக்கைகளினாலும் இவர்களுடைய கடன் மறுப்பு-சட்ட மறுப்பு- ஒத்துழையாமை ஆகிய தாறுமாறான செய்கைகளாலுமே பிரிட்டிஷ் சர்க்கார் இந்தியாவுக்கு வழங்குகிற சீர்திருத்தங்களில் பாதுகாப்பாக விதிகளை ஏற்படுத்தினார்கள். 

காங்கிரஸ்கார்கள் அரசியலை நடக்கவொட்டாமல் செய்ய நடவடிக்கைகள் அனுசரிக்கும்போது அந்தப் பாதுகாப்பு விதிகள் பிரயோகிக்கப்படும். கவர்னரே அந்தச் சமயத்தில் மாகாண ஆட்சியை தன் கையில் எடுத்துக் கொள்வார். ஆகவே, காங்கிரஸ்காரர் அரசாங்க வேலைகள் நடைபெற வொட்டாமல் செய்ய நடவடிக்கைகள் அனுசரிக்கும்போது அந்தப்பாதுகாப்பு விதிகள் பிரயோகிக்கப்படும். கவர்னரே அந்தச் சமயததில் மாகாண ஆட்சியை தன் கையில் எடுத்துக்கொள்வார். 

ஆகவே, காங்கிரஸ்காரர் அரசாங்க வேலைகள் நடைபெற வொட்டாமல் தடைகள் செய்வார் களேயானால், அப்பொழுது ஜனநாயக ஆட்சி என்பது ஒழிக்கப்பட்டுப் போய், யதேச்சாதிகார அதிபதிகளின் ஆட்சி ஏற்பட்டுப் போகும். நாம் மாண்டேகு செம்ஸ்போர்ட் சீர்திருத்தங்களான இரட்டையாட்சி ஏற்படுவதன் முன் நாம் எப்படியிருந்தோமோ அந்தப் பழைய நிலையை அடையும்படி ஆகிவிடும். காங்கிரஸ்காரர்களின் ஒத்துழையாமையும் சட்ட மறுப்பும் நம் நாட்டை படுத்திய பாடு கள் உங்களுக்குத் தெரியாததல்ல. அவர்களது திட்டமே அனபவ சாத்தியமில்லாதது. ஆனால் பகட்டு மிகுந்தது. 

முடிவுரை

இந்த மாகாணத்தார் எப்பொழுதும் நிதான புத்திக்கும் ராஜ தந்திர ஞானத்திற்கும் பேர்போனவர்கள். ஆகையால் நான் உங்களிடம் என்ன நிச்சயமாக எதிர்பார்க்கிறேனென்றால், நீங்கள் ஜஸ்டிஸ் கட்சி அபேட்சர்களையே சட்டசபை களுக்குத் தேர்ந்தெடுத்து அனுப்ப வேண்டும். அவர்களே சட்டசபைகளுக்குப் பெரும்பாலோராக வர வேண்டும். நீங்கள் அவ்வண்ணம் செய்தால்தான் நாங்கள் எங்களது திட்டத்தை நிறைவேற்றி வைத்து, மேன்மேலும் ஆக்க வழிகளை நாட முடியும்.

நாங்கள் உங்களை வரவேண்டுமென்று கேட்டுக் கெண்டதற்கிணங்க நீங்கள் ஏராளமாக இங்கு கூடி பொறுத்திருந்து, என் பிரசங்கத்தைச் செவி சாய்த்துக் கேட்டதற்கு நான் உங்களுக்கு வந்தனம் செய்கிறேன். என்னுடைய தேர்தல் வட்டத்து ஜனங்களாகிய உங்ளைக் கண்டு பேசுதல் எனக்கு எப்பொழுதும் மிகவும் பிரியமானவொரு காரியம். நீங்கள் இதுவரைக்கும் என்னிடம் நம்பிக்கை வைத்தது போல் இனி மேலும் நம்பிக்கை வைத்து, வோட் செய்து ஆதரித்து, நான் முக்கியமாக, இந்த ஜில்லாவுக்கும் - பொதுவாக இந்த மாகாணத்திற்கும் - ஊழியம் செய்யும்படியான சந்தர்ப்பம் தருவீர்கள் என்று ஆவலோடு எதிர்பார்க்கிறேன். உங்களுக்கெல்லாம் என் வந்தனம்.

 நான் அமரப் போகுமுன், பொப்பிலி ஜில்லா போர்டின் தலைவராகிய மிஸ்டர் செலிகண்ண ஸ்ரீ ரங்கநாயகலு அவர்களுக்கும் இந்த மீட்டிங்குக்கு ஏற்பாடு செய்த மற்ற தலைவர்களுக்கும் மிகுந்த வந்தனம் தெரிவித்துக் கொள்ளுகிறேன்.(கரகோ­ஷம்).( குடிஅரசு, 1936 நவம்பர் 8).

---------------

பொப்பிலி ராஜாவுக்கு ஜே!

இனாம் சட்டம் வைஸ்ராய் அங்கீகாரம்

கனம் பொப்பிலி ராஜா அவர்கள் முயற்சியால் சென்னை சட்டசபையில் கடந்த செப்டம்பர் மாதம் 4-ந் தேதி சட்டமாக்கப்பட்ட இனாம் மசோதாவை வைஸ்ராய அங்கீகாரம் செய்துவிட்டார் என்று கெஜட் அறிவிக்கிறது. ( குடி அரசு.1938).

Tuesday, July 5, 2022

டாக்டர் சி.நடேசனார் உரை

திராவிடர் சங்கம் தொடங்கிய டாக்டர் சி. நடேசனார், நீதிக்கட்சியின் சாதனைகளைப் பற்றி 1936 இல் ஆற்றிய அரிய உரை....

திருச்சி ஜில்லா ஜஸ்டிஸ் மகாநாடு

தலைவர் தோழர் டாக்டர் சி. நடேச முதலியார் M.L.C.. அவர்களின்  தலைமைப் பிரசங்கம்....

28.9.36 ந் தேதி திருச்சியில் நடைபெற்ற திருச்சி ஜஸ்டிஸ் மகாநாட்டுத் தலைவர் தோழர் டாக்டர் சி. நடேச முதலியார் எம்.எல்.சி. அவர்களின் தலைமைப் பிரசங்கம் வருமாறு:-

திருச்சி ‘ஜஸ்டிஸ்’ கட்சி மகாநாட்டிற்கு என்னை தலைமை வகிக்கும்படி கேட்டுக் கொண்ட வரவேற்புக் கழகத்தாருக்கு நான் மிகவும் நன்றி பாராட்டுகிறேன். 

இந்த மாகாணத்தின் வடபகுதியிலும் தென்பகுதியிலுள்ள ஜஸ்டிஸ் கட்சி தலைவர்கள் மகாநாடுகள் கூட்டி நமது கட்சியின் உயரிய லக்ஷ்யத்தை யும் நமது கட்சி சாதித்த காரியங்களையும் நமது எதிர்கால வேலைத் திட்டத்தையும் பொது ஜனங்களுக்கு விளக்கிக்காட்டி தேச மக்களின் அரசியல் அறிவை விருத்தி செய்ய முன் வந்திருப்பதைப் பார்த்து நான் பெரிதும் மகிழ்ச்சி அடைகிறேன். ஜஸ்டிஸ் கட்சி நமது மாகாணத்தில் மட்டுமல்ல. இந்தியா முழுமையிலுமே ஒரு விசே­ நிலைமையில் இருந்து வருகிறது. அது மிகவும் அருமையான பல காரியங்களையும் சாதித்திருக் கின்றது.


ஐஸ்டிஸ் கட்சி தோற்றம்


எல்லா ஜில்லாக்களிலுமுள்ள சர்க்கார் காரியாலயங்களிலும் வந்த சமூகமும் உத்தியோகங்களை ஏகபோக உரிமையாய் வகிக்கக் கூடா தென்பது 1810-லே ரெவினியூ போர்டார் உத்தரவு பிறப்பித்திருந்தார்கள். அந்த உத்தரவு அலட்சியம் செய்யப்பட்டது. சர்க்கார் காரியாலயங்களிலும் ஸ்தல ஸ்தாபனங்களிலும் தமது பங்குக்குரிய ஸ்தாபனங்களிலும் தமது பங்குக்குரிய ஸ்தாபனங்கள் அளிக்கப்படவில்லையயன்று மாகாண முழுவதும் பல சமூகத்தாரும் குறை கூறிக்கொண்டிருந்தனர். ‘ஹோம் ரூல்’ கிளர்ச்சிக்காலத்து இந்த அதிருப்பதி மிகவும் உச்சஸ்தானத்தை அடைந்தது. தாம் எந்நாளும் அடிமைப்படுத்தி  வைக்கப்படுவதாகப் பாமர ஜனங்கள் உணர்ந்தனர். இருப்பதா, இறப்பதா, சுயமரியாதையைக் காப்பாற்றத் திரண்டெழுவதா அல்லது எந்நாளும் அடிமையாக வாழ்வதா என்ற பிரச்சனையை பாமர ஜனங்கள் முடிவு செய்ய வேண்டிய நிலைமையும் ஏற்பட்டது. எனவே சில இளைஞர்கள் தைரியமாக முன்வந்து பலதிறப்பட்ட சமூகங்களின் உரிமைகளையும் தேச மகாஜனங்களுக்கும் சர்க்காருக்கும் எடுத்துக்காட்ட முயன்றனர். இந்தியாவுக்கு சுய ஆட்சியோ அல்லது வேறு எத்தகைய ஆட்சியோ கொடுக்கப்பட்டால் ஒவ்வொரு சமூகத்துக்கும் அதில் பங்கு கிடைக்க வேண்டுமென்று அவர்கள் உரிமை பாராட்டினார்கள்.


அவர்களின் ஸ்தாபனமான சென்னை திராவிட சங்கம் அந்தக் காலத் துக்கு சர்க்காருக்கும் பாமர ஜனங்களுக்கும் இடையினின்று பாமர ஜனங்களின் உரிமைகளையும் குறைபாடுகளையும் சர்க்காருக்கு உணர்த்தி ஒவ்வொரு சமூகத்தினுடைய உரிமையையும் விளக்கிக்காட்டி பாமர மக்களைத் தட்டி எழுப்பிற்று. 

கலாசாலைப் பட்டம் பெற்றவர்களுக்கு வாழ்த்துக் கூறும் பொருட்டு 1915 ல் கூடிய திராவிட சங்கக் கூட்டத்தில் தோழர் ஸி. கிருஷ்ணன் தலைமை வகித்தார். டாக்டர் நாயர் பட்டாதாரிகளுக்கு பிரசங்கம் செய்தார். இதுவரை பரம சத்துருக்களாயிருந்த டாக்டர் நாயரும், ஸர். தியாக ராய செட்டியாரும் அந்தக் கூட்டத்தில்தான் சந்தித்து நண்பர்களானார்கள். 

கோகலே மண்டபத்தில் கூடிய திராவிட சங்கக் கூட்டம் ஒன்றில் இப்பொழுது கொச்சி திவானாக இருக்கும் ஸர்.­ண்முகம் செட்டியார் ‘இந்த திராவிட சங்கமே பிற்காலத்து‘ ஜஸ்டிஸ் கட்சி’யாக மாறியது’ என்று பேசியுள்ளார்.

ஜஸ்டிஸ் கட்சி தோன்றுமுன் திராவிட சங்கம் செய்த வேலைகள்

அநேகமாக சர்க்கார் காரியாலங்களில் எல்லா உத்தியோகங்களுக்கும் முக்கியம் மதராஸ் போர்டு ஆபீஸ் உத்தியேகங்களுக்கு பி.எ. பட்டாதாரிகளே நியமிக்கப்பட்டு வந்தார்கள். ‘ஸ்பெ­ல் டெஸ்டு’ பரீட்சைக்குப் பட்டாதாரிகளே அனுமதிக்கப்பட்டார்கள்.

‘ஸ்பெ­ல் டெஸ்டு’ பரீட்சையில் தேர்ச்சியடையாத பட்டாதாரிகளுக்கு 40 ரூபாய்க்கு மேல் சம்மபளமுள்ள உத்தியோகங்கள் பெற முடியாமலிருந்தது. சர்க்கார் காரியாலயங்களில்முக்கியமாக போர்டு ஆபீஸில் மிகச் சொற்ப பார்ப்பனரல்லாதாரே 40 ரூபாய்க்கு மேற்பட்ட சம்பளம் பெற்றுவந்தார்கள். திராவிட சங்கம் செய்துவந்த கிளர்ச்சியினால், குறைந்த பட்சம் எஸ்.எஸ்.எல்.ஸி. பரீட்சை தேறியவர்களுக்கும் போர்டு ஆபீஸில் உத்தியோகம் பெற முடிந்தது. பி.ஏ.பட்டம் பெறாதவர்களும் ஸ்பெ­ல் டெல்லி பரீட்சைக்கு அனுமதிக்கப்பட்டார்கள். 40 ரூபாய் சம்பளத்துக்கு மேல் பெற முடியாதிருந்த எத்தனையோ பேர் அதிகப்படியான சம்பளம் பெற்றார்கள். பலர் சப் மாஜிஸ்டிரேட் போன்ற உயர்ந்த உத்தியோ கங்களும் பெற்றார்கள். இரண்டு டிப்டி கலெக்டர்களுக்குப் பதிலாக 12 டிப்டி தாசில்தார்கள் எடுத்தார்கள். 

கலெக்டரால் அந்த உத்தியோகங்கள் பல சமூகங்களுக்கு வீதாசாரப்படி வழங்கப்பட்டன.

 பார்ப்பனருக்கும் பார்ப்பன ரல்லாதாருக்கும் நிர்வாகசபை மெம்பர் பதவி முறைப்படி கொடுக்கப்பட்ட தினால் ஒரு முஸ்லீமுக்கோ இந்திய கிறிஸ்தவருக்கோ ஒரு நிருவாக சபை மெம்பர் பதவியளிக்க வேண்டுமென்று திராவிட சங்கத்தார் கிளர்ச்சி செய்தனர். பிற்காலத்து ஒரு முஸ்லீம் சபையின் நிர்வாக சபை மெம்பரானார்.

இந்த சங்கத்தின் முயற்சியினால் ஒரு ஹாஸ்டல் ஸ்தாபிக்கப்பட்டது. சஞ்சம் முதல் கன்னியாகுமரி வரை மாகாணத்துள் பல பாகங்களிலுமிருந்து வந்த 40 மாணவர்கள் ஜாதி மத வித்தியாசம் பாராட்டாமல் அந்த ஹாஸ்டலில் வசித்து வந்தார்கள். அந்த ஹாஸ்டலில் தங்கியிருந்த சில மாணவர்களில் சிலர் பெயரை இங்கு குறிப்பிட விரும்புகிறேன். ஒருவர் பட்நாய்க்கு. அவர் அப்பொழுது சட்ட மாணவராக இருந்தார்; இப்பொழுது வக்கீலாக இருக்கிறார். இனாம்தார் மசோதாவுக்காக நிபுண மெம்பராக நியமிக்கப்பட்டிருந்த பட்நாய்க்கின் சகோதரரே அவர். மற்றவர்கள் இப்பொழுது திருச்சி பப்ளிக் பிராசிக்யூட்டராயிருப்பவரும் மாஜி சட்டசபை மெம்பரும் ஜில்லா போர்டு தலைவருமான தோழர் டி.எம். நாராயாணசாமிப் பிள்ளை, டிஸ்டிரிக்ட்டு முன்சீப்பாயிருக்கிற சுப்பிரமணியமும்.

ஜஸ்டிஸ் கட்சி சாதித்த காரியங்கள்

இவ்வண்ணம் ‘ஜஸ்டிஸ்’ இயக்கம் தோற்றுவிக்கப்பட்டது. ஸர். தியாகராய செட்டியார் ஒரு அறிக்கை வெளியிட்டார். ஒரு ஆங்கில தினசரியும் ஆரம்பிக் கப்பட்டது. அந்த தினசரிக்கு டாக்டர் நாயர் ‘ஜஸ்டிஸ்’ எனப் பெயர் சூட்டினார். ஸர். தியாகராய செட்டியாரும் டாக்டர் நாயரும் தலைவர்களால் தேர்ந்தெடுக் கப்பட்டார்கள். காலஞ்சென்ற பனகால் ராஜா தென்னிந்திய ஜன சங்கத்தின் தலைவராக இருந்தார்.


சென்னையிலும் வெளி ஜில்லாக்களிலுமுள்ள சில பார்ப்பனரல்லாதார் சேர்ந்து சென்னை மாகாணச் சங்கம் என்னும் பெயரால் ஒரு போட்டிச் சங்கம் ஸ்தாபிக்கவும் டாக்டர் நாயரும் ஸர். தியாகராய செட்டி யாரும் தாம் தலைவர்கள் அல்லவென்றும் ‘ஜஸ்டிஸ்’ பத்திரிகை  பிராமண ரல்லாதாரின் பொதுப்பத்திரிகை அல்லவென்றும் கூற முயன்றார்கள். அவர்கள் முதல் கூட்டத்தை கோகலே மண்டபத்தில் கூட்டவும் ஏற்பாடு செய்யப்பட்டது. ஆனால் நகரத்திலுள்ள இளைஞர்களும் சில தலைவர்களும் சும்மா இருக்கவில்லை. சென்னை மாகாணச் சங்கத்தின் முதல் கூட்டம் குழப்பத்தில் முடிந்தது. அந்தச் சங்கமும் கருவிலேயே அழிந்தது. ஜஸ்டிஸ் கட்சித் தலைவர் ஒருவர் அக்கூட்டத்திலிருந்து வெளிவந்த போது பொது ஜனங்கள் சுமார் 5000 பேர் பேரானந்தமடைந்து ‘ஜஸ்டிஸ் கட்சிக்கு ஜே’ என்று ஆரவாரம் செய்தார்கள். இது சென்னை நகர இளைஞர்களும் திராவிட சங்க ஹாஸ்டல் மாணவர்களும் சாதித்த காரியமாகும். 

சென்னை இளைஞர் கள் சுமார் 3000 பேர் தொடர்ச்சியாக கிளர்ச்சி செய்து கொண்டே இருந்தார் கள். ஜஸ்டிஸ் கட்சியார் மந்திரி சபை அமைக்கும்வரை அந்தக் கிளர்ச்சி நடைபெற்றுக் கொண்டே இருந்தது.


ஒடுக்கப்பட்ட சமூகங்களுக்காக ஜஸ்டிஸ் கட்சியார் செய்த ஆக்க வேலைகள்


ஜஸ்டிஸ் கட்சி அதிகார பதவி வகிக்க சேர்ந்த போது சகல சமூகங்களின் முன்னேற்றத்துக்காக தன் சக்தி முழுமையையும் பிரயோகம் செய்தது. ஸ்தலஸ்தா பனங்களிலும் மற்றும் பொது ஸ்தாபனங்களிலும் அதுவரை பிரதிநிதித்துவம் பெறாமலிருந்த சமூகங்களுக்கெல்லாம் ஜாதி வித்தியாசம் பாராட்டாமல் ஜஸ்டிஸ் கட்சி பிரதிநிதித்துவம் அளித்தது. ஸ்தல ஸ்தாபனங்களிலும் சட்ட சபைகளிலும்  மற்றும் பொது ஸ்தாபனங்களிலும் ஒரு ஜாதி இந்துவின் பக்கத்தில் உட்கார்ந்தறியாத ஒடுக்கப்பட்ட சமூக அங்கத்தினரும் ஜாதி ஹிந்துப் பிரதிநிதிகள் பக்கத்தில் உட்காரும்படி உரிமையும் பெற்றார்கள். தீண்டாமையும் ஓரளவு ஒழிக்கப்பட்டது.

 இவ்வண்ணம் சமூகத்தில் கத்தியின்றி இரத்தமின்றி ஒரு புரட்சி செய்யப்பெற்று வெற்றியும் அடைந்தது. 

சீர்திருத்தம் வருவதற்கு முன்னமேயே, ஜஸ்டிஸ் கட்சியார் கிளர்ச்சியின் பயனாக ஒடுக்கப் பட்ட சமூகத்தைச் சேர்ந்த ஒருவர் சட்டசபை மெம்பரானார். மற்றொருவர் சைமன் செண்டிரல் கமிட்டி மெம்பரானார். வேறொரு ஆதி திராவிட கனவான் லண்டன் வட்டமேஜை மாநாட்டுக்குப் பிரதிநிதியாக அனுப்பப்பட்டார். சொற்ப தினங்களுக்கு முன் ஒரு ஆதிதிராவிட கனவான் திவான் பகதூரானார்.  இந்தியா முழுமையிலும் ஒடுக்கப்பட்டவர்களில் அவர் ஒருவரே திவான் பகதூர் பட்டம் பெற்றவர்.

கனவான்களே! ஜஸ்டிஸ் கட்சி தோன்றுமுன் ஒடுக்கப்பட்ட சமூகம் இருந்த நிலைமையைச் சிந்தித்துப் பாருங்கள். இவையயல்லாவற்றிற்கும் மேலாக, சில வரு­ங்களுக்கு முன்னே ஒரு ஹிந்துவின வீட்டுக்கு பத்தடி தூரம்வரை பிரவேசிக்க முடியாத ஆதிதிராவிட கனவானும் அவரது மனைவியாரும் சக்கரவர்த்தியாலும் சக்கரவர்த்தினியாராலும் பக்கிங்காம் அரண்மனையில் வரவேற்று உபசரிக்கப் பட்டார்கள்.    

ஆதிதிராவிடர்களின் க்ஷேம லாபங்களை கவனிக்கும் பொருட்டு ஒரு லேபர் கமி­னர் நியமிக்கப்பட்டார். 

பொதுக் கிணறுகளிலும் ரஸ்தாக்களிலும் பொது வீதிகளிலும் ஒடுக்கப்பட்டோர் அனுமதிக்கப்பட்டார்கள். லேபர் ஸ்கூல்களும்  ஹாஸ்டல்களும் ஸ்தாபிக்கப்பட்டன. ஒரு சர்க்கார் உத்தர வினால் மாகாணக் கல்லூரி, வைத்தியக்கல்லூரி போன்ற  கல்லூரிகளிலும் பள்ளிக்கூடங்களிலும் ஒடுக்கப்பட்டவர்களுக்கு ஸ்தானங்கள் ஒதுக்கி வைக்கப்பட்டன. ஒடுக்கப்பட்ட மாணவர்களுக்கு சர்க்கார் உத்தியோகங்களும் கொடுக்கப்பட்டன. உபகாரச் சம்பளங்களும் அளிக்கப்பட்டன. நிலங்களும் அவர்களுக்குப் பதிவு செய்து கொடுக்கப்பட்டன. 

அவர்களுக்கு வீடுகட்ட ஸ்தலங்களும் வாங்கப்பட்டன.

ஹிந்து அரசர்கள் காலத்தில் ராமானுஜர் போன்ற சமயாச்சாரியர் களினால் சாதிக்க முடியாத காரியங்களை பிரிட்டிஷ் சர்க்கார் காலத்தில் ஜஸ்டிஸ் கட்சியார் சாதித்திருக்கிறார்கள்.

கிறித்துவர்களுக்கு ஜஸ்டிஸ் கட்சியார் செய்த நன்மைகள்

கிறித்துவர்கள் லா காலேஜ் பிரின்ஸிப்பாலாக நியமனம் செய்யப்பட்டதற் கும் சட்டசபை  தலைவராக நியமிக்கப்பட்டதற்கும் பப்ளிக் சர்விஸ் மெம்பராக நியமிக்கப்பட்டதற்கும் ஜஸ்டிஸ் கட்சியே காரணம். ஹைக்கோர்ட் ஜட்ஜு களாகவும் ஹோம் மெம்பராகவும் நியமிக்கப்பட்டதற்கும் ஜஸ்டிஸ்கட்சியாரே நேர்முகமாகவும் மறைமுகமாகவும் காரணஸ்தராயிருந்திருக்கிறார்கள். இன்னும் இங்கு விளக்கிக் கூற முடியாத எவ்வளவோ இருக்கின்றன.

முஸ்லீம்களுக்காக ஜஸ்டிஸ் கட்சியார் செய்த ஆக்க வேலைகள்

முஸ்லீம்களுக்கு ஒரு தனி கலாசாலை ஸ்தாபிக்கப்பட்டதற்கும் ஜஸ்டிஸ் கட்சியாரே காரணம். 

ஒரு முஸ்லீம் கார்ப்பரே­ன் கமி­னராக நியமிக்கப் பட்டதற்கும், ஒருவர் பப்ளிக் சர்விஸ் கமி­ன் மெம்பராக நியமிக்கப்பட்ட தற்கும், ஒருவர் சென்னை மேயராக நியமிக்கப்பட்டதற்கும் ஒருவர் ஹோம் மெம்பராகவும் ஆக்டிவ் கவர்னராகவும் நியமிக்கப்பட்டதற்கும் ஜஸ்டிஸ் கட்சியாரே காரணம். அவர்கள் இன்னும் எவ்வளவோ செய்திருக்கிறார்கள். அவைகளை இங்கு விளக்கிக் கூறுவது சாத்தியமல்ல. ஜஸ்டிஸ் கட்சியாரின் நன்முயற்சியின் பயனாக தென்னாட்டில் ஹிந்து முஸ்லிம் பிணக்குமில்லை. இந்த மகாணத்தில் ஹிந்துக்களும் முஸ்லீம்களும் எப்பொழுதும் வெகு ஜாக்கிரதையாகவே இருந்து வருகிறார்கள். நாங்கள் முஸ்லீம்களை சகோதர்களாக மதித்து அவர்களது உரிமைகளுக்காகப் போராடி வருகிறோம். (குடிஅரசு, 1936, அக்டோபர் 11) 

ஆங்கிலோ இந்தியர் சென்னை கார்ப்பரே­ன் கமி­னராகவும், ரெஜிஸ்ட் ரே­ன் இன்ஸ்பெக்டர் ஜெனரலாகவும் மற்றும் பல பெரிய உத்தியோகஸ்தர் களாகவும் நியமிக்கப்பட்டதற்கும் ஜஸ்டிஸ் கட்சியாரே காரணம். சர்க்கார் சர்வீஸில் ஆங்கிலோ இந்தியர்களுக்கு விசே­ சலுகை காட்டவேண்டு மென்று வட்டமேஜை மகாநாட்டில் அவர்கள் பிரதிநிதி ஸர் யஹன்ரி கிட்னியு டன் சேர்ந்து கொண்டு வற்புறுத்தியதும் ஜஸ்டிஸ் கட்சிப் பிரதிநிதியேயாகும்.

சமூக வாழ்வில் பின்னணியில் நிற்கும் வகுப்புகளையும் ஜஸ்டிஸ் கட்சி யார் அலக்ஷ்யம் செய்யவில்லை. 

அவர்களுடைய பிரதிநிதிகள் ஸ்தல ஸ்தாபனங்களிலும் சட்டசபையிலும் நியமனம் செய்யப்பட்டார்கள். பள்ளிக் கூடங்களிலும் கலாசாலைகளிலும் அவர்களுக்குப் பிரத்தியேக ஸ்தானங்கள் ஒதுக்கி வைக்கப்பட்டன. 

பின்னணியில் நிற்கும் சமூகத்தைச் சேர்ந்த மாணவர்களுக்கெல்லாம், பாதி பீஸ் சலுகை காட்டப்பட்டிருக்கிறது. இவ் வண்ணம் மகாணத்திலுள்ள சகல பெரிய சிறிய சமூகங்களுக்கும் பிராமணர் களும் பிராமணரல்லாதாருக்கும் ஒடுக்கப்பட்டவர்களுக்கும் தாழ்த்தப்பட்டவர் களுக்கும் பின்னணியில் நிற்பவர்களுக்கும் முன்னணியில் நிற்பவர்களுக் கும் முஸ்லீம்கள், கிறிஸ்தவர்கள் ஆங்கிலோ இந்தியர்கள், இந்தியப் பிரஜை களான ஐரோப்பியர்கள் ஆகிய சமஸ்த சமூகங்களுக்கும் ஐஸ்டிஸ் கட்சி தயங்காமல் உதவி புரிந்து வந்திருக்கிறது.

பிரிட்டிஷ் அரசாட்சியில், நீதி மன்றங்களிலும் மற்றய உயர் பதவிகளிலும்  மற்றைய உயர் பதவிகளிலும் வீற்றிருந்து, அரும்பணியாற்றக்கூடிய மணி கள் எல்லாச் சமூகங்களிலும் இருக்கின்றன என்பதை உலகிற்கு எடுத்துக் காட்டியது ஜஸ்டிஸ் கட்சியேயாகும். அது இல்லாமற் போயிருப்பின் அம்மணி கள் மங்கி மாசு படிந்து மறைந்தேயன்றோ போயிருக்கும்?

நகரங்களிலும் கிராமாந்தாங்களிலும் உள்ள கீழ்த்தர மத்திய வகுப்பு களுக்கும் அவைகளில் க்ஷேம லாபங்களுக்கான காரியங்களை ஜஸ்டிஸ் கட்சி தாரமாகச் செய்து வருகிறது. பிரசவத்துக்கு முன் தாய்மாரைப் பராமரித்து சிசு மரணத்தைக் குறைக்கும் பொருட்டு சிகிச்சைச் சாலைகள் ஸ்தாபிக்கப் பட்டிருக்கின்றன. தாய்ப் பாலில்லாக் குழந்தைகளுக்கு இலவசமாக பால் கொடுக்கப்பட்டு வருகிறது. 

குழந்தைகள் ஒரு வயது அடையும் வரை சிசுப் பாதுகாப்புச சங்கத்தார் கவனித்து வருகிறார்கள். 5 வயது வரையுள்ள குழந்தைகள் பிரத்தியேகமாக கவனிக்கப்பட்டு வருகிறார்கள். 

சில குறிப்பிட்ட இடங்களில் 6 வயது முதல் 11 வயது வரை குழந்தைகளுக்கு இலவச ஆரம்பக் கல்வி புகட்டப்பட்டு வருகிறது. அந்தப் பள்ளிக்கூடங்களில் வைத்திய பரிசோதனையும் நடத்தப்பட்டு வருகிறது. சில பள்ளிக் கூடங்களில் குழந்தை களுக்கு மத்தியானச் சாப்பாடு கொடுக்கப்பட்டு வருகிறது. 

பின்னணியில் நிற்கும் சமூகங்களிலுள்ள பிள்ளைகளுக்கும் எல்லா பள்ளிக்கூடங் களிலும் கலாசாலைகளிலும் பாதிப் பீஸ் சலுகை காட்டப்பட்டு வருகிறது. இவ் வண்ணம் கர்ப்பத்திலிருக்கும் குழந்தைகள் முதல் பக்குவ வயதடைந்த பிறகு ஜஸ்டிஸ் கட்சியின் திட்டத்தினால் பல ஜாதியார்கள் கவர்மெண்ட் உத்தியோக முறை யில் பிரதிநிதித்துவமடைய உரிமை உண்டாயிற்று.

தொழிலாளர்களுக்கு சம்பள உயர்வு, வேலை நேரக் குறைப்பு, விடுதி வசதியாரையும் வேண்டுமென ஜஸ்டிஸ்கட்சியே கிளர்ச்சி செய்து வந்தது. ஜஸ்டிஸ் கட்சியின் உதய காலத்திற்கு முன்பே, காலஞ்சென்ற நமதியக்கத் தலைவர் டாக்டர் நாயர், தொழிலாளர் சுதந்திரத்திற்காகப் பாடுபட்டு வந்தார்.

சிவில் மெடிக்கல் உத்தியோகங்களை மாகாணச் சர்க்கார் அதிகாரத்திற் குள்ளாகவும் இந்தியமயமாக்கவும் ஜஸ்டிஸ் கட்சியார் சாத்தியமான ஏற்பாடு கள் எல்லாம் செய்திருக்கிறார்கள். அம்மாதிரி ஏற்பாடுகள் பிரிட்டிஷ் நிர்வாகத்தில் இதுவரை செய்யப்பட்டதே இல்லை. 

நகரத்திலுள்ள வாடகைக் குடியிருப்போர் ரயத்துக்கள் முதலியவர்கள் பாதுகாப்புக்காக நகர டெனண்டு பாதுகாப்புச் சட்டம் இயற்றப்பட்டது. மற்ற வெளி ஜில்லாக்களிலுள்ளவர்களுக்கு மலையாள குடி சட்ட எஸ்டேட் லேண்ட்ஸ் சட்டம் அமெண்ட்மெண்ட்ஸ் இனாம் பில்லும் நிறைவேற்றியிருக் கிறார்கள். தேவையான உதவியளிப்பதற்காக நில அடமானச் சட்டம், கூட்டுறவுச் சங்க சட்டம், விவசாயக் கடன் சட்டம், தற்கால கடன்களுக்காக ஏற்பட்ட கொடூரமான தீர்மானங்களை ஒழிக்க ஏற்பாடுகள் முதலியவை இயற்றப்பட்டன.

ஐஸ்டிஸ் இயக்கம் ஆரம்பமானது முதற்கொண்டு கிராமப்புனருத்தா ரணம் அவ்வியக்கத்தின் முக்கிய நோக்கமாக இருந்து வருகிறது. அதற்காக ஒரு திட்டமும் போடப்பட்டிருந்தது. நில அடமான பாங்கிகள் ஏற்படுத்தியும், கூட்டுறவு ஐக்கிய நாணயச் சங்கங்கள் ஸ்தாபித்தும், விவசாயிகளுக்குக் கடன் உதவியும் விவசாயிகள் கடன் பளுவைக் குறைக்கச் சட்டங்கள் செய்தும், விளை பொருட்களை விற்பனை செய்ய வசதிகள் அளித்தும் கால் நடைகளை வளர்க்க புதுமுறைகளை போதனை செய்தும் குடிசை கைத் தொழில் விருத்தி செய்தும் ஜல சப்ளை, சுகாதாரம் முதலியவை சீர்படுத்தியும் ஆரம்பக் கல்வியை வளர்த்தும் கிராமவாசிகளுக்காக ஜஸ்டிஸ் கட்சியார் எவ்வளவோ நன்மை செய்திருக்கிறார்கள்.

இவ்வண்ணம் தாங்கள் செய்துள்ள வேலைகளினால் கிராமவாசிகளுக் கிடையில் ஒரு நல்லுணர்ச்சியை உண்டு பண்ணியிருக்கிறார்.

ஆங்கில வைத்தியம் சென்னை மாகாணத்தில் அமலில் வந்த போது தேச மக்களில் 100 க்கு 90 பேர் நாட்டு வைத்தியத்தைக் கையாண்டும் சர்க்கார் நாட்டு வைத்தியத்தை அலக்ஷ்யம் செய்து வருவதாக ஒரு குறை கூறப்பட்டு வந்தது. மெடிகல் காலேஜில் நாட்டு வைத்தியப் பயிற்சிக்கு ஒரு ஏற்பாடு செய்யவேண்டுமென்று ஒரு சிபார்சு செய்யப்பட்டது. 

அது பலிக்காததினால் நாட்டு வைத்தியத்துக்கென ஒரு தனிக் கல்லூரி ஏற்படுத்தப்பட்டது. அங்கு சித்த வைத்தியம், ஆயுர்வேத வைத்தியம், யூனானி வைத்தியம் முதலிய 3 வித வைத்தியமும் கற்பிக்கப்படுகின்றன. அங்கு பயிற்சி பெறுகிறவர்கள் சர்க்கார் பரீட்சையில் தேறி டிப்ளோமாவை பெற்றவர்களுக்கு ரிஜிஸ்டர் செய்ய ஏற்பாடுகளும் செய்திருக்கிறார்கள். தற்கால வைத்தியர்களிலும் கிராமவாசி களின் தேவையைப் பூர்த்தி செய்ய முடியாதென்று கண்டவுடனே கிராம வைத்தியர்கள் ஏற்படுத்தப்பட்டார்கள். உத்தியோகத்திலுள்ள வைத்தியர் களின் சம்பளங்களை உயர்த்தினார்கள்.

தர்ம மத ஸ்தாபனங்களை சர்க்கார் மேற்பார்வையில் கொண்டுவர வேண்டுமென்று ஒரு நூற்றாண்டு காலம் நடந்து வந்த கிளர்ச்சியின் பயனாய் அறநிலையப் பாதுகாப்புச் சட்டம் இயற்றப்பட்டது.

மாகாண சட்டசபைகளிலே, மாதருக்கு ஜஸ்டிஸ் கட்சி ஓட்டுரிமை வழங்கிற்று. பிறப்பாலோ, பழைய கொள்கையின் படியோ, மனிதருக்குள்ளே வித்தியாசங் கூடாதென்றே ஜஸ்டிஸ் கட்சி கருதி வருகிறது. ஜஸ்டிஸ் கட்சி கடந்த 20 ஆண்டுகளாகச் செய்து வந்த மாபெருஞ் சேவையின் பயனாகவே இப்போது தாழ்த்தப்பட்ட சமூகத்தாரிடையும்.

முன்னேற்றமடையாத வகுப்பாரிடையும் சுயமரியாதை உணர்ச்சி ஏற்பட்டிருக்கிறது.

ஜனங்களுக்கு நன்மையளிக்கக் கூடிய எந்தச் செயலையும் செய்ய ஜஸ்டிஸ் கட்சியார் இதுவரை தவறியதே இல்லை. ஆகவே இந்தியாவிலேயே ஜஸ்டிஸ் கட்சி ஒரு முக்கியமான ஸ்தானம் வகித்து வருகிறது.

எமது சேவையின் அளவையோ, மதிப்பையோ அளக்க ஆரம்பிப்போர், நாங்கள் எமது சேவைகளை அரசியல் அமைப்பின்படி ஏற்பட்டுள்ள எத்தனைவித சிக்கலுக் கிடையே செய்துவர நேரிட்டது. எத்தனை தடைகள் இருந்தன என்பதை மனதில் இருத்த வேண்டும். வேறுகட்சி ஒன்றும் இதை விட அதிகமாகச் செய்திருக்க முடியாதென நான் தீரமாகச் சொல்லுவேன்.

பல பெரிய பிரமுகர்கள் ஜஸ்டிஸ் கட்சிக்குள் நிர்வாகத்திறனைப் பற்றியும், சட்ட ரீதியான வேலை செய்ய அதற்குள்ள ஆர்வத்தைப் பற்றியும் புகழுரை தந்துள்ளனர். சுயாட்சிக்குச் சென்னை சிறப்பாகத் தகுதியுடையது எனக் கூறப்படுகிறது. இந்த உன்னத நிலைமைக்குக் காரணம் ஜஸ்டிஸ் கட்சியே யாகும். ஜஸ்டிஸ் தலைவர்கள் விடாப்பிடியாக, சுயாட்சிக்காகவே பாடுபட்டு வந்துள்ளனர்.

நமது தலைவர்

நமது தலைவர் ஒரு அதி அற்புதமான கனவான். அவர் ஜனநாயக லட்சியத்தில் மூழ்கிய ஒரு ஜமீந்தார். 

தலைவராக இருக்க வேண்டியவர்கள் மூன்று ‘C’கள் அதாவது (Capital) பணம், (Capacity) திராணி, (Character) ஒழுக்கம் உடையவர்களாயிருக்க வேண்டுமென்று ஸர். முகமது உஸ்மான் கூறுவதுண்டு. 

எனது அபிப்ராயத்தில் அவற்றுள் மிகவும் முக்கியமானது ஒழுக்கம்; இராண்டாவது திராணி, அந்த மூன்று அம்சங்களும் நமது தலைவரிடத்தில் ஏராளமாக அமைந்திருக்கின்றன.

 ஜமீன் நிலச் சட்டத்தினா லும் இனாம் சட்டத்தினாலும் அவர் தமது வருமானத்தில் பெரும் பகுதியை இழந்தார். 5 லக்ஷம் விவசாயிகள் விடுதலை பெற்றார்கள். ‘பொப்பிலி ராஜா இல்லையானால் ஜமீன் குடிகளுக்கும் இனாம் குடிகளுக்கும் விடுதலை யில்லை’ என்று கூடச் சொல்லலாம். அந்த இரண்டு சட்டங்களையும் அவர் நிறைவேற்றி வைத்ததினால் சட்டசபையிலுள்ள எல்லாக் கட்சியாருடைய பாராட்டையும் பெற்றார். அவரது அதிகாரத்திலுள்ள துறைகளைப் பற்றி அவருக்குப் பரிபூரண ஞானமுண்டு.

 நெருக்கடியான விவாத காலங்களில் அஞ்சாமல் விடையளிப்பார். அவர் கொண்டுவந்த மசோதாக்களை யயல்லாம் வெகு சாமர்த்தியமாக நிறைவேற்றி வைத்திருக்கிறார். 

சட்டசபை யிலும் வெளியிலும் அவர் நிகழ்த்திய பிரசங்கங்கள் அவரது அபார ஞானத்தை விளக்கக் கூடியவைகளாக இருக்கின்றன. நெருக்கடியான ஒரு காலத்து அவர் நமது தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டது ஜஸ்டிஸ் கட்சியின் அதிர்ஷ்டமே. பொப்லி இல்லாவிட்டால் ஜஸ்டிஸ் கட்சியே இல்லை என்று கூட எனக்குச் சொல்லத் தோன்றுகிறது. ஜஸ்டிஸ் கட்சிக்காக அவர் செய்துள்ள, செய்கின்ற உதவிகளுக்காக நான் மிகவும் நன்றி பாராட்டுகிறேன்.

நமது கட்சிப் பத்திரிகை

ஜஸ்டிஸ் நமது கட்சிப் பத்திரிகை. சென்ற 20 வரு­ காலமாக அது நமது உரிமைகளுக்காகப் போராடி வருகிறது. இந்த மகாணத்திலுள்ள லக்ஷக் கணக்கான மனிதர்கள் குடிகளின் உரிமைகளை அது விளக்கிக் காட்டி வருகிறது. கட்சியும் கட்சி பத்திரிகையும் பல லக்ஷக்கணக்கான மக்களுக்கும் பலன் தந்து வருகிறது. மாகாண மக்களில் 100 க்கு 90 பேரும் எழுதப் படிக்கத் தெரிந்தவராக இருக்கும் பக்ஷத்தில் இதுவே மாகாணத்தில் தலைசிறந்த பத்திரிகையாக இருந்திருக்கும். எல்லா சமூகங்களின் உரிமைகளுக்காகப் பாடுபடும் அப்பத்திரிகையை ஆதரிக்க வேண்டியது ஒவ்வொரு சமூகத்தினு டைய கடமையாகும். குறைந்த பக்ஷம் 50,000 பிரதியாவது செலவாகும் படி செய்ய வேண்டும், ‘ஜஸ்டிஸ்’ பத்திரிகையோ, ‘விடுதலை’ பத்திரிகையோ ஏதாவது ஒன்று ஒவ்வொரு கிராமவாசி கையிலும் இருக்கும்படி செய்ய வேண்டும். தம் கையில் ஜஸ்டிஸ் பத்திரிகையை வைத்துக் கொண்டிருப்பதை ஒவ்வொருவரும் ஒரு பெருமையாக மதிக்க வேண்டும். ஏனெனில் அது பாமர மக்களின் குறைகளை எடுத்துக் கூறுகிறது. ஒரு பொழுதும் பொய் பேசுவ தில்லை. ஜஸ்டிஸ் கட்சியாலும் பத்திரிகையாலும் பலனடைந்தவர்கள் லக்ஷக்கணக்கானவர்கள் இருக்கிறார்கள். 

நன்றியறிதலைக் கருதியாவது அவர்கள் ஒவ்வொருவரும் ஜஸ்டிஸ் பத்திரிகையை ஆதரிக்க வேண்டும்.

இப்பொழுது கட்சியை முனனேற்றமடைய அதிக பாடுபடுபவரும் ஜஸ்டிஸ் பத்திரிகையையயாரு திறமையாக நடத்தி வருபவருமான தோழர் டி.எ.வி. நாதனுக்கு நாம் நன்றி செலுத்தக் கடமைப்பட்டிருக்கிறோம். (குடிஅரசு, 1936, அக்டோபர் 18).

#கந்தசாமி விநாயகம்