Sunday, June 26, 2022

அண்ணா சில நினைவுகள்

அண்ணா சில நினைவுகள் - கவிஞர் கருணானந்தம் - திராவிடன் ஸ்டாக் வெளியீடு - முதல் பதிப்பு 2013 - பக்கங்கள் 248 - விலை ₹ 250/

●  கவிஞர் கருணானந்தம் திராவிடர் கழகத்தில் 1942 முதல் இருந்தவர். பெரியாரை விட்டு அண்ணா 1949ல் திமுகவை தொடங்கிய பிறகும் பெரியாரிடமும் அண்ணாவிடமும் நெருங்கி பழகியவர். மத்திய அரசின் ஆர்எம்எஸ்ஸில் சார்ட்டராக பணியாற்றியவர். அண்ணாவோடு 27 ஆண்டுகள் நெடிய தொடர்பும், அவரது நட்புக்கும் பாத்திரமானவர். திமுகவின் பல மாநாடுகளை வெற்றிகரமாக நடத்தி காட்டியதால் இவரை ' மாநாட்டு ஸ்பெஷலிஸ்ட் ' என்றும் அழைப்பார்கள் !

●  கவிஞர் கருணானந்தத்தின் முதல் கவிதை தொகுப்பு - பூக்காடு. அண்ணாவின் சிறப்பான அணிந்துரையும் கலைஞரின் சிறப்புரையும் கொண்டு வெளியான நூல். பிற்காலத்தில் அவருக்கு பரிசையும் புகழையும் வாரித்தந்த நூல். கவிதையில் தன் சிறப்பை அதில் காட்டியது போல, கட்டுரை இலக்கியத்திலும் அவரது சிறப்பை உணரச் செய்யும் நூல் தான் இந்த நினைவுகள் !

●  அண்ணாவைப் பற்றி பேசும் இந்த நூல் - அவரின் கொள்கைப் பற்று; எளிமை; தோழமைப் பண்புகள்; உதவி செய்யும் மனோபாவம்; அறிவாற்றல்; எழுத்து திறன்; நாவன்மை இவைகள் பற்றிய நிகழ்வுகளின் நினைவுகளை சுவையாக சிறுகதைகளாக தந்துள்ளது !

●  அண்ணாவுக்கு கவிதை பிடிக்கும்; கவின் ஓவியம் பிடிக்கும்; மேடை நாடகமும் மேம்பட்ட சினிமாவும் பிடிக்கும்; நெத்திலி மீன் கருவாடு பிடிக்கும்; நண்பர்களுடன் சீட்டு விளையாட பிடிக்கும்; புத்தகங்களில் மூழ்கி தன்னையே மறக்க பிடிக்கும்; பெரியாரைப் பிடிக்கும்; பெரியார் மட்டுமே தனது தலைவர் என்பதை பெருமிதமாக சொல்லப் பிடிக்கும் !

●  ௧விஞர் இந்த நூலை ஒரு சிறுகதைகள் தொகுப்பை போல தனது நினைவுகளை ஒவ்வொன்றாக பகிர்ந்துள்ளார். ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதமான உணர்வுகளை தருகிறது.. ஒவ்வொன்றையும் முடிக்கும் போது சிறுகதையின் யுக்தியான - மாற்றத்தையோ அல்லது ஏமாற்றத்தையோ தந்து நம்மை வியக்க வைக்கிறது !

●  மார்ச் 6ம் தேதி 1967ல் அறிஞர் அண்ணா தமிழகத்தின் முதல்வராக பொறுப்பேற்கின்றார். அதனால் அவரது தென் சென்னை நாடளுமன்ற பதவியை ராஜினாமா செய்ய வேண்டியுள்ளது. அண்ணாவிடம் பலர் தங்களை எம்.பியாக்க வேண்டுகிறார்கள். அண்ணாவோ முரசொலி மாறனை ( இயற் பெயர் - தியாகராஜ சுந்தரம்) நிறுத்த முடிவு செய்தார். 

●  ஆரம்பத்தில் கலைஞரும் மாறனின் அம்மாவும் அதற்கு சம்மதிக்க வில்லையாம். கருணானந்தம் தனது முயற்சியால் அவர்களை மாறனை தேர்தலில் போட்டியிட  சம்மதிக்க வைக்கிறார். பின்பு நடந்த இடைத்தேர்தலில் தென் சென்னை நாடாளுமன்ற தொகுதியில், முரசொலி மாறன், அண்ணா பெற்ற வாக்குகளை விட அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்று சரித்திரம் படைத்தார் ! அண்ணாவின் தேர்வு சோடை போகுமா ?

●  அண்ணா ஒரு சகலகலா வல்லவர்.. வரலாறும், அரசியலும், பொருளாதாரமும், இலக்கியமும் அவர் ஆர்வமாக அறிந்து வைத்த துறைகள். அதுபோலவே இசையைப் பற்றியும் நிறைய தெரிந்து வைத்திருந்தார். இசையை பற்றி அண்ணாவின் மொழியில் :

●  " இசை என்றால் இசைய வைப்பது ! அதனால்தான் தேவார, திருவாசக, திருப்பாவை, திருவெம்பாவை பாடிய நால்வர், ஆழ்வார்கள் காலத்திலிருந்து - இராமலிங்க அடிகள் காலம் வரை, தமிழ்ப் பண்களின் அடிப்படையில் இசைப் பாடல்களாகவே இயற்றித் தந்து, தமது சைவ அல்லது வைணவ சித்தாந்தங்களுக்கு மக்களை இசைய வைத்தனர் ! " ..என்று இசை பற்றி அண்ணா கூறிய கருத்துக்கள், இன்றும் நமக்கு இசைவாகத்தான் உள்ளது !

●  அண்ணாவையும் திரைப் படங்களையும் பிரிக்க முடியாது ! தமிழ் திரையுலக வரலாற்றில் அண்ணா ஓரே இரவில் எழுதி முடித்த ' ஓர் இரவு ' திரைப்படம் அது வரை யாரும் செய்யாத புதுமை. ஜெமினி தயாரித்த, தமிழ் படங்களிலேயே மிகப்பெரிய பொருட் செலவில் எடுக்கப்பட்ட முதல் திரைப்படமான ' சந்திரலேகா ' வை அண்ணாவும் கவிஞரும் குடந்தையில் பார்த்தார்களாம் ! படத்தை பற்றி அண்ணா :

●  " இவ்வளவு செலவு செய்து படத்தை எடுத்திருக்கான். ஒரு நல்ல வசனகர்த்தாவை வைத்து டயலாக் எழுதத் தெரியல ! கிராமவாசி கூட அக்கிரஹார தமிழ்ல பேசுறாங்க ! எவ்வளவு பொருத்தமில்லாம irrelevant ஆக இருக்குது ! "...எனக் கூறினாராம்.

அந்தப் படத்தை இன்று பார்த்தாலும், அண்ணாவின் விமர்சனம் எவ்வளவு relevant என்பதை உணர முடியும் !

அண்ணா மக்களோடு மக்களாக நெருக்கமாக பழகியவர் அல்லவா ?

●  மாற்றான் தோட்டத்து மல்லிகைக்கும் மணம் உண்டு என்ற அண்ணாவின் சொல்லோவியத்திற்கு ஒரு சிறந்த சான்றாக இந்த நிகழ்வை அறிய முடிகிறது - 1967 பொதுத் தேர்தல் முடிவுகள் ஓவ்வொன்றாக வர ஆரம்பிக்கின்றன. திமுகவினர் ஒவ்வொருவராக வெற்றியடைந்த செய்திகள் வருகின்றது. திடீரென விருதுநகர் தொகுதியில் பெ. சீனிவாசன் திமுக வெற்றி என வானொலியில் சிறப்பு செய்தி !

●  அண்ணாவுக்கு பேரிடியானது இந்த செய்தி ! " இது உண்மைதானா ? உண்மைத்தான் சொல்றானா ? அப்படீனா காமராஜ் தோல்வியா ? சேச்சே ...இது நடக்க கூடாதே ! அவரு தோற்கலாமா ? நாம் அவரை தோற்கடிப்பதா ? அரசியலில் அவர் எதிரிங்கறதை நான் மறுக்கல ! ஆனா, தமிழ் நாட்டுக்கு அவரு எவ்வளவு செஞ்சிருக்காரென்பதை மக்கள் மறந்து விட்டாங்களே ! அவரு மட்டும் தோத்திருக்க கூடாது ! " ..என அழாத குறையாக வருத்தமடைந்தாராம் !

●  அந்த அறிஞருக்கு,  பேரறிஞருக்கு இணையான ஒரு அரசியல் வாதியை, இனி தமிழகம் காணுமா ?

●  அண்ணாவின் இறுதி நாட்களை நினைவுபடுத்தும் கவிஞரின் எழுத்துக்கள் நம்மை கலங்க செய்கிறது. அண்ணா அடையாறு மருத்துவ மனையில் இறுதி கட்டத்தில்.. நள்ளிரவில் கூட உடனேயே அண்ணாவை காண வேண்டி, ஆசிரியர் கி. வீரமணியின் அடையாறு வீட்டில் பெரியார் கார் ஷெட்டிலேயே படுத்து உறங்கினாராம்.

●  அண்ணாவின் மறைவு செய்தியை தந்தை பெரியாரிடம் தெரிவித்த போது, " எல்லாம் போச்சு ! எல்லாம் போச்சு ! " என்று  கண்ணீரோடு கதறினாராம் ! அண்ணாவின் சடலம் அவரது நுங்கம்பாக்கம் இல்லத்திற்கு கொண்டு வந்த போது, பெரியாரின் கையைப் பிடித்துக்கொண்டு கலைஞர், " அய்யா !..நாங்க அனாதைகள் ஆயிட்டோமே அய்யா ! " எனக் கதறி கதறி அழுததையும் பதிவு செய்து, கவிஞர் கருணானந்தம் இறுதியாக இவ்வாறு எழுதி இந்த நூலை நிறைவு செய்கிறார் - " இனி எழுத என்னாலாகாது "...

●  கண்களில் வடிந்த கண்ணீரை துடைத்துக் கொண்டு, இந்நூலைப்பற்றி இதற்கும் அதிகமாக என்னாலும் எழுதிவிட முடியாது !

பொ. நாகராஜன்.

பெரியாரிய ஆய்வாளர், சென்னை. 26.06.2022.

********************************************

No comments: