திராவிட மொழியின் தனிப் பெருஞ் சிறப்புகள்
தொல்பழம் பெருந்தமிழகமாக விளங்கிய குமரிக்கண்டத்தில்தான், முதல் மனிதன் தோற்றம் பெற்றான் என்பதும், மனித நாகரிகத்தின் தொட்டிலாக வும், மனிதப் பண்பாட்டின் வளர்ப்புப் பண்ணையாகவும் அந்தக் கண்டந்தான் திகழ்ந்தது என்பதுவும், அங்குத் தோன்றிய முதல் மொழியான தமிழ்தான் உலக மொழிகளுக்கெல்லாம் மூலமொழியாக மிளிர்ந்தது என்பதும், மனிதனின் சொல்லாற்றல் திறமையும், எழுத்தாற்றல் திறமையும் அந்த இடத்தில்தான் உருப்பெற்றெழுந்தன என்பதும், அங்குதான் மனிதன் சிந்தனையாற்றல் திறனை வளர்த்துக் கொள்ளத் தலைப்பட்டான் என்பதும் முன்னரே சுட்டிக்காட்டப்பட்டுள்ளன.
ஆராய்ச்சி அறிஞர் பெருமக்களான இராபர்ட் கால்டுவெல்(Robert Caldwell), ஏக்கல் (Haeckal), பி. கயில்ஸ் (P.Giles), என். ஆண்டர்சன் (N.Andarson), எச். சுவீட் (H.Sweet), பாப் (Bopp), டெயிலர் (Taylor), எப். ஆம்மல் (F.Hammal) போன்றோர், உலகில் உள்ள மிகப் பழைமை சார்ந்த மொழிகள் அனைத்தும், ஒரு மூல மொழியினின்றும் உண்டானவை என்றும், அந்த ஒரு மூலமொழியானது குமரிக்கண்டத்தில் முதலில் பேசப்பட்ட தமிழாகத்தான் இருக்க வேண்டும் என்றும், தமிழ் மொழியின் சொற்கள் உலகில் பேசப்படும் அனைத்து மொழிகளிலும் சில பலவாகக் கலந்து காணப்படுவதே, தமிழ் மொழியின் பழைமைக்கும், சிறப்புக்கும் ஏற்ற சான்று ஆகும் என்றும், எடுத்துக்காட்டும் சில குறிப்புகளிலிருந்து தெளிவான கருத்தை அறிந்து கொள்ள முடிகிறது.
பொதுவாக இந்தோ ‡ ஐரோப்பிய மொழிகளும், குறிப்பாகச் சமத்கிருத மொழியும், ஈபுரு முதலான சேமிய மொழிகளும், சித்திய மொழிகளும், அங்கேரிய மொழிகளும், சீன ‡ சப்பானிய மொழிகளும் திராவிட மொழிகளி லிருந்து சொற்களைக் கடன் பெற்றிருக்கின்றன என்பதற்கான ஒப்புமை எடுத்துக்காட்டுக்களை, அறிஞர் கால்டுவெல், தமது ஒப்பியல் மொழி நூலில் தெள்ளத் தெளிவாகக் குறிப்பிட்டுள்ளார்.
இவ்வாறே பரோ, எமனோ, சுனிதிகுமார் சட்டர்ஜி, இலகோவாரி போன்ற மொழி ஆராய்ச்சி வல்லுநர்கள், திராவிட மொழிகளிலிருந்து பிற மொழி களுக்குச் சென்றுள்ள சொற்கள் சிலவற்றைத் திட்டவட்டமாக எடுத்துக் காட்டியுள்ளனர்.
ஆசியாவில், சைபீரியா பகுதியில் வாழும் அக்கின் என்ற சாதியினரின் மொழியும், வட ஐரோப்பாவில் வாழும் பின் என்ற சாதியினரின் மொழியும், மீட்டியா நாட்டிலுள்ள பிஹிஷ்டன் என்ற சாதியாரின் மொழியும், திராவிட மொழிகளோடு சில வகைகளில் தொடர்புடைய மொழிகளாக இருந்து வருகின்றன என்று, வரலாற்று அறிஞர் ஹண்டர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் அவர் கூறும்போது, ஆரிய இனத்தினர் இந்தியாவிற்கு வந்து சேருவதற்குப் பன்னெடுங்காலத்திற்கு முன்னரே, திராவிடர் சிறந்த முறை யில் நாகரிகம் பெற்றுத் திகழ்ந்தனர் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
இரைசு தாவீது (Rhys David) என்னும் ஆராய்ச்சி அறிஞர், கம்ஸ்கற்கா, நியுசிலாந்து, இரஸ்கானி முதலிய நாடுகளில் வழங்கும் மொழிகள் தமிழுக்கு உறவுடைய மொழிகளாகக் காணப்படுகின்றன என்றும், சீன ‡ சப்பான் ஆகிய மொழிகள் தமிழோடு தொடர்புடைய மொழிகள் என்றும், எபிரேயம், இலத்தின், கிரேக்கம், சமத்கிருதம் முதலிய மொழிகளில் தமிழ்ச் சொற்கள் காணப்படுகின்றன என்றும், ஜெர்மன் நாட்டு காதிக் மொழி, சுமேரிய மொழி ஆகியவை தமிழோடு தொடர்புடைய மொழிகள் என்றும், ஐரோப்பிய மொழிகள் பலவற்றிலும், பின்லாந்தில் வழங்கும் மொழியிலும் தமிழ்ச் சொற்கள் காணப்படுகின்றன என்றும் தெளிவாகக் குறிப்பிட்டுள்ளார்.
பேராசிரியர் கோ. இராமச்சந்திரனார் அவர்கள், ஆங்கிலம், சமத்கிருதம், இந்தி, மேலை ஆரிய மொழிகள் ஆகியவற்றில் காணப்படும் சில தமிழ்ச் சொற்களைத் தெளிவாகச் சுட்டிக்காட்டியுள்ளார்.
டாக்டர் மு. வரதராசனார் அவர்கள், ‘மொழியியற் கட்டுரைகள்’ என்னும் நூலில், ‘இந்தி முதலிய வடநாட்டு மொழிகள் திராவிட மொழியைப் பின்பற்றி அமைந்திருக்கின்றன’ என்றும், ‘இந்தி முதலிய மொழிகள் வடசொற் பெருக்கம் மிகவாக உடையனவேணும், அவற்றின் அமைப்புக்குக் காரண மான தாய்மொழி, திராவிட மொழியே என்பது நன்கு விளங்கும்’ என்றும் குறிப்பிட்டுள்ளார்.
டாக்டர் மு.வ. அவர்கள் ‘மொழி வரலாறு’ என்னும் நூலில், ‘வடநாட்டில் பண்டைக் காலத்தில் மக்களின் மொழியாக வளர்ந்த பிராகிருத மொழிகளில், வடமொழிக் கூறுகள் தவிர, திராவிட மொழிக் கூறுகளும் இருந்தன’ என்றும், ‘ஆரியர்கள் இந்தியாவிற்குள் புகுந்தபோது, திராவிட மொழிகளின் செல்வாக்கால், அவர்களின் மொழியில் மாறுதல்கள் பல ஏற்பட்டன என்னும் கொள்கை, மொழி நூலார் பலரும் உடன்பட்ட ஒரு கொள்கையாகும்’ என்றும், ‘வட இந்தியாவில் வாழ்ந்த பழங்காலத்து மக்கள் வழங்கிய பிராகிருதம், சமத்கிருதம், பாலி போன்றவற்றில் திராவிட மொழிச் சொற்கள் பல கலந்திருப்பதைத் தெளிவாகக் காணலாம்’ என்றும் கூறியுள்ளார்.
மொழிநூல் அறிஞர் அலெக்சாண்டர் கொந்தரத்தோவு என்பார், ‘உபெய்து மொழி, மெசபொடோமியா மொழி, ஏலம் மொழி, ஆத்திரேலியப் பழங்குடியினர் மொழி போன்றவைகள், திராவிட மொழியின் வேர்ச்சொற்கள் சிலவற்றைப் பெற்றிருக்கின்றன’ என்று சுட்டிக்காட்டியுள்ளார்.
ஆராய்ச்சி அறிஞர் திரு ஞான கிரியார் , Latin words fo Tamil Origin’ என்ற நூலிலும், ‘Greek words of Tamil Origin’ என்ற நூலிலும் முறையே இலத்தீன் மற்றும் கிரேக்க மொழிச் சொற்கள் பல தமிழ் மூலத்திலிருந்துதான் பிறந்தவை என்பதற்கான காரணகாரிய விளக்கங்களைத் தெளிவாக எடுத்துக் காட்டியுள்ளார்.
‘காசுசியன் பல்கலைக் கழகத்தைச்’ சேர்ந்த பேராசிரியர் சுசுமு ஓனோ என்னும் அறிஞரும், தென் இந்தியாவின் ‘கேமிப் பல்கலைக் கழகத்தைச்’ சேர்ந்த பேராசிரியர் மத்துபாரா என்னும் அறிஞரும் சப்பானிய மொழித் தோற்றத்திற்குத் திராவிட மொழிகள் அடிப்படையாக அமைந்திருக்க வேண்டும் என்னும் கருத்தை வெளிப்படுத்தியுள்ளார். அவர்கள், திராவிட ‡ சப்பானிய மொழிகளுக்கிடையே அமைந்துள்ள இலக்கண ஒற்றுமையை யும், உடலுறுப்புப் பெயர்கள், எண்கள் ஆகியவை இரு மொழிகளிலும் பெற்றுள்ள ஒற்றுமையையும் சிறப்பாக எடுத்துக் காட்டியுள்ளனர்.
அறிஞர் பர் குலாம் அலி அல்லானா என்பவர், சிந்தி மொழிக்கும், திராவிட மொழிக்கும் உள்ள ஒப்புமைகளை எடுத்துக் காட்டியுள்ளார்.
திரு. மீ.மனோகரன் என்பவர், தென் அமெரிக்காவில் வாழும் பழங்குடி மக்களின் மொழிகளில் தமிழ்ச் சொற்கள் இடம் பெற்றிருக்கின்றன என்றும், அவர்களுடைய நாகரிகமாகக் குறிப்பிடப்படும் ‘பெரு’ என்பதே, பெருமைக் குரிய தமிழ்ச்சொல் என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.
திராவிட நாகரிகத்தின் தனிப் பெருஞ்சிறப்புகள்
இதுவரையிலும், அகழ்வாராய்ச்சியின் மூலம் கண்டறிந்த நாகரிகங் களில், பொருனை வெளி நாகரிகம் தொன்மை வாய்ந்ததாகக் கருதப்படு கிறது. அதற்குப் பிற்பட்டனவாகவே, சிந்து வெளி நாகரிகம், சுமேரிய நாகரிகம், அராபிய நாகரிகம், எகுபதிய நாகரிகம், ஈபுரு நாகரிகம், கிரேக்க நாகரிகம், உரோம நாகரிகம் போன்ற நாகரிகங்கள் காணப்படுகின்றன. பொருனை வெளி நாகரிகம், சிந்துவெளி நாகரிகம் ஆகிய இரண்டும் திராவிட நாகரிகம் ஆகும் என்பது, தெள்ளத் தெளிவாகக் கண்டறிந்த உண்மை யாகும். மேலே குறிப்பிட்டுள்ள பிற நாகரிகங்களும், பெரு நாகரிகமும், திராவிட நாகரிகத்தோடு, ஒற்றுமையுடையனவாகவும், தொடர்புடையன வாகவும் காணப்படுபவையாகும். உலக முதல் தாய்மொழி தமிழ்தான் என்பதையும், முதல் நாகரிகம் தமிழரின் நாகரிகந்தான் என்பதையும் நிலைநிறுத்த, இந்த நாகரிகங்கள் தக்கச் சான்றுகளாக இருந்து வருகின்றன.
வரலாற்றுப் பேராசிரியர்கள், தொல்பொருள் ஆராய்ச்சி வல்லுநர்கள், மொழி நூல் ஆராய்ச்சியாளர்கள் போன்றோர் பலரின் கருத்துக்களைத் தொகுத்து, வகுத்துப் பார்க்கும்போது மேற்கூறப்பட்டுள்ள கருத்தின் உண்மை தெள்ளிதின் புலப்படுகின்றது.
குமரிக் கண்டத்தில் தோன்றிய திராவிட நாகரிகந்தான் (9500 ஆண்டு களுக்கு முந்தியது), பொருனை வெளி நாகரிகமாக (8500 ஆண்டு களுக்கு முந்தியது) ஆயிற்று என்றும், பிறகு அது சிந்துவெளி நாகரிகமாகப் (7500 ஆண்டுகளுக்கு முந்தியது) பரவிற்று என்றும், பின்னர் அது யூப்ரிட்டிஸ் டைகிரிஸ் ஆறுகளுக்கிடையே உள்ள பகுதியில் சுமேரிய நாகரிகமாக (6500 ஆண்டுகளுக்கு முந்தியது) விரிந்தது என்றும், அதுவே பிறகு ஆரேபியா நாகரிகமாக (5500 ஆண்டுகளுக்கு முந்தியது) ஆயிற்று என்றும், பின்னர் எகுபதிய நாகரிகமாக (4500 ஆண்டுகளுக்கு முந்தியது) மாறிற்று என்றும், அதுவே பிறகு பாபிலோனியா நாகரிகமாக (3500 ஆண்டுகளுக்கு முந்தியது) ஆயிற்று என்றும், அது பின்னர் கிரேக்க நாகரிகமாக (2500 ஆண்டுகளுக்கு முந்தையது) மாறிற்று என்றும், பின்னர் அது உரோம நாகரிகமாக (2000 ஆண்டுகளுக்கு முந்தியது) வளர்ந்தது என்றும், பிறகு ஐரோப்பிய நாகரிகமாக (1500 ஆண்டுகளுக்கு முந்தியது) உருப்பெற்றது என்றும் வரலாற்று ஆராய்ச்சி அறிஞர்கள் காரண காரிய விளக்கங்களோடு தெளிவுபடக் கூறியுள்ளனர்.
https://m.facebook.com/story.php?story_fbid=4326401200713559&id=100000311652652
(நாவலர் நெடுஞ்செழியன் எழுதிய திராவிடர் இயக்க வரலாறு என்னும் நூலிலிருந்து)
No comments:
Post a Comment