Monday, January 24, 2022

பெண் : பிரபஞ்சன்

நூல் : பெண்( பெண்ணைப் பற்றி வரலாற்றுப்பூர்வமாக இலக்கிய ஆதாரத்துடன் எழுதப்பட்ட படைப்பு ஆவணம்)

நூலாசிரியர் : பிரபஞ்சன்.

வெளியீடு- டிஸ்கவரி புக் பேலஸ்.பக்கங்கள்-199,₹-180.

மகள்,மனைவி,தாய் என்கிற பெண்ணின் வாழ்க்கை 

'பிறருக்காக வாழ்ந்து,மெழுகாய் உருகி,சுயம் இழந்து நிற்பதே' என்பதை காலங்காலமாக உபதேசிக்கும் தந்திரமான மதநூல்கள்,இலக்கியங்கள்,புராணங்கள் ,வேதங்கள் ,காவியங்கள் மத்தியில்,பெண்கள் தங்கள்  ஆசைகள் ,கனவுகள்,

இலட்சியங்களை எவ்வாறு இன்று அடைந்திருப்பார்கள் !எனும் தேடல்வினா அனைவருக்கும் பொதுவானதே.எனக்கும் கூட.

'வால்கா முதல் கங்கை வரை' தொடங்கி 'கடவுளை மனிதன் படைத்த கதை' போன்ற மானுடவியல் நூல்கள் பெண்களின் வரலாறு குறித்த தேடலின் பாதையில் சிறிது வெளிச்சம் பாய்ச்ச உதவியது.இன்று இந்நூலின் ஒளி  பெண்களினால் படைக்கப்பட்ட  சமூகம் ஏன் அவர்களுக்கானதாக  இல்லை  

எனும் 

அறியாமை இருளையும் சேர்த்து விலக்க உதவியாய் இருந்தது.

'விதித்த வாழ்வு இப்படித்தான்' என தனக்குத்தானே முற்றுப்புள்ளி வைத்துக் கொண்டிருக்கும் பெண்கள் கண்டிப்பாகப் படிக்க வேண்டிய புத்தகம் இது.

தெரிந்தவற்றிலிருந்து தெரியாதவற்றை நோக்கி செல்லும்பொழுது கற்றுக்கொள்வது எளிது .அந்த உத்தியின் அடிப்படையில் எழுதப்பட்டிருக்கும் இக்கட்டுரைத்தொகுப்பில் உள்ள28 கட்டுரைகளி்லும் நம்முடன் பயணிக்கும் பெண்களில் பெரும்பான்மையோர் பொதுவில் நன்கு பரிச்சயமானவர்கள்.

1.அதிதி-ரிக்வேதம் புகழும் தாய்.

2.தாடகை-நிலவுடைமைச் சமூகத்தினை எதிர்த்ததால் கடவுள் ராமனால் கொலை செய்யப்பட்டவள்.

3.அகல்யா- விச்வாமித்ரனைத் தனது அறிவுத் திறத்தால்,நேர்மையால் தலைகுனியச் செய்தவள்.

4.சீதா-வேடர் குலத்தை முற்றாக அழித்து,விவசாய குலத்தை மூர்க்கமாகத் தனது குடிகளின் மேல் திணித்த ஏகபத்தினி விரத அரசன் ராமனின் மனைவி.

5.அம்பை-"நாய் பெற்ற தெங்கம்பழமாய்"  அவளது வாழ்வை வீணாக்கிய பீஷ்மனை சமரில் பழி தீர்த்துக்கொண்டவள்.

6.ஐயை- காதல்ஊழலால் ஏமாற்றமடைந்தவள்,திருமணம் எனும் சடங்கு ஏற்பட காரணமாயிருந்தவள்.

7.தோழி-பெயர்,ஊர்,உற்றார் அற்ற பதுமை.இலக்கியங்களில் பழகி வந்த நால்வருணத்தாரில் கீழ்சாதியென பழிக்கப்பட்டவள்.

8.கண்ணகி-1- பேகனின் மனைவியாம்.

9.கேசி-ஆம்! அவளேதான் மணாளன் கள்வன் எனத் தெரிந்ததும் ....குண்டலகேசியேதான்.

10.மணக்குல மடந்தை-இயற்பகை நாயனாரால் சிவனடியாருக்குத் தாரை வார்க்கப்பட்ட திருமதி.இயற்பகையனார்.

11.தலைக்கோலி மாதவி-ம்ம்ம் கோவலனின் ?????! 

நிற்க...

மேலும் 17 பெண்களின் வாழ்க்கை வரலாறு பற்றி பிரபஞ்சன் கூறும் கட்டுரைகளை வாசித்துப் புரிந்துகொள்வது என்பது சகல சமூகத்தடைகளையும் உடைத்து நொறுக்கி,வரலாற்றைப் படைத்த இரும்புப் பெண்மணிகளின் வாழ்க்கை வரலாறுகள் என்பதாகத்தான் இருக்கிறது.

"அதிதி" அனுபவித்த சுதந்திரம் ஆபிஸ் சந்தானலட்சுமி பி.ஏ அனுபவிக்கவில்லைதான்.ஆனாலும் "தாடகை" துவங்கி "வனிதா வேணுகோபால்" வரையிலும் பெண் என்ற ஒரே காரணத்தால் அவர்கள் அனுபவித்த கொடுமைகளிலிருந்து "ஆபிஸ் .சந்தானலட்சுமி பி.ஏ" தப்பிக்க காரணமாயிருந்த ஒரே ஆயுதம் கல்வி.ஆம் ஒடுக்கப்பட்ட மக்களின் பேராயுதம் கல்வி.

'கற்பிக்கப்படுவதே கற்பு' என்றளவில் இன்று நெடுந்தொடர்கள் வலிந்து திணிக்கும் ஆர்த்தடாக்ஸ் வகை கற்பின் நாயகிகள் சூழ் உலகில் நுண்மையாய்  திணிக்கப்படும் பெண்ணடிமைத்தனத்தோடு கூட இது போன்ற நூல்களின் கருத்துகளும் மாணவிகளின் கவனத்திற்குக் கொண்டு சேர்க்கப் படவேண்டும்.

முத்துலட்சுமி அம்மையார் கூறிய பெண் உலகை உய்விக்கும் மந்திரமான "

 கல்வி+ முயற்சி+உழைப்பு+ போராட்டம்=விடுதலை வாழ்வு." என்பதைப் பின்பற்றி ஆண் விடுதலையையும் ,மண் விடுதலையையும் சாத்தியப்படுத்தும் எண்ணங்களை  என்னுள் விதைத்த இப்புத்தக வாசிப்பனுபவம் இன்றைய பொழுதைப் பயனுள்ளதாக்கியது.

தமிழ்வாழ்க! தமிழ் நூல்கள் வளர்க!

ப.ரேணுகாதேவி

23/01/2022

No comments: