Tuesday, August 3, 2021

சங்க கால வரலாற்றில் சில பக்கங்கள்

 நான் படித்த நூல்களில் சில பக்கங்கள் ...1


சங்க கால தமிழக வரலாற்றில் சில பக்கங்கள் (மயிலை சீனி.வேங்கடசாமி)


சுமேரியரும் திராவிடரும் ஒரு காலத்தில் ஒன்றாக ஒரே இடத்தில் வாழ்ந்தவர் என்று மேல் நாட்டுக் கீழ்நாட்டுச் சரித்திர அறிஞர்கள் கூறுகிறார்கள். 


திராவிடரும் சுமேரியரும் ஒரே இனத்தவர் என்று அவர்கள் எழுதியுள்ளார்கள்.


சுமேரியருக்கும் திராவிடருக்கும் (தமிழர்) முன் ஒரு காலத்தில் ஏதோ ஒரு வகையில் நெருங்கிய தொடர்பு இருந்திருக்கிறது. 


இதற்குச் சான்றாகச் சுமேரிய நாட்டின் பழைய ஊர்ப் பெயர்கள் உள்ளன. சுமேரிய நாட்டின் முக்கிய பட்டினத்துக்கு ஊர் என்ற பெயர் இருந்தது. இன்னொரு நகரத்துக்கு எருதூர் என்று பெயர் இருநதது. மற்றொரு ஊருக்கு நிப்பூர் என்று பெயர் இருந்தது. ஊர், எருதூர், நிப்பூர் என்னும் பெயர்களில் ஊர் என்னும் திராவிடப் பெயர் அமைந்திருப்பது காண்க. 


ஊர் என்னும் சொல்லுக்குத் தமிழில் என்ன பொருள் உண்டோ அதே பொருள்தான் சுமேரிய மொழியிலும் ஊர் என்னும் சொல்லின் பொருளாக இருந்தது.


மேலும் சுமேரிய மொழியில் அமா, பீடு, ஆள் முதலிய சொற்கள் திராவிட (தமிழ்)ச் சொற்களாகவே காணப்படுகின்றன.


அமா என்னும் சுமேரிய வார்த்தைக்கு அம்மா என்பது பொருள். 


பீடு என்னும் சுமேரிய சொல்லுக்கு வீடு என்பது பொருள்.


ஆள் என்னும் சொல்லுக்கு ஓசை ‘யாழ், ஒலி’ என்னும் பொருள்கள் உள்ளன. ஆள் என்னும் சுமேரியச் சொல் தமிழில் ‘யாழ்’ என்று கூறப்படுகின்றது. தமிழரின் பழைய யாழ் வடிவம் போலவே சுமேரியரின் பழைய யாழ் வடிவமும் இருந்தது. பிற்காலத்தில் சுமேரிய யாழின் பத்தருக்கு முன் பக்கத்தில் எருது தலையின் உருவம் அமைக்கப்பட்டது. ஆனால் சுமேரிய, தமிழரின் இசைக்கருவிக்கு யாழ் (ஆள்) என்றே பெயர் இருந்தது கருதத்தக்கது.


இவ்வாறு திராவிடருக்கும் சுமேரியருக்கும் பழங்காலத்தில் தொடர்பு இருந்ததையறிகிறோம்.


சுமேரிய அரசரின் பட்டியலிலும் சங்க காலப் பாண்டிய மன்னரின் பட்டியலும், கால அளவைப் பொறுத்த மட்டிலும், ஒரே மாதிரி அமைந்திருப்பதும் இங்கு கருதத்தக்கன. 


சுமேரிய அரசரின் சுமேரிய அரசரின் ஆட்சிக்காலம், நம்ப முடியாத அளவு கால எல்லை அதிகப்படியாகக் கூறியுள்ளது. 


போலவே, தமிழ்ச் சங்கங்களில் கூறப்படுகிற பாண்டிய அரசர்களின் ஆட்சிக் கால எல்லையும் அதிகப்படியாகவே கூறப்படுகின்றன. இதிலும் இரண்டு நாட்டுக்கும் ஒரு பொருத்தம் காணப்படுகிறது.


பதிவு: கந்தசாமி விநாயகம்

No comments: