Thursday, May 5, 2022

அயோத்திதாசர் பெரியாருக்கு முன்னோடியா?

 அயோத்திதாசர் பெரியாருக்கு முன்னோடி என்று சொல்லி வருகிறார்கள். உண்மையில் அயோத்திதாசரின் கொள்கை பெரியாரின் கொள்கைக்கு நேரெதிரானது.

பெரியாருக்கு முன்னோடி என்று இரண்டு வகையில் சொல்லலாம். ஒன்று, பார்ப்பன எதிர்ப்பு மற்றொன்று திராவிடம் என்ற சொல். ஆனால் அவரது பார்ப்பன எதிர்ப்பு தங்கள் ஜாதிதான் உண்மையான பிராமணர்கள் என்ற அடிப்படையில் இருந்தது. அதேப்போல் திராவிடர் என்ற சொல்லைக்கூட தங்கள் ஜாதிக்கே பயன்படுத்தினார்.

அவர் கூறிய பூர்வீக பவுத்தமும் தங்கள் சாதியை மட்டுமே பவுத்தர்கள் என்றது. மற்ற தாழ்த்தப்பட்ட சமூகத்தினர் பூர்வீக பவுத்தர்கள் கிடையாது என்றார்.

தலித் மக்களின் ஒன்றிணைவை அவர் என்றும் முன்னிருத்தவில்லை. தலித் ஒற்றுமைக்கு எதிராகவே இருந்தார். குறவர், வில்லியர், சக்கிலியர், மலமெடுக்கும் தோட்டிகள் இயல்பாகவே தாழ்ந்த நிலையிலுள்ளவர்கள் என்று கூறினார். மலம் அள்ளுபவர்கள் முதலானோர் கீழானவர்கள் என்று எழுதினார்.

அயோத்திதாசர் எப்போதும் ஒட்டுமொத்த தலித் மக்களுக்காக எழுதவில்லை. தான் சார்ந்த ஜாதிக்காக மட்டுமே எழுதினார். அயோத்திதாசர் சிந்தனை எங்கும் எதிலும் சாதிப்பாசமும், சாதிப் பெருமையும் திளைத்து நிற்கும்.

அம்பேத்கருக்கும் அவர் முன்னோடி இல்லை!

அம்பேத்கர் சென்னை வந்தபோது, பேராசிரியர் லட்சுமி நரசு எழுதிய, "ஜாதியைப் பற்றிய ஆய்வு", "புத்திசம் அடிப்படைக் கொள்கைகள்" ஆகிய புத்தகங்களை தன்னுடன் எடுத்துச் சென்றார். பௌத்தத்தின் சாரம் என்ற தன்னுடைய புத்தகத்தில் அவரைப்பற்றி வெகுவாக பாராட்டி எழுதி இருப்பார். அதை அவரே வெளியிட வேண்டும் என்று விரும்பினார்.

லட்சுமி நரசு பௌத்தம் பற்றி பேசிய அம்பேத்கர் ஏன் அயோத்திதாசர் பௌத்தத்தைப் பற்றி பேசவில்லை?

அயோத்திதாசருக்கும் - சிங்காரவேலருக்கும் இடையே நடந்த 'பௌத்தத்தில் மறுபிறவி' என்ற விவாதத்தில் மறுபிறவி உண்டு என்று அயோத்திதாசர் வாதிட்டார். இது புத்தரின் பௌத்தத்திற்கும், அமபேத்கரின் பௌத்தத்திற்கும் எதிரானது.

சமண மதமே கிடையாது. அது புத்த மதத்தின் அங்கம் என்றார். கிருஸ்துவ கோட்பாட்டிற்கு பௌத்த விளக்கம் கொடுத்தார். ஏசுவையும் - புத்தரையும் ஓப்பீடு செய்தார்.

புத்த மத அழிவிற்கு காரணமான மகாயான பௌத்தக் கருத்தியலை பற்றி பேசினார். அதாவது தீபாவளி, கார்த்திகை தீபம், இந்திர விழா, போகி, இந்திரனை வழிபடும் பொங்கல், ஆடிமாதம் போன்றவை புத்த மதத்திற்கு சொந்தமானது என்று பார்ப்பனிய இந்து மத பண்பாட்டு மீட்பை பற்றி பேசினார். இது புத்த மதத்திற்கே ஆபத்தான ஒன்று. இதனால் மதம் மாறும் தலித் மக்களுக்கு எந்த நன்மையும் இல்லை.

எம்.சி. ராஜா, இரட்டைமலை சீனிவாசன், சகஜானந்தர் போன்ற தலித் தலைவர்களே அயோத்திதாசரை ஏற்றுக்கொள்ளவில்லை என்பது வரலாறு.

ஆதாரம்:-

-ம.மதிவண்ணன் (அயோத்திதாசரின் பார்ப்பனிய சிந்தனை)

-அம்பேத்கரும் தமிழகமும்

-பெரியார் புரட்டுகளுக்கு மறுப்பு

-ஆதிக்க சாதிகளுக்கு மட்டுமே அவர் பெரியாரா?

https://www.facebook.com/100019207502894/posts/998857257431182/


No comments: