Friday, October 17, 2014

பெரியார் - தமிழ்த் தேசத் தந்தை – 6

பெரியார் - தமிழ்த் தேசத் தந்தை – 6

பெரியார், இந்தி எதிர்ப்புப் போராட்டத்தினால் ஏற்பட்ட எழுச்சியைத் திசைத் திருப்பவே திராவிடநாடு கோரிக்கையை எழுப்பினார் என்பது போன்ற அபத்தமான ஆராய்ச்சிகளுக்கு கூட தோழர்கள் எஸ்.வி.இராசதுரை, .கீதா கடுமையான எதிர்ப்பையும் பதிவு செய்கின்றனர். ஒரு தனி நாட்டுக் கோரிக்கைக்கான ஆதரவு ஏன் தமிழ் (அல்லது தெலுங்கு) முதலாளிகளிடமிருந்து வரவில்லை என்றும் பார்ப்பனிய ஒழிப்பு இல்லாத தமிழ்த்தேசியம் யாருக்குப் பயன்படும் என்றும் மக்கள் ஆதரவு என்பதை முன் நிபந்தனையாகக் கொண்டுதான் தனிநாட்டு அல்லது தன்னுரிமைக் கோரிக்கையை ஒரு இயக்கம் எழுப்ப வேண்டுமா? என்பது போன்ற நியாயமான கேள்விகளையெல்லாம் தோழர்கள் எஸ்.வி.இராசதுரையும் .கீதாவும் எழுப்புகின்றனர்.
பெரியார் திராவிட நாடு கோரிக்கையை முன் வைத்த போது, அக்கோரிக்கைக்கு காங்கிரஸ் தேசியவாதிகள், கம்யூனிஸ்ட் தேசியவாதிகள், தமிழ்ப்புலவர்கள் முதலியோரின் பங்களிப்பு என்ன என்பதையும் ஆராய வேண்டும். இது குறித்து தோழர்கள் எஸ்.வி.இராசதுரை, .கீதா ஆகியோர் பின்வருமாறு ஆராய்கின்றனர்:
தெலுங்கு, ஆந்திர முதலாளிகளின் நலன்களைக் காக்கவும் ஆந்திரர்களின் (தெலுங்கர்களின்) ஆதிக்கத்திற்காகவும்தான் திராவிடம் என்ற கோட்பாட்டை உருவாக்கி தமிழ்த் தேசியத்தை வஞ்சித்துவிட்டார் என்ற கருத்து இன்று பரப்பப்பட்டு வருகின்றது. முதலாவதாக நீதிக்கட்சியிலிருந்த தெலுங்குப் பணக்காரர்களும் முதலாளிகளுமான பொப்பிலியும் வெங்கிடகிரி ராஜாவும் (ஜமீனதாரும்) 1939 ஆம் ஆண்டிலேயே நீதிக்கட்சியிலிருந்து விலகி விட்டனர். தமிழ்நாட்டிலுள்ள தெலுங்கு பேசும் முதலாளிகள் அத்தகைய கோரிக்கையை எழுப்பவில்லை. ஆந்திர வர்த்தகர்களும் முதலாளிகளும் தனியாக வர்த்தக சபை வைத்துத் தங்கள் நலன்களைத் தமிழ்நாட்டு முதலாளிகளிடமிருந்து காக்க முயன்றனர். தென்னிந்திய பூர்ஷ்வாக்களிடையே இருந்த முரண்பாடுகள், அவர்களுக்கும் வட இந்தியப் பெரு முதலாளிகளுக்குமிடையே இருந்த முரண்பாடுகள் ஆகியன குறித்து ஆய்வு செய்துள்ள ராமன் மகாதேவன்....1930 களிலிருந்தே தென்னிந்திய பூர்ஷ்வா வர்க்கத்தின் மிகப் பெரும்பகுதி - தமிழ்நாட்டில் (குறிப்பாக கோவையில்) உள்ள தெலுங்கு பேசும் முதலாளிகள் உட்பட - காங்கிரசை ஆதரித்து வந்ததற்கான சான்றுகளையே தருகிறார் (R.M.234-262).
மேலும், திராவிட நாட்டுக் கோரிக்கையை (அல்லது தனி சென்னை மாநிலக் கோரிக்கை) 30.4.1942 இல் கிரிப்சுடன் விவாதிப்பதற்காகப் பெரியாருடன் சென்றவர்களான எம்..முத்தையா செட்டியார், செளந்தர பாண்டியன், சாமியப்ப முதலியார் ஆகிய அனைவரும் தமிழ் முதலாளிகள்தான் (ESV, 287). உண்மையில் திராவிட நாட்டில் தமிழர்களின் ஆதிக்கம் இருக்கும் என ஆந்திரர்கள்தான் அஞ்சினர். அதனால்தான் 1930களிலேயே அவர்கள் தனி வர்த்தக சபை அமைத்துக் கொண்டதோடு தனி ஆந்திர மாநிலக் கோரிக்கையை வலுவாக ஆதரித்தும் வந்தனர். ஆந்திர மாநிலக் கோரிக்கையை 1937-39 இல் நசுக்கியவர், இன்றைய தனித் தமிழர்களின் திடீர் அன்புக்குப் பாத்திரமாயுள்ள ராஜாஜிதான்.
பெரியாரின் திராவிட நாட்டு கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து துரோகமிழைத்தவர்களை பின்வருமாறு பட்டியலிடுகிறார்கள் தோழர்கள் எஸ்.வி.இராசதுரையும் .கீதா அவர்களும்:
பெரியாரின் திராவிட நாட்டுக் கொள்கையைத் தமிழ் முதலாளிகள் எந்த அளவுக்கு ஆதரித்தனர்? சுயமரியாதை இயக்கத்தில் இருந்த காலத்திலும் கூட ஆர்.கே. சண்முகம் காங்கிரஸின் வெளிநாட்டுத் துணிப் புறக்கணிப்பு, கதர்த்திட்டம் ஆகியவற்றை ஆதரித்தார் என்றும் அது தனது ஜவுளி ஆலை வளர்ச்சிக்கு உதவும் எனக் கருதினார் என்றும் ராமன் மகாதேவன் கூறுகிறார் (R.M.234-262). 1945 இல் ஆர்.கே. சண்முகம் இந்தியா எப்போதும் ஒரே நாடாகத்தான் இருந்தது என்று கூறிவிட்டார் (குஅ,3.3.1945). 1946-க்குப் பிறகு குமாரராஜா எம்.. முத்தையா செட்டியாரும் நீதிக்கட்சியிலிருந்து விலகி விட்டார். அவரைப் பெரியார் பல ஆண்டுகள் விமர்சிக்கவும் செய்திருக்கிறார்; ஆதரிக்கவும் செய்திருக்கிறார். கி..பெ. விசுவநாதம், செளந்திர பாண்டியன், பி.டி.ராஜன் ஆகிய செல்வந்தர்களும் 1945 இல் பெரியாரை விட்டு விலகினர் (ESV, 297) குமாரராஜாவும் பொப்பிலியும் 1946 இல் சென்னை மாகாண காங்கிரஸ் சட்டசபை உறுப்பினர்களால் அரசியல் நிர்ணய சபை உறுப்பினர்களாகத் தேர்ந்தெடுக்கப்பட்டனர் (திராவிட நாடு, 28.7.46). 1952 இல் திராவிட நாட்டுப் பிரிவினையை ஆதரிக்கக் கூடிய ஒரு முதலாளி கூட இருக்கக் கூட இல்லை. 1952 இல் சேலத்தில் நடந்த திராவிடர் கழக மாநாட்டிற்கு வந்திருந்த தெலுங்கு முதலாளி ஜி.டி.நாயுடு நாட்டுப் பிரிவினையை எதிர்த்துப் பேசிவிட்டுச் சென்றார். (விடுதலை, 22.6.1952, ஈவெராசி,623).
பெரியாரின் திராவிட நாடு எப்படிப்பட்டதாக இருக்கும்? பெரியாரின் நோக்கம் என்ன? என்பது பற்றியும் தோழர்கள் எஸ்.வி.இராசதுரையும் .கீதா அவர்களும் பின் வருமாறு விளக்குகின்றனர்:
பெரியாரும் அவரது இயக்கதினரும் திராவிட நாடு என்ற குறிப்புச் சொல்லால் அடையாளப்படுத்தியது சாதியற்ற, பொருளாதார ஏற்றத் தாழ்வற்ற, ஆணாதிக்கமற்ற ஒரு சமூக அமைப்பைத்தான். அதற்காக அவர்கள் நடத்திய போராட்டங்கள் வெறும் அடையாளப் பூர்வமானவை என்றும் கூடச் சிலர் கூறலாம். அவர்கள் அடைந்த இன்னல்களும் இழப்புகளும் கணிசமானவை.
பெரியாரின் நாத்திகமும் பார்ப்பன - பனியா எதிர்ப்பும், விரிந்த சந்தைக்காக வட இந்தியப் பெரு முதலாளிகளின் உறவை நாடிய தமிழ் பூர்ஷ்வாக்களுக்கு இடைஞ்சலாகவே இருந்திருக்கும். ... பெரியார் தனது திராவிட நாடு, தமிழ்நாடு கோரிக்கையில் எப்போதும் முதன்மைப் படுத்தியது பார்ப்பன- பார்ப்பனிய எதிர்ப்பைத்தான். அதுவே அவரது பலமும் பலவீனமும். எனினும், சமுதாய, பொருளாதார, பண்பாட்டு மாற்றத்தை விரும்புகிற வேறு எந்த ஒரு இயக்கமும் பார்க்கத் தவறிய பார்ப்பனியத்தை இடைவிடாது சுட்டிக்காட்டி வந்ததில்தான் அவரது பெருமை தங்கியிருக்கிறது. ... கட்டாய இந்தியை ஆதரித்த தமிழ் நாட்டுக் கம்யூனிஸ்டுகளுக்கு பதில் சொல்வதற்காக லட்சுமிரதன் பாரதி 1932 இல் ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்யப்பட்ட டிராட்ஸ்கியின் ரஷ்யப் புரட்சியின் வரலாறு என்ற நூலில் தேசிய இனப்பிரச்சனை பற்றிய லெனினியப் பார்வை குறித்து எழுதப் பட்டுள்ள அத்தியாயத்தின் சுருக்கத்தைத் தந்ததுடன் அதை இந்தியச் சூழலுக்குப் பொருத்திப் பார்க்கும் முயற்சியையும் செய்தார்.
பெரியார், 1956 இல் மொழியடிப்படையிலான மாநிலங்கள் அமையும் வரை, திராவிட நாடு கோரிக்கையை வைத்துக் கொண்டிருந்தார். அது தொடர்பான ஏராளமான போராட்டங்களை நடத்தியுமிருக்கிறார். அது தனி வரலாறு. பொருளாதாரச் சுரண்டலும் பார்ப்பனியமும் சாதியமும் நீங்கப் பெற்ற ஒரு சமுதாயத்தை, அந்த சமுதாயத்தை அமைப்பதற்குத் தேவையான நிலப் பகுதியைக் குறிக்கவே திராவிடம் என்ற குறிப்புச் சொல் அவருக்குப் பயன்பட்டது. இந்தி எதிர்ப்புப் போராட்டத்தின் போது பல்வேறு நீரோட்டங்கள் ஒன்று கலந்ததன் விளைவாகவே மொழியடிப்படையிலான தமிழ்த் தேசியம் தோன்றியது என்றாலும் அதற்கும் கூட பெரியாரும் சுயமரியாதை இயக்கத்தினரும்தான் கிரியா ஊக்கிகளாக இருந்தனர். எனினும் அவரது தனித்தமிழ்நாட்டுக் கொள்கை மொழியடிப்படையில் இருக்கவில்லை. மொழியடிப்படையில் தமிழ் மாநிலம் தனியாகப் பிரிக்கப்பட வேண்டும் என்று அவர் கோரிய போதிலும், பார்ப்பனிய ஒழிப்பு, சாதி ஒழிப்பு என்பதற்கே அவர் முதன்மை தந்தார் என்று நாம் ஏற்கனவே குறிப்பிட்டோம்....
அதனால் தான் சென்னை மாகாணம் என்ற திராவிட நாட்டுப் பிரிவினையை மிகத் தீவிரமாகப் பிரச்சாரம் செய்து கிளர்ச்சி செய்து கொண்டிருந்த காலத்திலேயே, அவரைச் சந்தித்த டாக்டர் அம்பேத்கரும் டாக்டர் மூஞ்சேவும் திராவிடம் என்ற குறிப்புச் சொல்லால் பெரியார் உணர்த்திய சாதியற்ற ஒரு சமூக அமைப்பை இந்தியா முழுமைக்கும் விரிவுபடுத்துவதைப் பற்றி அவர் யோசிக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்திருக்கிறார்கள். (குஅ,30.9.1944, 7.10.1944). ஜின்னா, பார்ப்பனியக் காங்கிரசையும் இந்து மதத் தலைவர்களையும் தீவிரமாக எதிர்த்தார் என்ற ஒரே காரணத்திற்காக அவரை அகில இந்திய திராவிடத் தலைவர் என்று குடிஅரசு ஒரு முறை அழைத்திருக்கிறது (குஅ,28.7.40). அம்பேத்கரை அகில இந்திய ஆதி திராவிடர்கள் தலைவர் எனக் கூறி வந்திருக்கிறது. 1944 டிசம்பரில் கான்பூரில் நடந்த பார்ப்பனரல்லாத பிற்பட்டோர் மாநாடுகளில் பெரியார் கலந்து கொண்டார் (ஈவெராசி யீணூ). வெறும் மொழியடிப்படையில் மட்டுமே ஆந்திர, மலையாள, கன்னடப் பகுதிகள் சென்னை மாநிலத்திலிருந்து பிரிந்து சென்று தனி மாநிலங்களை அமைத்துக் கொள்வதால் அம் மாநில மக்கள் பார்ப்பனிய ஆதிக்கத்திலிருந்தும் இழிவு நிலையிலிருந்தும் விடுதலை பெற முடியாது என்று கூறினார். எனினும் எஞ்சிய தமிழ்ப் பகுதியையே அவர் திராவிட நாடாக ஏற்றுக் கொள்ளவும் செய்தார். அவரது தொடக்கக் காலப் பிரிவினை முழக்கமான தமிழ்நாடு தமிழருக்கே என்பதற்கு மீண்டும் வந்து சேர்ந்தார். தன்னால் இவ்வளவுதான் முடியும் என்று கருதிச் செயல்படுவதுதான் அவரது போக்கு. ஆந்திரப் பிரிவினைக் கோரிக்கை தொடர்பாக அவர் கூறிய சில சொற்களைப் புரிந்து கொண்டால்தான் அவரது இலட்சியத்தைப் புரிந்து கொள்ள முடியும்: நான் விஸ்தீரணத்துக்காகப் போராடுகிறவன் அல்லன்; சுதந்திரத்திற்காகப் போராடுகிறவன் (விடுதலை, 7.8.53, ஈவெராசி, 727).
சுதந்திரம் என்பது அவரைப் பொருத்தவரை முதன்மையாகவும் முதலாவதாகவும் பார்ப்பனிய ஆதிக்கம் நீங்கிய நிலை. அதனால் தான் வெறும் மொழியடிப்படையிலான தமிழ்த் தேசியத்தை அவர் ஏற்றுக் கொள்ள மறுத்தார். மூவேந்தர், கண்ணகி, கற்புக்கரசி, ராஜராஜ சோழன், ராஜாஜி, காந்தி இவையெல்லாம் கலந்த .பொ.சி.யின் தமிழ்த் தேசியத்தை அவர் எதிர்த்தார்."
பெரியாரின் தமிழ்த் தேசியம் எது என்பதை மேலே விளக்கிய தோழர்கள் எஸ்.வி.இராசதுரை, . கீதா .பொ.சி.யின் பங்களிப்புப் பற்றியும் விவரிக்கிறார்கள்:
தமிழ்நாட்டில் பார்ப்பனிய-பனியா எதிர்ப்பு உணர்வு பெரியார் இயக்கத்தால் உருவாக்கப்பட்டு வளர்க்கப்பட்டு வந்த காலத்தில் தான், .பொ.சி.யின் தமிழரசுக் கழகமும் அவரது தமிழ்த் தேசியமும் தோன்றின. தமிழ் நாடு காங்கிரஸில் ராஜாஜி, சத்தியமூர்த்தி கோஷ்டித் தகராறும் பின்னர் ராஜாஜி, காமராஜ் கோஷ்டித் தகராறும் இருந்த காலத்தில் ராஜாஜியின் அரும்பெரும் சீடராக இருந்தவர் .பொ.சி. காங்கிரஸ் கட்சியிலிருந்து வெளியே வந்த பிறகும் உண்மைக் காங்கிரஸ்காரராகவே இருந்து, 1967 இல் அண்ணாவால் முதன் முறையாக அரசாங்கப் பதவிக்கு வந்து, அவசர நிலைக் காலத்தில் தி.மு.. தொடர்பிலிருந்து துண்டித்துக் கொண்டு, எம்.ஜி.ஆரின் தயவால் மீண்டும் அரசாங்கப் பதவிகளைத் துய்த்து விட்டு பின்னர் ராஜிவ் காலத்தில் மீண்டும் தனது தாய்க்கட்சியான காங்கிரஸில் சேர்ந்து அமரரானவர் அவர்! 1945 முதல் பெரியாரின் இயக்கத்தை எதிர்ப்பதற்காக காங்கிரஸ், பார்ப்பனச் சக்திகளால் பயன்படுத்தப்பட்டவர். அவரது நெஞ்சையள்ளும் சிலப்பதிகாரத்தையும்,கற்புக்கரசி கண்ணகி யையும் பார்ப்பனிய, ஆணாதிக்கப் பண்பாட்டுச் சின்னங்களாகவே பெரியார் பார்த்தார். சரியான வரைவிலக்கணங்களற்ற, குழப்பமான, திராவிட தேசியம் என்பதற்கு மாறாக, மொழியடிப்படையிலான தமிழ்த் தேசியத்தை அறிவியல் ரீதியாக முன் வைத்தவர் .பொ.சி. என்றும் பிரிட்டிஷ் ஆதரவு பெரியாருக்கு எதிராக ஏகாதிபத்திய விரோத .பொ.சி முன்வைத்த கோரிக்கை என்றும் இன்று சில பார்ப்பன தேசிய ஆராய்ச்சி மணிகள் எழுப்பும் ஒலியை இன்று அவர்களது ஈழத்து அடியார்கள் சிலரும் கூட எதிரொலிக்கின்றனர். (சிங்கள இனவாதத்தால் அழிக்கப்பட்டு வரும் ஈழத் தமிழர்களைக் காப்பாற்றுவதற்காக சென்ற இந்திய அமைதிப் படையின் அக்கிரமங்கள் பற்றியோ ஈழத் தமிழர்களின் உரிமைகள் பற்றியோ ஒரு வார்த்தை கூடப் பேசாதிருந்தவர் தான் .பொ.சி.- நூலாசிரியர்கள் எஸ்.வி.இராசதுரை- .கீதா) . எனவே அவரது தமிழ்த் தேசியம் பற்றிச் சில வி­யங்கள் சொல்லப்படுவது அவசியம்.
தமிழ் முரசு இரண்டாம் புத்தகத்தில் தமிழர்க்கும் சுயநிர்ணயம் என்ற தலைப்பில் .பொ.சி எழுதியதை பின்வருமாறு விளக்குகின்றார்கள் தோழர்கள் எஸ்.வி.இராசதுரையும் .கீதா அவர்களும்:
தனித்தனி அரசாக அமைந்தால்தான் வருங்கால சுதந்திர இந்தியா அமைதியாக நிலவ முடியும். நாட்டை, இனத்தை, மொழியை அடிப்படையில் பிரிக்க வேண்டுமே ஒழிய மதத்தை அடிப்படையாகக் கொண்டு பிரித்தால் தமிழ் நாட்டில் இந்து ராஜ்ஜியம் தான் ஏற்படும். இதைத் தமிழர்கள் ஏற்க மாட்டார்கள். அப்படி தமிழ்நாடு, தனிநாடாக ஆக்கப்பட்டால் அது தன்னுடன் தொடர்பு கொண்டுள்ள தெலுங்கு, கன்னட, கேரள நாடுகளுடன் ஒரு சமஷ்டி ஏற்படுத்திக் கொள்ள முடியும்.
இக்கருத்துக்கள், திராவிடர் கழகத்தின் திராவிட நாட்டுக் கொள்கைக்கு முரண்பட்டவையல்ல என்று அண்ணா எழுதினார். ஆனால் .பொ.சி. யின் இந்த தமிழர் சுயநிர்ணயம் ஏழாண்டுகளுக்கு மேல் நீடிக்கவில்லை. இது குறித்து விடுதலை 4.2.1953 இதழில் பொய் பொய் சுத்தப் பொய் என்ற தலைப்பில் சா. குருசாமி எழுதிய தலையங்கம் கீழ் வருமாறு:
உயர் திரு .பொ.சி. அவர்களைப் பற்றி ஹிந்து பத்திரிகையில் ஒரு கடிதம் வந்தது. அதற்குப் பதில் தரும் வகையில் திரு. .பொ.சி. அவர்களால் எழுதப்பட்ட கடிதம் நேற்றைய ஹிந்து இதழில் வெளிவந்திருக்கிறது: சுதந்திரத் தமிழ்க்குடியரசு தேவையென்று நான் கூறியிருப்பதாக இந் நிருபர் கூறுகிறார். தமிழரசு மாநாட்டிலோ அல்லது வேறெங்குமோ என் ஆயுளில் இதுவரையில் எங்குமே இது மாதிரி பேசியது கிடையாது. இந்த மாதிரியான பிளவு முயற்சிகளை எதிர்ப்பதற்காகவே தமிழரசுக் கழகம் துவக்கப்பட்டது. இந்த விவரம் மதிப்புக்குரிய ராஜாஜி அவர்களுக்கும் இந்த மகாணத்துக் காங்கிரஸ்காரருக்கும் நன்றாகத் தெரியும். இன்றைய இந்திய யூனியனின் ஒரு பகுதியான மொழிவாரி மாகாணம் ஏற்பட வேண்டுமென்ற இந்தக் கொள்கையை காங்கிரசும் ஒப்புக்கொள்கிறது என்பதை என் சொற்பொழிவில் விளக்கியிருக்கிறேன் என்பதுதான் நண்பர் சிவஞானம் அவர்களின் பதில். மதிப்புக்குரிய ராஜாஜியை தமக்குச் சான்றுக்காக அழைத்து அவருக்கும் வெண்சாமரத்தை வீச வேண்டிய நெருக்கடியான நிலைமை நமது வீரபாண்டியன் .பொ.சி அவர்களுக்கு ஏற்பட்டிருப்பது குறித்து எந்தத் தமிழனும் தலைகுனிந்தே தீர வேண்டும். கேவலம் ஒரு சட்டசபை மெம்பர் பதவிக்காக நமது மாபெரும் வீரர் இப்படி ஆரியத்தின் அடி பணிகிறார் என்று அவர்களது சீடர்களிலேயே பலர் நினைத்து வேதனைப்படுவர் என்பது நிச்சயம்.
இத் தலையங்கத்தில் .பொ.சி. முன்பு எழுதிய கருத்துக்கள் சுட்டிக் காட்டப்படுகின்றன:
தமிழகத்தின் அரசியல் பிற இனத்தவரின் தடையின்றி நடைபெற வேண்டும். அதற்காகத்தான் சுதந்திரத் தமிழரசு, அதை அமைக்கும் சுயநிர்ணய உரிமை கோருகிறோம். சுதந்திர சோ­லிச தமிழ் குடியரசு என்ற சொற்றொடரை ஒவ்வொரு கட்டத்திலும் ஒளிவு மறைவின்றி அழுத்தந்திருத்தமாக கழகம் வற்புறுத்தி வந்திருக்கிறது. ( 1.11.47 தமிழ் முரசு தலையங்கத்தில் 4-5 பக்கங்களில் உள்ளவை).
மேற்சொன்ன புதிய தமிழகத்தைச் சுதந்திர நாடாகச் செய்வதுடன் உழைப்பாளிக்கே உரிமை என்ற கொள்கையுடையதும் உழைப்புக்கும் தேவைக்கும் ஏற்ற ஊதியம் தருவதுமான சோஷயலிசக் குடியரசு நிறுவுவது என்பது தமிழரசுக் கழகக் கொள்கைகள் என்ற தலைப்பில் மூன்றாவது கொள்கையாக 1.6.47 தமிழ் முரசு இதழில் அச்சடிக்கப்பட்டுள்ளது. பிற இனத்தவரின் சுரண்டலுக்கு தமிழ்நாடு இரையாகக் கூடாது என்பதே தமிழரசுக் கழகத்தின் தலையாய கொள்கை (15.6.47 தமிழ் முரசு 4-ஆம் பக்கம் தலையங்கம்).
அரசியல் நிர்ணய மன்றத்தார் தயாரித்துள்ள புதிய அரசியலானது கடந்த கால ஏகாதிபத்திய இந்தியாவில் அமுலிலிருந்து அரசியலின் நகல் போன்றதாகும் (1.11.47 தலையங்கத்தின் இறுதியிலுள்ள பகுதி).
மொழிவாரி மாநிலப் பிரிவினை என்பதைக் காங்கிரஸ் 1920-களிலேயே தனது கொள்கையாக அறிவித்திருந்த போதிலும் தங்கள் ஆட்சிக் காலத்தில் மக்கள் போராடிய பிறகே அதனை நடைமுறைப்படுத்தினர் என்பது வரலாறு. ராஜாஜியின் 1937-39 ஆம் ஆண்டு ஆட்சிக் காலத்தில் சென்னை சட்ட மன்றத்தில் நிறைவேற்றப்பட்ட ஆந்திர மாநிலப் பிரிவினைத் தீர்மானத்தை .பொ.சி.யின் குருநாதரான ராஜாஜிதான் கொன்று புதைத்தார். அன்றைய சென்னை மாநிலத்திலிருந்து தமிழ் மாநிலம் பிரிக்கப்பட வேண்டும் என்பதை முதன் முதலாக ஒரு அரசியல் முழக்கமாக எழுப்பியது பெரியார் நடத்திய இந்திக் கிளர்ச்சிதான். தான் கோரிய திராவிட நாட்டிலும் மொழிவாரியான பிரிவினைகள் அனுமதிக்கப்படும் என்றுதான் பெரியாரும் கூறினார். அவர் நீதிக் கட்சித் தலைவர் பொறுப்பேற்றதும் ஆந்திர மாநிலப் பிரிவினையின் நியாயத்தை அங்கீகரித்தார். பார்ப்பனிய ஆதிக்கத்தை எதிர்த்து நடத்தப்பட்ட இந்திக் கிளர்ச்சியில் ஒடுக்குமுறை பயன்படுத்தப்பட்டதை எதிர்த்து ஒரு சொல் கூடப் பேசாதிருந்த .பொ.சி., 1953 இல் ஆந்திர மாநிலப் பிரிவினை கேட்டு ஆந்திரர்கள் போராடத் தொடங்கிய போது, தமிழ் நாட்டின் எல்லைகளைக் காக்கப் போராட்டத்தில் இறங்கியது குறித்துப் பெரியார் ஒரு பொதுக் கூட்டத்தில் பேசினார்:
பிரிவினை, ஆந்திரா - தமிழ்நாடு என்பது பற்றி 1926-லேயே முடிந்து விட்டது. அதனுடைய எல்லைகளும் அப்போதே தீர்ந்து போய்விட்டன. இன்றைக்கு 30 வரு­‌‌ங்களாக அனுபோக பாத்தியதைகளும் ஏற்பட்டுவிட்டன. இந்த 30 வருஷ­ங்களாக எல்லையிலேயே தமிழனோ தெலுங்கனோ காங்கிரசை, அனுபோகத்தை எதிர்த்தவர்களும் இல்லை. யாராவது எதிர்த்தார்கள் என்றால் காரியம் நடப்பதற்கு முட்டுக்கட்டை போட வேண்டும் என்பவர்கள் எதிர்க்கவே இல்லை. தமிழர்களில்தான் ஆகட்டும். இன்றைய தினம் தமிழ்நாடு எல்லைக்குப் போராடுகிறோம் என்று வருகிறார்களே வீரர்கள். இவர்கள் இந்த 20, 30 வருட காலமாக என்ன செய்தார்கள்? இன்றைய தினம் சிலர் தங்கள் விளம்பரத்துக்கு, பிழைப்புக்கு ஒரு வகை செய்வது போன்ற சுயநலன்களுக்குக் கூப்பாடு போடுகிறார்களே தவிர குமரி முதல் வேங்கடம் வரை என்கின்ற அறிவு இன்றைக்கு வருவானேன்? (விடுதலை, 7-8.1.53: ஈவெராசி, 723-724).
மொழியடிப்படையில் பிரிவதால் மட்டுமே விடுதலையடைந்து விட முடியாது என்று பெரியார் கூறிவந்த போதிலும், மொழிவாரி மாநிலப் பிரிவினையை ஏற்றுக் கொண்டார். சென்னை நகரம் தமிழர்களுக்கே என்பதில் உறுதியாகப் போராடினார். தமிழ்ப்பகுதியை அதற்குரிய தமிழ்நாடு என்று பெயரிடாமல் சென்னை மாகாணம் என்று காங்கிரஸ் அரசாங்கம் அழைத்து வந்ததைக் கடுமையாகச் சாடி வந்தார். தட்சிணப் பிரதேசத் திட்டத்தை எதிர்த்தார். ...1949 இல் அண்ணா தலைமையில், ஏற்படுத்தப்பட்ட பிளவு, பெரியாரின் இயக்கத்திற்குப் பலத்த அடியாக அமைந்தது. 1935 ஆம் ஆண்டு அரசியல் சட்டம், 1950 ஆம் அரசியல் சட்டம், காங்கிரஸின் செல்வாக்கு, அம்பேத்கரின் அனைத்திந்திய ஆளுமைக்கு இருந்த கவர்ச்சி ஆகியவற்றின் காரணமாக கணிசமான தாழ்த்தப்பட்டோர் காங்கிரசுக்கும் செட்யூல்ட் வகுப்பினர் பெடரே­னுக்கும் (பின்னர் இந்திய குடியரசுக் கட்சி) சென்று விட்டனர். ராஜாஜி பாகிஸ்தான் பிரிவினையை ஆதரித்து அதை வெற்றி பெறச் செய்தார் என்பதற்காக முஸ்லிம் தலைமை 1950களிலேயே ராஜாஜியை ஆதரிக்கத் தொடங்கியது. 1960களில் ராஜாஜி சுதந்திராக் கட்சியைத் தொடங்கிய போதும் அவரை ஆதரித்தது. கிறித்துவர்களிலும் (குறிப்பாக கத்தோலிக்கர்) முக்கிய பிரமுகர்கள் சிலர் (பேராசிரியர் ரத்னசாமி போன்றோர்) ராஜாஜியை ஆதரிக்கத் தொடங்கினர். பெரியாரின் சமூக சீர்திருத்தக் கொள்கைகள் அச்சமூகங்களில் குறிப்பிடத்தக்க வரவேற்பைப் பெறவில்லை. எனவே கடைசி நாட்களில் அவர் தனது தொண்டு முழுவதும் இந்துக்களில் சூத்திரர்களாக, வைப்பாட்டி மக்களாக வைக்கப்பட்டிருக்கும் பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட மக்களுக்கு மட்டுமே உரியது என்று கருதிச் செயல்பட்டு வந்தார். அவர்களது இழிவை போக்குவதற்கான தீர்வு தனித் தமிழ்நாடு தான் என்று கருதினார்.

(தொடரும்)

No comments: