Saturday, September 25, 2021

புதுச்சேரியில் பெரியார் திராவிடர் விடுதலைக் கழகம் 15 ஆம் தொடக்கவிழா - கவி உரை

 24.9.2021அன்று புதுச்சேரியில் பெரியார் திராவிடர் விடுதலைக் கழகம் 15 ஆம் தொடக்கவிழா நடைபெற்றது. அதில் நான் ஆற்றிய உரையின் எழுத்து வடிவம்.... 


பெரியார் திராவிடர் விடுதலைக் கழகத்தின் 15 ஆம் தொடக்க விழா மற்றும் திராவிடர்இயக்கக் கண்காட்சியை தொடங்கி வைக்க வாய்பளித்த கோகுல் அவர்களே!

அலைகள் இயக்கத்தின் நிறுவனத் தலைவர் வீர.பாரதி அவர்களே!

தோழர்களே வணக்கம்.

கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக தோழர் கோகுல்காந்தி நாத் அவர்களுடன் நட்பை பேணி வருகின்றேன். 

1999 ஆம் ஆண்டு ‘குமுதம்’ இதழ் புதுச்சேரி மலர் ஒன்று வெளியிட்டிருந்தது. 

அதில் கோகுல் படத்தையும் பெரியார் புதுச்சேரியில் பேசிய ஒரு பொதுக் கூட்ட நிகழ்வு படத்தையும் வெளியிட்டிருந்து. 

அந்த குமுதம்இதழை கையில் வைத்துக் கொண்டே புதுச்சேரி பெரியார் சிலைக்கு மாலை அணிவிக்க வந்திருந்தேன். அங்கு கோகுலைக் கண்டதும், குமுதம் இதழைக் காட்டி இது நீங்களா? என்று வினவினேன். ஆம் என்றார் கோகுல். அன்று தொடங்கிய தோழமை இன்று வரை தொடர்கின்றது.

நான் இந்த புதுச்சேரி மண்ணில் தொடங்கிய பெரியார் பார்வை இதழ்.

 அதற்கு கோகுல் உதவியாக இருந்தார். 

பின்பு அவர் எழுதிய ‘கருப்புமலர்களின் நெருப்புப் பயணம்’ நூல். புதுவை திராவிடர் இயக்கத்தின் சுருக்கமான வரலாறும் 43 பெரியார் தொண்டர்களின் வாழ்க்கை வரலாற்றையும் உள்ளடக்கியது.

  பல ஆண்டுகளுக்கு முன்பே அதற்காக அரும்பணிகளையும் தேடல்களையும தொடங்கியிருந்தார். அந்நூல் இறுதி வடிவம் பெறும் காலத்தில் நான் துணையாக இருந்தேன். நூல் வெளியீட்டு விழாவையும் சிறப்பாக நடத்தினோம்.

அந்நூலில் பல அரிய செய்திகள் இருக்கின்றன.

புதுச்சேரியில், சுயமரியாதை இயக்கம் தொடங்குவதற்கு முன்பே பெரியாரின் ‘குடிஅரசு’ இதழக்கு பல நிறுவனங்கள் தங்கள் ஆதரவை தெரிவித்து வந்துள்ளனர். 

‘வைத்தியக்குப்பம் சோதிடாலயம்’, ‘கணித சோதிடம் தே. ஆறுமுகம் செட்டி’, ‘திரெளபதி அம்மன் கோயில் வீதி தேவி ஆஸ்ரமம்’, இரங்க பிள்ளை வீதியில் இயங்கிய ‘வஸந்தி நிலையம்’ ஆகியவை அவற்றுள் சில.

முத்தியால்பேட்டை பகுதியில் சுயமரியாதை இயக்க முழக்கம் ஒலிக்கத் தொடங்குகிறது என்பதை எடுத்துக் காட்டுகிறார் கோகுல்.

 தோழர் றா. பழனியப்ப செட்டியார் தனது தாயார் நினைவாகக் கொடுத்து வந்த திதி வழக்கத்தை  நிறுத்தி, தனது குடும்பத்தில் சமூகப் புரட்சியை நடத்தியுள்ளார் இது நடந்தது 1928 இல். இச் செய்தி 7.10.1928 நாளிட்ட குடிஅரசு இதழில் வெளிவந்திருக்கிறது.

புதுச்சேரிப் பகுதி 1954 ஆம் ஆண்டு வரை பிரஞ்சு ஆளுமைக்குக் கீழ் இருந்த பகுதியாகும். சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் ஆகிய கொள்கைகளை பிரஞ்சு அரசு கொண்டிருந்தாலும், பொது உரிமை மற்றும் பொதுவுடைமை கொள்கைகளுக்காக இயங்கும் இயக்கங்களை நசுக்கியதை யாராலும் மறுக்க முடியாது.

சுயமரியாதை இயக்கம் முதல் திராவிடர் கழகம் தொடங்கிய காலம் வரை பதிவு செய்ய இயலாமல் செயல்பட்டு வந்தது.

சொசித்தேக்களில் (சங்கம்) தந்தை பெரியார் தொண்டர்கள் பங்கு கொண்டனர்.

சுயமரியாதை இயக்கம் முறையாக தொடங்கபடாத நிலையிலும் கூட, தோழர் ராஜகோபால் செட்டியாரின் புதுமனை புகுவிழாவில் தந்தை பெரியார், ஜே.எஸ். கண்ணப்பன், சாமி.சிதம்பரனார், தண்டபாணிப் பிள்ளை ஆகியோர் பங்கேற்றனர். அவர்களை வைத்து சாவடி மைதானத்தில் பொதுக்கூட்டம் நடத்தி இருக்கின்றனர்.

புதுச்சேரியில் தஞ்சம் புகுந்த கவிஞர் பாரதியார், வ.வே.சு. அய்யர் போன்ற பார்ப்பனர்களோடு கனக சுப்புரத்தினம் ( பாரதிதாசன்) நட்பு கொண்டிருந்தார்.

 ‘பொருளாதாரம், உத்தியோகம் முதலியத் துறைகளில் பிராமணரல்லாதார் சம நிலையடைய முடியாது’ என்ற வ.வே.சு. அய்யர் கூற்றுக்கு, புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் ‘பிராமணரல்லாதார் மிகப் பெரும்பாலோர் அடிதடியில் கிளம்பிவிட்டார்களோ’ என்று பதில் கொடுத்திருக்கிறார். 

பகுத்தறிவுக் கொள்கையில் ஆர்வமிக்க இளைஞராக விளங்கிய ம. நோயல், சாதி மறுப்புத் திருமணம் செய்துகொண்டார்.

மக்களிடையே சமத்துவம் ஏற்பட, அனைத்து சாதி மதத்தவரும் பங்கு கொள்ளும் வகையில் இவரின் சொந்த ஊரான உழவர்கரை பகுதியில் உள்ள தெருவிலேயே பெரிய பந்தலிட்டு சமபந்தி விருந்து வழங்கினார். 

நெல்லிக்குப்பத்தில் 22.2.1931 ஆம் ஆண்டு சுயமரியாதை இயக்க முதல் மாநாடு நடைபெற்ற போது புதுவையிலிருந்து அம்மாநாட்டிற்கு கலந்து கொள்ள சென்றிருந்த தோழர்கள் புதுச்சேரியிலும் இவ்வாறு ஒரு மாநாடு நடத்த முடிவு செய்தனர். 

ஒரு வாரக் காலத்திலேயே நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகள் மிக விரைவாக, பிரம்மாண்டமான முறையில் தோழர்களால் செய்யப்பட்டது. 

சுயமரியாதை இயக்கப் பொதுக் கூட்டம் 1.3.1931 ந் தேதி, காலையில் கப்ளே தியேட்டரிலும், மாலையில் ஒதியன்சாலை மைதானத்திலும் (தற்போது அண்ணா திடல்) நடத்த ஏற்பாடு செய்யப்பட்டது. 

நிகழ்ச்சிக்கு பிரஞ்சிந்திய அரசு அனுமதி அளிக்கக் கூடாது என்று சமயவாதிகள் சிலர் எதிர்ப்புத் தெரிவித்தனர். இதன் காரணமாக மாலையில் ஒதியன்சாலையில் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்ச்சியை ரத்து செய்து கப்ளே தியேட்டரில் மட்டும் நிகழ்ச்சி நடத்த அனுமதி அளித்தது.

இதனை 3000 பேர் கலந்து கொண்ட சுயமரியாதை இயக்க மாநாடு என்று ‘குடிஅரசு’ இதழ் வர்ணித்தது.

இது சுயமரியாதை இயக்கத் தோழர்கள் ஒருங்கிணைந்து புதுச்சேரியில் பழமைவாதிகளின் தடைகளையும், எதிர்ப்புகளையும் உடைத்துக் காட்டிய நிகழ்ச்சி ஆகும். இந்நிகழ்ச்சியைப் பொதுக்கூட்டமாக நடத்தினாலும் 'மாநாடு' என்றே ‘குடிஅரசு’ வர்ணித்தது.(புதுச்சேரியில் 1.3.1931 இல் சொற்பொழிவு - குடிஅரசு, 8.3.1931).

ம.நோயேல், மான்ழினிபாலா போன்ற சிலரும் ரெவெய்செசியால் சங்கத்தில் பங்கு கொண்டு இருந்தபடியால் பல சீர்திருத்த வேலைகளைத் தொடர்ந்து செய்தனர். தங்களின் கருத்துகளைப் பரப்ப தமிழ் மன்றங்கள், இலக்கிய அமைப்புகள் ஏற்படுத்திக் கொண்டனர்.

பிரஞ்சு ஆளுநர் லூய் போன்வேன் அவர்கள் பொறுப்பேற்றிருந்த சமயத்தில், புதுச்சேரி திராவிடர் கழகம் விழா நடத்த பிரஞ்சு அரசு அனுமதியளித்தது. ஆனால் முறையாகப் பதிவு செய்யப்படவில்லை. துவக்க விழாவிற்கான அனுமதி பெற்றதிலே மிகுந்த மகிழ்ச்சியில் நிகழ்ச்சி நடத்துவதற்கான வேலையில் ஈடுபடத் துவங்கினார்கள்.

ஆர்.வி.கோபால் தலைமையிலான நாகை திராவிட நாடக கழகத்தினர் புதுச்சேரி வந்தனர்.

அவர்கள் நேரு வீதியில் அமைந்திருந்த கப்ளே தியேட்டரிலும், தகரக் கொட்டகையாக இருந்த, தற்போதைய  கம்பன் கலையரங்கத்திலும் பல நாடகங்கள் நடத்தினர். ‘சாந்தா அல்லது பழனியப்பன்’ என்ற நாடகமும் நடத்தப்பட்டது.  அந்நாடகத்தில் ‘சிவகுரு’ பாத்திரத்தில் கலைஞர் மு. கருணாநிதி, நிரவி ரத்தினவேல் ஆகியோர் நடித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

நாடகக் குழுவினர் நீடராஜப்பர் வீதியில் ஒரு இல்லத்தில் தங்கியிருந்தனர். அங்கேதான் திராவிடர் கழக துவக்க விழாவிற்கான ஏற்பாடுகள் குறித்து கலந்துரையாடல் நடத்தப்பட்டது. 

இது தொடர்பாக ‘குடிஅரசு’ (14.7.1945)இதழில் வெளியான செய்தி: 

புதுச்சேரி தி.க. திறப்பு என்ற தலைப்பில் மேற்கண்ட கழகத் திறப்பு விழா 22.7.1945ந் தேதி பெரியார் ஈ.வே.ராமசாமி அவர்கள் தலைமையில் நடைபெறும். தோழர் டி. சண்முகம் பிள்ளை திறந்து வைப்பார். தோழர் சி.என். அண்ணாதுரை அவர்கள் கொடியேற்றுவார். தோழர்கள் கே.வி. அழகிரிசாமி, ஏ.பி. ஜனார்த்தனம், ஆர். நெடுஞ்செழியன், கே. அன்பழகன், சு.பெருமாள் (புதுவை), அப்துல் வகாப் (விழுப்புரம்), சத்தியவாணி முத்து (சென்னை), மஞ்சுளா பாய் ஆகியவர்கள் படங்களைத் திறந்து வைப்பார்கள். கனக சுப்புரத்தினம் (பாரதிதாசன்) வரவேற்புரை கழகத் தலைவராக. எஸ். சிவப்பிரகாசம், எஸ்.கோவிந்தராஜி ஆகியோர் செயலாளர்கள்.

மிகச் சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்ட மாநாட்டு பணிகளில் திராவிட நாடகக் கழகத்தினரும் ஈடுபட்டனர். மாநாட்டில் கலவரம் ஏற்படுத்த பொதுவுடைமைக் கட்சியினரும், காங்கிரஸ் தேசிய வாதிகளும் தீவிரமாக இறங்கினர். மாநாட்டில் கலவரம் ஏற்படும் சூழ்நிலை உள்ளதையும் விளக்கிய போது பெரியார் அவர்கள், திட்டமிட்டப்படியே மாநாடு நடத்த வேண்டும் என்று கூறினார். 

துவக்க விழாவிற்கு தந்தை பெரியார் மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து தோழர்கள் புதுச்சேரி வந்தனர். தந்தை பெரியாருக்கு முத்தியால்பேட்டையில் பொன். இராமலிங்கம்  நடத்தி வந்த ‘சகுந்தலா சாயத் தொழிற்சாலை’யில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

மாநாட்டு துவக்கத்திலேயே கலவர ஏற்பாட்டோடு வந்த கலவரக்காரர்கள் ரகளையில் ஈடுபட்டு, கழகத் தோழர்களைக் கடுமையாகத் தாக்கினார்கள். அவர்களின் தாக்குதலுக்கு  கலைஞர் மு. கருணாநிதி ஆளானார்.

தன் மதிப்புக் கழகம்

உப்பளம் பகுதி முழுவதும் தாழ்த்தப்பட்ட மக்களே மிகப் பெரும்பான்மை யினராக வாழ்ந்தனர்.

இப்பகுதியில் தந்தை பெரியார் கொள்கையில் ஈடுபாடு கொண்டு அதிக எண்ணிக்கையில் தோழர்கள் குடும்பம் குடும்பமாக திராவிடர் கழகத்தில் பங்கு கொண்டனர். 

பிரஞ்சு அரசில், திராவிடர் கழகம் என்ற பெயரில் இயங்க முடியாத, பதிவு செய்ய இயலாத போது, சுயமரியாதை இயக்கத்தின் பெயரை கவிஞர் பாரதிதாசன் ஆலோசனையின் பேரில் தன்மதிப்புக் கழகமாகப் பெயர் மாற்றம் செய்து துவக்கப்பட்டது.

 இந்த அமைப்பை ஏற்படுத்தியதில் முக்கிய பங்கு ம.நோயேல் அவர்களைச் சாரும். 

தலைவராக பெருமாள், செயலாளராக மாணிக்கவேல் சகேர், பொருளாளதராக தூய்ழான் தர்மசிவம், கவுரத் தலைவராக ம.நோயேல் ஆகியோரைக் கொண்டு துவக்கப்பட்ட தன் மதிப்புக் கழகத்தில் பெரும்பாலோர் ஆலைத் தொழிலாளர்களாக இருந்தார்கள்.

எத்துவால் ரங்கசாமி, மாணிக்கவேல் சகேர், தூய்ழான் தர்மசிவம்,  உப்பளம் ஆர். பெருமாள், காலாஸ் ஜெகன்நாதன், இராமசாமி ஆகியோர் குறிப்பிடத்தக்க தன் மதிப்புக் கழகத் தோழர்கள் ஆவார்கள்.  

மாணிக்கவேல் சகேர் அவர்கள் ‘குமரிக்கோட்டம்’ நாடகத்தில் முக்கிய பாத்திரத்தில் பங்கேற்று நடித்தவர். பொன்.இராமலிங்கம் ஏற்படுத்திய கலைக்குழுவில் முக்கிய பங்கு வகித்தவர் இவர்.

தன்மதிப்புக் கழகத்தின் பொருளாளராக இருந்தவர் துய்ழான் தர்மசிவம். இவருடைய திருமணத்தில் திருக்குறள் முனுசாமி, ம.நோயேல், புரட்சிக் கவிஞர் பாரதிதாசன், வாணிதாசன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

உப்பளம் ஆர். பெருமாள், பஞ்சாலையில் பிரம்புக் கூடை பின்னும் வேலை செய்ததால் பிரம்புக்கூடை பெருமாள் என்று அழைக்கப்பட்டவர். புரட்சிக் கவிஞர் பாரதிதாசன், இவர் மீது அளவில்லா அன்பைக் கொண்டிருந்தார்.

இவருடைய கல்லறையில் திராவிடர் கழகக் கொடியின் அமைப்பு பொறிக்கப்பட்டுள்ளது. இவர் 16.1.1981 இல் மறைந்தார்.

தன்மதிப்புக் கழகத்தின் சார்பில் 'உழவன்' என்னும் கையயழுத்து இதழ் நடத்தப்பட்டது. இந்த கையயழுத்து இதழை சிறப்பாக தொகுத்து தயாரிப்பதில் காலாஸ் ஜெகன்நாதன் அவர்களின் பங்கு அளப்பரியது. 

1951 இல் சிறந்த நாடக நடிகராகவும், கால்பந்தாட்ட வீரராகவும் முற்போக்கு எழுத்தாளராகவும் விளங்கியவர்.

திருவள்ளுவருக்குப் புகழ் சேர்க்கும் வகையிலும் தன் மதிப்புக் கழக ஆண்டு விழாவாகவும் வள்ளுவர் விழாவை ஒவ்வொரு ஆண்டும் நடத்தினார்கள்.

 ‘குமரிக்கோட்டம்’ போன்ற நாடகங்களை நடத்தி அப்பகுதி மக்கள் பெரியார் கொள்கையை ஏற்கச் செய்தனர். 

ஞாயிற்றுக் கிழமை போன்ற விடுமுறை நாட்களில் கவிஞர் பாரதிதாசன், ம.நோயேல், எம்.ஏ. சண்முகம், வாணிதாசன், பொன். இராமலிங்கம் போன்றவர்கள் தன் மதிப்புக் கழகத் தோழர்களுடன் கூடி கருத்துப் பரிமாறிக் கொள்ளும் வாய்ப்பாக அமைத்துக் கொண்டனர்.

தமிழகத்திலிருந்து வரும் திராவிடர் கழகப் பிரமுகர்கள் உப்பளத்தில் பிரச்சாரம் செய்யாமல் போனதில்லை என்ற அளவிற்கு பகுத்தறிவுப் பிரச்சாரம் செய்துவந்தனர்.

உப்பளத்தில்  கிறிஸ்துவர்கள், பிரஞ்சு வெள்ளையர்கள்,  உயர் சாதிக்காரர்கள் மற்றும் தாழ்த்தப்பட்டவர்கள் என்று தனித்தனியாக பிரித்து கல்லறைகள் அமைக்கப்பட்டு இருந்தது. இதனை எதிர்த்துப் போராடி, அனைவருக்கும் பொதுவான கல்லறை அமைத்தது தன் மதிப்புக் கழகத்தின் சாதனையாகும். 

திராவிடர் கழகம் நடத்திய பிள்ளையார் சிலை உடைப்பு, இந்தி எதிர்ப்பு, இந்திய அரசியல் சட்டம் எரிப்பு ஆகிய போராட்டங்களில் அதிகமானவர்களைத் திரட்டி வந்து கலந்து கொள்ளச் செய்தனர். 

பஞ்சாலை போராட்டத்தால் கம்யூனிஸ்ட் கட்சி புதுச்சேரிலே ஓங்கி வளர்ந்திருந்த சமயத்திலே கம்யூனிஸ்ட் பக்கம் சாயாமல் தந்தை பெரியார் கொள்கைகளை ஏற்று தன் மதிப்பு இயக்கம் கண்டதே இவர்களின் தனிச் சிறப்பாகும்.

உருளையான் பேட் புதுப்பாளையம் பேட் -அழகிரி நூல் நிலையம்

தாழ்த்தப்பட்ட மக்கள் அதிகமாக வாழும் பகுதி புதுப்பாளையம் பேட் ஆகும். மு.ரங்கநாதன், வை.வடிவேலு, மு.சதாநந்தம் ஆகியோர் ‘நித்தியானந்தம் கல்வி சாலை’ என்ற பெயரில் சிறுவர்களுக்கு மாலை நேரப் பள்ளி ஒன்றை சிறிய அளவிலே நடத்தி வந்தனர். 

திராவிடர் கழகத் தோழர்கள் சிலர் விடுதலை, வெற்றி முரசு, திராவிடன் போன்ற இதழ்களை கல்விச் சாலையில் பயிலும் மாணவர்களுக்குப் படித்துக் காட்டுவதை வழக்கமாகக் கொண்டிருந்தனர்.

புதுப்பாளையம் பேட் இளைஞர்கள் பலர் ஆலைத் தொழிலாளர்கள் . தன் மதிப்புக் கழகத் தோழர்களும் திராவிடர் கழகத் தோழர்களுடன் ஆலை வேலையில் நெருங்கிப் பழகும் வாய்ப்பு ஏற்பட்டது.

வீ. பெருமாள், மு.வீரப்பன், ரஸ்கீன், ஆனந்தவேல், தே. சாரங்கன், வ.மலையாளத்தான்,  இரா.எத்துராசு, பொ.நடராசன் மற்றும் பல தோழர்கள் முயற்சித்து ‘நித்தியானந்தம் கல்விச்சாலையை ‘அழகிரி நூலகமாக’ மாற்றினார்கள். ம.நோயேல் அவர்கள் இந்த இளைஞர்களின் ஆர்வத்தைத் திராவிடர் கழகத்திற்குப் பயன்படுத்த வேண்டும் என்பதற்காக நூலகம் அமைய பல வகை உதவிகளைச் செய்தார். 

நூலக தலைவர் வீ.பெருமாள் அவர்களின் தம்பிக்குச் சீர்திருத்தத் திருமணம் நடந்தது.  இதன் தொடர்ச்சியாகப் பலரும் தங்களின் குடும்பத்தில் சுயமரியாதை திருமணத்தை நடத்தினார்கள். 

குத்தூசி குருசாமி தலைமையில் ஏராளமான திருமணங்கள் நடைபெற்றன. 

ம.நோயேல் அவர்கள் உருளையன் பேட்டை பக்கத்தில் உள்ள நெல்லித் தோப்பு மேற்றிராசன மாதா கோயிலில் தாழ்த்தப்பட்டவர்களையும் உயர்சாதியினரையும் பிரிக்கும் நடுக்கூடத்தை (தடுப்புக்கட்டை) அகற்றும் போராட்டத்திற்கு சுயமரியாதை இயக்க ஆரம்ப காலத் தோழர்களைப் பயன்படுத்திக் கொண்டார். 

பிரஞ்சிந்திய அரசில் அமைச்சராக இருந்த மாண்புமிகு ஆ.வே. முத்தையா அவர்கள் சுயமரியாதை இயக்கத்தில் ஆர்வம் கொண்டிருந்தார். சுயமரியாதை நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு இவர் ஆற்றிய உரை குடிஅரசு இதழ்களில் பதிவாகியுள்ளது. புதுவை முரசு 4.5.31 இதழில், உடன் முழங்கு என்ற தலைப்பில் இவரைப் பற்றி புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் எழுதியுள்ளார்.

புதுச்சேரியில் சுயமரியாதை இயக்கத்தின் முன்னோடி பகுதியாக விளங்கிய முத்தியால் பேட்டையில் சகுந்தலா சாயத் தொழிற்சாலையின் உரிமையாளர் பொன். இராமலிங்கம், திராவிடர் கழகம் புத்துணர்ச்சிப் பெற காரணமாக இருந்தார். இந்த சாயத் தொழிற்சாலை புதுச்சேரி திராவிடர் கழகத்தின் தலைமை அலுவலமாகவும் இயங்கியது.

தாழ்த்தப்பட்ட மக்களை கோயிலுக்குள் அழைத்துச் செல்லும் ஆலய நுழைவுப் போராட்டத்தை நடத்தியவர் பொன். இராமலிங்கம். புதுவையில் ஈஸ்வரன் கோயில், பெருமாள் கோயில் உள்ளிட்ட பல கோயில்களுள் தாழ்த்தப்பட்ட மக்களை மேள, தாளங்களோடு அழைத்துச் சென்றவர் பொன்.இராமலிங்கம். இது நடந்தது 1947 இல்.

புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் எழுதிய 'இரணியன் நாடகம்' 1948 ஆம் ஆண்டு சென்னை மாகாணத்தில் தடை செய்யப்பட்டது. ஆனால், பிரஞ்சிந்திய ஆட்சிக்குட்பட்டதால் புதுச்சேரியில் இந்நாடகம் நடத்தப்பட்டது. இதில் ‘இரணியனாக’ வேடம் ஏற்று நடித்தவர் பொன். இராமலிங்கம்.

புதுச்சேரி திராவிடர் கழகத் தலைவராக பொன். இராமலிங்கமும், துணைத் தலைவராக ம.நோயேல் அவர்களும் இருந்துள்ளனர்.

புதுச்சேரி சின்னக்கடை திராவிடர்கழகத் தொண்டர்களின் கோட்டையாக விளங்கியது. கோ. கோவிந்தராசு, நாராயணசாமி, கி. பார்த்தசாரதி, இராமசாமி தேவர், இவருடைய மகன் இரா. நக்கீரன், சைகோன் ராஜாமாணிக்கம், விக்டர் ஆரோக்கியதாஸ், அலேக்ஸிஸ் என்ற அ. தமிழ்த் தொண்டன் ஆகிய தோழர்கள் ஒன்று கூடி 1948 இல், காந்தி வீதி, தில்லை மேஸ்திரி வீதி சந்திப்பில் வள்ளுவர் தமிழ் நூற்கழகம் என்ற பெயரில் மன்றம் அமைத்து முறையாக, உறுப்பினர்களை இணைத்து பல ஆண்டுகள் தொடர்ந்து செயல்பட்டனர். இதன் தலைவராக அ. தமிழ்த்தொண்டன் இருந்தார்.

1950 இல் ‘குப்பையில் மாணிக்கம் (அல்லது) தமிழர் படும் பாடு’, 1951 இல் ‘கைகூடாக் காதல்’, 1965 இல் ‘என் முடிவு’, 1968இல் ‘நான் யார்?’ ‘அன்பு மலர்’ ஆகிய நாடகங்களில் சாதி, மதம், சாமியார் மோசடிகளை எதிர்க்கும் கருத்துக்களை  மிகச் சிறப்பாக, கதை, வசனம், பாடல்களை அமைத்து எழுதியுள்ளார் அ. தமிழ்த்தொண்டன்.

இந்த விழாவில் புதுச்சேரி திராவிட இயக்கக் கண்காட்சியை திறந்து வைக்க வாய்ப்பளித்த தோழர் கோகுல் காந்திக்கும், அலைகள் இயக்கத் தலைவர் வீர.பாரதிக்கும் மற்றும் தோழர்களுக்கும் நன்றி கூறி விடைபெறுகிறேன். நன்றி. வணக்கம்.

No comments: