Tuesday, May 18, 2010
பெரியாருடைய தமிழன் யார்? - கொளத்தூர் மணி
பெரியாருடைய தமிழன், திராவிடன் என்பவை பெரும்பாலும் தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டு பெரியார் தமிழ்த்தேசியத்திற்கு எதிரி என்றுதான் பெரும்பாலும் பேசப்பட்டு வந்தது. பெரியார் திராவிடன் என்று சொன்ன காரணத்தால் திராவிடர் கழகம் என்று பெயர் வைத்த காரணத்தால் அவர் தமிழினத்திற்கு எதிரி. மற்ற திராவிட இனத்தைச் சார்ந்த மற்ற தேசிய இனங்கள் நம்மைச் சுரண்டுவதற்கும் அழுத்துவதற்கும் நாம் மானங்கெட்டு இருப்பதற்கும் பெரியார் சொன்ன திராவிடம் தான் காரணமாக இருந்தது என்றெல்லாம் சொன்னார்கள். மறைமலையடிகள் பேசிய சமயம் தேசியம், அவரைத் தவிர, அவர் சாதியைத் தவிர மற்றெல்லோரையும் வெளியே நிறுத்தியது. ம.பொ.சி பேசினார், தெலுங்கர்கள் , கன்னடர்கள் என்று தமிழர்களைத் தவிர மற்றவரை வெளியே நிறுத்தினார். யாரை உள்ளடக்கினார்? பார்ப்பனர்களையும் சேர்த்துக் கொண்டார். அவர் பேசிய தமிழ்த்தேசியத்தில் தமிழர்களிடம் தமிழ் மொழி இருக்க வேண்டும். ஆனால் இந்து என்ற அடிப்படையில் வட மொழியும் இருக்க வேண்டும். வழிபாடு வடமொழியால் செய்வதுதான் பயனுள்ளது என்ற கருத்தைக் கொண்டிருந்தார்.
‘சுயநிர்ணய உரிமை’ என்பதை அவர் 1946 ஆம் ஆண்டுதான் தமிழரசுக் கழகத்தை உண்டாக்கி அதற்குப் பிறகுதான் கொள்கையாக சொல்கிறார். ஆனால் பெரியார் 1940 ஆண்டிலிருந்தே ‘சுயநிர்ணய உரிமை’ என்ற சொல்லைக் கையாண்டிருக்கிறார். 1940 இல் ‘குடியரசி’ல் தலையங்கம் எழுதுகிறார். 1943 இல் ஒரு தலையங்கம் எழுதுகிறார். இரண்டிலும் பெரியார் சொல்கிறார்,
‘இன்று இந்தியாதான் தனது நாட்டின் எதிர் காலத் திட்டத்தை வகுக்க, நிர்ணயிக்க உரிமை கொண்டதென கூறுகையில், தமிழ் நாட்டின், திராவிட நாட்டின் எதிர் காலத்திட்டத்தை நிலையை வகுக்க, நிர்ணயிக்க, தமிழ்நாட்டுக்குத்தான் உண்டென்று நான் விளக்கி கொண்டு வருகிறேன். உண்மையிலேயே தமிழ் மகன் சுய நிர்ணய உரிமையைப் பெற்றிருந்தால் தன்னைப் பார்ப்பனியத்துக்கு அடிமைப்படுத்தி தன்மை தாசி மகன், சூத்திரன் என்று அழைத்துக் கொள்ள வெட்கப்படா மலிருப்பானா? என்று கேட்கிறோம். இந்த இழித்தன்மை, மானங்கெட்ட வாழ்வு ஒழிய வேண்டுமானால் தமிழனுக்குச் சுயநிர்ணய உரிமையிருத்தல் வேண்டுமென்பது நன்கு விளங்கும்’ என்று அவர் 11.2.1940 இல் ‘குடியரசி’ ல் எழுதுகிறார்.
அதே போல் இன்னொன்று. சாவர்க்கருக்கு 60 ஆம் பிறந்தநாள் வருகிறது.அதைக் கண்டித்து பெரியார் ஓர் அறிக்கை விடுகிறார். சாவர்க்கர் காந்தியைக் கொல்வதற்கு முன்பாகவே, அதாவது 1943 இல் இந்துத்துவா என்ற தத்துவத்தை இந்த மண்ணில் விதைத்த சாவர்க்கர் - அவரைத்தான் இன்று வீர சாவர்க்கர் என்று தூக்கி வைத்து ஆடிக் கொண்டிருக்கிறார்கள். அவரைப்பற்றி அதைக் கண்டித்து எழுதுகிற போது, அவர் பேசிய இந்து தேசியத்தைக் கண்டித்து எழுதுகிற போது, ‘சுயநிர்ணய உரிமை கோருவது ஆக்கிரமிப்பா?’ என்ற தலைப்பில் 8.6.43 இல் ‘விடுதலை’ யில் ஓர் அறிக்கை விடுகிறார். அதற்கு முன்பும் நிறைய இடங்களில் சொல்லியிருக்கிறார்.
‘தமிழன் தன்னை இந்தியன் என்று கருதியதால் தமிழ்நாட்டையும் தமிழர் வீரத்தையும், கலையையும், நாகரீகத்தையும் மறந்தான். தமிழன் தன்னை இந்து என்று கருதியதால் தனது மானத்தையும் ஞானத்தையும், பகுத்தறிவையும், உரிமையையும் இழந்தான். இரண்டு கட்டுக்களையும் உடைப்பதுதான் தமிழனை விடுதலை பெற வைக்கும்’ என்ற கருத்தினை ‘குடிஅரசு’ 17.9.1939 இல் சொல்லுகிறார். 1930 ஆம் ஆண்டு மே மாதம் சேலத்தில் நடந்த வன்னியர் சங்க மாநாட்டில் அவர் பேசுகிற போது, ‘இந்தியா ஒரு நாடாயிருக்கிறதா? இந்தியா ‡சாதிகள் காட்சி சாலையாக, மதக் கண்காட்சி சாலையாக, பாஷைகள், கண்காட்சி சாலையாக இருக்கிறதே தவிர ஒரு நாடு அல்ல’ என்று பேசியிருக்கிறார்.
1937 இல் தமிழ்நாடு இந்தியாவோடு சேர்ந்தது அல்ல என்று சொல்கிறார். 1938 இல் தான் ‘தமிழ்நாடு தமிழருக்கே’ என்ற முழக்கம் வைக்கிறார். 1938 இல் கடற்கரையில் நடந்த இந்தி எதிர்ப்புப் பொதுக் கூட்டத்தில், செப் ‡11 இல் ‘தமிழ்நாடு தமிழருக்கே’ என்ற முழக்கத்தை வைக்கிறார். ஆனால் அப்போது சென்னை ராஜதானியத்திலுள்ள மலையாளிகளும், கன்னடியர்களும், தெலுங்கர்களும் ஆகிய எங்கள் நிலை என்னாவது? என்று கேட்ட போது யார் யார் கேட்கிறார்கள் என்றால், அண்டை மாநிலத்தில் வாழுகிற எல்லா மலையாளிகளும், எல்லா தெலுங்கர்களும், எல்லா கன்னடியர்களும் அல்ல. ‘சென்னை ராஜதானியிலுள்ள மலையாளிகளும், கன்னடியர்களும் தெலுங்கர்களுமாகிய எங்கள் நிலை என்னாவது என்று சொன்ன போது, நான் ‘திராவிட நாடு திராவிடருக்கே’ என்று முழக்கத்தை மாற்றிக் கொண்டேன்’ என்று சொல்கிறார். ஆனால் அப்படி மாற்றிக் கொண்ட காலத்திலெல்லாம் கூட அவர் ‘திராவிட நாடு திராவிடருக்கே ’ என்ற முழக்கத்தை 1939 இலிருந்து 55 வரையிலும் சொல்லுகிறார். ஆனால் மொழிவாரி மாநிலங்கள் பிரிந்த பின்னால் இன்னும் ஏன் அதை சொல்லிக் கொண்டிருக்க வேண்டும் என்று தமிழ்நாடு தமிழருக்கே என்று முழக்கம் வைக்கிறார்.அதுவும் சொல்கிறார்‡‘இந்த தெலுங்கனுக்கும் கன்னடனுக்கும் மலையாளிக்கும் ஆரிய எதிர்ப்புணர்வோ, வடநாட்டு எதிர்ப்புணர்வோ சிறிதும் இல்லை. அவர்கள் எல்லாம் நல்லவேளையாகத் தொலைந்து விட்டார்கள். எனவே மீண்டும் முழக்கமிடுவோம் தமிழ் நாடு தமிழருக்கே’ என்று சொல்லுகிறார். மேலும் 1955 இல் சொல்கிறார் ‡ ‘சென்னை மாநிலம் என்று பிரிக்கிறான். மொழி வாரி மாநிலமாகப் பிரிக்கிறான். தமிழ்நாடு என்று பெயர் வைக்காமல் சென்னை மாநிலம் என்று பெயர் வைப்பான் போல் தெரிகிறது’.
மாநிலங்கள் சீரமைப்புக் குழுவின் அறிக்கை வருவதற்கு முன் பெரியார் எழுதுகிறார், ‘அதைவிட கொடுமையான செய்தி இருக்க முடியாது. என்னுடைய நாட்டை தனியாகப் பிரித்து, மாநிலமாகப் பிரிக்கிறாய். பிரித்து அதற்கு தமிழ்நாடு என்று பெயர் சூட்டாமல் சென்னை ராஜதானி என்ற பெயர் வைப்பதாக அறிகிறேன் ’என்று சொல்லி அதைக் கண்டித்து இதையயல்லாம் தமிழ்நாடு என்று பெயர் சூட்ட வேண்டும் என்பதை சொல்லிவிட்டு பிறகும் சொல்கிறார், ‘இவ்வளவெல்லாம் செய்த பிறகும் கூட திராவிடன் என்ற சொல்லை விட்டுவிட்டு தமிழன் என்று சொல்லியாவது தமிழகத்தைப் பிரிக்கலாம். அது வெற்றிகரமாக முடிவதற்கில்லாமல் பார்ப்பான் வந்து நானும் தமிழன்தான் என்று கூறிக்கொண்டு உள்ளே புகுந்து விடுகிறான். இதற்காகத்தான் நான் திராவிடன் என்ற சொல்லை தொடர்ந்து பயன்படுத்துகிறேன்’ என்று சொன்னார். அதற்குப் பிறகு 1955 இல் தமிழ்நாடு தமிழருக்கே என்ற முழக்கத்தை மாற்றிக் கொண்டாலும் கூட, ‘திராவிடன்’ என்ற சொல்லை சமுதாய விடுதலைக்குத் தொடர்ந்து விடாமல் சொல்லிக் கொண்டு வந்தார். அரசியல் விடுதலை வருகிற பொழுது தமிழ், ‘தமிழன்’ என்ற அடையாளத்தையும் சமுதாய விடுதலை என்று வருகிறபோது ‘திராவிடன்’ என்று அடையாளத்தையும் சொல்லி வந்திருக்கிறார். கடைசிவரை பெரியார் இந்த சிந்தனையோடு இருந்தார். தோழர் சீமான் அவர்கள் சொல்கிறபோது சொன்னார், இறுதி நாட்களில் கூட வலி வந்த போது கூட சொல்லை பிசிறில்லாமல் தொடர்ந்து சொன்னார். அந்த சொற்கள் என்ன தெரியுமா? அவர் பேசுகிறார். அந்த ஒலி நாடாவைக் கேட்டால் தெரியும்.
‘நீ யார்? உனக்கும் எனக்கும் என்ன சம்பந்தம். உன்னுடைய உணவு வேறு. என்னுடைய உணவு முறை வேறு. உன்னுடைய உடை வேறு. என்னுடைய உடை வேறு. உன்னுடைய கலாச்சாரம் வேறு. என்னுடைய கலாச்சாரம் வேறு. உன்னுடைய நடப்பு வேறு’ என்று சொல்கிறார். வலி வந்து விடுகிறது. உடனே அய்யோ, அம்மா, அப்பா என்று இரண்டு நிமிட நேரம் தன்னுடைய வலியை வெளிப்படுத்திவிட்டு, கொஞ்சம் தன்னை ஆறுதல் படுத்திக் கொண்டு பேசத் தொடங்குகிறார். ‘உன் நடப்பு வேறு. உனக்கும் எனக்கும் என்ன சம்பந்தம்’ என்று கேட்கிறார்.
நம் காலில் கல் இடித்து விட்டால் கூட பேசிக்கொண்டு வந்த செய்தி மறந்து விடும். என்ன பேசினோம் என்பதை பக்கத்திலிருப்பவரிடம் கேட்போம். பெரியாருக்கு வந்த அந்த வலிதான் அவருக்கு சாவில் கொண்டு போய் முடிந்த வலி. அவருக்கு வலி வந்த போது கூட இரண்டு நிமிடம் வலியில் கழித்த பின்னாலும் தமிழன் மேல் உள்ள அக்கறை, தமிழன் தனியாக நிலையான அரசாக வாழ வேண்டும் என்று எண்ணிய அவரது சிந்தனை, ‘உன்னுடைய நடப்பு வேறு’ என்று சொல்லிவிட்டு வலி வந்து இரண்டு நிமிடம் கதறிவிட்டு, அதற்கு பின்னால் சொன்னார், ‘என் நடப்பு வேறு , உனக்கும் எனக்கும் என்ன சம்பந்தம் வெளியே போ’ என்று. அந்த சிந்தனையோடு தான் இறுதி வரை இருந்தார்.
அவரைப் பொறுத்தவரை மூன்று செய்திகளில் தொடக்கத்திலிருந்து உறுதியாக இருந்தார். ஒன்று சாதி ஒழிய வேண்டும். உயர்ந்தவன் தாழ்ந்தவன் என்ற சாதி பேதம் கூடாது. அடுத்து ஆண், பெண் என்ற பாலின பேதம் கூடாது. 1927 இலிருந்து தொடர்ந்து குடிஅரசில் அவர் எழுதி வருகிறார். மூன்றாவதாக ஏழை ‡ பணக்காரன் என்ற பொருளாதார பேதம் கூடாது. மூன்றையும் ஒழிக்க பாடுபடும் இந்த சுயமரியாதை இயக்கம். அந்த மூன்றில் அவர் தொடர்ந்து எச்சரிக்கையாக , கவனமாக இருந்தார். அவர் தமிழ்நாட்டுக்கு விடுதலை என்று பேசுகிற போது கூட அதை சாதி ஒழிப்பின் நீட்சியாகத் தான் பார்த்தார். பெரியார் கடவுள் மறுப்பைக் கூட, சாதி ஒழிப்புக்கு தடையாக இருக்கிறது என்று உணர்ந்து தெளிந்து பிறகு கடவுள் மறுப்புச் சொல்கிறார். அவர் இலட்சித்தை, இலக்கை அடைய கடவுள் தடையாக இருக்கிறார் என்பதால்தான் கடவுளை மறுத்துப் பேசினார். கடவுள் மறுப்பே அவர் இலட்சியமல்ல. அவர் இலக்கை அடைய அது ஒரு வழியாக எடுத்துக் கொண்டார். அதை ஒரு கருவியாக எடுத்தார் கையில். அதே போல தான், சாதி ஒழிந்த சமுதாயம் அமைவதற்கு அல்லது வேறு வழியில் சாதியற்ற சமுதாயம் அமைந்து விட்டாலும் தொடர்ந்து அது நீடிப்பதற்கு ஒன்றுபட்ட இந்தியாவில் முடியாது என்பதை அவர் தெளிவாக உணர்ந்தார்.
பெரியார் திராவிட நாடு என்பது தமிழகம், கேரளம், ஆந்திரம், கர்நாடகம் ஆகிய நான்கு நாடுகள் சேர்ந்த பகுதி என்று சொல்லவே இல்லை. ‘சும்மா திராவிட நாடு என்று சொல்லுவது நம்முடைய காரியத்தைக் கெடுக்கத்தான் பயன்படுமே தவிர வேறெதற்கும் பயன்படாது என்பதை அறிய வேண்டும்’ என்று கூட கோபமாக சொல்கிறார். ‘மாநில சுயாட்சி’ பற்றி பேசும் பொழுது கூட,‘ மாநில சுயாட்சியைப் பற்றி பேசாதீர்கள். மாநில சுயாட்சி வந்து என்ன ஆகப்போகிறது?’ என்று கோபமாக எழுதினார். அன்று மாநில சுயாட்சி பற்றி தி.மு.க. பேசிக் கொண்டிருக்கிறது. பெரியார் ஆதரித்துக் கொண்டிருக்கிறார். ஆதரித்துக் கொண்டிருந்த நிலையில், 1969 ஆம் ஆண்டு மாநில சுயாட்சி மாநாடு நடக்கிறது. அப்போது பெரியார் சொல்லுகிறார், ‘சில மேதாவிகள், பிரகஸ்பதிகள், மாநிலங்களுக்கு அதிக அதிகாரம் வேண்டும் என்று கேட்கிறார்கள். இதன் கருத்தென்ன? வெறும் செருப்பாலடிக்காதே. அந்தச் செருப்புக்குப் பட்டு ஜரிகை கொண்டு குஞ்சங்கள் கட்டி அதனால் அடி என்று கேட்பது போல்தானே இருக்கிறது? இழிவை, மடமையை, மானமற்றத் தன்மையை, குறையைக் கவலையைத் தீர்க்க, அந்த அதிகாரத்தைக் கொண்டு என்ன செய்ய முடியும் உன்னால்?’ என்று கேட்கிறார். அதிக அதிகாரம் கொடுத்தாலும் சரி, இந்தியாவில் இணைந்திருக்கிற வரை இந்த இழிவை போக்க முடியாது. மானத்தை மீட்க முடியாது என்பதில் பெரியார் உறுதியாக இருந்து கருத்துக்களை சொல்லியிருக்கிறார்.
எனவே தந்தை பெரியார் திராவிடர் கழகம் தந்தை பெரியாரின் இலட்சியமான சாதி ஒழிப்பு நிகழ வேண்டுமானால் ஒன்று பட்ட இந்தியாவால் முடியாது என்பதை தெளிவாகப் புரிந்து கொண்டுள்ளது. ஒன்றுபட்ட இந்தியாவில் சாதி ஒழிப்பு நிகழ்ந்து விடுமேயானால் அதைத் தொடர்ந்து நிலைநிறுத்த முடியாது என்றும் உணர்கிறோம்.எனவே தமிழ்த்தேசியம், தமிழ்த்தேசிய மக்களுக்கான சுயநிர்ணய உரிமை என்பது தந்தை பெரியார் கொள்கை மட்டுமல்ல, தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் கொள்கையும் கூடத்தான். அது மட்டுமல்ல தந்தை பெரியாரும் இறுதிவரை சொல்லிக் கொண்டிருந்தார் என்பததான் உண்மை.
பெரியாரைப் பொறுத்தவரை அவரே கூட ‘மொழி உணர்ச்சி’என்று ஒரு கட்டுரை எழுதியிருக்கிறார். விடுதலையில் 25.7.1972 இல் அது வந்திருக்கிறது. பெரியார் மறைவதற்கு ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்னால். அதில் அவர் சொல்லுகிறார், ‘மொழி உணர்ச்சி இல்லாதவர்களுக்கு, நாட்டு உணர்ச்சியோ நாட்டு நினைவோ எப்படி வரும்? நம் பிற்கால சந்ததிக்காவது சிறிது நாட்டுணர்ச்சி ஏற்படும்படி செய்ய வேண்டுமானாலும் மொழி உணர்ச்சி சிறிதாவது இருந்தால்தான் முடியும். அன்றியும் சமுதாய உணர்ச்சி சிறிதாவது இருக்க வேண்டுமானாலும் மொழி உணர்ச்சி இருந்தால்தான் முடியும். உதாரணமாக, இன்று பார்ப்பனர்களுக்கு அவர்கள் எந்த வகுப்பார்களானாலும் சமுதாயத்துறையில் எவ்வளவு பேதம் கொண்டவர்களானாலும் சமஸ்கிருதம் (வடமொழி) என்ற மொழி உணர்ச்சியாலேயே அவர்கள் பிரிக்க முடியாத கட்டுப்பாடான இன உணர்ச்சி உள்ளவர்களாக இருக்கிறார்கள். உண்மையை சொல்ல வேண்டுமானால், ஆரியம் சமயத் துறையில் ஆதிக்கம் பெற்றதாலும், ஆங்கிலம் அரசியல் முதலிய பல்துறைகளில் ஆதிக்கம் பெற்றதாலுமே தமிழர்களுக்குள் இன உணர்ச்சி பலப்படவில்லை. குறைந்து வந்து விட்டது. இப்போது பாக்கி உள்ள துறைகளிலும் இந்தி ஆதிக்கம் பெற்று இந்தி மயமாக்கிவிட்டால், இந்தியும் ஆட்சிப் பீடம் ஏறி பெருமைபட்டு விட்டால்‡ தமிழன் நிலை என்னவாகும் என்பதை சிந்தியுங்கள்’ என்று அறிக்கை விடுகிறார். ஆக பெரியார் மொழி உணர்ச்சியைப் பற்றியும் அந்த மொழி உணர்ச்சி உங்களுக்கும் வேண்டும் என்றுதான் சொல்லி இருக்கிறார் (புரட்சி பெரியார் முழக்கம் ஏப்ரல் 28, 2005)
Subscribe to:
Post Comments (Atom)
1 comment:
கவி, நல்ல முயற்சி. உங்களிடமிருக்கும் அனைத்து தகவல்களையும் ஆவணப்படுத்துங்கள்.
--Pandiarajan
Post a Comment