Saturday, September 25, 2021

புதுச்சேரியில் பெரியார் திராவிடர் விடுதலைக் கழகம் 15 ஆம் தொடக்கவிழா - கவி உரை

 24.9.2021அன்று புதுச்சேரியில் பெரியார் திராவிடர் விடுதலைக் கழகம் 15 ஆம் தொடக்கவிழா நடைபெற்றது. அதில் நான் ஆற்றிய உரையின் எழுத்து வடிவம்.... 


பெரியார் திராவிடர் விடுதலைக் கழகத்தின் 15 ஆம் தொடக்க விழா மற்றும் திராவிடர்இயக்கக் கண்காட்சியை தொடங்கி வைக்க வாய்பளித்த கோகுல் அவர்களே!

அலைகள் இயக்கத்தின் நிறுவனத் தலைவர் வீர.பாரதி அவர்களே!

தோழர்களே வணக்கம்.

கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக தோழர் கோகுல்காந்தி நாத் அவர்களுடன் நட்பை பேணி வருகின்றேன். 

1999 ஆம் ஆண்டு ‘குமுதம்’ இதழ் புதுச்சேரி மலர் ஒன்று வெளியிட்டிருந்தது. 

அதில் கோகுல் படத்தையும் பெரியார் புதுச்சேரியில் பேசிய ஒரு பொதுக் கூட்ட நிகழ்வு படத்தையும் வெளியிட்டிருந்து. 

அந்த குமுதம்இதழை கையில் வைத்துக் கொண்டே புதுச்சேரி பெரியார் சிலைக்கு மாலை அணிவிக்க வந்திருந்தேன். அங்கு கோகுலைக் கண்டதும், குமுதம் இதழைக் காட்டி இது நீங்களா? என்று வினவினேன். ஆம் என்றார் கோகுல். அன்று தொடங்கிய தோழமை இன்று வரை தொடர்கின்றது.

நான் இந்த புதுச்சேரி மண்ணில் தொடங்கிய பெரியார் பார்வை இதழ்.

 அதற்கு கோகுல் உதவியாக இருந்தார். 

பின்பு அவர் எழுதிய ‘கருப்புமலர்களின் நெருப்புப் பயணம்’ நூல். புதுவை திராவிடர் இயக்கத்தின் சுருக்கமான வரலாறும் 43 பெரியார் தொண்டர்களின் வாழ்க்கை வரலாற்றையும் உள்ளடக்கியது.

  பல ஆண்டுகளுக்கு முன்பே அதற்காக அரும்பணிகளையும் தேடல்களையும தொடங்கியிருந்தார். அந்நூல் இறுதி வடிவம் பெறும் காலத்தில் நான் துணையாக இருந்தேன். நூல் வெளியீட்டு விழாவையும் சிறப்பாக நடத்தினோம்.

அந்நூலில் பல அரிய செய்திகள் இருக்கின்றன.

புதுச்சேரியில், சுயமரியாதை இயக்கம் தொடங்குவதற்கு முன்பே பெரியாரின் ‘குடிஅரசு’ இதழக்கு பல நிறுவனங்கள் தங்கள் ஆதரவை தெரிவித்து வந்துள்ளனர். 

‘வைத்தியக்குப்பம் சோதிடாலயம்’, ‘கணித சோதிடம் தே. ஆறுமுகம் செட்டி’, ‘திரெளபதி அம்மன் கோயில் வீதி தேவி ஆஸ்ரமம்’, இரங்க பிள்ளை வீதியில் இயங்கிய ‘வஸந்தி நிலையம்’ ஆகியவை அவற்றுள் சில.

முத்தியால்பேட்டை பகுதியில் சுயமரியாதை இயக்க முழக்கம் ஒலிக்கத் தொடங்குகிறது என்பதை எடுத்துக் காட்டுகிறார் கோகுல்.

 தோழர் றா. பழனியப்ப செட்டியார் தனது தாயார் நினைவாகக் கொடுத்து வந்த திதி வழக்கத்தை  நிறுத்தி, தனது குடும்பத்தில் சமூகப் புரட்சியை நடத்தியுள்ளார் இது நடந்தது 1928 இல். இச் செய்தி 7.10.1928 நாளிட்ட குடிஅரசு இதழில் வெளிவந்திருக்கிறது.

புதுச்சேரிப் பகுதி 1954 ஆம் ஆண்டு வரை பிரஞ்சு ஆளுமைக்குக் கீழ் இருந்த பகுதியாகும். சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் ஆகிய கொள்கைகளை பிரஞ்சு அரசு கொண்டிருந்தாலும், பொது உரிமை மற்றும் பொதுவுடைமை கொள்கைகளுக்காக இயங்கும் இயக்கங்களை நசுக்கியதை யாராலும் மறுக்க முடியாது.

சுயமரியாதை இயக்கம் முதல் திராவிடர் கழகம் தொடங்கிய காலம் வரை பதிவு செய்ய இயலாமல் செயல்பட்டு வந்தது.

சொசித்தேக்களில் (சங்கம்) தந்தை பெரியார் தொண்டர்கள் பங்கு கொண்டனர்.

சுயமரியாதை இயக்கம் முறையாக தொடங்கபடாத நிலையிலும் கூட, தோழர் ராஜகோபால் செட்டியாரின் புதுமனை புகுவிழாவில் தந்தை பெரியார், ஜே.எஸ். கண்ணப்பன், சாமி.சிதம்பரனார், தண்டபாணிப் பிள்ளை ஆகியோர் பங்கேற்றனர். அவர்களை வைத்து சாவடி மைதானத்தில் பொதுக்கூட்டம் நடத்தி இருக்கின்றனர்.

புதுச்சேரியில் தஞ்சம் புகுந்த கவிஞர் பாரதியார், வ.வே.சு. அய்யர் போன்ற பார்ப்பனர்களோடு கனக சுப்புரத்தினம் ( பாரதிதாசன்) நட்பு கொண்டிருந்தார்.

 ‘பொருளாதாரம், உத்தியோகம் முதலியத் துறைகளில் பிராமணரல்லாதார் சம நிலையடைய முடியாது’ என்ற வ.வே.சு. அய்யர் கூற்றுக்கு, புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் ‘பிராமணரல்லாதார் மிகப் பெரும்பாலோர் அடிதடியில் கிளம்பிவிட்டார்களோ’ என்று பதில் கொடுத்திருக்கிறார். 

பகுத்தறிவுக் கொள்கையில் ஆர்வமிக்க இளைஞராக விளங்கிய ம. நோயல், சாதி மறுப்புத் திருமணம் செய்துகொண்டார்.

மக்களிடையே சமத்துவம் ஏற்பட, அனைத்து சாதி மதத்தவரும் பங்கு கொள்ளும் வகையில் இவரின் சொந்த ஊரான உழவர்கரை பகுதியில் உள்ள தெருவிலேயே பெரிய பந்தலிட்டு சமபந்தி விருந்து வழங்கினார். 

நெல்லிக்குப்பத்தில் 22.2.1931 ஆம் ஆண்டு சுயமரியாதை இயக்க முதல் மாநாடு நடைபெற்ற போது புதுவையிலிருந்து அம்மாநாட்டிற்கு கலந்து கொள்ள சென்றிருந்த தோழர்கள் புதுச்சேரியிலும் இவ்வாறு ஒரு மாநாடு நடத்த முடிவு செய்தனர். 

ஒரு வாரக் காலத்திலேயே நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகள் மிக விரைவாக, பிரம்மாண்டமான முறையில் தோழர்களால் செய்யப்பட்டது. 

சுயமரியாதை இயக்கப் பொதுக் கூட்டம் 1.3.1931 ந் தேதி, காலையில் கப்ளே தியேட்டரிலும், மாலையில் ஒதியன்சாலை மைதானத்திலும் (தற்போது அண்ணா திடல்) நடத்த ஏற்பாடு செய்யப்பட்டது. 

நிகழ்ச்சிக்கு பிரஞ்சிந்திய அரசு அனுமதி அளிக்கக் கூடாது என்று சமயவாதிகள் சிலர் எதிர்ப்புத் தெரிவித்தனர். இதன் காரணமாக மாலையில் ஒதியன்சாலையில் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்ச்சியை ரத்து செய்து கப்ளே தியேட்டரில் மட்டும் நிகழ்ச்சி நடத்த அனுமதி அளித்தது.

இதனை 3000 பேர் கலந்து கொண்ட சுயமரியாதை இயக்க மாநாடு என்று ‘குடிஅரசு’ இதழ் வர்ணித்தது.

இது சுயமரியாதை இயக்கத் தோழர்கள் ஒருங்கிணைந்து புதுச்சேரியில் பழமைவாதிகளின் தடைகளையும், எதிர்ப்புகளையும் உடைத்துக் காட்டிய நிகழ்ச்சி ஆகும். இந்நிகழ்ச்சியைப் பொதுக்கூட்டமாக நடத்தினாலும் 'மாநாடு' என்றே ‘குடிஅரசு’ வர்ணித்தது.(புதுச்சேரியில் 1.3.1931 இல் சொற்பொழிவு - குடிஅரசு, 8.3.1931).

ம.நோயேல், மான்ழினிபாலா போன்ற சிலரும் ரெவெய்செசியால் சங்கத்தில் பங்கு கொண்டு இருந்தபடியால் பல சீர்திருத்த வேலைகளைத் தொடர்ந்து செய்தனர். தங்களின் கருத்துகளைப் பரப்ப தமிழ் மன்றங்கள், இலக்கிய அமைப்புகள் ஏற்படுத்திக் கொண்டனர்.

பிரஞ்சு ஆளுநர் லூய் போன்வேன் அவர்கள் பொறுப்பேற்றிருந்த சமயத்தில், புதுச்சேரி திராவிடர் கழகம் விழா நடத்த பிரஞ்சு அரசு அனுமதியளித்தது. ஆனால் முறையாகப் பதிவு செய்யப்படவில்லை. துவக்க விழாவிற்கான அனுமதி பெற்றதிலே மிகுந்த மகிழ்ச்சியில் நிகழ்ச்சி நடத்துவதற்கான வேலையில் ஈடுபடத் துவங்கினார்கள்.

ஆர்.வி.கோபால் தலைமையிலான நாகை திராவிட நாடக கழகத்தினர் புதுச்சேரி வந்தனர்.

அவர்கள் நேரு வீதியில் அமைந்திருந்த கப்ளே தியேட்டரிலும், தகரக் கொட்டகையாக இருந்த, தற்போதைய  கம்பன் கலையரங்கத்திலும் பல நாடகங்கள் நடத்தினர். ‘சாந்தா அல்லது பழனியப்பன்’ என்ற நாடகமும் நடத்தப்பட்டது.  அந்நாடகத்தில் ‘சிவகுரு’ பாத்திரத்தில் கலைஞர் மு. கருணாநிதி, நிரவி ரத்தினவேல் ஆகியோர் நடித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

நாடகக் குழுவினர் நீடராஜப்பர் வீதியில் ஒரு இல்லத்தில் தங்கியிருந்தனர். அங்கேதான் திராவிடர் கழக துவக்க விழாவிற்கான ஏற்பாடுகள் குறித்து கலந்துரையாடல் நடத்தப்பட்டது. 

இது தொடர்பாக ‘குடிஅரசு’ (14.7.1945)இதழில் வெளியான செய்தி: 

புதுச்சேரி தி.க. திறப்பு என்ற தலைப்பில் மேற்கண்ட கழகத் திறப்பு விழா 22.7.1945ந் தேதி பெரியார் ஈ.வே.ராமசாமி அவர்கள் தலைமையில் நடைபெறும். தோழர் டி. சண்முகம் பிள்ளை திறந்து வைப்பார். தோழர் சி.என். அண்ணாதுரை அவர்கள் கொடியேற்றுவார். தோழர்கள் கே.வி. அழகிரிசாமி, ஏ.பி. ஜனார்த்தனம், ஆர். நெடுஞ்செழியன், கே. அன்பழகன், சு.பெருமாள் (புதுவை), அப்துல் வகாப் (விழுப்புரம்), சத்தியவாணி முத்து (சென்னை), மஞ்சுளா பாய் ஆகியவர்கள் படங்களைத் திறந்து வைப்பார்கள். கனக சுப்புரத்தினம் (பாரதிதாசன்) வரவேற்புரை கழகத் தலைவராக. எஸ். சிவப்பிரகாசம், எஸ்.கோவிந்தராஜி ஆகியோர் செயலாளர்கள்.

மிகச் சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்ட மாநாட்டு பணிகளில் திராவிட நாடகக் கழகத்தினரும் ஈடுபட்டனர். மாநாட்டில் கலவரம் ஏற்படுத்த பொதுவுடைமைக் கட்சியினரும், காங்கிரஸ் தேசிய வாதிகளும் தீவிரமாக இறங்கினர். மாநாட்டில் கலவரம் ஏற்படும் சூழ்நிலை உள்ளதையும் விளக்கிய போது பெரியார் அவர்கள், திட்டமிட்டப்படியே மாநாடு நடத்த வேண்டும் என்று கூறினார். 

துவக்க விழாவிற்கு தந்தை பெரியார் மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து தோழர்கள் புதுச்சேரி வந்தனர். தந்தை பெரியாருக்கு முத்தியால்பேட்டையில் பொன். இராமலிங்கம்  நடத்தி வந்த ‘சகுந்தலா சாயத் தொழிற்சாலை’யில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

மாநாட்டு துவக்கத்திலேயே கலவர ஏற்பாட்டோடு வந்த கலவரக்காரர்கள் ரகளையில் ஈடுபட்டு, கழகத் தோழர்களைக் கடுமையாகத் தாக்கினார்கள். அவர்களின் தாக்குதலுக்கு  கலைஞர் மு. கருணாநிதி ஆளானார்.

தன் மதிப்புக் கழகம்

உப்பளம் பகுதி முழுவதும் தாழ்த்தப்பட்ட மக்களே மிகப் பெரும்பான்மை யினராக வாழ்ந்தனர்.

இப்பகுதியில் தந்தை பெரியார் கொள்கையில் ஈடுபாடு கொண்டு அதிக எண்ணிக்கையில் தோழர்கள் குடும்பம் குடும்பமாக திராவிடர் கழகத்தில் பங்கு கொண்டனர். 

பிரஞ்சு அரசில், திராவிடர் கழகம் என்ற பெயரில் இயங்க முடியாத, பதிவு செய்ய இயலாத போது, சுயமரியாதை இயக்கத்தின் பெயரை கவிஞர் பாரதிதாசன் ஆலோசனையின் பேரில் தன்மதிப்புக் கழகமாகப் பெயர் மாற்றம் செய்து துவக்கப்பட்டது.

 இந்த அமைப்பை ஏற்படுத்தியதில் முக்கிய பங்கு ம.நோயேல் அவர்களைச் சாரும். 

தலைவராக பெருமாள், செயலாளராக மாணிக்கவேல் சகேர், பொருளாளதராக தூய்ழான் தர்மசிவம், கவுரத் தலைவராக ம.நோயேல் ஆகியோரைக் கொண்டு துவக்கப்பட்ட தன் மதிப்புக் கழகத்தில் பெரும்பாலோர் ஆலைத் தொழிலாளர்களாக இருந்தார்கள்.

எத்துவால் ரங்கசாமி, மாணிக்கவேல் சகேர், தூய்ழான் தர்மசிவம்,  உப்பளம் ஆர். பெருமாள், காலாஸ் ஜெகன்நாதன், இராமசாமி ஆகியோர் குறிப்பிடத்தக்க தன் மதிப்புக் கழகத் தோழர்கள் ஆவார்கள்.  

மாணிக்கவேல் சகேர் அவர்கள் ‘குமரிக்கோட்டம்’ நாடகத்தில் முக்கிய பாத்திரத்தில் பங்கேற்று நடித்தவர். பொன்.இராமலிங்கம் ஏற்படுத்திய கலைக்குழுவில் முக்கிய பங்கு வகித்தவர் இவர்.

தன்மதிப்புக் கழகத்தின் பொருளாளராக இருந்தவர் துய்ழான் தர்மசிவம். இவருடைய திருமணத்தில் திருக்குறள் முனுசாமி, ம.நோயேல், புரட்சிக் கவிஞர் பாரதிதாசன், வாணிதாசன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

உப்பளம் ஆர். பெருமாள், பஞ்சாலையில் பிரம்புக் கூடை பின்னும் வேலை செய்ததால் பிரம்புக்கூடை பெருமாள் என்று அழைக்கப்பட்டவர். புரட்சிக் கவிஞர் பாரதிதாசன், இவர் மீது அளவில்லா அன்பைக் கொண்டிருந்தார்.

இவருடைய கல்லறையில் திராவிடர் கழகக் கொடியின் அமைப்பு பொறிக்கப்பட்டுள்ளது. இவர் 16.1.1981 இல் மறைந்தார்.

தன்மதிப்புக் கழகத்தின் சார்பில் 'உழவன்' என்னும் கையயழுத்து இதழ் நடத்தப்பட்டது. இந்த கையயழுத்து இதழை சிறப்பாக தொகுத்து தயாரிப்பதில் காலாஸ் ஜெகன்நாதன் அவர்களின் பங்கு அளப்பரியது. 

1951 இல் சிறந்த நாடக நடிகராகவும், கால்பந்தாட்ட வீரராகவும் முற்போக்கு எழுத்தாளராகவும் விளங்கியவர்.

திருவள்ளுவருக்குப் புகழ் சேர்க்கும் வகையிலும் தன் மதிப்புக் கழக ஆண்டு விழாவாகவும் வள்ளுவர் விழாவை ஒவ்வொரு ஆண்டும் நடத்தினார்கள்.

 ‘குமரிக்கோட்டம்’ போன்ற நாடகங்களை நடத்தி அப்பகுதி மக்கள் பெரியார் கொள்கையை ஏற்கச் செய்தனர். 

ஞாயிற்றுக் கிழமை போன்ற விடுமுறை நாட்களில் கவிஞர் பாரதிதாசன், ம.நோயேல், எம்.ஏ. சண்முகம், வாணிதாசன், பொன். இராமலிங்கம் போன்றவர்கள் தன் மதிப்புக் கழகத் தோழர்களுடன் கூடி கருத்துப் பரிமாறிக் கொள்ளும் வாய்ப்பாக அமைத்துக் கொண்டனர்.

தமிழகத்திலிருந்து வரும் திராவிடர் கழகப் பிரமுகர்கள் உப்பளத்தில் பிரச்சாரம் செய்யாமல் போனதில்லை என்ற அளவிற்கு பகுத்தறிவுப் பிரச்சாரம் செய்துவந்தனர்.

உப்பளத்தில்  கிறிஸ்துவர்கள், பிரஞ்சு வெள்ளையர்கள்,  உயர் சாதிக்காரர்கள் மற்றும் தாழ்த்தப்பட்டவர்கள் என்று தனித்தனியாக பிரித்து கல்லறைகள் அமைக்கப்பட்டு இருந்தது. இதனை எதிர்த்துப் போராடி, அனைவருக்கும் பொதுவான கல்லறை அமைத்தது தன் மதிப்புக் கழகத்தின் சாதனையாகும். 

திராவிடர் கழகம் நடத்திய பிள்ளையார் சிலை உடைப்பு, இந்தி எதிர்ப்பு, இந்திய அரசியல் சட்டம் எரிப்பு ஆகிய போராட்டங்களில் அதிகமானவர்களைத் திரட்டி வந்து கலந்து கொள்ளச் செய்தனர். 

பஞ்சாலை போராட்டத்தால் கம்யூனிஸ்ட் கட்சி புதுச்சேரிலே ஓங்கி வளர்ந்திருந்த சமயத்திலே கம்யூனிஸ்ட் பக்கம் சாயாமல் தந்தை பெரியார் கொள்கைகளை ஏற்று தன் மதிப்பு இயக்கம் கண்டதே இவர்களின் தனிச் சிறப்பாகும்.

உருளையான் பேட் புதுப்பாளையம் பேட் -அழகிரி நூல் நிலையம்

தாழ்த்தப்பட்ட மக்கள் அதிகமாக வாழும் பகுதி புதுப்பாளையம் பேட் ஆகும். மு.ரங்கநாதன், வை.வடிவேலு, மு.சதாநந்தம் ஆகியோர் ‘நித்தியானந்தம் கல்வி சாலை’ என்ற பெயரில் சிறுவர்களுக்கு மாலை நேரப் பள்ளி ஒன்றை சிறிய அளவிலே நடத்தி வந்தனர். 

திராவிடர் கழகத் தோழர்கள் சிலர் விடுதலை, வெற்றி முரசு, திராவிடன் போன்ற இதழ்களை கல்விச் சாலையில் பயிலும் மாணவர்களுக்குப் படித்துக் காட்டுவதை வழக்கமாகக் கொண்டிருந்தனர்.

புதுப்பாளையம் பேட் இளைஞர்கள் பலர் ஆலைத் தொழிலாளர்கள் . தன் மதிப்புக் கழகத் தோழர்களும் திராவிடர் கழகத் தோழர்களுடன் ஆலை வேலையில் நெருங்கிப் பழகும் வாய்ப்பு ஏற்பட்டது.

வீ. பெருமாள், மு.வீரப்பன், ரஸ்கீன், ஆனந்தவேல், தே. சாரங்கன், வ.மலையாளத்தான்,  இரா.எத்துராசு, பொ.நடராசன் மற்றும் பல தோழர்கள் முயற்சித்து ‘நித்தியானந்தம் கல்விச்சாலையை ‘அழகிரி நூலகமாக’ மாற்றினார்கள். ம.நோயேல் அவர்கள் இந்த இளைஞர்களின் ஆர்வத்தைத் திராவிடர் கழகத்திற்குப் பயன்படுத்த வேண்டும் என்பதற்காக நூலகம் அமைய பல வகை உதவிகளைச் செய்தார். 

நூலக தலைவர் வீ.பெருமாள் அவர்களின் தம்பிக்குச் சீர்திருத்தத் திருமணம் நடந்தது.  இதன் தொடர்ச்சியாகப் பலரும் தங்களின் குடும்பத்தில் சுயமரியாதை திருமணத்தை நடத்தினார்கள். 

குத்தூசி குருசாமி தலைமையில் ஏராளமான திருமணங்கள் நடைபெற்றன. 

ம.நோயேல் அவர்கள் உருளையன் பேட்டை பக்கத்தில் உள்ள நெல்லித் தோப்பு மேற்றிராசன மாதா கோயிலில் தாழ்த்தப்பட்டவர்களையும் உயர்சாதியினரையும் பிரிக்கும் நடுக்கூடத்தை (தடுப்புக்கட்டை) அகற்றும் போராட்டத்திற்கு சுயமரியாதை இயக்க ஆரம்ப காலத் தோழர்களைப் பயன்படுத்திக் கொண்டார். 

பிரஞ்சிந்திய அரசில் அமைச்சராக இருந்த மாண்புமிகு ஆ.வே. முத்தையா அவர்கள் சுயமரியாதை இயக்கத்தில் ஆர்வம் கொண்டிருந்தார். சுயமரியாதை நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு இவர் ஆற்றிய உரை குடிஅரசு இதழ்களில் பதிவாகியுள்ளது. புதுவை முரசு 4.5.31 இதழில், உடன் முழங்கு என்ற தலைப்பில் இவரைப் பற்றி புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் எழுதியுள்ளார்.

புதுச்சேரியில் சுயமரியாதை இயக்கத்தின் முன்னோடி பகுதியாக விளங்கிய முத்தியால் பேட்டையில் சகுந்தலா சாயத் தொழிற்சாலையின் உரிமையாளர் பொன். இராமலிங்கம், திராவிடர் கழகம் புத்துணர்ச்சிப் பெற காரணமாக இருந்தார். இந்த சாயத் தொழிற்சாலை புதுச்சேரி திராவிடர் கழகத்தின் தலைமை அலுவலமாகவும் இயங்கியது.

தாழ்த்தப்பட்ட மக்களை கோயிலுக்குள் அழைத்துச் செல்லும் ஆலய நுழைவுப் போராட்டத்தை நடத்தியவர் பொன். இராமலிங்கம். புதுவையில் ஈஸ்வரன் கோயில், பெருமாள் கோயில் உள்ளிட்ட பல கோயில்களுள் தாழ்த்தப்பட்ட மக்களை மேள, தாளங்களோடு அழைத்துச் சென்றவர் பொன்.இராமலிங்கம். இது நடந்தது 1947 இல்.

புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் எழுதிய 'இரணியன் நாடகம்' 1948 ஆம் ஆண்டு சென்னை மாகாணத்தில் தடை செய்யப்பட்டது. ஆனால், பிரஞ்சிந்திய ஆட்சிக்குட்பட்டதால் புதுச்சேரியில் இந்நாடகம் நடத்தப்பட்டது. இதில் ‘இரணியனாக’ வேடம் ஏற்று நடித்தவர் பொன். இராமலிங்கம்.

புதுச்சேரி திராவிடர் கழகத் தலைவராக பொன். இராமலிங்கமும், துணைத் தலைவராக ம.நோயேல் அவர்களும் இருந்துள்ளனர்.

புதுச்சேரி சின்னக்கடை திராவிடர்கழகத் தொண்டர்களின் கோட்டையாக விளங்கியது. கோ. கோவிந்தராசு, நாராயணசாமி, கி. பார்த்தசாரதி, இராமசாமி தேவர், இவருடைய மகன் இரா. நக்கீரன், சைகோன் ராஜாமாணிக்கம், விக்டர் ஆரோக்கியதாஸ், அலேக்ஸிஸ் என்ற அ. தமிழ்த் தொண்டன் ஆகிய தோழர்கள் ஒன்று கூடி 1948 இல், காந்தி வீதி, தில்லை மேஸ்திரி வீதி சந்திப்பில் வள்ளுவர் தமிழ் நூற்கழகம் என்ற பெயரில் மன்றம் அமைத்து முறையாக, உறுப்பினர்களை இணைத்து பல ஆண்டுகள் தொடர்ந்து செயல்பட்டனர். இதன் தலைவராக அ. தமிழ்த்தொண்டன் இருந்தார்.

1950 இல் ‘குப்பையில் மாணிக்கம் (அல்லது) தமிழர் படும் பாடு’, 1951 இல் ‘கைகூடாக் காதல்’, 1965 இல் ‘என் முடிவு’, 1968இல் ‘நான் யார்?’ ‘அன்பு மலர்’ ஆகிய நாடகங்களில் சாதி, மதம், சாமியார் மோசடிகளை எதிர்க்கும் கருத்துக்களை  மிகச் சிறப்பாக, கதை, வசனம், பாடல்களை அமைத்து எழுதியுள்ளார் அ. தமிழ்த்தொண்டன்.

இந்த விழாவில் புதுச்சேரி திராவிட இயக்கக் கண்காட்சியை திறந்து வைக்க வாய்ப்பளித்த தோழர் கோகுல் காந்திக்கும், அலைகள் இயக்கத் தலைவர் வீர.பாரதிக்கும் மற்றும் தோழர்களுக்கும் நன்றி கூறி விடைபெறுகிறேன். நன்றி. வணக்கம்.

Friday, September 17, 2021

சிங்கப்பூர் தமிழவேள் கோ. சாரங்கபாணி நினைவுநாள்

 சிங்கப்பூர் தமிழவேள் கோ. சாரங்கபாணி நினைவுநாள் (16.03.1974)


தமிழவேள் கோ. சாரங்கபாணி அவர்கள், நாகை மாவட்டம் வேதாரண்யம் (திருமறைக்காடு) அருகில் உள்ள கொட்டையிடி என்ற சிற்றூரில்1903-ஆம் ஆண்டு ஏப்பிரல் 20 ஆம் நாள் பிறந்தார். திருவாரூர் கழக உயர்நிலைப் பள்ளியில் பள்ளியிறுதிப் படிப்பை முடித்தார்.


பின்பு, 1924-ஆம் ஆண்டு சிங்கப்பூர் வந்து சேர்ந்த தமிழவேள், அங்காடிச் (மார்க்கெட்) சாலையிலுள்ள வணிக நிறுவனம் ஒன்றில் கணக்கெழுதுபவராக வாழ்க்கையைத் தொடங்கினார். 

தந்தை பெரியாரின் பகுத்தறிவுச் சிந்தனைகளும் சீர்திருத்த கருத்துகளும் மலையகத் தமிழர் நடுவிலே நிலையாக வேரூன்ற வேண்டுமென்ற பேரவாவால் தமிழவேள், 16.1.1929-இல் வெ.சி. நாராயணசாமி அவர்களுடன் சேர்ந்து முன்னேற்றம் என்னும் பெயரில் ஒரு கிழமை (வார) இதழைத் தொடங்கி தமிழர்களின் முன்னேற்றத்திற்காகப் பாடுபட்டார். தொடக்கத்தில் அவ்விதழின் துணையாசிரியராகப் பணியாற்றிய தமிழவேள் 1930-ஆம் ஆண்டுவாக்கில் அவ்விதழின் ஆசிரியர் பொறுப்பை ஏற்றார்.


‘முன்னேற்றம்’ தொடங்கப்பெற்ற அதே ஆண்டு இறுதியில் 20.12.1929-இல் தந்தை பெரியார் அவர்கள், தம் துணைவியார் நாகம்மையார், ச. இராமநாதன், அ. பொன்னம்பலம், சி.நடராசன், சாமி சிதம்பரனார் ஆகியோருடன் பினாங்கு வந்து சேர்ந்தார்.


தமிழர்களை ஒன்று சேர்க்கும் அரியதொரு உணர்வால் உந்தப்பட்டுத் 1930/ஆம் ஆண்டு திரு. உ.இராமசாமி (நாடார்) அவர்கள் தலைமையில், திருவாளர்கள் காந்தரசம் அ.சி. சுப்பய்யா, கா.தாமோதரம், பி. கோவிந்தசாமி போன்றோருடன் இணைந்து கோ. சா., ‘தமிழர் சீர்திருத்த சங்கம்’ அமைக்கும் அரிய முயற்சியில் ஈடுபட்டு 1930-ஆம் ஆண்டு தமிழர் சீர்திருத்த சங்கம் உருக்கொண்டது.


அக்கழகத்தின் சார்பில் வெளியிடப்பட்ட ‘சீர்திருத்தம்’ என்னும் மாத இதழின் ஆசிரியர் பொறுப்பை ஏற்று நடத்தினார். தொடக்கத்தில் இக்கழகத்தின் செயலாளராகப் பொறுப்பேற்றிருந்த கோ. சா., பிறகு அதன் தலைவரானார்.


தமிழ் முரசு

1935-ஆம் ஆண்டு சூலைத்திங்கள் 6-ஆம் நாள் காரி (சனி)க் கிழமையன்று மாலை 6.00 மணிக்குச் சிங்கப்பூரில், 20, கிள்ளான் சாலையில், தமிழவேள் ‘தமிழ் முரசு’ என்ற பெயரில் ஒரு செய்தி இதழைத் தொடங்கினார். அன்று சிறிய அளவில் 4 பக்க அளவில் 1 காசு விலையில் கிழமை இதழாக வெளிவந்தது. நான்கு திங்கள் கடந்து இதழைக் கிழமை மும்முறை வெளியிட்டார். இவ் வளர்ச்சிக்கு ஏற்ப இதழின் விலை 3 காசாக உயர்த்தப்பட்டது.


1937-ஆம் ஆண்டு டிசம்பர் திங்கள் முதல் தமிழ்முரசு, நாளிதழாக வெளிவரலாயிற்று. இரண்டாம் போருக்குப் பின் பதினைந்து காசு விலையில் பன்னிரண்டு பக்கங்களுடன் வெளிவரத் தொடங்கியது.


தமிழர்களின் அறியாமை, சிந்தனையின்மை போன்ற இருள்களை அகற்ற தமிழ்முரசு தோன்றியது.

தந்தை பெரியார் ஈ. வெ. இராமசாமி அவர்களின் பகுத்தறிவு-தன்மான-சீர்திருத்த- முன்னேற்றக் கருத்துகளை ஏற்று அவற்றை இந்நாட்டில் பரப்பி மக்களை மக்களாக வாழ வழி வகுப்பதற்கெனப் பிறந்த ஏடு தமிழ் முரசு.

அறியாமை இருளில் வேரூன்றிவிட்ட மக்களிடையே சீர்திருத்த இதழை நடத்த அஞ்சா நெஞ்சம் வேண்டும். இடையறாத இன்னல்களும் இடர்களும் பரிசாகக் கிடைத்தும், கொண்ட கொள்கைக்காகத் தமிழவேள் இறுதிவரை மனந்தளராமல் போராடினார்.


1952-ஆம் ஆண்டு பிற்பகுதியில் எழுத்தாளர்களுக்கென ‘எழுத்தாளர் பேரவை’ என்ற ஒரு புதுப் பகுதியைத் தொடங்கிற்று தமிழ் முரசு.


மாணவர்களையும் சிறுவர்களையும் எழுத்துலகில் நுழையச் செய்து அவர்களில் பலரைத் தமிழ் எழுத்துலகம் போற்றும் எழுத்தாளர்களாக உருவாக்குவதற்கு பயிற்சிக்களமாக இலவய இதழ் ஒன்றினைத் தமிழ்முரசுடன் இணைத்து வெளியிட்டார். அதுதான் ‘தமிழ் முரசு’ மாணவர் மணிமன்ற மலர். முதல் மலர் 6.7.1953-இல் மலர்ந்தது. இது மலேசியாவில் ஓர் எழுத்தாளர் மரபினரையே தோற்றுவித்தது.


Reform என்னும் திங்கள் இதழையும் Indian Daily Mailஎன்னும் நாளிதழையும் ஆங்கிலத்தில் சில காலம் வரை நடத்தினார். ‘தேச தூதன்’என்னும் மாலை நாளிதழும் இவரால் சில காலம் தலைநகரில் நடத்தப்பட்டது.


தமிழர் பிரதிநிதித்துவ சபை


சிங்கையில் இயங்கி வந்த 32 கழகங்களையும் (சங்கங்களையும்) இணைத்துத் ‘தமிழர் பிரதிநிதித்துவ சபை’யைக் கண்டார்.


தமிழர் திருநாள்


தமிழர் மொழி, கலை, இலக்கியம், பண்பாடு, விளையாட்டு ஆகியவற்றைப் பேணிக் காக்கவும் சாதி சமய வேறுபாடுகளால் பிளவுபட்டு நின்ற தமிழர்கள் தமிழன் என்ற தன்மான உணர்வோடு ஒன்று சேரவும், 1952-ஆம் ஆண்டு ‘தமிழர் திருநாள்’ என்னும் விழாவை ஏற்படுத்தினார்.


தமிழ் எங்கள் உயிர்

மலாயாப் பல்கலைக் கழக இந்தியப் பகுதியில் தமிழை ஒழித்து வாய் செத்த சமற்கிருதத்தை ஆட்சியேற்ற வந்த நீலகண்ட சாஸ்திரியாரை புறமுதுகுகாட்டி ஓடச் செய்து தமிழுரிமையைத் தமிழவேள் பேணினார்.

மலாயாப் பல்கலைக்கழகத்தில் தமிழ்த் தாயை வீற்றிருக்கச் செய்ய ‘தமிழ் எங்கள் உயிர்’ என்ற பொருட் கொடைத் திட்டத்தை செயல்படுத்தினார். அவரின் பெரு முயற்சியால் பல்கலைக்கழக இந்தியப் பகுதியில் சிறந்த நூல் நிலையம் ஒன்று அமைந்தது. தமிழ்ப் பகுதியில் மாணவர்களை ஈர்ப்பதற்காக உதவிச் சம்பளத் திட்டத்தை அறிமுகப்படுத்தி அதிலும் வெற்றியே கண்டார்.


மறைவு

சிங்கை-மலையகத் தமிழர்களுக்காகவும் தமிழ் மொழிக்காகவும், தமிழ் மன்பதையின் மேம்பாட்டிற் காகவும் ஏறத்தாழ 45 ஆண்டுக் காலம் அயராது- ஒழியாது- ஓயாது பாடுபட்ட முத்தமிழ்க் காவலர் தமிழவேள் கோ. சாரங்கபாணி 1974-ஆம் ஆண்டு மார்ச்சுத் திங்கள் 16-ஆம் நாள் இயற்கை எய்தினார்.


தனித்தமிழ் அரிமா தரங்கை பன்னீர்செல்வம் அவர்கள் சிங்கை வந்த போது நானும் அவரும் சிங்கப்பூரிலுள்ள தமிழவேள் கல்லறைக்குச் சென்று மரியாதை செய்த போது எடுத்தப்படம் (2010)

Tuesday, September 14, 2021

சுதந்திர நாடாக வாழும் எல்லா உரிமையும் மலேசிய நாட்டிற்கு உண்டு

சுதந்திர நாடாக வாழும் எல்லா உரிமையும் மலேசிய நாட்டிற்கு உண்டு

சிங்கப்பூர் வரவேற்பில் அண்ணா பேருரை

சிங்கப்பூர், சூலை 16 இரவு 9.30 மணிக்கு அறிஞர் அண்ணா அவர்களின் பேச்சு துவங்கியது. முதலில் சிறிது நேரம் ஆங்கிலத்தில் பேசிவிட்டு, பிறகு சுமார் ஒரு மணி நேரம் தமக்கே உரித்தான தனி பாணியில் அழகுத்தமிழில், நல்ல கருத்துக்களை நகைச்சுவை கலந்து அள்ளி வழங்கினார் அறிஞர் அண்ணா.

உங்களைக் கண்டுகளிக்க வேண்டும் என்று நானும் என்னைக் காண வேண்டும் என்று நீங்களும் பல ஆண்டுகளாக விரும்பி வந்திருக்கிறோம். அந்த அவா இன்று நிறைவேறியது காண பெரு மகிழ்வெய்துகிறேன்.

விமான நிலையத்தில் என்னை வரவேற்க வந்திருந்தவர்களின் கண்களில் உவகைக் கண்ணீரை, என்னைத் தொட்டு வரவேற்றக்கரங்களை, கட்டிய ணைத்து முத்தங்களீந்த அன்பு உள்ளங்களைக் காண அக மகிழ்ந்தேன், உங்களிடம் உள்ளன்பு இருக்கும் என்பது நான் எதிர்பார்த்ததுதான் என்றாலும் இந்த அளவு இருக்கும் என்று நான் எதிர்ப்பார்க்கவில்லை என்றார் திரு. அண்ணா.

தம்மை வரவேற்கக் கூடியுள்ள மாபெரும் கூட்டத்தின் முன்னே தான் நிற்கும் நிலையை திருமணமான புதிய தம்பதிகள் முதல் இரவில் இருக்கும் நிலைக்கு ஒப்பிட்டார் அறிஞர் அண்ணா. புதிதாக மணமான தம்பதிகள் முதல் இரவில் சந்திக்கும் போது எந்தவித பேச்சும் பேசத் தோன்றாது சினிமாவில் வேண்டுமானால் அவர்கள் பேசுவதாகக் காட்டியிருக்கலாம். ஆனால், உண்மையில் அப்போது பேசுவதற்கே எதுவும் தோன்றாது. அந்த நிலையில் நான் இப்போது இங்கு நிற்கிறேன். (சிரிப்பு). என்னைக் கவ்வும் கண்களுடன் நீங்கள் நோக்குவதை நான் கண்டு உங்களின் ஒளி நிறைந்த கண்களை உள்ளன்பை ஊடுருவி நோக்கி அதை எனது இதயத்தில் பதித்துக் கொண்டு செல்ல விரும்புகிறேன் என்றும் அவர் கூறினார்.

தமிழ்ப்பண்பு:

அறிஞர் அண்ணா அவர்கள் தமது உரையில் தமிழ்ப் பண்புக்குச் சிறந்த விளக்கம் அளித்தார்.

இந்த இயற்கை வளம் மிகுந்த பொன்னான நாட்டைப் பூங்காவாக ஆக்க தமிழர்கள் ஆற்றிய பணி பற்றியும் பங்கு பற்றியும் சிங்கப்பூர் பிரதமர் லீ அவர்கள் சுட்டிக்காட்டினார்கள். தமிழர்கள் எந்த நாட்டை தங்களின் சொந்த நாடாகக் கருதினார்களோ அந்த நாட்டின் நல் வாழ்விற்காக, அதை ஒளிமயமாக்க தங்களை அர்ப்பணித்துக் கொள்ளும் பண்புள்ளவர்கள். இதற்கு எடுத்துக் காட்டாக சிங்கப்பூர் பல்கலைக்கழகத்தில் தமிழ்ப் பகுதியை நிறுவுவதற்காக இந்த நிகழ்ச்சியில் என் மூலம் 13,000 வெள்ளிக்கான செக் ஒன்றை வழங்கியிருப்பதில் பெருமைப்படுகிறேன். மேன்மேலும் இது போன்ற சிறப்புக் காரியங்களுக்கு வாரி வழங்கும்படி வேண்டுகிறேன். தமிழ்மொழி எந்த ஒரு நாட்டுக்கும் சொந்தமானதல்ல. பல்வேறு பண்பாடுகள் கலாசாரங் களையுடைய மற்றவர்களுக்கும் தமிழில் காணப்படும் இலக்கிய வளங் களையும், கலாச்சாரப் படைப்புகளையும் எடுத்துக் கூறும் செயல்களை தமிழர்கள் மேற்கொள்ள வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.

அரசியல் ஓய்வு:

எங்கள் நாட்டில் அல்லும் பகலும் அரசியலில் உழன்று கொண்டிருக்கும் நான், இங்கு பயணம் செய்யும் ஒரு பத்து பதினைந்து நாட்களுக்காவது அரசியலை மறந்திருக்கலாமென்று எண்ணுகிறேன். அரசியல் நடவடிக்கைகளையும் அரசயில் எச்சரிக்கைகளையும் மறந்து இயற்கை வளம் நிறைந்த இந்நாட்டில் உங்களின் உபசரிப்பிலும், உள்ளன்பிலும் இணைந்து இந்த பதினைந்து நாட்களையும் செலவிடலாம் என்றிருக்கிறேன். தமிழகத்திலிருந்து வரும் ஓர் எதிர்க்கட்சிக்காரர் என்பதை விட ஓர் இந்தியர் என்ற முறையில் என்னை வரவேற்பதாக உங்களின் கலாசார அமைச்சர் திரு.ராசரத்தினம் கூறினார்.

எதிர்க்கட்சிக்காரன் என்றாலும் அவனும் ஓர் இந்தியன் தான் என்று எண்ணும் பெருந்தன்மை இங்கு மட்டுமல்ல, எங்கள் நாட்டிலும் ஏற்பட வேண்டுமென்று விரும்புகிறேன்.

நான் இங்கு ஒரு கலைத்தூதுவனாகத்தான் வந்திருக்கிறேனேயன்றி அரசியல் தூதுனாக அல்ல என்பதையும் வலியுறுத்திக் கூற விரும்புகிறேன்.

நான் தமிழகத்தில் அரசியல் கிளர்ச்சியயான்றில் ஈடுபட்டுச் சிறையில் வைக்கப்பட்டிருந்த நேரம், செஞ்சீனர்கள் இந்திய எல்லையில் ஆக்கிரமிப்பு செய்திருக்கிறார்கள் என்ற அறிந்ததுமே எனது நாட்டிற்கு, இந்தியாவிற்கு வந்திருக்கும் ஆபத்தை உணர்ந்து நடந்து வந்த எல்லாக் கிளர்ச்சிகளையும் நிறுத்தி ஆபத்து நேரத்தில் அரசாங்கத்தின் கரத்தை வலுப்படுத்தும்படி சிறையிலிருந்தவாறே மக்களைக் கேட்டுக்கொண்ட பொறுப்புள்ள ஒருவன்தான் நான் என்பதை கலாசார அமைச்சர் ராசரத்தினம் அவர்களின் கவனத்திற்குக் கொண்டுவர விரும்புகிறேன்.

தமிழர் பெருமை:

சிங்கப்பூரில் தமிழ்மொழியை ஆட்சிமொழிகளில் ஒன்றாக ஏற்று, துரைத் தனத்திலும் பொது வாழ்விலும் அதற்கு உரிய மரியாதையும் மதிப்பும் கொடுத்திருக்கும் இந்த அரசாங்கத்திற்கு எனது நன்றியைக் கூறிக் கொள்கிறேன்.

தமிழ்மொழியின் இலக்கியவளம் ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்னுள்ள வரலாற்றையுடையது. இன்று புதியவனாகக் காட்டும் பல விஞ்ஞான கருத்துகளை அன்றைய தமிழ் இலக்கியத்திலேயே கூறப்பட்டுள்ளன. இம்மொழி எந்த நாட்டவரும் ஏற்றுக் கொள்ளத் தக்க இனிய மொழி. அதிலுள்ள கருத்துக் கருவூலங்களை மாற்று மொழிக்காரர்கள் போற்றும் வண்ணம் எடுத்துக் கூற வேண்டும். உதாரணமாக கதிரவன் தன்னைத்தானே சுற்றி வருவதையும் பூமியும் மற்ற கோளங்களும் சூரியனைச் சுற்றி வரும் உண்மையை இன்றைய விஞ்ஞான உலகம் புதியதாகக் கூறுகிறது.ஆனால், இந்த உண்மை ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்புள்ள தமிழ் இலக்கியங்களில் காணப்படுவது குறிப்பிடத்தக்கது .

சாதி:

மற்றொரு உண்மை பிறப்பு ஒக்கும் எல்லா உயிர்க்கும் என்ற வள்ளுவப் பெருந்தகையின் கூற்று. ஆதித் தமிழர்களிடம் சாதிமதப் பேதமிருக்கவில்லை. அது பின்னாலே வந்தவர்களால் புகுத்தப்பட்டது. இன்னும் கூறப்போனால் தமிழிலே ஜாதி என்ற வார்த்தையே கிடையாது. குரோட்டன்ஸ், டொமேட்கேப்பேஜ் போன்ற வார்த்தைகள் தமிழில் இல்லை. காரணம் அவை பழந்தமிழ் நாட்டுக் காய்கறி வகைகள் அல்ல. அது போன்றே ஜாதி என்ற வார்த்தையும் தமிழிலேயே கிடையாது. காரணம் பழந்தமிழ் நாட்டில் அது இல்லை. ஜப்பானை சப்பான் என்று சொல்வதால் தமிழாகி விடாது. அது போல ஜாதியை சாதி என்று கூறுவதால் தமிழாகி விடாது என்றும் அறிஞர் அண்ணா குறிப்பிட்டார்.

ஆய்ந்தறிக:

எப்பொருள் யார் யார் வாய்க் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பதறிவு என்பதே தமிழர்களின் பண்பாடு. ஆகவே யார் எது கூறினாலும், கூறுபவர் அறிஞராக இருந்தாலும் ஆட்சியாளராக இருந்தாலும் மனத்தைப் பறிகொடுத்து விடாமல் ஆராய்ந்து பார்த்துச் செய்யும் முடிவே பலன்தரும். பயன் தரும்.

நமது தமிழ் மொழியின் இலக்கிய வளத்தைத் தெரிந்து மற்றவர்கள் இத்தகைய வளமுள்ள மொழியினரின் வழியில் பிறக்காமல் போனோம் என்று வருந்துமளவுக்கு வளமுள்ள மொழிக்கு சொந்தக்காரன் என்பதில் நான் பெருமையடைகிறேன்.

கருவிலேயே:

கருவிலிருந்து வெளிவரும் குழந்தை கூட அது எந்த மொழியினரின் குழந்தையானாலும் முதன் முதலில் அம்மா என்று தமிழில் தான் பேசுகிறது. சில தமிழர்கள் என்ன தான் பிறமொழியில் ஈடுபாடுடையவராக இருந்தாலும் ஆங்கிலத்தையே பேசிக் கொண்டிருப்பவராக இருந்தாலும், திடீரென்று அவரது காலில் ஒரு கட்டெறும்பு கடித்து விட்டால் , ஆ! அய்யோ ! என்று தான் கூறுவாரே தவிர ஓ மை காட்! என்று கூற மாட்டார். இதைத்தான் தமிழ் உணர்வு என்று கூறுகிறோம்.

கெடுப்பவன் தமிழனல்லன்:

இந்த இயற்கையான தமிழ் உணர்வு , அம் மொழியின் மீதுள்ள பற்று, எந்த நாட்டையும் கெடுத்து விடாது. யாரையும் கெடுப்பது, தமிழ் பண்பல்ல. அப்படிக் கேடு நினைப்பவன் தமிழனாக இருக்க நேர்ந்தால் அவன் தமிழினத்தில் பிறந்தானே தவிர தமிழ்ப் பண்பை மறந்தவனாவான்.

அவன் சுவாசிக்கும் காற்றை, அருந்தும் நீரைத் தரும் இந்தப் பொன்னாட்டைத் தமிழர்கள் எந்நாளும் மறக்க மாட்டார்கள் என்பது நிச்சயம். யாதும் ஊரே , யாவரும் கேளிர் என்ற பண்பு ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தமிழர்களுக்கு ஏற்பட்டு விட்டது. வாழும் நாடு எந்த நாடோ அதையே தங்களின் சொந்த நாடாகக் கருதி வாழும் பண்புள்ளவர்கள்.

மலேசியத் தமிழர்கள்:

இங்கு வாழும் தமிழர்கள் தாங்கள் வாழும் இந்நாட்டிலேயே தங்கிவிட உறுதி பூண வேண்டும். தமிழகத்திற்குத் திரும்பிப் போய் வந்து கொண்டிருக்க வேண்டும் என்ற எண்ணத்தை விட்டு விட வேண்டும்.

மலேசியர்களாக விரும்பி மனு செய்த தமிழர்களையயல்லாம் இந்த அரசாங்கம் இந்நாட்டுக் குடிமகனாக ஏற்றுக் கொண்டது போல, இது வரை குடிமகனாகாதிருக்கும் மீதமுள்ள தமிழர்களையும் அவர்கள் விரும்பி மனு செய்தால் அவர்கள் அத்தனை பேரையும் பெருங்குடிகளாக ஏற்றுக் கொள்ளும்படி இந்த அரசாங்கத்தைப் பணிவன்புடன் வேண்டுகிறேன்.

தனித்தியங்கத் தகுதியுள்ளது:

தமிழ்மொழி தனித்தியங்கும் தகுதி பெற்றது என்று தமிழ்ப் புலவர்கள் நிருபித்துள்ளனர். நடைமுறையில் அது உண்மையானது என்பதை நான் உணருகிறேன். இரவல் வாங்கியே காலத்தைக் கழிப்பது ஒரு வாழ்வல்ல. குழம்பு இல்லை என்று அடுத்த வீட்டில் வாங்கி, வாங்கிய குழம்பில் காய்கறி இல்லை என்று பக்கத்து வீட்டில் இரவல் வாங்கிய குழம்பில், காய்கறியில் உப்பு இல்லை என்று பக்கத்து வீட்டில் இரவல் வாங்கி காலத்தைக் கழிப்பவன் தனிக் குடித்தனம் நடத்த தகுதியில்லாதவன். இது போன்று ஒவ்வொரு வார்த்தைக்கும் வேற்று மொழியிலிருந்து இரவல் வாங்கும் ஒன்றை மொழி என்று கூற முடியாது. ஓசை என்று தான் கூற வேண்டும்.

தமிழர்கள் தங்கள் மொழியின் பெருமையினைக் கூறிக் கொண்டிருப்பதால் பயனில்லை. நாங்கள் எப்படிப்பட்ட இனம் தெரியுமா? எங்கள் மொழி எப்படிப்பட்ட மொழி தெரியுமா? என்று கூறிக் கொள்வதில் சிறப்பில்லை. அந்த சிறப்புமிக்க மொழியினைக் கற்று, அதன் வளமிக்க இலக்கியத்திலுள்ள கருத்துக்களை உங்களின் வாழ்க்கையில் நடத்திக் காட்டி மற்றவர்களுக்கு எடுத்துக் கூற வேண்டும். மேடையில் பாடிக் கொண்டிருக்கும் பாடகன் தனது நிலைப்பாட்டை அடிக்கடி நிறுத்திக் கொண்டு ரசிகர்களை நோக்கிக் கைத் தட்டுங்கள் என்று கூறினால் அவன் ஒரு பாடகனுமல்லன். அவன் பாடுவது முறையான பாட்டுமல்ல என்றுதான் கூறவேண்டும்.

பண்டைய தமிழகத்தில் காணப்பட்ட ஏற்றத் தாழ்வுகளெல்லாம் இட்டார் பெரியார் இடாதார் இழிகுலத்தோர் என்ற வகையைச் சேர்ந்தவர்களாகத்தான் இருக்கும். தமிழகத்திலிருந்து இங்கு வந்திருக்கும் தமிழர்கள் தங்கள் கைகளை, கால்களை, கண்களை, காதுகளை மட்டும் இங்கு கொண்டுவந்து விட்டார்கள் என்ற அறிய வேதனைப் படுகிறேன். சாதியினால் தமிழர்கள் பெருமையடைய முடியாது.

விளக்கின் பயன் அதைப் பயன்படுத்தும் விதத்தில்தான் இருக்கிறது. கையில் பாட்டரி லைட் வைத்திருப்பவர்கள் இரவில் பூச்சி பொட்டுகள் பாதையில் இருக்கிறதா என்று பார்க்கப் பயன்படுத்துவதைவிட்டு கூட்டத்திலுள்ளவர்கள் பக்கம் விளக்கையடித்து அங்கு நிற்பவர்கள் யார், இங்கு நிற்பவர்கள் யார் என்று பார்க்கப் பயன் படுத்துவது தீமையாகும்.

பாராளுமன்ற ஜனநாயகம்:

இந்தியாவுக்கும் மலேசியாவுக்கும் இன்று பொதுவாக உள்ளது பாராளுமன்ற ஜனநாயகம், சில நாடுகளில் ஒரு மாதிரியான ஜனநாயகம் நடைமுறையில் இருக்கிறது. அங்கெல்லாம் ஒரே கட்சி தானிருக்கும். அதன் சார்பில் நிற்பவர் மக்களிடம் என்னை விரும்புகிறீர்களோ? இல்லையா என்ற கேள்வியோடு தேர்தலில் இறங்குவார்கள். யாரும் போட்டியிட முடியாது. அந்த நிலையில் நமக்கேன் வம்பு என்ற முறையில் மக்கள் அந்த ஒருவருக்கே ஓட்டளிப்பார்கள். உடனே பத்திரிக்கையில் அவருக்கு 98 சதவிகிதம் ஓட்டு கிடைத்ததாக செய்தி வரும். இது உண்மையான ஜனநாயகமல்ல.

நம்மிரு நாடுகளிலும் நடைமுறையிலுள்ளது பார்லிமென்டரி ஜனநாயகம். இந்த ஜனநாயகத்தில் அவசியம் ஒன்றுக்கு மேற்பட்ட கட்சிகள் இருக்கும். அவர்கள் தங்களின் திட்டங்களை மக்களின் முன் வைப்பார்கள். ஒன்று மக்களை இந்திரபுரிக்கு அழைத்துச் செல்கிறேன் என்று கூறும். மற்றொரு கட்சி சந்திரபுரிக்கு அழைத்துச் செல்வேன் எனலாம். மற்றொரு கட்சி இந்நாட்டிலேயே சுகவாழ்வு தருகிறேன் என்று கூறும். இவைகளை ஆராய்ந்து, மக்களுக்கு நன்மை செய்வதற்காக செயல்படும் தலைவர்கள் மக்கள் ஆட்சியில் அமர்த்துவர் அல்லது ஆட்சி மன்றத்தில் அமர்த்தி ஆளும் கட்சிக்கு ஆலோசனை கூறச் செய்வர். இதுதான் பாராளுமன்ற நாகரிகம்.

அதுவன்றி ஒரு கட்சியை மற்றொரு கட்சி வீழ்த்த, தாழ்த்த முனைந்தால் அது ஜனநாயகப் பண்புக்க முற்றிலும் மாறுபட்டது. ஜனநாயகத்தையே அது ஒழித்துவிடும். கட்சிகளுக்கிடையே மாச்சரியங்களின்றி மற்ற கட்சியின் கொள்கைகளுக்கு மதிப்பளிக்கும் பண்பு வளர்ந்தால் அங்கு பாராளுமன்ற ஜனநாயகம் நல்ல பயனைத் தரும். இத்தகைய ஆட்சி முறையில் குறைபாடுகள் இருக்கலாம். ஆனால், மக்களிடையே இந்தப் பண்பு வளர வளர நல்வாழ்வு பெற முடியும்.

ஆதியிலிருந்து நாங்கள் ஆண்டு வருகிறோம் என்பதாலோ, ஆண்டவன் அளித்தான் என்பதாலோ ஒருவருக்கு ஆட்சி உரியதாகிவிடாது. 22 வயதுக்கு மேற்பட்ட யாரும், அவர் ஆறாவதுவரை படித்திருந்தாலும் ஆக்ஸ்போர்டு பல்கலைக் கழகத்தில் ஆறுவருடம் படித்திருந்தாலும், ஏழடி உயரமுடைய வரானாலும் என்னைப் போல் குள்ளமானவராக இருந்தாலும், சிகப்பாக இருந்தாலும், கருப்பாக இருந்தாலும், பணக்காரராக இருந்தாலும், ஏழையாக இருந்தாலும், தோட்ட முதலாளியாக இருந்தாலும் தொழிலாளியாக இருந்தாலும் மக்கள் ஆதரவைப் பெற்றவரே ஆட்சி பீடம் ஏற முடியும். இதுதான் பார்லிமெண்டரி ஜனநாயகம்.

ஆளும் கட்சியும் எதிர்க் கட்சியும்:

ஆளும் கட்சியும், எதிர்க்கட்சிகளும் ஒன்றுடன் ஒன்று பகைத்துக் கொள்ளாமல், மாச்சரியங்களை வளர்த்துக் கொள்ளாமல் இருக்க வேண்டும். ஒரு வீட்டிலே இரண்டு குடித்தனக்காரர்கள் இருக்கலாம். பின் வீட்டவர் இருக்கலாம். பின் வீட்டவர் சைவமாக இருக்கலாம். முன் வீட்டவர் இறைச்சி சாப்பிடுவராக இருக்கலாம். ஆனால் அவர்களுக்குள் பகை வளர்த்துக் கொண்டால் இருவருக்கும் நிம்மதி இருக்காது.

இறைச்சியை யார் தின்பது? மனிதன் தின்பதா ? கழுகல்லவா தின்னும் என்று சைவ உணவு உண்பவரும், காய்கறியை யார் உண்பார்கள்? காக்கை, கொக்ககளல்லவா தின்னும் என்று இறைச்சி சாப்பிடுபவரும் ஒருவரையயாருவர் திட்டிக் கொண்டால் அக்கம் பக்கத்திலுள்ளவர்கள் மத்தியஸ்தத்திற்கு வர வேண்டியிருக்கும். இவ்வித சச்சரவு நாட்டில் நிகழ்ந்தால் அண்டை அயல் நாடுகள் புத்தி சொல்ல வரும். புத்தகங்களோடு அல்ல, பீரங்கிகளையும், துப்பாக்கிகளையும் கொண்டு வரும். அது நாட்டின் பாதுகாப்புக்குக் கேடு தரும்.

அரசியல் ஈடுபடுபவர்கள் அதற்கேற்றவாறு அரசியல் திட்டங்கள் இலக்கணங்கள், மரபுகள் ஆகியவைகளை அறிந்து அதில் ஈடு பட வேண்டும். இல்லாவிட்டால் நாடு சர்வாதிகாரிகளின் கையில் சாய்ந்து விடும் வல்லரசுகளின் கைக்குப் போய்விடும். ஜனநாயகம் ஆலமரத்தைப் போன்றது. அதன் விழுதுகள் போன்று தழைத்து ஆழ ஊன்றி வளர வேண்டும். அதுவே உண்மையான பாராளுமன்ற ஜனநாயகம் என்றார் அண்ணா. அண்ணாவின் பேச்சிலே இடையிடையே தோன்றிய நகைச்சுவையை மக்கள் கையயாலி எழுப்பி மகிழ்ச்சியோடு ரசித்தனர் . (தமிழ்முரசு 17.07.1965)

Tuesday, September 7, 2021

பாரதியார் மறைவு கவிச்சிங்கம் ராஜரி´ சேலம் அர்த்தநாரிச வர்மா

 பாரதியார் மறைவு   

கவிச்சிங்கம் ராஜரி´  சேலம் அர்த்தநாரிச வர்மா

(27.7.1874 - 7.12.1964)

ராஜாஜியை விட 4 ஆண்டுகளும், மகாகவி பாரதியாரைவிட 8 ஆண்டு களும் வயதில் மூத்தவர். பாரதியார் மறைவுக்குப் பின் ‘வீரபாரதி’ என்று பாரதியாரின் பெயரில் பத்திரிகை நடத்தியவர். 

இப்பாடல் பாரதியார் மறைந்த மறுநாள் 13.09.1921 அன்று எழுதப்பட்டு, அடுத்த நாள் 14.9.1921 ‘சுதேசமித்திரன்’ இதழில் வெளி வந்துள்ளது. 

பாரதியார் ‘காலனுக்கு உரைத்தல்’ என்ற பாடலில் ‘காலா, உனை நான் சிறு புல்லென மதிக்கிறேன் - என்றன் காலருகே வாடா, சற்றே உனை மிதிக்கிறேன்’ என்று பல்லவியில் கூறி 1919 டிசம்பர் மாதம் சுதேசமித்திரன் பத்திரிகையில் வெளியிட்டார்.

‘காலன் தன்னைக் கெட்ட மூடன் என்று கேவலப்படுத்திய பாரதியாரைக் கொல்லச் சமயம் பார்த்துக் கொண்டிருந்தான். அவன், பாரதியார் தேங்காய் பழம் கொடுத்து, அன்பு செலுத்திய பார்த்தசாரதி கோயில் யானை மதம் பிடித்து அவரைத் தூக்கியயறிந்து காயப்படுத்தும்படி செய்து (பல நாட்கள் துயருற்ற நிலையில்) 11.9.1921 அன்று அவரது உடலையும் உயிரையும் வேறாக்கினான்’.

மறுநாள் வர்மா காலனைப் பழித்து பாரதியாருக்கு இரங்கற்பா பாடினார். இப்பாடல் 14.9.1921 அன்று ‘சுதேசமித்திரன்’ நாளிதழில் வெளியிடப்பட்டது.

 இக்கவிதையில் ‘நேற்று’ என்று குறித்திருப்பதைப் பார்த்தே இக்கவிதை இவர் பாரதி மறைந்த மறு நாளிலேயே, பாடி இருக்கிறார் என்பதை உணரலாம். தேச பக்தராகவும்,தேசிய கவிஞராகவும், (வன்னிய சமுதாயப் பிரமுக ராகவும்), விளங்கிய கவிச் சிங்கம் ராஜரி´ அர்த்த நாரிச வர்மா மகாகவி பாரதியாரைப் போலவே தேச பக்திப் பாடல்களைப் பாடியுள்ளார். 

இவர்சமஸ்கிருதத்தை கசடறக் கற்றவராகவும், ஆங்கிலப் புலமைப் பெற்றவராகவும், தமிழ்க் கவிஞராகவும், தமிழிசையான கர்நாடக சங்கீ தத்தை அறிந்தவராகவும் திகழ்கிறார்.

இவர் மகாகவி பாரதியின் பெயரால் வீரபாரதி என்ற வார மும்முறை இதழைக் காங்கிரசு கட்சியை ஆதரித்து வெளியிட்டார். பிரிட்டிஷ் அரசு அப் பத்திரிகையை எதிர்த்து வழக்குத் தொடுத்து நிறுத்தி விட்டது. (ஆத்மா சாந்தி அடைய வேண்டும் என்று கூறுவது மரபு. வர்மா மீண்டும் பிறப்பாய் பணி புரிவாய் என்று கூறுகிறார்.)

                       - பேரா.தி.வ. மெய்கண்டார்

கவிச்சிங்கம் வர்மா பாரதி மீது எழுதிய இரங்கற்பா....

இடியேறு எதிர்த்து படவர வென்னச்

செந்தமிழ் மாது நொந்து வருந்தவும்

இசைத்தமிழ் வாணர் அசையா தழுங்கவும்

நேற்று நின்னுடலுயிர் வேற்றுமை கண்ட

கூற்றுவ னென்னும் மாற்றலன் நின்னுயிர்

பருகின னன்றி யுருகின னின்றே

தமிழ்ச்சுவை யின்பஞ் சற்று மறியான்

அமிழ்த்தின் றேறல் அதுவென வறியான்

ஒப்பிலா பாரதி சுப்பிர மணியநின்

நாட்டுப் பாட்டின் நலஞ்சிறி துணரான்

கண்ணன் பாட்டின் கருத்தைத் தேறான்

வீரச் சுவையதில் விளங்குவ துணர்கிலான்

நேர மின்னும் நெருங்கிலை யுண்டான்

நினைக்க நினைக்க நெட்டுயிர்ப் பெடுக்கும்

வினைவிளை காலம் வேறில்லை

பினையும் பிறப்பாய் பெறுவாய் பணியே!

 -ஆர்வலன் சு. அர்த்தநாரீச வர்மா

இரங்கல் பாடலுக்கு விளக்கம்: 

இடிபோல் முழங்கும் ஆண் யானை குணங்கெட்டு மதம் பிடித்து வர, செந்தமிழ் அன்னை மனம் நொந்து வருந்தவும் இசை பாடுவோரும் தமிழ்ப் புலவரும் காலசையாமல் மனம் வருந்தி யழியவும் நேற்று எமன் என்னும் பகைவன் உன் உடலையும் உயிரையும் பிரித்து வேறாக்கினான். அவன் உன் உயிரைக் குடித்தானே தவிர இரக்கப் பட்டவனல்லன் ; உன் தமிழின் சுவையின் இன்பத்தைச் சிறிதும் அறிய மாட்டான். அது அமிர்தத்தின் தெளிவென்று அவனுக்குத் தெரியாது. இணையற்ற சுப்பிரமணிய பாரதி! கூற்றுவன் நின்று நாட்டின் நன்மையைச் சற்றும் உணரமாட்டான். கண்ணன் பாட்டின் கருத்தைத் தெரிந்து கொள்ள மாட்டான். அதற்குள் உன் உயிரையுண்டான். இதை நினைக்க நினைக்க மூச்சு திணறுகிறது. ஊழ்வினை உருத்து வந்து உன் உயிரைக் குடிக்கும் கலம் இதைவிட வேறில்லை. மீண்டும் பிறப்பாய் சுதந்திரப் போராட்டப் பணி புரிவாய்.

(கவிதா மண்டலம், நவம்பர் 2001, மற்றும் ஜனவரி 2011)

காலஞ்சென்ற பாரதியாரின் நூல்கள்...

 காலஞ்சென்ற பாரதியாரின் நூல்கள்.....


தென்னாட்டுத் தாகூரெனப் போற்றப்பட்டு வந்த ஸ்ரீமான் சி.சுப்பிரமணிய பாரதியின் மனைவியார் நமக்கு அனுப்பியுள்ள ஒரு நிருபத்தை மற்றோரிடத்தில் வெளியிட்டிருக்கின்றோம். காலஞ்சென்ற பாரதியாரின் பாடல்களும் வசனங்களும் ஒழுங்காக வெளியிட முயற்சி செய்யப்படுகிறது என்பதை அறிந்த நாம் பெரிதும் சந்தோ´க்கிறோம். இதற்காகப் பொருளதவி செய்யும் படி தமிழ்நாட்டாரை ஸ்ரீமான் பாரதியாரின் மனைவியார் கேட்கிறார். இவ் வேண்டுகோளுக்கு தமிழ் நாட்டார் எவ்விதத்திலும் பின்வாங்க மாட்டார் என்று நம்புகிறோம். 

ஸ்ரீமான் பாரதியார் ஐரோப்பாவிலேனும் அமெரிக்காவிலேனும் பிறந்திருப்பாராயின் அவருக்கு இது காலை எத்தனை ஞாபகச் சின்னங்கள் ஏற்படுத்தப்பட்டிருக்கும் என்பதை நாம் கூற வேண்டுவதில்லை. தமிழ் நாட்டாரிட மிருந்து அவ்வளவு பெரிய நன்றியறிதலை நாம் எதிர் பார்க்கவில்லையே யாயினும் அவருடைய நூல்கள் நல்ல முறையில் வெளி வருவதற்கேனும் போதிய துணை புரிவார்கள் என்று நம்புகிறோம்.

‘நவசக்தி’ உப தலையங்கம் 1921, செப்டம்பர் 30)

ஸ்ரீமான் சி. சுப்பிரமணிய பாரதி மனைவி செல்லம்மா பாரதியின் கடிதம்...

தேசாபிமானப் பெருங் கவியான எனது அரிய கணவர் ஸ்ரீமான் சி. சுப்பிர மணிய பாரதியாரின் அகால மரணத்தைக் குறித்து, எனக்கு பல வகைகளில் அநுதாபம் காட்டிய எண்ணிறந்த நண்பர்களுக்குப் பகிரங்கமாக நன்றி கூறுவதற்காக நான் இந்த கடிதத்தை எழுதலானேன். தமிழ் நாட்டிலுள்ள பல சங்கத்தார்களும், சபையார்களும், நண்பர்களும் என்பால் அநுதாபம் காட்டிக் கடிதங்கள் அனுப்பியிருக்கிறார்கள். அவர்களுக்கெல்லாம் தனித் தனிக் கடிதம் எழுதுவதற்கு, நான் தற்சமயம் இயலாதவளாயிருக்கிறேன். எனவே, இப் பத்திரிகை வாயிலாக அவர்கள் அனைவருக்கும் எனது நன்றியை அறிவித்துக் கொள்கிறேன்.

பாரதியார் எனக்குப் பெரிய ஆஸ்தியாக வைத்து விட்டுப் போயிருப்பது அவரது அரிய பாடல்களும், வசன காவியங்களுமேயாகும். அவற்றை யயல்லாம் அச்சிட்டு வெளியிடுவதற்குரிய ஏற்பாடுகளை நானும் எனது நண்பர்களும் செய்து வருகிறோம். இந்த முயற்சியில் எனக்கு பொருள் உதவி புரிவதாகச் சில நண்பர்கள் முன் வந்திருக்கிறார்கள். 

பாரதியாரின் நூல்களை அச்சிட்டு வெளியிடுவதற்கு நிதி சேர்க்குமாறு அங்கங்கே சில இடங்களில் பஞ்சாயத்துக்கள் (கமிட்டி) ஏற்பட்டிருப்பதாகவும் அறிகின்றேன். எனவே இந்த வி­யத்தில் எனக்கு உதவி செய்ய விரும்புவோரெல்லாம் அடியிற் கண்ட  எனது விலாசத்திற்குத் தங்கள் உதவிகளைத் தாமதமின்றி அனுப்புபவர்கள் தங்களால் இயன்ற சிறு தொகையை அனுப்பினால், புஸ்தகம் வெளியானவுடன், அந்தத் தொகைக்குரிய புஸ்தகங்களை அனுப்ப சித்தமாயிருக்கின்றேன்.

 (பாரதியார் பாடல்கள் அடங்கிய முதல் தொகுதி நவம்பர் மாத இறுதிக்குள் வெளிவரும்). 

இவ்வி­யத்தில் எனக்கு எவ்வளவு சிறிய உதவி செய்பவர்களும், எனது குடும்பத்திற்கு உதவி செய்தவர்கள் மட்டுமல்ல, ‘தமிழ் நாட்டிற்குப் புத்துயிர் அளிக்கக் கூடிய’ பாரதியாரின் அரிய பாடல்களும், பிறவும் உலகத்தில் வெளிவரச் செய்யும் பெரு முயற்சிக்குத் துணை புரிபவர்களும் ஆவார்கள். தாய் வாழ்க! வந்தே மாதரம்!

இங்ஙனம்

செல்லம்மாள்,

67, துளசிங்க பெருமாள் தெரு ( நவசக்தி, 30.9.1921)

(கவிதா மண்டலம், ஜனவரி 2011)

Monday, September 6, 2021

வ.உ.சி. எனும் நவீனன்

 வ. உ. சி எனும் நவீனன்.


(வ. உ. சி குறித்த புதிய ஆவணத்தின் நகல் ஒன்று என்னிடம் சில ஆண்டுகளாக இருக்கிறது. அதன் தொடர்ச்சியாக எழுந்த சிந்தனைகளை வ. உ. சி பிறந்த நாளை யொட்டி கட்டுரையாக எழுதலாம் என நினைத்தும் ஒவ்வொரு ஆண்டும் தள்ளிப்போயிற்று. இந்த ஆண்டு அவரது நூற்றைம்பதாவது தொடக்கம் ஆகும். இனியும் தள்ளிப்போட முடியாது என்பதால் இப்பதிவு. இன்றும் கூட காலையில் தொடங்கிய பணி இடையூறுகளைக் கடந்து பின்னிரவில் தான் முடிந்தது,) 

 

வ. உ. சி ஒரு நவீன சிந்தனையாளர். அவரது சைவப் பின்புல மரபும், அரசியலில் திலகரின் சீடராக அறியப்படுவதும் அவரை ஓவியமாகத் தீட்டிய ஓவியர்களின் கை வண்ணமும்  மட்டுமல்லாமல் அவரது கருத்தியல்கள் தொடர்ந்து இருட்டடிப்பு செய்யப்படுவதும் அவரது நவீன சிந்தனயை மறைக்கிறது. 


அவர்தான் இந்தியாவின் முதல் அரசியல் வேலை நிறுத்தத்தை வெற்றிகரமாக நடத்தியவர்களில் ஒருவர். இந்தியாவிலேயே வேலை நிறுத்தம் மூலமாக 50 விழுக்காடு ஊதிய உயர்வை கோரல் மில் தொழிலாளர்களுக்கு பெற்றுத் தந்தவர். 


இந்தியாவின் அனைத்து பாரம்பரிய தொழில்களையும் காலனி அரசு தனது வன்முறைகள் மூலம் அழித்தொழித்தது. அன்னிய மூலதனத்தில் தொடங்கப்பட்ட தொழில்கள் மட்டுமே ஆதரிக்கப்பட்டன. இதனால் இந்தியாவின் பாரம்பரிய கைவினைக் கலைஞர்கள் பிச்சைக்காரர்கள் ஆக்கப்பட்டனர். அல்லது புதிய மூலதனத்தில் தொடங்கப்பட்ட ஆலைகளில் கூலித் தொழிலாளர்கள் ஆனார்கள். 


இந்த இரட்டைத் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் ஒரு கப்பல் நிறுவனத்தை வ. உ. சி தொடங்கினார். காலனி ஆட்சி தயவு இல்லாமல் பங்குகள் வெளியீடு மூலம் ரூபாய் 10 லட்சம் மூலதனத்தில் ஒரு சுதேஷி நிறுவனம் நிறுவப்பட்டது மட்டுமல்லாமல் அந்த நிறுவனத்தில் கப்பல்கள் வெற்றிகரமாக வருவாய் ஈட்டியதன் பின்னணியில் வ. உ. சி குழுவினரின் வனிக உத்திகள் பெரும் பங்கு வகித்தன. 


இலங்கைக்கு கிழக்கிந்திய கப்பல் கம்பெனி கட்டணம் ஒன்னேகால் ரூபாய் என்றால் சிதம்பரனார் ஒரு ரூபாயில் மகக்ளை ஏற்றிச்சென்றார். கம்பெனி கப்பலும் ஒரு ரூபாய் என கட்டணத்தைக் குறைத்தால் சிதம்பரனார் அரை ரூபாய்க்கு ஏற்றிச்சென்றார். இந்த வெற்றி தொடர்ந்திருந்தால் மேலும் பல சுதேஷி நிறுவனங்கள் தென்னிந்தியாவில் உருவாகி இது சுதந்தரமான பொருளாதார மண்டலமாக உருவாகியிருக்கும். மேலும் விதேஷி - சுதேஷி வனிகப்போட்டியால் தொழிலாளர்களின் கூலி பேர சக்தியும் வலுவடைந்திருக்கும்.


இதனால்தான் சிதம்பரனார் தனது அடிமடியிலேயே கை வைப்பதாக காலனி ஆட்சி எண்ணியது. அவரை அற்ப காரணம் காட்டி கைது செய்து சிறையில் அடைத்து வன்கொடுமைகள் மூலம் முடக்க நினைத்தது. ஆனாலும் அவர் உடல் முடங்கியதே தவிர அவரது நவீன சிந்தனைகள் முடங்க வில்லை. 


ஒரு பக்கம் தேசியத் தலைவர்கள் வ. உ. சியை பகிரங்கமாகப் புறக்கணித்தனர்.  இருந்தும் தொழிற்சங்கப் பணிகளில் மும்முரமாக ஈடுபட்டார். திரு. வி. க, பெரியார் போன்ற மறுமலர்ச்சி சிந்தனையாளர்களுடன் இணைந்து பணியாற்றினார். மறுபக்கம் வறுமையில் வாடினார். அவரது குடும்பம் அன்றாடங்களை கழிக்கவே திண்டாடியது. அவருக்குக் கொடுந் தண்டணை விதித்த வெள்ளையின நீதிபதி வாலேஸ் அவர்களே  வ. உ. சி குடும்பத்தின் வறுமையை அறிந்து அவரிடம் இருந்து பறித்த வழக்கறிஞர் உரிமத்தை மீண்டும் வழங்கினார். ஆனால் ஒரு அன்னிய அதிகாரிக்கு இருந்த இரக்க சிந்தனைகூட சுதேஷி வழக்கறிஞர்களுக்கு இல்லை. அவரை உதவி வழக்கறிஞராகக்கூட சேர்த்துக் கொள்ள ஒரு தமிழரும் முன்வரவில்லை.  ஒருவேளை தமிழக காங்கிரஸ் தலைவர்களும் பிரமுகர்களும் ஆதரித்திருந்தால் சிதம்ரனார் இன்னும் பிரமாண்டமாக வெளிப்பட்டிருப்பார். 


இதுபற்றியெல்லாம் கவலைப்படாமல் தனது அரசியல் அறத்தை வளர்த்துக் கொண்டார். அரசியல் விடுதலை மட்டுமல்லாமல் பொருளாதார விடுதலை, பண்பாட்டு விடுதலை மூன்றும் இணைந்தால் தான் முழுமையான விடுதலை என்பதை அறிந்தார். பெரியாருடன் மேலும் நெருக்கமாகி, காங்கிரஸ் மாநாட்டில் வகுப்பு வாரி பிரதிநித்துவம் கோரி தீர்மானம் முன் மொழிந்தார். மறுபுறம் தமிழரின் அறப்பண்பாட்டின் மீது கவனம் செலுத்தினார். திருக்குறளை ஆழ்ந்து கற்று புதிய உரையுடன் ‘மெய்யறம்’ எனும் நூலை எழுதினார். ஆசிரம சனாதன அமைப்புக்கு மாறாக குறள் அறத்தை முன்வைத்தார். தொடர்ந்து மேலும் பல நூல்களுக்கு உரை எழுதினார். இறுதியாக தொல்காப்பியரின் இளம்பூரணர் உரையை தனது விளக்கத்துடன் பதிப்பித்தார். 


அத்துடன் அனைத்து மதங்களையும் சமமாகப் பாவித்து மதநல்லிணக்கத்தைப் பேணினார். பகுத்தறிவை வளர்த்தெடுத்தார். பெரியாரின் கொள்கைகளை ஏற்று பல கூட்டங்களில் பேசினார். வ. உ. சி தலைமையிலேயே பகுத்தறிவு மாநாடு நடைபெற்றது. இறுதியாக பார்ப்பனியம் நீக்கப்பட்ட தமிழகமே முன்னேறும் என்று பிரகடனம் செய்தார். இந்த பிரகடனம் அவர் இறப்பதற்கு சில நாள்கள் முன்னர் மதுரையில் நடந்த பகுத்தறிவு மாநாட்டுக்கு வ. உ. சி அனுப்பிய வாழ்த்துச் செய்தியாகும். 


இதேபோன்று நவீன பொருளாதார சிந்தனைகளையும் வளர்தெடுத்துக் கொண்டு செயல்பட்டார். கப்பல் போக்குவரத்து நிறுவனம் இருபதாம் நூற்றாண்டின் நவீன மூலதன திரட்டல் முறையான பங்கு முதலீட்டின் மூலம் தொடங்கப்பட்டது. எனில் அவர் இறப்பதற்கு 23 நாள்களுக்கு முன்னர் அவர் எழுதிய உயில் போன்ற கடிதம் ஆச்சரியப்பட வைக்கிறது.


என்னதான் தனது குடும்பத்தின் அன்றாடங்களைச் சமாளிக்கவே அல்லல்பட்டாலும் தனது குடும்பத்தின் எதிர்காலத்தை நினைத்து இரண்டு காப்பீட்டு நிறுவனங்களில் தலா ஆயிரம் ரூபாய் வீதம் தனது ஆயுளை காப்பீடு செய்துள்ளார் என்பது அந்த உயில் போன்ற கடித்தத்தில் தெரியவருகிறது. தனது பிற கடன்களுக்கு எந்தெந்த நகை. சொத்துகளை விற்றுக் கடனை அடைக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல தகவல்களைக் கூறும் அக் கடிதத்தில் மேற்சொன்ன காப்பீடுகள் மூலம் தனது மரணத்துக்குப் பிறகு கிடைக்கும் தொகையைக் கொண்டு தனது இரு மணமாகாத மகள்களின் திருமணங்களை நடத்திவைக்க வேண்டும் என்று கோருகிறார். 


அப்போதே பங்குச் சந்தை, காப்பீடு போன்ற புதிய பொருளாதார சிந்தனைகள் கொண்டிருந்தார் என்பது தெரிகிறது. இந் நிலையில் சில ஆண்டுகள் முன்னர் கோயில்பட்டி சென்றபோது சிதம்பரனார் குறித்த புதிய ஆவணம் ஒன்றின் நகல் கிடைத்தது. அது கோவில்பட்டி கட்டிட கூட்டுறவு சங்க இயக்குனர்களில் ஒருவராக வ. உ. சிதம்பரனால் பங்காற்றியதைக் குறிக்கும் ஆவணம் ஆகும். இந்த ஆவணம் 11. 09. 1925 அன்று நடைபெற்ற கூட்டுறவு சங்க இயக்குநர் குழு கூட்டம் வ. உ. சிதம்பரனார் தலைமையில் நடைபெற்றதைக் குறிப்பிடும் அலுவலக குறிப்பு ஆகும். 


இக் கூட்டத்தில் அடுத்த நிதி ஆண்டு (1926 -27) நிதி நிலை அறிக்கை குறித்து கூட்டுறவு பதிவாளர் அவர்களிடம் வந்த சுற்றறிக்கை ஆங்கிலத்தில் வாசிக்கப்பட்டு தமிழில் மொழியாக்கம் செய்தும் கூறப்பட்டதையும் அடுத்த ஆண்டு கூட்டுறவு சங்க செயல்பாட்டுக்காக அரசிடம் இருந்து ரூ 30,000/- கடனுதவி கோரும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதையும் ஆவணம் தெரிவிக்கிறது. 


இக் காலகட்டங்களில் கோவில்பட்டியில் வாழ்ந்த வ. உ. சி வாழ்க்கை குறித்த சில அடிப்படை தகவல்களும் கிடைத்தன. பொதுவாக அங்கு அவர் வழக்கறிஞர் தொழில் செய்ததாக கூறப்பட்டாலும் தனித்து பெரிய வழக்குகளை எடுத்து நடத்தியதாக நம்பகமான தகவல்கள் கிடைக்கவில்லை. மிகச் சிறிய வழக்குகள் மட்டுமே கிடைத்துள்ளன. அப்படியே இருந்தாலும் பெரிய வழக்குகளில் வெற்றிபெற தேவையான சட்ட நுணுக்கங்களை வழங்குபவராக அல்லது உதவியாளர் என்ற அளவிலேயே பயன்படுத்தப்பட்டிருக்கலாம் என்கிறார்கள். அதாவது சிதம்பரனாரின் சட்ட நுணுக்கங்களைப் பயன்படுத்திக்கொண்ட சமுதாயம்  அவரை வெளிப்படையாக அங்கிகரிக்கவில்லை என்பதாகவே தெரிகிறது.


இதனை எதற்கு இங்கு குறிப்பிடுகிறேன் என்றால் இங்கு சிதம்பரனாரின் வாழ்க்கை என்பது ஒரு நடுத்தர வகுப்பாரின் நிலைமைக்கு மேல் இல்லை. கடன்களை நம்பிதான் வாழ்ந்துள்ளார். ஆனால், அவரது நவீன சிந்தனைகள் மேலும் உரம் பெற்றுள்ளன. தமிழ்நாடு போன்ற ஒரு சமுதாயத்தில் கூட்டுறவு இயக்கத்தின் தேவையை இன்றிலிருந்து நூறு ஆண்டுகளுக்கு முன்பே சிந்தித்து செயலாற்றி உள்ளார் என்பது இந்த ஆவணத்தில் இருந்து தெரிகிறது. 


அதேபோல தமிழர்கள் பார்ப்பனிய நீக்கத்தின் அவசியத்தை உணர வேண்டும் என்பதை தனது செய்தியாக கூறிச் சென்றுள்ளார்.

கடைசிகாலம் வரை தமிழ் பண்பாட்டு மரபை ஆய்வு செய்தார். தொல்காப்பியத்தின் முக்கியப் பகுதிகளின் இளம்பூரணர் உரையை விளக்கங்களுடன் பதிப்பித்துள்ளார்.


ஆனால் இந்த தகவல்கள் அதன் ஆழ அகலத்துடன் வரலாற்றில் பதிவு செய்யப்பட வில்லை. கப்பலோட்டிய தமிழன், செக்கிழுத்த செம்மல் ஆகியவற்றுடன் சைவப் பற்றாளர் எனும் அடையாளம் மட்டுமே பதியும் படி செய்யப்பட்டிருக்கிறது.


வ. உ. சிதம்பரனாரின் ஆவது 150 ஆண்டு தொடக்கத்தை தமிழக அரசு ஆக்கப்பூர்வமாக கொண்டாட திட்டங்களை அறிவித்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. இச் சூழலில் வ. உ. சி என்ற ஆளுமை நவீன சிந்தனையின் ஊற்றாக சித்தரிக்கப்பட வேண்டும் என்பது பகுத்தறிவாளர்களின் அவா ஆகும்.

தந்தை பெரியார் பற்றி வ.உ.சி.

 தந்தை பெரியார் பற்றி வ.உ.சி.

திரு. இராமசாமி நாயக்கரைப் பற்றி நான் அதிகம் சொல்ல வேண்டிய தில்லை. அவரைப் பற்றி அய்ரோப்பாவில் பார்லிமெண்டில் பேசப்படுகின்றது என்றால் நாயக்கரின் புகழைப் பற்றி நான் என்ன சொல்வது?

திரு. நாயக்கரிடத்தில் உள்ள விசே­ குணம் என்னவென்றால், மனத்திற் படும் உண்மையை ஒளிக்காமல் சொல்லும் ஓர் உத்தம குணந்தான். அவரை  எனக்கு 20 வருடமாய்த் தெரியும். அவரும் நானும் ஒரே இயக்கத்தில் சேர்ந்து வேலை செய்து வந்தோம். அந்த இயக்கத்தில் (காங்கிரஸ்) நேர்மையற்றவர்கள் சிலர் வந்து புகுந்த பின், நானும் அவரும் விலகி விட்டோம். 

பிறகு, நாயக்கர் அவர்களால் ஆரம்பித்து நடத்தப்பெறும் சுயமரியாதை இயக்கத்தைப் பார்த்து, இது எல்லா இயக்கத்திலும் நல்ல இயக்கமாயிருப்பதால் நானும் என்னாலான உதவியை அவ்வியக்கத்துக்குச் செய்து வருகிறேன். சுருங்கச் சொல்லின், நாயக்கரவர்கள் தமிழ்நாட்டின் எல்லாத் தலைவர்களையும் விட பெரிய தியாகி என்றுதான் சொல்ல வேண்டும்.

(கப்பலோட்டிய தமிழர் வ.உ.சிதம்பரம் (பிள்ளை) அவர்கள் 1928 ஆம் ஆண்டில் கூறியது)

பெ.மணியரசனுக்கு ஹரிஹரன் விடை

 16-02-2015ம் நாள் சென்னை, சங்கம் நிகழ்வில் நடைபெற்ற ‘திராவிடமா? தமிழ்த் தேசியமா?’ என்ற விவாதத்தில் தோழர் மணியரசன் அவர்கள் தான் ஏற்றுக்கொண்ட தமிழ்த் தேசியத்திற்கு ஆதரவாக திராவிடத்தின் மீது பல அவதூறுகளை விட்டெறிந்தார். ஆனால் ஒன்றை மறந்து விட்டார்; வரலாறுகள் முன்பு போல் இல்லாமல் பலரால் பலவிதமாக பதிவு செய்யப்பட்டே வந்திருக்கிறது என்பதை மறந்துவிட்டார். 

இப்படிப் பட்ட அவதூறுகள் அவரைப் பற்றிய மதிப்பீட்டை இங்கு பல தோழர்களிடம் இழக்க நேரும் என்பதை மறந்துவிட்டார். முதலில் தலைப்பின் கீழாக தமிழ்த்தேசியத்தின் தேவையையும் அதை முன்னெடுக்க வேண்டிய முறையையும் பேசியிருந்தார் என்றால் நன்றாக இருந்திருக்கும். அதை விடுத்து திராவிடத்தின் மீதும், பெரியாரின் மீது அவதூறுகளை அள்ளி வீசும் களமாக பயன்படுத்திக் கொண்டார். முதல் அவதூறு ‘ஆதிதிராவிடர் என்ற பதத்தை அயோத்தி தாசர் கைவிட்டார்’ என்பதாகும்.


முதன் முதலாக மக்கள்தொகை கணக்கெடுப்பு என்பது 1861லிருந்து 1881 வரையும் எடுக்கப்பட்டது, அதன் பிறகு சாதிவாரியாக - மிகவும் குறிப்பாக ஒடுக்கப்பட்ட மக்களின் கணக்கெடுப்பை துல்லியமாக கணக்கெடுக்கும் வகையில் - 1910ம் ஆண்டு முன்னெடுக்கப்பட்டது. 

பிரிட்டிஷ் இந்தியாவில் அதுவும் குறிப்பாக அன்றைய சென்னை மாகாணத்தில் மக்கள் தொகை கணக்கெடுப்பை தனது அரசியல் போராட்டமாக பயன்படுத்திக்கொண்டவர் என்றால் அது அயோத்தி தாசராகத்தான் இருக்க முடியும். ஆம் 1861ல் இருந்து 1881 வரை கிருத்துவர்களும், இஸ்லாமியர் அல்லாதவர்களும் இந்துக்கள் என்று வலிந்து திணித்து ஒரு கணக்கெடுப்பு எடுக்கப்பட்ட பொழுது ‘தாங்கள் இந்துக்கள் இல்லை’ என்று சொல்லும் விதமாக 1881ம் ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின் பொழுது ‘சாதியற்ற தமிழர்கள்’ என்று பதிவிடச் சொல்லி அரசாங்கத்திடம் மனு கொடுத்தார். ஆனால் அவரே 1910ம் ஆண்டு “சாதிபேதமற்ற திராவிடர்களென்று” பதிவிடக் கோரினார்.


“இந்துக்களுக்கு மத்தியில் இந்துவல்லாமல் வாழ்பவர்கள் இத்தேசப் பூர்வக்குடிகளேயாகும். இக்கூட்டத்தோருக்கு இந்துக்கள் சத்துருக்களேயன்றி மித்துருக்கள் ஆகமாட்டார்கள். பெரும்பாலும் இவர்கள் சாதிபேதமற்ற திராவிடர்களும், மதத்தில் பௌத்தர்களுமேயாகும். சென்ற குடிமதிப்பெடுத்த காலத்தில் பறையனென்னும் பெயர் ஆயிரத்து ஐநூறு வருடங்களுக்குப் பின்னரே தோன்றிய சாதிப் பெயரென்று சென்ற சென்சஸ் கமிஷனர் தன்னுடைய குடிமதிப்பு ரிப்போர்ட்டு புத்தகத்திலும் வெளியிட்டிருக்கின்றார்கள். இவைகள் யாவையும் தற்கால சென்சஸ் கமிஷனர் கனந்தங்கிய மிஸ்டர் கேய்ட் அவர்கள் கண்ணுற்று குடிமதிப்பு எடுக்குங்கால் தங்கள் அறியாமையாலும், பயத்தினாலும் இந்துக்களுக்குப் புறம்பான பூர்வ குடிகளில் சிலர் பறையர்களென்றும் கூறுவார்கள். அவர்கள் யாவரையும் அப்பெயரால் குறிக்காது ‘சாதிப்பேதமற்ற திராவிடர்களென’ ஒரே பெயரால் -குறிப்பது உத்தமமும், பிரிட்டிஷ் ஆட்சியில் இந்துக்கள் அடையும் சுதந்திரங்களைச் சாதிபேதமற்ற திராவிடர்டகள் அடையவும் ஏதுவுண்டாகும்,” என அயோத்திதாசர் எழுதியுள்ளார் (17.12.1910)


தோழர் மணியரசன் 1881ல் “சாதியற்ற தமிழர்கள்” என்று அயோத்தி தாசர் மனு அளித்ததை வைத்து, அயோத்தி தாசர் தன் கொள்கையை மாற்றிக் கொண்டார் என்று கூறுகிறார். 


ஆனால் வரலாறு என்ன கூறுகிறது என்றால் 1881க்குப் பிறகு தான் ‘திராவிட’ என்ற அடையாளத்தை அயோத்திதாசர் ஏற்றுக் கொள்கிறார். 1881க்குப் பிறகு பாதிரியார் ஜான் பாண்டியன் அவர்களின் தொடர்பு கிடைக்கிறது. ஜான் பாண்டியன் சென்னை ஆயிரம் விளக்குப் பகுதியில் தலித்துகள் மட்டும் படிக்கக்கூடிய பள்ளியை நடத்தி வந்தார். அவருடன் இணைந்து 1886 ல் திராவிட பாண்டியன் என்ற இதழை இணைந்து ஆரம்பிக்கிறார். அதில் உதவி ஆசிரியராகவும் பணி புரிகிறார். 1907ம் ஆண்டு தனியாக “ஒரு பைசாத் தமிழன்”, “தமிழன்” போன்ற பத்திரிக்கைகளை ஆரம்பிக்கிறார். ஆனால் 17-12-1910ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பிற்கு முன்பாக “சாதி பேதமற்ற திராவிடர்கள்” என்று பதிவிடக் கோருகிறார்.


1881ல் சொன்னதை 1910ல் மாற்றிக் கொண்டார் என்றால் “சாதியற்ற தமிழர்கள்”என்பதில் இருந்து 1910ல் “சாதியற்ற திராவிடர்கள்”என்று தங்களை திராவிடர்களாகவே அடையாளப்படுத்திக் கொண்டார். 


இதை தலைகீழாக மாற்றியே தோழர் மணியரசன் வருட வித்தியாசங்களை மறைத்து அயோத்தி தாசர் தூக்கி எறிந்த திராவிடர் அடையாளத்தை பெரியார் வலுவில் திணித்தார் என்று குறிப்பிடுகிறார்.


தோழர் மணியரசனின் இந்த அவதூறுக்கான மறுப்பை இத்துடன் நாம் கடந்து சென்றுவிடலாம். ஆனால் அவ்வாறு கடந்து செல்வது சரியான வரலாற்றுப் பார்வையாக இருக்க முடியாது. இந்தப் பிரச்சனை குறித்து மட்டும் பேசுவதாக முடிந்துவிடும்.


 இன்று ஆதி திராவிடர்கள் என்று தமிழகத்தில் சட்டப்பூர்வமாக இருக்கிறது. இது எப்பொழுது ஏற்படுத்தப்பட்டது என்பதையும் தெரிந்து கொள்ள வேண்டியது அவசியம் ஆகிறது.


 1914ல் அயோத்திதாச பண்டிதர் அய்யா இறந்துவிடுகிறார். 1912ம் ஆண்டு திரு நடேசன் அவர்களால் திராவிடர் சங்கம் தொடங்கப்படுகிறது. இந்த சங்கமானது பார்ப்பனரல்லதோர் சங்கம் என்ற நிலையிலேயே ஆரம்பிக்கிறது. இதன் பிறகே நீதிகட்சியும் ஆரம்பிக்கிறது. நீதி கட்சியினர் திராவிட மகாஜனசபையினருடன் இணைந்து பார்ப்பனரல்லாதவர்கள் அரசியலை முன்னெடுக்கிறார்கள். இந்த சமயத்தில் தான் தோழர் எம்.சி.ராஜா அவர்கள் 1918ம் ஆண்டு ஆங்கில அரசாங்கத்திடம் ஆதி திராவிடர் என்று அங்கீகரிக்க கோரிக்கை வைக்கிறார். 


1920ம் ஆண்டு தேர்தலில் காங்கிரஸ் தேர்தலை புறக்கணித்த காரணத்தால் நீதிக்கட்சி ஆட்சிக்கு வருகிறது.


 1922ம் ஆம் ஆண்டு ஆதி திராவிடர் என்ற பெயர் அதிகாரப் பூர்வமாக சாதியப் பட்டியலில் இடம் பெறுகிறது.


இவ்வளவு பிரச்சனை செய்து பெயரை மாற்றி முன்னிறுத்த வேண்டிய தேவை ஏன் வந்தது என்று பார்ப்பதும் முக்கியம். “சாதியற்ற தமிழர்”என்று சொன்னவர் “சாதியற்ற திராவிடர்”என்று மாற்றிக்கொள்ள காரணம் என்ன என்று ஆராய்ந்தோம் என்றால், இன்றைய காலகட்டம் போல் ஒடுக்கப்பட்ட மக்களை அன்று தமிழர்களாக பார்த்தது இல்லை சாதி இந்துக்கள். 


பார்ப்பனரல்லோதோர் என்று ஒன்றிணைந்தாலும் சரி, பொதுவுடமைக் கொள்கையை ஏற்றுக் கொண்டவர்களாக இருந்தாலும் சரி, ஒடுக்கப்பட்ட மக்களை தமிழர்களாக ஏற்றுக் கொள்ளவில்லை; ஏன் மனிதர்களாகக் கூட மதித்ததில்லை என்பதை சமீபத்திய பரமக்குடி படுகொலைகள் வரையிலான வரலாறுகளைப் படித்தோம் என்றால் நாம் அறிந்து கொள்ளலாம்.


இந்திய தொழிற்சங்க வரலாற்றில் மிகப்பெரும் முன்னோடியாகத் திகழ்பவர் தோழர் திரு.வி.க அவர்கள். 1921ம் ஆண்டு பின்னி ஆலையில் கூலி உயர்வு உட்பட பல நிபந்தனைகளின் கீழ் வேலைநிறுத்தப் போராட்டம் நடைபெறுகிறது. அதில் ஒடுக்கப்பட்ட மக்கள் இணைந்து கொள்ளவில்லை. அப்பொழுது ஒடுக்கப்பட்ட மக்கள் வேலைக்குச் செல்வதை தடுக்க முயன்ற தொழிற்சங்கத்தினரை அடக்க நடத்தப்பட்ட துப்பாக்கி சூட்டில் சிலர் மரணமடைகின்றனர். 


இதனால் ஏற்பட்ட துவேசம் சாதியக் கலவரமாக மாறி ஒடுக்கப்பட்ட மக்கள் வாழ்ந்த புளியந்தோப்பு பகுதியில் 100 குடிசைகளை எரித்தனர் தொழிற்சங்கத்தை சேர்ந்த சாதிய இந்துக்கள். இதில் ஒடுக்கப்பட்ட மக்களில் சிலரும் மரணமடைந்தனர். இதற்கு எதிர்வினையாக புளியந்தோப்பில் இருந்து மக்கள் கிளம்பி, பார்ப்பனரல்லாதார் வாழ்ந்த பெரம்பூர் பகுதியில் தாக்குதல் நடத்தினர். பின்னர் புளியந்தோப்பு மக்கள் கலவரத்தை அடக்கும் நோக்குடன் அங்கிருந்து அகற்றப்பட்ட முகாம்களில் தங்க வைக்கப்பட்டனர். 


இந்தக் கலவரத்தை தொழிற்சங்கவாதியும், நவசக்தி இதழின் ஆசிரியருமான திரு.வி.க எழுதும் பொழுது “ஹரிஜனங்கள் தமிழர்களை சாரிசாரியாக வந்து தாக்கினர்” என்று குறிப்பிடுகிறார்.


இதன் பொருள் ஹரிஜனங்கள் எனப்பட்ட தாழ்த்தப்பட்ட மக்களை ஒரு மாபெரும் தொழிற்சங்கவாதியே தமிழர்களாகப் பார்க்காமல் ஒதுக்கி வைத்தார் என்பதுதான். 


இந்து தர்மம் இவர்களை பஞ்சமர்கள் என்று கூறி ஒதுக்கியது என்றால் சக தமிழினத்தைச் சேர்ந்தவர்கள் இவர்களை தமிழர்களாகப் பார்க்காமல் ஒதுக்கி வைத்தனர். 


இந்த நிலையே சாதியற்றவர்கள் என்றும், தாங்கள் இந்துக்கள் இல்லை என்றும், மேலும் சாதியற்ற திராவிடர்கள் என்றும், ஆதி திராவிடர்கள் என்றும், ஒடுக்கப்பட்ட மக்கள் தங்களை அடையாளப்படுத்திக் கொள்ள காரணமாக அமைந்தது.


இன்று தோழர் மணியரசன் போன்றவர்கள் தமிழ்த் தேசியம் என்ற பெயரில் தமிழர் பெருமை என்று கூறி, திராவிடத்தில் ஒரு சிலர் செய்த பிரச்சனையை பெரிதுபடுத்தி ஒட்டுமொத்தமாக திராவிடம் என்ற வார்த்தையையும், வடுகர்கள் என்ற இனத்தையும், தமிழர்களுக்கு எதிராக சித்தரிப்பது தான் நடந்து கொண்டுள்ளது. 


தமிழ்த் தேசியம், தமிழின விடுதலை என்று பேசும் பொழுது, அந்த விடுதலை எவ்வாறு அமையவேண்டும் என்று பார்த்தோம் என்றால் நம் வரலாற்றினை நன்றாகப் புரிந்துகொண்டு, யாருக்கும் கெடுதி நினைக்காத, அனைவரையும் அரவணைத்துச் செல்லும் அரசியலே சரியான பாதையாக இருக்கும் என்பதை உணர முடியும். முன்னெப்பொழுதும் இல்லாத நிலையில் இன்று திராவிடத்தின் தேவை அதிகமாகவே இருக்கிறது. 


ஒடுக்கப்பட்ட மக்களின் அடையாளமாக அயோத்திதாச பண்டிதர் அவர்களால் முன்னெடுக்கப்பட்டு, நடேசன் அவர்களால் பார்ப்பனரல்லோதருக்காக என்று அடுத்த அடிக்கு நகர்த்தப்பட்டு, பெரியாரால் அனைவருக்கும் பொதுவான சொல்லாக, எந்த கீழ்மையும் மேன்மையும் இல்லாத ஒடுக்கப்பட்ட மக்களின் போர்க் குரலாக ஒலித்துக் கொண்டிருக்கும் திராவிடம். 

இல்லாத பெருமை பேசும் தமிழ்த் தேசியம், தமிழகத்தில் தமிழரல்லாதோரின் மீதான இனப்படுகொலைக்கே வழிவகுக்கும். 


தமிழ்த் தேசியம் என்பது திராவிடத்தை ஒதுக்கிவிட்டு முன்செல்வது என்பது பாசிசமே.


தோழர் மணியரசன் அயோத்தி தாசர் குறித்த வாதத்தில் வரலாற்றைத் திரித்து பகிர்ந்த அவதூற்றை இங்கே வரலாற்றுடன் இணைத்து பார்த்தோம். 

இதன் பிறகு தோழர் மணியரசன் திராவிடம் என்ற வார்த்தை ஆரியன் மட்டுமே பயன்படுத்தியது, அதனால் அதை மறுக்கிறோம் என்று கூறினார். 


மேலும் திராவிடம் என்பது தமிழனை ஊனமாக்கியது என்றார். 


இது கடைந்தெத்த பொய், வரலாற்றை மறைக்கும் செயல். 


திராவிடம் என்ற வார்த்தை தமிழ்ச் சமூகத்தில் பன்னெடுங்காலமாக உபயோகத்தில் இருக்கும் வார்த்தையே.


 கிபி 7ம் நூற்றாண்டிற்குப் பிறகு தமிழில் பக்தி இலக்கியங்கள் கோலோச்சிய காலகட்டங்களில்தான் சைவ, வைணவத் திருமுறைகள் தமிழ்ச் சமூகத்தில் பெரும் அளவில் இயற்றப்பட்டன. 


இதே காலகட்டம் தான் தோழர் மணியரசன் குறிப்பிட்ட ஆதிசங்கரர் இயற்றிய செளந்தர்யலஹரியின் காலகட்டமும். 


இதைத் திரித்து 2000 ஆண்டுகளுக்கு முன்பாகவே ஆதிசங்கரர் வாழ்ந்தார் என்பது ஆரியத்தின் புரட்டு. 


ஆதிசங்கரர் திராவிட சிசு என்று திருஞானசம்பந்தரைக் குறிப்பிட்டார் என்றால், திருஞானசம்பந்தர் வாழ்ந்த காலம் என்பது கிபி ஏழாம் நூற்றாண்டே. 


திருஞான சம்பந்தரால் குணமாக்கப்பட்ட கூன் பாண்டியன் என்ற அரிகேசரி பாண்டியன் ஆண்ட காலம் கிபி 640 முதல் கிபி 670 வரை. இந்த காலத்தில் வாழ்ந்த திருஞானசம்பந்தரைப் பற்றி ஆதிசங்கரர் செளந்தர்ய லஹரியில் குறிப்பிடுகிறார் என்றால், ஆதிசங்கரர் வாழ்ந்த காலமும் 7ம் நூற்றாண்டே. 


ஆதிசங்கரர் 2000 வருடங்களுக்கு முன்பு வாழ்ந்தவர் என்பது ஆரியப் புரட்டு. 


இந்த ஆரியப்புரட்டைப் போலவே அய்யா மணியரசன் அவர்கள் திராவிடம் என்ற வார்த்தை ஆரியர்கள் மட்டும் பயன்படுத்தியது என்கிறார்.


அதற்கு ஆதாரமாக ராகுல் திராவிட், மணி திராவிட் என்று இருவரின் பெயரைக் காட்டுகிறார். மேலும் பார்ப்பனர்களில் இருக்கும் சாதிய வேறுபாடான வட இந்தியப் பார்ப்பனரையும், தென்னிந்திய பார்ப்பனரையும் பிரிக்கும் சொல்லான பஞ்ச திராவிட என்பதையும் சுட்டிக் காட்டுகிறார். எல்லாம் சரி. 


ஆனால் ராகுல் திராவிட் என்று இல்லை, வெறும் திராவிட் என்று கூட பெயர் வைத்திருக்கலாம் ஒரு பார்ப்பனன். ஆனால் அவன் என்ன இனத்தவனாக தன்னை உணருகிறான் என்பது தான் பிரச்சனை. 


ராகுல் திராவிட்டிடமும், மணி திராவிட்டிடமும் ஏன் இந்த பஞ்ச திராவிட இனத்தில் பிறந்த ஒவ்வொரு பார்ப்பனரிடமும் அவர்கள் என்ன இனம் என்று கேட்டால் தன்னை ஆரியன் என்றே விளித்துக் கொள்வார்கள். 


இதன் கீழாகவே திராவிடன் என்று கூறும் பொழுது தமிழனுடன் இணைய மாட்டான் என்பதைக் கொண்டே திராவிடம் என்ற வார்த்தை தமிழின மீட்சியின் அரசியலுக்காகப் பயன்படுத்தப்படுகிறது.


இதை அறியாமல் இல்லை தோழர் மணியரசன். அவருக்கு நன்றாகவே தெரியும் - தமிழ் என்பது மொழியையும், தமிழர் என்பது அவர்களின் மொழி, வாழும் இடம் மற்றும் பண்பாட்டைச் சார்ந்து குறிக்கப்படும் பெயர் என்பது. அதாவது தமிழர் என்பது பண்பாட்டுச் சொல், திராவிடம் என்பது அரசியல் சொல். 


இதை நன்றாக அறிந்து இருந்தாலும் தோழர் மணியரசன் இதை மறைத்துவிட்டு திராவிடம் என்பது தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் நான்கையும் உள்ளடக்குவதே என்ற நோக்குடன் பேசி வருகிறார். ஆனால் பெரியார் தான் வாழ்ந்த காலத்திலேயே இதை உள்ளடக்கிப் பேசியது இல்லை. ஏன் தேவநேயப்பாவணர் தமிழ் என்பதை வடமொழியினர் தங்களின் மொழியில் திரமிளம் என்றும், திராவிடம் என்று குறித்துள்ளனர் என்பதை விளக்கியுள்ளார்.


 “வடநாட்டு ஆரிய நூல்களில் திராவிடம் என்னும் சொல் முதலாவது திரமிளம் என்றே வழங்கி வந்தது. ழகரம் வடமொழியில் இல்லை. சில உயிர்மெய் முதல்களை ரகரஞ் சேர்த்து த்ர, ப்ர எனப் புணர் எழுத்துக்களாகத் திரிப்பது வடநூலார் வழக்கம் எ.டு : படி - ப்ரதி, பவளம் - ப்ரவளம், இதனால் தமிழம் என்னுஞ் சொல் த்ரமிளம் எனத் திரிந்தது இயல்பே. பின்பு அது நாளடைவில் த்ரமிடம், த்ரவிடம் எனத் திரிந்தது. ள-ட, ம, வ போலி, திரவிடம் என்பது மெய்ம் முதலாதலின் தமிழில் திராவிடம் என்றாகிப் பின்பு திராவிடம் என நீண்டு வழங்குகின்றது. எனத் தமிழம் என்பதே த்ரமிளம் - திராவிடம் எனத் திரிந்ததாக” குறிப்பார். {திராவிடத் தாய், தேவநேயப் பாவாணர், பக். - 8}


இதில் தமிழைக் குறிக்கத்தான் திராவிடம் என்ற வார்த்தை உபயோகிக்கப்பட்டது என்பது தெள்ளத் தெளிவாக தெரிகிறது. இதை விடுத்து திராவிடத்தில் நான்கு மொழி அடக்கம், அஞ்சு மொழி அடக்கும் என்பதோடு, பெரியார் தமிழுக்காக போராடவில்லை என்று புருடா விடுகின்றனர். சரி 1705ம் ஆண்டு பிறந்து 1742ல் மறைந்த தாயுமானவர் சாமிகள் திராவிடம் என்ற வார்த்தையை தனது பாடல்களில் உபயோகிக்கிறார். 


இவருக்கும் கால்டுவெல்லுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. கால்டுவெல் 1850களில் தான் வருகிறார். அதாவது ஒரு நூற்றாண்டு கழித்தே கால்டுவெல் வருகிறார். 


தாயுமானவர் தனது பாடலில் திராவிடம் என்ற சொல்லை தமிழுக்கு நிகராகவே பயன்படுத்துகிறார்.


கொல்லத்தில் பேர்களே நல்லவர்க ணல்லவர்கள் ;

கற்றுமறி வில்லாதவென்

கர்மத்தை என்சொல்கேன் ? மதியையென் சொல்லுகேன் ?

கைவல்ய ஞான நீதி

நல்லோ ருரைக்கிலோ கர்மமுக் கியமென்று

நாட்டுவேன் ; கர்மமொருவன்

நாட்டினா லோபழைய ஞானமுக் கியமென்று

நவிலுவேன் ; வடமொழியிலே

வல்லா னொருத்தன்வர வுந்த்ரா விடத்திலே

வந்ததா விவகரிப்பேன் ;

வல்லதமி ழறிஞர்வரி னங்ஙனே வடமொழியின்

வசனங்கள் சிறிதுபுகல்வேன் ;

வெல்லாம லெவரையு மருட்டிவிட வகைவந்த

வித்தையென் முத்திதருமோ ?

வேதாந்த சித்தாந்த சமரசநன் னிலைபெற்ற

வித்தக சித்தர்கணமே!

- சித்தர்கணம்


இதில் தெளிவாகவே குறிப்பிட்டுள்ளார், “வடமொழியிலே வல்லா னொருத்தன்வர வுந்த்ரா விடத்திலே வந்ததா விவகரிப்பேன்” என்று வடமொழியில் வல்லவன் ஒருவன் வருவான் என்றால், தமிழிலே சிறப்பு அதற்கு முன்பே வந்துவிட்டது என்பேன் என்கிறார். 


இதிலிருந்து நமக்கு தெளிவாகத் தெரிவது திராவிடம் என்ற வார்த்தை கால்டுவெல்லோ, இல்லை அயோத்திதாச பண்டிதரோ, இல்லை பெரியாரோ கண்டுபிடித்தது இல்லை. 


திராவிடம் என்பது பரவலாக தமிழைக் குறிக்க அனைவராலும் பயன்படுத்தப்பட்ட வார்த்தையே. இந்த வார்த்தையை தெலுங்கிற்கும், கன்னடத்திற்கும் ஏன் மலையாளத்திற்கும் தாரை வார்க்கும் முயற்சியையே இன்றை தமிழ்த் தேசியர்கள் செய்து வருகின்றனர். 


பெரியாரும் திராவிடம் என்ற வார்த்தையை தமிழுக்கு நிகராகவே உபயோகித்தார் என்பதும், ஆந்திரர்கள், கர்நாடகத்தவர்கள், மலையாளிகள் மீது நன் மதிப்பையோ கொண்டிருந்தவர் இல்லை என்பதும் உண்மை.


மேலும் இங்கு பொத்தம் பொதுவான சென்னை மாகாணம் என்பது ஆந்திரா, கேரளம், கர்நாடகம் என்று அனைத்தும் இணைந்து இருந்ததாக ஒரு கருத்தாக்கத்தை உருவாக்குகிறார்கள். இது முற்றிலும் பொய். ஆந்திரத்தின் ஒரு பகுதியும் கர்நாடகத்தின் ஒரு சில பகுதிகளும், கேரளத்தின் ஒரு சில பகுதிகளுமே சென்னை மாகாணத்தில் இருந்தது. ஆனால் அதே சமயத்தில் பங்கனப்பள்ளி சமஸ்தானம், கொச்சி சமஸ்தானம், திருவிதாங்கூர் சமஸ்தானம், மைசூர் சமஸ்தானம் தனித்தே இயங்கி வந்தன. 


இவர்களுக்கு என்று தனி காவல் மற்றும் நீதித் துறை இருந்தது என்பதை வரலாற்றைப் படித்தவர்கள் நன்கு உணர்வார்கள். 


ஆங்கிலேயர் தங்கள் நிர்வாக வசதிக்காக பிரிக்கப்பட்ட பகுதிகளில் ஒன்றாகவே சென்னை மாகாணம் இருந்தது. இதில் ஒரு கணக்கெடுப்பில் சென்னை மாகாணத்தில் வாழ்ந்த மக்கள் தொகை 4,93,410 பேர். இது 1941ம் ஆண்டு கணக்கெடுப்பு. 17.9.1954ல் பெரியார் தனது பிறந்த நாள் அறிக்கையில் சென்னை மாகாணத்தில் வாழும் பிறமொழியினர் என்ற தகவலில் குறிப்பிடுகிறார் மலையாளிகள் 8 சதவீதம், கர்நாடகர்கள் 5ம் சதவீதமும். இதைத் தவிர கிருத்துவர்கள் 4 சதவீதமும், முஸ்லீம்கள் 5 சதவீதமும் என்கிறார். இதில் கிருத்துவர்களில் எத்தனை பேர் தமிழர்கள், எத்தனை பேர் மலையாளிகள் என்ற தெளிவான கணக்கு இல்லாமல் இருந்து இருக்கலாம். சென்னை மாகாணத்தில் அதுவும் ஆந்திரா பிரிந்து சென்ற பிறகு சொல்லப்படும் கணக்கு இது. ஆந்திரர்கள் இருந்திருந்தாலும் அவர்கள் ஒரு 10 சதவீதம் என்று எடுத்துக் கொண்டாலும் மலையாளி, கர்நாடகர் மற்றும் ஆந்திரர் சேர்த்து 23சதவீதமே. பெரியாரின் கருத்தியல் என்பது தனிமனிதனின் சுயமரியாதையும் அவர்களின் முன்னேற்றமே. இதை 1925ல் குடியரசு இதழ் ஆரம்பித்து முதல் பத்திரிக்கையின் தலையங்கத்தில் தெளிவாகவே குறிப்பிட்டு இருக்கிறார்.


“எமது பத்திரிக்கையின் நோக்கத்தையறிய விரும்புவார்க்கு நமது தாய்நாடு அரசியல், பொருளியல், சமூகவியல், ஒழுக்கவியல் முதலிய எல்லாத் துறைகளிலும் மேன்மையுற்று விளங்கச் செய்வதேயாகும் எனக் கூறுவோம். நமது நாட்டு மக்களின் உடல் வளர்ச்சிக்காகவும் அறிவு வளர்ச்சிக்காகவும், மொழி வளர்ச்சிக்காகவும், கலை வளர்ச்சிக்காகவும், சமய வளர்ச்சிக்காகவும் இதன் வாயிலாக இடையறாது உழைத்து வருவோம்.


ஆயிரக்கணக்காக பொருள் செலவிட்டு கட்டிய......... அஸ்திவாரம் பலமில்லாவிடில் இடிந்து விழுந்து அழிந்து போவதேபோல், ஒரு தேசத்தின் அடிப்படைகளாகிய தனி மனிதன், குடும்பம், பல குடும்பங்கள் சேர்ந்த ஒரு வகுப்பு, பல வகுப்புக்களாலாகிய கிராமம் ஆகிய இவைகள் எல்லாத் துறைகளிலும் மேன்மையுறாவிடின் அத்தேசம் ஒருநாளும் முன்னேற்றமடையாது. ஆகையினால், நமது தேசம் சுதந்திரம் பெற்று எல்லாத் துறைகளிலும் மேன்மையுற்று விளங்கவேண்டுமாயின் நமது நாட்டிலுள்ள ஒவ்வொரு தனிமனிதனும் தனது அறிவையும், ஆற்றலையும் பெருக்கிக் கொள்ளுதல் வேண்டும்; ஒவ்வொரு தனிக் குடும்பமும் நன்நிலையடைய வேண்டும்; ஒவ்வொரு வகுப்பினரும் முன்னேற்றமடைதல் வேண்டும்; ஒவ்வொரு கிராமமும் பிற கிராமங்களினுடையவோ, நகரங்களினுடையவோ, நாடுகளினுடையவோ உதவியை எந்நாளும் எதிர்பார்த்து நிற்காத வண்ணம் ஒவ்வொரு துறையிலும் முன்னேற்றமெய்தி தனித்தியங்கும் பெருமையை அடைதல் வேண்டும். அடிப்படைகளான இவைகளை அறவேவிடுத்து வெறும் தேசம், தேசம் என்று கூக்குரல் இடுவது எமது பத்திரிக்கையின் நோக்கமன்று. ஆகவே, இவ்வடிப்படைகளின் வளர்ச்சிக்கான முறைகளில் இடையறாது உழைத்து வருவதே எமது கொள்கையாகும்.” - குடியரசு - தலையங்கம் - 02/05/1925


மேலே இருக்கும் பதிவே பெரியாரின் நோக்கம் என்ன என்பதற்கு மிகச்சிறந்த உதாரணம். தேசம், தேசியம் என்பவைகள் கற்பிதமே என்பதை மிகச் சரியாக உணர்ந்தவர் பெரியார். தன் சமூக மக்களின் முன்னேற்றத்தை விரும்பியவர் என்பதும் தெளிவாகத் தெரிகிறது. இதே தலையங்கத்தில் இன்னொரு பத்தியில்

“ஒரு சிறு பத்திரிகையையேனும் செவ்வனே நடாத்தும் ஆற்றல் ஒரு சிறிதும் எமக்கில்லை என்பதை நன்குணர்வோம். பேரறிவும், பேராற்றலும், விரிந்த கல்வியும், பரந்த அனுபவமும் உடையவர்களே இத்தொண்டினை நடத்தற்குறியார். 

இவ்வருங்குணங்கள் எம்பால் இல்லாமல் இருந்தும் ‘என்கடன் பதிசெய்து கிடப்பதே’ என்ற பெரியார் வாக்கை கடை பிடித்தே ......................... வலிமையால் இப்பத்திரிக்கை நீண்டகாலம் இத்தமிழுலகில் நிலவித் தேசத்தொண்டு ஆற்றி வரும் என்னும் நம்பிக்கையும், உறுதியும் பெரிதுமுடையோம்.” - குடியரசு - தலையங்கம் - 02/05/1925

என்று குறிப்பிடுகிறார். 


அதாவது 23 சதவீத வேற்று மொழிக்காரர்களை விட 77 சதவீதம் வாழ்ந்த சென்னை மாகணத்தில் இருந்த தமிழர்களைக் குறிப்பிட்டு இது தமிழுலகம் என்றே குறிப்பிடுகிறார். 


இதையெல்லாம் மறைத்துவிட்டு பெரியார் திராவிடம் என்ற பெயரை தெலுங்கர், கன்னடர், மலையாளிகளை இணைத்தே குறிப்பிட்டார் என்று இங்கே கட்டுக் கதைகள் பரப்புகின்றனர் சிலர். 


பெரியாரின் ஆந்திரர் குறித்த பார்வை.

“இது அரசியல் போராட்டமல்ல, இனப்போராட்டம், மனிதத் தன்மைப் பாதுகாப்புப் போராட்டம், தென்னாட்டவரின் மனிதத் தன்மையை அழித்து ஆரியவர்க்கத்தோடு சேர்த்துக் கொள்ளச் செய்யப்படும் சூழ்ச்சியின் முதல்படி தான் கட்டாய இந்தி நுழைப்பு. ஆகவே நாம் இதை எதிர்த்துத்தான் ஆகவேண்டும். ஒரு வேளை ஆந்திரர்கள் ஆரியவர்க்கத்தில் சேர்ந்துவிடுவார்களோ என்று கூட நினைக்க வேண்டியிருக்கிறது. எவ்வகையானும் இதை எதிர்த்துப் போராடியே தீருவோம். இப்போராட்டம் தென்னாட்டுச் சரித்திரத்தில் திராவிட நாட்டுச் சரித்திரத்தில் பொன்னெழுத்துகளில் பொறிக்கப்பட வேண்டிய மகோன்னதப் போராட்டம். இப்போராட்டத்தில் வெற்றியின்றேல் தமிழ்நாடு போம். தமிழ்க்கொடி போம், தமிழன் சிறப்பெல்லாம் தகர்ந்துபோம். நியாயம் நமது பக்கத்தில் தான் இருக்கிறது. தமிழ்காக்க வாரீர்! எங்களுக்கு வயதாகிவிட்டது! நாங்களும் வெற்றிகாண ஆசைப்படுகிறோம். ஆகவே தன்மானத் திராவிடர்காள்! தமிழர்காள்! வெற்றிக்காணப் போராட்டத்தில் ஈடுபட வாருங்கள். சாவேன் அல்லது வெற்றியோடு மீள்வேன் என்ற உறுதியோடு முன்வாருங்கள்.”

என்று குறிப்பிடுகிறார் இந்தி எதிர்ப்பு போராட்டத்தின் பொழுது அடுத்து மலையாளிகளை பற்றி நிறையவே எழுதியும் பேசியும் இருக்கிறார் அதில் 1954ம் ஆண்டு தனது பிறந்த நாள் அறிக்கையில் “மலையாளிகளின் தொல்லையே பெருந்தொல்லையாகும்” என்று கூறுகிறார்

“குறிப்பாகக் கூறவேண்டுமேயானால் மலையாளிகளின் தொல்லையே மாபெரும் தொல்லையாகும். அவர்கள் பெரும்பாலும் ஆரியக்கலாச்சாரத்தையும், ஆரிய மொழியையும்;, ஆரிய வர்ணச்சிரம தர்மத்தையும் ஆதரிக்கிறவர்கள், ஆனதனால் வகுப்புவாரி உரிமையில் மலையாளிகளை பார்ப்பனரல்லாத இந்துக்கள் என்கின்ற பிரிவில் பார்ப்பனர்கள் சேர்த்துக்கொண்டு, பார்ப்பனரல்லாதார் என்கிற கணக்கில் ஏராளமான மலையாளுக்கு கொடுப்பதையே - அவர்கள் தாராளமாக வந்து புகுவதையே பார்ப்பனர்கள் ஏற்றுக் கொள்கிறார்கள். அனுமதிக்கிறார்கள். அதன் காரணத்தால் ஏறக்குறைய பார்ப்பனரில்லாத பெரும் பதவிகளிலும் மாலையாளிகளே அமர்த்தப்பட்டிருக்கிறார்கள்.”


இதில் தெளிவாகவே மலையாளிகளைப் பற்றிய தன் நிலைப்பாட்டை பெரியார் கூறியுள்ளார். அவர்களை எங்கும் திராவிடர்கள் என்று குறிப்பிடவில்லை. இதைத் தவிர தட்சிணப்பிரதேசம் அமைக்கும் திட்டத்திற்கு எதிராக வேலூரில் 29.1.1956ம் தேதி பொதுக் கூட்டத்தில் பேசிய பொழுது மலையாளிகளின் சூழ்ச்சி தான் தட்சிணப்பிரதேச திட்டம் என்பதையும் விளக்கி மலையாளிகளை சுயமரியாதையோ, சுதந்திர புத்தியோ இல்லாதவர்கள் என்றும், அவர்கள் உத்யோகத்தில் அடிக்கும் கொள்ளை, பார்ப்பான் - மலையாளி உறவின் கீழாக தமிழர்களுக்கு இழைத்தத் துரோகத்தினைத்தையும் விளக்கி இருப்பார். ஆனால் திராவிடம் என்றால் தெலுங்கர், கன்னடர், மலையாளி உட்பட என்று தொடர்ந்து கட்டுக்கதைகள் அமைத்து வருகிறார்கள். அந்த வேலையை பெரியாரை படித்த தோழர் மணியரசனும் செய்கிறார், பாவம் அவர் சார்ந்து நிற்கும் பார்ப்பனிய தமிழ்த் தேசியம் இவ்வாறு அவரை செய்ய வைக்கிறது போலும்.

இப்படி ஆரியச் சார்புடைய தெலுங்கு, மலையாளம், கன்னடம் போன்றவர்களை அவர் என்றும் கண்டுகொண்டதில்லை. தமிழை ஆரியத்திடம் இருந்து மீட்டெடுக்க வேண்டும் என்ற உறுதியுடனே செயல்பட்டார். 1900 ஆரம்பங்களில் தமிழ் மொழி என்பது மணிபிரளாவ நடைமொழியில் முழுவதுமாக கலப்புற்று வடமொழி வார்த்தைகளுடனே பயின்று வந்தது. அதை மாற்றவே தனித் தமிழ் இயக்கம் காணப்பட்டது. மறைமலை அடிகள் மிகப்பெரும் வேலைகள் செய்தார், அவருடன் இணைந்து பெரியாரும் நின்றார். விடுதலை, குடியரசு போன்ற இதழ்களே மறைமலையடிகளின் மாற்றங்களை முன்னின்று செயல்படுத்தியவை. இப்படி தமிழுக்கும் தமிழருக்கும் என்றே இருந்த பெரியாரின் திராவிடர் இயக்கத்தை போகிற போக்கில் தமிழை ஊனமாக்கியது என்கிறார் தோழர் மணியரசன். பார்ப்பனரல்லாதவர்கள் கட்சி என்ற சொல்லி நீதிக்கட்சி போராடிய பொழுது அவர்களையும் விட்டுவைக்கவில்லை பெரியார். திராவிடம் என்று தன் இயக்கத்திற்கு பெயர் சூட்டியதற்கான காரணத்தை விளக்கும் இடத்தில் அதைத் தெளிவாக குறிப்பிடுகிறார்.

“நாம் இந்தியர் என்பதை மறுக்கிற படியாலும், இன உணர்ச்சியும், எழுச்சியும் பெற வேண்டுவதாலும் ‘திராவிடர்’ எனும் பெயரைக் கொண்டோம். இது புதிதாக உண்டாக்கியதல்ல, மறந்ததை நினைத்துக் கொண்டதேயாகும். நம்மைக் குறிக்க பார்ப்பனரல்லாதார் என்கிறோம். அல்லாதார் என்பதைச் சேர்த்துக்கொள்ள நாம் என்ன நாடோடிகளா? நான் ஏன் அல்லாதார் ஆக வேண்டும்...

...மேலும் நமக்குத் ‘திராவிடர்’ என்பது பெயரல்லவானால் வேறு எதுதான் பெயராகும்? பார்ப்பனர் அல்லாதார் என்பதா? பார்ப்பனர் அல்லாதார் எனக் கூறிக்கொள்ளும் ஜஸ்டிஸ்கட்சிக் காரர்கள் எந்த வகையில் பார்ப்பனர்களிடமிருந்து வேறுபடுகின்றனர்? நடை, உடை, பாவனைகளில், மதத்துறையில், வேஷத்தில், பார்ப்பனரைவிட இரண்டுமடங்காகவல்லவா இருக்கின்றார்கள்!...

திராவிடர் என்ற பெயருக்கு ஆதாரம் தேட வேண்டிய அவசியம் இல்லை. முதல் வகுப்புச் சரித்திரப் பாடம் முதல், பெரிய வரலாறுகள் வரையில் எல்லா நூல்களிலும் இதற்கு ஆதாரம் இருக்கிறது. கலாச்சாரங்களிலும் பல ஆதாரங்கள் இருக்கின்றன” கோ-வேள்நம்பி, தமிழனை உயர்த்திய தலைமகன், பக்கம் - 21

இதில் மிகவும் தெளிவாகவே குறிப்பிடுகிறார் திராவிடம் என்பது பலராலும் அன்றைய காலகட்டத்தில் உபயோகிக்கப்பட்டு வரலாற்றுச் சான்றுகளுடன் இருப்பதாலேயே அந்த வார்த்தையை உபயோகிக்கிறார், மேலும் பார்ப்பனரல்லாதார் பெரும்பான்மை மக்களுக்கு சேவை செய்ய வந்தவர்கள் என்று சொல்லிக் கொண்ட நீதி கட்சியினரின் நடை, உடை பாவனைகளை போட்டு கிழித்தெறிகிறார். பார்ப்பனர்களின் பழக்கவழக்கத்தை முழுமையாக ஏற்றுக் கொண்ட சமூகமாகவே அன்றைய தமிழ்ச் சமூகம் இருந்து இருக்கிறது. இதை உடைத்து தமிழ்ப் பண்பாட்டையும், தமிழரையும் மீட்டு எடுத்தது பெரியாரின் திராவிடக் கொள்கையே அன்றி வேறெதுவும் இல்லை. ஆனால் ஆரியக் கொள்கையை ஏற்றுக் கொண்ட தெலுங்கும், கன்னடமும், மலையாளமும் மொத்தமாக வடமொழி தாக்கத்திற்குள் உள்ளாகி நிற்கிறது. தமிழ் தனித்து இயங்கிக் கொண்டு இருக்கிறது, இதில் மணிப்பிரவாள மொழியின் தாக்கத்தை தோழர் மணியரசன் மறுக்கவும் முடியாது. இப்படி அத்தனை வகையிலும் தமிழுக்கு உதவிய திராவிடத்தை யாரோ இருவர் திராவிட் என்று பெயர் வைத்ததனால் நொள்ளை நொட்டை என்கிறார்.

கடைசியாக பெரியார் ஆங்கிலத்தையே தூக்கி பிடித்தார் என்கின்றார். பெரியார் மொழி குறித்தும், அதன் பயன்பாடு குறித்தும் பேசியதையும் மறந்துவிட்டார். 1965க்கு முன்பாக இந்தி திணிப்பிற்கு எதிராக போராட்டங்கள் நடந்தது. அப்பொழுது பெரியார் சொன்னதையும் மறந்துவிட்டார்.

‘வட நாட்டு ஆதிக்கமும் வடமொழி மோகமும் குறையக் குறைய ஆந்திரர்களும், மலையாளிகளும், கன்னடியர்களும் தம் தாய்மொழி தமிழ்தான் என்பதைக் கொஞ்சம் கொஞ்சமாக உணர்ந்து கொள்வார்கள் என்பதில் எனக்குத் திடமான நம்பிக்கையுண்டு. அந்தந்த மொழி வல்லுனர்கள், பண்டிதர்கள் சிலர் இன்று ஓரளவு இந்த உண்மையை ஒப்புக் கொண்டுள்ளார்கள் என்பது நமக்கு மேலும் நம் கருத்துக்கு வலிமை ஊட்டுகிறது. இத் தமிழ் மொழியின் வளர்ச்சிக்குப் புத்துயிர் அளித்த ஒரு பெரிய இயக்கத்தை நான் நடத்தினேன். அதாவது தமிழ் மொழி தாய் மொழியாக உள்ள இந்நாட்டில், இந்தியைப் புகுத்தக் கூடாது என்ற கிளர்ச்சி செய்தேன்.'

தெளிவாக கூறுகிறார் சென்னை மாகாணம் என்பது தமிழைத் தாய்மொழியாக கொண்டவர்கள் வாழும் இடம் என்று. மேலும் தமிழை மீட்டெடுக்கவே போராடினேன் என்பதை தெளிவாக கூறுகிறார். மேலும் ஆங்கிலத்தை படிக்க வேண்டிய தேவையை

1. ஒருவன் ஆங்கில மொழியை சுலபமாகக் கற்றுக்கொள்ள முடியும்.

2. ஆங்கில மொழியை அறிந்தவன் உலகத்தின் எந்தக் கோடிக்கும் சென்று அறிவைப் பெற்றுத் திரும்ப இயலும்.

3. ஆங்கில மொழியானது அறிவைத் தூண்டும் உணர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறதே தவிர, அது சுதந்தரமாகச் சிந்திக்கின்ற தன்மைக்கு விலங்கிட்டதாக ஒருபோதும் கிடையாது.

(பெரியார் ஈவெரா சிந்தனைகள், வே.ஆனைமுத்து, தொகுதி 3, அரசியல் 2, பக். 1762)

ஆங்கிலத்தை அவர் ஏற்றுக் கொண்டது என்பது தமிழ் மொழியை அழிக்க என்பது போல் கதைகட்டுவது தான் இங்கு நடக்கிறது. அவரின் தமிழ், தமிழர் மீதான கவலை மேலே இருக்கும் பதிவுகளில் நன்றாகத் தெரியும். தன் பொது வாழ்வில் அவர் என்றும் தமிழ் மக்களுடனின் மேன்மையைக் குறித்தே சிந்தித்து வந்துள்ளார் என்பதும் புரியும். அவர் வீட்டு வேலைக்காரியுடன் தமிழில் பேசச் சொன்னார் என்பதால் அவர் தமிழை அழிக்க நினைத்தார் என்று கூறுகிறார்கள். பெரியார் காலத்தில் ஊடகங்கள் என்பது இன்று இருப்பது போல் இருந்தது கிடையாது, அதனாலே தனது கருத்துகளை நகைச்சுவையாகவும் கிண்டலாகவும் பேசுவதை வழக்கமாகக் கொண்டிருந்தார். அதைக் கேட்டுவிட்டு செல்லும் ஒருவன் அடுத்தவனுக்கு எடுத்துக் கூறும் பொழுது அந்த நகைச்சுவையில் மேலும் மெருகேற்றி சொல்வார், இதனால் வெகு வேகமாக கருத்துக்கள் பரவும் என்ற நோக்கிலேயே அவர் செய்து வந்திருக்கலாம். இதே போன்று தான் வேலைக்காரியுடனும் தமிழில் பேசுங்கள் என்று சொன்னது அன்றைய காலகட்டத்தில் மட்டும் அல்ல, இன்று வரை தனது வீட்டில் எத்தனை தமிழன் வேலைக்காரி வைக்கும் நிலையில் இருக்கிறார் என்பதை ஆராய்ந்தாலே புரியும். ஆங்கிலத்தைப் படிக்க வேண்டிய தேவையை உணர்த்துவதற்கு கூறினாரே ஒழிய தமிழை அழிக்கும் நோக்கத்துடன் கூறினார் என்பது எல்லாம் திரித்தல்வாதம்.

அப்படி தமிழை அழிப்பது தான் அவருடைய நோக்கமாக இருந்தால் 11/9/1938ம் ஆண்டு திருவல்லிக்கேணி கடற்கரையில் நாவலர் சோமசுந்தர பாரதி, மறைமலை அடிகள் போன்றோரை அழைத்து நடத்திய கூட்டத்திலேயே ‘தமிழ்நாடு தமிழருக்கே’ என்ற முழக்கத்தை ஏன் வைக்க வேண்டும்? அதற்கு முன்பாக அஞ்சாநெஞ்சன் பட்டுக்கோட்டை அழகிரி பெரியாரின் பெருந்தொண்டர் திருச்சி உறையூரிலில் இருந்து கால்நடையாக இந்தித் திணிப்பை எதிர்த்து அமைதியாக சென்னை வரை ஊர்வலமாக நடந்து வந்து இராஜியின் வீட்டை முற்றுகை இட்டனர். இந்த முற்றுகைக்காக சென்னை வரை நடந்து வந்த தோழர்களை வரவேற்கவே திருவல்லிக்கேணி கடற்கரையில் கூட்டம் கூட்டினார். அதிலே தான் “தமிழ்நாடு தமிழருக்கு” என்று முழக்கம் வைக்கப்பட்டது. அந்தக் கூட்டத்தில் கிட்டத்தட்ட 1,50,000 மக்கள் கலந்து கொண்டனர். இப்படி 1938லும் 1952லும் மிகவும் அமைதியான கிளர்ச்சிகள் மூலம் இந்தித் திணிப்பை தடுத்தவர் தான் பெரியார். 1965ல் பெரும் உயிரிழப்புகளுடன் நடைபெற்ற கிளர்ச்சியைப் பார்த்து கண்டிப்பாக மனம் நொந்து தான் திமுகவை மிகவும் காட்டமாக சாடினார். தமிழைப் பிழைக்க உபயோகிக்கிறார்கள் என்றார். அதை விடுத்து தமிழை அழிக்க நினைக்கவில்லை. அப்படி அழிக்க நினைத்திருந்தால் 1938லேயே இந்தித் திணிப்பை அங்கீகரித்து அமைதியாய் இருந்து இருக்கலாம். ஏன் 7/03/1926லேயே இந்தி திணிப்பு பற்றிய கட்டுரையை சித்திர குப்தன் என்ற பெயரில் “தமிழுக்கு துரோகமும், இந்தி பாஷையின் இராகசியமும்” என்ற தலைப்பில் எழுதாமல் இருந்திருக்கலாம்.

11-09-1938 அன்றே தமிழ்நாடு தமிழருக்கு என்பதை எப்படி முன்னெடுக்க வேண்டும், தனது தோழர்கள் என்ன செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தினார். தமிழ்த் தேசியம் என்று சொல்லிக் கொண்டு பெரியாரின் மீது அவதூறு பரப்புபவர்கள் இதில் எதையேனும் செய்திருக்கிறார்களா?

“இனியாவது தமிழ்நாடு தமிழருக்கே என்று ஆரவாரம் செய்யுங்கள். உங்கள் கைகளில் தமிழ்நாடு தமிழனுக்கே என்று பச்சை குத்திக் கொள்ளுங்கள். உங்கள் வீடுகள் தோறும் தமிழ்நாடு தமிழனுக்கே என்ற வாசகத்தை எழுதிப் பதியுங்கள். நம் வீட்டுக்குள் அன்னியன் புகுந்து கொண்டதோடல்லாது அவன் நம் எஜமானன் என்றால் நமக்கு இதைவிட மானமற்ற தன்மை - இழிதன்மை - வேறு என்ன என சிந்தியுங்கள்.

புறப்படுங்கள்! தமிழ்நாட்டுக்கு பூட்டப்பட்ட விலங்கை உடைத்து சின்னாபின்னமாக்குங்கள்!!

தமிழ்நாடு தமிழருக்கே!

தமிழ்நாடு தமிழருக்கே!!

தமிழ்நாடு தமிழருக்கே!!!”

குடி அரசு - தலையங்கம் - 23.10.1938

இங்கே தமிழ்த் தேசியம் என்று பேசுபவர்கள் இது வரை 1000 பேரைக் கூட்டி ஒரு கூட்டத்தை போட்டதில்லை. ஆனால் 1938ம் ஆண்டு இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் சிறை சென்றவர்களே 1000க்கும் மேலானவர்கள். அதுவும் பெண்கள் உட்பட குழந்தைகளுடன் சிறை சென்றவர்களும் 100க்கும் மேற்பட்டவர்கள். பெரியார் தமிழ்ச் சமூகத்திற்காக தன் வாழ் நாள் முழுவதும் வேலை செய்தார். மக்களுடன் மக்களாக வாழ்ந்தார். அதனாலேயே அவர் பின்னால் இத்தனை ஆயிரம் மக்கள் திரண்டனர். ஏன் அவர் இறந்த பிறகும் கூட இன்னும் பெரியாரின் வழியில் சென்று கொண்டு இருக்கின்றனர். ஏன் பெரியார் வழியை ஏற்காத ஆத்திகர்கள் கூட பெரியாருக்கு முன்பு தாங்கள் கடைபிடித்த பல மூடப்பழக்கவழக்கங்களை விட்டொழித்து கொஞ்சம் நாகரீகத் தன்மையையுடன் நடந்து வருகிறார்கள். இதில் ஒரு துரும்பைக் கூட கிள்ளிப் போடாதவர்களே இன்று பெரியாரைத் தூற்றுவதே தமிழ்த்தேசியம் என்று பேசி வருகின்றனர்.

பெரியார் ஒரு சிந்தனைவாதி இல்லை; அதனால் தான் தமிழ்நாட்டை விட்டு வெளியில் போகவில்லை என்ற அரும்பெரும் கருத்தை உதிர்த்து இருக்கிறார் தோழர் மணியரசன். பாவம் என்ன செய்வது தனது கருத்தான ‘பெரியார் தமிழருக்கு துரோகம் இழைத்தார்’ என்பதற்கு நேர் எதிரிடையான சாட்சியத்தை அவரே கொடுத்துள்ளார். ஆம் பெரியார் தமிழ்நாட்டை விட்டு வெளியில் போகவில்லை தான். காரணம் அவர் தான் வாழ்ந்த தமிழ்ச் சமூகத்தின் இழிநிலையை போக்குவதற்காக சிந்தித்தார்; செயல்பட்டார். அதனாலே தமிழ் நாட்டை விட்டு வெளியே போகவில்லை.

நன்றி: கீற்று இணையதளம்