Monday, November 1, 2021

பி.ஏ.கிருஷ்ணனுக்கு இன்னொரு மறுப்பு -ஆசீப் நியாஜ்

 பி.ஏ.கிருஷ்ணனுக்கு இன்னொரு மறுப்பு !

*********************************************************

- ஆசீப் நியாஜ் அவர்கள் 01.11.2017 இல் எழுதிய முகநூல் பதிவு


இப்போதெலாம் பெரியார் எனப் பார்த்தாலே கண்ணை மூடிக் கொண்டு அடித்து விடுவதில் பி.ஏ.கிருஷ்ணன் அவர்களுக்கு நிகர் அவரே ! இன்று ஒரு பதிவில் 1933 ஆம் ஆண்டு 9 மாதச் சிறைத் தண்டனை பெற்ற பெரியார் மன்னிப்புக் கடிதம் கொடுத்து 1934 மே மாதமே வெளிவந்துவிட்டார் என்கிறார். இது எதற்கு என்றால் சவர்க்கார் மன்னிப்புக் கடிதம் கொடுத்தது பற்றி விமர்சித்தது தவறாம். அவர் 10 ஆண்டுகள் அந்தமான் சிறையில் இருந்தாராம். அதனால் சவர்காரை பெரிய ஆளுமையாகவும், பெரியாரை வெத்து வேட்டாகவும் ஆங்கிலேய அரசு பார்த்ததாம்.


லண்டன் கர்சன் வில்லி கொலை (சுட்டது மதன் லால் டிங்கரா) மற்றும் நாசிக் கலெக்டர் ஜாக்சன் கொலை (சுட்டது ஆனந்த் லக்ஷ்மண் கான்ஹரே) என இரண்டுக்கும் மூளையாய்ச் செயல்பட்டதாய் லண்டனில் கைது செய்யப்பட சவர்கார் இந்தியா வரும் வழியில் கப்பலின் கழிவறை சன்னலை உடைத்துத் தப்பித்து மீண்டும் பிரான்ஸ் நாட்டில் பிடிபட்டார். யாரிடம் ஒப்படைப்பது என்ற வழக்கின் படி பிரிட்டிஷ் அரசிடம் ஒப்படைக்கப்பட்ட சவர்காரை 50 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து அந்தமானுக்கு அனுப்பியது. ஒரே ஒரு மன்னிப்புக் கடிதம் எழுதி வெளியே வரவில்லை. வந்த மூன்றாண்டுக்குள் நான்கு முறை மன்னிப்புக் கடிதம் எழுதினார். பின் பல முறை மன்னிப்புக் கடிதம் வழங்கிய பின் "என்னை விடுதலை செய்தால் நான் பிரிட்டிஷ் ஆட்சியாளர்களுக்கு விசுவாசமாக இருப்பேன்" என எழுதிக் கொடுத்தே வெளி வந்தார்.எங்கயோ கேட்ட மாதிரி இருக்கா??  இதையேதான் பாரதியும் கடலூர் சிறையிலிருந்து எழுதிய மன்னிப்புக் கடித்தில் எழுதினார். (I once again assure your Excellency that I have renounced every form of politics, I shall ever be loyal to the British Government and law abiding.) என்ற பாரதியின் வரிகளைத்தான் சர்வாகாரும் எழுதினார்..பாரதி கடயத்தில் இருந்ததைப் போலவே சவார்காரும் சகலத்தையும் அடக்கிக் கொண்டு ரத்தினகிரியில் இருந்தார். 2 கொலை, வரும் போது தப்பி ஓட்டம், வரிசையா மன்னிப்புக் கடிதம்.. இதலாம் ஒரு பெருமையா ??? !!


1930-லேயே பொதுஉடமைக் கருத்துக்களைப் பேச ஆரம்பித்துவிட்ட பெரியார் 1932-ல் ரஷ்யா சென்று, அந்நாளைய சோவியத் யூனியன் ஜனாதிபதி காலினினை நேரில் சந்தித்து உரையாடியவர். செஞ்சதுக்க மே தின விழாவில் உரையாற்றியவர். ரஷ்யா செல்லும் முன்னரே மார்க்ஸ் & எங்கல்ஸ் எழுதிய கம்யூனிஸ்ட் அறிக்கையையும் (4.10.1931), லெனினும் மதமும் என்ற நூலையும் (11.12.1931) வெளியிட்டார். பின் 29.12.1933-ல் ஈரோட்டில் தனது வீட்டில் சுயமரியாதைத் தொண்டர்களைக் கூட்டி 'சமதர்மத் திட்டத்தை' வெளியிட்டார்.இது "ஈரோட்டு பாதை" எனவும் அறியப்படும். தன்னுடைய சுய மரியாதை இயக்கத்தில் சமதர்மப் பிரிவு என ஒன்றை ஆரம்பித்து தமிழகமெங்கும்சமதர்மச் சங்கங்களைத் துவக்கினார். மே தினம் சமதர்மப் பெருநாள் என தமிழகம் முழுவதும் சுய மரியாதை இயக்கத்தாரால் கொண்டாடப்படும் என14.5.1933 குடி அரசில் அறிவித்தார்.


சரி, விசயத்திற்கு வருவோம் பொதுஉடைமை பேசியதற்காக 1933 டிசம்பரில் கைதாகி மன்னிப்புக் கொடுத்து வெளிவந்ததாகச் சொல்வது பொய் !


29.10.1933 அன்று குடி அரசில் "இன்றைய  ஆட்சி ஏன் ஒழிய வேண்டும்?" என்றத் தலைப்பில் ஒரு அறிக்கை எழுதுகிறார். இதற்காகத்தான் பெரியார் மீது ராஜதுவேஷ குற்றச்சாட்டுச் சுமத்தப்படுகிறது. பெரியாரின் தங்கை கண்ணம்மாள் அவர்களும் குடி அரசு "பதிப்பாளர்" என்ற முறையில் இதே குற்றச்சாட்டிற்கு உள்ளாகிறார். அத்தோடு குடி அரசுக்கு ரூ.2000 ஜாமீன் தொகையாகக் கட்டவேண்டும் என்றது. 12.11.33 அன்று குடி அரசு தலையங்கத்தில் இது பற்றித் தெரிவிக்கிறார் பெரியார்.


"குடி அரசு பத்திரிக்கைக்கு இந்திய அரசாங்க அவசரசட்டப்படி பாணம் போட்டாய் விட்டது. அதாவது நவம்பர் மாதம் 20ம் தேதிக்குள் தோழர் எஸ்.ஆர்.கண்ணம்மாள் உண்மை விளக்கம் அச்சுக்கூட சொந்தக் காரர் என்கின்ற முறையில் 1000 ஆயிரம் ரூபாயும், குடி அரசு பத்திரிக்கை யின் பிரசுர கர்த்தாவாகவும், வெளியிடுவோராகவும் இருக்கிறார் என்கின்ற முறையில் 1000 ஆயிரம் ரூபாயும் ஆக 2000 ரூபாய் கோயமுத்தூர் ஜில்லா மேஜி°டிரேட்டிடம் ஜாமீன் கட்டவேண்டுமென்று நோட்டீஸ் சார்வு செய்யப்பட்டாய்விட்டது." - குடி அரசு – தலையங்கம் – 12.11.1933


அதே இதழில் தனக்கு வந்த நோட்டிசையும் காட்டியுள்ளார். (பார்க்க படம் 1). பணம் கட்டமுடியாமல் குடி அரசு தடை செய்யப்படுகிறது.


பெரியார் அந்த வாரமே "புரட்சி" என்ற இதழை ஆரம்பிக்கிறார். ஆசிரியர் அவரது அண்ணன் ஈ.வெ.கிருஷ்ணசாமி. புரட்சியின் முதல் தலையங்கம் ஒரு வரலாற்றுச் சிறப்பு மிக்கது. எதற்கு புரட்சி என்பதை பெரியார் சொல்கிறார்.


"“குடி அரசை” ஒழிக்கச் செய்த முயற்சியால் “புரட்சி” தோன்ற வேண்டியதாயிற்று. உண்மையிலேயே பாமர மக்களின் அதாவது பெரும் பான்மையான மக்களின் ஆக்ஷியாகிய குடி அரசுக்குஉலகில் இடமில்லையானால் கண்டிப்பாகப் புரட்சி தோன்றியே தான் ஆக வேண்டும்." "வெள்ளை முதலாளிகளை ஒழித்துக் கருப்பு முதலாளிகளைக் காக்கும் வேலைக்கு இன்று “புரட்சி” வெளிவரவில்லை. அல்லது வெள்ளை ஆட்சியை ஒழித்துக் கருப்பு ஆட்சியை ஏற்படுத்த “புரட்சி” தோன்றவில்லை. அதுபோலவே இந்து மதத்தை ஒழித்து, இஸ்லாம், கிறிஸ்து மதத்தைப் பரப்ப “புரட்சி” தோன்றியதல்ல. அதுபோலவே, இஸ்லாம், கிறிஸ்து மதத்தை ஒழித்து இந்து மதத்தை நிலைநிறுத்த புரட்சி வெளிவரவில்லை. சகல முதலாளி வர்க்கமும், சர்வ சமயங்களும் அடியோடு அழிந்து, மக்கள் யாவரும் சுயமரியாதையுடன் ஆண் பெண் அடங்கலும் சர்வ சமத்துவமாய்வாழச் செய்யவேண்டும் என்பதற்காக புரட்சி செய்யவே “புரட்சி” தோன்றியிருக்கிறது." - புரட்சி 26.11.1933


டிசம்பர் 1933 பெரியாரும், கண்ணம்மாளும் கைது செய்யப்பட்டு கோவைச் சிறையில் அடைக்கப்பட்டனர். வழக்கு நடக்கிறது. 1 வாரம் கழித்து கண்ணம்மாள் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.


"இரு தரப்பு வாதங்களையும் கேட்ட பிறகு மாஜிஸ்திரேட் தோழர் கண்ணம்மாளை ஜாமீனில் விடுதலை செய்ய உத்திரவிட்டிருப்பதாகக் கூறினார். தோழர் டி.டி. ஆர் பிள்ளைக்கு உதவியாக தோழர்கள் ஈரோடு வேணு கோபால், சென்னை கே.எம்.பாலசுப்பிரமணியம், கோவை நஞ்சுண்டையா முதலிய வக்கீல்கள் ஆஜரானார்கள். “புரட்சி” பத்திரிகை பிரசுரகர்த்தாவும் பதிப்பாளருமான தோழர் எஸ். ஆர். கண்ணம்மாளை, அவர்மீது கொண்டு வரப்பட்டிருக்கும் வழக்கு விசாரனை முடியும் வரை ஜாமீனில் விட வேண்டுமென கோவை ஜில்லா மாஜிஸ்டிரேட் கோர்ட்டில் மனுச் செய்து கொள்ளப்பட்டது. ஜில்லா மாஜிஸ்டிரேட் அவரை ரூ.500 சொந்த ஜாமீனும், அதே தொகைக்கு மற்றும் ஒரு நபர் ரூ.500 ஜாமீனும் கொடுத்தால் விடுதலை செய்யும்படி உத்திரவிட்டார். தோழர் கண்ணம்மாள் ஜாமீன் கொடுத்து விடுதலையடைந்து அன்றிரவே மெயிலில் ஈரோடு வந்து சேர்ந்தார். தோழர் ஈ.வெ. ராமசாமி, எஸ்.ஆர். கண்ணம்மாள் இவர்கள் இருவர்மீதும் கொண்டு வரப்பட்டிருக்கும் வழக்கு ஜனவரி மாதம் 4 தேதி கோவை ஜில்லா மாஜிஸ்திரேட் கோர்ட்டில் விசாரணை வரும்." - புரட்சி-துணைத் தலையங்கம் – 31.12.1933


இ.பி.கோ.  124-A  செக்ஷன்படி  தொடரப்பட்டுள்ள  “”பொதுவுடைமை”  பிரசாரத்திற்காகவும்  “”இராஜ  நிந்தனை”  என்பதற்காகவுமுள்ள  வழக்கு  கோவையில் ஆரம்பிக்கப்பட்ட  போது  தோழர்  ஈ.வெ.  இராமசாமி  அவர்கள்  கோவை  ஜில்லா  கலெக்டர்  G.W.  வெல்ஸ்  I.C.S  அவர்கள்  முன்  தாக்கல்  செய்த  அறிக்கையை பி.ஏ.கி பார்க்க வேண்டும் சவர்காருடன் ஒப்பிடும் முன்..


"வழக்குக்கு அஸ்திவாரமான  291033  தேதி  “”குடி  அரசின்”  தலையங்கத்தை  இப்போது  பலதரம்  படித்துப்  பார்த்தேன்.  அதை  நான்  எழுதினேன்  என்பதை  ஒப்புக்  கொள்ளுகிறேன். அதில் எழுதப்பட்டிருக்கும்  விஷயங்களுக்காவது  வாக்கியங்களுக்காவது  ராஜத்துவேஷக்  குற்றம்  சாட்டப்படுமானால்  இன்றைய  அரசாங்க  முறை,  நிர்வாக  முறை  முதலியவைகளைப்  பற்றி  ஆராய்ச்சி  செய்து  குறைகளை  எடுத்துச்  சொல்லவோ,  அவற்றால்  மக்களுக்கு  ஏற்படக்கூடிய  கஷ்டங்களை  விலக்கப்  பரிகாரம்  தேட  ஏற்பாடு  செய்யவோ  யாருக்கும்  சுதந்திரம்  கிடையாது  என்றுதான்  முடிவு  செய்யப்பட்டதாகும்."


"ஏதாவது ஒரு கொள்கைக்கு  பிரசாரம்  பரவ  வேண்டுமானால்  அக்கொள்கையில்  நம்பிக்கை  கொண்டவர்கள்  அக் கொள்கைக்கு  இடையூறு  செய்பவர்களால்  அடக்கு  முறைக்கு ஆளாக  வேண்டியதும்  அவசியமேயாகும். "


"இதனால் பொதுஜனங்களுடைய  கவனிப்பு  இன்னும்  அதிகமாவதோடு  அவர்களது  ஆதரவும்  பெற  நேர்ந்து  கிளர்ச்சிக்கு  பலமேற்படக்  கூடுமாதலால்  என்  மீது  சுமத்தப்பட்ட இந்த  வழக்கில்  ஒரு  ஸ்டேட்மெண்டை  மாத்திரம்  கொடுத்து  விட்டு  எதிர்  வழக்காடாமல்  இப்போது  கிடைக்கப்போகும்  தண்டனையை  மகிழ்ச்சியோடு  வரவேற்கின்றேன்." -  புரட்சி  அறிக்கை  21.01.1934


தன் மேல் சுமத்தப்பட்டக் குற்றத்தை ஒப்புக் கொண்டு, ஒரு கொள்கைக்கு  பிரசாரம்  பரவ  வேண்டுமானால் அடக்கு  முறைக்கு  ஆளாக  வேண்டியதும்  அவசியமே எனச் சொல்லி எதிர்வழக்காடாமல் தண்டனையை மகிழ்ச்சியோடு ஏற்றுக் கொள்கிறேன் என்ற பெரியார் எங்கே, தப்பி ஓட முயன்று, பிடி பட்டு மன்னிப்புக் கோரிய சவர்கார் எங்கே ?????


ஜனவரி 24 அன்று வந்த தீர்ப்பு:


"ராஜநிந்தனை வழக்கை விசாரித்து வந்த கோவை ஜில்லா நீதிவான் ஆகிய தோழர் ஜி.டபள்யூ. வெல்ஸ், ஐ.சி.எஸ். அவர்கள் சென்ற ஜனவரி மாதம் 24ந் தேதியன்று கீழ்க்கண்டவாறு தீர்ப்பளித்திருக்கிறார். அதாவது தோழர் ஈ.வெ. ராமசாமி அவர்களுக்கு 6 மாதம் வெறுங் காவல் தண்டனையும் 300 ரூபாய் அபராதமும் தோழர் சா.ரா. கண்ணம்மாள் அவர்களுக்கு 3மாதம் வெறுங் காவல் தண்டணையும் 300 ரூபாய் அபராதமும், அபராதத் தொகை செலுத்தாத பட்சம் மேற்கொண்டு தலா ஒவ்வொரு மாதத் தண்டனையென்றும் தீர்ப்பளிக்கப்பட்டு காவலிலிருந்து வருகிறார்கள்."


தீர்ப்பிலேயே 6 மாதச் சிறை (படம் 2)  என்றுதான் இருக்கிறது.. பி.ஏ.கி 9 மாதம் என்கிறார்..


பெரியார் சிறையிலிருக்கும் போது கூட "புரட்சி" பொது உடமைக் கருத்துக்களை எழுதுவதை நிறுத்தவில்லை.  22.4.1934-ல் புரட்சியில் மே தினம் கொண்டாடச் சொல்லி விஷேச அறிக்கை வந்தது. (படம் 3)

29.4.1934 புரட்சித் தலையங்கத்திலும் மே தினம் பற்றி எழுதுகிறார்.


டிசம்பரில் கைதான பெரியார் மே மாத மத்தியில் ராஜமகேந்திரம் சிறையிலிருந்து விடுதலை ஆகிறார். சாதாரண கைதியாகவே நடத்தப்பட்டதை புரட்சி துணைத் தலையங்கம் 20.5.1934 கூறுகிறது


."தோழர்  ஈ.வெ.ராமசாமி  அவர்கள்  15ந்  தேதி  ராஜமகேந்திரம்  ஜெயிலிலிருந்து  விடுதலையாகி,  16ந்  தேதி  சென்னை  வந்து  அங்கிருந்து  அன்றே  புறப்பட்டு  17ந்  தேதி  ஈரோடு  வந்து  சேர்ந்தார்.  அரக்கோணம்,  காட்பாடி,  ஜோலார்பேட்டை,  சேலம்  ஆகிய  ஸ்டேஷன்களுக்கு  ஆங்காங்குள்ள  சுயமரியாதை  இயக்கத்தைச்  சேர்ந்த  நண்பர்கள்  வந்து  சந்தித்துப்  பேசிப்  போனார்கள்." (படம் 4)


சிறையிலிருந்து வந்தததும் அதைப் பற்றி பெரியார் பேசியதுதான் சவர்கார்க்கும் பெரியார்க்கும் உள்ள வித்தியாசம். பெரியார் எழுதினது ஒரு சப்பை மேட்டர், அதுக்கு இந்தத் தண்டனை ரொம்ப அதிகம்.. தன்னிடம் கேட்டிருந்தால் வேற நலல அறிக்கையை எடுத்துக் கொடுத்திருப்பேன் எனப் பகடி செய்கிறார்.


"அதாவது  குடி  அரசு  பத்திரிகையில்  என்னால்  எழுதப்பட்ட  ஒரு  சாதாரணமானதும்,  சப்பையானதுமான  விசயத்திற்காகத்தான்  நான்  சிறைக்குப்  போக  நேரிட்டதே  தவிர,  மற்றப்படி  செல்லத்தக்க  ஒரு  சரியான காரியம்  செய்துவிட்டு  சிறைக்குப்  போகவில்லை.  சர்க்கார்  இந்தக்  “”குடி  அரசு”ப்  பத்திரிகையின்  பழைய  இதழ்களைப்  புரட்டிப்  பார்த்தால் என்னை வருடக்கணக்காய்  தண்டிக்கக்கூடியதும்,  நாடு  கடத்தக்கூடியதுமான  விசயங்கள்  நூற்றுக்கணக்காக  தென்படலாம். "


பெரியாரின் டிசம்பர் 33 - மே 34 சிறை வாசத்தில் இதுதான் நடந்தது.. விதிக்கப்பட்டத் தண்டனையை அவர் கிட்டத்தட்ட 95% முடிந்த பிறகே விடுதலை ஆகி வெளியே வந்தார். அதுவும் மன்னிப்பெல்லாம் கேட்கவில்லை !!


பெரியார் சிறையிலிருந்த சமயத்தில் தோழர்.ஜீவா புரட்சி இதழில் எழுத ஆரம்பித்திருந்தார்.. பின், மாவீரன் பகத்சிங் தான் தூக்கிலிடப்படுவதற்கு முன்பாக எழுதிய “நான் ஏன் நாத்திகன் ஆனேன்” என்ற கட்டுரையை ஜீவா தமிழாக்கம் செய்தார். அதை தந்தைபெரியார் புரட்சி ஏட்டில் பதிப்பித்து வெளியிட்டார். அந்தக் கட்டுரையை வெளியிட்டதற்காக அரசு பெரியாரின் சகோதரர் கிருஷ்ணசாமிக்கும் (ஆசிரியர் என்ற முறையில்) , மொழி பெயர்ப்பாளர் ஜீவாவுக்கும் சிறைத் தண்டனை விதித்தது. பெரியார் சொன்னபடி ஈ.வெ.கி-யும் ஜீவா அவர்களும்  மன்னிப்புக் கடிதம் கொடுத்து விடுதலை ஆனார்கள். முதலில் மறுத்த ஜீவா,.கட்சி சொன்னதன் காரணமாக ஜீவாவும் மன்னிப்புக் கடிதம் கொடுத்து விடுதலையானார். இதுதான் "கடித" விசயத்தில் நடந்தது. இதில் பெரியார் கைதாகவே இல்லை.


பெரியார் தனது அண்ணனை மன்னிப்புக் கடிதம் கொடுக்கச் சொன்னது மட்டுமே உண்மை. ஈ.வெ.கி & ஜீவா கொடுத்த மன்னிப்புக் கடிதம் செய்தித் துணுக்காக  குடி அரசில் இருக்கிறது. (படம் 5)


"நான் ஏன் நாஸ்திகன் ஆனேன்” என்று பகத்சிங்கினால் எழுதப்பட்ட கடிதம் லாகூரிலிருந்து வெளியாகும் “”பீபிள்ஸ்” பத்திரிகையில் பிரசுரிக்கப் பட்டிருந்ததை அரசாங்கத்தாரால் பறிமுதல் செய்யப்பட்ட விஷயம் தங்களுக்குத் தெரியாதென்றும், ஆகவே அதை மொழி பெயர்த்ததும், அச்சிட்டுக் கொடுத்ததும் ராஜ துவேஷத்தை உண்டாக்க வேண்டும் என்னும் எண்ணத்துடன் அல்ல வென்றும் அதற்காக மன்னித்துவிட வேண்டும்." - குடி அரசு  செய்தித் துணுக்கு   24.03.1935


ஜீவா சமதர்மம் என்ற இதழை ஆரம்பித்து மன்னிப்புக் கடிதம் கொடுத்தற்கு விளக்கம் அளித்தார். இது தேவையில்லா மனக்கசப்பை ஏற்படுத்தும் எனக் கருதிய பெரியார், இந்தக் கடிதத்திற்கு தானே பொறுப்பு என்றார்.


31.03.1935 குடி அரசு தலையங்கத்தில் இது பற்றி "எனது அறிக்கையின் விளக்கம்" என்றத் தலைப்பில் விரிவாக எழுதினர்.


"உண்மை விளக்கம் பிரஸ் பதிப்பாசிரியரான தோழர் ஈ.வெ. கிருஷ்ணசாமி அவர்கள் மீதும், தோழர் ப. ஜீவானந்தம் அவர்கள் மீதும் காலஞ்சென்ற பகத்சிங்கால் எழுதப்பட்ட “”நான் ஏன் நாஸ்திகன் ஆனேன்?” என்ற புஸ்தகத்தை முறையே பிரசுரித்ததற்காகவும், மொழி பெயர்த்ததற்காகவும் இந்தியன் பினல் கோர்ட் 124ஏ செக்ஷன்படி ராஜ துவேஷக் குற்றம் சாட்டி கைதியாக்கி சிறையில் வைத்து வழக்குத் தொடர்ந்திருந்தது வாசகர்கள் அறிந்ததாகும். அவ்வழக்கு மேல்கண்ட இரு தோழர்களாலும் ராஜ துவேஷத்தை உண்டாக்கவோ, அதைப் பிரசாரம் செய்யவோ எண்ணங் கொண்டு அப்புத்தகம் பிரசுரிக்கவில்லை என்று அரசாங்கத்திற்குத் தெரிவித்து ராஜதுவேஷம் என்று கருதத்தகுந்த காரியங்கள் பதிப்பிக்கப்பட்டு விட்டதற்காக மன்னிக்க வேண்டுமென்று கேட்டுக் கொண்டதின் பேரில் அரசாங்கத்தார் வழக்கை வாபீஸ் வாங்கிக் கொண்டு தோழர்கள் ஈ.வெ.கி., ப.ஜீவா. அவர்களை விடுதலை செய்துவிட்டார்கள். இந்தப்படி இந்த இரு தோழர்களும் மன்னிப்புக் கேட்டுக் கொண்டு விடுதலையடைந்தார்கள் என்பதற்கு அவர்களே முழு ஜவாப்தாரிகள் அல்ல என்பதையும் பெரும்பான்மையான அளவுக்கு நானே ஜவாப்தாரி என்பதையும் முதலில் தெரிவித்துக் கொள்ளுகிறேன்." - குடி அரசு  தலையங்கம்  31.03.1935


மேற்கொண்டத் தரவுகள் மூலம் பி.ஏ.கி சொன்னது போல பெரியார் தனது 9 மாதத் தண்டனையை மன்னிப்புக் கடிதம் கொடுத்து விடுதலை ஆனார் என்பது உண்மையல்ல என்றும் பின்னர் வேறு பிரச்னைக்கு பெரியார் கேட்டுக் கொண்டதற்கிணங்க ஈ.வெ.கி & ஜீவா மன்னிப்புக் கடிதம் கொடுத்து விடுதலை ஆனதையும் நிறுவலாம். !!


விடுதலையாகி வெளியே வந்த யாரும் பாரதி/சவர்கார் சும்மா இருக்கவில்லை..அதே ஆண்டு அக்டோபரில், தமிழ்நாட்டில் உள்ள நாத்திகர்களை ஒன்றுபடுத்த வேண்டும் என்று நினைத்து சென்னை ராஜதானி நாத்திகர்கள் சங்கம் என்ற அமைப்பை ஏற்படுத்தினார். நாத்திகப் பிராச்சாரம், குட்டி குட்டி முதலாளித்துவமும், செவிட்டு அரசும் ஆகிய கட்டுரைகளை புரட்சி தொடர்ந்து வெளியிட்டது. இறுதியில் ஆங்கில அரசால் "புரட்சி" தடை செய்யப்பட்டது....


பெரியார் தொடர்ந்து சமதர்மம் பேசினார்.


28.04.1935 குடி அரசு  அறிக்கையில் "இந்த வருஷத்தில் மே தினத்தை மே மாதம் முதல் தேதியில் தமிழ்நாட்டின் ஒவ்வொரு ஜில்லாவிலும் உள்ள நகரங்கள் தோறும், ஆயிரக்கணக்கான தொழிலாளர்களைத் திரட்டி,வெகு விமரிசையாகக் கொண்டாட வேண்டுகிறேன். தேசம், மதம், ஜாதி என்கின்ற தேசீய உணர்ச்சிகளை மறந்து உலகத் தொழிலாளர் எல்லாம் ஒரே சமூகமாய் ஒன்றுபட்டு எல்லா தேச, மத, ஜாதி மக்களுக்கும் வாழ்க்கையில் சம உரிமையும், சம சந்தர்ப்பமும் கிடைக்கும்படி கொண்டாட வேண்டும் என்றும், தொழிலாளர் சமதர்ம ராஜ்ஜியம் ஏற்பட வேண்டும் என்னும் ஒரே அபிப்பிராயம் ஏற்படும்படி தொழிலாளர்களிடையில் பிரசாரம் செய்யவும், வேறு சாதகங்கள் பெறவும், இம் முயற்சியில் ஈடுபட வேண்டும் என்று தெரிவித்துக் கொள்ளுகிறேன்."


01.05.1935 ஆம் நாள் காரைக்குடியில் நடைபெற்ற மே நாள் விழாக் கொண்டாட்டத்தில் தலைமையேற்று ஆற்றிய முடிவுரையில் மே தினத்தை நாம் ஒரு பெரிய பண்டிகை போல் கொண்டாட வேண்டும் என்றார்.


08.09.1935 ஆம் நாள் தேவகோட்டையில் தோழர் லட்சுமிரதன் பாரதியார் வீட்டு மைதானத்தில் “சமதர்மம்’ என்ற தலைப்பில் ஆற்றிய சொற்பொழிவு

"நம் நாட்டிற்கு இன்று முதலில் ஜாதிபேதங்கள் ஒழிந்து மக்கள் யாவரும் பிறவியில் சமம் என்கின்றதான சமதர்ம முயற்சியே முதலில் செய்ய வேண்டியதாயிருக்கிறது. ஜாதி, பேதம், பிரிவு ஆகியவை ஒழிந்தால் தான் சமூக வாழ்க்கையில் சமதர்மமாய் மனிதன் வாழ முடியும். பொருளாதார பேதத்துக்கும் சமூக ஜாதி பேத முறைதான் பெரிதும் காரணமாய், காவலாய் இருந்து வந்திருக்கிறது. இன்றும் பெருவாரியான மக்களுக்கு ஜாதி பேதமே பொருளாதார சமதர்ம முறையை நினைக்கக்கூட இடம் தராமல் அடக்கி வருகின்றதுடன் பொருளாதார பேதத்துக்கு இடமளித்தும் வருகிறது."


19.10.1935  ஆம்  நாள்  திருச்சி  டவுன்ஹாலில்  பெரிய  கொட்டகையில்  நடைபெற்ற  திருச்சி  மாவட்ட  சுயமரியாதை  மாநாட்டில்  ஆற்றிய  தலைமையுரையில்

"ஈரோட்டு வேலைத் திட்டக் கூட்ட சமதர்ம திட்டத்துக்கு நாம் ஒருபோதும் பின் வாங்கக் கூடாது. ஆனால் அத்திட்டம் நிறைவேற்றப்படவேண்டிய விஷயத்தில் நமது பொறுப்பைக் கொண்டு செலுத்த அவற்றை அமுலுக்குக் கொண்டுவர, தக்க அனுபவ சாத்தியமான திட்டத்தோடு வேலை செய்ய வேண்டும். இவற்றிற்கு ஜஸ்டிஸ் கட்சியாரின் உதவியை எவ்வளவு தூரம் உபயோகப்படுத்திக் கொள்ள முடியுமோ அவ்வளவு தூரம் ஏற்றுக் கொள்ள வேண்டும். "


"சமதர்மம் என்பதைத் தமிழ்நாட்டு வாலிபருள்ளத்திற் புகுத்தித் தணல் விட்டெரியச் செய்தது, நான்தானென்று தோழர் ஜீவானந்தம் சொன்னார். “”சமதர்மம் ஒரு நாளில் ஏற்படக் கூடியதல்ல. ரஷியாவில்கூட ஒரு நாளில் சமதர்மம் ஏற்பட்டுவிடவில்லை. பல காலத்து வேலையால்தான் அதுவும் சந்தர்ப்பம் சரியாய் இருந்ததால்தான் முடிந்தது. முதலில் சமூகத் துறையில் சமதர்மம் ஓங்க வேண்டும்" -குடி அரசு  சொற்பொழிவு  27.10.1935


1936 மே தின கொண்டாட்ட வேண்டுகோள் -

"மற்ற தேசங்களில் தொழிலாளர் குறைபாடுகளை வெளிப்படுத்தி உலக அரசியலிலும், சமூக இயலிலும் தொழிலாளர்கள் சமத்துவமும் ஆதிக்கமும் பெறவேண்டுமென்று ஆசைப்பட்டு மே தினம் கொண்டாடுகிறார்கள். இந்தியர்களாகிய நாமும் சமூகத்துறையில் ஜாதி மத இழிவிலிருந்தும், பொருளாதாரக் கொடுமையில் இருந்தும் விடுதலை பெறவும், தமிழ்நாட்டில் ஒவ்வொரு ஊரிலும் ஆயிரக்கணக்கான மக்களைத் திரட்டி பொதுக்கூட்டம் கூட்டி நமது இழிவையும், கொடுமையையும் எடுத்துச் சொல்லி சகல மக்களுக்கும் சம உரிமையும், சம சந்தர்ப்பமும் கிடைக்கவேண்டுமென்று விளக்கிக் கொண்டாட வேணுமாய் வேண்டிக் கொள்ளுகிறேன்." -குடி அரசு அறிக்கை 19.04.1936


அத்தோடு பொது உடைமைத் தீர்மானங்களை நீதிக் கட்சிக்கு அனுப்பி அவற்றை நீதிக் கட்சியை ஏற்கவும் வைத்தார். இதில்தான் ஜீவா உட்பட சிலருக்கு பெரியாருடன் முரண்பாடு உண்டானது.


1936 ஆம் ஆண்டு நடந்த திருத்துரைப்பூண்டி தஞ்சை ஜில்லா 5 வது சுயமரியாதை மகாநாட்டில் சுய மரியாதை இயக்கத்திலிருந்து வெளியேறித் தனிக் கட்சித் தொடங்கிய ஜீவா போன்றோருக்கு பெரியார் பதில் கூறினார். இறுதியில் சுய மரியாதையா, பொது உடமையா என வரும் போது சுய மரியாதை இயக்கந்தான் முக்கியம் என்று பொது உடமைப் பிரசாரம் நிறுத்திக்கொண்டேன் என்றும் கூறினார்.


"நான் இப்போது சர்க்காருக்கு பயந்துவிட்டேன் என்றும், பொதுவுடமைப் பிரசாரத்தை விட்டு விட்டேன் என்றும் குறைகூறப்பட்டது. இதைப்பற்றி விஷமப் பிரசாரமும் செய்யப்பட்டு வருகிறது. இந்தச் சமயத்தில் எனது கருத்தை தைரியமாகவும், விளக்கமாகவும் வெளியிடுகிறேன். தயவு செய்து கவனித்துக் கேட்கவேண்டுமாய்க் கோருகிறேன். நான் ரஷ்யாவுக்குப் போவதற்கு முன்பே பொதுவுடைமைத் தத்துவத்தை சுயமரியாதை இயக்கத்துடன் கலந்து பேசி வந்தது உண்மைதான். ரஷ்யாவில் இருந்து வந்தவுடனும் அதை இன்னும் தீவிரமாய்ப் பிரசாரம் செய்ததும் உண்மைதான். அதோடு மாத்திரமல்லாமல் தமிழ் நாட்டில் சுமார் 150 சங்கங்கள் ஆங்காங்கு ஏற்படும்படி செய்து அவைகள் ஒரு அளவுக்கு வேலை செய்து வரும்படி செய்ததும், அவைகளுக்கு நான் சில உதவிகள் செய்து வந்ததும் உண்மைதான். ஒன்றையும் மறைக்கவில்லை. ஆனால் சர்க்காரார் பொதுவுடைமை கொள்கைகள் சட்ட விரோதமானது என்று தீர்மானித்து நமது சுயமரியாதை இயக்கத்தையே அடக்கி ஒடுக்கி ஒழித்துவிட வேண்டும் என்று கருதி இருக்கிறார்கள் என்று உணர்ந்த பிறகும், அதனால் பல கஷ்ட நஷ்டம், தொல்லை ஆகியவை ஏற்பட்ட பிறகும், காங்கிரஸ்காரர்கள் சர்க்கார் அடக்குமுறைக்கு முகம் கொடுக்க முடியாமல் அவர்கள் பின்னடைந்து விட்டதைப் பார்த்தும், நம்முடைய தோழர்கள் சிலர் நம்பிக்கைத் துரோகம் செய்துவிட்டதாலும், பலர் வெறும் வேஷ விளம்பரத்துக்கு அடிமைப்பட்டுவிட்டார்கள் என்பதை உணர்ந்ததாலும் எனக்கு புத்திசாலித்தனமாக சில காரியம் செய்யவேண்டியதாக ஏற்பட்டு விட்டது. அதுதான் பொதுவுடமைப் பிரசாரத்தை நிறுத்திக்கொள்ள வேண்டியது என்பதாக ஆகிவிட்டது."

"இப்பொழுதும் நான் ஒரு தினசரி நடத்த சகல ஏற்பாடுகளும் செய்து கொண்டு சர்க்காரை அனுமதி கேட்டதில் பெருவாரியான தொகை ஜாமீன் கட்ட வேண்டுமென்று உத்திரவு வந்து விட்டது. இந்த நிலையில் சுயமரியாதை இயக்கத்தை ஒழித்து விட்டு நான் மாத்திரம் வீரனாக ஆவதற்கு ஜெயிலில் போய் உட்கார்ந்து கொள்ளுவதா? அல்லது பொதுவுடமைப் பிரசாரத்தை நிறுத்தி வைத்துவிட்டு இயக்கத்தின் மற்ற திட்டங்களை நடத்துவதா என்று யோசித்துப்பாருங்கள். இதுதான் எனது உண்மை."


சுயமரியாதை இயக்கம் சந்தித்த அரசின் பல்வேறு அடக்குமுறைகளை பட்டியலிடும் பெரியார், சுயமரியாதைக் கொள்கையிலேயே சமதர்மமும் பொதுவுடைமையும் அடங்கியுள்ளது என்று விளக்குகிறார். “இந்த இயக்கம் எந்த தனிப்பட்ட மனிதனும் வீரனாவதற்கும், வீர சொர்க்கம் போய்ச் சேரவும் ஏற்பட்டதல்ல. எனக்கு வீர சொர்க்கத்தில் நம்பிக்கை கிடையாது” என்று கூறுவதோடு “புகழ் பெறுவதற்கு எவ்வளவு அயோக்கியத்தனம் செய்ய வேண்டுமென்பது நான் நன்றாய் அறிவேன். அத்துறையில் இருந்து பார்த்துவிட்டுத்தான் இந்த “இழிவு” பெறும் வேலைக்கு மனப்பூர்த்தியாகவே வந்தேன்” என்று குறிப்பிடுகிறார்.


“ஈ.வெ.ரா. விளக்கம்” எனும் தலைப்பில் பெரியார் தன்னைப் பற்றி எழுதி வெளிவந்துள்ள மற்றொரு தலையங்கம் இவ்வாறு கூறுகிறது.


இந்த இயக்கம் தோழர் ஈ.வெ.ரா. வுக்கு ஒரு ஜீவன மார்க்கமோ, சுயநல லாபமோ, புகழுக்கோ என்று இல்லாமல் வெறும் பொதுநல காரியத்துக்காகவே அவர் நடத்துகிறார். அதுவும் அவரது ஜீவன் உள்ள வரை ஒரு நேர்மையும், பொதுநலப் பயனும் உள்ள ஏதாவது ஒரு வேலை செய்ய வேண்டுமே என்பதற்காகவே செய்கிறாரே ஒழிய மற்றப்படி இன்ன காரியத்தை சாதிப்பதற்காக கடவுளால் அனுப்பப்பட்டவர் என்பதற்கோ அல்லது அதைச் செய்துதான் முடிக்க வேண்டும் என்கின்ற அவதாரத் தன்மைக்கோ, வீரத் தன்மைக்கோ அவர் அவ்வேலைகளைச் செய்யவில்லை. அன்றியும் அவர் காரிய “வீரரே” தவிர கொள்கை வீரரல்ல. கொள்கை சொல்பவர்கள் வண்டி வண்டியாக இருக்கிறார்கள். கொள்கை களைக் கொண்ட புத்தகங்களும் ஏராளமாய் இருக்கின்றன. சிறிது காரியமாவது செய்ய சௌகரியமாயிருந்தால் செய்துவிட்டுப் போவதுதான் மேலே ஒழிய கொள்கைகளை மாத்திரம் சொல்லிவிட்டு ஜெயிலுக்குப் போவது மேலானதாக ஆகிவிடாது என்கின்ற கருத்தும் கொண்டவர். ஆகையால்தான் காரியத்தில் சாத்தியமானதையே எவ்வளவோ எதிர்ப்புக்கும், தொல்லைக்கும் இடையில் செய்ய முயற்சிக்கிறார். இதற்கு பெயர் கோழை யென்றாலும், துரோகம் என்றாலும் அவருக்குக் கவலை இல்லை. கோழை என்பது செய்வதற்கு சவுகரியமுள்ள காரியங்களை விட்டு விட்டு ஓடுவதேயாகும். துரோகம் என்பது மக்களுக்குத் தொல்லை கொடுத்து விட்டு சுயநலத் துக்காகப் பின் வாங்குவதாகும். இன்று அவருக்கு செய்வதற்கு சவுகரியமுள்ள காரியம் எதையும் விட்டு விட்டு அவர் ஓடவில்லை. இரண்டாவதாக யாரிடத்திலும் எவ்வித வாக்குறுதி கொடுத்தோ கடுகளவாவது தன் சுயநலத்துக்கு பிரதி பிரயோஜனமடைந்தோ வேறு எந்தவித சுயநல காரியத்துக்கோ ஆசைப்பட்டு பின் வாங்கி விடவில்லை. - குடி அரசு தலையங்கம் 29.03.1936


ஆக சமதர்மத்தைப் பற்றி சற்று அதிகமாக பேசியதால் கைது செய்யப்பட்டார் என்பதும் மன்னிப்பு கேட்டப்பின் விடுதலை ஆனார் என்பதும் பொய் எனத் தெரிகிறது. ஏனெனில் 1934 - ல் விடுதலை ஆனப் பின்னேதான் நிறைய சமதர்மம் பேசுகிறார், 100-க்கும் மேற்ப்பட்ட சமதர்மச் சங்கங்களை ஆரம்பிக்கிறார்.


இத்தரவுகளைக் கொண்டு எனக்குத் தெரிவது என்னவென்றால் சவர்காரை குத்திய குத்தில் அவர் எழுதிய மன்னிப்புக் கடிதங்களைப் பார்த்த ஆங்கில அரசு "இவன் எவ்வளவு அடிச்சாலும் தாங்குறான், ரொம்ப நல்லவனு" வடிவேல் மாதிரித்தான் நடத்தியிருக்கிறார்கள். வெளியே போனாலும் இவரால் எந்தத் தொந்தரவும் இல்லை என்பதால்தான் அவரை விடுதலை செய்துள்ளனர். P.A.K அவர்களும் 1934-ல் விடுதலைக்கு பெரியார் எழுதிய மன்னிப்புக் கடிதத்தைக் காட்டி இதைப் போல் நிறுவினாரெனில் எம் கருத்தை மாற்றிக் கொள்ளத் தயாராய் இருக்கிறேன்.

No comments: