Thursday, March 17, 2011

நதி நீர் இணைப்பு மசோதா - வைகோ நாடாளுமன்றத்தில் பேச்சு -4

கேரளத்தில் வீணாகும் நீர்


இந்த விவதாத்தில் கங்கை, காவிரி, மகாநதி அனைத்து ஆறுகள் பற்றிக் குறிப்பிட்டேன். எங்கள் சகோதர மாநிலமாகிய கேரளத்திலிருந்து அரபிக் கடலில் விழுந்து வீணாகி வரும் மேற்கு நோக்கிப் பாயும் ஆறுகள் பற்றியும் நாங்கள் பெரிதும் கவலை கொண்டிருக்கிறோம். இந்த ஆறுகளின் நீரைத் தமிழ்நாட்டின் தென்பகுதிகளில் பயன்படுத்தலாம். இதனால் தமிழ்நாடு மட்டுமின்றி கேரள மாநிலமும் வளம்பெறும். நீருக்குப் பதிலாக அவர்கள் மின்சாரத்தைப் பெற்றுக் கொள்ளலாம். நாங்கள் அரிசியும் கொடுக்க முடியும். நீதிபதி கிருக்ஷ்ண அய்யர் கேரள அமைச்சராக இருந்தபோது இந்தத் திட்டத்தை வலியுறுத்தினார். பிரிட்டிஷார் காலத்திலேயே இத்திட்டம் பற்றிப் பேசப்பட்டது. இந்தத் திட்டத்தை நிறைவேற்ற வேண்டும். அங்கே தண்ணீர் வீணாகிக் கொண்டிருக்கிறது.

எனது நண்பர்களில் சிலர் ஒவ்வொரு பிரச்சினையிலும் பன்னாட்டுக் கண்ணோட்டத்தைக் கொண்டிருக்கிறார்கள். எல்லாச் சிக்கல்களிலும் அவர்கள் உலகளாவிய கண்ணோட்டத்தைக் கொண்டிருப்பார்கள். ஆனால், இந்தக் குறிப்பிட்ட பிரச்சினையில் அவர்கள் குறுகிய மனப்போக்குடையவர்களாக, மாநில வெறியுடையவடர்களாக மாறி விடுகிறார்கள். நான் திரு. இராதாகிருக்ஷ்ணன் போன்ற நண்பர்களைப் பற்றிக் குறிப்பிடவில்லை. அவர் உயர்ந்த கண்ணோட்டம் கொண்டவர்.

முல்லைப் பெரியாறு அணை

முல்லைப் பெரியாறு அணையைப் பொறுத்தவரையில், இதன் உயரத்தை உயர்த்த வேண்டுமென்று மத்திய நீர்வள ஆணையம் ஏற்கெனவே கூறியிருக்கிறது. இதனால் பல்லாயிரம் ஏக்கர் பரப்புக்குப் பாசன வசதி கிடைக்கும். ஆனால், அவர்கள் மாற்ற முடியாத ஒரு நிலைப்பாட்டினைக் கொண்டிருக்கிறார்கள். இதனால் இருவருக்குமே பயனில்லை. தமிழ்நாட்டின் வறட்சிக்குள்ளாகும் தென் மாவட்டங்களுக்குக் கேரளத்திலிருந்து நீர்கொண்டு வருவதற்கு உதவும் ஒரு திட்டம் பம்பா - அச்சன்கோவில் - வைப்பாறு இணைப்புத் திட்டமாகும். கேரளம் இசைவளிக்குமானால் இத்திட்டம் நிறைவேறும்.

இந்தத் திட்டத்திற்குத் தேசிய நீர்வள மேம்பாட்டு முகவாண்மை தயாரித்துள்ள இயன்மை அறிக்கை இறுதியாக்கம் செய்யப்பட்டு, தொடர்புடைய இரு மாநிலங்களுக்கும், மத்திய அரசுக்கும் அனுப்பப்பட்டுள்ளது. ஒரு நாள் இந்த விவாதம் கவனத்தில் எடுத்துக் கொள்ளப்படலாம். எனவேதான், இந்த உண்மைகள் அனைத்தையும் இந்த அவையின் முன்பு வைக்கிறேன். இதனை, மாண்புமிகு உறுப்பினர்களின் பரிசீலனைக்கும், பரிவான ஆய்வுக்கும் முன் வைக்கிறேன். இத்திட்டம், தமிழ்நாடு மாநிலத்திற்கு மட்டுமின்றி, கேரளத்திற்கும் ஏன் இந்தியா முழுவதற்கும் கூட உதவும். அப்படிப்பட்ட திட்டத்திற்கு ஏன் எதிர்ப்புத் தெரிவிக்கிறார்கள் என்பது புரியவில்லை.

தென் தமிழகத்துக்குப் பயன்படும் திட்டம்

கேரளத்தில் மேற்கு நோக்கிப் பாயும் பம்பா, அச்சன்கோவில் ஆறுகளில் கிடைக்கும் உபரி நீரில் 22 டி.எம்.சி. நீரைத் திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள வைப்பாறு வடிநிலத்திற்குத் திருப்பிவிட இந்தத் திட்டம் வழி செய்கிறது. இவ்வாறு திருப்பி விடுவதால் திருநெல்வேலி, தூத்துக்குடி, விருதுநகர் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த ஒரு இலட்சம் ஹெக்டேர் நிலங்களுக்குப் பாசன வசதி கிடைக்கும். இத்திட்டத்திற்கு ரூ.1,400 கோடி செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது. எட்டு ஆண்டுகளில் இதனை நிறைவேற்றலாம்.

நீர்ப்பாசனம் மாநில அரசின் அதிகாரத்திற்குட்பட்டதாக இருப்பதால், இத்திட்டத்தின் தலைவிதி கேரள அரசின் முடிவைப் பொறுத்திருக்கிறது என்று தேசிய நீர்வள மேம்பாட்டு முகவாண்மை அதிகாரிகள் கூறுகிறார்கள். எனவே, இந்த அதிகாரம் ஒருங்கியல் பட்டியலில் சேர்க்கப்பட வேண்டுமென்றும், ஆறுகளை நாட்டுடைமையாக்க வேண்டுமென்றும் கூறினேன். இந்தத் திட்டத்தின்படி மூன்று அணைகள் கட்டப்படும். ஒன்று பம்பா கல்லாறு அல்லது புன்னமேடு ஆற்றின் குறுக்கேயும், மூன்றாவது அச்சன்கோவில் ஆற்றின் குறுக்கேயும் கட்டப்படும். இந்த அணைகளின் கொள்ளளவு முறையே 7.34 டி.எம்.சி., 17.54 டி.எம்.சி., 1.08 டி.எம்.சி. என்ற அளவில் இருக்கும்.

முதல் இரு அணைகளும் ஒரு எட்டு கிலோ மீட்டர் நீள குடைவுவழி மூலம் இணைக்கப்படும். இதன் மூலம் புன்னமேட்டிலிருந்து அச்சன்கோவிலுக்கு நீரைக் கொண்டு சென்று, அங்கிருந்து அச்சன்கோவில் கல்லாறு அணைக்கு நீர் இறைத்து விடப்படும். அச்சன்கோவில் - கல்லாறு அணையிலிருந்து மேற்குத் தொடர்ச்சி மலை வழியாகச் செல்லும் 9 கி.மீ. நீளக் குடைவுவழி மூலம் நீர் திருப்பி விடப்படும். செங்கோட்டை வட்டத்திலுள்ள மேக்கரை கிராமத்தில் குடைவுவழியில் வெளியேற்று முனை அமைந்திருக்கும். அந்த முனையிலிருந்து 50 கி.மீ. தூரம் நீர் ஓடி, வைப்பாற்றின் துணையாறுகளில் ஒன்றாகிய அழகரோடையை அடையும்.

அச்சன்கோவில் - கல்லாறு அணையின் கீழ் நீரோட்டத்தில் 50 மெகாவாட் உற்பத்தித் திறன் கொண்ட மின் உற்பத்தி நிலையம் அமைக்கப்படும். மொத்தத்தில் 8.37 மெகாவாட் திறனுடைய ஆறு சிறிய புனல் மின் நிலையங்களை நிறுவவும் திட்டமிடப்பட்டுள்ளது. இவற்றில் நான்கு நிலையங்கள் தமிழ்நாட்டிலும், எஞ்சியவை கேரளத்திலும் அமைக்கப்படும். இந்தத் திட்டத்தின் மூலம் 100 கோடி அலகு மின்விசை உற்பத்தி செய்யப்படும். ஆண்டுதோறும் 17 இலட்சம் டன் உணவுப் பொருள் உற்பத்தியாகும். இதனால் 400 கோடி ரூபாய் வருமானம் கிடைக்கும்.

முதலில் பம்பாவையும், அச்சன் கோவிலையும் வைகையுடன் இணைக்கத் திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால், அதிகச் செலவு காரணமாக இந்த இணைப்பு வைப்பாற்றுடன் நிறுத்தப்பட்டுள்ளது. ஏனென்றால், பின் தங்கிய பகுதிகளில்கூட மேம்பாட்டுத் திட்டங்கள் 9 சதவீதம் பலனை அளிக்க வேண்டுமென்று திட்டக்குழு வரையறுத்துள்ளது.

பம்பா - அச்சன்கோவில் வடிநிலங்களில் பாயும் மொத்த உபரி நீரில் 20 சதவீதம் வரை மட்டுமே திருப்பிவிடக் கோரப்படுவதாக தேசிய நீர்வள மேம்பாட்டு முகவாண்மை அதிகாரிகள் கூறுகிறார்கள். அதாவது, உபரி நீரில் 20 சதவீத நீரை மட்டுமே திருப்பிவிட வேண்டுகிறோம். மேலும், பருவமல்லாத காலத்தில் ஆறுகளிலிருந்து சுமார் 5 டி.எம்.சி. நீரை முறைப்படுத்தித் திறந்து விடுவதற்கு வகை செய்யப்பட்டுள்ளது. இதனால், ஆறுகளில் நீரோட்ட அளவு அதிகமாகும். உப்புத் தன்மை ஊடுருவதைத் தடுக்கவும் இது உதவும்.

பம்பா - அச்சன்கோவில் நீரை மின் உற்பத்திக்குப் பயன்படுத்துவதற்கான கேரள அரசின் “இரட்டைக் கல்லாறு திட்டத்தின்” முக்கிய நோக்கத்தை இந்தத் திட்டம் நிறைவேற்றும். கேரளத்தின் பாசனத் தேவைகளை நிறைவு செய்வதற்கும் இவ்வாறு நீரைத் திருப்பி விடுவது உதவியாக இருக்கும்.

ஆறுகளை நாட்டுடைமையாக்குக

இத்திட்டங்கள் அனைத்தையும் என்றாவது ஒருநாள் நிறைவேற்றியாக வேண்டும். அந்த நோக்கத்திற்காக இந்த மசோதாவை நான் முன்மொழிந்துள்ளேன். இந்த மசோதா பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டிருப்பது கண்டு மகிழ்ச்சியடைகிறேன். ஆறுகளை நாட்டுடைமையாக்கி விட்டால், பல்வேறு மாநிலங்களிடையே, தொடர்புடைய மாநிலங்களின் நலன்கள் பாதிக்கப்படாமல், நீரைப் பகிர்ந்தளிப்பதற்கு உதவும் என்பதுடன், கிடைக்கும் நீர்வளங்களை முறையாகப் பயன்படுத்துவதற்கும் இது உதவும்.

இந்த மசோதாவுக்கு இந்த அவையின் மாண்புமிகு நண்பர்கள் ஆதரவளிக்க வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறேன். இத்துணை நீண்ட நேரம் பேசுவதற்கு எனக்கு அனுமதி வழங்கியதற்காக அவைத் தலைவர் அவர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

No comments: