குத்தூசி குருசாமி நினைவு நாள் 11.10.2023
குத்தூசி குருசாமி
பட்டுக்கோட்டைக்கு அருகிலுள்ள குருவிக்கரம்பை கிராமத்தில் 1906 ஏப்ரல் 23இல் பிறந்தார்.
முதன்முதலாக பெரியாரைச் சந்தித்தபோது அவருக்கு வயது 23. பெரியாரின் குடியரசு இதழில் ‘குத்தூசி’ என்ற பெயரில் சமூக சீர்திருத்த, பகுத்தறிவு சார்ந்த கட்டுரைகளை எழுதத் தொடங்கினார். 1929இல் தன்னைப் போன்றே பகுத்தறிவுச் சிந்தனை கொண்ட குஞ்சிதம் அம்மையாரை பெரியாரின் தலைமையில் சாதி மறுப்புத் திருமணம் செய்துகொண்டார்.
தமிழ்நாட்டில் பெரியார் நடத்திவைத்த முதல் சீர்திருத்தத் திருமணம் குத்தூசி குருசாமி - குஞ்சிதம் அம்மையார் திருமணம்தான்.
அக்காலத்தில் பல எதிர்ப்புகளுக்கு இடையேதான் அது நடைபெற்றது.
பெரியார் தலைமையில் சுயமரியாதை இயக்கம் வேர்விட்ட காலத்தில், அவருடன் அறிமுகமாகி, இறுதிவரையில் அவரோடு இணைந்து பயணித்தவர் குத்தூசி குருசாமி.
எழுத்துச் சீர்திருத்தத்தின் முன்னோடி
தமிழ் எழுத்துச் சீர்திருத்தம் குறித்து முதன்முதலாகப் பேசியவர் குருசாமி. பெரியாருடன் இதுபற்றி விவாதித்து, புதிய தமிழ் எழுத்து வடிவங்களைக் குடியரசில் முதன்முதலாகப் பயன்படுத்தவும் செய்தார். “இது தமிழ் மொழியின் எழுத்து வடிவத்தை மேலும் செழுமைப்படுத்து
வதுடன், தமிழை அடுத்த கட்டத்துக்கு எடுத்துச் செல்லும்” என்றார். கம்யூனிஸ்ட் இயக்க முன்னோடியான சிங்காரவேலர் 1923இல் விவசாயத் தொழிலாளர் இயக்கத்தைக் கட்டமைத்து,
இந்தியாவிலேயே முதன்முதலாக சென்னையில் மே தினத்தை நடத்தியபோது அதில் குருசாமியும் பங்கேற்றார். அப்போது அவர் பதின்பருவ இளைஞர். இடதுசாரி இயக்கத் தலைவர்களுடன் குருசாமி தனது கடைசிக் காலம் வரையில், நெருக்கமான உறவைப் பேணினார்.
1949இல் இந்தியாவில் கம்யூனிஸ்ட் இயக்கம் தடை செய்யப்பட்ட காலத்தில், பல தலைவர்களுக்குத் தன் வீட்டில் அடைக்கலம் அளித்தார். கைது செய்யப்பட்ட கம்யூனிஸ்ட் தலைவர்கள் பலரைச் சிறைக்குச் சென்று சந்தித்தார் குருசாமி. அதற்கு நன்றி தெரிவித்து அவர்கள் எழுதிய கடிதங்களே, கம்யூனிஸ்ட் இயக்கத்தினர் மீது அவர் வைத்திருந்த அன்புக்குச் சான்று.
1952இல் முதன்முதலாக நடந்த பொதுத்தேர்தலில், தமிழ்நாட்டில் கம்யூனிஸ்ட் கட்சிகளை ஆதரித்துப் பிரச்சாரம் செய்தார் பெரியார். அந்தத் தேர்தலில் இடதுசாரிகள் வெற்றிபெற்றபோதும், கூட்டணிக் கட்சிகளின் ஆதரவோடு ராஜாஜி ஆட்சியமைத்தார். இதனைக் கண்டித்து ‘கொல்லைப்புற வழியில் ஆச்சாரியார்’ என்று விடுதலையில் எழுதினார் குருசாமி.
இன்று அரசியல்வாதிகள் சரளமாகப் பயன்படுத்துகிற இந்தச் சொல், முதன்முதலாக அப்போதுதான் அச்சில் பயன்படுத்தப்பட்டது.
‘குடியரசு’, ‘விடுதலை’ ,‘அறிவுப் பாதை’ மற்றும் ‘புதுவை முரசு’ பத்திரிகைகளில் தொடர்ந்து எழுதினார் குருசாமி.
பாரதிதாசனுடனான நட்பின் காரணமாக அவரின் முதல் கவிதைத் தொகுதியைப் பிரசுரிக்கும் பொறுப்பையும் ஏற்றார்.
குருசாமியின் மனைவி குஞ்சிதம் தான் பாரதிதாசனின் முதல் கவிதைத் தொகுப்பை வெளியிட்டவர்.
குருசாமி, ஆங்கிலத்தில் இருந்து பல்வேறு நூல்களையும், கட்டுரைகளையும் தமிழில் மொழிபெயர்த்தார்.
ஐரோப்பிய அறிஞரான பெட்ரண்ட் ரஸ்ஸலின் புகழ்பெற்ற நூலான ‘நான் ஏன் கிறிஸ்தவன் அல்ல’ என்பது அவரது முக்கியமான மொழிபெயர்ப்பு.
தேர்தல் அரசியலில் ஈடுபடுவது குறித்து பெரியாருடன் கருத்து வேறுபாடு கொண்ட அண்ணா, 1949இல் பெரியார் - மணியம்மை திருமணத்தை முன்வைத்து தனி இயக்கத்தைத் தொடங்க முடிவு செய்தார். இதற்கான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றபோது, பிரிவைத் தடுக்க சமரச முயற்சிகளை மேற்கொண்டவர் குருசாமி.
குத்தூசி குருசாமி முன்வைத்த தமிழ் எழுத்துச் சீர்திருத்தத்தை, அவரது மறைவுக்குப் பிறகு 1978இல் எம்.ஜி.ஆர் அரசாங்கம் நடைமுறைப்படுத்தியது
தன் வாழ்நாளில் எழுத்துகளிலும், பேச்சுகளிலும் பகுத்தறிவுக் கருத்தியல் சார்ந்து குருசாமி எந்தச் சமரசமும் செய்து
கொண்டதில்லை. சுயமரியாதை இயக்கத்தின் அடையாளமாக இருந்த குருசாமி 1965 அக்டோபர் 11இல் காலமானார்.
இவரின் நூல்களையும், வாழ்க்கை வரலாற்றையும் அவரின் நண்பரான குருவிக்கரம்பை வேலு வெளியிட்டிருக்கிறார்.
Rajamani A.R. அவர்களின் பதிவு
No comments:
Post a Comment