Monday, September 6, 2021

பாரதி பாதை - அறிஞர் அண்ணா-1

 பாரதி பாதை - அறிஞர் அண்ணா

திராவிட நாடு (19.10.1947) - 1

13.10.1947 அதிகாலை அதிர்வெடிகள் முழங்க, அறிஞர்கள் வாழ்த்த, மக்கள் ஆனந்த கடலில் மூழ்க, எட்டயபுரத்தில் ராஜாஜி, பாரதி மணி மண்டபத்தைத் திறந்த வைத்தார்.

அறிஞர் அண்ணா, ‘திராவிட நாடு’ 19.10.1947 இதழில் சீர்திருத்தவாதி பாரதியாரைப் பற்றி கல்கி, ராஜாஜி தலைமையில் எட்டையபுரத்தில் பாரதி மணி மண்டபம் திறந்ததை யயாட்டி எழுதிய கட்டுரை இது.

திராவிடர் கழகத்துக்காரராக இருந்த நிலையில் மனம் திறந்து பாராட்டி எழுதினார். 

அதன் பிறகு பாரதியாரைப் பற்றி எழுதிய கட்டுரையும் சர்ச்சைக் குள்ளானது.

.....

எட்டையபுரத்திலே, தேசியக் கவி சுப்பிரமணிய பாரதியாருக்கு, அழகிய மண்டபம் அமைத்து, சீரிய முறையில் விழா நடத்தினர்.

பரங்கியாட்சியை ஒழித்தாக வேண்டுமென்ற ஆர்வத் தீ கொழுந்து விட்டெரியும் உள்ளத்துடன் வாழ்ந்தவர் பாரதியார். தாயகத்தில் உலவத் துரைத் தனத்தார் தடை விதித்ததால், புதுவையில் தங்கிப் புதுப்பாதை வகுத்தார் பாரதியார்.

அவருக்கு ‘காணிக்கை’ செலுத்த ஆட்சி அலுப்பையும் பொருட்படுத்தாது, ஆச்சாரியார் வந்தார் - ஆயிரக்கணக்கான தமிழர்கள் கூடினர் - இசை வாணர்கள் - கலை வாணர்கள் -எழுத்தாளர்கள் பற்பலர்.

‘கல்கி’ ஆசிரியர், இப்பணியினைத் திறம்பட நடத்தி முடித்தார் ‡ விழாச் சொற்பொழிவுகளில் நாவலர் பாரதியார், சிவஞானக் கிராமணியார், ஜீவானந்தம், நாமக்கல்லார், எழுத்தாளர் சங்கத் தலைவர் பெ. தூரன் ஆகிய பலரும் கலந்து கொண்டனர்.

நண்பர் சிவஞானம் பெருமிதத்துடன் கூறினார், ‘அதிகாரமற்ற கரம் அஸ்திவாரக்கல் நாட்டுகிறதே என்று முன்பு ஆயாசப்பட்டேன்- இன்றோ, ஆளும் கரம், மணி மண்டபத்தைத் திறந்து வைக்கிறது கண்டு அக மகிழ்கிறேன்’ என்று. உண்மை. வங்கம் ஆளும் ஆச்சாரியார், மணி மண்டபத்தை திறந்தார்-வறுமையாளராகக், கவனிப்பாரற்று, நாடு கடத்தப்பட்ட, நலிவுற்றிருந்த பாரதியாருக்கு, நாடு முழுவதும் கொண்டாடும் அளவினதான விழா நடந்தேறியது.

பாரதியாரின் கவிதைத் திறன், அதனாலாய பயன், மறுக்க முடியாதன. பாரதியாரின் தனிப் பண்புகளை, அவரை அந்நாளில் அறிந்தவர்கள் கூறிடக் கேட்டால், புது உலகு காண விழைபவர்களின் அகமெலாம் மகிழும். புரட்சிக் கவிஞர் பாரதிதாசன், பாரதியாரைக் குறித்துப் பேச ஆரம்பித்தால், அவருடைய கண்களில் ஓர் புத்தொளி தோன்றிடக் காணலாம்.

பாரதியாரின் காலம் வேறு. இக்காலம் வேறு. எனவே இன்றுள்ள எண்ணங்களை எல்லாம், அவர் அன்றே ஆய்ந்தறிந்து கூறியிருக்க வேண்டுமென்றோ, நாம் எடுத்துரைப்பதும், வரலாற்று உண்மையுமான ஆரிய - திராவிட பிரச்சினையை அவர் கூறியிருக்க வேண்டுமென்றோ, நாம் எதிர்பார்ப்பதற்கில்லை. அவருடைய பாடல்களிலே பல இடங்களில், அவர், ‘ஆரியர்’ என்ற சொல்லை, உயர்த்தியேதான் பாடி இருக்கிறார். அந்தக் காலம், நாமெல்லாம், பள்ளிகளில் ‘ஆரிய மத உபாக்யானம்’ எனும் ஏட்டினைப் பாடமாகப் படித்த காலம். நமது தலைவர், தமிழ்நாட்டுக் காங்கிரசிலே பெருந் தலைவராக இருந்த காலம்.

ஆரியர்-திராவிடர் பிரச்சனை, ஒரு ஆராய்ச்சி -வரலாறு -இதனை நாம், பாரதியாரிடம் காண்பதற்கில்லை.

ஆரியம் என்பது ஒரு வகைக் கலாச்சாரம் - வாழ்க்கை முறை.

திராவிடம், அது போன்றே, தனியானதோர்  வாழ்க்கை முறை.

இது இன்று விளக்கமாக்கப்படுவது போல, பாரதியாரின் நாட்களிலே கிடையாது.

பல ஜாதி - பல தெய்வ வணக்கம் - பற்பல விதமான மூட நம்பிக்கைகள் - தெய்வத்தின் பெயர் கூறி தேசத்தின் பொருளைப் பாழாக்கும் கேடு - இவைகள் தாம் ஆரியம்.

ஒன்றே குலம், ஒருவனே தேவன் இது திராவிடம்.

இரண்டிலே எது நல்லது? எந்தக் கலாச்சாரத்துக்கு நீர் ஆதரவு தருவீர், என்று பாரதியாரைக் கேட்க, யாருக்கும் வாய்ப்பில்லை. கேட்டிருந்தால், நிச்சயமாக அவர், திராவிட கலாச்சாரத்தையே விரும்பி யிருப்பார். அவருடைய பாடல்களில் - பிற்காலப் பகுதிகளில் இந்தச் சூழ்நிலை இருக்கக் காணலாம்.

பாரதியார் வி­யத்திலே பகுத்தறிவார்களுக்குள்ள, மதிப்பு, முதலில், பரம்பரை வழக்கப்படி, அவர் தேவியின் வரப்பிரசாதம் பெற்றதாலோ, முனிவர் அருளாலோ, பஞ்சாட்சர உபதேச பலனாகவோ, பாட ஆரம்பித்தார் என்று அருட்கவியாக்காது விட்டார்களே, அதுதான்.

நா மகளைத் துதித்தார்-நாலைந்து ஆண்டு - பலன் இல்லை - பிறகோர் நாள், அம்மே! இனி நான் உயிர் வாழேன் என்று கூறி நாவை அறுத்துக் கொள்ளக் கிளம்பினார், உடனே களுக்கென ஒரு சிரிப்பொலி கேட்டது. 

அம்மை பிரசன்னமாகி, பாலகா! பாடு! என்றாள்- உடனே அவர் பாடலானார் -பாடினார், பாடினார், பார் முழுவதும் பாடல் பரவும் வரை பாடினார், என்று பாரதி புராணம் கட்டாத வரையில் நமக்கெல்லாம் மிகக் களிப்பு. நமக்குக் களிப்பு என்பது மட்டுமல்ல, பாரதியாருக்கே உண்மையில் பெருமை. 

அவர் நாமகள், பூமகள் அல்லது வேறோர் தேவனின் அருள் பெற்றவரல்ல, அவர் ஒரு கவி, சிந்தனையில் பட்டதைச் செந்தமிழில் கவிதையாக்கினவர் என்பதனால்தான்.

கூடுமானவரையில், பாரதி விழா சொற்பொழிவாளர்கள், அவருடைய அருமை பெருமைகளை எடுத்துரைக்கையில், ‘புராணம்’ பேசாதிருந்தது பற்றி, நாம் மகிழ்கிறோம். 

அன்பர் ஆச்சாரியார் ராஜாஜி மட்டும், பாரதியாரை, ஒரு ‘முனிவர்’ என்று கூறினார். ஆனால் அதற்கும்அவர், வழக்கமான பொருள் கூறத் துணியார்.

பாரதியாருக்குள்ள பெருமை, முதலில் இது. 

மற்றோர் பெருமை, அவர், தம்முடைய நாட்களிலே மற்றவர்களை விட வேகமாக முன்னேற்றக் கருத்துகளைப் பாடி, அதன் பயனாக, அவருடைய சமூகத்தாராலேயே வெறுக்கப்பட்டு, ‘பார்ப்பன மேதைகள்’ என்போரால் அலட்சியப்படுத்தப்பட்டு, வறுமையில் வாடி, அன்னிய ஆட்சியாளரின் அடக்கு முறைக்கு ஆளாகி, அல்லலை அனுபவித்து, அந்த அல்லலால் மனம் உடையாமல், நோக்கம் மாறாமல், அரைக்க அரைக்க மணக்கும் சந்தன மானாரே, அந்தப் பண்பு.

அவருடைய பண்பு, ஜாதிக் கட்டுகளை உடைத்தெறியக் கூடியதாக இருந்தது என்பது அவருடைய கவிதைகளிலே பல ரசமான இடங்களில் தெரிகிறது.

அவருடைய நாட்டுப் பற்றும், மொழிப் பற்றும், அந்த நாட்களில் நையாண்டி செய்யப்பட்டது. இன்று, அவருக்கு, ‘மகாகவி’ என்ற பட்டம் தரவும், பளிங்கு மண்டபம் கட்டவும், தமிழகம் முன் வந்தது. கவிரைப் போற்றும் மாண்புக்கும் அதைக் கவர்ச்சிகரமான முறையிலே நடத்திக் காட்டிய கல்யின் திறமைக்கும், நமது பாராட்டுதல்.

‘பாரதி மண்டபத்தை, விழாவுக்காகப் போடப்பட்ட பந்தல் மறைத்துக் கொண்டிருக்கிறது’ என்று, அன்று ஆச்சாரியார் பேசினார்.

மண்டபத்தை, பந்தல் மறைக்கிறது! மண்டபத்தை மட்டுமல்ல! தேசியக் கவிதைகள் என்ற ஒரு பகுதியை மட்டுமே பெரிதாக்கி, நாட்டிலே பரப்பிக் காட்டுவதால், பாரதியாரின் முழு உருவம், மக்களின் கண்களுக்குத் தெரியவொட்டாதபடி மறைக்கப்படுகிறது.

பாரதியார், தோத்திரப் பாடல்கள் பல பாடினார். ஆனால், தேவார திருவாசகமும், திருவாய் மொழியும் பாடியான பிறகு பாடினார்-எனவே, அவருடைய கவிதைகளிலே தோத்திரப் பகுதி, முக்கியமோ, அவருடைய பெருமைக்குச் சான்றோ ஆகாது, வைதீகர்களின் நோக்கத்தின் படியே கூட.

பாரதியார், வேதாந்தப் பாடல்கள் பல பாடியுள்ளார். 

ஆனால், அவருக்கு முன்னர், தாயுமானரும், பட்டினத்தாரும், வள்ளலாரும் பாடி விட்டனர். எனவே அந்தப் பகுதியும் பழைய பதிப்புப் போன்றதுதான். அவருடைய நாட்டுப் பற்றுப் பாடலே, அவருடைய கவிதைகளிலே மிக முக்கியமான, மற்றக் கவிகள் பாடாத, காலத்திற்கேற்ற, பலன் அளித்த பகுதி.

விடுதலைப் போர் புரிய, அவருடைய கவிதைகள், தக்க கருவி யாயின. எனவேதான், வெள்ளையன் வெளியேறிய விழாவுக்கு அடுத்ததாக, பாரதி மண்டபத் திறப்பு விழா நடைபெற்றது.

ஆச்சாரியார் சொன்னார், ‘அன்னிய ஆட்சியை எதிர்த்து இந்தியா வின் பல்வேறு பகுதிகளில், பல கவிகள் பாடல்கள் இயற்றினார். தமிழர்களுக்கு, தமிழ்க் கவிதானே பயன்பட முடியும். பாரதியார் அந்த வகையிலே, தமிழருக்குப் பயன்பட்டார்’ என்று.

ஆக, பாரதியாரின் பக்திப் பாடல், வேதாந்தப் பாடல் இவைகளை விட, நாட்டுப் பற்றுப் பாடல், மகத்தான பலன் தந்தது. விழா கொண்டாடின அன்பர்கள், இந்தப் பகுதியைத்தான் விளக்கினார்கள் விஸ்தாரமாக. 

மதுரை முஸ்லிம் தோழர் ஒருவர், ‘பாரதியாரின் பாடல் ஆங்கிலேயரை ஓட்டிய அணு குண்டு’ என்று கூறினார்.

தமிழகத்திலே காங்கிரசின் வெற்றிக்கு பாரதியார் பாடல், மிகமிகத் தாராளமாகப் பயன்பட்டது. 

பயன்படுத்திக்கொண்டு பாராளும் அளவு உயர்ந்த பலர், பாரதியாரை ஏதோ ஒரு சமயத்திலே மட்டும் எண்ணுவதுடன் இருந்தனர். இக்குறையைப் போக்கி, கவிஞரின் நினைவுக் குறியாக ஓர் அழகிய மண்டபத்தை, அமைத்தார் கல்கி.

ஆச்சாரியார் சொன்னாரே, பந்தல் மண்டபத்தை மறைக்கிறது என்று, அது போல, பாரதியாரின் தேசியப் பாடல்களை மட்டுமே பரப்பிய காரணத்தால், நாட்டவருக்கு, பாரதியாரின் முழு உருவம் தெரியவில்லை - இனியாவது  தெரியுமா, என்றால், தெரியச் செய்தாலொழியத் தெரிவதற்கில்லை என்று கூறலாம்.

...

No comments: