பெரியார்: ஆகஸ்ட்_15
எஸ் வி ராஜதுரை
ஆசிரியர் பற்றி...
எஸ்.வி.ராஜதுரை
தமிழ் எழுத்துலகிற்கு
நன்கு அறிமுகமான எழுத்தாளர்,
மொழிபெயர்ப்பாளர். மார்க்ஸியம்,
அம்பேத்கரியம், பெரியாரியம்
தொடர்பான நூல்களையும்
கட்டுரைகளையும் தமிழிலும்
ஆங்கிலத்திலும் தனியாகவும்
வ.கீதாவுடன் இணைந்தும்
எழுதியுள்ளார்.
'கம்யூனிஸ்ட் கட்சி
அறிக்கை' உட்படப் பல
மார்க்ஸிய நூல்களைத் தமிழாக்கம்
செய்துள்ளார்.
கலை, இலக்கியம்
தொடர்பான ஏராளமான
கட்டுரைகளை எழுதியுள்ளதுடன்
அயல் நாட்டுக் கவிதைகள்,
சிறுகதைகள் ஆகியவற்றின்
தமிழாக்கத்தையும் வழங்கியுள்ளார்.
மனித உரிமை இயக்கத்தில்
கால் நூற்றாண்டுக் காலம்
செலவிட்டிருக்கும் எஸ்.வி.ஆர்
திருச்சி பாரதிதாசன் பல்கலைக்
கழகத்தில் பெரியார் உயராய்வு
மையத் தலைவராகவும்
பணியாற்றியுள்ளார்.
எஸ்.வி.ராஜதுரையும் வ.கீதாவும் எழுதிய 'பெரியார் சுயமரியாதை சமதர்மம்' நூலின் தொடர்ச்சியாக,
1939ஆம் ஆண்டிலிருந்து 1953ஆம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் உலகளவிலும் இந்தியாவிலும் ஏற்பட்டுக் கொண்டிருந்த மாபெரும் வரலாற்றுத் திருப்புமுனைகளை பெரியாரும் அவரது இயக்கத்தினரும் எதிர்கொண்ட முறை:
இரண்டாம் உலகப் போரின் போது காந்தி, சுபாஷ் சந்திரபோஸ், அம்பேத்கர், பெரியார் ஆகியோர் கடைப்பிடித்த நிலைப்பாடுகள்;
பெரியார் -அம்பேத்கர் உறவுகள்; பெரியாருக்கும் கம்யூனிஸ்ட் கட்சிக்கும் இருந்த உறவுகளும் முரண்பாடுகளும்;
காங்கிரஸ் பிரதிநிதித்துவம் செய்த பார்ப்பன-பனியா நலன்கள்;
பிரிட்டிஷாரிடமிருந்து அதிகார மாற்றத்தைப் பெறுவதற்காக வட இந்தியப் பெரு முதலாளிகள் மேற்கொண்ட நடவடிக்கைகள்;
'ஆகஸ்ட் 15' பற்றி பெரியாருக்கும் அண்ணாவுக்கும் ஏற்பட்ட விரிசல்;
காந்தி கொலை தொடர்பாக பெரியார் வெளியிட்ட கருத்துகள்,
'திராவிட நாடு' பிரிவினைக் கோரிக்கையின் சாரம்;
இன்னும் பல அரிய செய்திகளுக்கு
அறிவார்ந்த விளக்கம் தரும் இந்த நூல், பெரியார் இயக்கத்தின் வரலாற்றை அறிந்து கொள்வதற்கான ஒரு பங்களிப்பு.
.........
'பெரியார்: ஆகஸ்ட் 15'
நூலின் புதிய பதிப்பு என். சி.பி.எச்.
வெளியீடாக வருவது எனக்கு மகிழ்ச்சி தருகின்றது.
1998, 2007ஆம் ஆண்டுகளில் கோவை விடியல் பதிப்பகத்தின் நிறுவனர் காலஞ்சென்ற அருமைத் தோழர் விடியல்' சிவா அவர்கள் மிகுந்த உற்சாகத்தோடு வ. கீதாவும் நானும் எழுதிய ' பெரியார்: சுயமரியாதை-சமதர்மம்', நான் தனியாக எழுதிய இந்தப் புத்தகம், என்னால் பதிப்பாக்கம் செய்யப்பட்ட 'ஆகஸ்ட் 15: துக்கநாள், இன்பநாள்' ஆகியவற்றை வெளியிட்டார்.
பெரியாரையும் அவரது இயக்கத்தையும் பற்றி அதுவரை வெளிவந்த தமிழ் நூல்களிலிருந்து வேறுபட்ட வகையில், அந்த இயக்கம் தோன்றி வளர்ந்த வரலாற்று அரசியல், பண்பாட்டுச் சூழலை விளக்கும் முதல் முயற்சியாக,
பெரியாரையும் அவரது இயக்கத்தையும் பற்றிப் பரவலாக விதைக்கப்பட்டிருந்த தப்பெண்ணங்களைப் போக்கும் செயற்பாடுகளின் பகுதியாக இந்த நூல்கள் அமைந்தன.
இந்துத்துவ பாசிச சக்திகள் இந்திய அரசியலில் மேலாதிக்கம் பெற்றுள்ள, அவற்றால் தம் விருப்பப்படி ஆட்டி வைக்கப்படக் கூடிய ஆட்சியாளர்கள் தமிழகத்தில் உருவாக்கப்பட்டுள்ள
(ஜெயலலிதா கூட பெரியார் படத்தைத் தனது மேடைகளில் பயன் படுத்தியதுண்டு; ஆனால் இன்றோ அவரது இடத்தில் அமர்ந்துள்ளவர்கள் பெரியார் படத்தைத் தங்கள் மேடைகளில் வைப்பதற்குக் கூட அஞ்சுகிறார்கள்)
காலகட்டத்தில் தமிழகத்தில் மட்டுமின்றி, இந்தியாவின் பிற பகுதிகளிலும் பெரியார் இடைவிடாத விவாதங்களுக்குள்ளாகி வருகின்றார். பெரியாருக்கு எந்த அளவுக்கு எதிர்ப்பு வலுக்கிறதோ அதைவிட அதிகமாகவே அவருக்கான ஆதரவும் பெருகிவருகிறது.
அவர் மீது சொல்லப்படும் குற்றச்சாட்டுகளுக்கும் விமர்சனங்களுக்கும் பதில் சொல்லும் முகமாக மட்டுமின்றி,
பெரியாரைப் புதிய, ஆக்கபூர்வமான கோணங்களிலிருந்து பார்க்கும்
முயற்சிகள் திராவிடர் இயக்கத்தைச் சேர்ந்தவர்களால் மட்டுமின்றி அந்த இயக்கத்தைச் சாராதவர்களாலும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
கல்விப்புலம் சார்ந்தவர்கள், இளம் ஆராய்ச்சியாளர்கள்எனப் பலதரப்பட்டவர்கள் இந்தப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
தலித்துகளும் சூத்திரர்களும் அண்மைக் காலம் வரை நுழைய முடியாதிருந்த கல்விப்புல வெளிகளிலும்கூட - குறிப்பாக, ஐஐடி நிறுவனங்களில் பெரியாரைப் பற்றிப் பேசுவது தவிர்க்கப்பட முடியாததாகிவிட்ட நிலைமைகள் உருவாகியுள்ளன.
இடதுசாரி முயற்சிகள் அமைப்புகளும் இந்தப் பணியில் முக்கியப் பாத்திரம் வகிக்கின்றன. அதே வேளையில் பெரியாரை மட்டுமின்றி,அம்பேத்கரையும் இழிவுபடுத்துவதற்கான முயற்சிகள் சங்பரிவாரத்தினராலும், தாராளவாத முகமூடியை அணிந்து கொள்ளும் பார்ப்பன அறிவாளிகளாலும் மட்டுமின்றி
(இவர்களை ஆங்கில விவாதத்தளத்திலும் எதிர்கொண்டு ஆணித்தரமான பதில்களைத் தந்திருக்கிறார் 'தலித் முரசு' புனித பாண்டியன்)
மார்க்ஸிய வேடமணிந்தவர்களாலும் மேற்கொள்ளப்படுகின்றன.
'தமிழ் தேசியர்களைப் பற்றிச் சொல்லத் தேவையில்லை.
இந்த நூலை, நான் மீண்டும் எழுதுவேனாகில், பெரியாரைப் பற்றிய எனது அணுகுமுறை, புரிதல் பலவகைகளில் மாற்றம் பெற்றிருக்கும். புதிய தகவல்களுடனும் புதிய புரிதலுடனும் இந்த நூல் வளம் பெற்றிருக்கும்.
ஆனால், கெடுவாய்ப்பாக எனது மூப்பும்பிணியும் அந்தப் பணியைச் செய்யும் ஆற்றலையும் நேரத்தையும் எனக்கு வழங்கவில்லை.
பெரியார் இயக்கத்தின் வரலாற்றில் 1938 முதல் 1953 வரையிலான காலகட்ட நிகழ்வுகளைப் பேசும் இந்த நூலில்,
அந்தக் காலகட்டத்தில் நடந்த
சில முக்கியமான நிகழ்வுகள் குறிப்பிடப்படாமலோ, விரிவாக விளக்கப்படாமலோ போயின.
அவற்றிலொன்று, பெரியாருக்கும் அப்போது திராவிடர் கழகத்தின் பொதுச்செயலாளராக இருந்த சி. என். அண்ணாதுரைக்கும் (அண்ணா) இடையே ஏற்பட்ட விரிசல். அதற்கு அடிப்படையான காரணமாக இருந்தது 'ஆகஸ்ட் 15' என்னும் 'இந்திய சுதந்திரநாள்'.
அது இருவருக்குமிடையே இருந்த கோட்பாட்டு ரீதியான, அரசியல்
ரீதியான அடிப்படையான வேறுபாட்டை வெளிப்படுத்தியது.
ஆனால், அந்த வேறுபாடு மறைந்தொழிந்து கொண்டிருந்ததாக நம்பப்பட்டு வந்த காலத்தில்,
பெரியார் மணியம்மையைத் திருமணம் செய்து கொண்டதையொட்டி அண்ணாவும் அவரது ஆதரவாளர்களும் திராவிடர் கழகத்திலிருந்து பிரிந்து தி.மு.க.வை உருவாக்கினர்.
தம் வாழ்நாள் முழுக்க 'திறந்த புத்தக' மாகவே இருந்துவந்த பெரியார், அத்திருமணத்தைப் பற்றிக் கூறிய விளக்கங்களும், அத்திருமணத்தை ஆதரித்து பரலி.சு.நெல்லையப்பர் போன்ற இந்திய தேசியர்களும் பஞ்சாபிலிருந்த சாதி ஒழிப்பு அமைப்பான ஜாட்பட் தோடக் மண்டலின் தலைவர் போன்றவர்களும் கூறிய கருத்துகளும் 'விடுதலை' இதழிலில் வெளியிடப்பட்டிருக்கின்றன.
ஆகஸ்ட் 15' தொடர்பாக அப்போது பெரியாருடன் கருத்து வேறுபாடு கொண்டிருந்தவரும் நீதிக்கட்சியின் முன்னணி
அறிவாளிகளிலொருவருமாக இருந்தவரும், வறுமையில் வாடி இறந்து போனவரும், 'நகரதூதன்' ஏட்டை நடத்தி வந்தவருமான
ரெ.திருமலைசாமி (கேசரி') எழுதிய ஒரு விரிவான கட்டுரைதான்
இந்த நூலின் இணைப்பு xiii.
எனினும், பெரியாருக்கும் அண்ணாவுக்குமிடையே இருந்த
விரிசல் படிப்படியாகக் குறைந்து கொண்டு வந்தது. 1967ஆம் ஆண்டுப் பொதுத் தேர்தலில் வெற்றிபெற்று முதல் திமுக
அமைச்சரவையை உருவாக்கிய அண்ணா, அதனைப் பெரியாருக்குக் காணிக்கை யாக்கினார்.
தமிழகத்தில் முதன்முதலாக ஒரு 'சூத்திரர் கட்சி' ஆட்சிக்கு வந்திருப்பதாகப் பாராட்டிய பெரியாரும் தம் பங்குக்கு அந்த ஆட்சிக்கு ஆதரவளித்து வந்தார்.
எனினும், தமது 'திராவிடர் கழகம்' அரசியலில் (அதாவது தேர்தல் அரசியல், அரசாங்கப் பொறுப்பு வகித்தல்) ஈடுபடக்கூடாது என்னும் கொள்கையை அவர் ஒருபோதும் கைவிடவில்லை.
அதேபோல 'ஆகஸ்ட் 15' பற்றிய தமது கருத்தை அவர் கடைசி வரை மாற்றிக் கொள்ளவேயில்லை.
இரண்டாவது, காந்தியார் கொலை செய்யப்பட்ட போது பெரியார் ஆற்றிய எதிர்வினை. இது தொடர்பாக 'தடம்' இதழில்
நான் எழுதிய கட்டுரை, 'மின்னம்பலம்' இணையதள ஏட்டில் ராஜன் குறை எழுதிய கட்டுரை ஆகியவைதான் இந்த நூலின்
இணைப்பு ix.
சமகாலத்தில் வாழ்ந்த அண்ணல் அம்பேத்கருக்கும்
பெரியாருக்கும் சில கருத்து வேறுபாடுகள் இருந்தன;
அம்பேத்கரிடம் தாம் எதிர்பார்த்தவை கிடைக்கவில்லை என்ற மனத்தாங்கலும் பெரியாருக்கு இருந்தது.
இவற்றை இந்த நூல் எடுத்துரைக்கிறது.
ஆனால் சாதி ஒழிப்பு என்னும் அடிப்படை இலட்சியத்தில் அவர்கள் இருவரும் முழுமையாக ஒன்றுபட்டிருந்தனர். இருவருக்குமிடையே இருந்த கருத்து, அரசியல் வேறுபாடுகளை ஊதிப்பெருக்குவது இந்த இலட்சியங்களுக்கு ஊறுவிளைப்பதாகவே அமையும்.
ஏற்கெனவே என் சிபிஎச் நிறுவனம் பெரியார் சுயமியாதை - சமதர்மம் நூலின் புதிய திருத்தப்பட்ட பதிப்புடன்
பெரியாரின் பேச்சுகளையும் எழுத்துகளை யும் தொகுத்து பசு.கவுதமன் உருவாக்கியுள்ள நூல்களையும் வெளியிட்டுள்ளதால்,
பெரியாரைப் பற்றிய முழுச் சித்திரத்தை வழங்கும் ஆய்வுப் பயணத்தில் இந்த நூலும் கணிசமான பங்களிப்பைச் செய்யும் என்பது என் தாழ்மையான கருத்து.
எமது என்.சி.பி.எச். புதிய பதிப்புக்கான முன்னுரையில் நூலாசிரியர் எஸ்.வி.ஆர்
எனது நியூ செஞ்சுரி புத்தக நிறுவனத்தின் வெளியீடு
பக்கங்கள் 778
விலை ரூபாய் 750
(கெட்டி அட்டை பதிப்பு)
புத்தக தேவைக்கான தொடர்புக்கு
இரா.மு.தனசேகரன்
மேலாளர்
நாகர்கோவில் கிளை
8124949491
No comments:
Post a Comment