Monday, July 12, 2021

தமிழீழ வரலாறு - முதல் பகுதி- வைகோ

வைகோ அவர்கள் எழுதிய தமிழீழ வரலாறு.... முதல் பகுதி...


கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தில் முன் தோன்றிய மூத்த தமிழ்க் குடி, கொற்றம் அமைத்து வாழ்ந்த நிலம்தான் தமிழ் ஈழ நிலமாகும். கடல்கோளால் கபாடபுரமும், தென் மதுரையும் அழியும் முன்னர் பஃறுளி ஆறும் குமரிக் கோட்டமும் இடம் பெற்றிருந்த லெமூரியா கண்டத்தில் மீந்திருக்கும் தமிழர் பூமிதான் இன்றைய தமிழ்நாடும், தமிழ் ஈழமுமாகும்.


ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் தமிழ் வேந்தன் எல்லாளன் இலங்கையை ஆட்சி செய்த போது அநுராதபுரம் தலைநகரமாக இருந்தது.


 சிங்கள மன்னர் துட்டகைமுறு வஞ்சகத்தால் எல்லாளனை வீழ்த்தவும் சிங்கள அரசு எழுந்தது. ஆனால், தென்னாட்டு பாண்டிய மன்னனின் உதவியால் கி.மு.103 இல் மீண்டும் தமிழர் அரசு அமைந்தது. பத்து நூற்றாண்டுகள் கடந்தன. 


பொன்னியின் செல்வனாம் இராஜராஜ சோழன் கி.பி. 993 இல் இலங்கை மீது படையயடுத்து சிங்கள மன்னனைப் புறங்கண்டு அநுராதபுரத்தைத் தீக்கிரையாக்கி, இலங்கையின் வடபகுதியை சோழப் பேரரசின் அங்கமாக்கி மும்முடிச் சோழர் மண்டலம் என்று பெயரிட்டான். புலனருவை தலைநகரமாயிற்று.


புலிக்கொடி பறந்த பொற்காலம்


வேங்கையின் மைந்தனாம் இராஜேந்திர சோழன் கி.பி.1017 இல் பெரும்படையுடன் சென்று தென் இலங்கையில் ஆட்சி புரிந்த சிங்கள மன்னர் அய்ந்தாம் மகிந்தனைத் தோற்கடித்து இலங்கைத் தீவு எங்கும் தமிழரின் கொற்றக் கொடியைப் பறக்க விட்டான். 


இதற்கும் 1000 வருடத்திற்கு முன்னர் சோழப் பெருவேந்தன் கரிகால்வளவன் சிங்களவர்களைக் கைதிகளாகக் கொண்டு வந்து காவிரியின் கரைகளை உயர்த்தவும், கல்லணை கட்டவும் பணியில் அமர்த்தினான் என்பது பழைய வரலாறு.


இராஜராஜனும், இராஜேந்திரனும் படையயடுப்பதற்கு சுமார் 100 ஆண்டுகளுக்கு முன்னர் பாண்டிய அரசன் மூன்றாம் இராஜசிம்மன் தனது மணிமகுடத்தை சிங்கள அரசனிடம் ஒப்படைத்திருந்தான். இராஜேந்திர சோழன் அம்மகுடத்தை சிங்கள அரசனிடம் ஒப்படைத்திருந்தான். இராஜ சோழன் அம்மகுடத்தைக் கைப்பற்றினான். 


கி.பி. 1070 இல் சோழர் களிடமிருந்து முதலாம் விஜயபாகு ஆட்சியைக் கைப்பற்றினான். 13 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் கலிங்க நாட்டவர்கள் தமிழ்நாட்டு தமிழகம், மலையாளம் பகுதிகளில் சேனா வீரர்களின் துணையுடன் விஜயபாகு வமிசவழி அரசை வீழ்த்தினர். பின்னர் கலிங்கர்கள் ஆட்சியை பாண்டியர்கள் உதவியுடன் சாவக அரசர்கள் முறியடித்தனர்.


பாண்டியரும் ஆண்டனர்


ஒரு கட்டத்தில் பாண்டியரின் மேலாட்சியில் தமிழ்ஈழ அரசு இயங்கியது. பாண்டிய மன்னனால் அனுப்பப்பட்ட படைத்தளபதிகள் 13 ஆம் நூற்றாண்டின் கடைசியில் அரச பீடத்தைக் கைப்பற்றிக் கொண்டனர். தமிழ் ஈழ அரசு வணிகத்தில் சிறப்புப் பெற்றது. 


அரபு நாடுகளுடன் கடல் வாணிபத்தைப் பெருக்கினர். ஈழத்துக் கப்பல்கள் இந்து மகா கடலில் வலம் வந்தன.


இந்த பரம்பரையைச் சேர்ந்த கடைசி மன்னன்தான் மாமன்னன் சங்கிலியாவான். தமிழ் ஈழத்தின் வரலாற்றில் சங்கிலி மன்னன் புகழ் ஈடு இணையற்றது. 


தமிழர் மானம் காத்த இப்பெரும் வீரனே மண்ணின் உரிமையை நிலைநாட்ட பல களங்களை வென்றவனாவான்.


போர்ச்சுக்கீசியருடன் போராடிய சங்கிலி மன்னன்

1618 ஆம் ஆண்டு போர்ச்சுகீசிரியர்கள் ஈழத்தில் நுழைந்தனர். சங்கிலி மன்னனைச் சாய்க்க முயன்றனர். சங்கலி மன்னன் தஞ்சை இரகுநாத நாயக்க மன்னனிடம் படை உதவி கேட்டதுடன் தஞ்சை மன்னன், வருண குலத்தானையும் அய்யாயிரம் வீரர்களையும் அனுப்பி வைத்தான்.


 யாழ்ப்பாணத்தைத் தலைநகரமாகக் கொண்டு சங்கிலி மன்னன் ஆட்சி நடத்திய தமிழ் ஈழ அரசை வீழ்த்த போர்ச்சுக்கீசியர்கள் அனைத்து வழிகளிலும் முயன்றனர். 1617 இல் கோவாவிலிருந்த தனது இந்திய ஆளுநருக்கு போர்ச்சுக்கீசிய அரசனே நேரடியாகவே இப்படியயாரு உத்தரவைப் பிறப்பித்திருந்தான்.


இரண்டாண்டுகள் போர்ச்சுக்கீசியர்களை சமர்க்களங்களில் சங்கிலி மன்னன் தோற்கடித்தான். 


போர்ச்சுக் கீசியரின் படை பலம் குவியக்குவிய தனக்குத் துணை வலிமை தேடிய சங்கிலி மன்னன் ஒல்லாந்தாரை நாடினார். மலையாள நாட்டிலிருந்து குஞ்ஞாலி வீரர்களின் உதவியையும் நாடினார். இப்படி துணை வலிமையைப் பெற்று வெற்றி வேந்தனாக சங்கிலி அரசோச்சிய வேளையில், காக்கை வன்னியன் எனும் தமிழனே போர்ச்சுக்கீசியருக்கு உதவிடும் துரோகியானான்.


போர்ச்சுக்கீசியத் தளபதி ஒலிவேராவின் படைகள் சங்கிலியை வெற்றி கொள்ள முடியவில்லை.


ஒலிவேராவின் படைகள் பட்டினி கிடந்த போது மனிதாபிமானத்தோடு உதவிய சங்கிலி மன்னனை மீண்டும் ஒலிவேரா போருக்கு அழைத்தான்.


காக்கை வன்னியனின் கயமை


போர்ச்சுக்கீசியருக்குத் துணையாக முதல் அணியில் வந்த சிங்களக் கூலிப்படையைப புறமுதுகிடச் செய்தான். நேருக்கு நேர் யுத்தத்தில் சங்கிலி மன்னனை வெல்ல முடியாது என்று உணர்ந்து கொண்ட போர்ச்சுக்கீசியர் கள் காக்கை வன்னியனின் துரோகத்தைப் பயன்படுத்தி சங்கிலியை வீழ்த்த சதித் திட்டம் வகுத்தனர். 


போர்ச்சுக்கீசியரை விட்டுவிட்டு சங்கிலியின் பக்கம் சேர்ந்து விடுவதாக காக்கை வன்னியன் அறிவித்துவிட்டு கயவர்கள் பலரையும் உடனழைத்துக் கொண்டு சங்கிலியை போய்ச் சந்தித்தான். தமிழர் இனம் ஒன்றுபட்டு விட்டதே என்ற பெரும் மகிழ்ச்சியில் திளைத்த சங்கிலி மன்னன் காக்கை வன்னியனை கட்டித் தழுவவும் விபரீதம் நிகழ்ந்தது. சங்கிலியின் கையில் தனது வெற்றி வாள் இல்லாத நிலையில், அவரது மெய்க்காப்பாளர் அருகில் இல்லாத சூழலில் காக்கை வன்னியனும் வஞ்சகர்களும் சங்கிலி மன்னனைக் கைது செய்து போர்ச்சுக்கீசியரிடம் ஒப்படைத்தனர். 


1619 ஜுன் 5 ஆம் நாள் இக்கொடுமை நேர்ந்தது. தமிழ் ஈழத்தின் கொற்றம் கவிழ்ந்தது.


வஞ்சகம் வென்ற போது...


சங்கிலி மன்னன் இரவோடு இரவாகக் கொழும்புக் கொண்டு செல்லப் பட்டான். அங்கிருந்து கோவாவிற்குக் கொண்டு செல்லப்பட்டான். மாமன்னன் சங்கிலி நீதிமன்றம் எனும் மரணவாசலில் நின்ற போதும் அவனது வீரமும், கம்பீரமும் துளியும் மங்கவில்லை.


தமிழ் ஈழப் பெரு வேந்தன் தூக்கிலிடப்பட்டான். 


1619 இல் தமிழ் ஈழத்தைக் கைப்பற்றிய போர்ச்சுக்கீசியர்கள் 1658 வரை ஆட்சி செய்தனர்.


அதன் பின்னர் போர்ச்சுக் கீசியர்களைத் தோற்கடித்த ஒல்லாந்தார்கள் தமிழ் ஈழத்தை ஆட்சி செய்தனர்.

இலங்கைத் தீவில் தமிழர்கள் வாழ்விடங்கள் யாழ்ப்பாணம், திரிகோண மலை, மட்டக்களப்பு ஆட்சி மாவட்டங்கள் உள்ளிட்டதும், புத்தளத்தில் வடக்கே இருந்து கும்புக்கன் ஆறு வரை விரிந்த கிடந்ததை வரலாறு ஒப்புக் கொண்டுள்ளது. 


ஆதவன் எங்கள் ஆதிக்க எல்லைக்குள் என்றும் மறைவதே இல்லையயன்று உலகின் பெரும்பகுதியைக் கைப்பற்றிக் காலனி நாடுகளாக்கிய பிரித்தானியப் பேரரசின் படைகள் 1795 இல் ஒல்லாந்தாரைத் தோற்கடித்தது. திரிகோணமலையைக் கைப்பற்றின. 


அய்ரோப்பாக் கண்ட வரலாற்றை மாற்றியமைத்த 1815 ஆம் ஆண்டில் பிரித்தானியர் இலங்கைத் தீவு முழுவதையும் கைப்பற்றி யூனியன் ஜாக் கொடியைப் பறக்கவிட்டனர்.


பிரித்தானிய ஆட்சியாளரின் பேதமை


இலங்கைத் தீவில், தமிழ் ஈழம் பிரிட்டனின் ஆட்சிக்குட்பட்டது. பிரித்தானியர்கள் ஆட்சி தொடங்கிய காலகட்டத்தில் எழுதப்பட்ட குறிப்புகள் தமிழ் ஈழ நிலப்பரப்பைத் தனியான அரசு வழிவந்த நிலப்பரப்பாகவே தெரிவிக்கின்றன.


 இலங்கைத் தீவு இருவேறு தேசிய இனங்களைக் கொண்ட தீவு என்பதையும், சிங்களவரும், தமிழரும் தனித்தனி அரசு அமைத்து வாழ்ந்தனர் என்பதையும் இந்த இரண்டு தேசிய இனங்களும் மதத்தாலும், மொழியாலும், வாழ்க்கை பண்பாலும் முற்றிலும் வேறுபட்டிருந்தன என்பதையும் பிரித்தானியர்களின் குறிப்புகள் தெளிவுப்படுத்துகின்றன. 


இலங்கையில் தங்களுடைய ஆட்சி முறையை நடைமுறைப்படுத்த இங்கிலாந்தின் நான்காம் ஜார்ஜ் மன்னன் 1829 ஆம் ஆண்டில் கோல்புரூக் பிரபு தலைமையில் ஒரு ஆணைக்குழுவை நியமித்தார். 


இந்த ஆணைக் குழு 1832 ஆம் ஆண்டில் நான்காம் வில்லியம் மன்னரிடம் தங்கள் அறிக்கையைத் தந்தது. அந்த அறிக்கையின் மய்யக் கருத்துக்களை இங்கே மேற்கோள் காட்டுகின்றேன்.


‘நாட்டின் வெவ்வேறு பகுதிகளில் வெவ்வேறு விதமான ஆட்சியைத் தொடர்வதில் பயனில்லை. நாட்டில் உள்ள பல்வேறு இன மக்களிடையே உற்ற வேறுபாடுகள் குறைக்கப்பட வேண்டும். பிரித்தானிய ஆட்சி முறை வழிகள் கையாளப்பட வேண்டும்.


கரையோர ஆட்சி மாவட்டங்களும் கண்டி ஆட்சி மாவட்டங்களும் தனித்தனியாக, வெவ்வேறு ஆட்சி முறைகளால் ஆட்சி செய்யப்பட்டன. அங்கே வெவ்வேறு வழமைகள் இருந்தன. மரபுரிமைகள் செயற்பட்டன.

சிங்கள நாட்டு இனத்தினர், ராசகாரிய முறையைப் பின்பற்றியவர்கள். தமிழ் நாட்டு இனத்தினர் தலைவரி முறையைப் பின்பற்றியவர்கள்.


சிங்கள ஆட்சி மாவட்டங்கள் தனியாக இருந்தன. ஆட்சி செய்யப்பட்டன. தமிழ் ஆட்சி மாவட்டங்கள் தனியாக அமைந்தன. ஆட்சி செய்யப்பட்டன.


நாடு ஒருமைப்படுத்தப்பட வேண்டும். தனித்தனி ஆட்சி முறை ஒழிக்கப்பட வேண்டும். சிங்களவருக்கும் தமிழருக்கும் ஒரே மாதிரியான சட்டங்கள் இயற்றப்பட வேண்டும். பிரித்தானிய ஆட்சி முறை புகுத்தப்பட வேண்டும்.


பூர்வகுடிகள் தமிழரே!


1833 ஆம் ஆண்டில் இங்கிலாந்து அரசு கோல்புரூக் ஆணைக் குழுவின் அறிக்கைப்படி இலங்கைக்கு சட்டம் இயற்றியது. காலனி ஆதிக்கத்தை எதிர்த்து உலகெங்கிலும் விடுதலை கிளர்ச்சி எழுந்தது. 


காந்தியார் தலைமையில் இந்தியாவில் ஆயுதம் ஏந்தாத அகிம்சை புரட்சி விடுதலைப் போராட்டமாக வெடித்தது. இலங்கைத் தீவின் ஆட்சிப் பொறுப்பை இலங்கை மக்களிடமே ஒப்படைக்க வேண்டுமென்று விரும்பிய பிரிட்டன், ஆட்சி மாற்றத்தைக் கொண்டுவரும் ஏற்பாட்டைச் செய்ய சோல்பரி பிரபுவின் தலைமையில் ஒரு ஆணைக்குழுவை 1944 இல் இலங்கைக்கு அனுப்பியது.


1944 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் அகில இலங்கைத் தமிழ் காங்கிரஸ் கட்சி தொடங்கப்பட்டது. அதன் தலைவராக திரு. கணபதிப் பிள்ளை பொன்னம்பலம் திகழ்ந்தார். 1947 நவம்பர் 27 இல் ஜி.ஜி. பொன்னம்பலம் தலைமை உரை ஆற்றும்போது பின்வருமாறு குறிப்பிட்டார் :


‘... இலங்கைக்கு நாங்கள் அடிமைகளாக வரவில்லை. வலிமை கொண்ட ஆட்சியாளர்களாக இருந்தோம். எமது நிலத்தில் நாம் உரிமை கொண்டாடிக் குடியேறினோம். இதை நான் நினைவுப்படுத்துகின்றேன். தமிழர்கள்தான் இந்தத் தீவின் ஆதிக்குடிகள். இதை எமது (சிங்கள) நண்பர்கள் தெரிந்து கொள்ள வேண்டும். பருத்தித்துறை முதல் தேவந்திர முனை வரை ஆட்சி செய்த அரசை நாம் பெற்றிருந்தோம். இதனை இலங்கையின் வரலாற்றில் காணலாம். அய்ரோப்பியக் கடலாடிகள் வரும்வரை நாம் (தமிழர்கள்) அந்நியரால் ஆட்சி செய்யப்படவில்லை. எம்மை நாமே ஆட்சி செய்தோம்...’


சிங்களப் பேரினவாதிகளின் பிடியில்...


1945 அக்டோபர் 9 ஆம் நாள் சோல்பரி பிரபு ஆணைக்குழு இலங்கைக்கு ஒற்றை மாற்று அரசைத்தான் பரிந்துரைத்தது. தமிழர்களின் வரலாற்று உரிமைகள் பறிபோயின. 


1947 டிசம்பர் 10 ஆம் நாள் இலங்கையின் சுதந்திரச் சட்டத்திற்கு இங்கிலாந்து அரசின் ஒப்புதல் வழங்கப்பட்டது. 1948 பிப்ரவரி 4 ஆம் நாள் இலங்கைக்கு முழு ஆட்சிப் பொறுப்பையும் பிரித்தானிய அரசு ஒப்படைத்தது. 

சோல்பரி பிரபு இலங்கையின் முதலாவது ஆளுநர் முதல்வரானார். 


இலங்கையின் ஆட்சிக் கொடியாக சிங்கக் கொடி ஏற்கப்பட்டது. ஆம் ; சிங்களவரின் ஆதிக்கக் கொடிதான் உயர்த்தப்பட்டது.


தமிழர்கள் பழைய அடிமை வாழ்விலிருந்து மீண்டும் ஒரு புதிய அடிமை வாழ்விற்குத் தள்ளப்பட்டனர். அகில இலங்கைத் தமிழ் காங்கிரஸ் கட்சி தொடங்கப்பட்ட 1944 இல்தான் ஜஸ்டிஸ் கட்சி திராவிடர் கழகமாக உதயமாகியது. ஈழத்தமிழர் தந்தையாம் மூதறிஞர் செல்வ நாயகம் அவர்கள் அகில இலங்கைத் தமிழ் காங்கிரஸ் கட்சியில் இடம் பெற்றிருந்து, தமிழர் நலம் காக்க உரிமைக் கொடி ஏந்தினார்.


வாக்குரிமை பறிக்கப்பட்ட கொடுமை


1948 டிசம்பரில் இலங்கை நாடாளுமன்றத்தில் தமிழ் இனத்தின் உரிமைக் குரல்வளையை அறுக்கும் கொடுவாள்ச் சட்டம் வீசப்பட்டது. தமிழ்நாட்டிலிருந்து இலங்கைக்கு நூறு ஆண்டுகள், நூற்றைம்பது ஆண்டுகளுக்கு முன்னர் சென்று இரத்தத்தை வியர்வையாகக் கொட்டி தேயிலைத் தோட்டங்களையும், ரப்பர் தோட்டங்களையும் அமைத்து இலங்கையைப் பொன் விளையும் பூமியாக ஆக்கிய இந்திய வமிசா வழித் தமிழர்கள் பத்து லட்சம் பேர் குடியுரிமை, வாக்குரிமையை சிங்களப் பேரின வாத அரசு சட்டம் இயற்றி பறித்துக் கொண்டது. இது உலகில் எந்த நாட்டிலும் நடக்காத அக்கிரமமான கொடுமையாகும். தமிழர்கள் சர்வதேச அகதிகளாக அனாதைகளாக ஆக்கப்பட்டனர். உலகில் எங்கு மனித உரிமைகள் பறிக்கப்பட்டாலும் குமுறி எழுந்த ஆசியாவின் ஜோதி பண்டித ஜவஹர்லால் நேரு இந்தக் கொடுமையைக் கண்டித்து வாய் திறக்கவில்லை.


தந்தை செல்வா


ஈழத் தமிழர்களின் வரலாற்றில் இந்தியாவின் மைய அரசு பல்வேறு கால கட்டங்களில் தீங்கினை விளைவித்துள்ளது என்பதை அசைக்க முடியாத ஆதாரங்களோடு நம்மால் பட்டியலிட முடியும். இந்தக் குடியுரிமை பறிக்கின்ற கொடுமைச் சட்டத்தை எதிர்க்கும் கடமையில் பொன்னம்பலம் தவறினாலும் தமிழர் தலைவர் செல்வ நாயகம் தவறவில்லை. 


நாடாளுமன்றத்தில் அதை எதிர்த்து வாக்களித்தார்.


 அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகினார். 1949 ஆம் ஆண்டில் தமிழரசுக் கட்சியைத் தொடங்கினார். 


 1949 டிசம்பர் 18 ஆம் நாள் நடைபெற்ற இலங்கைத் தமிழரசுக் கட்சி முதலாவது மாநாட்டில் தலைவர் செல்வநாயகம் ஆற்றிய தலைமை உரையில் பின்வருமாறு குறிப்பிட்டார் :


‘... 9,10 ஆம் நூற்றாண்டுகளில் இலங்கையின் வடக்கில் உள்ள தமிழர்களின் நிலப் பகுதிகளில் தமிழர் ஆட்சி தொடங்கியது. தெற்கே உள்ள சிங்கள நிலப்பகுதிகள் தனியாக ஆட்சி செய்யப்பட்டன. சில சமயங்களில் ஒன்றுக்கு மேற்பட்ட அரசுகள் தென்னிலங்கையில் இருந்தன.


... காலம் மாறினாலும் சிங்கள அரசும் தமிழ் அரசும் தனித்தனியாக நெடுங்காலம் தொடர்ந்தன. அய்ரோப்பியர்கள் வந்து முதலில் தமிழ் அரசைக் குலைத்தார்கள்.


... பல நூற்றாண்டுகளாக இருந்த இரு நாடுகள் பிரித்தானியரால் இணைக்கப்பட்டன. ஆட்சித் தேவைக்காக மட்டும் இணைக்கப்பட்டன இந்த இரு நாடுகளும் இயற்கையாக ஒன்றிணையவில்லை’.

No comments: