Wednesday, December 1, 2021

மலேசியத் தமிழர் தன்மான இயக்கத்தின் 9 ஆம் ஆண்டு பொதுக்கூட்டம்

 மலேசியத் தமிழர் தன்மான இயக்கத்தின் 

9 ஆம் ஆண்டு பொதுக்கூட்டம் 

9.2.2020 அன்று  கவி ஆற்றிய உரை

 1994 இல் ஒரு பேனாவின் கட்டளைகள், 2000 இல் சமுதாயம் எங்கே போகிறது? நெருப்பு முனையில் திருப்பு முனை, சரித்திரமே விழுத்திடு போன்ற காலத்தால் அழியாத வரலாற்று நூல்களையும் 1998 இல் சாதி ஒழிப்பு மாநாடு, தமிழ்மறை மாநாடு, பன்னாட்டு பகுத்தறிவு மாநாடு, உலகத் தமிழ் உணர்வாளர் மாநாடு என்று  பல உணர்ச்சிகரமான மாநாடுகளையும் நடத்தி, மலேசியத் தமிழர் தன்மான இயக்கத்தின் 9 ஆம் ஆண்டு பொதுக்கூட்டத்திற்கு தலைமையேற்றிற்கும் எழுத்தாண்மை ஏந்தல் அய்யா பெரு.அ.தமிழ்மணி அவர்களே! தமிழர் தன்மான இயக்கத்தின் புதிய பொறுப்பாளர்களே! உறுப்பினர்களே! வணக்கம்.

முதலில் இந்த மாநாட்டில் சிறப்புரை ஆற்ற வாய்ப்பு அளித்த அய்யா அவர்களுக்கும் பொறுப்பாளர்களுக்கும் என் நன்றி. 

நான் யார்.... 

‘பெரியார் பார்வை’ என்ற இதழ் ஆசிரியர்; ‘மலாயா தமிழ் முன்னோடிகளும் பெரியார் வருகையும்’ என்ற நூலின் ஆசிரியர்; ‘பெரியார் பட்டறை’ எனும்  பாசறையின் அமைப்பாளர்;

விடுதலைப் போராட்ட வீரர் வ.உ.சிதம்பரனாரின் திருக்குறள் அறத்துப்பால் உரையினை மீள்பதிப்புச் செய்தவர்;

தேவநேயப் பாவாணரின் அரிய படங்களைச் சேகரித்து ‘தேவநேயம்’ எனும் 14 தொகுதிகளை வடிவமைத்து, ‘தேவநேயம் இணையதளத்’தை உருவாக்கியும் பாவாணர் பெருமை பரப்பி வருகின்ற திருவாரூர் கவி அவர்கள், ‘தமிழினம் எழுவதாகுக’, ‘தமிழ்க்காவிரி நடந்தாய் வாழி’, ‘பெரியாரின் மொழிக் கொள்கை அறிவு பூர்வமானது’, ‘மறுமலர்ச்சி தி.மு.க. ‡ மற்றுமொரு தி.மு.க.வா?’, ‘தமிழர் கழகம் என்பதை திராவிடர் கழகம் என்று மாற்றினாரா பெரியார்?’ ஆகிய அறிவார்ந்த படைப்புகளை திராவிட இயக்கக் கருவூலமாக ஆக்கித் தந்த தோழர் கவி அவர்கள் என்று ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ அவர்கள் என்னைப் பற்றி கூறியுள்ளதை என் தகுதியாகக் கொண்டு இங்கு உரையாற்றத் தொடங்குகிறேன்.

பசிக்குத் தீனி, அலுப்புக்கு உறக்கம் என்று வாழ்வது விலங்கு வாழ்க்கை. 

பகுத்தறிவைப் பெற்றுள்ள கோடானு கோடி மக்களுள்ளும் பலர் அதே விலங்கு நிலையில் தாழ்ந்து கிடக்கிறார்கள். தாழ்த்தப்பட்டிருக்கிறார்கள்.  எப்போதோ ஒருமுறை அல்ல..... தலைமுறை தலைமுறையாக அடிமைகளாக இருக்கிறார்கள்.

நாடுகள் விடுதலை பெற்றிருக்கலாம். ஆனால் மனிதன் மனிதனுக்கு அடிமையாக இருக்கிறான். அரசியலில் அடிமையாக இருக்கிறான். பொருளாதாரத்தில் அடிமையாக இருக்கிறான்.

சாதி என்னும் கொடுமையான நஞ்சு தமிழர்களை தனித்தனியாகப் பிரித்து வைத்துள்ளது. ஆயிரம் சாதிகளாகப் பிரிந்துவிட்டன. 

ஒவ்வொரு சாதிக்காரர்களும் தனக்குக் கீழே நாலு பேர் இருக்கிறார்களே என்று நினைக்கிறானே தவிர, ஏன் தாழ்ந்த சாதி ? உயர்ந்த சாதி என்று கேட்க யாரும் துணிவதில்லை.

ஆயிரமாயிரம் ஆண்டுகளாக, தட்டிக் கேட்பாரற்று இருந்த சாதிக் கொடுமைகளை தட்டிக் கேட்டவர் தந்தை பெரியார்.

இந்தியாவில் கேரளாவில் வைக்கம் என்ற ஊரில் தெருவில் நடப்பதற்கு தாழ்த்தப்பட்ட மக்களுக்கு அனுமதி இல்லை.

வைக்கத்தின் வீதி ஊருக்கு பொது. அதில் நடக்காதே என்று தடுக்க யாருக்கு உரிமை? தடுப்பவர்கள் வீதியமைக்க, மண் வெட்டியவர்களா?  மண்கூடை சுமந்தவர்களா? உருளை வண்டி இழுத்தவர்களா என்று போர்ப்பரணி பாடி போராட்டம் நடத்தி, மனித உரிமையை நிலைநாட்டியவர் தந்தை பெரியார்.

சாதியின் பேரால் சமூகத்தில் ஏற்பட்டுள்ள பேதங்களையும், சமூகத்துறையிலும் பொருளாதார துறையிலும் இருந்து வரும் உயர்வு தாழ்வுகளையும் அகற்றி மக்கள் யாவரும் ஒரே சமூகமாக வாழச் செய்வதுதான் சுயமரியாதை இயக்கமாகும்.

1879 செப்டம்பரில் 17 இல் பிறந்து 10 ஆம் அகவையில் பள்ளிப்படிப்பை விட்டு விலகி மண்டிக்கடை வணிகத்தில் ஈடுபட்டு தனது 19 ஆம் அகவையில் நாகம்மையை திருமணம் முடித்து 21 ம் அகவையில் துறவறம் பூண்டு, பின் அவரது தந்தை வெங்கடப்ப நாயக்காரால் மீட்கப்பட்டு மீண்டும் வீடு திரும்பி 1914 இல் ஈரோடு நகர் மன்ற தலைவர்  உள்ளிட்ட பல்வேறு பதவிகளை வகித்த  பின்பு, தீண்டாமை ஒழிப்பு, மதுவிலக்கு, கதர் ஆகிய கொள்கையில் ஈர்ப்புக்கொண்டு 1919‡20 ஆண்டுகளில் காந்தியாரின் தலைமையேற்று ஒத்துழையாமை இயக்கத்தில் பங்கு கொண்டு , அதன் காரணமாக வழக்கு மன்றங்களில் தனக்கு வரவேண்டிய 50 ஆயிரம் ரூபாயை பெற  வழக்காடாமல் விடுத்து, அந்த தொகையை இழந்து, பின்பு கதர்இயக்கத்தில் ஈடுபட்டு திருசெங்கோட்டில் கதர் ஆசிரமத்தைத் திறந்து,  மனித சமூகம் சீரழிவதற்கு மதுதான் காரணம் என்பதில் அசைக்க முடியாத நம்பிக்கையில் சேலம் தாதம்பட்டியில் உள்ள தன் தோட்டத்தில் 500 தென்னை மரங்களை வெட்டி கள்ளுக்கடை மறியலில் ஈடுபட்டுச் சிறைச் சென்று, மாணவர்களிடையே வருணாசிரம வேறுபாட்டை வளர்த்த வ.வே.சு.அய்யர் நடத்திய சேரன்மாதேவி குருகுலத்தை எதிர்த்துப் போராடி, வைக்கம் ஊரில் தெருக்களில் ஈழவ மக்கள் நடக்க உரிமை கோரிப் போராட்டம் நடத்தி சிறை சென்று, பார்ப்பனரல்லாத மக்களுக்காக வகுப்புரிமை கோரிப் போராட்டம் நடத்தி, அக்கோரிக்கை மறுக்கப்பட்ட நிலையில் காங்கிரசிலிருந்து 1925 இறுதியில் வெளியேறி சுயமரியாதை இயக்கம் கண்டார் தந்தை பெரியார்.

மனிதன் பிறக்கும் போது சுதந்திரமாகப் பிறக்கிறான்.  ஆனால் அடிமையாக வாழ்ந்து அடிமையாக சாகிறான். அது எப்படி?

நாடுகள் சுதந்திரம் அடைந்து இருக்கின்றனவே என்ற கேள்விகள் எழலாம்.

கண்களுக்கு அப்படித்தெரியலாமே தவிர, உண்மையில் மனிதன் அந்நிய பண்பாடுகளுக்கு, சிந்தனை களுக்கு அடிமையாக இருக்கிறான். இது உலகம் முழுவதும் இருக்கிறது. நம்மிடம் உள்ள கொடுமையான அடிமைத்தனம் எது என்றால் சிந்திக்க மறுப்பது.

சில சமயங்களில் சிந்தித்தாலும் மனசாட்சியின் குரலை ஒலிக்க மறப்பது ‡ மறைப்பது.

தந்தை பெரியாரின் சிந்தனை சுதந்திரமானது.  மரபு வழி என்பதையும் அது நம்முடைய பழக்கம் என்பதையும் உடைத்தவர் பெரியார். 

பெரியார் அவர்கள் மனிதன் அறிவோடு வாழவேண்டும். மகிழ்ச்சியாக வாழ வேண்டும் என்று கருதினார். பெண்களின் முன்னேற்றத்திற்கும் உரிமைக்கும் போராடினார். 

பெரியார் அவர்கள் காங்கிரசிலிருந்து வெளியேறி, தொடங்கிய இயக்கம் சுயமரியாதை இயக்கம். உலக அரங்கிலே நாத்திக கொள்கையை முன்னிறுத்தி இயக்கம் தொடங்கியுள்ளார்கள், புரட்சிக் கருத்துக்களை முன்னிறுத்தி இயக்கம் தொடங்கியுள்ளார்கள். ஆனால் சுயமரியாதையை முன்னிறுத்தி இயக்கம் தொடங்கியவர் தந்தை பெரியார்.

பார்ப்பனரல்லாதவர்களுக்கான சுயமரியாதை, தொழிலாளர்களுக்கான சுயமரியாதை, பெண்களுக்கான சுயமரியாதை என்று போராடத் தொடங்கியவர் தந்தை பெரியார்.

மானம் அறிவும் மனிதர்க்கு அழகு என்றார். பகுத்தறிவு என்பது மனிதர்க்கு உயிர்நாடி. மூடநம்பிக்கையும் குருட்டு பழக்கமும் சமுகத்தின் முதல் பகைகள். மக்களின் ஒழுக்கத்தையும் மதியையும் கெடுப்பது மது. தீண்டாமை ஒழிய வேண்டுமென்றால் சாதி ஒழிய வேண்டும். பெண்ணடிமைத்தனம் ஒழிக்கப்பட வேண்டும். மனித பண்பை வளர்ப்பதே  என்வாழ் பணி என்று தொண்டாற்றத் தொடங்கினார் பெரியார்.

தந்தை பெரியார் அவர்கள் சுயமரியாதை இயக்கத்தை ஏன் தோற்றுவித்தேன் என்று சொல்கின்ற போது, உலகில் எங்குமில்லாத பிறவிக் கொடுமையாக இருக்கக்கூடிய இந்த சாதி இழிவு பேதம் இந்த சமுதாயத்தில் ஆழமாகப் பற்றியிருக்கின்ற காரணத்தால், ஒரு மனிதனை விட இன்னொரு மனிதன் உயர்ந்தவன், ஒரு மனிதனுக்கு இல்லாத வாய்ப்பு இன்னொரு மனிதனுக்கு இருக்க வேண்டும். ஒரு மனிதனை மதிக்காத இன்னொரு மனிதனை மட்டுமே மதிக்க வேண்டும் என்று இருக்கிற சாதி வருணாசிரம தர்மம் இந்த நாட்டில் அறவே அழிந்து மனித குலம் ஒன்றுபட வேண்டும் என்பதை அடிப்படையாகக் கொண்டே தொடங்குகிறேன் என்றார்.

கல்வி அறிவும் சுயமரியாதை எண்ணமும் பகுத்தறிவுத் தன்மையுமே தாழ்ந்து கிடக்கும் மக்களை உயர்த்தும் என்று கருதினார் பெரியார்.

அதற்காக 1925 இல் தமிழில் குடிஅரசு, 1928 இல் ஆங்கிலத்தில் ரிவோல்ட் 1934 இல் பகுத்தறிவு, புரட்சி, 1935 இல் விடுதலை 1971 இல் உண்மை என்று பல்வேறு ஏடுகளைத் தொடங்கினார்.

1929 இல் முதல் சுயமரியாதை மாநாட்டை செங்கல்பட்டில் நடத்தினார். 1938 இல் நாவலர் சோமசுந்தர பாரதியார், மறைமலையடிகள் போன்ற தமிழ் அறிஞர்களுடன் முதல் இந்திப்போரில் சிறை. நீதிக்கட்சிக்குத் தலைவர். 1940 இல் அண்ணல் அம்பேத்கர் முகம்மது அலி ஜின்னா ஆகியோருடன் சந்திப்பு. திருவாரூர் நீதிக்கட்சி மாநாட்டின் தீர்மானத்தின் படி 1944 இல் திராவிடர் கழகம் என்று பெயர் மாற்றம் என்று அடித்து ஆடத் தொடங்குகிறார் பெரியார்.

20.12.1929  அன்று பெரியார் அவர்கள் பினாங்கு துறைமுகம் வந்து சேருகிறார். கப்பல் பயணிகள் குறைத் தீர்க்கும் சங்கத் தலைவர் திரு.எ.சிங்காரம் பிள்ளை, செயலாளர் திரு. எம்.துரைராஜு அவர்கள், கப்பல் பயணிகள் ஆய்வாளர் திரு. எம்.எம்.எஸ். முதலியார் ஆகியோர் பெரியாரை வரவேற்றனர். பிறகு அவர்கள் பெரியாரிடம் தங்கள் வருகையைப் பற்றி சிலர் தப்பாய் எடுத்துக் கூறி  இருக்கிறார்கள்  என்றும்,  ஆனாலும் அதிக மக்கள் ஆவலாய் வரவேற்கக் காத்திருக்கிறார்கள் என்றும்  கடவுளைப் பற்றியும் சமயங்களைப் பற்றியும் பேச வேண்டிய அவசியம் ஏற்படாமல் பார்த்துக் கொள்ள வேண்டுமென்று ஆசைப் படுவதாகவும் சொன்னார்கள். 

இதற்குபெரியார் அவர்கள், கடவுளைப் பற்றியோ சமயங்களைப் பற்றியோ பிரசாரம் செய்வது தனது வேலை அல்லவென்றும், தான் எதிர்பார்க்கும் சீர்திருத்தங்களுக்கு அதன் எதிரிகள் தக்க சமாதானம் சொல்ல யோக்கியதை இல்லாமல் பயங்காளித்தனமாயும் பாமர மக்களை ஏமாற்றும் சூழ்ச்சியாயும், கடவுள்கள், மதங்கள், வேதங்கள், புராணங்கள் என்பவைகளைக் கொண்டுவந்து முட்டுக்கட்டையாய்ப் போடுவதால் அவைகளை எடுத்து எறிந்துவிட்டு முன்செல்ல வேண்டிய நிர்ப்பந்தம் தனக்கு ஏற்படுகின்றதென்றும், ஆனாலும் உண்மை யான கடவுளும் உண்மையான வேதமும் ஒன்று இருக்குமானால் அது தன்னால் அழிந்துபோகுமோ அல்லது மறைந்து போகுமோ என்று யாரும் பயப்பட வேண்டியதில்லை என்றும் சொன்னார். அதிகாரிகள் மூவரும் விடைபெற்றுச் சென்றனர்.

பினாங்கில் ஐக்கிய இந்திய அசோசியேசன் மண்டபத்தில் நடைபெற்ற வரவேற்பில், பெரியார் அவர்கள் சுயமரியாதையும் சமத்துவமும் அறிவு வளர்ச்சியுமே தனது தொண்டின் இலட்சியமென்றும், ஆதலால் தன்னால் யாருக்கும் எவ்வித ஆபத்தும் வந்துவிடாதென்று தான் உறுதியாய் கருதி இருப்பதாயும் கூறினார்.

பினாங்குக்கு அப்பால் 4 மைல் தூரத்தில் ஜனாப் முகமது ராவுத்தர் பங்களாவுக்கு அழைத்துச் செல்லப் பட்டு அங்கு ஒரு பெரிய விருந்து நடந்தது. விருந்து முடிந்து, ஏற்புரையில் பெரியார் அவர்கள், நாங்கள் இங்கு எந்தக் கோவிலையும் இடிக்க வரவில்லை யயன்றும் எந்த மதத்திற்கும் ஆபத்தையோ ஆதரவையோ உண்டாக்க வரவில்லையயன்றும் மற்றவர்களைப் போல் பணம் வசூல் செய்து மூட்டைக் கட்டிப் போக வரவில்லையயன்றும் உங்கள் அறிவையும் ஆற்றலையும் ஊக்கத்தையும் தட்டி எழுப்ப வந்து இருக்கிறோமென்றும் கூறினார்.

கோலப்பிறையில் இருந்த நமசிவாயம் தமிழ்ப் பாடசாலையைச் சென்று பார்த்தார்.

அங்கு ஒப்ரா என்ற மலாய் நாடக மேடையில் ஒரு பொதுக் கூட்டம் கூட்டப்பட்டது. ஏறத்தாழ 4‡5 ஆயிரம் பேர்களுக்கு மேலாகவே கூடியிருந்தார்கள். அக்கூட்டத்திற்கு திரு.நமச்சிவாயம் அவர்கள் தலைமை வகித்தார். 

இரவு ஏழரை மணிக்கு மேல், அறுபது மைல் தூரத்தில் உள்ள தைப்பிங்கு போகிறார். தைப்பிங் சேருவதற்கு இரவு பத்து மணி ஆகிறது. திரு. இரத்தினம் பிள்ளை அவர்கள் வீட்டில் பலமான விருந்து நடத்தப்பட்டு அங்கேயே இரவு தங்கியிருந்து மறுநாள் காலையில் (21.12.29) கோலகங்சார் சென்றார்.

கோலகங்சாரில் புகை வண்டி ஏறி பகல் இரண்டு மணிக்கு ஈபோ வந்து சேர்ந்தார்கள். அதே வண்டியில் மாநாட்டுத் தலைவர் ஜனாப் டாக்டர் மகம்மத் கவுஸ் ஜே.பி. அவர்களும் வந்தார்கள். 

இரயில் வண்டி ஈபோ வந்து சேர்ந்ததும் ஈபோ இரயில்வே ஸ்டேசனில்  கண்ணுக்கு எட்டிய தூரம் வரையில் பதினாயிரக்கணக்கான மக்கள் கூடியிருந்து நூற்றுக்கணக்கான மாலைகளாலும் ஆயிரக்கணக்கான வெல்கம்களாலும் பதினாயிரக்கணக்கான ‘ஜே’ சப்தங்களாலும் வரவேற்கப்பட்டு புகைப்படங்கள் எடுக்கப்பட்டு, சற்று இளைப்பாரச் செய்து, சாரணர்கள் புடை சூழ தலைவர்கள் முதலியவர்கள் தமிழர் மாநாட்டுக்கு ஊர்வலமாக அழைத்துச் செல்லப்பட்டார்கள்.

மாநாடு ஈபோ கானல்லி ரோட்டிலுள்ள சிலோன் அசோசியே­ன் மண்டபத்தில் 21.12.29 ஆம் நாள் மாலை 4 மணிக்கு தொடங்கியது. மாநாட்டில் கலந்து கொள்ள, பிரதிநிதிகளுக்கு 75,50,40,30,15, ஏழரை, ஒன்றரை ரூபாய்கள் வீதம் கட்டணங்கள் ஏற்படுத்தப்பட்டிருந்ததும் மண்டபம் முழுவதும் பெண்களும் ஆண்களும் நிறைந்து இடமில்லாமல் பிரதிநிதிகள் வெளியிலும் இருக்க வேண்டி இருந்தார்கள்.

திரு. அய்யாரு அவர்கள் தலைமையில் சுவாமி அற்புதானந்தாவால் பெரியாருக்கு ஒரு வரவேற்புப் பத்திரம் வாசித்துக் கொடுக்கப்பட்டது.  பெரியார் அவர்கள் அரை மணி நேரம் அரியக் கருத்துக்களை தெரிவித்து மாநாட்டை திறந்து வைத்தார்.

ஐனாப் மகமத் யூசுப் அவர்களால் பெரியாரின் உருவப்படம் திறந்து வைக்கப்பட்டது. பிறகு திரு. சதாநந்தம் அவர்களால் அரசர் படம் திறக்கப்பட்டது. பிறகு வரவேற்புத் தலைவர் திரு. அய்யாரு அவர்கள்  வரவேற்பு உரை ஆற்றினார்.

மகாநாட்டு தலைமை வகிக்க, ஜனாப் டாக்டர் மகமது கவுஸ் ஜே.பி. அவர்களை திரு. சாராங்கபாணி அவர்கள் முன்மொழிய சாமி அற்புதானந்தா வழிமொழிந்தார்.

‘தமிழ்நாடு’ பத்திரிக்கையின் மலாய் சீடரான ஜனாப் அமீத்கான் எழுந்து, ஒரு மகமதியர் இம்மகாநாட்டுக்குத் தலைமை வகிக்கக் கூடாது என்று சொல்லி அதைப்பற்றி பேச எனக்கு நேரம் கொடுக்கவேண்டும் என்று கேட்டார். 

அவருக்கு நேரம் கொடுக்கப்பட்டது. சுயமரியாதை இயக்கம் மகமதியர்களுக்கு விரோதம் என்று சொல்லி ஆரம்பித்தவர், கடைசியில் 1300 வரு­த்திற்கு முன்னாலேயே மகமதிய மதத்தில் இந்த சுயமரியாதை இயக்கக் கொள்கைகள் முழுவதும் இருக்கின்ற தென்றும் தங்களுக்கு யாரும் சுயமரியாதை போதிக்க வேண்டியதில்லை என்றும், ஆதலால் மகமதியர் தலைமை வகிக்கக் கூடாதென்றும் சொல்லி உட்கார்ந்தார். ஆனால் மக்களின் பேராதரவின் காரணமாக ஜனாப் டாக்டர் மகமது கவுஸ் தலைவராக இருந்து மாநாட்டை நடத்தினார். 

ஜனாப் அமீத்கான் கூறிய கருத்துக்களுக்கு தனது பேச்சில் பெரியார் விடை கூறினார்.

23.12.29 காலையில் பெரியார் அவர்கள்  ஈபோ நாடார் சங்கத்தாரின் அழைப்புக்கு இணங்கி அங்குச்சென்றார்.அங்கு கூடியிருந்த நூற்றுக்கணக்கான நாடார் பெருமக்களாலும் ‘ஜே’ கோ­த்துடன் வரவேற்கப்பட்டு மாலை சூட்டப்பட்டனர். பிறகு, மலாக்கா பெருமாள் நாடார் அவர்கள் தலைமையில் ஈபோ நாடார்களால் ஒரு வரவேற்புப் பத்திரம் வாசித்துக் கொடுக்கப்பட்டது. 

அப்பத்திரத்தைப் பெற்று ஒரு மணி நேரம் நாடார் மக்களின் முன்னேற்றத்தைப் பற்றியும், அவர்களால் சுயமரியாதை இயக்கத்திற்குள்ள ஆதரவைப் பற்றியும், இந்தியாவில் இது சமயம் சுயமரியாதை இயக்கத்திற்குத் தலைவர் ஒரு நாடார் கனவான் என்றும் அவர்தான் உயர்திரு. டப்பள்யூ.பி.ஏ. செளந்திரபாண்டியர் எம்.எல்.சி. என்றும், அவர் உதவியால் இயக்கம் பெற்றுள்ள பலத்தைப் பற்றியும் பெரியார் பேசினார். 

24.12.29 காலையில் திரு.இராமசாமியாரும் அவரைச் சேர்ந்தவர்களும் ஈப்போவிற்கு 5 மைல் தூரத்தில் உள்ள வெந்நீர் ஊற்றுக் கிணற்றிற்குச் சென்று நீராடினார்.

 அன்று பிற்பகல் திரு.அய்யாரு அவர்கள் வீட்டில் உணவு கொண்டு நடுப்பகல் 1 மணிக்கு புகைவண்டியேறிச் சிங்கப்பூருக்குப் பிரயாணமானார்கள். 

ரயில் மார்க்கமாக  சிங்கப்பூருக்குப் போய் கொண்டிருக்கையில், விடியும் மட்டும் ரயில் நிற்கும் ஒவ்வொரு ஸ்டே­னிலும் ஜனங்கள் வந்து திரளாகக் கூடிக்கொண்டு ‘ஜே’ போடுவதும், பெரியாரையும் அவரது மனைவியாரையும் தூக்கத்தை விட்டு எழுப்பி வண்டியை விட்டுக் கீழே இறக்கி கணக்கு வழக்கற்ற மாலைகள் போடுவதும், கூடை கூடையாய் ஆரஞ்சு, ஆப்பிள், திராட்சை, மங்குஸ்தான் முதலிய பழங்கள் வண்டியில் கொட்டுவதும், காப்பி, உப்புமா, மிட்டாய் முதலிய பலகாரங்கள் கொடுப்பதுமாகிய அமர்க்களங்கள் செய்த வண்ணமாகவே இருந்தார்கள். ஒவ்வொரு ஸ்டே­னிலும் ரயில் குறிப்பிட்ட நேரத்திற்கு மேல் நின்று நேரம் கழித்தே புறப்பட்டுக் கொண்டிருந்தது.

பிறகு 25.12.29 ஆம் தேதி காலை 7 மணிக்கு மெயில் வண்டி சிங்கப்பூர் டேங்க் ரோடு ஸ்டே­னை அடைந்ததும் பிளாட்பாரத்திலும் ஸ்டே­னுக்கு வெளியிலுமாக சுமார் பதினாயிரம் ஜனங்களுக்கு மேலாகவே ஐரோப்பியர், ஜப்பானியர், சீனர், மலாய்க்காரர்கள் முதலியவர்களும், பஞ்சாப்காரர்கள், மகமதியர்கள், தமிழர்கள் ஆகிய மக்களும் பாண்டு வாத்தியங்களுடன் நின்று கொண்டு கைத் தட்டியும், ‘ஜே’ சப்தமிட்டும்  பெருத்த ஆரவாராஞ் செய்தார்கள். 

வண்டி நின்றதும் சுமார் அரைமணி நேரம் வரை 200, 300 மாலைகள் வரை பிளாட்பாரத்திலேயே பெரியார், நாகம்மாள், இராமநாதன் ஆகியவர்களுக்கு ஒவ்வொருவராகப் போட்டுப் போட்டு அறிமுகம் செய்யப்பட்டார்கள். 

இரயில் மேடையிலும் வெளியிலும் ‘ஈ.வி.ஆர் வரவேற்பு’ என்று ஆங்கிலத்திலும் தமிழிலும் அச்சடித்த அட்டைகள் எங்கு பார்த்தாலும் ஒட்டப்பட்டும் தோரணங்களாகக் கட்டப்பட்டும் இருந்ததுடன் ஸ்டே­னுக்கு வெளியிலும் சுமார் 200 மோட்டார்கள் வரை இவ்வட்டைகள் கட்டப்பட்டு வரிசை வரிசையாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன.

வள்ளல் உ. இராமசாமி நாடார் அவர்கள் பெரியாரை வரவேற்பதற்கென்றே புதிதாக வாங்கிய ஒரு பெரிய மோட்டார் கார் வண்டியில் பெரியார், நாகம்மையார், எஸ்.இராமநாதன் ஆகியவர்களும் மற்றுமுள்ளவர்கள் வேறு வண்டிகளிலும் ஏறி நூற்றிருபது வண்டிகள் வரை வரிசையாகச் செல்லவும் திரு.இராமசாமியார் வண்டிக்கு முன்னால் அலங்கரித்த மோட்டார் டிரக்கு வண்டியில் நாற்காலிகள் போட்டு பாண்டு வாத்தியக்காரர்களும், மற்றொன்றில் மேள வாத்தியக்காரர்களும் இடையில் சாரணத் தொண்டர்கள் இருமருங்கிலும் செல்ல, சுமார் ஏழரை மணிக்குத் தொடங்கி இராமசாமி நாடார் அவர்களின் பங்களாவுக்குச் சென்றார்கள்.

இங்கு மலாயாவில் திராவிட இயக்கத்தை வளர்த்த சில முன்னோடிகளையும் நினைவுகூர்தல் வேண்டும்.

மலாயா பெரியார் அ.சி. சுப்பையா.

மீனாட்சி பாய்மரக் கப்பலில் தமிழகத்திலிருந்து அ.சி.சுப்பய்யா அவர்களின் பெற்றோர்கள் மலாயா வந்தார்கள். அவர்களுக்கு 1881 ஆம் ஆண்டு  பிறந்தார் அ.சி.சுப்பய்யா.

விவேகானந்தர் சங்கம், ஆதிதிராவிடர் சங்கம், அகமுடையார் சங்கம் என்று பல சங்கங்களை சிங்கப்பூரிலே தோற்றுவித்து பெரியாரின் சீர்திருத்தக் கருத்துக்களைப் பரப்பியவர் அ.சி.சுப்பய்யா. 1929 இல் முதல் முறையாக பெரியார் அவர்கள் மலாயா வந்த போது பினாங்கு துறைமுகத்தில் கப்பலிருந்து பெரியாரை வரவேற்று அழைத்து வந்தவர் அ.சி.சுப்பய்யா.  

1930 ஆம் ஆண்டில் பெரியார் மலாயா வந்து சென்று மூன்று மாதங்களுக்குள்ளாகவே தமிழர் சீர்திருத்தச் சங்கம் அமைத்த முன்னோடிகளில் அ.சி.சுப்பய்யா அவர்கள் முதன்மையானவர்.

காந்தரசம் என்னும் சித்தமருத்துவ பார்மசியை ஏற்படுத்தி  மலாயா நாடு முழுவதும் புகழ் பெற்றவர். 1933 ஆம் ஆண்டு தமிழ் எழுத்துச் சீர்திருத்தம் செய்யப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தி தமிழவேள் சாரங்கபாணி அவர்கள் நடத்தி வந்த முன்னேற்றம் இதழில் தொடர் கட்டுரைகள் எழுதினார். பின்னர் இது தமிழ் வரி வடிவ ஆராய்ச்சி என்னும் பெயரில், தந்தை பெரியார் அவர்களின் முன்னுரையோடு வெளிவந்தது.

1948 ஆம் ஆண்டு மூடநம்பிக்கைகளை அம்பலப்படுத்தும் வகையில் சுந்தரமூர்த்தி நாயனார் கிரிமினல் கேஸ் என்ற நூலை எழுதினார். 

மலாயாத் தமிழர்களுக்காக தோற்றுவிக்கப்பட்ட தமிழர் சீர்திருத்தச் சங்கத்திற்கு ஒரு கட்டிடத்தை நன்கொடை யாக வழங்கியவர் வள்ளல் உ.இராமசாமி நாடார்.   தமிழர் சீர்திருத்தச் சங்கத்தின் முதல் தலைவர். ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் ‘சமாதான நீதிபதி’ என்று சிறப்பிக்கப்பட்டவர். சப்பானியர் நடத்திய படையயடுப்பின் போது ஆங்கில அரசுக்கு நிதி உதவிகளை வாரி வழங்கியவர். அந்த கட்டிடம் ஜப்பானியர் யுத்தக் காலத்தில் பழுதுபட்டுக் கிடந்தது. அக் கட்டிடத்தத்தை பழுது பார்ப்பதற்கான முழு செலவையும் ஏற்று 19 ஆயிரம் வெள்ளிவரை  செலவு செய்தவர் அ.சி.சுப்பய்யா அவர்கள்.

தமிழகத்தில் அ.சி.சுப்பய்யா அவர்கள் பிறந்த திருமக்கோட்டைக்குச் சென்றேன். மன்னார்குடிக்கு அருகே உள்ள ஊர் அது. அங்கு வாழ்ந்து கொண்டிருக்கும் அய்யா செயராமன் அவர்களைச் சந்தித்தேன். அவர் அ.சி.சுப்பய்யா அவர்களின் அண்ணன் மகன். அவருக்கு அகவை 85. அ.சி.சுப்பய்யா அவர்களின் பெயரனும், சிங்கப்பூர் திராவிடர் கழகத்தின் நீண்ட நாள் செயலாளர் அய்யா சு.தெ. மூர்த்தி அவர்களின் மைத்துனருமான அய்யா அருணாசலம் அவர்களையும் சந்தித்தேன். அவருக்கு அகவை 77.

அ.சி.சுப்பய்யா அவர்கள் தனது வாழ்க்கை வரலாற்றை தனது கைப்பட எழுதி அச்சகத்துக்கும் அனுப்பியிருந்தார். அதற்குள் அவர் இறந்து விட்டதால் அந்நூல் இதுவரை வெளிவரவில்லை. அந்த நூல் வந்திருந்தால் அது மிகச்சிறந்த வரலாற்று நூலாக இருந்திருக்கும். அந்நூல் வெளிவராதது மலாயா தமிழர்களுக்கு ஒரு மிகப் பெரிய இழப்பாகும்.

‘முன்னேற்றம்’, ‘இந்தியன் டெய்லி மெயில்’, ‘தமிழ்முரசு’ போன்ற ஏடுகளை மலாயா நாட்டில் நடத்திய தோடு மட்டுமல்லாமல், பெரியாரின் ‘குடிஅரசு’ இதழை இந்நாட்டில் பரப்பியதில் முதன்மையானவர் தமிழவேள் கோ.சாரங்கபாணி.  இம்மூன்று தலைவர்களும் ஒன்றிணைந்து மலாயா நாட்டின் தமிழர்களின் மேம்பாட்டிற்காக ஏற்படுத்திய சங்கமே ‘தமிழர் சீர்திருத்தச் சங்கம்’.

பிரிக்ஃபீல்ட்ஸ் ரோடு எண்.5 இல் இருந்த ‘மஹான் ரெஸ் டாரண்ட்’ என்னும் சாப்பாட்டுக் கடையில் ( ‘குடி அரசு’ 20.11.1927)  உணவருந்துவோரே இலைகளைக் கொண்டுபோய் தொட்டியில் போட வேண்டும் என்று சாதி அடிப்படையில் கட்டாயப்படுத்தப்பட்டதால் பலர் இதை வெறுத்து வெகுண் டெழுந்தனர். எனவே இதன் விளைவாக ‘இந்தியர் ‡ இலங்கையர் ஓட்டல்’ என்ற ஒரு புதிய உணவு விடுதி அதே அம்பாங் தெருவில் தொடங்கப்பெற்றது. 

1930 ‡31 ஆம் ஆண்டுகளில் மலாயாத் தமிழர்கள் திருவாளர்கள் மா.செ.பரிமணம், கூ.மா.சி. மாரிமுத்து, சி.வீ.குப்புசாமி, க.இராசகோபால், தா.சு.குருசாமி ஆகியோரின் முயற்சியில் செந்தூல் பகுதியில் உள்ள ‘மூங்கில் குத்து கம்பம்’ என்ற பகுதியில்  ‘குடிஅரசு வாசகசாலை’ அமைக்கப்பட்டது. 

அந்த பகுதி தற்போது ‘பம்பூ கார்டன்’ என்ற பெயரில் இருக்கிறது. அந்த பகுதியைத் தேடி நானும் அய்யா பரமசிவம் அவர்களும் அலைந்தோம். அது குறித்த இன்னும் சில குறிப்புகளைத் தேடிக் கொண்டிருக்கிறேன்.

இந்த வாசகசாலையின் பெயர் ‘செலாங்கூர் இந்திய சுயமரியாதை சங்கம், செந்தூல்’ என்றும் அதன் பிறகு‘சுயமரியாதைச் சங்கம், கோலாலம்பூர்’ என்றும்  மாற்றப்பட்டு 1931 ஆம் ஆண்டில் பதிவு செய்யப் பெற்றது.

இச் சங்கத்தில் ஆங்கில, தமிழ் மாலை வகுப்புகளும், சொற்பொழிவுப் பயிற்சியும், வாராந்திர சொற்பொழிவுகளும், அ.இரத்தின சபாபதி எழுதிய ‘பாரதி அல்லது பால்ய விதவையின் பரிதாப நிலை’, சி.வீ. குப்புசாமி எழுதிய ‘காந்தா மணி அல்லது கலப்பு மணம்’ ஆகிய நாடகங்களும் நடத்தப்பட்டன.

முதன் முதலாக தமிழர் சீர்திருத்த மாநாடும், தமிழர் சீர்திருத்த இளைஞர் மாநாடும் 1931 ஆம் ஆண்டு பினாங்கில் நடத்தப்பட்டது. சிங்கப்பூர் திரு.அ.சி.சுப்பையா அவர்கள் தலைமையில் திரு.கோ.சாரங்கபாணி அவர்கள் வரவேற்புக் குழுத் தலைவராக இருந்தும், சுவாமி அற்புதானந்தா அவர்கள் பொதுச்செயலாளராக இருந்தும் அரிய பணிகள் ஆற்றினர்.  

செலாங்கூரில் 1936 ஆம் ஆண்டில் திரு.எஸ்.எம்.சுப்பையா அவர்கள் தலைமையின் கீழ் ‘பகுத்தறிவுச் சங்கம் (கோலாலம்பூர்)’ அமைக்கப்பட்டது. 

1938 ஆம் ஆண்டுவாக்கில் ‘தமிழர் சீர்திருத்தச் சங்கம்’ கோலாலம்பூர் செராஸ் ரோட்டில் அமைக்கப்பட்டு அதற்கென ஒரு கட்டடமும் நிறுவப்பெற்றது. அதுதான் இரண்டாவது உலகப் போருக்குப் பிறகு (1946 இல்) திராவிடர் கழகம் ஆகியது. 

இரண்டாவது உலகப் போருக்கு முன்னரே கோலாலம்பூர் சுயமரியாதைச் சங்கம் பல துண்டு வெளியீடுகளையும் ‘வருங்கால நவயுகம்’, ‘பெரியார் ஈ.வெ.ரா.’ போன்ற நூல்களையும் வெளியிட்டது. 

இரண்டாம் உலகப்போருக்குப் பின் தமிழர் சீர்திருத்தச் சங்கம் தன் பணியைத் தொடங்கியது. தமிழன் தமிழில் ‘வணக்கம்’ என்று கூறுவது இழுக்கென கருதப்பட்டது. அப்படிப்பட்ட சூழலில் தமிழர் சமுதாயம் இருந்தது.  அப்போது தமிழர் சீர்திருத்தச் சங்கத்தின் போருக்குப்பின் முதல் ஆண்டுப் பொதுக்கூட்டம் நடைபெற்றது. ‘வணக்கம்’ என்று கூற வேண்டுமென தீர்மானம் நிறைவேற்றினார்கள்.

இரண்டாம் முறையாக வருகை தந்த பெரியார் அவர்கள் 1954 இல் பினாங்கில் கம்போங் ஜாவாரு பகுதியில் நடந்த பொதுக் கூட்டத்தில் பேசினார்.

2000 ஆண்டுகளுக்கு முன் தோன்றிய வள்ளுவப் பெருமகனார் எப் பொருள் யார் யார் வாய் கேட்பினும் அப் பொருளில் மெய்ப்பொருளைச் சிந்தித்து அறிவதுதான் அறிவு என்றார். அதைப்போலவே புத்தர்பிரான் அறிவுக்கு எட்டியதைப் பின்பற்றுங்கள் என்றார். பெரியார்கள் சொன்னது என்பதற்காக நம்பாதீர்கள். சிந்தித்து முடிவுக்கு வாருங்கள்.

மலாயா வாழ் இந்தியர்களிடையே ஒற்றுமை அவசியம். எவ்விதப் பிளவு மனப்பான்மையும் இங்குள்ள இந்தியர்களிடையே தலைகாட்டல் ஆகாது. தமிழர்களாயினும் சரி, இதர எந்தப் பிரிவினர்களாயினும் சரி ‡ அனைவரும் இந்நாட்டில் ஒன்றுபட்டு வாழ வேண்டும். இந்த நாட்டின் நலன்களுக்கு ‡ அபிவிருத்திக்கு உழைப்பதில், பாடுபடுவதில், நாம் இதர எந்த சமூகத்தினருக்கும் பிற்பட்டு நிற்கக் கூடாது.

கோலப்பிறை செயின்ட் மார்க் ஸ்கூல் திடலில் மேத்யூ ஜே.பி. அவர்கள் தலைமையில் பெரியார் பேசுகிறார். அப்போது,

நான் ஈரோடு சேர்மனாக இருந்தபொழுது குழாய்த் தண்ணீருக்கு ஏற்பாடு செய்தேன். மக்களெல்லாம் போற்றினார்கள். ஆனால் என் தாயார் மட்டி லும் குழாய்த் தண்ணீர் கூடாது என்றார்கள். காரணம் என்ன? குழாய்த் தண்ணீரை யார் பிடித்து விடுகிறார்களோ, அதில் தீட்டு ஒட்டியிருக்குமே என்பதற்காக! பிறகு திருந்தினார்கள்.

மாறுதல் வேண்டும் போது பிடிவாதம் இருக்கத்தான் செய்யும். அக்கம் பக்கத்தைப் பார்த்து மாறுதல் ஏற்பட்டு விடும். உலகம் போகிற போக்கைப் பார்த்தால் மனித சமூதாய வளர்ச்சி எந்த அளவில் கொண்டுபோய் விடுமோ என்ன ஆகுமோ யார் கண்டது?

எனவே மாறுதலுக்கு எதிர்ப்பு இருந்துதான் தீரும். அதைப் பற்றிக் கவலை இல்லை. நீங்கள் ஒவ்வொருவரும் சமத்துவம் காண, மாறுதல் கொள்ள, பாடுபடுங்கள், உயர்ந்தவன் தாழ்ந்தவன் என்ற பேதமொழிய உழையுங்கள். இந் நாட்டில் தமிழர்களாகிய நீங்கள் ஒற்றுமையாக இருங்கள். அதற்காகப் பாடுபடுபவர் களுக்கு உதவியாக இருங்கள். என் தொண்டின் அடிப்படை நோக்கமெல்லாம் ஜாதி ஒழிப்பே!

டிசம்பர் 18-ந்தேதி சனிக்கிழமை தைப்பிங் குந்தோங் அசோசியே­ன் மண்டபத்தில் பெரியார் பேசுகிறார்.

நான் இந்த நாட்டிற்கு இரண்டாவது முறையாக வந்துள்ளேன். முன்பு அதாவது 1929 இல் இந்த நாட்டு பெருமக்கள் என்னை வரும்படி அழைத்தார்கள். அப்போது புறப்படுவதற்கு நாலு நாட்களுக்கு முன்பு எனக்கு ஒரு தந்தி வந்தது. அதில் இங்கு கலவரம் ஏற்படும் போல் இருப்பதாகவும் தக்க பாதுகாப்பு செய்ய வசதி இல்லை என்றும் குறிப்பிட்டிருந்தார்கள். 

இதெல்லாம் கண்டு எனக்கு மிகவும் வெட்கமாகப் போய்விட்டது. என்னடா, நாம் தமிழர்களுக்கு இவ்வளவு உழைக்கின்றோம், பாடுபடுகின்றோம். எவ்வளவோ சொந்த சுகத்தையயல்லாம் புறக்கணிக்கிறோம். ஆனாலும் ஒரு தமிழனையே இன்னொரு தமிழன்தானே எதிர்க்கின்றான் என்பதை எண்ணும்போது வெட்கப்படாமல் இருக்க முடியவில்லை. பிறகு எனது பயணம் எந்த விதமான தடையுமின்றி நடைபெற்றது.

கோலக்கங்சார் இந்திய சங்கத்தில் பெரியார்  காலை 10 மணி அளவில் பேசுகிறார்

1920 ஆம் ஆண்டுக்கு 1950 ஆம் ஆண்டு எவ்வளவோ முன்னேறி யிருக்கிறது. சுமார் 50 ஆண்டுகளுக்கு முன்பு மாற்றம் மிக மெதுவாக நடைபெற்றுக் கொண்டு வந்தது. தமிழ் நாட்டிற்கு ஆங்கிலேயரின் சம்பந்தம் ஏற்பட்ட பிறகு சற்று வேகமாக முன்னேறியுள்ளது. இனி எதிர்காலத்தில் ஆகாயக் கப்பல் வேகத்தில் முன்னேறுவீர்கள் என்று கருதுகிறேன். 

100 வருடத்திற்கு முன்பு நாம் மந்த நிலையில் இருந்தோம். இப்பொழுது தான் முன்னேற்றம்  என்கிற வண்டி மிகவும் வேகமாக முன்னாலே போகின்றது. இது இளைஞர்களுக்கு மிகவும் பிடிக்கும். பெரும் வெள்ளம் வருகின்றபோது ஒரு பாட்டி முறத்தையும் துடப்பத்தையும் எடுத்துக்கொண்டு நான் இந்த வெள்ளத்தை தடுக்கிறேன் என்றால் அது அந்த அம்மாளையும் சேர்த்து அடித்துக் கொண்டு போகுமே தவிர நிற்காது.

முன்பு  இந்த மலாயாவிற்கும் தமிழ் நாட்டிற்கும் பாய்மரக் கப்பலில் சென்று கொண்டிருந்தார்கள். அப்போது பயணம் மூன்று மாதத்திற்கு நீடிக்கும். இப்பொழுது புகைக் கப்பல் வந்துவிட்டது. ஆனால் ஒருவன் இப்பொழுதும் பாய்மரத்தில்தான் போவேன் என்றால் என்ன அர்த்தம்?

முன்பெல்லாம் கப்பல் ஏறினால் அவனை சண்டாளன் என்றார்கள். பார்ப்பான் கப்பலில் ஏறினால் அவனை ஜாதிப்பிரஷ்டம் செய்து விடுவார்கள். இப்பொழுதோ பார்ப்பனத் தலைவர்கள் எல்லாம் சர்வசாதாரணமாக கப்பலில் ஏறிச் செல்லுகிறார்கள்.

ஏனப்பா இப்படி கப்பல் ஏறுகிறாய் என்றால் வெளிநாட்டில் வேலை பார்க்க என்கிறார்கள். உன்னை ஜாதிப் பிரஷ்டம் செய்து விடுவார்களே என்றால் அதிலேயே பிராயச்சித்தத்திற்கும் வழி இருக்கிறது என்கிறார்கள்.

நாம் பல அதிசயங்களை எதிர் நோக்க வேண்டும். மாறுதல் பெண்களிடமும், இளைஞர்கள் உலகிலும் சர்வ சாதாரணமாகக் காணலாம். இது இயற்கை. 

முன்பெல்லாம் பெண்கள் கையில் கறுப்பு வளையல் இல்லாவிட்டால் அந்தப் பெண்ணை, உங்கள் கணவருக்கு என்ன ஆயிற்று என்பார்கள். இப்போது அது போய்விட்டது. இது மாறுதலுக்காக ஏற்பட்ட மாறுதல். இது சாதாரணமாக ஏற்படும் மாறுதலாகும்.ஆனால் வளர்ச்சிக்காக ஏற்படும் மாறுதலை யாரும் புறக்கணிக்க முடியாது. 

இன்றைக்கு 150 ஆண்டுகளுக்கு முன்பு பிரயாணம் செய்வது எவ்வளவு கடினமாக இருந்தது. இப்போது மாறுதல் படிப்படியாக வந்து மணிக்கு 700 மைல் பறக்கிற அளவுக்கு மாறிவிட்டது. 

கம்பார் சொங் வா சீன பாட சாலையில் பெரியார் பேசுகிறார். அவர் தனது உரையில், 

தமிழனிடம் மட்டும் மாறுதலில்லை. மற்றவர்களெல்லாம் பெருத்த மாறுதலை ஏற்படுத்திக் கொண்டுள்ளார்கள். அவர்களுக்கு ஏற்பட்ட நல்ல வாய்ப்பு நமக்கெல்லாம் ஏற்படாததே காரணமாகும்.  உலகமெல்லாம் விழித்திருந்தும் தமிழன் மட்டும் மாறவில்லை என்றால் என்ன அர்த்தம். 

மேல் நாட்டில் இருந்தவர்கள் எல்லாம் நம்மை போன்று இருந்தவர்கள். அங்கே ஒரு மகான் ஏசு என்று தோன்றினார். பல மாறுதல்கள் ஏற்பட்டு அவர்கள் நல்ல முன்னேற்றம் அடைந்துவிட்டார்கள். அவர் எல்லா வற்றிலும் தலைகீழ் மாற்றம் ஏற்படுத்தினார். நம்மைப்போல் அவர்களிடையே ஜாதி பேதம் இல்லை என்கிற மாதிரி ஆயிற்று. 

அதேபோல் அரேபியா நாட்டில் நபி தோன்றி அநேக மூட நம்பிக்கைகளை மாற்றினார். அவர் செய்த நல்ல பெரிய காரியம் ஆயிரக்கணக்கான, பதினாயிரக்கணக்கான கடவுள்களை ஒன்றாக்கினார். அந்த நாட்டு மக்களுக்கும் அது பிடித்தது. பிறகு அந்த ஒரே கடவுளுக்கும் உருவம் இல்லை என்றார். அதற்கு மேல் அவர் அருமையாக எடுத்துச் சொன்னார். மக்களெல்லாம் சமம். மனிதனில் உயர்வு தாழ்வு இல்லை என்றார். அந்த நாடும் திருந்திவிட்டது. நம்முடைய சமுதாயம் அதற்கு பல காலம் முற்பட்டதாக இருந்தும் எந்தவிதமான மாறுதலும் இல்லை.  இப்படி மாறுதல் இல்லாமல் பகுத்தறிவு அற்ற தன்மையோடு இருந்தோமானால் நம்முடைய சமுதாயம் மிக்க பிற்போக்கடைந்துவிடுவதோடு, உலகத்தில் உண்டாகின்ற புதிய மாறுதல்களில் கடைசிப் படியில் நிற்க வேண்டியவர்களாவோம்

பத்துகாஜாவில் பெரியார் அவர்கள் பேசுகையில், நான் சமீபத்தில் பர்மாவைக் கண்டு விட்டுதான் இங்கே வந்திருக்கிறேன். இரண்டு நாடுகளும் யுத்தத்தால் பாதிக்கப்பட்டவை.  பர்மாவை விட அதிக கஷ்டத்திற்கு இந்த நாடு உள்ளாகியும் என் கண்ணுக்கு இது அழகாகவே, முன்னை விட முன்னேற்றமடைந்துள்ளதாகவே காணப்படுகிறது. இது இப்படி இருப்பதற்குக் காரணம் இங்குள்ள மக்களின் உணர்ச்சியும் அவர்களின் உணர்ச்சியுமேதான்.

நீங்களெல்லாம் இங்கே ஜாதி பேதமற்று இருக்கின்றீர்கள். ஆனால் தமிழ் நாட்டிலோ மனிதனைத் தொடுகின்ற வரையில் ஜாதி பேதம் போய்க் கொண்டிருக்கிறது. இந்த நாட்டில் எந்த நல்ல கட்டிடத்தைப் பார்த்தாலும் அது பள்ளிக்கூடம் என்கிறார்கள்.

எங்கள் நாட்டில் பள்ளிக்கூடம் வெகு குறைவு. 100 க்கு 12 பேர்தான் படித்திருக்கிறார்கள்.

கோலக்கிள்ளானில் பெரியார் பேசும் போது, நானென்ன இனிமேல் படுக்கவா போகிறேன்? இருக்கிறவரை அல்லது காந்தியைப் போல என்னை யாரும் கொல்கிறவரை சமூகத்தில் கீழாக நசுக்கப்பட்டிருக்கும் மக்களை விடுவிடுக்கப்பாடுபட்டபடிதான் கண்ணை மூடுவேன்! என்றார்.

கூட்டத்திற்குத் தலைமை வகித்த திரு. சோங் ஜின் ஹோ பெரியாரைப் போன்ற மாபெருந் தலைவரை வரவேற்கும் வாய்ப்பு கோலக்கிள்ளான் மக்களுக்கு கிடைத்தது பெரும்பேறு என்று சொன்னார். சுதந்திரப் பாதை நோக்கி நடைபோடும் மலாயாவுக்கு, தங்கள் நாட்டில் பல வெற்றிகளைக் கண்ட தலைவர்கள் வந்து அறிவுரை கூறுவது அதிக நன்மை பயக்கும் என்றும் குறிப்பிட்டார்.

கிள்ளானுக்கு அருகிலுள்ள புக்கிட் ராசா லெட்சுமித் தோட்டத்திற்குச் சென்று தொழிலாளர்களைக் கண்டபொழுது, மலாயாவில் கால் வைத்த பிறகு எத்தனையோ அதிகாரிகளைப் பார்த்தேன், செல்வர்களைப் பார்த்தேன், நகரவாசிகளைப் பார்த்தேன். ஆனால் உங்களைக் காண்பதில் இப்பொழுது எனக்கு ஏற்படும் திருப்தியும் மகிழ்ச்சியும் ஏற்படவில்லை. இப்பேர்பட்டவர்களைக் காணாமல் மலாயாவில் சுற்றுப்பிரயாணம் செய்து என்ன பயன் என்றுகூட நான் சஞ்சலப்பட்டுக் கொண்டிருந்தேன் என்று பெரியார் அங்கு பேசுகையில் குறிப்பிட்டார்.

தோட்டத் திடலின் நடுவில் உயர்த்தி அமைக்கப்பட்டிருந்தது மேடை. 

1947 இல் பெரியாரை அழைப்பதற்காக காப்பார் தமிழ் மக்கள் வசூலித்த 214 வெள்ளி 15 காசையும் திரு. முனியாண்டி, பெரியாரிடம் ஒப்படைத்தார். புக்கிட் ராசா லெட்சுமித் தோட்டத் தொழிலாளர்கள் 60 வெள்ளி பண முடிப்பு கொடுத்தனர். 6 வயது சிறுவன் ஒருவனும் 3 வயது சிறுமி ஒருத்தியும் தாங்கள் சேர்த்து வைத்த காசை பண முடிச்சாக்கி பெரியார் தாத்தாவிடம் கொண்டுவந்து கொடுத்தனர். சிறுவர்கள் இருவரிடமும் கொஞ்சிப் பேசி தம் அன்பைத் தெரிவித்தார் பெரியார்.

நான் மலாயாவில் இதுவரை சுற்றியதில் அதிகாரிகளையும், மந்திரிகளையும் செல்வர்களையும் பார்த்தேன்! அவர்களிடையே பேசினேன். ஆனால் என் சொல்லினால் ஏதாவது பயன் ஏற்படுமானால் அது உங்களிடம்தான் ஏற்படும். உங்களிடம் தான் ஏற்பட வேண்டும். ஏனெனில் சமுதாயத்தின் கீழ்நிலையில் உள்ளவர்கள் உயர வேண்டும். படியாதவர்களாக, பாமரர்களாக இருக்கிறவர்கள் நிலை திருந்த வேண்டும் என்பதுதானே என்னுடைய லட்சியம்.

8 மணி நேரமும் 10 மணி நேரமும் பாடுபட்டு வயிற்றுச் சோற்றுக்கே இழுபறியாக இருக்கும் உங்கள் நிலையில்தான் பெருத்த மாறுதல் ஏற்பட வேண்டும். நாளெல்லாம் பாடுபட்டு கிடைக்கிற வரும்படி சோற்றுக்குத்தான் ஆகும். மீதியிருந்தால் கள்ளுகடை, மிச்சமிருந்தால் நாசமாய்ப் போன சாமிகளுக்கு அழுவது என்ற போக்கில் மாறுதல் காண வேண்டும். நான் சாமி வேண்டாம் என்று சொல்லவில்லை. ஆனால் கற்பனைக் கடவுள்கள் நம்மைப் பாப்பராக்கிவிடுகின்றனவே என்றுதான் நொந்து கொள்கிறேன்.

கடவுளிடம் பக்தி செலுத்துங்கள், அன்பு செலுத்துங்கள், கடவுளுக்குப் பயப் படுங்கள். வேண்டாம் என்று நான் சொல்லவில்லை. கடவுள் மனிதர்களாக இருக்கிறார்; நடமாடும் ஜீவன்களாக இருக்கிறார்; நீங்கள் மனிதர்களிடம், உங்களிடம் காட்டுகின்ற அன்பை கடவுள் இருந்தால் கட்டாயம் ஏற்றுக் கொள்வார். 

தொழிலாளி மகன் தொழிலாளியாக, தொழிலாளி பேரன் தொழிலாளியாக இருக்க லாகாது, இருக்கக்கூடாது என்று இடித்துரைத்தார். பண்டிகைகள் என்று நீங்கள் பாழாக்குகிற பணத்தை மகனின் படிப்புக்குச் செலவிடுங்கள், உருப்படலாம் என்றார்.

ஒவ்வொரு மனிதனும் தன் பங்குக்குக் கொஞ்சம்  பாடுபடத்தானே வேண்டும் என்ற நிலை நம் சமுதாயத்தில் இருக்குமானால் பேச்சில்லை. பரம்பரை பரம்பரையாக ஒரு பிரிவினர் உழைப்பது, மற்றவன் கொழிப்பது என்ற நிலை ஏன் இருக்க வேண்டுமென்று கேட்டார் பெரியார். என் தலைமுறையோடு இந்தப் பிழைப்பு ஒழியட்டும். என் பிள்ளை என்னைப் போல்  இந்த வேலை செய்ய வேண்டாம் என்று நீங்கள் கங்கணம் கட்ட வேண்டும். உங்கள் பிள்ளைகளையயல்லாம் தவறாமல் பள்ளிக்கூடத்துக்கு அனுப்பி படிக்க வைப்பதுதான் உங்கள் நிலையை மாற்றிக் கொள்ளும் ஒரே வழி என்றார் ஈ.வெ.ரா.

கல்வியறிவும் சுயமரியாதை எண்ணமும் பகுத்தறியும் தன்மையுமே தாழ்ந்து கிடக்கும் உங்களை உயர்த்துமென்பதை மறந்து விடாதீர்கள்.

நன்றி

வணக்கம்.

No comments: