Wednesday, January 29, 2020

காலனாய் வந்த கஞ்சா


காலனாய் வந்த கஞ்சா

மகாகவி பாரதியாரைப் பற்றிய இரண்டு கட்டுரைகள் இவ்விதழில் வெளியிடப்படுகின்றன. பாரதியாரின் இறுதிக்கால வாழக்கைத் துன்பம் நிறைந்ததாக அமைந்திருந்தது. வறுமையின் கொடுமையால் அவர் எந்நிலைக்கு இழுத்து செல்லப்பட்டார் என்பதை இவை சித்திரிக்கின்றன.

இக்கட்டுரைகளை எழுதிய இருவரும் மகாகவி பாரதியாருக்கு மிக நெருக்கமானவர்கள். பாரதியாராலேயே தம்பி என்றும் மாப்பிள்ளை என்றும் அன்போடு உறவு சொல்லி அழைக்கப் பட்டவர்கள். இவ்விருவரும் பாரதியாரை சற்றேறக் குறைய 1906 முதல் அவர் மறைகிற காலம் வரை முழுமையாக அறிந்தவர்கள்.

முதல் கட்டுரையை எழுதிய பரலி சு.நெல்லையப்பர் பாரதியார் புதுவையில் ஆசிரியராக இருந்தசூரியோதயம்இதழில் துணை ஆசிரியராகப் பணியாற்றியவர். அவருடைய பரம சீடர் புதுவை யில் வாழந்த நாட்களில் பாதி நாட்களையேனும் பாரதியாரோடு கழித்தவர். புதுவை வாழ்க்கை உள்ளிட்ட பாரதியாரின் வாழ்க்கையைச் சுருக்கமாக இக்கட்டுரையில் சித்திரிக்கிறார். புதுவையில் வறுமையில் பாரதியார் வாழ்ந்தபோது கஞ்சாப் பழக்கம் அவரை எவ்வாறு பற்றியது என்பதை விவரிக்கிறார். ‘தம்பி, உனக்கேனடா இது (பணம் அனுப்புவது) கடமை என்று தோன்றவில்லைஎன்று இவருக்கு பாரதியார் எழுதிய கடிதத்தில் உரிமையோடு கேட்பதிலிருந்து இவ்விருவரது நெருக்கத்தை அறியலாம்.

பரலி சு. நெல்லையப்பர் செல்வர்கள் வறுமையில் வாடும் தமிழ்ப் புலவர்களை ஆதரிக்க வேண்டுமென்றுபாரதியாரின் கதிஓர் எச்சரிக்கை செய்கிறது என்று கூறுகிறார்.

இரண்டாவது கட்டுரை எழுதிய கப்பலோட்டிய தமிழர் .உசி. பாரதியாரைமாமாஎன்று அன்போடு அழைத்தவர். ‘வி..சி கண்ட பாரதிஎன்றும் சிறு கையடக்க நூலின் இறுதிப் பகுதி இங்கே வெளியிடப்படுகிறது. ..சி மகாகவி பாரதியாரின் செயல்களைக் கண்ணால் கண்டு துயருற்று விரிவாக எழுதி யுள்ளார். .ரா.வும் பாரதியாரிடமிருந்த கஞ்சா பழக்கத்தை பற்றிக் குறிப்பிட்டுள்ளார். ஜாதிக்காயையும் வாயில் அடைத்துக் கொள்வாராம்.

புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் ஒரு குள்ளச் சாமியார்தான் பாரதியாருக்கு இத்தீய பழக்கத்தை ஏற்படுத்தி விட்டார் என்று நண்பர்களிடம் சொல்வாராம்.

..சி இக்கட்டுரையில் இக்குள்ளச் சாமியாரைமக்குஎன்கிறார். இச்சாமியாரைப் பற்றி நல்லெண்ணமும் அவருக் கில்லை.

ஆனால், பாரதி இக்குள்ளச் சாமியாரிடம் மிகப்பெரிய மதிப்பு வைத்திருந்தார். இவரை அஷ்டமா சித்திகள் பெற்றவரென்று பாரதி விவரித்துள்ளார். சாமியார் விசுவரூபம் காட்டிய அதிசியத்தைசும்மாஎன்ற கட்டுரையில் பாரதியார் விவரித்துள்ளார்.

புதுச்சேரியிலிருந்து கடயம் சென்ற பாரதி, 1919 மார்ச்சில்  புதுவை அஞ்ஞாதவாசத்திற்குப் பிறகு, முதல்முறையாக சென்னைக்குத் திரும்பிய போது, எழும்பூர் புகை வண்டி நிலையத் தில் பாரதியாரை வரவேற்ற ராஜாஜி,
பாரதியார் இரயிலிருந்து இறங்கினார். அவரைப் பார்த்ததும் எனக்கு ஒரே துக்கமாய் போய் விட்டது. ஏற்கனவே அவரை நான் பார்த்த போது, அவருடைய முகம் பூரண சந்திரனைப் போன்ற தோற்றம்  பொருந்தியதாய் இருந்தது. ஆனால் இப்போதோ களை யிழந்து வற்றி உலர்ந்து போயிருந்தது. ஐயோ, இவர் இப்படிப் போய்விட்டாரே என்று நான் வருத்தப்பட்டேன்என்று கூறினார். இதை பாரதி அறிஞர் ரா. பத்மநாபன் எழுதியுள்ளார்.

1921 ஆம் ஆண்டு சூன் மாதம்அர்ச்சுனன்என்னும் பெய ருடைய திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயில் யானை தனக்கு அன்போடு தேங்காய் பழம் தர வந்த பாரதியாரைத் துதிக்கையால் தள்ளிவிட்டது. மேல் உதட்டில் காயம். மண்டையில் பலமான அடி. பெரிய தலைப்பாகை இருந்தபடியால் அவருடைய தலை தப்பியது. அவருடைய நண்பர் குவளைக் கண்ணன் தம்முயிரைத் திரணமாக மதித்து யானை இருந்த இரும்புக் கிராதிக்குள் பாய்ந்து சென்று பாரதியாரைக் காப்பாற்றினார். சில நாள் சிகிச்சைக்குப்பின் பாரதி விரைந்து குணமடைந்தார்.

இந்நிகழ்ச்சிக்குப்பிறகு பாரதி இரண்டு மாத காலத்திற்கு மேல் வாழ்ந்தார். சூலை, ஆகஸ்ட் மாதத்தில் சுதேசமித்திரன் அலுவலகத்துக்கு வேலைக்குச் சென்று வந்தார். பல நிகழ்ச்சிகளில் பங்கு பெற்றார். ஈரோடு சென்று கருங்கல்பாளையம் வாசக சாலை யில் பேசிவிட்டுத் திரும்பி வந்து சுதேசமித்திரனில் தம் பயணத்தைப் பற்றிக் கட்டுரை எழுதினார்.

பாரதியார் வாழ்க்கை வரலாறு இன்றும் முழுமையாக வர வில்லை. அப்படி வரும் போது இக்கட்டுரைகள் பயன்படலாம் என்னும் நோக்கோடு இங்கே வெளியிடப்படுகிறது. தமிழ் மேதை களை வறுமையில் வாடவிடாமல் பார்த்துக் கொள்வது தமிழ்ச் சமுதாயத்திலுள்ள அனைத்துத் தரப்பினரின் தலையாய கடமையாகும்

- தி..மெய்கண்டார்.

பாரதியார் - பரலி சு. நெல்லையப்பர்

செந்தமிழ் நாட்டிலே தோன்றிச் சிறந்த பாடல்களினால் தாய் நாட்டுக்குப் புத்துயிரளித்த தற்காலப் பெருமக்களில் காலஞ்சென்ற சுப்ரமணிய பாரதியார் ஒப்பற்றவராவர். சென்ற சில ஆண்டுகளுக் கிடையில் தமிழ் மொழியில் உயிருள்ள பாடல்கள் பாடிய ஒப்பற்ற புலவர் பாரதியார் ஒருவரென்றே சொல்ல வேண்டும். தமிழ் உலகத் திலே பாரதியார் ஒரு மின்னல் போலத் தோன்றி மறைந்தார்.

காலஞ்சென்ற சுப்பிரமணிய பாரதியாரின் சரித்திரத்தை அவருடன் இளமை முதல் பழகிய அறிஞர் சோமசுந்தர பாரதி யாரின் எழுத்தால் அறியலாம். ஆனால் பாரதியாரது பூரணமான ஜீவிய சரித்திரம் இனித்தான் வெளியாதல் வேண்டும்.

1906 அல்லது 1907 ஆம் ஆண்டாயிருக்கலாம். வங்காளத்தில் சுதேசியக் கிளர்ச்சி மும்முரமாயிருந்த பொழுது தென்னாட்டில் சுதேசிய ஊக்கம் உயர்நிலையிலிருந்த காலத்தில் தூத்துக்குடியில் திரு.சிதம்பரம்பிள்ளை திரு.சுப்பிரமணிய சிவம் முதலியவர்கள்  மீது வழக்கு ஏற்பட்ட பொழுது திரு.பிள்ளையவர்கள் வீட்டில் ஒருநாள் மாலையில் நான் பாரதியாரை முதல் முதலாகக் கண்டேன்.

அப்பொழுதுதான் நான் அவர் பெயரைக் கூடக் கேள்விப்பட்டி ருக்கவில்லை. என்னுடன் நெடுநாள் பழகிய ஒருவர் போல அவர் எனது கையைப் பிடித்து இழுத்து உலாவுவதற்காக அழைத்துச் சென்றார். அன்றுதான் அவர் திருநெல்வேலியிலிருந்து  தூத்துக்குடிக்கு வந்திருந்தார். ஊருக்குப் புதிது. வெளியே உலாவு வதற்காக என்னைத் துணையாக அழைத்துச் சென்றார். அப்பொழுது அவர் சென்னையில் நடந்தஇந்தியாபத்திரிக்கைக்கு ஆசிரியராயிருந்தார். கலகலப்பான பேச்சு. குதூகலமான நடை. குங்குமப்பொட்டு. ஓயாது பாடும் வாய். ரோஜா நிறப்பட்டு அங்க வஸ்திரம் இவற்றை நான் என்றும் மறக்க முடியாது.

பாரதியார் பாடிய
வந்தே மாதரம் என்போம்- எங்கள்
மானிலத் தாயை வணங்குதும் என்போம்
எந்தையுந் தாயும் மகிழ்ந்து குலா
யிருந்ததும் இந்நாடே
என்ற தொடக்கத்து இரண்டு பாடல்களையும் காலஞ்சென்ற சென்னைப் பேராசிரியரான வி.கிருஷ்ணசாமி அய்யர் ஆயிரக் கணக்காக அச்சிட்டுப் பள்ளிப் பிள்ளைகளுக்குக் கொடுக்குமாறு ஏற்பாடு செய்திருந்தார். இந்தத் துண்டுப் பிரசுரங்களும் பாரதியார் சுதேச கீதப்புத்தகங்களும் சிதம்பரம் பிள்ளையவர்கள் வீட்டில்¢ ஏராளமாய் கிடந்தன. அவற்றைப் படித்த பின்னரே அவற்றின் ஆசிரியர் பெருமையை ஒருவாறு உணர்ந்தேன். நான் அதுவரை படித்திருந்த பல பாடல்களிலும் காணாத  புதுவையைப் பாரதியார் பாடலில் கண்டேன்

அக்காலத்தில் மக்கள் உள்ளத்தில் தோன்றிப் பொங்கியெழுந்த தேசபக்தி வெள்ளமே பாரதியாரின் சுதேச கீத மாக வெளியாயிற்றென்று சொல்லலாம்.

பின்னர் சுமார் மூன்று ஆண்டுகள் சென்ற பிறகு தேச பக்தர் களுக்கு அடைக்கலாமாக விளங்கிய புதுச்சேரியில் சலவை பங்களாவில் நான் பாரதியாரை இரண்டாவது முறையாகச் சந்தித்தேன். அப்பொழுது பாரதியாரை  ஆசிரியராகப் பெற்றிருந்த  சூரியோதயம்என்று வாரப்பத்திரிகையில் உப பத்திராசிரியராக இருக்குமாறு நான் அங்கே சென்றிருந்தேன்

பாரதியார் அது காலை பார்த்த பொழுது என்னை அவர் கூர்மையாக உற்று நோக்கினார். ஊக்க மற்று, உணர்ச்சியற்று, உயிரற்று அடிமைப்பட்டுக் கிடக்கும் தமிழ்நாட்டிலிருந்துவரும் இவனிடம் ஏதேனும் உணர்ச்சி, ஊக்கம், உயிர் இருக்கிறதா என்று அவர் சிந்தித்தது போலத் தோன்றியது. நான் புதுவையில் இருந்த காலத்தில்  பாதி நாள் இராக்காலத்தைப் பாரதியாருடனேயே கழித்தேன். அப்பொழுது பாரதியார் வறுமை யில் வாழ்ந்திருந்த போதிலும் வந்தவர்களுக்கெல்லாம் அவர் வீடு சத்திரமாகவே விளங்கியது.

புதுவையில் அவர் வறுமையிலேதான் வாழ்ந்திருந்தார். ஆயினும் எல்லோரையும் வருத்தும் வறுமை அவர் உள்ளத்தை வருத்தவில்லை. இரவெல்லாம் அவர் பாடிக் கொண்டு ஆனந்தக் களிப்பிலேயிருப்பார். தாயுமானவர் பராபரக்கண்ணியை அவர் ஓயாமல் பாடுவார். அவர் பேச்செல்லாம் தேசப் பேச்சாயும் தெய்வப் பேச்சாயுமேயிருந்தன. இயற்கைக் காட்சியில் அவர் பெரிதும் ஈடுபட்டிருந்தார். அதிகாலையில் அவர் புதுவை  நகரிலிருந்து சுமார் ஒரு மைல் தூரத்திலுள்ள மடுவுக்கு நீராடச் செல்வார். அப்பொழுது பூபாள ராகத்தில் திருப்பள்ளியெழுச்சி பாடிக்கொண்டு செல்வார்.

பொழுது புலர்ந்தது யாம் செய்த தவத்தால்என்ற தொடக்கத்து ஐந்து பாடல்களடங்கிய பாரதமாதா திருப்பள்ளி எழுச்சியைப் பாடிய பொழுது நான் அவருடன் இருந்தேன். அல்லும் பகலும் அவர் தெய்வ சிந்தனையிலும் தேச சிந்தனையிலுமே ஈடு பட்டிருந்தார். சுதேச கீதங்களில் ஒரு பகுதியைத் தவிர்த்துப் பாரதி யார் பாடல்களிலும் எழுத்துக்களிலும் பல புதுச்சேரியிலேயே இயற்றப்பட்டவையாகும்.

சுமார் பத்து ஆண்டுகள் புதுவையில் வாழ்ந்திருந்த பின்னர் பாரதியார் சென்னைக்கு வந்தார். அவர் புதுவையிலிருந்த காலத்தில் அவரது வியாசங்களை ஏற்று அவரை ஆதரித்து வந்தசுதேச மித்திரன்அவரை மீண்டும் ஓர் உப பத்திராசிரியராகக் கொண்டது. (காலஞ்சென்ற சுப்பிரமணிய அய்யர் காலத்தில் சில காலம் பாரதியார்மித்திரனில்உப பத்திராசிரியராக இருந்தார்).

ஆனால் அவரை ஓர் உப பத்திராசிரியராகக் கொண்டிருக்கும் பாக்கியத்தைச்சுதேசமித்திரன்நீண்ட காலம் பெற்றிருக்கவில்லை. புதுவையில் அவர் வறுமையில் வாழ்ந்திருந்த பொழுது கஞ்சாப் பழக்கம் எவ்வாறோ அவரைப் பற்றி விட்டது. அவர் தமிழ் நாட்டிற்குத் திரும்பி வந்த பின்னரும் அத்தீய வழக்கம் அவரை விடாமற்பற்றி முடிவில் அவர் வாணாள் விரைவில் முடிவதற்கும் காரணமாய் நின்றது. நண்பர்கள் சொல்லியும் கேளாமல் சென்னைக்கு வந்த பின்னரும் அவர் கஞ்சாவை அதிகமாக உட் கொள்ளத் தொடங்கிவிட்டார். அவர் வாழ்நாளில் பிற்காலத்தில் அவர் பாடிய பாடல்களிலும் கஞ்சா வெறியன் பயனை ஒருவாறு காணலாமென்றே நான் சொல்வேன்.

சென்னை-திருவல்லிக்கேணியில் துளசிங்கம் பெருமாள் கோயில் வீதியில் ஒரு வீட்டில் 1921-ஆம் ஆண்டு அவர் உயிர் துறந்தார். அன்று இரவு முழுமையும் நான் அவருடன் இருந்தேன்

மற்ற நாட்களில் இருந்த கஞ்சா மயக்கத்துடன் அன்றிரவு அவரிடம் சாவு மயக்கமுஞ் சேர்ந்திருந்தது. நண்பர்களுக்குச் சாவாமை உபதேசஞ் செய்த பாரதியார் சாக நேர்ந்தது. பாண்டி நாட்டில் எட்டையபுரத்தில் தோன்றிய உடல் தொண்டை நாட்டில் சென்னை - திருவல்லிக்கேணியில் சாம்பலாகிக் கடலிலே கலந்தது.

நான் மேலே கூறியவாறு, பாரதியார் தமிழுலகில் மின்னல் போலத்தோன்றி மறைந்தார். அவர் தமது அற்புதப் பாடல்களாலும், அதிசயமான கட்டுரைகளாலும் தமிழ் மக்களுக்குப் புத்துயிர் அளித்தார். எளிய நடையில் அரிய கருத்துக்களை ஏற்றி இன்பமான பாடல்கள் பாடுவதில் பாரதியார் இணையற்ற புலவராக விளங்கினார். அவர் பாட்டிலும் உரையிலும் தமிழ் மாது புதுமையும், இளமையும், இனிமையும், எழிலும், ஒளியும், உயர்வும் கொண்டு விளங்குகின்றாள். பழந்தமிழன்னைக்கு இளமையளித்த புலவர் பெருமக்களில் பாரதியார் ஒருவரென்று நான் போற்று கிறேன். தென்றலின் இனிமையையும் கடலின் பெருமையையும் வானத்தின் உயர்வையும், மலையின் மாட்சியையும் பாரதியார் தமிழிலே ஏற்றியிருக்கிறார். பாப நாசத்து அருவியின் தெளிவைப் பாரதியார் பாடலிலே காணலாம். அவர் பாடல்களிலும் கட்டுரை களிலும் பல தமிழ் இலக்கியத்தில் நிலையான இடம் பெறும் என்பதில் அய்யமில்லை.

செந்தமிழ் நாடெனும் போதினிலே-இன்பத்
தேன் வந்து பாயுது காதினிலே
பாருக்குள்ளே  நல்ல நாடு - எங்கள்
பாரத நாடு
என்பன போன்ற நாட்டுப் பாடல்களைப் படிக்கும் எவர் உள்ளந் தான் தேசபக்தியுடன் எழுச்சி பெறாது?

அவர் பாடிய கண்ணன் பாட்டை அரவிந்தர் போற்றுகிறார். பாஞ்சாலிச பதம் வீர ரசம் நிறைந்து விளங்குகிறது. வீரத் தமிழ்ச் சொலின் சாரத்தை அதிலே காணலாம். ஞானரதம் இன்பக் கதை. அவரது கட்டுரைகளெல்லாம் இனிய, எளிய, தெளிய, அழகிய நடை. எல்லோருக்கும் விளங்கும் இன்பத் தமிழ். அவர் பிற்காலத்தில் பாடிய பாடல்களிலும் எழுதிய உரைகளிலும் வீரச்சுவை அதிகமில்லை.

தமிழ் நாட்டின் தீவினைப்பயனால் கஞ்சா நோய் பாரதியாரைப் பற்றாதிருந்தால் அவர் நெடுநாள் வாழ்ந்திருந்து தமிழில் இன்னும் எத்தனையோ பாடல்களையும்  எழுதியிருத்தல் கூடும். ஆனால் அவர் வறுமையின் கொடுமையால் மேற்கொண்ட கஞ்சா அவரைக் கொன்று விட்டது. அதற்குக் காரணம் தமிழ்ச் செல்வர்களேயாவர். தமிழ் நாட்டுச் செல்வர்கள் அவர் பெருமையை அறிந்து அவரை வறுமையில் வாடவிடாமல் ஆதரித்திருந்தால், அவர் வறுமையில் வருந்திக் கஞ்சாவை நாட நேர்ந்திராது. ஆயினும் விதியின் கதி அவ்வாறாயிற்று. புலவர் வறுமை புலவரைக் கொன்றது. ஆனால் இனியேனும் தமிழ்நாட்டில் தோன்றிவரும் அறிஞர்களை புலவர் களை, கவிகளை ஆதரிக்குமாறு நமது செல்வர்களுக்குப் பாரதி யாரின் கதி ஓர் எச்சரிக்கை விடுக்க வேண்டும்.

பாரதியார் மக்கள் மீது அளவற்ற ஆர்வம் உடையவர். தமிழ் மீது  தனியாக் காதல் கொண்டவர். இதனைக் கீழ்வரும் அவரது பாடலில் காண்க.

யாமறிந்த மொழிகளிலே தமிழ் மொழி போல்
இனி தாவதெங்கும் காணோம்

தேச விடுதலையில் அவர் அல்லும் பகலும் சிந்தனை கொண்டி ருந்தார். தெய்வத்தின் மீது உறுதியான பக்தி கொண்டவர். ஜாதி வேற்றுமையற்றவர். சமயத்திலே பெரும் பற்றுள்ளவர். சொல்லும் செயலும் ஒன்றுபட்டவர். பெண் விடுதலையில் பேரார்வம் கொண்டவர்.

பாரதியார் காலஞ்சென்ற பின்னரே அவரது பாடல்களின் பெருமையைத் தமிழ்நாடு பெரிதும் அறியத் தொடங்கியிருக்கிறது. ஆயினும் தமிழ் மக்கள் இன்னும் பாரதியாரைப் பூரணமாக அறிய வில்லை. பாரதியார் தமது நூல்களைப் பதினாயிரக் கணக்காக அச்சிட்டு  நாடெங்கும் பரப்ப வேண்டுமென்று ஆவல் கொண்டி ருந்தார். ஆனால் அவர் விருப்பம் அவர் நாளில் நிறைவேறவில்லை. பாரதியார் பாடல்களை லட்சக்கணக்காகப் பலமுறைகளில் அச்சிட்டு நாடெங்கும் பரப்ப வேண்டும். பாரதியார் பாடலை வாயுள்ள மக்களெல்லாம் பாட வேண்டும். செவியுள்ள மக்க ளெல்லாம் கேட்க வேண்டும். அதனால் தமிழ்நாடு பலவகைக் கட்டுகளினின்றும் விடுதலை பெற்றுப் புது வாழ்வும் பெரு வாழ்வும் பெற வேண்டுமென்பதே பாரதியாரின் கனவாக இருந்தது. அவர் கனவை நனவாகச் செய்வதற்கு அவர் பாடிய பாடல்கள் பெரிதும் துணைபுரியுமென்பது எனது கருத்து. பாரதி வாழ்க! வந்தே மாதரம்

(தமிழரசு 1933, பக்கம் 212-216)

No comments: