Friday, August 27, 2021

 ஆசிரியர் கி. வீரமணி அவர்களின்

பெரியாரியல் ஆய்வுரை..... 1

மானிடப் பற்று

பெரியாரியல் என்பது ஒரு மனிதனுடைய வாழ்வுக்கு அடிப்படையான கருத்துக்கள், பெரியாரியலினுடைய மய்யக் கருத்து என்ன என்பது - இதில் மிக முக்கியமானது. பெரியார் அவர்களுடைய கருத்துக்களை ஏன் பெரியாரியல் என்று தனியே சொல்கிறோம் என்று சொன்னால்- ‘மண்டைச் சுரப்பை உலகு தொழும்’ என்று புரட்சிக் கவிஞர் அவர்கள் சொன்னார்கள்.

மண்டைச் சுரப்பு சுரந்து கொண்டே  இருக்கும். எடுக்க எடுக்க வற்றாது. எவ்வளவு அதிகமாக எடுக்கின்றோமோ அவ்வளவு அதிகமாக சுரந்து கொண்டு இருக்கும் என்ற நிலையிலே அந்த அளவுக்கு அய்யா அவர்கள் அவ்வளவு ஆழமாகச் சிந்தித்திருக்கின்றார்கள். பெரியார் ஒரு சுய சிந்தனையாளர்.

 தந்தை பெரியார் அவர்கள் ஓரிடத்தில் சொல்லுகின்றார், எனக்கு 8 வயதிலிருந்தே உலக அனுபவம் உண்டு. நான் ‘மண்டி’யிலே மூட்டைகளுக்கு ‘குறி’ போட்ட காலத்திலிருந்து எனக்கு உலக அனுபவம் உண்டு என்று சொல்கின்றார்.

அய்யா அவர்களுடைய திருமணம் சர்ச்சைக்குள்ளான நேரத்திலே (1949- இல்) அறிக்கை ஒன்றை தந்தை பெரியார் எழுதினார்.

‘இந்த மக்கள் என்ன நினைக்கிறார்கள் என்பதைப் பற்றி எனக்குக் கவலை இல்லை. யாராவது இந்த மக்களைக் காட்டி மிரட்டலாம் என்றால் அதெல்லாம் முடியாது. மக்கள் என்பவர்கள் சாதாரணமானவர்கள். அவர்களைத் திருத்துவதற்குத்தான் நான் வந்திருக்கிறேனே தவிர, அவர்களுக்கு வழிகாட்டு வதற்குத்தான் நான் வந்திருக்கிறேனே தவிர, அவர்களை என் வழிக்குக் கொண்டு வரத்தான் நான் இருக்கிறேனே தவிர, அவர்கள் என்ன சொல்கிறார் கள் என்பது பற்றி எனக்குக் கவலை இல்லை’ 

என்று அய்யா அவர்கள் சொன்னார்கள். 

இந்தத் துணிச்சல் வேறு யாருக்கும் வராது என்பது மட்டுமல்ல ; இப்படி சொல்ல உண்மையான தகுதி பெற்ற தலைவராக தந்தை பெரியார் அவர்கள் விளங்கினார்கள் என்பதுதான் உண்மையான செய்தி.

ஒரு முறை அய்யா அவர்கள் காரைக்குடியிலே ‘சமதர்ம மாநாட்டிலே’ பேசும் பொழுது மக்களைப் பார்த்து சொன்னார் :

‘எல்லோரும் மக்கள் பின்னாலே போவார்கள். நான் உங்களை எல்லாம் என் பின்னாலே அழைத்துச் செல்ல வேண்டும் என்று இருக்கின்றேன். உங்கள் பின்னாலே நான் வந்துவிடுவேன் என்று தயவு செய்து யாரும் நினைக்காதீர்கள். அப்படி யாராவது இருந்தால் அவர்களுடைய கருத்தை மாற்றிக் கொள்ள வேண்டும். ஏன் உங்கள் பின்னாலே நான் வரமாட்டேன் என்று சொல்கின்றேன்? என் பின்னால்தான் நீங்கள் வர வேண்டும் என்று சொல்கின்றேன் என்று சொன்னால், என்ன காரணம்? நீங்கள் எல்லாம் முட்டாள்கள்’.

இப்படியே சொன்னார்.

பல்லாயிரக்கணக்கான மக்கள் கூடியிருக்கின்ற கூட்டத்தைப் பார்த்துச் சொன்னார்.

‘வேண்டுமானால் ஒருவர், இருவர் என்னுடைய பேச்சைக் கேட்டு சிந்திக்கக் கூடியவராக -அறிவாளியாக ஆகியிருக்கலாம். அது விதிவிலக்கு. அந்த விலக்கை விதியாக ஆக்கிக் கொள்ள நான் தயாராக இல்லை. நான் உங்களை முட்டாள் என்று கோபத்தோடு சொல்லவில்லை. நீங்கள் முட்டாள்களாக இருக்கின்றீர்களே என்ற பரிதாபத்தோடு சொல்லுகின்றேன். முட்டாள்தனத்திலிருந்து இந்த மக்களை விடுவிக்க வேண்டுமே என்ற பொறுப்புணர்ச்சியோடு நான் சொல்லுகின்றேன். உங்களைத் திருத்தி என்னுடைய வழிக்குக் கொண்டு வரவேண்டும் என்பதற்காகத்தான் நான் வந்திருக்கிறேனே தவிர- உங்கள் பின்னாலே நான் வந்தேன் என்று சொன்னால் - எனக்கிருக்கின்ற கொஞ்ச நஞ்ச அறிவும் போய்விடும். ஆகவே தான் நான் அதைப்பற்றி எல்லாம் சிந்திக்காதவன்’ 

என்றார். 

காரைக்குடி - அய்யா அவர்களுடைய உயிருக்கே ஆபத்து எனும் அளவுக்கு எதிர்ப்பு நிறைந்த ஊர். 

அங்கேதான் அய்யா அவர்கள் அப்படிப் பேசினார்கள்.

(பெரியாரியல் பாகம் - 1)

No comments: