வரலாற்றின் வேர்கள் -1 -அண்ணாமலை சுகுமாரன்
கடந்த காலத்தின் இரத்தக்கறை படிந்த அடிச்சுவடுகளைப் பற்றியும் , அவ்வப்போது நடைபெற்ற போர்கள், அதில் அடைந்த வெற்றிகள் ,ஆக்கிரமித்த நாடுகள் இவைகளைப்பற்றி விவரிப்பதும் , வெற்றிபெற்ற மன்னர்களின் கீர்த்தியை சொல்வதும்தான் வரலாறு என்ற பொதுவான புரிதல் இருந்தாலும், வரலாறு (History) என்ற சொல் இறந்த காலத்தைப் பற்றிய தகவல்கள் விவரிப்பது என்னும் பொருளிலேயே பொதுப்படையாகப் பயன்படுகிறது.
ஆயினும் வரலாறு என்பது மன்னர்களைப்பற்றி மட்டும் இல்லாமல், அது அந்தக் காலகட்டத்தில் வாழ்ந்த சாமான்ய மக்களைப்பற்றியும், அவர்களின் பொருளாதாரம், வாழ்வியல் முறைமைகள், கல்வி, இலக்கியம், பண்பாடு, மொழி என அனைத்தையும் விளக்குவதாக இருக்கவேண்டும். இந்த வரலாற்றை கணிக்க தக்க சான்றுகள் வேண்டும் .
ஆதாரங்கள் எனும் உறுதியான கற்களால் கட்டமைக்கப்பட்டதே வரலாறு .
வரலாறு தற்போது தொல்லியல் என அறிவுப்பூர்வமானதொரு விஞஞானம் போல் ஆகிவிட்டது . அதன் ஆய்வுக்கு இப்போது பல்வேறு துறைசார்ந்த அறிவும் அவசியமாகிவிட்டது .
தொல்லியல் என்பது, வரலாறு ,மானிடவியல், கலாச்சாரம் , பொருளாதாரம் இனவரலாறு, நீரடி தொல்லியல்,என பல்வேறு துறைகளின் அறிவு தேவைப்படுகிறது .
தொல்லியல் எதிர்கால மனித வாழ்க்கைக்கு ஒரு செய்தியை எப்போதும் கூறிவருகிறது. கடந்த காலத்தைப் பொறுத்தே வருங்காலம் அமைகிறது .
இப்போது வாழும் வாழ்க்கையின் விதை கடந்த காலத்தில்தான் இருக்கிறது .வரலாற்றை நிர்ணயிக்க சான்றுகள் மிக அவசியம் .
நமது நாட்டைப்பொறுத்தவரை சான்றுகளை போற்றிப்பாதுக்காக்க நாம் எப்போதும் கவனம் செலுத்தியதில்லை .
மேலும் இந்தியாவின் வரலாறு என்பது முகமதியர்களின் படையெடுப்பிலிருந்துதான் அறியப்பட்டிருந்தது. அதற்கு முன் இந்தப் பகுதியில் என்ன நடந்தது என்பதைப் பற்றி ஒரு தகவலும் இல்லை.
அலெக்சாண்டர், 326 BCயில் இந்தியாவுக்குப் படையெடுத்து வந்தார் என்ற ஒரு குறிப்பு மட்டுமே இருந்தது. அதற்கு முன்னும் பின்னும் ஒன்றும் தெரியாது. தமிழ் நாட்டிலோ இன்னமும் மோசம் தஞ்சை பெரியக்கோயிலே கரிகால் சோழன் கட்டியது என்று ஒரு கதை நிலவிவந்ததாக பொன்னியின் செல்வன் எனும் ஒரு குழுவில் ஆறு ஆண்டுகளுக்கு முன் ஒரு செய்தி விவாதத்தில் இருந்தது நினைவிருக்கிறது .
ஒவ்வொரு கோவிலுக்கும் பின்புலத்தில் ஒரு புராணக் கதை நம்ப முடியாதபடி இருக்கும் . வரலாற்று செய்தி அதில் மறைந்து கிடக்கும் .நெல் மணியை சேர்க்க ஆரபித்த குதிரில் நெல்லை விட பதர்கள் அதிகம் ஆனது போல் புராண கற்பனையில் வரலாற்று உண்மைகள் மறைந்து போயின .நெல் மணிகள் காணாமல் மறைந்து போயின .
திருப்பணி என்றபெயரில் நமது கோவில்களில் இடம்பெற்றிருந்த வரலாற்று ஆதாரங்களான கல்வெட்டுகள் சிதைக்கப்பட்டு வீசியெறியப்பட்டன .இன்னமும் தமிழ் நாட்டில் இதே நிலைதான் தொடருவது தான் வேதனைக்குரியது. மற்றொரு புறம் வேறு பலர் அறியாமையால் அவற்றை அழித்துக்கொண்டும் இருந்திருக்கிறார்கள். இந்த அழிப்பு, ஆங்கிலேயர்கள் இந்தியா வருவதற்கு முன்பாகவே தொடங்கிவிட்டது. இந்தியாவிற்குள் நுழைந்த முகமதியர்கள், நிறைய சேதங்கள் ஏற்படுத்தினார்கள்.
குதூப் மினார் இருந்த இடத்தில் 27 கோயில்கள் இருந்தனவாம். மதுராவில் நிறைய சிற்பங்கள் இருந்ததாகச் சீனப் பயணி சொல்லியிருக்கிறார்.
1857இன் சிப்பாய்க் கலகத்திற்குப் பிறகு ஆங்கிலேயர்கள் தங்கள் பங்கை அழிவில் செய்திருக்கிறார்கள்.
பல பழைய கோட்டைகள் ராணுவக் கிடங்காகவும், சில ராணுவ மருத்துவமனையாகவும், ராணுவ பேக்கரியாகவும், பயன்பட்டிருக்கின்றன. தாஜ் மஹால் விருந்து நடத்தும் இடமாக இருந்திருக்கிறது . தாஜ் மஹாலின் ஒரு பகுதி, தேன்நிலவுக்கு வந்தவர்களுக்கு வாடகைக்கு விடப்பட்டிருக்கிறது. ஆனால், இன்றுவரை இந்த சேதப்படுத்துதல்கள் தொடர்ந்து கொண்டுதானே இருக்கின்றன?
இன்றும் பல கோட்டைகள் சுற்றுலா விடுதிகளாக சுதந்திர இந்தியாவிலும் இருக்கின்றன. (உதயகிரி) தரங்கம்பாடியில் இருக்கும் டேனிஷ் கோட்டை 30 ஆண்டுகளுக்கு முன் அரசாங்க ஒய்வு விடுதியாகப் பயன்பட்டதை நானே பார்த்திருக்கிறேன். பல அரண்மனைகள் தமிழ் நாட்டில் இன்னமும் அரசு அலுவலகங்களாக இருந்து வருகிறது .
இந்த நிலையில்தான் இந்தியாவில் கிழக்கிந்தியக் கம்பெனியில் பணியாற்ற வந்த வெள்ளையர்களில் சிலர், இந்தியாவைப் பற்றி அறிந்து கொள்வதில் தீவிரம் காட்டினர். அவர்கள் வந்தது என்னவோ வேறு வேலைக்கு ஆயினும் கம்பெனியின் ஆதரவு என்பதெல்லாம் இத்தகைய ஆய்வுகளுக்கு இல்லை; என்றபோதிலும் , இவர்கள் தங்களுடைய சொந்த ஆர்வத்தின் பேரில் இந்திய வரலாற்று சான்றுகளைப் பற்றிய ஆராய்ச்சியைச் தொடர்ந்திருக்கிறார்கள்.
அப்போது இருந்த காலகட்டத்தில் இந்தியர்களுக்கு நாகரீகம் எதுவும் கிடையாது. பிரிட்டிஷ் வருகைக்குப் பிறகுதான் எல்லாமே என்று எழுதிவைத்ததோடு , இந்தியர்கள் மனதில் ஒருவகை தாழ்வு மனப்பான்மையை குடி கொள்ளச் செய்தார்கள்.
அந்த நிலையில் சில கிழக்கிந்திய கம்பெனியில் பணியாற்ற வந்த வெள்ளையர்களில் உள்ள மனசாட்சியுள்ள சிலர் தொல்லியல் சான்றுகளை மேலும் அழிவிலிருந்து காத்து இந்தியாவின் வரலாறு எனும் கட்டிடம் எழ உதவி செய்தனர் .
அத்தகையோரை பரவலாக அறியச் செய்வது வரலாற்றை அறிவதில் மிக முக்கியமானதாகும்.முதலில் வரலாறு உருவாக உதவி செய்த அயல் நாட்டினரைப் பற்றியும், அதனைத் தொடர்ந்து இந்தியாவில் நடைபெற்ற முக்கிய தொல்லியல் நிகழ்வுகளையும் அதற்கு உறுதுணையாக இருந்த இந்தியா முழுவதும் இருந்த வரலாற்று ஆர்வலர்களைப் பற்றியும் அறிஞர்களையும் அறிமுகம் செய்யும் விதமாகவும் முக்கியமாக தமிழ் நாட்டில் வாழ்ந்த திருவாளர்கள் நீலகண்ட சாஸ்திரி அவர்கள், க. அப்பாதுரை அவர்கள் சதாசிவ பண்டாரத்தார் முதல் ஐராவதம் மகாதேவன் அவர்கள், நாகசாமிஅவர்கள், ராஜமாணிக்கனார்அவர்கள், புலவர் ராசு அவர்கள் ,நடன காசிநாதன் அவர்கள் ,தியாக சத்தியமூர்த்தி அவர்கள் குடவாசல் பாலசுப்ரமணியன் அவர்கள் , குடந்தை சேதுராமன் அவர்கள், பத்மாவதி அவர்கள் போன்ற இன்னுமும் உழைத்துக் கொண்டிருக்கும் பலரையும், சொல்லாமல் விடுபட்ட இன்னமும் பலரை அறிமுகப்படுத்தும் தொடர் இது .
வாசகர்களாகிய உங்கள் ஆதரவு இருக்கும்வரை இத்தொடர் தொடர்ந்து வரும் .
பகுதி 1- அயல் நாட்டு அறிஞர்கள்
சர் வில்லியம் ஜோன்ஸ்
1746 இல் பிறந்த சர் வில்லியம் ஜோன்ஸ் ஆக்ஸ்போர்டு பல்கலைகழகத்தில் சட்டம் பயின்று வக்கீலானார். வாரன் ஹேஸ்டிங் இந்தியாவின் கவர்னர் ஜெனரலாக இருந்தபோது 1783இல் கல்கத்தா உச்சநீதிமனறத்திற்கு நீதிபதியாக இந்தியா வந்தார்,
அவர் கிரேக்கம், இலத்தீன், பாரசீகம், ஹீப்ரு அரேபிய மொழிகளை சிறிய வயதிலேயே கற்றறிந்தார். இந்தியாவிற்கு வந்தபின் இந்தியாவின் பழம் மொழிகளில் ஒன்றான சம்ஸ்கிருதத்தைப் பற்றி அறிந்த பின்பு அதன் மீது ஆர்வம் ஏற்பட்டது.
அவர் அப்போது கல்கத்தாவில் பணிபுரிந்ததால்பெருமைமிகு தமிழ் பற்றி அறியும் வாய்ப்பு அவருக்கு கிடைக்கவில்லை
தனக்கு சம்ஸ்கிருதம் போதிக்க ஓர் வங்காள பிராமண சம்ஸ்கிருத ஆசிரியர் ராம் லக்ஷ்ன் கவிபூசன் என்பவரை தேர்ந்தெடுத்தார். அந்த கவிபூசன் கல்கத்தாவில் நெருக்கடியான மக்கள் குடியிருப்பில் வசித்துவந்தார். அங்கே சென்று சர்.வில்லியம் ஜோன்ஸ் சம்ஸ்கிருதம் கற்றுவந்தார் . தினமும் வகுப்பு முடிந்ததும் ‘மிலேச்சன்’ உட்கார்ந்த இடத்தை தண்ணீர்விட்டு சுத்தம் செய்வாரம் அந்த ஆசிரியர். இதைப் பார்த்த வில்லியம் ஜோன்ஸ்க்கு அது பெரிய விஷயமாகப்பட வில்லையாம் ஆசிரியர்கள் செய்யும் ஒரு சடங்கு என்று நினைத்துக்கொண்டாராம்.
பின்னர் சம்ஸ்கிருதத்தில் அவர் தேர்ச்சி பெற்றபின்பு பல நூல்களை ஆங்கிலத்திற்கு மொழிபெயர்ப்பு செய்திருக்கிறார். அதில் அபிக்ஞான சாகுந்தலம் என்பது முக்கியமானது. அவருக்கு ஏற்கனவே கிரேக்கம் இலத்தீன் மொழி ஞானம் இருப்பதால் சம்ஸ்கிருதம், கிரேக்கம், இலத்தீன் மொழிகளுக்குள்ள ஒற்றுமையை ஆராய்ச்சி செய்தார். இலத்தீன் மொழியைவிட சம்ஸ்கிருதம் கிரேக்க மொழியுடன் நிறைய ஒற்றுமையிருக்கிறது, இந்த மூன்று மொழிகளிலும் ஒன்றிலிருந்து பிரிந்தவை என்று ஆய்வின் முடிவில் கண்டறிந்தார்.தென்னிந்தியா பற்றி அப்போது அவர்களுக்கு அதிகம் அறிமுகம் இல்லை .
வங்காளத்திற்கு நீதிபதியாக வந்த ஜோன்ஸ், அங்கே வந்த பதினாராவது வாரத்தில் 1784இல் ஏசியாட்டிக் சொசைட்டியைத் தொடங்குகிறார்.
சொசைட்டியின் நோக்கம், இந்தியாவில் இருக்கும் சகல விஷயங்களைப் பற்றியும் பதிவு செய்வது. மொழி, வானவியல் சாஸ்திரம், அறிவியல், மருத்துவம், நீதி, வரலாறு, புவியியல், விவசாயம், வணிகம், இசை, கட்டிடக்கலை, கவிதை இப்படி பல விஷயங்களைப் பற்றிய ஆராய்ச்சிக் கட்டுரைகளை திரட்டுவதே அவர்களுடைய எண்ணம். மனிதனின் கால் பதியாத நாகரீகம் இல்லாத வனம் போன்ற ஒரு அடர்த்தியான இருட்டில் இருந்த பிரதேசமாக அவர்கள் இந்தியாவை நினைத்திருந்தார்கள் . எனவே கிடைத்த அத்தனையையும் ஆவணப்படுத்த – இந்தியாவெங்கும் அங்கங்கே இருந்த வெள்ளையர்கள் தாங்கள் கண்டதை ஏசியாட்டிக் சொசைட்டிக்கு கட்டுரைகளாக அனுப்பினார்கள். ஜோன்ஸ் இதையெல்லாம் தொகுத்து, முதல் தொகுப்பை 1789இல் வெளியிட்டார்.
ஜோன்ஸின் தனிப்பட்ட ஆர்வம் சமஸ்கிருத மொழியில் இருந்தது. அவர் சமஸ்கிருதத்தை இலத்தீன் கிரேக்க மொழிகளோடு ஒப்பிட்டார். சமஸ்கிருதக் கடவுளர்களையும் அவர் கிரேக்க கடவுளர்களுக்கு ஒப்பிட்டார். சமஸ்கிருத காப்பியங்களை ஆங்கிலத்துக்கு மொழிமாற்றம் செய்தார். காளிதாஸரின் சாகுந்தலத்தை 1788இல் மொழிபெயர்த்து வெளியிட்டார். இந்தியாவுக்கு அவர் கொடுத்த கொடை, மெகஸ்தனிஸின் இந்தியாவைப் பற்றிய குறிப்பை ஆராய்ந்து இந்தியாவின் நீண்ட வரலாற்றை எழுதத் துவங்குவதற்கான ஒரு தொடக்கப் புள்ளியைக் கொடுத்தது.அவரே தென்னிந்தியாவிற்கும் வந்திருந்தால் வரலாற்றின் பார்வை வேறுமாதிரி அமைந்திருக்கும் .
அலெக்ஸாண்டரின் படையெடுப்புக்குப்பின் மெகஸ்தனிஸ் இந்தப் பக்கம் வந்திருக்கிறார். அவர் தன்னுடைய குறிப்பில், கங்கையை எர்ரானாபொஸ் (Erranaboas) சந்திக்கும் இடமான பாலிபொத்ராவில் சாண்ட்ராகோட்டஸ் என்ற அரசன் இருந்தான் என்று எழுதியிருக்கிறார். இதில் உடனடியாகத் தெரிந்த விஷயம் கங்கை மட்டுமே. ஆனால், அதில் கலக்கும் எர்ரானாபொஸ் என்ற நதி பற்றி எந்தக் குறிப்பும் இந்தியாவில் இல்லை. வேறு ஏதோ ஒரு நதியை அப்படிக் குறிப்பிடுகிறார்.
ஒருவேளை அது சரஸ்வதி போல் தடம் இல்லாமல் போன ஒரு நதியாக இருக்கலாமோ ?
அடுத்தது, பாலிபொத்ரா: அந்தப் பெயருக்கு நெருக்கமான பெயராக இருப்பது பாடலிபுத்திரா என்ற தற்போதைய பாட்னா. ஒருவழியாக அந்தப் பக்கம் முன்பொரு காலத்தில் ஓடிய நதியைத்தான் கிரேக்க மொழியில் எர்ரானாபொஸ் என்று சொல்கிறார் என்று கண்டுபிடித்தாயிற்று. ஆனால், சாண்ட்ராகோட்டஸ்? சமஸ்கிருத மொழியிலிருந்து எடுக்கப்பட்ட அரசர்கள் பட்டியலில் அப்படி ஒரு பெயர் இல்லை. ஆனால் சந்திரகுப்தர் என்ற பெயர் நெருக்கமாக இருப்பதைக் கண்டு, கிரேக்க பயணி சந்திரகுப்தரின் பாடலிபுத்திரத்திற்குத்தான் வந்திருக்க வேண்டும் என்று முடிவாகிறது. ஆசியாவில் அலெக்சாண்டருக்கு பின்னால் வந்த செலூக்கஸின் அரசவையில் இருந்தவர் மெகஸ்தனிஸ். செலூக்கஸ் 312BCயில் பாபிலோன் திரும்பிச் சென்றதாக குறிப்பிருக்கிறது. ஆகவே, சந்திர குப்தரின் காலம் அலெக்சாண்டரின் இந்தியப் படையெடுப்புக்கும் (326 BC), 312 BCக்கும் இடைப்பட்டதாகும் என்று முடிவாகிறது. வரலாறே தெரியாத இடத்தில் இதுவொரு பெரிய முன்னேற்றம்.
இவ்வாறு இந்திய வரலாறுக்கு சர் வில்லியம் ஜோன்ஸ் ஒரு நல்ல துவக்கத்தையும் , உலகின் கவனத்தை இந்திய வரலாற்றின்மேல் திருப்ப ஒரு முக்கிய காரணமாகவும் இருந்தார் .அவரைத்தொடர்ந்து பல ஐரோப்பியர்களுக்கு இந்திய வரலாற்றின் மேல் ஒரு ஆர்வம் தோன்றியது வரலாற்றின் ஆய்வில் பலருக்கு ஆர்வம் எழ சர் வில்லியம் ஜோன்ஸ் முக்கிய காரணமாக விளங்குகிறார்
2) சார்லஸ் வில்கின்ஸ்
சார்லஸ் வில்கின்ஸ் ஒரு சிறந்த சம்ஸ்கிருத அறிஞர் இவர் வில்லியம் ஜோன்ஸ்அவர்களின் நண்பர் இவர் கல்கத்தாவுக்கு 1770 ஆம் ஆண்டு இந்தியா வந்தார் .
சமஸ்கிருதம் பற்றிய ஆழமான புலமை பெற்ற ஆங்கிலேயர்களின் இவரே முதன்மையானவர் எனலாம். குப்தர்களின் கால எழுத்தைக் கண்டுபிடித்ததில் இவரது பணி முக்கியமானது . இது இந்தியாவின் கல்வெட்டு இயலில் மிக முக்கியமானதாக அமைந்தது .
அந்தக்காலகட்டத்தில் உலகில் ஒரு நம்பிக்கை மக்கள் மத்தியில் ஆழமாக இருந்தது அது உலகின் அனைத்து மொழிகளும் ஹீப்ரு மொழியில் இருந்து தோன்றியது என்பதே .
இந்தியாவில் வந்து இவர் செய்த ஆய்வுகளுக்குப்பின் பாரசீகமும் ஐரோப்பிய மொழிகளும் ஒரே மூதாதையரிடம் இருந்து தோன்றியது என நிறுவினார்.
அண்ணாமலை சுகுமாரன்15/12/2016 மீள்பதிவு 15/10/2023
No comments:
Post a Comment