Saturday, August 7, 2021

பேரா.தி.வ. மெய்கண்டாருடன் ஓர் உரையாடல்

 பேராசிரியர் தி.வ. மெய்கண்டாருடன் ஒரு தொலைபேசி உரையாடல்.....


7.8.2021 காலை 8.40


அய்யா அவர்கள் நடத்தி வந்த 'இளந்தமிழன்' இதழிலிருந்து சில கட்டுரைகளைத் தொகுத்து 620 பக்கங்களில் ஒரு நூலாக்கி அவருடைய பார்வைக்கு அனுப்பி வைத்தேன். எந்த ஒரு மறுமொழியும் இல்லை. தொலைபேசியிலும் பலமுறை தொடர்பு கொண்டேன். அவர் தொலைபேசி அழைப்பையும் ஏற்கவில்லை. ஒரே கவலையாக இருந்தேன். இரண்டு மாதங்கள் ஓடிவிட்டன. 

இன்று காலை சாப்பிடுவதற்காக எழுந்த போது கைப்பேசி ஒலித்தது. மெய்கண்டார் அழைத்தார். ஒரே மகிழ்ச்சி.....

'அய்யா வணக்கம்' என்றேன் நான்.

'நான் மெய்கண்டார் பேசுகிறேன்' என்றார்.

'நல்லா யிருக்கீங்களா அய்யா ?' என்று கேட்டேன்.

'நல்லா இல்லை' என்றார்.

'துணைவியாரை அருகில் இருந்து பார்த்து கொள்ள வேண்டியதா யிருக்கிறது. எனக்கு வயது 83 முடிந்து 84 ஆகிறது' என்றார். 

'உங்கள் மகன் என்ன படிக்கிறார். உங்கள் துணைவியார் நலமாக இருக்கிறாரா' என்று அக்கறையுடன் கேட்டார்.

'நான் மேல் மாடியில் இருக்கிறேன். உங்கள் புத்தகம் இப்பொழுதுதான் எனக்கு கிடைத்தது. அவர்களிடமிருந்து வாங்குவது பெரும்பாடாயிருக்கிறது' என்றார்.

நான், 'அய்யா நான் தனியார் கூரியரில்தான் அனுப்பினேன். அவர்கள் உங்களிடம் கொடுக்கவில்லையா' என்றேன்.

அவர்கள் கீழே கொடுத்துவிட்டு போய்விட்டார்கள். என்னிடம் வந்து உடனடியாக சேரவில்லை என்று கவலைப்பட்டார்.

'ஏற்கனவே இளந்தமிழன் ஒரு வால்யூம் என் கைக்கு கிடைக்காமல் போய்விட்டது' என்று வேதனைப்பட்டார். 

'நீங்கள் அனுப்பிய நூலை பார்த்தேன். நிறைய  செய்திருக்கிறீர்கள். நீங்கள் டைப் செய்வீர்களா?' என்று கேட்டார்.

நான் 'மருத்துவர்' மாத இதழில் பணிபுரிந்த போது தங்களுக்கு 'இளந்தமிழன்' இதழுக்கு டைப் செய்து கொடுத்திருக்கிறேன் அய்யா என்றேன். (இது 25 ஆண்டுகள் ஆயிற்று).... 

'ஆமாமாம். நாம் அங்குதான் சந்தித்துக் கொண்டோம்' என்று நினைவு படுத்திக் கொண்டார்.

'அய்யா, அய்யாவும் அண்ணாவும் இரட்டைக் குழாய் துப்பாக்கிகள்' என்ற நூலை தட்டச்சு செய்யத் தொடங்கினேன். பின்பு சாமி சிதம்பரனார் பற்றி எழுதிய நூலை தட்டச்சு செய்யத் தொடங்கினேன். பின்பு இளந்தமிழன் இதழிலிருந்து சில கட்டுரைகளை தட்டச்சு செய்ய தொடங்கினேன். 620 பக்கங்கள் ஆகிவிட்டது'.

'ஏற்கனவே இன்னொரு 100 பக்கங்கள் தட்டச்சு செய்து வைத்திருக்கி றேன். கணிணி நிறுவனத்தில் அந்த எழுத்துருக்கள் இல்லாததால் அச்சு எடுக்க முடியவில்லை' என்றேன்.

'இன்னும் நிறைய அபூவர்வமான கட்டுரைகள் இருக்கின்றன. நூறு ஆண்டுகளுக்கு முந்திய செய்திகள் உள்ளன. அவ்வளவும் உண்மை செய்திகள். எல்லாவற்றையும் செய்ய வேண்டும்' என்று ஆதங்கத்தை வெளிப்படுத்தினார்.

நீங்கள் 'பேராசிரியர் தி.வ. மெய்கண்டாரின் எழுத்துகள்' என்று நூலுக்கு தலைப்பிட்டிருக்கிறீர்கள். அதை 'தி.வ.மெய்கண்டார் வெளியிட்ட இளந் தமிழன் இதழிலிருந்து ...' என்று தலைப்பிட வேண்டும் என்றார்.

'என் குடும்பம், பாரம்பரியம் பற்றிய எழுத வேண்டும். அதற்கு 5 ஆண்டுகள் ஆகும்' என்றார்.

'உங்கள் அப்பா பற்றி சிந்தாரிப்பேட்டையில் ஒருவர் எழுதிய கடிதத்தில் உள்ள குறிப்புகளைப் படித்தேன்' என்றேன்.

'ஆமாம். என் பெயரை வைத்து என்னை அடையாளம் கண்டுக் கொண்டார். நான் அவரை சந்திக்க விரும்பினேன். அவர் திடீரென்று மறைந்துவிட்டார்' என்றார் அய்யா மெய்கண்டார்.

'சபாநாயகர் க.இராசாராம் அவர்களிடம் உங்களுக்கு இருந்த நெருக்கம் பற்றி நீங்கள் எழுதிய ஒரு கட்டுரையில் படித்தேன் அய்யா' என்றேன்.

'ஆமாம். இராசாராம் அப்பாவுடன் நல்ல பழக்கம். அதுமட்டுமல்ல, நாமக்கல் கவிஞருடன் நல்ல பழக்கம். பல தமிழறிஞர்களுடன் பழகி இருக்கிறேன். அவற்றை யெல்லாம் வெளியில் சொல்லிக்கொள்ள வில்லை' என்றார்.

'நீங்கள் தயார் செய்த புத்தகத்தில் நிறைய சேர்க்க வேண்டும். ஒழுங்க படுத்த வேண்டும்' என்ற தன் ஆவலைத் தெரிவித்தார் அய்யா மெய்கண்டார்.

'அய்யா என்னிடம் ஒரு பலவீனம் இருக்கிறது. என் கண்ணில் கிடைக்கிற இதழ்களிலிருந்து தட்டச்சு செய்வேன் அய்யா' .

'பெரியார் பற்றிய கட்டுரைகள், ம.பொ.சி. குறித்த கட்டுரைகள் என்று சில வற்றை மட்டும் ஒரு வரிசைப்படுத்தினேன்' என்றேன்.

'பெரியாரின் அபூர்வமான கட்டுரை ஒன்றை வெளியிட்டிருக்கிறேன். பாரத மாதாவின் பாத விந்தாரங்களைப் போற்றி பராவுகின்றேன் என்ற கட்டுரையை வெளியிட்டேன்'. 

'அண்ணாவின் கதைகள் மற்றும் நூறு ஆண்டுகளுக்கு முந்தைய செய்திகள் எல்லாவற்றையும் இளந்தமிழனில் வெளியிட்டிருக்கிறேன்' என்றார்.

'ம.பொ.சி.யின் எல்லைப் போராட்டம், தலைநகர் போராட்டம், மாநில சுயாட்சி போராட்டம் என்று பல செய்திகளை வெளியிட்டிருக்கிறேன்' என்றார்.

'அய்யா, அய்யாவும் அண்ணாவும் இரட்டைக் குழாய் துப்பாக்கிகள்' நூலில் குறிப்பிட்டிருக்கிற நீங்கள் எழுதிய புத்தகங்கள் கிடைக்குமா?' என்று கேட்டேன்..

'நூலாக வெளியிடவில்லை. கட்டுரைகளாக இளந்தமிழனில் வெளியிட்டிருக்கிறேன்' என்றார்.

'ஆமாமய்யா... நான்கு அண்ணாவின் கதைகள் பற்றி நீங்கள் எழுதிய கட்டுரை படித்தேன்' என்றேன்.

'கடைசியாக எப்போது இளந்தமிழன் வந்தது?' என்று கேட்டேன்.

'நவம்பர் 2019 இதழோடு இளந்தமிழன் வெளியாவது நின்றுவிட்டது' என்றார்.

'அய்யா மயிலாப்பூரில் நீங்கள் இருந்த அலுவலகம் இருக்கிறதா' என்று கேட்டேன்.

'இருக்கிறது. இருக்கிறது. கவிஞர் வானம்பாடி வைத்திருந்த இடம். இப்போது நான் வாடகை கொடுத்து வைத்திருக்கிறேன்' என்றார்.

'இன்னும் செயல்பட வேண்டும் என்று நினைக்கிறேன். இப்போது கூட ஒரு நண்பரை பார்க்க செல்ல வேண்டும். உங்கள் மகனும் துணைவியாரும் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள் அல்லவா? நான் விசாரித்ததாகச் சொல்லுங்கள்.

பிறகு பேசுவோம் . நன்றி வணக்கம்' என்று கூறி கைப்பேசி இணைப்பை துண்டித்தார்.

அரைமணி நேர உரையாடல். மனம் நெகிழ்ச்சியாக இருந்தது. கனமாக இருந்தது.

 மலேசியாவிலிருந்து வந்து 7 மாதங்கள் ஆகிவிட்டது. அய்யா மெய்கண்டாருக்காக ஒரு நூலை உருவாக்கிக் கொடுத்தேன். ஆனால் இன்னும் அவர் கைக்கு கிடைக்கவில்லையா? அல்லது அவர் புத்தகம் படிக்கும் நிலையில் இல்லையா என்ற கவலை எனக்குள் ஓடிக்கொண்டே இருந்தது.

அய்யா மெய்கண்டாரின் நெருங்கிய நண்பர்களில் ஒருவரான சிதம்பரம் பேராசிரியர் பூ.சி. இளங்கோவன் அவர்களிடம் கூட கேட்டேன். 

இப்போது அந்த மனக்கவலை தீர்ந்துவிட்டது. 


No comments: