ஆண்டனி வளனின் அருமையான கட்டுரை, அரிமாவளவனைப் பற்றி தோலுரித்துள்ளார்.
பாதிரியார் "லேனார்ட்” என்ற “அரிமா வளவன்” சில அதிர்ச்சியான மற்றும் கசப்பான உண்மைகள்!
கூடங்குளம் அணுஉலை எதிர்ப்பு போராட்டத்தில் பங்கு கொண்ட பல்வேறு அமைப்புகளில், இந்த தமிழர் களமும் ஓன்று.தமிழர் களம் என்பது எதோ ஒரு தமிழர் நலன் சார்ந்த இயக்கம் போல என்று தான் ஆரம்பத்தில் எண்ணி இருந்தேன்.ஆனால் அவர்களின் கொள்கைகள், மற்றும் செயல்பாடுகள் எவற்றின் மீதும் நமக்கு உடன்பாடு இல்லை எனினும் கூட, கடுமையான விமர்சனங்கள் வைத்தது இல்லை.
முதலில் இப்படி ஒரு இயக்கம் தமிழ்நாட்டில் இருக்கிறது என்பதே பலருக்கு தெரியாது என்பது வேறு விடயம். ஆனாலும் கூட ஒட்டுமொத்த தமிழகமும் இவர்களால் தான் இயங்குகிறது போன்ற தோற்றத்தை ஏற்படுத்த முயற்சிப்பார்கள். அது அவர்கள் விருப்பம். ஆனால் யார் என்ன சொன்னாலும் எது எதார்த்தம் உண்மை என்பது எல்லோருக்கும் புரியும்.நமக்கு இவர்கள் ஒவ்வாததற்கு காரணம் இவர்களின் அடிப்படையே கொள்கையான மரபணு பரிசோதனை. வைகோவை இன்றும் நேசிப்பவன் நான். ஆனால் வடுகரான வைகோவை நேசிக்கும் நீ எப்படி தமிழனாக இருக்க முடியும் என்று நமக்கும் தமிழனா இல்லையா என்று சான்று வழங்கும் இந்த மன நோயாளிகளை நாம் எப்படி ஏற்க முடியும்? இது ஒருபுறம் இருக்கட்டும்.
இன்னொருபுறம் இடிந்தகரை அணு உலை எதிர்ப்பு போராட்டத்திலும் நாங்கள் தான் அனைத்தையும் செய்தோம் என்று ஊரெல்லாம் தங்களை விளம்பரப்படுத்திக் கொள்கிறார்கள். அணு உலைக்கு எதிரான மக்கள் இயக்கம் தேர்தல் அரசியலில் பங்கு பெற்றால் தமிழர் களம் தலைப்பில் தேர்தலை எதிர்கொள்ளட்டும், அப்படி செய்வது தான் சரி என்பது போல இவர்கள் பேசி வருகிறார்கள். இதெல்லாம் எந்த அளவுக்கு சரி தவறு என்பதை போராட்டத்தை,போராட்ட குழுவினரை நன்கு அறிந்தவர்களுக்கு ஓரளவுக்கு தெரியும்.
அதாவது வருடத்தில் ஒரு ஐந்து நாள் போராட்டக் களத்துக்கு போய் வந்தவர்கள் எல்லாம் எங்களால் தான் இந்த போராட்டமே என்று மார் தட்டினால், மூன்று வருட காலம் அந்த களத்திலேயே முடங்கி கிடந்தும், லட்சக்காணக்கான பொய் வழக்குகளை சுமந்து கொண்டு, சிறை வாழ்க்கை அனுபவித்து, உயிரைத் தியாகமாய் தந்த சாதாரண மக்கள், மற்றும் எவ்வித அசம்பாவிதங்களும் நடக்காத வகையில் இந்த போராட்டத்தை மிகுந்த கட்டுக்கோப்போடு கொண்டு செல்லும் போராட்ட குழு உறுப்பினர்கள் எல்லாம் எந்த அளவுக்கு மார் தட்ட வேண்டும்?ஆக இங்கே எல்லாரும் தேவை. நம் எல்லோரின் கூட்டு முயற்சி என்ற மனப்பக்குவத்துக்கு வந்து விட வேண்டும். இங்கே யார் பெரியவன் என்று தங்கள் சுய பெருமை பேச ஆரம்பித்தால், அசிங்கப்படப் போவது நிச்சயம். போராட்டத்தை நன்கு அறிந்த நண்பர்கள் பலர் இந்த சமபவங்களை எல்லாம் அறிந்திருக்க கூடும். எனவே தங்களால் தான் இந்த உலகமே இயங்குவதாக கற்பனை செய்து கொள்ளும் அறிவாளுகளுக்கு அல்லது தற்குறிகளுக்கு பதில் சொல்லி நேரத்தை வீணடிக்க விரும்பவில்லை. அது என் வேலையும் அல்ல.
ஆனால் தமிழர் களம், தமிழர் களம் என்று சொல்கிறார்களே இதன் அமைப்பாளர் யார் என்பதை கொஞ்சம் தோலுரிக்க வேண்டிய நேரம் இது. என் கேள்விகளுக்கு பதில் சொல்லத் திராணி உள்ளவர்கள் பதில் சொல்லலாம். சவாலாகவே சொல்கிறேன்!
தமிழர் களத்தின் பொதுச்செயலாளர் அரிமா வளவன் என்று பலர் அறிந்திருக்க கூடும். கட்சிக் கொடி, சுவரொட்டி, மாநாடு என்று தூத்துக்குடி சார்ந்த பகுதிகளில் அவ்வப்போது பார்த்திருப்பீர்கள். இது ஒரு தேர்தல் அரசியல் இயக்கம்.
சரி அரிமா வளவன் என்பது இவரது உண்மையான பெயரா?
கிடையாது.அப்படியானால் இவரது உண்மையான் பெயர் லேனார்ட்.
இவரது சொந்த ஊர்? நெல்லை மாவட்டம் உவரி. இன்னும் தெளிவாக சொல்ல வேண்டும் என்றால் வார்த்தை சித்தர் வலம்புரி ஜானின் சகோதரர் மகன்.
இவரது பணி அரசியலா? அல்லது வேறு பணி செய்கிறாரா?
இவரது உண்மையான பணி அரசியல் இல்லை. இவர் தற்போதும் ஒரு கத்தோலிக்க கிறித்துவ பாதிரியார்.
இவருக்கு திருச்சபை பணி எங்கே ?
தற்போது திருச்சி மறைமாவட்டத்தில் பாதிரியாராக பணி புரிகிறார்.
தற்போது என் கேள்விகள் மிக எளிது!
உலக மகா வெண்ணை வெட்டி நியாயங்கள், மரபணு பரிசோதனை, கொள்கை, கோட்பாடு, ஊருக்கு உபதேசம் எல்லாம் சொல்லும் பாதிரியார். லேனார்ட் என்ற அரிமா வளவன், எப்படி தான் ஒரு பாதிரியாராக இருந்து கொண்டே,ஒரு தேர்தல் அரசியல் கட்சியை நடத்த முடியும்? அந்த கட்சியின் பொது செயலாளராக பதவி வகிக்க முடியும்? அப்படி அரசியல் கட்சி நடத்துவதற்கு கத்தோலிக்க பாதிரியார்களுக்கு அதிகாரம் கிடையாது. அது அவர்களின் பணியும் அல்லவே!
அப்படி கட்சி நடத்துவது தான் முதன்மைப் பணி என்றால்,தன் பாதிரியார் பணியை உதறி விட்டு வெளியே வந்து, அதன் பின்னர் அரசியல் கட்சி நடத்துவது தானே முறையாகும்.பாதிரியாராக இருந்து கொண்டே அரசியல் கட்சி நடத்துவது தவறு என்பது இவருக்கு தெரியாதா?
அரசியலுக்கு ஒரு பெயர், ஆலயத்துக்கு ஒரு பெயர் என்ற ரெட்டை வேடம் எதற்கு? நான் சொல்லும் இந்த உண்மைகள் எத்தனை பேருக்கு தெரியும்?
தற்போதும் பாதிரியாராக இருக்கும் இவரால், எப்படி சாதியம் சார்ந்த பாகுபாட்டை, ஒரு சாதிய வெறுப்பை/வன்மத்தை மனதில் வைத்துக் கொண்டு, யார் தமிழன் என்று மரபணு பரிசோதனை செய்து கொண்டே,பல சமுதாய மக்கள் வாழும் பகுதியில்,அவர்களுக்கு மத்தியில் இறைப் பணி செய்ய இயலும்?
வைகோ என்ற மனிதனை நேசிக்கும் என்னைப் பார்த்து,எப்படியடா ஒரு வடுகனை நேசிக்கும் நீ தமிழனாக இருக்க முடியும் என்று கேட்கும் ஒரு இயக்கத்தை சேர்ந்த நபர், இறைப்பணி செய்யும் ஊரில் பல சமுதாய மக்கள் ஆலயத்துக்கு வந்தால் என்ன மன நிலையோடு ஏற்கும்?
அதாவது இவரது சாதிய வன்மத்துக்கு ஒரு சின்ன உதாரணம். இவர் நடத்தும் வேர்கள் பத்திரிக்கையில், கடந்த சில மாதங்களுக்கு முன்பு, தமிழன் அல்லாத பேரறிவாளனின் தூக்குதண்டனைக்காக தமிழர்கள் எல்லோரும் பாடுபடுகிறார்கள், ஆனால் தமிழர் அல்லாதவர்கள் அந்த அளவுக்கு நன்றியோடு நடந்து கொள்வதில்லை என்ற பொருளில் ஒரு கட்டுரை எழுதி இருந்தார். இந்த ஆதாரத்தை வைத்து அவர் மீது கடுமையான கண்டனங்கள் எழுந்தன. உடனே, யாரோ எனக்கு தவறான தகவல் தந்து விட்டார்கள் என்று பம்மினார், மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன் என்றார். இது குறித்து ஆதாரத்தோடு ஒரு பதிவை நான் ஏற்கனவே எழுதி இருக்கிறேன். இங்கே அவர் மன்னிப்பு கேட்டாரா கேட்கவில்லையா என்பதெல்லாம் இரண்டாம் பட்சம். ஆனால் ஒரு பாதிரியாருக்கு இது போன்ற மக்களைப் பிளவு படுத்தும், கேவலமான அரசியல் தேவையா? இதை செய்வது முறையா? என்பதை எல்லாம் சிந்தித்து பார்க்க வேண்டும்.
கிறித்துவர்கள் சாதி பாகுபாடு பார்க்க கூடாது என்று இருக்கும் போது, கிறித்துவப் பாதிரியார் எப்படி சாதிய துவேஷத்தை மக்கள் மத்தியில் விதைக்கலாம்? இது ஒரு தவறான முன் உதாரணம்.
இன்னும் சில ஆச்சர்யங்கள் உண்டு. அது என்ன?
இவர் கிறித்துவப் பாதிரியாராக இருக்கிறார் என்று கணக்குக்கு சொன்னாலும் கூட நான் இவரது எழுத்துக்களைப் படித்து புரிந்து கொண்ட வகையில் இவர் ஒரு கிறித்துவர் அல்ல. இது இன்னும் வேடிக்கை அல்லவா! எதனால் இவர் கிறித்துவர் அல்ல என்று சொல்கிறேன்? இவரது பல்வேறு பதிவுகளை நான் முன்பே படித்து இருக்கிறேன். இயேசு கிறித்து ஒரு கடவுள் அல்ல, அவர் யூத மக்களுக்காக போராடிய ஒரு போராளி மட்டுமே! அதாவது எப்படி பிரபாகரன் தமிழ் மக்களுக்காக போராடிய மாபெரும் போராளியோ, அப்படித் தான் இயேசு கிறித்துவும் யூத மக்களுக்காக போராடிய ஒரு போராளி மட்டுமே என்பது தான் இவரது தத்துவம்.அவர் அப்படி எழுதிய பதிவுகளை நான் படித்திருக்கிறேன்.அவரது முகநூல் பக்கத்திலேயே அந்த பதிவுகள் இன்னும் இருக்கலாம்.
பிரபாகரனை போராளி என்று ஏற்பது போலவே, இயேசு கிறித்துவும் ஒரு போராளி மட்டுமே என்று ஏற்கும் மன நிலை கொண்ட மனிதர் எப்படி கிறித்துவராக இருக்க முடியும்?
அது மட்டும் தானா இவரது கருத்தியல் என்றால் கட்டாயம் இல்லை. இவர் உருவாக்கிய தமிழர் களம் கட்சி நபர்களிடம் இவர் உருவாக்கி வைத்திருக்கும் கருத்து என்னவென்றால், மீனவர்கள் தங்கள் அதிகாரங்களை இழந்து போக காரணம், அவர்கள் கிறித்துவர்களாக மதம் மாறியது தான்.ஆக இந்த கிறித்துவ மதம் தான் மீனவர்களின் அரசியல் அதிகாரங்களை சீரழித்துப் போட்டது. அப்படியானால் இதற்கு தீர்வு என்ன? மீண்டும் தாய் மதமாம் இந்து மதத்துக்கு மாறுவது தான் மீனவர்களின் அரசியல் அதிகாரத்துக்கு தீர்வு என்று ஒரு அரை வேக்காட்டு தீர்வையும் சொல்லி வருகிறார். இதே கருத்தைத் தான் சாகித்ய விருது பெற்ற எழுத்தாளர் ஜோ.டி.க்ரூசும் சொல்லி வருகிறார். இவர்கள் இருவரின் ஊரும் ஒன்றே, சித்தாந்தமும்,சிந்தனைகளும் ஒன்றே!
ஜோ.டி.க்ரூசைப் பொறுத்தவரையில் அவர் கிறித்துவ மதத்தைப் பற்றி என்ன வேண்டுமானாலும் உளறலாம். காரணம் கிறித்துவ மதத்தில் இருந்து வெளியேறி தன் தாய் மதத்துக்கே திரும்பி விட்டார். அரவிந்தன் நீலகண்டன் போன்றவர்களுக்காக, ஜெயமொகன் களுக்காக, சாகித்திய விருது போன்ற பலவற்றுக்காக அவர் எந்த அளவுக்கு வேண்டுமானாலும் இந்துத்வாவைப் பற்றி பேசலாம்.அது தான் மீனவர்களுக்கான ஒரே தீர்வு என்று சொல்லலாம்.ஆனால் அதை ஏற்க வேண்டுமா வேண்டாமா என்பதை கடலோர மக்கள் முடிவு செய்து கொள்வார்கள்.
ஜோ.டி.க்ரூஸ் பேசுவதைப் போன்றே பாதிரியார் லேனார்ட் என்ற அரிமா பேசலாமா என்றால் பேசக் கூடாது. அப்படி கிறித்துவ மதம் தான் மீனவர்களை சிதைத்தது, மீண்டும் இந்துக்களாக மாற வேண்டும்,அது தான் மீனவர்களுக்கான தீர்வு என்று பேசும் ஒரு நபர் பாதிரியாராக இருக்க தகுதி அற்றவர். இதை இந்த பாதிரியார் லேனார்ட் என்ற அரிமா உணரவில்லையா? அல்லது இதற்கு முன் இந்த கேள்விகளை யாரும் இவரிடம் கேட்கவில்லையா? கிறித்துவத்துக்கு முரணாக நின்று போதிக்கும்,கிறித்துவை கடவுளாக ஏற்காத ஒரு மனிதர் எப்படி பாதிரியாராக இருக்க இயலும்?
பாதிரியாராக தன்னைக் காட்டிக் கொள்ள லேனார்ட் என்ற பெயரும், வெள்ளை அங்கியும், அதே நேரத்தில் அரசியல்வாதியாக வலம் வர அரிமா வளவன் என்ற பெயரும்,வெள்ளை வேட்டியுமாக திரியும் இந்த மனிதர், ஏதாவது ஒரு பணியை செய்வது மட்டும் தான் சரியாக இருக்க முடியும். இந்த ரெட்டை வேடம் ஒருபோதும் இவருக்கு பொருந்தாது என்பதை விட தவறு!
அரசியல் என்று முடிவெடுத்த பிறகு, உழைத்து சம்பாதித்து, தன் சொந்த பணத்தில் அரசியல் செய்ய வேண்டும். பாதிரியாராக இருக்கும் ஒரு நபருக்கு, இத்தனை நாள்,எப்படி ஒரு அரசியல் கட்சி நடத்த பணம் வருகிறது? எங்கிருந்து வருகிறது? அவர் என்ன வேலை செய்கிறார்?அப்படியானால் அரசியல் கட்சி நடத்த, அதற்கான பணத்துக்காக பாதிரியாராக நடிக்கிறாரா?
என்னைப் பொறுத்தவரையில் நல்ல மனுஷனாக இருப்பவன் தன் மனசாட்சிக்கு பயப்பட வேண்டும். தன் மனசாட்சிக்கு மிஞ்சுன நீதிபதி இந்த உலகத்தில் எவரும் இல்லை.
கடந்த பல ஆண்டுகளாக பாதிரியாராகவும், அரசியல்வாதியாகவும் ரெட்டை வேடம் போட்டுக் கொண்டிருக்கும் பாதிரியார் லேனார்ட் என்ற அரிமா வளவன் கத்தோலிக்க பாதிரியார் என்ற நிலையை வகிப்பதற்கு தகுதி அற்றவர்.எனவே நியாயமான மனிதராக, மனசாட்சியோடு, குருத்துவப் பணியில் இருந்து விலகிய பிறகு, அரசியல் செய்வது தான் சரி.
ஒரே நேரத்தில் பாதிரியாராகவும், அரசியல்வாதியாகவும் தொடரும் அரிமா வளவன் அப்படி நியாயப்படி நடந்து கொள்வாரா?
இந்த பதிவு பாதிரியார் லேனார்ட் என்ற அரிமா அவர்களுக்கு மட்டுமல்ல, தமிழர் களம் கட்சியில் பொறுப்புகளில் இருக்கும்,
தூத்துக்குடி மறை மாவட்டத்தை பாதிரியார்களுக்கும் சேர்த்தே தான். புரிய வேண்டிய நபர்களுக்கு புரியும் என்று எண்ணுகிறேன். அவர்களும் தங்கள் பாதிரியார் பொறுப்புகளில் தானாகவே விலக வேண்டும். ஊருக்கெல்லாம் உலக நியாயம் பேசும் நபர்கள்,முதலில் தாங்கள் அதைக் கடை பிடிக்க வேண்டும் அல்லவா!
குறிப்பு:
எந்த மதத்தின் பிரதி நிதிகளையும் அவர்களின் தனி மனித தவறுகள் குறித்து கேள்வி கேட்கவோ விமர்சனம் செய்யவோ எனக்கு விருப்பம் கிடையாது.அப்படி செய்ததும் இல்லை. ஆனால் இங்கே இப்போது இவர்கள் செய்வது அடிப்படைத் தவறு. ஒரு மத போதகர் என்பவர் ரெட்டை வேடம் அணிந்து, ஒரு பக்கம் பாதிரியாராகவும், இன்னொரு பக்கம் அரசியல்வாதி, கட்சிக் கொடி, தேர்தல் என்று செயல்படுவதும் ஏற்க முடியாதது. அரசியல் ஆசைகளை வைத்துக்கொண்டு இருக்கும் இவர்கள்,தங்கள் அன்றாட வாழ்க்கை சவுகரியங்களுக்காக மட்டுமே கத்தோலிக்க பாதிரியார்களாக இருக்கிறார்களோ என்ற சந்தேகத்தை ஏற்படுத்துகிறது.சாதிய வெறுப்பு அரசியலை மக்கள் மத்தியில் பேசும் இவர்கள்,என்ன கிறித்துவத்தை போதிக்கப் போகிறார்கள் என்பது தான் மிகப்பெரிய கேள்விக் குறி!
அன்பின் ஆழத்தில்
ஆன்டனி வளன்