Wednesday, January 29, 2020

பெரியாரும் பிராமணர்களும் - தி.வ. மெய்கண்டார்.


பெரியாரும் பிராமணர்களும் - தி.வ. மெய்கண்டார்.

சென்னை இராயப்பேட்டை லட்சுமிபுரம் யுவர்சங்கம் சற்றேறக் குறைய அரை நூற்றாண்டுக் காலமாக தமிழ் நாட்டின் சிந்தனை யோட்டத்தில் அவ்வப்போது சில மாற்றங்களை ஏற்படுத்திய ஒரு அமைப்பாகும்.

வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த இச்சங்கத்தின் சார்பில் 5.1.53-இல் 37 ஆண்டுகளுக்கு முன்னால் ஆந்திரப் பிரிவினைத் தொடர்பாக சங்கத்தைப் பொறுப்பேற்று நடத்திய பிராமண அன்பர்கள், தந்தை பெரியார் அவர்களை அழைத்து பேசுமாறு கேட்டுக் கொண்டனர்.

இக்கூட்டத்தில் ஓய்வு பெற்ற நீதிபதி திவான் பகதூர் இராமசாமி சாஸ்திரி வரவேற்புரையாற்றினார். பெரியாருடன் நடிகர் அவ்வை டி.கே.சண்முகம் பேச அழைக்கப்பட்டிருந்தார். இவ்விழாவில் பெரியவர் எஸ். முத்தய்யா முதலியாரும் பேசினார்.

பின்னர் இச்சங்கச் செயலாளர் சீனிவாச இராகவன் பேசுகையில் பெரியார் அவர்களைத் தமிழ்த்தாத்தா என்று விளித்து,

தமிழ்நாடு தனிநாயகப் பிரிந்தால், திராவிடர் கழகத்தாரின் கை ஓங்கி, திராவிடர்  கழகம் பலமிக்கதாக ஆகி, பிராமண சமூகத்தைத் திராவிடர் கழகத்தார் ஒழித்துவிடுவார்கள் என்று சில பிராமணர்கள் பயப்படுகிறார்கள். இத்தவறான எண்ணத்தைப் போக்கவே பெரியார் அவர்களை இங்கு பேசுவதற்கு அழைத்தோம்என்று கூறினார்.

பின்னர் பெரியார் தம் நீண்ட சொற்பொழிவின் முடிவுரையில், ‘பிராமணர்கள் இந்த நாட்டில் வாழக் கூடாது என்றோ, இருக்கக் கூடாது என்றோ திராவிடர் கழகம் வேலை செய்யவில்லை. திராவிடர் கழகத்தின் திட்டமும் அதுவல்ல. திராவிடர் கழகத் தினுடைய திட்டமெல்லாம், திராவிடர் கழகமும் நானும் சொல்லு வது எல்லாம், விரும்புவதெல்லாம், ‘நாங்களும் கொஞ்சம் வாழ வேண்டும்என்பதுதான். மேலும்,‘அவர்களைப் (பிராமணர்களைப்) போகச் சொல்ல வேண்டிய அவசியமுமில்லை. அது ஆகிற காரி யம் என்று நான் கருதவுமில்லை. நமக்கும் அவர்களுக்கும் என்ன பேதம்? ஒரு குழாயில் தண்ணீர் பிடிக்கிறோம். ஒரு தெருவிலே நடக்கிறோம். ஒரு தொழிலையே இருவரும் செய்கிறோம்... இந்த நிலையில், நமக்குள் மனிதத் தர்மத்தில் பேதம் இருப்பானேன். ஆகவே உள்ள பேதங்கள் மாறி நாம் ஒருவருக்கொருவர் சமமாக வும், சகோதர உரிமையுடனும் இருக்க வேண்டும் என்பதற்காகத் தான் நான் பாடுபடுகிறேன்என்று இதயம் திறந்து பேசினார்.

மேலும் ஒருஎச்சரிக்கையும்விடுத்தார்.

காலம் எப்போதும் ஒன்று போலவே இருக்க முடியாது. நம்மில் இருதரப்பிலும் பல அறிஞர்கள், பொறுமைசாலிகளும் இருப்ப தனாலேயே நிலைமை கசப்புக்கு இடமில்லாமல் இருந்து வருகிறது. இப்படியே என்றும் இருக்கும் என்று நினைக்க முடியாது. திரா விடர் கழகமும் பின் சந்தததிகளும், பிராமணர்கள் பின் சந்ததிகளும் இந்தப்படியே நடந்து கொள்ளுவார்கள் என்றும் கூற முடியாது. ஆகவே, அதிருப்திக்குக் காரணமானவைகளை மாற்றிக் கொள்வது இருவருக்கும் நலம்என்று கூறினார்.

பின்னர் தி.மு.கழகத் தோழர் (கண்ணீர்த்துளி) எழுப்பிய வினாவுக்கும் விடை அளித்தார்.
பிராமணர்களைப் பற்றிய தம் கருத்தை உரிய இடத்தில் தந்தை பெரியார் அவர்கள் தெரிவித்துள்ளார்கள்.

இப்பகுதியை ஊன்றிப் படித்து அனைவரும் உண்மையை உணர வேண்டும்

இச்சொற்பொழிவில் மேலும் என்ன சிறப்பு என்றால், பெரியார் வழக்கம் போல்பார்ப்பனர்கள்என்ற சொல்லை உபயோகிக்காமல்பிராமணர்கள்என்ற சொல்லையே உபயோகித்ததாகும்.
6.1.53, 8.1.53 விடுதலை இதழ்களும்- நிகழ்ச்சி விவரம் நீங்கலான பகுதியில் - பெரியார் பேசிய முறையிலேயே பிராமணர்கள் என்ற சொல்லையே அச்சிட்டுள்ளது.

இது போன்றே ஆச்சாரியார் மறைந்தபோது விடுதலைராஜாஜிஎன்றே அச்சிட்டது என்பது என் நினைவு.

இப்பகுதியில் உள்ள கூடுதலான சிறப்பு, தந்தை பெரியார் அவர்கள் தம் இளமைக் காலத்தை நினைவு கூர்ந்து தமக்கும் சில பிராமண பிரமுகர்களுக்கும் இருந்த நேயத் தொடர்புகளை விவரிப்பதாகும்.

- தி.. மெய்கண்டார்.

No comments: